Daily Archives: மே 5th, 2011

மனஅழுத்தம் இனி மாயமாகும்!

யல்பான வாழ்க்கையில் மனக்கலக்கம், பதற்றம், கவலை போன்ற சோதனைகள் அவ்வப்போது எதிர்பாராத விதத்தில் நிகழ்வதுண்டு. இவை எதனால் உண்டாகின்றன? இதுபோன்ற நேரங்களில் மூளை என்னென்ன வேலைகளைச் செய்கிறது என்று இங்கிலாந்தில் உள்ள லீசஸ்டர் பல்கலைக்கழகத்தினர் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். அதில் வெளியான தகவல்கள் சுவாரசியமானவை.

மூளையின் அமைப்பு விசித்திரமானது. பதற்றத்துடனும், மனஅழுத்தத்துடனும் கூடிய கடினமான சூழ்நிலையை சமாளித்து இயல்பு நிலைக்கு மாற்றுவதில் மூளை முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இதற்கான பரிசோதனையை முதலில் சுண்டெலிகளை வைத்து மேற்கொண்டனர். மூளையில் பய உணர்வை வெளிப்படுத்தும் மையத்தின் பெயர் அமிக்டலா. இந்த மையத்தில் இருந்து நியூரோஸ்பின் என்ற புரதம் உண்டாகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

மனஅழுத்தத்திற்குள்ளாகும்போது மூளையானது அதிகளவில் நியூரோஸ்பின்களை உருவாக்கி, வேகமாக வேதிவினை புரியச்செய்கிறது. இதனால், மூளையில் உள்ள பயஉணர்வு மையம் தூண்டப்படுகிறது. அதனால், ஒருவித பதற்றத்துடன் கூடிய மனக்கலக்கம் ஏற்படுகிறது.

மூளைக்கு இந்த புரதச்சத்து கிடைப்பதில் தடை ஏற்படும்போது, பய உணர்வை உண்டாக்கும் மையங்களும் வேலை செய்யாமல் இயல்பு நிலையில் இருந்து விடுகிறது. தொடர்ந்து போதை பொருட்களை பயன்படுத்துவதாலும் இதுபோன்ற மனஅழுத்தம் உண்டாகிறது.

இந்த ஆய்வு பற்றி டாக்டர் ராபர்ட் பாவ்லக் கூறுகையில், “மனஅழுத்தத்தால் உண்டாகும் சிக்கலான பிரச்சினைகளுக்கு புதிய வழியில் தீர்வு கண்டுள்ளோம். எலிகளை வைத்து மேற்கொண்ட ஆய்வில், அமிக்டலா என்ற புரதமையத்தின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்திய போது, அவை பயஉணர்வில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பியதைக் காண முடிந்தது. இந்த ஆய்வில் இருந்து நியூரோஸ்பின் என்ற புரதம் தான் மனஅழுத்தத்தை உண்டாக்குகிறது என்பதைக் கண்டறிந்திருக்கிறோம்.

எலிகளை வைத்து நாங்கள் நடத்திய இந்த பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றாலும், இதை அடிப்படையாக வைத்து தொடர்ந்து மனிதர்களுக்கும் பயன்படும் வகையில் புதிய மருந்தைக் கண்டறிந்து மனஅழுத்தத்திற்கு விடுதலை கொடுப்போம்” என்கிறார், டாக்டர் பாவ்லாக்.

சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளால் தான் பெரும்பாலானவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அவர்களில் ஐந்தில் ஒருவருக்கு இதுபோன்ற பதற்றத்துடன் கூடிய மனக்கலக்கம் உண்டாகின்றன என்றும் அவர் சொல்கிறார்.

பிளஸ்-2 முடித்தவர்கள் என்ன படிக்கலாம்

திப்பும், மரியாதையும் மிக்கது மருத்துவப்பணி. மாணவர்களின் கனவுக்கல்வி எம்.பி.பி.எஸ்! பிளஸ்-2 உயிரியல் பாடப்பிரிவு படித்தவர்கள் இப்படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். எம்.எஸ்., எம்.டி. போன்ற முதுகலை மருத்துவ படிப்புகளும் உள்ளன. இதற்கு தனி நுழைவுத் தேர்வு இருக்கிறது. இத்தேர்வு எழுதாதவர்கள் எச்.ஐ.வி., நியூட்ரிஷியன், அவசர கால மருத்துவம், கிளினிகல் ரிசர்ச் போன்ற ஓராண்டு படிப்புகளை படிக்கலாம். பயோடெக்னாலஜி, மெடிக்கல்நானோ டெக்னாலஜி போன்ற பாடப்பிரிவுகளில் எம்.டெக். படிப்பும் இருக்கிறது. படித்தவுடன் ஏராளமான பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

ல் மருத்துவ படிப்பு (பி.டி.எஸ்.) மருத்துவம் சார்ந்த படிப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இது 5 ஆண்டுகால படிப்பு. பல் மருத்துவம், பல் அழகுபடுத்துதல் இதில் முக்கியமானது. இவர்களுக்கு நல்ல பணிவாய்ப்பு இருக்கிறது. படித்து முடித்தவர்கள் சொந்தமாக கிளினிக் நடத்தவும் தகுதி வாய்ந்தவர்கள் ஆகிறார்கள். டென்டல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், ஆய்வுக் கூடம், மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகள் கிடைக்கும்.

***

ர்சிங் (செவிலியர்) பணிக்கும் உலகம் முழுவதும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஜெனரல் நர்சிங் (3 ஆண்டு), பி.எஸ்சி. (4 ஆண்டு) பட்டப்படிப்புகளை படிக்கலாம். படித்துவிட்டு சிலகால அனுபவத்துக்கு பிறகு கார்டியோ தெரபிக் நர்சிங், சைக்கார்டிஸ்டிக் நர்சிங், பிசிசியன் அசிஸ்ட் போன்ற முதுநிலை பட்டப்படிப்பை படிக்கலாம். மாநில நர்சிங் கவுன்சிலில் பதிந்து வைத்தால் அரசுப்பணியும் பெறலாம். முதுநிலை நர்சிங் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பும், வருமானமும் உண்டு.

***

ரு மருந்தின் தன்மை, அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், அதன் குணாதிசயம், பக்க விளைவு பற்றி படிப்பது பார்மஸி (மருந்தாளுனர்). 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு, 4 ஆண்டு பட்டப்படிப்பு இருக்கிறது. மருத்துவத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த படிப்பை படிப்பவர்களுக்கு மருத்துவமனை, ஆராய்ச்சிக்கூடங்கள், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. முதுநிலை பட்டப்படிப்பு முடித்தால் வாய்ப்புகள் ஏராளம். மெடிக்கல் ஷாப் வைப்பதற்கு பார்மஸி படித்திருக்க வேண்டும்.

***

ந்தியாவின் இயற்கை மருத்துவத்தைப் பற்றிய படிப்பு சித்தமருத்துவம். உணவுப்பொருளை மருந்தாகப் பயன்படுத்தும் சிறப்பு மருத்துவமுறை இது. தற்போது மதிப்பு பெருகும் மருத்துவமாக இது உள்ளது.

பி.எஸ்.எம்.எஸ். என குறிப்பிடப்பட்டு இம்மருத்துவ பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. தாம்பரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டியூட்டில் முதுநிலை சித்தமருத்துவம் படிக்கலாம். இவர்களுக்கும் பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன. சொந்தமாக மருந்து தயாரித்தும் விற்கலாம்.

***

பி.ஏ.எம்.எஸ். எனப்படும் ஆயுர்வேதமும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவம். பக்க விளைவற்ற இம்மருத்துவ முறைக்கு மவுசு அதிகரித்துள்ளது. 5 ஆண்டு பட்டப்படிப்பு, ஆயுர்வேதிக் பார்மசி என்ற டிப்ளமோ (2 ஆண்டு) படிப்பு இருக்கிறது. நெல்லை, சென்னை அரசு கல்லூரிகளில் படிக்கலாம். ஜெய்ப்பூரில் `ஆயுர்வேதா நர்சிங் அண்ட் பார்மசி’ என்ற ஒன்றரை வருட டிப்ளமோ படிப்பும், ராஜஸ்தான் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் `டிப்ளமோ இன் ஹெர்பல் மெடிசின்’ என்ற ஓராண்டு படிப்பும் கற்பிக்கப்படுகிறது.

***

னநிலை சார்ந்த உடலியல் கோளாறுகளை சரி செய்வது ஆக்குபேஷனல் தெரபி. மனிதனின் செயல்பாடுகள் மாறிப்போவதன் மர்மத்தை ஆராய்ந்து சிகிச்சை அளிப்பது இதன் பணி. எந்திரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய மனித சமுதாயத்துக்கு ஆக்குபேஷனல் தெரபி படித்தவர்களின் சேவை நிறையவே தேவைப்படுகிறது.

கண் குறைபாடுகளை அறிவதும், களைவதும் பற்றி படிப்பது ஆப்டோமெட்ரி. இதில் 2 ஆண்டு டிப்ளமோ மற்றும் 4 ஆண்டு இளநிலைப் படிப்புகள் உள்ளன. பணிவாய்ப்புகளும் தாராளம்.

***

பேச்சு மற்றும் காது சம்பந்தப்பட்ட மருத்துவ படிப்பு ஆடியாலஜி. இது 3 ஆண்டு பட்டப்படிப்பு. பேச்சை மேம் படுத்தி முறைப்படுத்தும் `ஸ்பீச் தெரபி’ படிப்பும் உள்ளது. உடலின் உட்புறங்களை ஆராயும் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், அல்ட்ராசவுண்ட்ஸ், ஆன்ஜியோகிராம் போன்றவற்றை அறிவது ரேடியோகிராபி படிப்பு. ரேடியோ தெரபியில் சில பட்டப்படிப்புகள் (3 ஆண்டு) உள்ளன. டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.

***

மெடிக்கல் லேப் டெக்னாலஜி மருத்துவ துறையில் முக்கியமான படிப்பு. நோயை கண்டறிதல், பகுத்து ஆராய்தல், நோயை தடுக்க ஆய்வு செய்வது மெடிக்கல் லேபரேட்டரி டெக்னாலஜிஸ்ட் பணி. உடலில் உள்ள நீர், ரத்தம், ரசாயன அளவு பற்றி கற்றுத்தரப்படும். இதில் டிப்ளமோ (டி.எம்.எல்.டி.), பட்டப்படிப்பு (பி.எம்.எல்.டி.) கள் உள்ளன. மருத்துவமனைகள், ஆய்வு மையங்கள், மெடிக்கல் லேப்களில் பணிவாய்ப்புகள் ஏராளம் இருக்கிறது.

இவை தவிர மருத்துவதுறையில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு சான்றிதழ் படிப்புகள் ஏராளம் உள்ளன.

ரீட் ஒன்லி கோப்புகள்

வேர்ட் புரோகிராமில், கவனிக்க வேண்டிய அம்சமாக,ரீட் ஒன்லி (Read Only) கோப்புகள் உள்ளன. ஒரு டாகுமெண்ட் பைலை, ரீட் ஒன்லியாக பார்மட் செய்திடப் பல வழிகள் உள்ளன. நாம் அறியாமல் இவ்வாறு அமைக்கப்படும் வழியினை மாற்றவும், வேர்ட் சில வசதிகளைத் தருகிறது. இங்கு அவற்றைப் பார்க்கலாம்.
ரீட் ஒன்லி என அடையாளம் இடப் பட்ட பைல்களை, நாம் படிக்க மட்டுமே முடியும். அவற்றை திருத்தி அப்டேட் செய்திட முடியாது. இது சில வேளைகளில் நாமாகவே அமைத்து, நம் பைல்களைப் பிறரிடமிருந்து காப்பாற்றி வைத்துக் கொள்ளலாம் என்றாலும், தானாக பைல்கள் இவ்வாறு அமைகையில், நமக்கு சிரமத்தைத் தருகின்றன.
முதலில் நம் கட்டுப்பாட்டில் உள்ள ரீட் ஒன்லி பைல்களைப் பார்க்கலாம். வேறு ஒருவர் நம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் செயல் படுகையில், குறிப்பிட்ட ஒரு கோப்பினை Read Only என மாற்றி இருக்கலாம். இதனை நீக்க, வேர்ட் டாகுமெண்ட்டைத் திறந்து, Tools ஆப்ஷன்ஸ் சென்று கிடைக்கும் விண்டோவில், Security என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். பின் இங்கு நடுவில் உள்ள ReadOnly Recommended என்று உள்ள வரிக்கு முன்னர் தரப்பட்டுள்ள சிறிய கட்டத்தில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
இன்னொரு வகையிலும் இந்த ரீட் ஒன்லி தடையை நாம் சந்திக்கலாம். நெட்வொர்க் ஒன்றில், பல கம்ப்யூட்டர்கள் இணைந்து அதன் சர்வரில் உள்ள வேர்ட் புரோகிராமினைப் பயன்படுத்தி, டாகுமெண்ட்களை உருவாக்கி வருவோம். இதில் முதலில் ஒருவர் ஒரு டாகுமெண்ட்டைத் திறந்து பயன்படுத்தினால், அடுத்து அதே டாகுமெண்ட்டைப் பயன்படுத்து பவர்களுக்கு, அந்த பைல், ரீட் ஒன்லியாகத்தான் கிடைக்கும். இப்போது அந்த பைலின் தன்மையை மேலே சொன்னபடி மாற்ற முடியாது. வேறு வழியும் இல்லை. முதலாவதாகத் திறந்தவர் அதனை எடிட் செய்து மீண்டும் சேவ் செய்திடும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.
இன்னொரு வகையிலும் இந்த பிரச்னையைச் சந்திக்கலாம். டாகுமெண்ட் டை சேவ் செய்திடும் போல்டர், ரீட் ஒன்லி தன்மையுடன் அமைக்கப்பட்டிருக்கலாம். இது அமைந்துள்ள டைரக்டரியைத் திறந்து அதன் தன்மைகளைப் (Attributes) பார்த்தால் இது தெரியவரும். ரீட் ஒன்லி தன்மையை நீக்கினால் பிரச்னை தீரும். இந்த வகையில் தீர்வினை அமைக்கை யில், அந்த டைரக்டரியின் ரூட் டைரக்டரி வரை சென்று, இந்த தன்மை உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட பைல் மட்டும் இந்த தன்மையைக் கொண்டிருந் தால், அந்த டாகுமெண்ட் பைலைத் திறந்து, அதன் முழு டெக்ஸ்ட்டை கண்ட்ரோல் + ஏ கொடுத்து காப்பி செய்திட வேண்டும். பின்னர், அதனை இன்னொரு புதிய காலி பைல் (A new blanket document file) ஒன்றைத் திறந்து, அதில் பேஸ்ட் செய்து, புதிய பெயர் கொடுத்து சேவ் செய்திடலாம்.

செல்வ வளம் பெருகட்டும்!-மே-6 அட்சய திரிதியை!

அட்சய திரிதியை நன்னாள், தர்மத்தை வலியுறுத்துகிறது. தர்மம் இருக்கும் நாட்டில், செல்வம் பெருகும். இந்நாளில் செய்யப்படும் தர்மம், பெரும் நன்மை தரும். ஒரு காலத்தில், மக்களின் பசி தீர்க்க, இந்நாளில் தயிர்சாதம் தானம் செய்தனர். “அட்சய’ எனும் சொல்லுக்கு, “வளர்தல்’ என்று பொருள். இந்தச் சொல்லுக்குரிய மகிமை பற்றிய சம்பவம் ஒன்றைக் கேளுங்கள்…
விஜயரகுநாத நாயக்க மன்னர், ஆந்திர, கர்நாடகத்தின் ஒரு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒரு சமயம், அவரது ஆட்சியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. தொடர்ந்து, 10 ஆண்டுகளாக மழை இல்லாததால், தண்ணீர் பஞ்சமும் வந்து விட்டது. வசதி உள்ளவர்கள் பக்கத்து ஊர்களுக்கு குடிபெயர்ந்து சென்று விட்டனர். ஏழை ஜனங்கள் மடியும் நிலை ஏற்பட்டது.
ஒருநாள், அவ்வூர் அமைச்சர் வீட்டிற்கு ஓடி வந்தான் ஒரு ஏழை விவசாயி. அவன் அங்கிருந்த அமைச்சரிடம், “அமைச்சரே… எங்கள் குடும்பம் பட்டினியால் தவிக்கிறது. வயல்கள் காய்ந்து விட்டதால், வேலை இல்லை; பணமின்றி அவஸ்தைப் படுகிறேன். இப்போது, குடிநீரும் இல்லை. என் மனைவி சாகக் கிடக்கிறாள். அவளுக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுத்தால் போதும்; பிழைத்துக் கொள்வாள். எனக்கு, ஐந்து பெண் குழந்தைகள். தாயில்லாவிட்டால் என் குழந்தைகளின் நிலை என்னாகும்? தயவு செய்து என் மனைவியைக் காப்பாற்றுங்கள்…’ என்று புலம்பினான்.
இரக்கமுள்ள அந்த அமைச்சர், அவனை தன் தேரில் ஏற்றி, ஒரு பானை தண்ணீருடன் சென்றார். அங்கு போய் அவளுக்கு தண்ணீர் கொடுப்பதற்குள், அவளது தலை சாய்ந்து விட்டது. அந்த ஏழையும், அவனது பிள்ளைகளும் அழுத அழுகை, அமைச்சரை சங்கடப்படுத்தியது. அந்த ஏழைக்கு ஆறுதல் சொல்லி, அந்தப் பெண் குழந்தைகளின் திருமணத்துக்கு பணம் கொடுத்து விட்டு வந்தார்.
மறுநாள், இதுபற்றி மன்னரிடம் சொன்ன அமைச்சர், “மன்னா… இயற்கையை யாராலும் வெல்ல இயலாது. நாம் மகான் ராகவேந்திரரை அழைப்போம். அவர், இங்கு வந்தாலே போதும். மழை பெய்யுமென நான் நம்புகிறேன். மக்கள் படும் வேதனை தீரும்…’ என்றார்; மன்னரும் சம்மதித்தார்.
ராகவேந்திரரை அவர்கள் அழைத்து வந்தனர். அவர் தரையில் நெல்லைப் பரப்பி, “அட்சய’ என்று எழுதினார்; மறுநிமிடமே மழை கொட்டியது. 10 ஆண்டுகளாக பெய்யாத மழை, 10 நாட்களில் கொட்டி, கண்மாய்கள் நிரம்பின; ஆறுகள் பெருகி ஓடின. மக்கள் விவசாயப் பணிகளைத் துவக்க, மன்னர் மானியம் அளித்தார்.
“அட்சய’ எனும் சொல், அந்தளவுக்கு சக்தி வாய்ந்தது. அட்சய திரிதியை நன்னாளில் நகை, பொருள் வாங்கினால், ஏராளமாய் பெருகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நமக்காக மட்டும் இல்லாமல், தர்ம சிந்தனையுடன் கஷ்டப்படுபவர்களுக்கும் வாங்கிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக, வசதி படைத்தவர்கள் ஏழைப் பெண்களுக்கு மாங்கல்யம் வாங்கிக் கொடுக்கலாம்; ஏழை மாணவர்களுக்கு, தேவையான உதவிகள் செய்யலாம்.
இந்நாளில், நகை வாங்குவதன் மூலம், சேமிக்கும் வழக்கமும் ஏற்படுகிறது. ஐந்தாண்டுக்கு முன், ஒரு பவுன் நகை, எட்டாயிரத்துக்கு வாங்கி இருந்தால், அதன் இப்போதைய மதிப்பு, 16 ஆயிரம் ரூபாய், இப்படி இரட்டிப்பு நன்மை கிடைக்கச் செய்யும் விழாவாக, அட்சய திரிதியை அமைந்துள்ளது.
இந்நாளில், லட்சுமி தாயார் படத்தின் முன், நெய் விளக்கேற்றி, செல்வம் பெருக வேண்டுவர். உழைப்பின் மூலம் பெறும் செல்வம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், இதற்காக, கிருஷ்ண பகவானை வழிபட வேண்டும். திரவுபதியின் புடவையை கவுரவர்கள் இழுத்து அவமானப்படுத்திய வேளையில், கிருஷ்ணர் அவள் முன் தோன்றி, “அட்சய’ என்றார்; அந்தப் புடவை வளர்ந்து கொண்டே இருந்தது. இவ்வகையில், வாழ்க்கையில் சிரமப்படுபவர்களுக்கு பாதுகாப்பு தரும் நன்னாளாகவும் அட்சய திரிதியை அமைந்துள்ளது. அட்சய திரிதியை நன்னாளில், அனைவர் இல்லத்திலும் செல்வ வளம் பெருக வேண்டுவோம்.