Daily Archives: மே 2nd, 2011

ஒபாமா போட்டார் கையெழுத்து., முடிந்தது ஒசாமா தலைஎழுத்து; அமெரிக்கா முன்னேற்பாடு பிளான்

அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா டி.வி.,யில் தோன்றி அறிவித்தார்.

சவுதியில் பிறந்து மதவாதியான ஒசாமா பின்லேடன் பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவரானான். இவனுக்கு வயது 54. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக ரகசியமாக நடத்தி வந்தான். இவனது அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் கில்லாடிகள். அமெரிக்காவே எங்கள் எதிரி என்றும், அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒசாமா கூறி வந்தான்.

கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தக இரட்டை கோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தூள், தூளாக்கினான். இதில் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் ஒசாமா .

இவனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர்கள் புஷ், பராக்ஒபாமா உறுதியாக சொல்லி வந்தனர். ஒசாமா பாகிஸ்தான் பகுதிகளில்தான் பதுங்கி இருப்பான் என அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உயர் அதிகாரிகள் கூறி வந்தனர். ( பாகிஸ்தான் இதனை மறுத்து வந்தது ) ஒசாமாவை பிடிப்பதே முக்கியப்பணியாக இருக்கும் என்றனர். இதனையடுத்து இந்த பகுதிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.

ஒசாமாவின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டான் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. பல முறை ஒசாமா கொல்லப்பட்டான் என்ற செய்தி வருவதும், இதனை அல்குவைதா மறுப்பதும் நடந்திருக்கிறது. ஆனால் இதுவரை இன்றைய ஒசாமா பலி குறித்து அல்குவைதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த முறை இவனது உடலை டி.என்.ஏ., டெஸ்ட் மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவன் கொல்லப்பட்ட இன்றைய நாள் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நாள் என அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்சின் தலைமை அதிகாரி ஆண்டிகார்ட்டு கூறியுள்ளார்.

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டது எப்படி? : பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் அருகே 150 கி.மீட்டர் தொலைவில் அபாட்டாபாத் நகரில் பின்லேடன் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் மாற்று உடையில் சென்று கண்காணித்து இவனை எப்படி கொல்வது என திட்டமிடப்பட்டது.

இதனையடுத்து உளவு துறை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இந்த பங்களா மேல் பறந்தபடி தாக்குதல் நடத்தி ஒசாமாவை கொன்றனர். இவருடன் இருந்த சிலரும் இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதில் பாகிஸ்தான் உதவியை அமெரிக்கா நாடவில்லை. ஒரு வாரத்தில் இந்த ஆப்ரேஷன் கச்சிதமாக முடிக்கப்பட்டது. எப்போதும் வனப்பகுதி , மலைப்பள்ளத்தாக்கில்தான் ஒசாமா பதுங்கி இருப்பான் என்ற செய்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் இந்தமுறை இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒசாமா தங்கியிருந்திருக்கிறான். இந்த பண்ணை வீட்டின் வெளியே ஒசாமா பிணமானான். அமெரிக்காவின் முக்கியப்பணி முடிந்தது.

அதிபர் பராக் ஒபாமா மகிழ்ச்சி: பின்லேடன் இறந்ததகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி செய்தார். நாட்டு மக்களுக்கு டி.வி., மூலம் அறிவித்த போது அமெரிக்காவின் நீண்டகால ஆசை நிறைவேறியிருக்கிறது என்றும், நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக ஒசாமா பின்லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் , உளவு அதிகாரிகளுக்கு அமெரிக்கா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

இந்த வெற்றி செப்டம்பர் 11ம் தேதி இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் ஆத்ம சாந்திக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அந்த பயங்கரவாத தாக்குதலில் உற்றார் , உறவினர்களை பலி கொடுத்த அமெரிக்க குடும்பங்களை மறந்து விடவில்லை. இந்த தருணத்தில் அவர்களை நினைவு கூர்கிறோம். அல்குவைதாவை அழிக்கும் பணி தொடர்ந்து நடக்கும். இத்துடன் முடிவதில்லை. இவ்வாறு ஒபாமா கூறினார்.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும் அமெரிக்கர்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வீதிகளில் நாட்டுக்கொடியை ‌கையில் ஏந்தி கொண்டு வலம் வருகின்றனர்.

