Daily Archives: ஏப்ரல் 28th, 2011

மாயமாகும் பென்குயின்கள்!

பென்குயின் பறவைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். மிகவும் கடுமையான குளிர் பிரதேசமான அண்டார்டிகாவில் வசிக்கும் இந்த பறவைகள் மிகவும் சாதுவானவை. ரத்தத்தை உறைய வைக்கும் கடும் பனிப்பாறைகள் நிறைந்த, துருவ பகுதியில் மட்டுமே இவைகள் வளரும். பெரும் பனிப்பாறைகள் மிதக்கும் கடலில், இவைகள் குதித்து விளையாடும், தண்ணீரில் மூழ்கி மீன்களை பிடித்து சாப்பிடும். இந்த அபூர்வ காட்சியை பார்ப்பதற்கு என்றே, சுற்றுலாப் பயணிகள் துருவ பகுதியில் குவிவர்.
உலகம் முழுவதும் இப்போது வெப்பம் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பு அண்டார்டிகாவையும் விட்டு வைக்கவில்லை. அண்டார்டிகாவில் இப்போது இளம் பென்குயின்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது என, ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அர்ஜென்டினா நாட்டிற்கு சொந்தமான தீவு மார்டிலோ தீவு. அமெரிக்காவில் தெற்கு கடைகோடியில் அண்டார்டிகாவை ஒட்டி இந்த தீவு உள்ளது. இந்த தீவில் கூட்டம், கூட்டமாக பென்குயின் பறவைகள் வசிக்கின்றன. பென்குயின் பறவைகள் குறித்த ஆராய்ச்சியில், அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகடமி ஈடுபட்டுள்ளது. இங்குள்ள பென்குயின்களைப் பிடித்து, அதன் உடலில் ஒரு அடையாள சின்னத்தை பொறித்து அனுப்புகின்றனர்.
கடந்த, 1970களில், இவ்வாறு அடையாள மிடப்பட்ட பென்குயின் பறவைகளில், 50 சதவீத பறவைகள், இரண்டு முதல் நான்கு ஆண்டு களுக்குள் மீண்டும் குட்டி போட கரைக்கு வரும். இப்போது, அதன் எண்ணிக்கை வேகமாக குறைந்து விட்டது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின்படி, இதில் வெறும், 10 சதவீத பென்குயின் பறவைகள் மட்டுமே மீண்டும் இனப்பெருக்கத்திற்காக கரைக்கு வந்தது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம், உலக வெப்பமயமாதல்தான். அண்டார்டிகா பகுதியில் வெப்பம் அதிகரிப் பதால், அங்கு கடல் பகுதியில் வசிக்கும் மீன்கள், வேறு குளிர் பிரதேசங்களை நோக்கி இடம் பெயர்ந்து விட்டன அல்லது அவற்றின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால், பென்குயின்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. இதனால்தான், பென்குயின் கள், இனப்பெருக்கத்திற்காக இங்கு வருவது குறைந்து விட்டது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பகுதியில், 80 லட்சம் பென்குயின் ஜோடிகள் இருந்தன. இப்போது, அவைகள், 20 முதல் 30 லட்சமாக குறைந்து விட்டது. “இது ஒரு ஆபத்தான முன் எச்சரிக்கை. உலகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வருவதை, மனிதர்களுக்கு, பென்குயின்கள் உணர்த்துகின்றன. இதை, நாம் ஒரு பாடமாக எடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால், பின்னர், மனித இனத்திற்கே ஆபத்து…’ என, பென்குயின் ஆராய்ச்சியாளர் வைனிடிரிவல்பீஸ் என்பவர் எச்சரித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: பொதுக்கணக்கு குழு அறிக்கை நிராகரிப்பு; காங்., – தி.மு.க., ஜெயித்தது

ஆளும் காங்கிரஸ் , தி.மு.க., சமாஜ்வாடி மற்றும் பகுஜன்சமாஜ் கட்சி உறுப்பினர்கள் இணைந்து பார்லி., பொதுக்கணக்கு குழு அறிக்கையை நிராகரித்து விட்டனர். தொடர்ந்து நடந்த ஓட்டெடுப்பில் முரளி மனோகர் ஜோஷியின் இன்றைய அறிக்கைக்கு எதிராக 11 பேரும், ( காங்- தி.மு.க.,) ஆதரவாக 10 பேரும் ( பா.ஜ., இடதுசாரியினர் அ.தி.மு.க, ) ஓட்டளித்தனர். இதனால் இந்த அறிக்கை இன்று வெளியிட முடியாமல் போனது.

“பிரதமர் அலுவலகம் உரிய கவனத்துடன் செயல்பட்டிருந்தால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராஜா செய்த தவறுகளையும், முறைகேடுகளையும் தவிர்த்து, நஷ்டம் ஏற்படாத வண்ணம் காப்பாற்றி இருக்க முடியும்’ என, பார்லிமென்டின் பொதுக்கணக்கு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத் தகவல் வெளியானதால், ஏற்கனவே இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்று, அதனால் நெருக்கடியில் உள்ள தி.மு.க.,வுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பொதுக்கணக்கு குழுவின் தலைவர் முரளிமனோகர் ஜோஷி, தனது விசாரணை அறிக்கையின் இறுதி நகல் சில மீடியாக்களுக்கு லீக் ஆகி விட்டது. இந்த அறிக்கை இன்னமும் இறுதி செய்யப்படாவிட்டாலும் இதில் உள்ள விவரங்கள் தி.மு.க.,வுக்கும், மத்தியில் ஆளும் அரசுக்கும் கெட்ட பெயரை அதிகரிக்கச் செய்யும்.மொத்தம் 270 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கை நகலின் ஒரு சில பக்கங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. இது ரகசியமாகக் கசிந்திருக்கிறது, இந்த நிலையில், அவற்றில் தொழிலதிபர் ரத்தன் டாடா குறித்து மிகவும் கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, தனக்கு சாதகமாக செயல்பட்ட ராஜாவை புகழ்ந்து, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்தளவுக்கு அமைச்சரவை இலாகா ஒதுக்கீடுகளில் ஆர்வம் காட்டுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதே போல, ஸ்பெக்ட்ரம் ஊழலில் பூஜ்யம் அளவு மட்டுமே நஷ்டம் ஏற்பட்டதாக கூறிய கபில் சிபலையும் விமர்சித்துள்ளது. அவரது பேச்சு பொறுப்பற்ற பேச்சு என்றும், நடைபெற்ற ஊழலை மூடிமறைக்கும் விதத்தில் அவர் நடந்து கொள்வதாகவும் கண்டித்துள்ளது.ஸ்பெக்ட்ரம் உரிமத்தை விற்கும் விஷயம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கும், தொலைத்தொடர்பு இலாகாவிற்கும் இடையில் நடைபெற்ற தகவல் பரிமாற்றங்களில் முக்கிய தவறுகள் நடைபெற்றுள்ளன.

பிரதமர் அலுவலகம் நினைத்திருந்தால் இந்த முறைகேட்டை தவிர்த்து இருக்க முடியும். பிரதமர் அலுவலகம் உரிய விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட்டிருந்தால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகளை தவிர்த்து, நஷ்டம் ஏற்படாத வண்ணம் காப்பாற்றியிருக்க முடியும்.முக்கிய தகவல்களை பிரதமர் அலுவலக அதிகாரிகள், பிரதமரிடம் தெரிவிக்காமல் தாமதப்படுத்தியுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை எவ்வாறு மேற்கொள்ளப்போகிறேன் என்பது குறித்து பிரதமருக்கு ராஜா எழுதிய கடிதத்தை, பிரதமரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல, பிரதமர் அலுவலகம் தவறியுள்ளது.

இதனால், நடைபெறும் சம்பவங்கள் அனைத்தையும் பிரதமர் வெறுமனே வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை இருந்துள்ளது.தவறை தடுத்து நிறுத்த தவறியதன் மூலம், ராஜாவின் தவறான நடவடிக்கைக்கு பிரதமரும் மறைமுகமாக துணை போய் இருப்பதாக கருத வேண்டியுள்ளது. அதே போல, இந்த விஷயம் முடிந்த ஒன்று என்று அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் குறிப்பிட்ட தகவலும் இடம் பெற்றிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்ற நிர்வாக தவறுகள் மற்றும் முறைகேடுகள் ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஊழலுக்கு முக்கியக் காரணமாக ராஜா இருந்தார் என்றும், அதே போல கனிமொழியும் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று சி.பி.ஐ., ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறது. ஆகவே, பொதுக்கணக்கு குழுவும் தன்பங்குக்கு இதன் தீவிரத்தை அதிகரித்திருக்கிறது.

இந்த அறிக்கை ஒருதலைப்பட்சமாக தயாரிக்கப்பட்டுள்ளது, இதை ஏற்கப்போவதில்லை என்றும், இந்த அறிக்கை மீதான தங்களது எதிர்ப்பு கருத்துக்களையும் பதிவு செய்வதற்கு காங்கிரஸ் – தி.மு.க ., உறுப்பினர்கள் முடிவு செய்தனர். இன்று ( 28ம் தேதி) மாலை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்., உறுப்பினர்கள் 7 பேர், தி.மு.க., 2 பேர் சமாஜ்வாடி -1 , பகுஜன்சமாஜ்கட்சி -1 ஆக மொத்தம் 11 பேர் இந்த அறிக்கை வெளியிட மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால் இந்த அறிக்கை வெளியிடுவது தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 21 உறுப்பினர்களிலல்11 பேர் அறிக்கைக்கு எதிராகவும், 10 பேர் முரளி மனோகர் ஜோஷிக்கு ஆதரவாகவும் ஓட்டளித்தனர். ஆளும் அரசுக்கு ஆதரவான ஓட்டுக்கள் மட்டும் அதிகம் ( ஒரு ஓட்டு வித்தியாசம்) இருந்ததால் அறிக்கை வெளியிட முடியாமல் போனது.

நாளை (29ம் தேதி) பொதுக்கணக்கு குழு விசாரணை அறிக்கையை முறைப்படி சபாநாயகர் மீராகுமாரிடம் வழங்கவும், ஜோஷி திட்டமிட்டிருந்தார். அதேபோல, காங்கிரஸ் – தி.மு.க., கூறுவதுபோல பலரையும் சம்மனுக்கு அழைத்துக் கொண்டே இருந்தால், இந்த குழுவின் காலக்கெடுவுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க இயலாமல் போய்விடும் என்றும் கூறியுள்ளார். .

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணை அறிக்கை தொடர்பாக, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., ஆகிய இரண்டு தரப்புக்கும் மோதல் வலுத்துள்ளது. இந்த அறிக்கையை எப்படியும் நிறுத்தி வைக்க வேண்டுமென்று காங்கிரஸ் தரப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதால், இன்று நடைபெற்ற பொதுக்கணக்கு குழுவில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளன.

பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழுவின் மொத்த உறுப்பினர்கள் 22 பேர். ஆனாலும், ஒரு இடம் காலியாக இருப்பதால் மொத்தம் 21 இடங்கள் உள்ளது. இதில், லோக்சபாவில் இருந்து 15 பேரும், ராஜ்யசபாவில் இருந்து 6 பேரும் உள்ளனர். இதில் கட்சிகளின் பெரும்பான்மை பலத்தை வைத்துப் பார்க்கும்போது காங்கிரஸ் மற்றும் தி.மு.க., ஆகிய இரண்டும் சேர்த்து மொத்தம் 10 உறுப்பினர்கள் உள்ளனர். பா.ஜ., மற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து குரல் கொடுக்கும் அ.தி.மு.க., – இடதுசாரிகள் என அனைத்தும் சேர்த்து 9 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், குழுத் தலைவர் முரளிமனோகர் ஜோஷியும் அடக்கம். ஆக மொத்தம் 19. இது தவிர, பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சி சார்பிலான உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஆக இன்றைய கூட்டத்தில் தங்களுக்கு அதிக எண்ணிக்கை பலம் இருந்ததால், தற்போது முரளிமனோகர் ஜோஷி தயாரித்து வைத்திருக்கும் அறிக்கையை காங்கிரசும், தி.மு.க.,வும் நிறுத்தி வைத்து விட்டன.

நன்றி-தினமலர்

தமிழக குடிமக்களுக்கு முக்கிய செய்தி

தமிழகத்தில் TASMAC மூலம் பல கோடி ருபாய்களுக்கு மது விற்பனை தினசரி நடந்து வருகிறது. ஆனால் அனைத்து கடைகளிலும் அதிகபட்ச விற்பனை விலையினை விட கூடுதலாக 2 முதல் 10 ரூபாய் வரை அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தட்டிக்கேட்டால் தாங்கள் விரும்பிய சரக்குகளை இல்லை என கூறி விடுவதால் குடிமக்கள் யாரும் கேள்வி கேட்பதில்லை. தமிழக கடைகளில் விற்கப்படும் மதுபான வகைகளும் அவற்றின் அதிகபட்ச விற்பனை விலையும் இங்கே.

மேலதிக தகவல்களுக்கு TASMAC (http://tasmac.tn.gov.in) வெப்சைட்டை அணுகவும்.

உலக மொழிகளின் பிறப்பிடம் ஆப்பிரிக்கா: ஆய்வில் தகவல்


ஆஸ்திரேலிய நாட்டில் அமைந்துள்ள குயின்ஸ்லாண்ட் பல்கலைகழகத்தின் ஆய்வாளர் குயென்டின் அட்கின்சன் என்பவர் தலைமையில் முதன்முதலில் மொழியானது எங்கு தோன்றியது என ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்ந்த கற்கால மனிதர்களின் பேச்சில் இருந்து தான் தற்போது பரவலான மக்களால் பேசப்படும் மொழிகளான ஆங்கிலம், வங்காளம், ஜப்பான் மற்றும் இந்தி உட்பட உலகின் பல்வேறு மொழிகளும் தருவிக்கப்பட்டுள்ளன என தெரிய வந்துள்ளது. இந்த ஆய்விற்காக அட்கின்சன், உலகளவில் பேசப்படும் 504 மொழிகளை எடுத்து கொண்டார். அந்த மொழிகளில் பயன்படுத்தப்படும் உச்சரிப்புகள் மற்றும் வெவ்வேறு சப்தங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தார். ஆய்வில், மொழியானது ஏறத்தாழ 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், தற்காலத்தில் வாழும் மனிதர்கள் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவை மையமாக கொண்டு வாழ்ந்துள்ளனர். பின்னர் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து உலகின் பல இடங்களுக்கும் பரவி வாழ ஆரம்பித்துள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்டவர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வாழ்ந்த போது அங்கு பேசப்பட்ட மொழியும் நிலைத்துள்ளது. அதுவே, சிறு சிறு குழுக்களாக மக்கள் பிரிந்து செல்லும் போது அவர்களின் இடையே பேசப்பட்ட மொழி காலப்போக்கில் மாற்றம் பெற தொடங்கியது. தலைமுறைகள் மாற மாற மொழிகளும் மாற்றம் பெற்றுள்ளன. அதில், ஆப்பிரிக்காவில் ஆரம்பகாலத்தில் பேசப்பட்ட மொழியின் சப்தங்கள் மற்றும் உச்சரிப்புகள் ஆகியவை படிப்படியாக மறைந்து போயுள்ளன என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிற

காப்புரிமை

கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகள் (Patent) அரசாங்கங்களால் அளிக்கப்படுகின்றன. ஒருவர் தன் கண்டுபிடிப்பின் விற்பனை உரிமை மூலம் சில ஆண்டுகளுக்குப் பணம் ஈட்ட காப்புரிமை வழி செய்கிறது. வேறு யாரும் அதே பொருளை அந்தக் காலகட்டத்தில் காப்புரிமை பெற்றவரின் அனுமதி இல்லாமல் தயாரித்தால் அது தண்டனைக்குரிய செயலாகும்.

காப்புரிமைக்கான விண்ணப்பங்கள் மூலம், கண்டுபிடிப்பு மற்றும் கண்டுபிடிப்பாளர் பற்றிய தகவல்களை நாம் அறிந்துகொள்ள முடியும். ஆனால், பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய கண்டுபிடிப்பாளர்கள், காப்புரிமை முறை அறிமுகமாவதற்கு முன்பே இறந்துவிட்டார்கள்.

இன்னும் பலர் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபோது எழுத்து முறையே கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவும் பதிவாகவில்லை. உலகை மாற்றிய பல முக்கிய கண்டுபிடிப்புகளைச் செய்தவர்களின் பெயர்கள் கூட நமக்குத் தெரியாது. முதல் காப்புரிமை, இத்தாலி நாட்டில் உள்ள புளோரிடா நகரில் 1421-ம் ஆண்டில் வழங்கப்பட்டது.

`ரூக்கிகள்’!

குழுவாகப் பணியாற்றும் நிறுவனத்தில் அல்லது ஒரு விளையாட்டு அணியில் புதிதாகச் சேருபவர்கள் `ரூக்கிகள்’ (Rookies) என்று அழைக்கப்படுகிறார்கள். அனுபவமில்லாத அவர்கள் தவறு செய்யலாம் என்று கருதப்படுகிறது. அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது ராணுவத்தில் இச்சொல் பிறந்தது. அப்போது, பயிற்சி பெறாத இளைஞர்கள் அதிக அளவில் போரில் பங்கேற்றனர்.

அவர்களிடம் இருந்து எந்த ஒழுங்கையும் எதிர்பார்க்க முடியாததால் பெரிய பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள், புதிதாகச் சேர்ந்த திறமையற்றவர்களை `ரெக்கீஸ்’ (Reckies) என்று அழைத்தனர். நாளாவட்டத்தில் அது `ரூக்கீஸ்’ ஆகிவிட்டது.

எக்ஸ்பியில் எர்ரர் செய்தி கிடைக்காமல் இருக்க

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்கள் அனைவருமே ஏதாவது எர்ரர் செய்தியினை, நாள்தோறும் சந்தித்திருப் பார்கள். விண்டோஸ் இயக்கத்தில் எங்கு பிரச்னை உள்ளது என்று இந்த செய்திகள் நமக்குக் காட்டுகின்றன. சற்று விபரம் புரிந்தவர்கள் அதனைப் படித்து புரிந்து அதற்கேற்ற வகையில் ஏதேனும் செயல்பாடுகளை மேற்கொள் கிறார்கள். பலர் இங்கே எர்ரர் இருக்கின்றது தெரிந்து என்ன செய்ய? இது போல செய்திகள் வராமல் இருந்தாலே நல்லது என்று நினைக் கிறார்கள். அவர்களுக்கான தகவல் இது. இது போன்ற செய்திகள் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடு களைப் பார்க்கலாம்.
1. ஸ்டார்ட் மெனுவில் My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும்.
2.அடுத்து மெனுவில் System Properties விண்டோ திறப்பதற்காக Properties பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. கிடைக்கும் விண்டோவில் Advanced டேப்பில் கிளிக் செய்திடவும்.
4. இந்த அட்வான்ஸ்டு டேப்பில் கிடைக்கும் விண்டோவில் Error Reporting என ஒரு பட்டன் கிடைக்கும்.
5.இப்போது எர்ரர் ரிபோர்ட்டிங் விண்டோ கிடைக்கும். பின் இதில் Disable Error Reporting என்று இருப்பதனை செலக்ட் செய்திடவும். இதனைக் கிளிக் செய்தால் அனைத்து எர்ரர் செய்திகளும் காட்டப்படாமல் இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஒரு சில முக்கியமான பிரச்சினைகள் உள்ள எர்ரர் செய்திகள் காட்டப்படும். எதுவும் வேண்டாமப்பா! ஆளை விடுங்க!! என்று எண்ணுபவரா நீங்கள். அப்படி என்றால் But notify me when critical errors occur என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்துங்கள்.
6. இதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி எர்ரர் செய்திகள் நீங்கள் செட் செய்தபடி மட்டுமே கிடைக்கும் அல்லது கிடைக்காமல் இருக்கும்.

மின்சாரம் உற்பத்தியை உயர்த்தும் வழிமுறைகள்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களை, “கடுப்பில்’ ஆழ்த்தியது மின்வெட்டு பிரச்னை. சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும் மின்வெட்டு விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் துவக்க தேர்வு செய்யும் இடமாக திகழும், தமிழகத்தில், கடந்த 2008ம் ஆண்டில் இருந்து மின் வெட்டு தொடர்ந்து வருகிறது.மின்பற்றாக்குறையை சரிக்கட்டுவதற்காக, மின்சார வாரியம் வேறு மாநிலங்களிலிருந்து நாள்ளொன்றுக்கு 50 கோடி ரூபாய் அளவிற்கு மின்சாரத்தை வாங்கியும் கூட, நிலைமையை சரிக்கட்ட முடியாமல் திணறி வருகிறது.

தற்போது மின்வெட்டு நேரம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை மின்வெட்டு இல்லாத சென்னையில் ஒரு மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் மூன்று மணி நேரமும் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.மின் தட்டுப்பாட்டை போக்கி, “இருண்ட’ தமிழகத்தை, “ஒளிமிகுந்த’தாக மாற்றவும், கடனில் தவிக்கும் மின்வாரியத்தை மீட்டெடுத்து சிறப்பாக செயல்படவும் அடுத்து அமையும் அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முன்னாள் தலைவர் பூர்ணலிங்கம்.

நாட்டில் உள்ள மின் வாரியங்களில், தமிழக மின்வாரியம் மிகச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. தலைசிறந்த பொறியாளர்களும், ஊழியர்களும் நமது மின்வாரியத்தில் பணிபுரிகின்றனர். நிர்வாகம் மற்றும் மின் வினியோகம் முறைகளில் சிறப்பான செயல்பாட்டை கொண்டுள்ள தமிழக மின் வாரியம், மின்வினியோகத்தை சரியாக கணக்கிட்டு, 100 சதவீத கட்டணம் சரியாக வசூலிக்கப்படுகிறது. இதில், விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் மட்டும் கணக்கீடு செய்யப்படுவதில்லை.

தமிழக மின் வாரியம், தற்போது கடும் நிதி பற்றாக்குறையில் உள்ளது. தொடர்ந்து மின் வினியோகம் செய்ய முடியாமல், மின் பற்றாக்குறையால் தமிழகம் தவித்து வருகிறது. தொழிற்சாலைகளுக்கும், மற்ற நுகர்வோருக்கும் தடையின்றி, தரமான மின் வினியோகம் செய்ய வேண்டியது அடிப்படை தேவையாக உள்ளது. இதற்கான இலக்கை அடைய, சில ஆலோசனைகளை அரசு பின்பற்ற வேண்டும். தமிழகத்தில், தற்போது 3,000 மெகாவாட் அளவிற்கு மின் பற்றாக்குறை உள்ளது. இந்த பற்றாக்குறையை ஈடு செய்ய, மின் உற்பத்தியை பெருக்குவதில், அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

ஆந்திரா மாநிலத்தில், மின் உற்பத்திக்கு என்று தனியாக உற்பத்தி கழகம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆந்திர மின் உற்பத்தி கழகம் சிறப்பு திறன் பெற்று விளங்குகிறது. இதேபோன்று, தமிழகத்திலும், மின் உற்பத்திக்கு என, தனி உற்பத்தி கழகத்தை ஏற்படுத்த வேண்டும். தனி உற்பத்தி கழகம் அமைப்பதால், மின் உற்பத்திக்கு தேவையான முதலீட்டை அவர்களே உருவாக்கி கொண்டு, அதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

சமீபத்தில், மின்வாரியத்தில் இருந்து மின் பகிர்மான பிரிவு தனியாக பிரிக்கப்பட்டது. இந்த சீர்திருத்தம் மின் வினியோகத்தை மேம்படுத்தும். இதே போல், இன்னும் மூன்று அல்லது நான்கு பகிர்மான கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும். இது போன்று ஏற்படுத்தும் போது, அவை தங்களுக்குள் போட்டியிட்டு சிறப்பாக செயல்படும். தமிழகத்தில், போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்பட, அவற்றுக்குள் போட்டியே காரணம். அதேபோல், மின்துறையிலும் ஏற்படுத்த வேண்டும்.

மின் உற்பத்தி செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல், மின் கட்டணத்தை உயர்த்துவது அவசியம். மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக, மின் வாரியம் தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையத்திடம், பரிந்துரைகளை அளிக்கும். இவ்வாறு அளிக்கப்படாத சமயத்திலும், மின் உற்பத்திக்கு ஆகும் செலவில், ஏற்படும் மாற்றங்களை உரிய அளவீடுகள் மூலம் கணக்கிட்டு ஒழுங்கு முறை ஆணையமே கட்டணத்தை உயர்த்த வேண்டும்.

தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதால், மின் வாரியத்திற்கு ஏற்படும் இழப்பிற்கு அரசு ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே மானியம் வழங்குகிறது. இருப்பினும், மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த இழப்பை சரிகட்ட, உற்பத்தி செலவு அளவிற்காவது, மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும். இழப்புக்கு ஏற்ப அரசு மானியம் வழங்கும் வரை தான் இந்த திட்டம் தொடர்வது சாத்தியமாகும்.

மேற்கு வங்க மாநிலத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்படும், மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 1 ரூபாய் 25 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் பயன்படுத்தும் மின்நுகர்வின் அளவு கட்டுக்குள் இருக்கும்.மேற்கு வங்கத்தைப் போன்று தமிழகத்தில் விவசாய பயன்பாட்டுக்கான மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிப்பது அரசியல் ரீதியாக சிரமமானது தான். இருப்பினும், அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தை பெற்று, இதை செயல்படுத்தினால், மின்துறை தமிழகத்தில் நல்ல நிலையை அடையும். தமிழக மின் வாரியம், சிறப்பான மனித வளத்தை பெற்றுள்ளது. மின்வாரியத்தில் நிதி மற்றும் நிர்வாகத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு தொடர் பயிற்சிகளை அளிக்க வேண்டும். அதேபோல், திறன் மேம்பாடு மற்றும் நுகர்வோர் தேவையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மின் உற்பத்தி செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல், மின் கட்டணத்தை உயர்த்துவது அவசியம். மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக, மின் வாரியம் தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையத்திடம், பரிந்துரைகளை அளிக்கும். இவ்வாறு அளிக்கப்படாத சமயத்திலும், மின் உற்பத்திக்கு ஆகும் செலவில், ஏற்படும் மாற்றங்களை உரிய அளவீடுகள் மூலம் கணக்கிட்டு ஒழுங்கு முறை ஆணையமே கட்டணத்தை உயர்த்த வேண்டும்.

நன்றி-தினமலர்