Daily Archives: மே 4th, 2011

விரதம் இருப்பது உடலுக்கு நல்லது!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு வகையில் விரதம் இருக்கின்றனர். நம் கலாசாரம், மதம் சம்பந்தப்பட்ட விஷயமாக, அது கருதப்படுகிறது. இந்துக்கள், வாரத்தில் சில நாட்களிலும், ஜெயினர்கள், மாலை 6 மணிக்குப் பிறகும், முஸ்லிம் மக்கள், ரமலான் மாதத்திலும், கிறிஸ்துவ மக்கள், தவக்காலத்திலும் விரதம் இருக்கின்றனர். இந்தியாவில், போராட்டக்காரர்கள், அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, உண்ணாவிரதம் இருக்கின்றனர். “அநீதியைக் கைகொள்ளும் அதிகார வர்க்கத்தினரை, உண்ணாவிரதம், மறைமுகமாக அவமானப்படுத்துகிறது’ என, காந்தி கூட கூறியுள்ளார்.

உணவை முற்றிலுமாகவோ, ஒரு பகுதி அளவிலோ, கட்டுப்பாடான அளவிலோ, சாப்பிடாமல் ஒதுக்குவது தான், உண்ணாவிரதம் என்றழைக்கப்படுகிறது. தற்போது மேற்கொள்ளப்படும் எல்லா விரதங்களும், முழுமையான விரதம் என, கூற முடியாது. சிலர் அனைத்து வகை உணவு மற்றும் தண்ணீர் அருந்தாமல் பட்டினி இருப்பர். சிலர், ஒரு நாளில் குறிப்பிட்ட நேரங்களில் உணவு உண்ணாமல் இருப்பர். சிலரோ, குறிப்பிட்ட உணவு வகைகளை சாப்பிடாமல் இருப்பர். பதினைந்து வயதுக்குக் குறைவானவர்கள், 70 வயதைக் கடந்தவர்கள், கர்ப்பிணிகள், வெளியிடங்களில் பணி செய்பவர்கள், கடுமையான உடல் உழைப்பு கொண்டவர்கள், நோயாளிகள் ஆகியோர் உண்ணாவிரதம் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. விரதம் இருக்கும்போது, சில உயிரி ரசாயனங்கள், வயிற்றுக்குக் கேடு விளைவிக்கின்றன.

உடல் நல்ல நிலையில் இருக்கும் இள வயதினர், 10 முதல், 12 நாள் வரை எதுவும் அருந்தாமல் இருக்க முடியும். தண்ணீர் மட்டும் பருகும் நிலையில், 50 முதல், 60 நாட்கள் வரை, தாக்குப் பிடிக்க முடியும். குழந்தைகளும், வயதானவர்களும் வெகு வேகமாக மாண்டு விடுவர். நம் சாப்பிடும் உணவு அனைத்தும் குளுக்கோசாகவும், கொழுப்பு மற்றும் அமினோ அமிலங்களாகச் சிதைந்து விடுகின்றன. இதில் குளுக்கோஸ், உடலின் பிரதான சக்திக்கு ஆதாரம்; சதைகளுக்கு மிகவும் அவசியமானது. உணவு சாப்பிடாமல் இருக்கும்போது, உடலில் அதிகப்படியாகத் தேங்கியுள்ள குளுக்கோஸ் முழுதும், சக்திக்காக கரைக்கப்படுகிறது. இதுவும் முற்றிலும் குறைந்து போகும்போது, கொழுப்புகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆண்களின் உடல் எடையில், 7 சதவீதமும், பெண்களின் உடலில், 10 சதவீதமும் கொழுப்பு உண்டு. இதுவும் கரைந்து போகும்போது, உடலுக்கான உணவுத் தேவை மிகவும் அதிகரிக்கும். உணவு கிடைக்கவில்லை எனில், உடலில் தசைகள், வளர்சிதை மாற்றமடைகின்றன. உடலும், தோலும் சுருங்கி, தோற்றமே மாறி விடுகிறது. உடலில் எலக்ட்ரோலைட் குறைந்து, இருதயம் தாறுமாறாகத் துடிக்கத் துவங்கும்; சிறுநீரகம் சரியாக வேலை செய்யாது. முழுமையான பட்டினி என்ற நிலையை அடையும்போது, மரணம் சம்பவிக்கும். சில வகையான மருத்துவப் பரிசோதனைகளுக்கு, காலி வயிறுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதை, “பாஸ்டிங்’கில் இருக்க வேண்டும்’ அல்லது, “எம்ட்டி ஸ்டமக்’குடன் வர வேண்டும்’ என, பரிசோதனை நிபுணர்கள் கூறக் கேட்கலாம். இந்த இரண்டு சொற்களுக்கும் வித்தியாசம் உண்டு. மருத்துவ ரீதியாக, “பாஸ்டிங்’ என்பது, 8 முதல் 12 மணி நேரம் உணவு அருந்தாமல் இருப்பது. அப்போது வளர்சிதை மாற்றத்தில் சில மாறுபாடுகள் ஏற்படும். உடலில், குளுக்கோஸ் அளவைக் கண்டறிவது, கொழுப்பு அளவு கண்டறிவது ஆகியவற்றுக்கு, “பாஸ்டிங்’ நிலை தேவை.

“எம்ட்டி ஸ்டமக்’ என்றால், உணவு உண்ட பின், 3 முதல் 5 மணி நேரம் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பது; வயிற்றிலுள்ள உணவு, ஜீரணமாகி முடிந்த நிலை அது. ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் வகையில், முன்னோர் காலத்திலிருந்தே, தொடர்ச்சியாகவோ, இடைவெளி விட்டோ, குறிப்பிட்ட நாட்களுக்கென சீராகவோ, விரதம் இருப்பது வலியுறுத்தப்படுகிறது. இப்போது, கொழுப்பு மற்றும் ரத்தச் சுத்தத்திற்கு, விரதம் இருப்பது நல்லது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள, முதியோர்களுக்கான தேசிய மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நாள் விட்டு ஒருநாள் விரதம் இருப்பது நல்லது என, கண்டறியப்பட்டுள்ளது. உடலில் சீரான இடைவெளியில், கலோரி அளவை கட்டுப்படுத்தினால், புற்றுநோய், இருதய நோய், நீரிழிவு நோய், நோய் எதிர்ப்புக் குறைபாடு ஆகிய உபாதைகளை வெகுவாகக் குறைக்கலாம் என, கண்டறியப்பட்டுள்ளது. இப்பழக்கம், மூப்பையும் குறைத்து, வாழ்நாளை அதிகரிக்கச் செய்கிறது. உடல் எடை குறைப்பதாகக் கூறி, உண்ணாவிரதப் பழக்கத்தை சிலர் மேற்கொள்கின்றனர். ஆனால், உணவு சாப்பிடாத நாட்களில், அவர்களை அறியாமல், கோபப்பட்டு, எரிச்சலுக்கு உள்ளாகின்றனர். இதனால், உடலில் சக்தியை சேமிக்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டு, சாப்பிடும் நேரங்களில், “சேமித்து வைப்பதற்காகவே’ அதிகமாகச் சாப்பிடும் மனநிலையைப் பெற்று விடுகின்றனர். இதனால், உடலில் வளர்சிதை மாற்றம் சீரற்றுப் போகிறது. இது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்; உடல் எடையும் குறையாது!

– டாக்டர் கீதா மத்தாய்

முத்து (பற்கள்) நம் சொத்து!

சிறிய வயதில்தான் சொத்தைப் பற்கள் வர அதிக வாய்ப்புண்டு. எனவே அதிக கவனம் சிறிய வயது குழந்தைகளிடம் தான் தேவை. முக்கியமாக தாய்ப்பால் மற்றும் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் வாயில் பாட்டிலை கடித்துக் கொண்டே தூங்கி விடுவதுண்டு.

தாய்ப்பாலில் சர்க்கரை கிடையாது. தாய்ப்பாலுக்குப் பதிலாக நாம் கொடுக்கும் பசும்பால், புட்டிப் பால் முதலியவற்றில் நாம் சர்க்கரையை சேர்த்துதான் கொடுக்கிறோம். இது சரியல்ல. சர்க்கரை சேர்க்காமல் அப்படியே தான் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் பாட்டிலைக் கடித்துக் கொண்டே தூங்கும்போது பால் மற்றும் பழச்சாற்றில் இருக்கும் சர்க்கரை நீண்ட நேரமாக வாயிலேயே இருக்கிறது இதுதான் சொத்தைப் பல்லையும், பல்லில் துவாரத்தையும் உண்டாக்கும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு முறை பால் கொடுத்து முடித்த பின்பும் ஒரு சுத்தமான மெல்லிய ஈரத் துணியை ஆட்காட்டி விரலில் சுற்றிக்கொண்டு குழந்தையின் ஈறுகளை நன்கு சுத்தம் பண்ணிவிட வேண்டும்.

என்றைக்கு குழந்தையின் வாயில் பற்கள் தெரிய ஆரம்பிக்கிறதோ அன்றைய தேதியிலிருந்தே குழந்தைகளுக்கு பிரஷ் பண்ண ஆரம்பித்து விட வேண்டும். பிரஷ் கொண்டு அல்ல, நான் ஏற்கனவே சொல்லியபடி மெல்லிய சுத்தமான ஈரத்துணியை வைத்துதான். இவ்வாறு சுத்தம் பண்ணும்போது குழந்தை நமது விரலை கடிக்கவும் கூடும். தப்பல்ல. அதிலும் ஒரு சந்தோஷம் கிடைக்குமல்லவா! எல்லா பற்களும் முளைத்தபிறகு பல் துலக்கலாம் என்று நினைக்காதீர்கள்.

நிறைய குழந்தைகள் கை சப்புவதை நாம் பார்த்திருப்போம். குழந்தைகள் கை சப்புவது ஒரு இயற்கையான காரியம் தான். குழந்தைகளுக்கு நிரந்தர பற்கள் முளைப்பதற்கு முன்பு இந்த கை சூப்பும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். சில குழந்தைகள் மூன்று அல்லது நான்கு வயதிற்குள் தானாகவே நிறுத்திவிடும்.

சில குழந்தைகள் பத்து வயதை தாண்டிய பின் கூட விரல் சூப்பும் பழக்கத்தை விடாது. விரல் சூப்பும் பழக்கம் நிறுத்தப்பட வில்லையென்றால் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கும்போது பல் சீராக வரிசையாக வளராமல் இடுக்குப்பல் மற்றும் தெத்துப்பல் என்று பற்கள் தாறுமாறாக வளர ஆரம்பித்துவிடும். இதனால் பற்களில் நிறைய பிரச்சினைகள் பின்னாளில் வர வாய்ப்புண்டு.

நாம் சொல்வதை புரிந்துகொள்ளும் பக்குவம் வந்த நாளிலிருந்தே குழந்தைகளுக்கு பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது எப்படி என்று கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொடுக்க வேண்டும். பல் டாக்டரைச் சந்தித்து பற்களை பிரஷ் கொண்டு எப்படி துலக்க வேண்டும் என்பதை நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

நாம் தினமும் பல் துலக்குகிறோம். ஆனால் நாம் பல் துலக்குகிற முறை சரியானதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சராசரியாக நூறு பேரில் சுமார் பத்துப் பேர்தான் சரியான முறையோடு பல் துலக்குகிறார்கள். மீதி தொண்ணூறு பேரும் பல் துலக்கியாக வேண்டுமே என்ற கடமைக்காக தினமும் பல் துலக்குகிறார்களே தவிர, சரியாக முறையாக ஒழுங்காக பல் துலக்குவதில்லை.

குழந்தைகளுக்கு உறுதியான நல்ல பற்கள் வளர சத்தான உணவு மிகமிக முக்கியம். கால்சியம், புரோட்டின், வைட்டமின் சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் பற்களுக்கு கண்டிப்பாக தேவை.

தொண்ணூறு சதவீத நோய்கள் பற்களுக்கு இடையில் தங்கும் உணவுத் துண்டுகளாலும், பிரஷ்ஷின் முனை உள்ளே நுழைய முடியாத இடங்களில் தேங்கும் பாக்டீரியா கிருமிகளாலும்தான் ஏற்படுகின்றன.

நான்கில் மூன்று பேருக்கு ஏதாவதொரு கால கட்டத்தில் பற்களை சுற்றியுள்ள ஈறுகளில் நோய் ஏற்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே சரிவர கவனிக்காவிட்டால் பல்லுக்கு சரியான பலம் கிடைக்காமல் பல் விழுந்துவிட வாய்ப்புண்டு.

பல் ஈறு வீங்கியிருந்தாலோ, ஒரு பக்க கன்னம் வீங்கியிருந்தாலோ வாய் நாற்றம் அடித்தாலோ பல் ஈறுகளின் இயற்கையான நிறம் மாறியிருந்தாலோ பற்களின் அடிப்பகுதியிலுள்ள ஈறு பல்லை விட்டு விலகியிருந்தாலோ, ஒரு பல்லுக்கும் அடுத்த பல்லுக்கும் இடையிலுள்ள இடைவெளி அதிகமாகியிருந்தாலோ, பற்கள் ஆட்டம் கொடுத்தாலோ, பல்லைக் கடிக்கும் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஈறுகளில் நோய் இருக்கிறதென்று கண்டுபிடித்து விடலாம்.

பற்களைச் சிதைக்கும் பாக்டீரியா கிருமிகள் எல்லோருடைய வாயிலும் இருக்கும். வாயிலுள்ள எல்லாப் பற்களின் மேலும் கண்ணுக்குத் தெரியாத மெல்லிய திரை போன்ற ஒரு படலம் உண்டாகும். இந்தப் படலத்தோடு பாக்டீரியா கிருமிகளும், வாயில் தங்கியிருக்கும் உணவுத் துகள்களும் சேரும். இதற்கு `பிளாக்’ என்று பெயர்.

ஒழுங்காக பல் துலக்கிக் கொண்டும், வாய் கொப்பளித்துக் கொண்டும் இருந்தால் பிளாக் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். பிளாக் சொத்தைப் பற்களையும், ஈறு நோய்களையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

பல் ஈறுகளில், ஏற்படும் நோயை முதலிலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால் இந்த பல் இடுக்குகளில் தங்கும் அழுக்கும், கறையும், கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பல்லும், ஈறும், சேரும் பகுதியில் அதிகமாக சேர்ந்து கடினமாகி காறை என்று சொல்வோமே, அது சேர ஆரம்பித்துவிடும். அதிலும் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இந்தக் காறை மற்றவர்களைவிட சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு மிக வேகமாக படிந்து பற்களை வலுவிழக்கச் செய்துவிடும்.

சில பேருக்கு இந்தக் காறை கல் மாதிரி ஆகி பல்லோடு சேர்ந்து பதிந்து விடும். இது பார்ப்பதற்கு பல் அழகையே கெடுத்துவிடும். மிகப்பெரிய படிப்பு படித்தவர்கள் மிகப்பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்கள், மிகப்பெரிய பணக்காரர்கள் இவர்கள் எல்லோருமே தினமும் பல் துலக்குவார்கள். நல்ல சத்தான உணவை தினமும் சாப்பிடுவார்கள். எல்லாம் ஒழுங்காக தினமும் நடக்கும். ஆனால் அவர்கள் வாயின் உள்பகுதியை கண்ணாடி மூலம் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படிப் பார்த்தால்தான் பற்களின் உள்புறத்தில் லேசான மஞ்சள் கலரில் பற்களின் அழகையே கெடுத்து காறை படிந்திருப்பது தெரியும். அவர்கள் எவ்வளவு பெரிய உத்தியோகத்தில் இருந்தாலும் இந்தக் காறையைப் பார்த்தபின் அவர்கள் பற்களை நன்றாக பராமரிக்கவில்லை என்பது தெரிந்துவிடும்.

பற்களின் உட்பக்கத்தை கண்ணாடி மூலம் பார்க்க இவர்களுக்கு வாய்ப்பும் இல்லை. நேரமும் இல்லை. சில பேருக்கு பற்களின் வெளிப் பக்கத்திலேயே கூட இந்தக்காறை படிந்து பார்ப்பதற்கு மிகமிக அசிங்கமான ஒரு தோற்றத்தை உண்டுபண்ணும். பல் டாக்டரிடம் போய்தான் இதை சுத்தம் செய்ய வேண்டும்.

ஜிகிர்தண்டா

ஜிகிர்தண்டா என்றாலே இதயத்தை குளிர வைக்கும் பானம் என்று அர்த்தம். ஜிகர் என்றால் இதயம், தண்டா என்றால் குளிர் என்று பொருள். இது இதயத்தை மட்டுமல்லாமல் கடும் வெயிலில் வறண்டு கிடக்கும் நாவையும், தொண்டையையும், உடலையும், மனத்தையும் குளிர்விக்கும் பானம்.

இதயம் குளிர இது இதமானது!

ஜிகிர்தண்டா குளிர்பானம் மட்டுமல்ல; ஓரளவிற்கு வயிற்றை நிரப்பும் தன்மையும் கொண்டது. இதில் சேர்க்கப்படும். சைனா கிராஸ் அயோடின், கால்

சியம், இரும்புச்சத்து நிறைந்தது. இவை உடலைக் குளிர வைக்கும் சக்தி வாய்ந்தவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஜிகிர்தண்டாவை அருந்துகையில் `ஜெல்லி’ போன்ற தன்மையுடன் உள்ள சைனா கிராஸ் வாயில் சுவைக்கையில், நாவிற்கு இன்பமூட்டும். இயற்கை முறையில் குளிர்விக்கவல்ல `ரோஸ் ஸிரப்’, நன்னாரி ஸிரப், கெட்டியாகக் கொதிக்கவிட்ட பால், எல்லா வயதினருக்கும் வெயில்கால பேவரிட்டான ஐஸ்கிரீம் சேர்த்து செய்யப்படும் `ஜிகிர்தண்டா`, வெயிலுக்கேற்ற பானம் என்பதுடன் செய்வதற்கும் மிகவும் சுலபம்.

வாருங்கள் ஜில் ஜிகிர்தண்டாவை இம்முறை செய்து சம்மரை ஜமாய்ப்போம்.

ஜிகிர்தண்டா

தேவையான பொருட்கள்

பால் – ஒரு லிட்டர்

சர்க்கரை – 8 டேபிள் ஸ்பூன்

சைனா கிராஸ் – 4 டேபிள் ஸ்பூன்

ரோஸ் சிரப் – 1 டேபிள் ஸ்பூன்

நன்னாரி ஸிரப் – 1 டேபிள் ஸ்பூன்

ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) – 1

பால் கோவா – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

* ஒரு லிட்டர் பாலை, சர்க்கரை சேர்த்து அடிகனமான வாணலியில் மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் சேர்க்கவும்.

* பாலை அரைலிட்டராக சுண்ட வைத்து ஆறியவுடன் பிரிஜ்ஜில் 6 மணி நேரங்கள் வைக்கவும்.

* சைனாகிராஸை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸை’ சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.

* குளிர்ந்த பாலை முதலில் நீளமான ஒரு கண்ணாடித் தம்ளரில் பாதியளவு ஊற்றவும்.

* இப்போது பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும்.

* பிறகு ரோஸ் ஸிரப், நன்னாரி ஸிரப் ஊற்றவும்.

* தொடர்ந்து வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று கொடுக்கவும்.

* வெயிலில் தளர்ந்த உடலைக் குளிரவைத்து ஆனந்தத்தில் ஆழ்த்தி மனதிற்கு இதமளிக்கும் ஜில் ஜில் ஜிகிர்தண்டா தயார்.

கீதா பாலகிருஷ்ணன்

சி கிளீனர் புதிய பதிப்பு

விண்டோஸ் சிஸ்டம் இயக்கத்தில், பைல்களை நிர்வகிப்பதில் பன்னாட் டளவில் பயன்படுத்தப்படும் புரோகிராம்களில் புகழ் பெற்றது சிகிளீனர் (CCleaner) ஆகும். அவ்வப் போது ஏற்படும் தற்காலிக பைல்கள், குக்கீஸ், தேவையற்ற ரெஜிஸ்ட்ரி குறியீடுகள் போன்றவற்றை நீக்கி, ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்து வதில் சிறப்பாக இது இயங்குகிறது. இதனைத் தயாரித்து வழங்கும் பிரிசாப்ட் (Pirisoft) நிறுவனம், அண்மையில் இதன் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பினை (பதிப்பு 3.0.5) வெளியிட்டுள்ளது. http://www.piriform.com/ccleaner/ என்ற முகவரியில் உள்ள இதன் இணைய தளத்திலிருந்து இந்த புரோகிராம் பைலை இறக்கி, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
புதிய பதிப்பில் மேலும் 20 வெவ்வேறு வகையான புரோகிராம் களுக்கு சப்போர்ட் வழங்கப்படுகிறது. இவை கேம்ஸ் புரோகிராம் முதல் வாய்ஸ் கம்யூனிகேஷன் புரோகிராம் வரை அடங்கும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துபவர்கள், தங்கள் பயன்பாடு குறித்து இந்த பிரவுசர் தயாரித்து வைக்கும் தகவல்களை நீக்கலாம். ஐ-ட்யூன்ஸ் குக்கிகள், பழைய விண்டோஸ் பயர்வால் விதிமுறைகள் ஆகியவற்றை புதிய பதிப்பு கவனித்துக் கொள்கிறது. ரெஜிஸ்ட்ரி கிளீனர் பகுதியில், பழைய பயன்படுத்தாத விண்டோஸ் புரோகிராம்களுக்கான குறியீட்டு வரிகளை நீக்க வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9, பயர்பாக்ஸ் 4, ஐ ட்யூன்ஸ், ஆப்பரா பிரவுசர், பயர்பாக்ஸ்/மொஸில்லா பாஸ்வேர்ட் பதிவுகள், ஆகியவை தற்போதைய பதிப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
கம்ப்யூட்டர் சப்போர்ட் செய்திடும் அனைத்து புரோகிராம்களின் பட்டியல் காட்டப்படுகிறது.
இந்த புதிய சிகிளீனர், விண்டோஸ் எக்ஸ்பி (32 மற்றும் 64 பிட் புரோகிராம்) விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 7 ஆகிய சிஸ்டங்களில் இயங்குகிறது. இவற்றின் சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் செயல்படுகிறது.

எக்ஸெல் டிப்ஸ்

மூன்றுக்கும் மேலான ஒர்க் ஷீட்கள்
எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றைத் திறந்து டேட்டாக்களை உள்ளிடுகையில், நமக்கு தொடக்க நிலையில், மூன்று ஒர்க் ஷீட்கள் கிடைக்கும். இது மாறா நிலையில் (Default) உள்ளபடி தரப்படுகிறது. சில வேளைகளில், நாம் ஒரே நேரத்தில், மூன்றுக்கும் மேற்பட்ட ஒர்க்ஷீட்களில் டேட்டா உள்ளிட வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக, பல வகுப்புகளில் உள்ள மாணவர்களுக் கான டேட்டாவினை இடுகையில், அந்த வகுப்பில் உள்ள செக்ஷன்களுக் கேற்றபடி, பல ஒர்க் ஷீட்களில் டேட்டாவினை, ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இட வேண்டியதிருக்கும். இதற்காக, நாம் மெனு சென்று இன்ஸர்ட் (Insert) கட்டளையைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். இதற்குப் பதிலாக, ஒர்க்புக் திறக்கையிலேயே நாம் விரும்பிய எண்ணிக்கையில் ஒர்க்ஷீட்கள் கிடைத்தால், நன்றாக இருக்குமே என்று நாம் எண்ணலாம். இதற்கேற்ற வழியை எக்ஸெல் தருகிறது.
முதலில் Tools மெனு செல்லவும். அதில் Options பிரிவில் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் (Options Dialogue Box) டயலாக் பாக்ஸில் General என்னும் டேபினைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவினைப் பார்க்கவும். இதில் இரண்டாவது பிரிவில் முதலாவதாக Sheets in New Workbook என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே உள்ள சிறிய கட்டத்தில் 3 என்ற எண் இருக்கும். இதன் மீது கர்சரைக் கொண்டு சென்று உங்களுக்குத் தேவையான ஒர்க் ஷீட் எண்ணிக்கை எண்ணை டைப் செய்து ஓகே கிளிக் செய்திடலாம். அல்லது அருகே உள்ள சிறிய அம்புக் குறிகளை மேல் கீழாக அழுத்தி எண்ணிக்கையை அதிகப் படுத்தலாம்; அல்லது குறைக்கலாம். செய்து முடித்தவுடன் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி எத்தனை ஒர்க் ஷீட் வேண்டுமென்று செட் செய்தீர்களோ அத்தனை ஒர்க் ஷீட்களுடன் புதிய ஒர்க் புக் திறக்கப்படும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், புதிய ஒர்க் புக் தான் இந்த மாற்றங்களோடு கிடைக்கும். ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தி வைத்திருக்கும் ஒர்க் புக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப் படாது.
அனைத்து பக்கங்களிலும் தலைப்புகள்:
எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றைத் தொடங்குகையில், முதல் படுக்கை வரிசைகளில், செல்களில் டேட்டா உள்ளீடு செய்திட வசதியாக, டேட்டா சார்ந்த பொருள் குறித்த தலைப்பினை எழுதி வைப்போம். இதனால்ல், தவறு ஏற்படாமல் டேட்டாக்களை இடலாம். எடுத்துக்காட்டாக, பொருட்களை விற்பனை செய்திடும் கடை ஒன்றில், பொருட்கள் விற்பனை ஏற்படுகையில், ஒவ்வொரு பில்லுக்குமான தொகையினை அந்த அந்த பொருளுக்கேற்ப உள்ளீடு செய்திட விரும்புவோம். இதற்கு தலைப்பில் அந்த பொருளின் பெயர் தலைப்பாக இருந்தால், சரியாக டேட்டா அமைக்கலாம்.
ஆனால், இரண்டாவது பக்கத்திற்குச் சென்றவுடன், இந்த தலைப்பு தெரியாது. நம்மால் ஓரளவிற்குத்தான் பொருட்களின் பெயர்களை நினைவில் வைத்திருப் போம். இதற்கான தீர்வு, ஒவ்வொரு பக்கத்திலும் செல்களின் தலைப்புகள் காட்டப்பட வேண்டும். அதாவது படுக்கை வரிசை 30, 40 எனச் சென்றாலும், அந்த பக்கங்களின் மேலாக, இந்த தலைப்புகள் நமக்குத் தெரிந்தபடி இருக்க வேண்டும். இதனை அமைத்திட சில செட்டிங்ஸ் மாற்றம் மேற்கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக, முதல் மூன்று படுக்கை வரிசைகளில் நிறுவனப் பெயர் மற்றும் நெட்டு வரிசைகளில் அமைப்பதற்கான டேட்டாவினை விளக்கும் வகையில் தலைப்புகளை அமைத்திருக்கிறீர்கள். இந்த மூன்று படுக்கை வரிசைகளும் அனைத்து பக்கங்களிலும் தெரிய வேண்டும். எனவே A4 செல்லைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்த பின்னர், மேலே உள்ள மெனு பாரில், Window என்பதில் கிளிக் செய்திடுங்கள். கீழாக Freeze Panes என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுங்கள். இப்போது மூன்றாவது படுக்கை வரிசைக்கும், நான்காவது படுக்கை வரிசைக்கும் இடையே, பட்டையாக ஒரு கோடு இருக்கும். இனி நீங்கள் 60, 70 என எந்த படுக்கை வரிசைக்குச் சென்றாலும், முதல் மூன்று படுக்கை வரிசைகள் அப்படியே மேலாக உறைந்து நிற்கும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இதற்கெனத் தேர்ந்தெடுக்கும் செல் அ வரிசையில் தான் இருக்க வேண்டும்.
சரி, வேலை முடிந்த பின், இந்த உறைந்த செல்களை மறுபடியும் வழக்கமான நிலையில் வைக்க வேண்டுமே. என்ன செய்யலாம்? மீண்டும் Window மெனுவினைத் தேர்ந்தெடுத்தால் அங்கு Unfreeze Panes என்று ஒரு பிரிவு Freeze Panes இருந்த இடத்தில் இருக்கும். இதில் கிளிக் செய்தால், உடனே உறையச் செய்த வரிசைகள் அதன் தன்மையிலிருந்து விலகும். குறுக்காக இருந்த பட்டையான கோடு மறைந்துவிடும்.

கத்திரி வெயிலை சமாளிக்க…மே 4 அக்னி நட்சத்திரம் ஆரம்பம்!

கோடை காலம் தவிர்க்க முடியாதது; ஆனால், கோடை வெப்பத்தை நம்மால் தவிர்க்க இயலும்.
கோடை வந்துவிட்டாலே உடம்பில் அயர்ச்சியும், ஆயாசமும், கூடவே தண்ணீர் தாகமும் ஏற்படுவது இயற்கை. இதுபோன்ற நேரங்களில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி சாறு போன்றவற்றை அருந்துவது மிகவும் நல்லது.
இளநீர், மோர் சாப்பிட்டால் சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கும். அவ்வாறு இருப்பவர்கள், அவற்றுடன் சிறிது மிளகுத் தூளை சேர்த்துக் கொண்டால் போதும். எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
எந்த பழம் சாப்பிடுவதாக இருந்தாலும், ஜூசாக எடுத்துக் கொள்வதை விட, சுவைத்து சாப்பிட்டால், அதன் பலன் இரட்டிப்பாகும்.
கோடை காலத்தில் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். எலுமிச்சைப் பழமும், தேனும் அல்லது சர்க்கரை, உப்பும் கலந்து அருந்தினால் தாகம் அடங்கும். நுங்கு சாப்பிடலாம். சுத்தமான மோரில் உப்பு போட்டு, அதிக அளவு அருந்தலாம்.
கோடையில் மஞ்சள் காமாலை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, மோருடன் கீழாநெல்லியை அரைத்து, கலந்து, காலை வேளையில், வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது.
இதேபோல், மூலநோய் உள்ளவர்களும் கோடை காலத்தில் மிகவும் சிரமப்படுவர். இவர்கள் மாங்காயில் உள்ள பருப்பை அரைத்து, மோரில் கலந்து சாப்பிடலாம். அத்திப்பழம் நிறைய சாப்பிடுவது நல்ல பலனளிக்கும்.
முள்ளங்கி, காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், வாழைத் தண்டு, வெள்ளைப் பூசணி, சவ்சவ், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்காய்களை சாலடாக மிளகுத் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
கோடை காலங்களில் கனரக ஆலைகளில், வாகனங்களில் பணிபுரிவோருக்கு உடல் அதிக உஷ்ணம் அடைந்து, அநேக பிரச்னைகள் ஏற்படும். இதற்கு சீரகம், வெந்தயம் இரண்டையும் சேர்த்து, பொடி செய்து வைத்துக் கொண்டு, மோரில் கலந்து சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியடையும்.
ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வெயில் காலத்தில் வழக்கத்தை விட, கூடுதலாக பிரச்னைகள் ஏற்படும். அவர்கள் தண்ணீரில் சீரகம், மல்லித்தூள் இரண்டையும் சிறிதளவு சேர்த்து கொதிக்க வைத்து, ஆறிய பிறகு குடிக்கலாம்.
காலையில் கம்பு, சோளம், ராகி கூழ் அல்லது கோதுமை, பார்லி ஆகிய கஞ்சி வகைகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் புளிப்பில்லாத ராகி, கம்பு, கூழ் வகைகளை அருந்தலாம். கோடையில் தோல் நோய்கள், அரிப்பு, நமைச்சல், படை, சொறி, சிரங்கு போன்றவை அதிகமாக ஏற்படும். அச்சமயத்தில், குளிக்கும் போது, கடலை மாவு, பயத்தம் மாவு, முடிந்தால் சந்தனம், வெட்டிவேர் இவற்றைக் கலந்து பொடித்து, உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஈரமான ஆடைகளை அணியக் கூடாது. உடல் ஈரத்துடனும், ஆடைகள் அணியக் கூடாது. கோடை காலத்தில் பருத்தி ஆடைகளே சிறந்தது.
காலை, மாலை இரண்டு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து தலை குளிக்க வேண்டும்..
ஒருநாள் விட்டு ஒருநாள் இரவு வெந்தயத்தை மோரில் ஊற வைத்து, அரைத்து, மறுநாள் காலை தலைக்கு பூசி குளித்து வந்தால், குளிர்ச்சியாக இருக்கும்.