சாய்பாபா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்; பொதுமக்கள் அஞ்சலி தொடர்கிறது

கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 24ம் தேதி) பகவான் சாய்பாபா ஸித்தியடைந்தார். அவரது உடல் இன்று காலையில், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சாய்பாபாவின் இறுதிச் சடங்குகள் புட்டபர்த்தி குல்வந்த மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னதாக அவரது உடலுக்கு, தேசியக் கொடி போர்த்தப்பட்டு, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ஆந்திர அரசு மரியாதை அளிக்கப்பட்டது. புரோகிதர்கள் மந்திரங்கள் முழங்க இறுதிச் சடங்கு நடைபெற்றது. ஐந்து நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் சாய்பாபாவின் உடல் மீது தெளிக்கப்பட்டது. கோ தானம் ( பசு தானம்) அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தானங்கள் அளிக்கப்பட்டது. முன்னதாக சர்வ சமய பிரார்த்தனையும் நடந்தது.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, வெங்கய்ய நாயுடு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டு சாய்பாபா உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். லட்சக்கணக்கான பக்தர்கள் புட்டபர்‌த்தியில் குவிந்துள்ளனர்.

பொதுமக்கள் குல்வந்த் மண்டபத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். உலகெங்கும் உள்ள சாய்பாபாவின் பக்தர்கள் வசதிக்காக இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் தினமலர் இணையதளத்தில் நேரிடையாக ஒளிபரப்பியது.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோர் புட்டபர்த்தியில் நேற்று அஞ்சலி செலுத்தினர்.சாய்பாபா, கடந்த 24ம் தேதி காலை புட்டபர்த்தியில் உள்ள மருத்துவமனையில் ஸித்தியடைந்தார். புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை தரிசிக்க பொதுமக்கள் நேற்று நள்ளிரவு வரை அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை 6 மணி வரை மட்டுமே பொதுமக்கள், பாபா உடலை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், தரிசன நேரம் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர், தனி விமானம் மூலம் புட்டபர்த்திக்கு நேற்று வந்தனர். ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர், பிரதமரையும், சோனியாவையும் வரவேற்று பிரசாந்தி நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பிரதமரும், சோனியாவும், பாபாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்ஷே, இலங்கை கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்கா, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், சுவாமி நித்யானந்தா, இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட பலரும் பாபாவுக்கு நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மாண்டியாவில் மறுபிறப்பு: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர்ஜி, தற்போது ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது அமைப்பின் சார்பில் சத்தியோஜதா சுவாமிகள், சாய்பாபாவுக்கு இறுதியஞ்சலி செலுத்தினார். ரவிசங்கர்ஜி, ஜெர்மனியிலிருந்து விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடுகையில், “சாய்பாபா, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மறுபிறப்பு எடுப்பார். 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொதுவாழ்வில் அவர் ஈடுபடுவார்’ என்றார்.

நன்றி-தினமலர்

%d bloggers like this: