மனஅழுத்தம் இனி மாயமாகும்!

யல்பான வாழ்க்கையில் மனக்கலக்கம், பதற்றம், கவலை போன்ற சோதனைகள் அவ்வப்போது எதிர்பாராத விதத்தில் நிகழ்வதுண்டு. இவை எதனால் உண்டாகின்றன? இதுபோன்ற நேரங்களில் மூளை என்னென்ன வேலைகளைச் செய்கிறது என்று இங்கிலாந்தில் உள்ள லீசஸ்டர் பல்கலைக்கழகத்தினர் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். அதில் வெளியான தகவல்கள் சுவாரசியமானவை.

மூளையின் அமைப்பு விசித்திரமானது. பதற்றத்துடனும், மனஅழுத்தத்துடனும் கூடிய கடினமான சூழ்நிலையை சமாளித்து இயல்பு நிலைக்கு மாற்றுவதில் மூளை முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இதற்கான பரிசோதனையை முதலில் சுண்டெலிகளை வைத்து மேற்கொண்டனர். மூளையில் பய உணர்வை வெளிப்படுத்தும் மையத்தின் பெயர் அமிக்டலா. இந்த மையத்தில் இருந்து நியூரோஸ்பின் என்ற புரதம் உண்டாகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

மனஅழுத்தத்திற்குள்ளாகும்போது மூளையானது அதிகளவில் நியூரோஸ்பின்களை உருவாக்கி, வேகமாக வேதிவினை புரியச்செய்கிறது. இதனால், மூளையில் உள்ள பயஉணர்வு மையம் தூண்டப்படுகிறது. அதனால், ஒருவித பதற்றத்துடன் கூடிய மனக்கலக்கம் ஏற்படுகிறது.

மூளைக்கு இந்த புரதச்சத்து கிடைப்பதில் தடை ஏற்படும்போது, பய உணர்வை உண்டாக்கும் மையங்களும் வேலை செய்யாமல் இயல்பு நிலையில் இருந்து விடுகிறது. தொடர்ந்து போதை பொருட்களை பயன்படுத்துவதாலும் இதுபோன்ற மனஅழுத்தம் உண்டாகிறது.

இந்த ஆய்வு பற்றி டாக்டர் ராபர்ட் பாவ்லக் கூறுகையில், “மனஅழுத்தத்தால் உண்டாகும் சிக்கலான பிரச்சினைகளுக்கு புதிய வழியில் தீர்வு கண்டுள்ளோம். எலிகளை வைத்து மேற்கொண்ட ஆய்வில், அமிக்டலா என்ற புரதமையத்தின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்திய போது, அவை பயஉணர்வில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பியதைக் காண முடிந்தது. இந்த ஆய்வில் இருந்து நியூரோஸ்பின் என்ற புரதம் தான் மனஅழுத்தத்தை உண்டாக்குகிறது என்பதைக் கண்டறிந்திருக்கிறோம்.

எலிகளை வைத்து நாங்கள் நடத்திய இந்த பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றாலும், இதை அடிப்படையாக வைத்து தொடர்ந்து மனிதர்களுக்கும் பயன்படும் வகையில் புதிய மருந்தைக் கண்டறிந்து மனஅழுத்தத்திற்கு விடுதலை கொடுப்போம்” என்கிறார், டாக்டர் பாவ்லாக்.

சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளால் தான் பெரும்பாலானவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அவர்களில் ஐந்தில் ஒருவருக்கு இதுபோன்ற பதற்றத்துடன் கூடிய மனக்கலக்கம் உண்டாகின்றன என்றும் அவர் சொல்கிறார்.

%d bloggers like this: