Daily Archives: ஏப்ரல் 29th, 2011

காபி, டீ அதிகமாக குடிப்பதற்கு மரபணு தொடர்களே அடிப்படை: ஆய்வாளர்கள் கருத்து


அமெரிக்காவின் மேரிலேண்ட் என்ற இடத்தில் அமைந்துள்ள தேசிய புற்றுநோய் கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் நீல் கேபோராசோ என்பவர் ஆய்வு ஒன்று மேற்கொண்டார். அந்த ஆய்வானது காபீன் என்ற பொருள் அடங்கிய டீ, காபி, சாக்லேட், குளிர்பானம் போன்றவற்றை அதிகமாக எடுத்து கொள்வதை அடிப்படையாக கொண்டு அமைந்தது. இதற்காக ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டனர். அதில், இரண்டு மரபணு தொடர்கள் காபீன் என்ற பொருளை அதிகமாக உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது என தெரிய வந்துள்ளது. உடலில் உள்ள காபீன் பொருளை உடைக்கும் பணியோடு சி.ஒய்.பி.1.ஏ.2 என்ற ஜீன் தொடர்பு கொண்டுள்ளது. இந்த ஜீனின் செயல்பாடுகளை ஏ.எச்.ஆர். என்ற மற்றொரு ஜீன் ஒழுங்குபடுத்துகிறது. எனவே ஒருவர் காபி அல்லது கோலா அருந்துவது இத்தகைய இரு மரபணுக்களின் தூண்டுதலின் அடிப்படையிலேயே அமைகிறது என ஆய்விலிருந்து தெரிய வருகிறது.

பல் மருத்துவப் பறவை!


`புளோவர்’ என்று ஒரு சிறுபறவை. இது முதலைகளின் பற்களைச் சுத்தம் செய்யும் வைத்தியராகப் பணியாற்றுகிறது.

முதலை, உயிரினங்கள் எல்லாவற்றையும் தின்னக்கூடியது. இரையின் எச்சங்கள் அதன் கோர மான பற்களிடையே சிக்கிக் கொண்டிருக்கும்.

முதலை அசைந்து வாயை மூடினால் போதும். பறவையின் உயிர் போய் விடும். ஆனாலும் முதலை அப்படிச் செய்வதில்லை. தன் பற்களை பறவை சுத்தம் செய்வதற்காக பொறுமை யாகக் காத்திருக்கிறது. அதே நேரத்தில் பறவைக்கும் தாராளமாக உணவு கிடைத்து விடுகிறது.

இதேபோல் கடல் மீன்களைச் சுத்தப்படுத்தும் ஒருவகை மீன் உள்ளது. அவை ஒரு கோஷ்டியாக இருக்கும். மீன்கள் தம் உடலைச் சுத்தப்படுத்த இவற்றிடம் வருகின்றன. அவற்றின் உடம்பில் உள்ள ஒட்டுண்ணிகள், காளான், பாக்டீரியா போன்றவற்றை சுத்தப்படுத்தும் மீன்கள் சாப்பிட்டு சுத்தப்படுத்துகின்றன. இவற்றின் வேலை முடியும் வரை பெரிய மீன்கள் பொறுமையாக ஒத்துழைக்கின்றன. சுறாமீன்கள் கூட இவ்வாறு தமது உடலைச் சுத்தம் செய்துகொள்கின்றன.

கழுத்து வலி…

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது சித்தர்களின் முதுமொழியாகும். மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடை பெறுகிறது. இத்தகைய சக்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி பல கோடிக் கணக்கான அணுக்களைக் கொண்ட பந்து போல தோற்றமளிக்கும் சிரசை தாங்கி நிற்பது கழுத்துப் பகுதிதான். கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும். கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும். உடலுக்கும் சிரசுக்கும் இரத்தம் மற்றும் நரம்புகள் பிரயாணம் செய்கின்றன. கழுத்தின் மையமாக தண்டுவட எலும்புகள் உள்ளன. இதில் ஏழு எலும்புகள் உள்ளன. அந்த எலும்பு சட்டத்தைச் சுற்றி தசைகளும், தசை நார்களும் உறுதி கொடுக்கின்றன. இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன.

மேலும் உணவுக்குழாய், மூச்சுக்குழாய் உள்ளன. மூளைக்கும் இருதயத்திற்கும் இடையேயான இரத்த ஓட்டம் கழுத்தின் வழியேதான் நிகழ்கிறது.

முதுமைப் பருவத்தில் கழுத்து எலும்புகளின் இணைப்புகளில் (Posterior interrertebral joints) ஏற்படும் தேய்மானத்தைத்தான் செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் (Cervical spondylosis) என்று அழைக்கின்றனர். இதை தமிழில் தோள்பட்டை வாதம் என்கின்றனர். இது பொதுவாக நடுத்தர வயதுடையோரிடமும், முதியோரிடமும் குறிப்பாக ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வோரிடமும் காணப்படுகிறது.

குடல், வயிறு இவற்றின் மூலப் பகுதிகளில் உஷ்ணம் அதிகமானால் வயிற்றுப் பகுதியில் உள்ள அபான வாயுவின் அழற்சி காரணமாக குடல் மேலும் உஷ்ணப்பட்டு உடலில் உள்ள நீரானது அபான வாயுவால் மேல்நோக்கி தள்ளப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நீர் தலைப்பகுதிக்கு வந்து கோர்த்துக்கொள்ளும்.

பின்பு கழுத்து நரம்பு வழியாக முதுகுப் பக்கம் (பின்பகுதி) நீர் இறங்கும். இவ்வாறு இறங்கும் நீரானது கழுத்துப் பகுதிக்கு வரும்போது அதன் தன்மை மாறி பசை போல் கடினமாகிறது. பின்பு அது இறுகித் தடித்து கடினமானது போல் ஆகிவிடும். இதுதான் தோள்பட்டை வாதம். உதாரணமாக கடலில் உள்ள நீரானது அதிக வெப்பத்தால் ஆவியாவி மேல்சென்று மேகமாக மாறி பின் மழை நீராக பொழிவது போல் குடலில் உள்ள நீர் உஷ்ணமாகி ஆவியாக மாறி மேல்நோக்கி சிரசுக்கு சென்று அங்கு நீராக மாறி பிறகு கழுத்துப் பகுதிக்கு இறங்குகிறது. இதைத்தான் சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

அறிகுறிகள்

கழுத்துப் பகுதியில் வலி ஏற்படும். கைகள் மரத்துப் போகும். சுண்டுவிரல் செயலிழுந்து போகும். மன எரிச்சல் உண்டாகும். தூக்கமின்மை ஏற்படும். எப்போதும் கோபம் கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கண் எரிச்சல், உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும். படிக்கும்போது கழுத்து வலி உண்டாகும். மேலும் குனியும் போதும், நிமிரும்போதும் தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றி உடல் அதிரும். நரம்புகள் இறுகும். ஒருசிலருக்கு நடக்கும்போது தலை சுற்றல் உண்டாகும்.

கழுத்து கடுத்து, தடித்து காணப்படும். மன நிம்மதியின்றி காணப்படுவார்கள். பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் உண்டாகும். வாத உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திருப்ப முடியாத நிலை ஏற்படும். கப உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து பகுதி தடித்து உப்பு நீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாக தடித்து காணப்படும்.

அதிக வியர்வை உண்டாகும். கழுத்துப் பகுதியில் எரிச்சல் தோன்றும். ஒரு சிலருக்கு இடது பக்கமாக கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழிறங்கி தோள்பட்டையில் வலியை உண்டாக்கும். இது நெஞ்சு வலியைப் போன்று தோன்றும். நெஞ்சு வலிக்கும் தோள்பட்டை வலிக்கும் வித்தியாசம் கண்டறிவது கடினம்.

தொடர்ந்து பல நாட்களாக கழுத்து வலி காணப்படும் அந்த வலியானது தோள்வரை பரவும், கழுத்துப் பகுதியில் கை பட்டவுடன் வலி தோன்றும்.

கழுத்து வலி வரக் காரணம்

மலச்சிக்கல், குடலில் வாய்வுக் கோளாறு, மூலச்சூடு, தலையில் நீர் கோர்த்தல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் தோள்பட்டை வலி உண்டாகிறது.

கழுத்துவலியை தவிர்க்கும் முறை

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது தாகம் ஏற்பட்டால் குளிரூட்டப்பட்ட நீரோ, குளிர்பானங்களோ அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது.

வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை சிறு சிறு தூரங்களுக்கு நடந்து செல்வது நல்லது. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

கழுத்து வலிக்கு இந்திய மருத்துவ முறையில் நிறைய மருந்துகள் உள்ளன. குறிப்பாக வர்ம பரிகார முறையில் உள் மருந்துகள் சில கொடுத்து கழுத்துப் பகுதி தோள்பட்டைப் பகுதியில் எண்ணெய் தடவி சீராக கழுத்தை நீவிவிட்டு வந்தால் நாளடைவில் இரத்த ஓட்டம் சீராகும். தோள்பட்டை வலியும் நீங்கும்.

வர்ம பரிகார முறையில் இதை எளிதாக குணப்படுத்தலாம். அறுவை சிகிச்சை தேவையில்லை.

இதுபோல் சித்த மருத்துவ முறையில் சீர்கேடடைந்த உறுப்புகளுக்கு பலம் கொடுக்க கிழி ஒற்றடம், பிழிச்சல் முதலியன செய்வார்கள். இவ்வாறு செய்து வந்தால் நோயிலிருந்து விடுபட்டு உறுப்புகளில் உள்ள வலி, குத்தல், குடைதல், இசிவு, பிடிப்பு, வீக்கம் முதலியன மெல்ல மெல்லக் குறைந்து அவற்றின் தளர்ச்சி, செயலின்மை போன்றவை நீங்கி உடல் பலம் பெறும்.

இந்த முறையில் சிகிச்சை செய்வதின் மூலம் கழுத்து வலிக்கு அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்கலாம்.

உணவு

பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது. கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒதுக்க வேண்டிய உணவுகள்

மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

படுக்கை

தலையைணை இல்லாமல் தூங்குவது நல்லது. மேடுபள்ளம் இல்லாத சமமான படுக்கையே நல்லது. அதிக குளிர்காற்று உடலில் படும்படியாக படுக்கக்கூடாது.

இத்தகைய நடைமுறைகளை கடைப்பிடித்தால் தோள்பட்டைவாதம் என்ற கழுத்து வலியிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
நன்றி-ஹெல்த் சாய்ஸ்

`லாபியிங்’ எப்படிப் பிறந்தது?

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் இருந்து அரசியல் ஆதாயம் பெற பாடுபடுவது `லாபி’ பண்ணுவது அல்லது `லாபியிங்’ (Lobbying) எனப்படுகிறது. இச்சொல், பிரிட்டீஷ் பாராளுமன்றம் தொடங்கிய காலத்திலேயே தோன்றியுள்ளது. அங்கு, மேல் சபைக்கும், கீழ்சபைக்கும் இடையே ஒரு நீளமான வராந்தா இருக்கும்.

பொதுமக்கள் அந்த வராந்தாவுக்கு வர அனுமதி உண்டு. வராந்தாவின் ஆங்கிலச் சொல், `லாபி’. அங்கு, தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுக்காக வாக்காளர்கள் காத்திருப்பார்கள். அப்போது நடக்கும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் தங்களுக்கு லாபகரமாக வாக்களிக்கும்படி பிரதிநிதிகளை வற்புறுத்துவார்கள். இந்தப் பழக்கம் `லாபி’யில் நடைபெற்றதால் `லாபியிங்’ என்று பெயர் பெற்றது. அப்படியே அரசியல் இடைத்தரகு வேலைகளுக்கும் பொதுவான சொல்லாகிவிட்டது.

உள்ளங்கைகளில் வைரஸ்

உங்கள் மொபைல் போனில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் போட்டிருக் கிறீர்களா? என்ற கேள்விக்குப் பெரும் பாலானவர்கள் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். பலர், அப்படி எல்லாம் மொபைல் போனுக்கும் உள்ளதா என்று கேட்பார்கள். பெர்சனல் கம்ப்யூட்டர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர் கள் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்கள் எல்லாம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு பாதுகாப்பான சூழ்நிலையில் இயங்கி வருகையில், கம்ப்யூட்டரின் அனைத்து பணிகளையும் தற்போது இயக்கி வரும் மொபைல் போன் இந்த வகை பாதுகாப்பினைப் பெறாமலேயே உள்ளது.
இது குறித்து மெக் அபி நிறுவனத் துணைத் தலைவர் கூறுகையில், மொபைல் போன் வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்ச்சி இன்னும் மக்களிடையே பரவவில்லை. முன்பு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் பரவத் தொடங்கிய போது ஏற்பட்ட வைரஸ் சூழ்நிலை, மொபைல் போன்களுக்குத் தற்போது ஏற்பட்டு வருகிறது. இனி மக்கள் இதனை உணர்ந்து தற்காப்பு வழிகளை மேற்கொள்வார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார். முன்பு வைரஸ் அனுப்பும் ஹேக்கர்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்களை இலக்காகக் கொண்டு இயங்கினார்கள். இப்போது ஐ.பி. முகவரி பெறும் அனைத்து சாதனங்களையும் இலக்காக வைத்துள்ளனர். மொபைல் போன்கள் இன்டர்நெட் இணைப்பில் ஒரு சாதனமாகப் பரவலாக இயங்குவதால், மொபைல் போன்களும் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. ஐ.பி. முகவரி கொண்ட மொபைல் போன்கள், பன்னா ட்டளவில் 600 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கருதப்படுகிறது.
மொபைல் போன்களைத் தாக்கும் வைரஸ்கள், போன்களில் பரவி, தகவல்களைத் திருடிப் பின்னர் அதிலிருந்து நீங்கி விடுகின்றன. வந்ததும் போனதும் பயன்படுத்துபவருக்குத் தெரியாது. நாளொன்றுக்கு 60 ஆயிரம் வைரஸ்கள் இவ்வாறு இயங்குவதாகத் தெரிகிறது.
இந்த வைரஸ்களுக்கு அடித்தளம் பெரும்பாலும் டவுண்லோட் செய்யப் படும் புரோகிராம்களைக் கொண்ட இணைய தளங்களாக உள்ளன. அடுத்ததாக, மொபைல் போனுக்கான சாப்ட்வேர் புரோகிராம்களில் உள்ள பலவீனமான குறியீடுகள் இவற்றிற்கு வழி வகுக்கின்றன. அண்மையில் ஆண்ட்ராய்ட் மார்க்கட் சர்வரிலிருந்து நிறைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் வைரஸ் இருந்ததால் நீக்கப்பட்ட செய்தியை நாம் பார்த்தோம். இதிலிருந்து மொபைல் போனுக்கான புரோகிராம் ஒன்று, ஆண்ட்ராய்ட் மார்க்கட், ஓவி ஸ்டோர், ஐபோன் மார்க்கட்டில் இருப்பதனாலேயே அது வைரஸ் இல்லாதது என்று தெரிகிறது.
சைமான்டெக் நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், மூன்று லட்சத்து 10 ஆயிரம் தனிப்பட்ட தளங்கள், கெடுதல் விளைவிக்கும் தன்மை உடையனவாக உள்ளதாகக் கண்டறிந் துள்ளது. சராசரியாக, ஒரு மாத காலத்தில், 44 லட்சம் கெடுதல் விளைவிக்கும் தளங்கள் அறியப்பட்டுள்ளன. இணைய தளப் பக்கங்கள் அனைத்தும் நிலையான தகவல்களைத் தரும் பக்கங்களாக அமைக்கப்படுவதால், இவற்றில் வைரஸ்கள் சென்று இணைந்து தங்கள் கெடுதல் வேலையை மேற்கொள்வது எளிதாகிறது.
இவற்றுடன் புளுஜாக்கிங் (Bluejacking) என்ற வகையில் தகவல் திருடும் கெடுதல் வேலையும் மேற்கொள்ளப்படுகிறது. புளுடூத் தொழில் நுட்பம் மூலம் அந்த வசதியை இயக்கி வைத்திருக்கும் மொபைல் போன்களுக்கு வைரஸ்களை, அந்த போனைப் பயன்படுத்துபவர்களின் அனுமதி இன்றி கெடுதல் விளைவிக்கும் வைரஸை அனுப்புவதே, புளுஜாக்கிங் எனப்படுகிறது.
இதே போல Bluesnarfing என்று ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் வைரஸ்கள் புளுடூத் இணைப்பு மூலம் அனுப்பப்பட்டு, மொபைல் போனில் உள்ள தகவல்கள் அனைத்தும் மொத்தமாகத் திருடப் படுகின்றன.
தற்போது பெருகி வரும் 3ஜி சேவை இந்த வைரஸ் பரவலுக்கு ஒரு காரணமாய் அமைந்து வருகிறது. 200 குழுக்களைச் சேர்ந்த, 2,200 மால்வேர் புரோகிராம்கள், இந்த சேவையின் மூலம் பரவுகின்றன. குறிப்பாக, நெட்வொர்க்குகள் இடையே இணைப்பு ஏற்படுகையில், இவை எளிதாகப் பரவுவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. ரோமிங் மேற்கொள்கையில், மொபைல் போன்கள் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் அறியப் பட்டுள்ளது.
Zeus Trojan என்ற ஒரு வைரஸ், பிளாக் பெரி மொபைல் போன்களை எளிதாகக் கைப்பற்றும் வகையில் உருவாக்கப் பட்டு பரவ விடப்பட்டது என ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் கூறியுள்ளது. இந்த வைரஸ் தன்னை உருவாக்கி அனுப்பிய ஹேக்கருக்கு, மொபைல் போன் பயன் படுத்துபவருக்குத் தெரியாமலேயே எஸ்.எம்.எஸ். அனுப்பும் திறன் கொண்டது. வரும் அழைப்புகளைத் தடை செய்திடும்; புதிய அட்மினிஸ்ட் ரேட்டர் அக்கவுண்ட் ஒன்றினை உருவாக்கும் திறனையும் கொண்டுள்ளது.
பல வைரஸ் எதிர்ப்பு மற்றும் மொபைல் பாதுகாப்பு புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றை இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த வகையில் ஒரு நல்ல சாப்ட்வேர் புரோகிராம், போன்களை கெடுதல் விளைவிக்கும் வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, மொபைல் போன் திருடப்பட்டு அல்லது காணாமல் போகும் வேளைகளில், அந்த போனை ரிமோட் மூலம் செயல் இழக்கச் செய்திடும் வசதியைத் தருகின்றன. இதே வழியில், மொபைல் போனில் உள்ள அனைத்து பெர்சனல் தகவல்களையும் அழிக்கவும் வழி தரப்படுகிறது.
சில குறிப்பிட்ட மொபைல் போன் வைரஸ்களை இங்கு பார்க்கலாம்.
1. Android/Geinimi: ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், வர்த்தக ரீதியான மொபைல் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் போன்ற கேம்ஸ்களில் நுழைந்தே இந்த ட்ரோஜன் வைரஸ் வருகிறது.
2. SymOS/XMJTC: இது ஒரு குழுவான வைரஸ். புரோகிராம் டெவலப்பர்கள் நம்மிடம் அனுமதி பெறும் சான்றிதழ் போன்ற போர்வையில் போன்களுக் குள்ளே நுழைகின்றன. இவை எங்கு தகவல்களை அனுப்புகின்றன என்பதைக் கண்டறியும் வழிகளை அண்மையில் சில ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன.
3. Mobspy.A: ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தைக் குறி வைத்துப் பாதித்து, இயங்கும் வைரஸ். மொபைல் போனுக்கு வரும் மற்றும் அழைக்கும் எண்களைப் பதிவு செய்கிறது. எஸ்.எம்.எஸ். செய்தி களையும் குறித்து வைக்கிறது. போன் பயன்படுத்துபவர் வாழும் இடத்தையும் ஜி.பி.எஸ். மூலம் அறிகிறது. இவ்வாறு திருடப்பட்ட தகவல்கள் அனைத்தையும், சர்வர் ஒன்றுக்கு அனுப்புகிறது. இந்த திருட்டு தகவல்களை ஹேக்கர் எப்போது வேண்டுமானாலும், தன் நோக்கங் களுக்குப் பயன்படுத்த முடியும்.
4. CommWarrior: பெரும்பாலான நோக்கியா போன்களில் பயன்படுத்தப் படும் சிம்பியன் சிஸ்டத்தில் இந்த வைரஸ் பரவுகிறது. பரவிய போனில் உள்ள அட்ரஸ் புக்கில் உள்ள முகவரிகளுக்கு எம்.எம்.எஸ்.வகை செய்திகளை அனுப்புகிறது இந்த வைரஸ். அழைப்பு பதிவுகளையும், எஸ்.எம்.எஸ். செய்திகளையும் பதிவு செய்து, ஹேக்கருக்கு அனுப்புகிறது.