இந்தியா பாகிஸ்தானுக்கு கண்டனம் : பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவம் மூலம் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் வழங்கியது அப்பட்டமாக தெரிகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் ; மும்பை தாக்குதலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளும் பாகிஸ்தானில்தானனில் உள்ளனர் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

ஒபாமா கையெழுத்து- ஒசாமா தலை எழுத்து: சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொலை செய்ய ஏப்ரல் 29ம் தேதியன்று அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். ஆகஸ்ட் மாதம் முத‌ல் திட்டம் தீட்டி, நேர்த்தியாக அதை வழிநடத்திச் சென்ற அமெரிக்கா, எப்ரல் 29ம் தேதியன்று ஒசாமாவை கொல்ல அமெரிக்க ராணுவத்துக்கு அனுமதி அளித்துள்ளது. அலபாமாவுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த அதிபர் ஒபாமாவுக்கு, பாகிஸ்தானில் இருந்த அமெரிக்க உளவு அதிகாரிகள் ஒசாமாவை நெருங்கி விட்ட செய்தியை கூறினர். அதனை கேட்ட ஒபாமா, ஒசாமாவை கொன்று விடுமாறு உத்தரவிட்டார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டானிலன் தான் அதிபர் ஒபாமாவின் உத்தரவை தயார் செய்து அதனை படை கமாண்டர்களுக்கு அனுப்பியுள்ளார். முன்னதாக நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த உயர் மட்ட குழு கூட்டத்தில் ஒசாமாவை தீர்த்துக்கட்டுவது குறித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டமும் நடந்துள்ளது.

நன்றி- தினமலர்

மீன்களை நேசிக்கும் `கடல்கன்னி’


பிரபல முன்னணி தமிழ் நடிகை அமலா, முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மனைவி. இவர் சமீபத்தில் கடல்கன்னி போல் மீன் உடையில் தோன்றி ஆச்சரியமூட்டினார். அவரிடம் அதுபற்றி கேட்டால், `மீன்கள் ஒட்டுக் கேட்கும், அதற்கு ஞாபக சக்தி நிறைய உண்டு’ என்று மீன்களின் அரிய குணங்களை எடுத்துக் கூறி அசத்துகிறார்.

பீட்டா அமைப்பில் இணைந்து மீன்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் இந்த கடல் கன்னி உடை. அதனால்தான் மீன்களைப் பற்றிய அரிய விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறார் என்பது பிறகுதான் தெரிந்தது.

மீன்களுக்காக `கடல்கன்னி’ பேசுகிறார்.

`மீன்களை சமைத்துச் சாப்பிடும் முன் நாம் சில விஷயங்களை யோசித்துப் பார்க்க வேண்டும்` என்று சொல்லும், அமலா, மீன்பிடித் தொழில்துறை எப்படி மீன்களுக்கு தீங்கு செய்கிறது, மீன்பிடித்தல் கடல் வாழ் உயிரினங்களையும், சுற்றுப்புறச் சூழலையும் எப்படி பாதிக்கிறது என்பதையும் விளக்கினார்.

`மீன்கள் மிக வித்தியாசமானவை. இதர பிராணிகளைவிட மீன்கள்தான் அதிக வலியை அனுபவிக்கின்றன’ என்கிறார் அவர்.

மற்ற பிராணிகளைப் போலவே மீன்களும் வலியை உணர்கின்றன என்கின்றன பல விஞ்ஞான ஆய்வுகள். `பிஷ் அண்ட் பிஷரிஸன்’ என்ற அமெரிக்க இதழ் மீன்களின் நுண்ணறிவைப் பற்றி பல ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மீன்கள் நீண்டகால நினைவுத் திறன் கொண்டவை. அவற்றுக்கும் நவீன சமூக அமைப்புகள் உண்டு என்று அந்த ஆராய்ச்சி கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

எடின்பர்க் உயிரியல் நிபுணர் சூலம் பிரவுன், `மீன்கள் ஞாபகத்திறன் மற்றும் புரிந்து கொள்ளும் ஆற்றல் போன்ற பல விஷயங்களில் மனிதர்களைக் காட்டிலும் ஆற்றல் மிக்கவை’ என்கிறார்.

உலகின் முன்னணி கடல்துறை உயிரியல் நிபுணர்களில் ஒருவரான டாக்டர் சில்வியா ஏர்லே, `நான் இனி மீன்களை கொன்று சாப்பிட மாட்டேன். அவை நல்ல குணமுடையவை. ஆற்றல் மிக்கவை, நுட்பமான உணர்வு கொண்டவை. அவை காயப்படுத்தப்பட்டால் வேதனை அடைகின்றன’ என்கிறார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் தெரசா பர்ட் டி பெரெரா குறிப்பிடும்போது, `கற்றுக்கொள்வதிலும், நினைவில் வைத்துக்கொள்வதிலும் மீன்கள் திறன்மிக்கவை. பலரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் புரிந்து கொள்ளும் திறன் உடையவை’ என்கிறார்.

சில மீன்கள் பிறர் பேசுவதை ஒட்டுக் கேட்கின்றன. தென் ஆப்பிரிக்க மீன்கள் உள்ளிட்ட சில மீன்கள் இலைகளில் முட்டையிட்டு அவை போகும் இடத்துக்கெல்லாம் அந்த இலைகளை கொண்டு செல்கின்றன.

பீட்டா அமைப்புக்காக மேற்கண்ட மீன்பற்றிய ஆய்வுத் தகவல்களை கூறி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அமலா, இன்னும் சில அதிர்ச்சி தரும் விஷயங்களையும் சொல்கிறார்…

“மீன் பிடித்தல் ஒரு கொடூரமான தொழில். அது சுற்றுச்சூழலையும் அழித்துவிடும். இந்தியாவில் `பாட்டம் டிராலிங்’ எனும் மீன்பிடிமுறை உள்ளது. இது மீன்பிடித் தொழிலுக்கு அதிக சேதம் ஏற்படுத்தும். பாட்டம் டிராலிங் என்பது கடல் படுகையில் பெரிய கனமான வலைகளை போட்டு அப்படியே அனைத்து மீன்களையும் அள்ளும் முறையாகும். இதனால் ஆழ்கடலில் வசிக்கும், மற்ற உயிரினங்களும் இந்த வலையில் அல்லது சக்கரங்களில் சிக்கி அழிகின்றன. இப்படி அழியும் அந்த இனங்கள் மீண்டும் உருவாக பல ஆண்டுகள் ஆகும். சமீபத்திய ஆய்வுகளின்படி மிகப்புகழ்மிக்க பல மீன் வகைகள் 90 சதவீதம் வரை அழிந்துவிட்டன. இதர மீன்களின் கழிவுகள், ரசாயன உணவுகள், ஆன்டிபயாடிக் பொருட்கள் போன்றவை மீன்கள் வாழும் நீரில் வீசப்படுவதாலும் அவை பாதிக்கப் படுகின்றன.

பீட்டாவின் ஆய்வாளர் சுறாக்கள் மற்றும் டால்பின்கள் போன்ற மீன் இனங்கள் வேகமாக அழிந்து வருவதை கண்டுள்ளார். அவை சந்தைகளில் வெளிப்படையாக ஆரோக்கியமற்ற சுகாதாரமற்ற இடங்களில் விற்கப்படுகின்றன. அப்பகுதிகளில் மீன் கழிவுகள், இறந்த மீன் துண்டுகள், கொசுக்கள், பூச்சிகள் அதிகமாக இருப்பதோடு நாய் போன்ற சில விலங்குகளும் சுற்றித் திரிகின்றன.

மீன்களின் உடல்களில் தற்போது அதிக ரசாயனக் கழிவுகள் கலந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவை வாழும் நீரில் உள்ளதைப்போல் கிட்டத்தட்ட 9 மில்லியன் மடங்கு அதிகம் என்பது வேதனைக்குரியது. எனவே மீன்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு அபாயம்.

இந்தியாவில் மீன்கள் சாப்பிடும் பெண்களின் உடல்களில் பாதரசம் அதிக அளவில் காணப்படுகிறது. இது மிக கவலையான விஷயமாகும். புதுடெல்லியைச் சேர்ந்த செயின்ட் ஜான்ஸ் ஆஸ்பத்திரியின் டாக்டர் மாத்யூ, `இந்த அதிக பாதரச அளவு கருவில் வளரும் குழந்தையை மிகவும் பாதிக்கலாம்’ என்கிறார்.

மக்கள் அதிகம் உண்ணும் 264 மீன் வகைகளை மேற்கு வங்காளத்தில் சேகரித்து பரிசோதித்தபோது அவற்றின் உடல்களில் பாதரசம் அதிக அளவு இருந்தது அறியப் பட்டுள்ளது.

மீன்கள் சாப்பிடுபவரின் உடல்களில் பாலிகுளோரினேட்டட் பைபெனைல்ஸ் (பி.சி.பி.) எனும் ரசாயனக் கலவை சேர்கிறது. இது குழந்தைகளின் நரம்பு மண்டலம், விந்து இயக்கம் மற்றும் கரு வளர்ச்சி போன்றவற்றை பாதிக்கும். அத்துடன் குழந்தைகளின் மூளைத்திறன் மற்றும் உடல் சுறுசுறுப்பு குறையவும் காரணமாகிறது. எனவே மீன்கள் சாப்பிடுவதை தவிர்த்து மற்ற ஜீவன்களையும் வாழவிடுங்கள் என்கிறது பீட்டா அமைப்பு. நீங்களும் ஒத்துழையுங்கள்” என்று அதிரடியாக சொல்கிறார், அமலா.

“கிரீன் டீ’ குடிப்பது உடலுக்கு நல்லதா?

கிரீன் டீ சீனாவில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உபயோகப்படுத்தப்படுகிறது. இதை தினமும் குடித்தால் பல வழிகளில் உடலுக்கு நன்மை தருகிறது. இது புற்றுநோய் வரும் தன்மையை குறைக்கிறது. கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதில் E G C G என்ற சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இதனால்தான் அதன் நன்மைகள் பல வழிகளில் நமக்கு கிடைக்கின்றன.
இதுதவிர ரத்தக் குழாய்களில், ரத்தக்கட்டிகள் உருவாகாமல் பாதுகாக்கிறது. இதனால் மாரடைப்பு வரும் தன்மையும் பலமடங்கு குறைகிறது. இது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. தினமும் 2 கப் கிரீன் டீ குடித்தால் 6 வாரங்களில், ரத்தத்தில் எல்.டி.எல்., என்னும் கெட்டக் கொழுப்பு 13 மி.கி., என்ற அளவுக்கு குறைகிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கம்ப்யூட்டருக்கு புதியவரா? இமெயில் தொடக்க வரிகள் – ஏன், என்ன?

ஒருவர் இமெயில் பெறுகையில் அதன் தொடக்கத்தில்From, To, Subject தவிர இன்னும் நிறைய வரிகளில் சில தகவல்கள் தரப்படுகின்றன. இவை எல்லாம் என்ன? ஏன் இவை தரப்படு கின்றன? இவை குறித்த சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.
முதலில் அனைத்து இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும், இது போல அனைத்து தகவல்களையும் காட்டுவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும். . இருந்தாலும் என்ன வெல்லாம் இருக்கலாம் என்று ஒரு எடுத்துக் காட்டினைப் பார்க்கலாம்.
ReturnPath: <murthy@yahoo.in>
Received: from sundar (gw.customer.net [64.246.98.197])
(authenticated)
by yahoo.in (8.11.6/8.11.6) with ESMTP id 35TKe7Z16838
for <murthy@yahoo.in>; Mon, 24 Nov 2008 15:40:06 0500
MessageID: <008201c743e5$a66754 b0$6401a8c0@murthy>
From: “I” <murthy@yahoo.in>
To: “B” <sundaram@yahoor.in>
Subject: Computer news readers questions
Date: Mon, 24 Nov 2008 15:40:01 0500
XPriority: 3
XMailer: Microsoft Outlook Express 6.00.2900.3028
XAntivirusStatus: Clean
XUIDL: [Hb”!d”S”!T_<!!ZZ[!!
XAntivirus: AVG for Email 7.5.432 [268.17.14/657]
MimeVersion: 1.0
இவற்றை ஹெடர்கள் என அழைக்கிறோம். சப்ஜெக்ட் லைன் தானே வேண்டும்; இவை எல்லாம் என்ன? என்ற சந்தேகம் வரலாம். ஏனென்றால் இமெயிலைப் பொறுத்தவரை இன் பாக்ஸில் நாம் முதலில் பார்ப்பது சப்ஜெக்ட் லைனும் அதில் தரப்பட்டுள்ள வையும் தான். இந்த ஹெடர்கள் எல்லாம் நாம் இமெயிலைத் திறக்கையில் நமக்குக் கிடைப்பவை ஆகும். பொதுவாக இந்த ஹெடர்கள் பல வரிகளில் இருப்பவை. இவற்றில் பலவகையான தகவல்கள் உள்ளன. மெயில் அனுப்பியவர், பெறுபவர், அனுப்பிய சர்வர், கால நேரம், வைரஸ் உள்ளதா இல்லையா எனப் பல தகவல்கள் தரப்படுகின்றன.
மேலே தரப்பட்டுள்ளவற்றைப் பார்த்தால் சற்று தலை சுற்றும். ஆனால் தகவல்கள் அப்படிப்பட்டவை அல்ல. நமக்குத் தேவயானவை தான். முதல் வரியிலிருந்து வருவோம்.
ReturnPath வரியைக் காண்போம். இமெயில் ஒன்று தன் பாதையில் செல்வதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இதிலுள்ள இமெயில் முகவரி தான் மீண்டும் அதனை அனுப்ப வழி காட்டுகிறது. அடுத்ததாக Received என்று தொடங்கும் வரி. இது தான் பெறுபவரின் இன்பாக்ஸ் முகவரி. இமெயில் ஒன்று பல மெயில் சர்வர்களின் வழியே தன் பயணத்தை மேற்கொள்கிறது. அப்போது இந்த மெயில் இன்னாரிடமிருந்து இதில் குறிப்பிடப்படும் முகவரிக்குத் தான் செல்ல வேண்டும் என்பதனை அவற்றிற்கு அறிவிக்கும் இடம் இதுதான். வழக்கமாக இதில் சேர வேண்டிய சர்வரின் இருப்பிடம், ஐ.பி. முகவரி ஆகியவை இருக்கும். இதில் இந்த இமெயில் அனுப்பப்பட்ட தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால் ஒரு இமெயில் சேரவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்தால் அது ஏன் செல்லவில்லை என்ற விசாரணையை இதிலிருந்து தொடங்கலாம்.
அடுத்த வரி MessageID ஆகும். இமெயில் பயணிக்கத் தொடங்கிய முதல் சர்வரிலிருந்து அந்த இமெயிலுக்கு வழங்கப்பட்ட முதல் செயல் கட்டளை இதுதான். இதனை அடுத்து From: என யாரிடமிருந்து இது எனக் குறிப்பிடும் இடத்தைக் காணலாம். இதில் இமெயில் அனுப்பியவரின் பெயர், முகவரி இருக்கும். அடுத்ததாக To: வரி. இதில் இந்த இமெயில் யாருக்கு என்ற தகவலும் அவரின் முகவரியும் இருக்கும். அடுத்ததாகக் காணப்படும் வரி Subject: வரி. இது இருக்கும். ஆனால் இதில் எதாவது எழுதப்பட்டிருக்கலாம்; அல்லது எழுதப்படாமலும் இருக்கலாம். அது இமெயிலை அனுப்புபவரின் விருப்பம். (ஒரு சிலர் சப்ஜெக்ட் லைனில் ஒன்றும் இல்லை என்றால் அதனைத் திறந்து படிக்காமலேயா அழித்துவிடும் பழக்கம் கொண்டிருப்பார்கள் – கோபத்துடன்) இதன் பின் இமெயில் எந்த நாளில் அனுப்பப்பட்டது என்ற தேதி உள்ள date வரி.
இவற்றை அடுத்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள் தான் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. இந்த வரிகளில் எக்ஸ் எனத் தொடங்கும் வரிகள் எல்லாம் பல்வேறு முக்கிய தகவல்களை அளிக்கும் வகையாக இடம் பெறுகின்றன.
இது இமெயிலுக்கு அதனை எழுதியவர் தந்த முன்னுரிமை இடத்தினைக் காட்டுகிறது. முக்கியமானதா? அதி முக்கியமானதா? என இதில் தரப்படும். இவற்றைக் குறிக்க இங்கு எண்கள் தரப்பட்டிருக்கும்.
அடுத்தது XMailer என்ற வரி. இது இந்த இமெயில் எந்த புரோகிராமில் இருந்து அனுப்பப்பட்டது எனக் காட்டும் வரியாகும். எடுத்துக் காட்டாக இங்கே காட்டப்பட்டுள்ளது அவுட்லுக் எக்ஸ்பிரஸ்.
அடுத்தது XAntivirusStatus என்பது. இது மெயிலில் ஏதேனும் வைரஸ் இணைந்துள்ளதா எனக் காட்டும் வரி. இதிலிருந்து அந்த இமெயிலில் ஏதேனும் வைரஸ் இருந்ததா? அது நீக்கப்பட்டு உங்களுக்கு கிடைக்கிறதா? அல்லது அதனுடன் இருந்த அட்டாச்டு பைலில் வைரஸ் இருந்து அட்டாச்மெண்ட் நீக்கப்பட்டுவிட்டதா என்ற தகவல்கள் இங்கு காட்டப்படும்.
அடுத்து நாம் காண்பது XUIDL என்பது. இது இமெயில்கள் பி.ஓ.பி.3 வகை சர்வர்களால் அளிக்கப்படுகையில் அதனை எடுத்துக் காட்டும் வகையில் இதில் தகவல்கள் காட்டப்படும்.
அடுத்ததாக உள்ள XAntivirus என்னும் வரி இமெயிலை அனுப்பியவர் என்ன ஆண்டி வைரஸ் புரோகிராம் பயன்படுத்துகிறார் என்று காட்டும்.
மேலே சொல்லப்பட்டவை எல்லாம் எக்ஸ் தகவல்களைக் காட்டும் எக்ஸ் வரிகள். இமெயில் ஹெடர்களில் இறுதியாக MimeVersion என்ற வரி கிடைக்கும். இது இமெயில் குறித்த ஒரு கான்டெக்ஸ்ட் தான். இமெயிலைப் பெறுபவர் புரிந்து கொள்வதற்காகக் காட்டப்படும் தகவல். இதுவும் ஒரு எண்ணால் தான் பதியப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டில் இது 1.0 ஆக உள்ளதைப் பார்க்கலாம்.
சரி, இவை எல்லாம் எதற்காக? ஒரு சில வேளைகளில் இந்த ஹெடர்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. சில தகவல்களைப் பெற இவை துணை புரிகின்றன. இவற்றைப் பெற நாம் ஹெடர்களை ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும். அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் இதனைப் பெற மெசேஜில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties மீது கிளிக் செய்திடவும். இதில் பின் Details என்ற டேபினைத் தேர்ந்தெடுக்கவும். அனைத்து ஹெடர்களும் காட்டப்பட்டு தகவல்கள் கிடைக்கும். மற்ற இமெயில் புரோகிராம்களிலும் இதனைப் பெறலாம். பெறும் வழிகள் சற்றே, சற்றேதான் மாறுபட்டிருக்கும். சில இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் இவற்றில் சிலவற்றை மட்டும் காட்டும் வகையில் செட் செய்திடும்படி இருக்கும். நம் விருப்பப்படி முழுமையாகவோ பாதியாகவோ ஹெடர்களைப் பெறலாம்.
எப்படி இருப்பினும் இவை குறித்து அறிந்து வைத்திருப்பது நல்லதுதான்.

கோடை விடுமுறையில் கொள்ளை போகாமல் இருக்க..!

கோடை விடுமுறையில் சுற்றுலா செல்வது சுகமான விஷயம்தான். ஆனால் குடும்பத்துடன் வெளியூர் செல்லும்போது, வீட்டின் பாதுகாப்பு குறித்த பயம் மனதின் ஒரு மூலையில் ஓடிக் கொண்டிருக்கும்.
கொள்ளைக்காரர்கள் அதிகம் குறிவைப்பது, பூட்டிக் கிடக்கும் வீடுகளைத்தான்.
“ஒரு வீட்டிலும், வெளியிலும் சில நாட்களுக்கு ஆட்கள் நடமாட்டம் இல்லை என்றாலே கொள்ளைக்காரர் மோப்பம் பிடிப்பதற்கு வாய்ப்பு அதிகம். தங்களுக்கு எந்தத் தடையும் இருக்காது என்று அவர்கள் எண்ணுகிறார்கள்” என்கிறார், ஒரு காவல்துறை அதிகாரி.
கொள்ளையைத் தடுப்பதற்கு போலீசாருடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதுடன், செல்போன் எண் போன்ற அத்தியாவசிய விவரங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள்.
“உங்கள் வீட்டு முகவரி, பால், பேப்பர் போடுபவர் போன்ற விவரங்களை போலீஸ் நிலையத்தில் தெரிவித்துச் செல்வது நல்லது. அது, ஒரு வீட்டு உரிமையாளர்கள் வெளியூர் சென்றிருக்கும்போது கண்காணிப்பதற்கு எங்களுக்கு உதவும்” என்கிறார் அந்த அதிகாரி.
பொதுவாகவே பொதுமக்கள் அதிகம் சுற்றுலா செல்லும் கோடை விடுமுறை நாட்களில் கண்காணிப்பையும், ரோந் தையும் தீவிரப்படுத்துகிறது போலீஸ். ஆனால் எல்லா வற்றுக்கும் மேலாக அவரவர் அளவில் வீட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்திக் கொள்வது அவசியம்.
இந்த விஷயத்தில், இன்றைய நவீனத் தொழில்நுட்பம் நமக்கு ரொம்பவே கைகொடுக் கிறது. “இப்போதெல்லாம் வீட்டுக்குள் குடும்பத்தினர் இல்லாத போது தேவையற்ற அசைவு இருந்தாலே அபாய ஒலியெழுப்பும் நவீன கருவிகள் வந்துவிட்டன. சி.சி.டி.வி. காமிராக் கள், எச்சரிக்கை அலாரங்கள் போன்றவை கொள்ளையர்களுக்கு எதிரான அரணாக அமையும்” என்று பாதுகாப்பு நிபுணர் ஒருவர் ஆலோசனை கூறுகிறார்.

வீட்டு பாதுகாப்புக்கு உதவும் நவீன உபகரணங்கள்

ஜன்னல் வழியே நுழைவதை எச்சரிக்கும் அலாரங்கள்
“சிலநேரங்களில் திருடர்கள் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுகிறார்கள். அவ்வாறு நுழைவதை எச்சரிக் கும் அலாரத்தை நீங்கள் பொருத்தினால், ஜன்னலருகே இலேசான அசைவு, அதிர்வு இருந் தாலே பலத்த ஒலியெழுப்பிவிடும். இந்த எச்சரிக்கை அலாரங்களில் பல்வேறு வடிவங்களில் கிடைக்கின் றன. சந்தேகம் எழாத வகையில், பூக்கள், கால்பந்து போன்ற வடிவங்களில் கூட இவற்றை வாங்கலாம். ஆடை அலமாரிகள், பொருள் அலமாரிகளைப் பாது காக்கவும் இவற்றைப் பொருத்தலாம்” என்று ஒரு வீட்டுப் பாதுகாப்பு உபகரண விற்பனையாளர் கூறுகிறார்.
`வயர்லெஸ்’ அலார அமைப்பு
வயர் சுற்று அமைப்பு உள்ள அலாரங்களுக்கு பதிலாக `வயர்லெஸ்’ அலார அமைப்புகள் தற்போது வீடுகளில் இடம்பிடித்து வருகின்றன. வீட்டில் சந்தேகமான நடமாட்டம் இருந்தால், ஜி.எஸ்.எம். மூலம் நான்கு செல்போன் எண்களுக்குத் தகவல் தெரிவிக்கும் அமைப்பும் இதில் உண்டு. சாதாரண தொலைபேசி அல்லது செல்போனை பயன்படுத்தியே இந்த அமைப்பை `ஆன்’ செய்யவோ, `ஆப்’ செய்யவோ முடியும்.
`போட்டோ எலக்ட்ரிக் டிடெக்டர்கள்’
வீட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளில் நவீன வரவு, போட்டோ எலக்ட்ரிக் சென்சார்கள் ஆகும். இவை பொதுவாக பெரிய வீடுகளிலும், தொழிற்கூடங்களிலும் நிறுவப்படு கின்றன. இதில், கண்ணுக்குப் புலப்படாத வெளிச் சத்தை வெளிப்படுத்தும் `டையோடும்’, `ரீசிவரும்’ இருக்கும். இவை இரண்டுக்கும் எப்போதும் தொடர்பு இருக்கும். இவற்றுக்கு இடையே யாராவது கடந்தால், அலார ஒலி எழும்பும்.
கதவு அலார அமைப்பு
காந்தப் புலத்தின் அடிப்படையில் கதவு அலார அமைப்பு செயல்படுகிறது. பூட்டியிருக்கும் கதவை ஒருவர் உடைத்துத் திறக்க முயலும்போது இந்த அலாரம் ஒலியெழுப்பி, அவரைப் பயமுறுத்தித் துரத்திவிடும்.
வீட்டு பாதுகாப்பு `டிப்ஸ்’
* நகை போன்ற விலை மதிப்புமிக்க பொருட்களை வீட்டில் அதிகமாக வைத்திருக்கா தீர்கள். அவை வங்கி `லாக்கரில்’ இருக்கட்டும்.
* சுற்றுலா செல்லும்போது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து, வீட்டு முகவரியைக் கொடுத்துவிடுங்கள்.
* செய்தித்தாள், பால் போடுபவர்களிடம் தகவல் தெரிவித்து குறிப்பிட்ட நாட்களுக்கு செய்தித்தாள், பால் போட வேண்டாம் என்று கூறிவிடுங்கள். நீங்கள் இல்லாதபோது அவை வீட்டில் குவிந்துகிடக்க வேண்டாம்.
* விலை உயர்ந்த லேப்டாப், காமிரா போன்ற உபகரணங்களை வீட்டில் விட்டுச் செல்ல வேண்டாம்.
* வாகனங்களை வீட்டுக்கு முன்போ, நடைபாதையிலோ நிறுத்திச் செல்ல வேண்டாம்.
* ஆயுதங்கள், வெடிபொருட்களை வீட்டில் விட்டுச் செல்லாதீர்.
* அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்போர், தாங்கள் வெளியூர் செல்வதை, அந்தந்த குடியிருப்போர் நலச் சங்கத்தில் தெரிவிப்பது அவசியம்.