மின்சாரம் உற்பத்தியை உயர்த்தும் வழிமுறைகள்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களை, “கடுப்பில்’ ஆழ்த்தியது மின்வெட்டு பிரச்னை. சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும் மின்வெட்டு விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் துவக்க தேர்வு செய்யும் இடமாக திகழும், தமிழகத்தில், கடந்த 2008ம் ஆண்டில் இருந்து மின் வெட்டு தொடர்ந்து வருகிறது.மின்பற்றாக்குறையை சரிக்கட்டுவதற்காக, மின்சார வாரியம் வேறு மாநிலங்களிலிருந்து நாள்ளொன்றுக்கு 50 கோடி ரூபாய் அளவிற்கு மின்சாரத்தை வாங்கியும் கூட, நிலைமையை சரிக்கட்ட முடியாமல் திணறி வருகிறது.

தற்போது மின்வெட்டு நேரம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை மின்வெட்டு இல்லாத சென்னையில் ஒரு மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் மூன்று மணி நேரமும் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.மின் தட்டுப்பாட்டை போக்கி, “இருண்ட’ தமிழகத்தை, “ஒளிமிகுந்த’தாக மாற்றவும், கடனில் தவிக்கும் மின்வாரியத்தை மீட்டெடுத்து சிறப்பாக செயல்படவும் அடுத்து அமையும் அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முன்னாள் தலைவர் பூர்ணலிங்கம்.

நாட்டில் உள்ள மின் வாரியங்களில், தமிழக மின்வாரியம் மிகச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. தலைசிறந்த பொறியாளர்களும், ஊழியர்களும் நமது மின்வாரியத்தில் பணிபுரிகின்றனர். நிர்வாகம் மற்றும் மின் வினியோகம் முறைகளில் சிறப்பான செயல்பாட்டை கொண்டுள்ள தமிழக மின் வாரியம், மின்வினியோகத்தை சரியாக கணக்கிட்டு, 100 சதவீத கட்டணம் சரியாக வசூலிக்கப்படுகிறது. இதில், விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் மட்டும் கணக்கீடு செய்யப்படுவதில்லை.

தமிழக மின் வாரியம், தற்போது கடும் நிதி பற்றாக்குறையில் உள்ளது. தொடர்ந்து மின் வினியோகம் செய்ய முடியாமல், மின் பற்றாக்குறையால் தமிழகம் தவித்து வருகிறது. தொழிற்சாலைகளுக்கும், மற்ற நுகர்வோருக்கும் தடையின்றி, தரமான மின் வினியோகம் செய்ய வேண்டியது அடிப்படை தேவையாக உள்ளது. இதற்கான இலக்கை அடைய, சில ஆலோசனைகளை அரசு பின்பற்ற வேண்டும். தமிழகத்தில், தற்போது 3,000 மெகாவாட் அளவிற்கு மின் பற்றாக்குறை உள்ளது. இந்த பற்றாக்குறையை ஈடு செய்ய, மின் உற்பத்தியை பெருக்குவதில், அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

ஆந்திரா மாநிலத்தில், மின் உற்பத்திக்கு என்று தனியாக உற்பத்தி கழகம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆந்திர மின் உற்பத்தி கழகம் சிறப்பு திறன் பெற்று விளங்குகிறது. இதேபோன்று, தமிழகத்திலும், மின் உற்பத்திக்கு என, தனி உற்பத்தி கழகத்தை ஏற்படுத்த வேண்டும். தனி உற்பத்தி கழகம் அமைப்பதால், மின் உற்பத்திக்கு தேவையான முதலீட்டை அவர்களே உருவாக்கி கொண்டு, அதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

சமீபத்தில், மின்வாரியத்தில் இருந்து மின் பகிர்மான பிரிவு தனியாக பிரிக்கப்பட்டது. இந்த சீர்திருத்தம் மின் வினியோகத்தை மேம்படுத்தும். இதே போல், இன்னும் மூன்று அல்லது நான்கு பகிர்மான கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும். இது போன்று ஏற்படுத்தும் போது, அவை தங்களுக்குள் போட்டியிட்டு சிறப்பாக செயல்படும். தமிழகத்தில், போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்பட, அவற்றுக்குள் போட்டியே காரணம். அதேபோல், மின்துறையிலும் ஏற்படுத்த வேண்டும்.

மின் உற்பத்தி செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல், மின் கட்டணத்தை உயர்த்துவது அவசியம். மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக, மின் வாரியம் தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையத்திடம், பரிந்துரைகளை அளிக்கும். இவ்வாறு அளிக்கப்படாத சமயத்திலும், மின் உற்பத்திக்கு ஆகும் செலவில், ஏற்படும் மாற்றங்களை உரிய அளவீடுகள் மூலம் கணக்கிட்டு ஒழுங்கு முறை ஆணையமே கட்டணத்தை உயர்த்த வேண்டும்.

தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதால், மின் வாரியத்திற்கு ஏற்படும் இழப்பிற்கு அரசு ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே மானியம் வழங்குகிறது. இருப்பினும், மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த இழப்பை சரிகட்ட, உற்பத்தி செலவு அளவிற்காவது, மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும். இழப்புக்கு ஏற்ப அரசு மானியம் வழங்கும் வரை தான் இந்த திட்டம் தொடர்வது சாத்தியமாகும்.

மேற்கு வங்க மாநிலத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்படும், மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 1 ரூபாய் 25 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் பயன்படுத்தும் மின்நுகர்வின் அளவு கட்டுக்குள் இருக்கும்.மேற்கு வங்கத்தைப் போன்று தமிழகத்தில் விவசாய பயன்பாட்டுக்கான மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிப்பது அரசியல் ரீதியாக சிரமமானது தான். இருப்பினும், அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தை பெற்று, இதை செயல்படுத்தினால், மின்துறை தமிழகத்தில் நல்ல நிலையை அடையும். தமிழக மின் வாரியம், சிறப்பான மனித வளத்தை பெற்றுள்ளது. மின்வாரியத்தில் நிதி மற்றும் நிர்வாகத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு தொடர் பயிற்சிகளை அளிக்க வேண்டும். அதேபோல், திறன் மேம்பாடு மற்றும் நுகர்வோர் தேவையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மின் உற்பத்தி செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல், மின் கட்டணத்தை உயர்த்துவது அவசியம். மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக, மின் வாரியம் தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையத்திடம், பரிந்துரைகளை அளிக்கும். இவ்வாறு அளிக்கப்படாத சமயத்திலும், மின் உற்பத்திக்கு ஆகும் செலவில், ஏற்படும் மாற்றங்களை உரிய அளவீடுகள் மூலம் கணக்கிட்டு ஒழுங்கு முறை ஆணையமே கட்டணத்தை உயர்த்த வேண்டும்.

நன்றி-தினமலர்

%d bloggers like this: