Advertisements

Daily Archives: மே 1st, 2011

முதுகு: வலியின்றி வாழ வழி உண்டு…

வாழ்க்கையில் ஒருதடவையாவது முதுகுவலியை அனுபவிக்காத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது! அதுவும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு முறையாவது `ஆ… அம்மா…’ என்று சப்தமிட்டு, முதுகு வலியால் வேதனைப்பட்டிருப்பார்கள்.

முதுகுவலி என்றதும் நம் நினைவுக்கு வருவது, மற்ற நகரும் உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்தும், மனிதனின் முதுகெலும்புத் தொடர். இது ஒரே ஒரு தனி எலும்பு அல்ல. 33 எலும்புகள், தசைகள், தசை நார்கள், நாண்கள் ஆகியவை மிகவும் நேர்த்தியுடன் இணைந்த தொடர் சங்கிலியாகும். இந்த சங்கிலித் தொடரின் “தொடர்ந்த சேவை”, மனிதனுக்கு மிகத் தேவை !

கழுத்துக்குக் கீழே உள்ள பாகங்களுக்கு உணர்ச்சிகளை எடுத்துச் செல்வதும், மூளை யின் கட்டளைகளை கை, கால்களுக்கு எடுத்துச் செல்வதும் தண்டுவடத்தின் (Spinal Cord) மூலமாகவே நடைபெறுகிறது. இந்த தண்டுவடமும், அதன் நரம்புகளும் முது கெலும்புத் தொடரில் பாதுகாக்கப்பட்டு இதன் மூலமாகவே பயணம் செய்து, பிற பாகங்களை அடைகின்றன. தண்டுவடம் என்ற இந்த நீண்ட `கேபிள்’ போன்ற நரம்பு களின் தொகுப்பு சுமார் பதினெட்டு அங்குல நீளம் கொண்டது. அதிலிருந்து முதுகெலும்பு களுக்கு இடையே வலது-இடது என இரண்டு பக்கமும் முதுகெலும்புத் தொடரைச் சார்ந்த நரம்புகள் (Spinal nerves) நம் தலைக்கு கீழே துவங்கி இடுப்புக் கட்டு வரை பல பாகங்களுக்கும் (கை, கால்களுக்கும்) செல்லுகின்றன.

இந்த முதுகெலும்பைச் சார்ந்த நரம்புகள், தலைக்குக் கீழே ஏனைய பாகங்களுக்கு மூளை யிலிருந்து புறப்படும் கட்டளைகளை எடுத்துச் செல்லுகின்றன. இந்த நரம்புகள் மூலமாகவே உடம் பின் பல பகுதிகளில் இருந்து உணர்ச்சிகள் தண்டுவடம் மூலமாக மூளைக்குச் செல் கின்றன.

முதுகெலும்புத் தொடர், பார்ப் பதற்கு கரும்புக் கணுக்கள் போல இருக்கும். இது அடியில் பரும னாகவும், மேலே போகப் போக மெலிதாகவும் காணப்படுகிறது. அதாவது நமது கழுத்துப் பக்கம் உள்ள முதுகெலும்புப் பகுதி மிக சிறியது. ஆனால், அந்த இடத்தில் இருக்கும் தண்டுவட நரம்புப்பகுதி பெரிதாக இருக்கும். பிறகு கீழே வர வரத் தண்டு வடத்திலிருந்து நரம்புகள் மற்ற பாகங்களுக்குப் பிரியப் பிரிய, தண்டுவடம் மெலிந்து விடுகிறது.

நாம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு முதுகெலும்பைச் சார்ந்த தசைகள், நாண்கள் மற்றும் மூட்டுக்களின் இயக்கமும் ஒத்துழைப்பும் மிகவும் தேவை. நாம் வளையும்போதும், நெளியும்போதும் அதை சிறப் பாக செய்ய அதைச் சார்ந்த தசைகளும், நார்க ளும், முது கெலும்புகளுக்கு நடுவே நல்ல நிலை யில் இருக்கும் ஜவ்வுகளும் (Intervertebral discs) தேவை. இந்த ஜவ்வுகள் அதிர்வுகளை சமப்படுத்தும் (Shock absorbers) பாகங்களாக செயல்படுகின்றன. இவை, முதுகெலும்புகளுக்கு நடுவே அமைந்துள்ளன. இந்த ஜவ்வுகள் ஸ்பெஷல் திசுக்களினால் ஆனவை. இவை, வெளியில் நார் போலவும் உள்ளே ஜெல்லி போன்ற சற்றுக் கொழகொழ திசுக்களாலும் ஆனவை.

நடுமுதுகிலிருந்து இடுப்புக்கட்டு (Pelvis) வரை உள்ள முதுகெலும்புப் பகுதியை `லம்பார்’ பகுதி என்போம். லம்பார் பகுதியிலுள்ள L3 L4 L5எலும்புகளுக்கு நடுவே உள்ள ஜவ்வுகள் பலருக்கும் தேய்ந்து விலகிவிடுகிறது. அப்பொழுது, கீழ் முதுகில் பிடிப்புப் போல ஏற்படுகிறது. பிறகு எப்போதாவது எக்கச்சக்கமாக குனியும் போதோ சடாரென்று திரும்பும் போதோ இந்த ஜவ்வு பின் பக்கமாக, மிகவும் விலகி விடுகிறது. இதனால், கீழ் முதுகிலோ, இடுப்பு மூட்டின் பின்புறத்திலோ, தொடையிலோ கொக்கி போட்டு இழுப்பதைப் போல் சுரீரென்று வலி ஏற்பட்டு வேதனை அதிகமாகும்.

கீழ் முதுகில் ஜவ்வு விலகினால் தொடையில் ஏன் வலி உண்டாக வேண்டும்?

நம்தொடை கால் தசைகளின் அசைவுகளை உருவாக்கும் நரம்புகள், கீழ்முதுகெலும்பு துவாரங்கள் வழியாகத்தான் அதன் பயணத்தை ஆரம்பிக்கின்றன. ஜவ்வு விலகுவதால் நரம்புகளின் பாதை குறுகி, நரம்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் குறைகிறது. ஜவ்வு விலகியதால் அந்த நரம்புகளின் மேல் நேரடி அழுத்தமும் அதிகமாகிறது. இதனால் அந்த வலி தொடை அல்லது கால்பகுதியில் குடைச்சலும் வலியுமாக உணரப்படுகிறது.

வயதாகும் போது முதுகெலும்பைச் சுற்றியுள்ள மூட்டுக்கள் எல்லாமே பெருத்து திசுக் களின் எலாஸ்டிக்தன்மை கடினமடைகின்றது. மேலும் எலும்புகளின் அடர்த்தி குறைந்து அதிர்வுகளைத் தாங்கும் சக்தியும் குறைகிறது. இதன் காரணமாக முது கெலும்பின் நடுவில் உள்ள தண்டுவடத்திலிருந்து நரம்பு வெளியேறும் துவாரங்கள் நெருக்கப்படு கின்றன. இதைத் தொடர்ந்து அந்த நரம்புகளுக்கு ரத்த ஓட்ட அளவும் குறைகிறது. இதனால் தொடை, கால்மூட்டின் பின்புறம், முழங்கால் மற்றும் கணுக்கால் வரை இழுத்தது போல் வலியுடன் கால் மரத்துப்போனது போல ஆகி விடுகிறது.

இந்த நிலையில் வலி ஏற்படும் பகுதியை அழுத்தமாக கட்டுப்போட்டுக் கொண்டால் அங்கு வரும் ரத்த ஓட்டம் குறைந்தோ – ஏன் நின்றோ கூட போய் விடலாம். இது புரியாமல், நாட்டு வைத்தியரைப் பார்த்து சிலர், காலில் கட்டுப்போட்டுக் கொண்டு மரத்துப் போன காலில் மேலும் வேதனையை அதிகமாக்கி வருகின்றனர். ஏதாவது ஆயின்மெண்ட தேய்த்துக் கொண்டாலோ இந்த வலி மறைவதில்லை. குறைவதுமில்லை!

கால்வலியுடன் இருப் பவர்களை பரிசோதித்து விட்டு `எக்ஸ்ரே’ எடுத்துப் பார்க்க வேண்டும். எக்ஸ்ரேயில் முதுகு, இடுப்புக்கட்டு ஆகியவற்றைப் பார்க்கும் போது மூட்டுப் பிடிப்பு நோயினால் வரும் தொடை வலியா அல்லது இடுப்பு மூட்டுத் தேய்மானத்தால் ஏற்பட்ட வலியா என்பதைப் பெரும்பாலும் அனுபவமுள்ள டாக்டர்களால் அறிய முடியும்.

இடுப்பு மூட்டு தேய்மானத்தின் காரணமாக தொந்தரவு என்றால் தொடையின் உள்பகுதி யிலோ, கால்மூட்டின் உள்ளேயோ வலி ஏற்படக்கூடும். ஆனால் தொடை வலியுடன் மரத்து போகாது. நின்றாலும், நடந்தாலும், உட்கார்ந்தாலும் அங்கே பிடித்துக் கொள்வது போல் இருந்து நடக்க நடக்க வலி அதிகமாகலாம்.

ஆனால் முதுகு சிக்கலால் வலி ஏற்பட்டால் தொடையிலிருந்து கால்வரை சுரீர் என்று இழுக்கும் உணர்வு ஏற்படும். கணுக்கால் வரை இது பரவும். முதுகைச் சற்று, திருப்பினாலோ குனிந்து வேலை செய்தாலோ இது அதிகமாகும். ஸியாடிகா (Sciatica) எனும் இந்த வலி இருமினாலோ தும்மினாலோ அதிகரிக்கும். படுத்த பிறகு கொஞ்சம் குறைந்து, புரண்டுவிட்டு எழுந்திருக்கும்போது இந்த வலி அதிகரிக்கும்.

முதுகுக்கு பிஸியோதெரபி கொடுத்தாலோ, மாத்திரைகள் மூலமாகவோ இந்த வலியை குறைக்க முடியும். வலி குறைந்தவுடன் தொப்பை இருப்பவர்கள் அதை குறைப்பது நல்லது. முன்பு வலி ஏற்பட்டதே என்பதையே நினைத்துக் கொண்டு சோம்பலாக இருக்கா மல் முடிந்த வேலைகளை சுறுசுறுப்பாக பார்த்து ஊளைச்சதையை ஏற்றிக் கொள்ளாமல் இருந்தாலே சிலருக்குத் தானாகவே சரியாகி விடும்.

மேலே குறிப்பிட்ட அத்தனையும் செய்தும் கால்வலி தொடர்ந்தால் சிறப்பு சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் வரும். இப்போதுள்ள எம்.ஆர்.ஐ. பரிசோதனை மூலம், முதுகெலும் பின் உள்ளே உள்ள நரம்புகள், தசை மற்றும் தசைநார்களின் தன்மையை அறியமுடியும். நரம்புக்குள்ளும் பாதிப்பு இருந்தாலோ, நரம்புக்குழாயின் அளவு குறித்தோ இதன் மூலம் கண்டறிய முடியும்.

முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு மிகவும் விலகி இருந்தாலோ, நரம்புகள் வெளியேறும் துவாரங்கள் நெருக்கப்பட்டிருந்தாலோ, எம்.ஆர்.ஐ. ஸ்கேனின் மூலம் அனுபவம் உள்ள டாக்டர்களால், மிகத் துல்லியமாக கணித்து தகுந்த சிகிச்சையை திட்ட மிட முடியும்.

லேசான வலி என்றால் முதுகில் எபிட்யூரல் ஸ்டீராய்ட் (Epidural Steroid) எனும் ஊசி மருந்தைச் செலுத்தி சிலரது கால்வலியைக் குறைக்க முடியும். ஆனால் தொடைவலி அல்லது கால்வலி மிகவும் அதிகமாகப் போய் தூங்க முடியாத அளவுக்கு வலி அதிக மானாலோ கூடவே கால் மரத்துப் போனாலோ கீழ்முதுகில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்வது அவசியமாகிறது.

நகர்ந்து போன தொந்தரவு அதிகம் கொடுக்கும் ஜவ்வை அகற்ற வேண்டி இருக்கும் அல்லது முதுகெலும்பிலிருந்து குறிப்பிட்ட நரம்பு வெளியேறும் துவாரத்தை அடைத்திருக் கும் திசுக்களை அகற்றி துவாரத்தை சற்று பெரிதாக்கினால், கால் மற்றும் இடுப்பு வலி நன்றாகக் குறையும்.

பொதுவாக, லேசாக முதுகு வலி அவ்வப்போது இல்லாவிட்டால், நம்உடம்பு மனித உடம்பே இல்லை எனலாம்! நாம் விழிப்புடன் இருந்தால் முதுகில் அதிக வலியின்றி வாழ வழி உண்டு !!

விளக்கம்: டாக்டர் எம். பார்த்தசாரதி,

Advertisements

நலம் தரும் காய்கறிகள்…

“உணவே மருந்து,
மருந்தே உணவு”

என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண்ட உணவு பழக்கங்களின் மூலம் எந்தவகையான நோயின் தாக்குதலுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

இன்றைய நிலையை சற்று எண்ணிப் பார்ப்போமானால்,

10 நபரில் 4 பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.

நம் மக்கள் தொகையில் 50 வயதுக்குமேல் உள்ளவர்களில் எந்த நோயும் இல்லாமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இன்று மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை என்பது மிகவும் சாதாரணமான விஷயமாகிவிட்டது. நகரங்களில் 10 அடிக்கு ஒரு மருந்தகம்.

இதில் இன்னும் கொடுமையான விஷயம், நோயை சரிசெய்துகொள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு காலாவதியான மருந்துகள், போலி மருந்துகள், என கள்ளச்சந்தை பொருட்கள் நோயாளிகளின் உயிர்களை பறிக்கின்றன.

இதற்கெல்லாம் மூலகாரணம் யாரென்று சிந்திப்போமேயானால் கண்டிப்பாக அது நாம்தான்..

உடலை சீராக பேணுவதை தவிர்த்து பொருள் தேடும் நோக்கில் தன்னை மறந்து அலைந்ததன் விளைவுதான் இது..

இடையிடையே களைப்பு ஏற்பட்டால், செயற்கை குளிர்பானங்கள், அவசரகதி உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் என கண்டவற்றையும் வாங்கி உண்கிறோம். மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்கிறோம் என்ற பெயரில் மது, புகை போதை வஸ்து என ஆரம்பித்து அதற்கு அடிமையாகிறோம்.

இப்படியாக நோய்களை நாம் காசுகொடுத்து வாங்கி, உடலையும் நோயையும் இணைபிரியா நண்பர்களாக்கி நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் முன்னோர்களின் உணவு பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே இருந்து வந்தது. உதாரணமாக அரிசியை எடுத்துக் கொண்டால் கைக்குத்தல் அரிசி, அதாவது உமி நீக்கி தவிடு நீக்கப்படாத அரிசி. இந்த தவிடு நீக்கப்படாத அரிசியில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின் பி1 நிறைந்துள்ளது. இது இருதயத்திற்கும், நரம்பு மண்டலத்திற்கும் ஊட்டமளிக்கக்கூடியது.

மேலும் தானிய வகைகள், இயற்கையாய் விளையும் காய்கறிகள் என உண்டுவந்துள்ளனர். அதனால் அவர்கள் நோயின்றி வாழ்ந்தனர்.

ஆனால் இன்று அனைவருமே வெள்ளை வெளேரென்று பூப்போன்ற சாப்பாட்டைத்தான் விரும்புகின்றனர். நாகரீகம் என்ற பெயரிலும், அந்நிய பொருள் மோகத்திலும் இயற்கையை மறந்து செயற்கையையே உண்மையென நம்பி அதற்குள் ஊறிவிட்டனர்.

இந்த நிலை மாறுவதென்பது சற்று சிரமம்தான். இருப்பினும் அதோடு, உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் தொந்தரவுகள் மேலும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்

வாழைப்பூ

இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி,சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு

இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்

இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்

வைட்டமின் ஏ, பி,சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு

கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்

கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்

போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

கோவைக்காய்

வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.

முருங்கைக் காய்

வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.

சுண்டைக்காய்

புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

சுரைக்காய்

புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

குடைமிளகாய்

வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

சவ்சவ்

கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

அவரைக்காய்

புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

காரட்

உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தவரங்காய்

இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப் படுத்தும்.

கத்தரி பிஞ்சு

கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

உடலுக்கு சத்தான உணவையும் அதோடு மருத்துவத்தையும் கலந்து கொடுக்கும் கீரைகள், பழங்கள், பயறு வகைகள் பற்றி வரும் இதழில் விரிவாக அறிவோம்.

குளிர் பிரதேசங்களில் மாரடைப்பு, திடீர் மரணம் ஏற்படுவது ஏன்?

குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவதை, அரசு பொது மருத்துவமனை ஆவணங்கள் மூலம் அறியலாம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண்டுக்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடுத்து விடும். நம் நாட்டில், பெரும்பாலான மாதங்கள் வெயில் தான். ஆனால், அந்தந்த நாட்டு மக்களின் உடல்நிலை, அதற்கேற்ப மாறிக் கொள்வதால், பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், வெயிலில் வாழ்பவர்கள், திடீரென குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, அவர்களின் இருதயம், ரத்தக் குழாய்களின் ரத்தஓட்டத்தின் தன்மை மாறி விடுகிறது. எந்த வகையான மாற்றம்?

* குளிர், ரத்தக் குழாய்களை சுருங்க வைக்கிறது. இதனால், இதயம், அளவுக்கு அதிகமாக வேலை செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறது.


* குளிர் பிரதேசம் மற்றும் மலை பிரதேசங்களில், பிராண வாயு குறைவாக இருக்கும். இதனால், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், தட்டை அணுக்கள், பைபர்நோஜன் அதிகரிக்கிறது. கூடவே கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது. இதனால், அளவுக்கு அதிகமாக ரத்தம் உறைந்து, இதயம், மூளை ஆகியவற்றுக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. ரத்தக் குழாயும் சுருங்கி விடுவதால், இப்பகுதிக்கு ரத்தம் செல்வதும் தடைபடுகிறது. இதனால், நடு வயதினருக்கும், பக்கவாதம், மாரடைப்பு வர வாய்ப்புள்ளது.


* அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களுக்கு, குளிர் காலங்களில், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, 50 சதவீதம் அதிகரிக்கிறது. இதே நிலை தான், நம் நாட்டில் மலை பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கும் ஏற்படும். மார்பில் அழுத்தம் ஏற்படுவது தான், இதன் முதல் அறிகுறி. குளிர் காலத்தில் ரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்கிறது. இதயத் துடிப்பு அதிகரித்து, ரத்தக் கொதிப்பும் ஏற்படுகிறது. ஏற்கனவே, ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களின் நிலை, இது போன்ற காலங்களில், மிகவும் பரிதாபம். தாறுமாறான இதயத் துடிப்புள்ள நோயாளிகள், “டீபிப்ரிலேட்டர்’ என்ற கருவியை பொருத்திக் கொள்வது வழக்கம். இது, “பேஸ் மேக்கரை’ப் போலத் தான் என்றாலும், “பேஸ் மேக்கர்’ குறைந்து போகும் இதயத் துடிப்பை சீர் செய்யும். “டீபிப்ரிலேட்டர்’ கருவி, அதிகரித்துப் போகும் இதயத் துடிப்பை சீர் செய்யும். இது போன்ற கருவி வைத்திருப்பவர்களும், மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, கவனமாக இருக்க வேண்டும்.
ஓய்வுக்காக மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும் முதியவர்கள், உடல் உஷ்ணம் 95 டிகிரி பாரன்ஹீட்டுக்குக் கீழே இறங்கி விடும். அப்படி இறங்கி விட்டால், உடல் நடுக்கம் ஏற்பட்டு, நிலை தடுமாறும். இதயம் செயலிழப்பு, மாரடைப்பு, மயக்க நிலை மரணம் ஆகியவை ஏற்பட்டு விடும். இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். தலைக்கு குல்லா, கை,
கால்களுக்கு கம்பளியில் ஆன உறைகள் அணிவது ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மது அருந்துபவர்களும், மலைப் பிரதேசத்திற்குச் செல்லும்போது, கவனமாக இருக்க வேண்டும். மது அருந்தி விட்டு, நடைபயிற்சி மேற்கொள்வதோ, உலவப் போவதோ கூடாது. ஏனெனில், மது அருந்தியவுடன், ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, உடல் உஷ்ணமாகும். பின், திடீரென உடல் வெப்பம் குறைந்து, ஆபத்தை விளைவித்து விடும். மது அருந்தி விட்டு, வெளியே போவதை அறவே தவிர்க்க வேண்டும். சம வெளிகளில் கூட, மார்கழி, தை மாதங்களில், இதய நோய்கள் ஏற்படுவது சகஜம். குளிர் அதிகம் ஏற்படுவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் நெஞ்சு அழுத்தம், மூச்சு இரைப்பு, படபடப்பு ஏற்படும். வாந்தி, மயக்கம், அசதி, தாறுமாறான இதயத் துடிப்பு ஆகியவை ஏற்படும். ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், எப்போதும் கைப் பையில், “சார்பிட்ரேட்’ மாத்திரை வைத்திருக்க வேண்டும். மேலே சொன்ன அறிகுறிகள் தெரிந்தால், மாத்திரையை நாக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படியும் குணமடையா விட்டால், உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும். அது போல், “ஏசி’ அறைகளில், 20 டிகிரி செல்சியசில், தொடர்ந்து பல மணி நேரங்கள் அமர்ந்திருப்பதும் தவறு. அவ்வப்போது, அறையின் வெப்ப நிலைக்கு ஏற்றார்போல், “ஏசி’யை அணைத்து வைக்க வேண்டும். இங்கிலாந்தில், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு மாரடைப்பு வருகிறது. அவர்களில் 86 ஆயிரம் பேர் இறக்கின்றனர். அமெரிக்காவில், குளிர் காலத்தில் இது போன்ற நிலை ஏற்படுகிறது. இது போன்ற காலங்களில், 75 முதல் 84 வயதுடையவர்கள், கை, கால்களுக்கு உறை, தலைக்கு குல்லா அணிவதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.


டாக்டர். சு.அர்த்தநாரி