விரும்பி ஆடுவதே விளையாட்டு

விரும்பி ஆடுவதே விளையாட்டு. விளையாட்டுகள் மக்களின் வாழ்க்கை நிலை, சமூக உணர்வு, குழு மனப்பான்மை, பண்பாடு ஆகியவற்றை விளக்குவதாகும். தமிழக மரபு விளையாட்டுகள் சிறப்பு வாய்ந்தவை. சிறுவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமான உறவும், உணர்வும் கொள்ள இவ்விளையாட்டுகள் உதவுகின்றன. சில ஆட்டங்கள் குழந்தைகளின் நடிப்புத்திறனை வெளிப்படுத்தும். இடையே பேசும் உரையாடல், பாடல், கேலி கிண்டல் போன்றவை அவர்களிடையே சுதந்திர தன்மையை வளர்க்கிறது.

***

தமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு எழுதப்படாத விதிமுறைகள் உண்டு. இன்று `டாஸ்’ போட்டு விளையாட்டை தொடங்குவது போல கிராமிய ஆட்டங்களில் ஆட்டத்தை தொடங்க ஆளைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முறை வைத்திருக்கிறார்கள். இதை பட்டுவருபவரை தேர்ந்தெடுத்தல் என்பர். தப்பா ஒண்ணு, தவளை ரெண்டு என்று ஆரம்பித்து சுருங்கி விழு என்று முடியும் சிறுபாடலை பாடுவார்கள். சாப்பூட் திரி, காயா-பழமா?, ஒத்தையா-ரெட்டையா? என்று வாய்மொழிகளைக் கூறும் வழக்கமும் இருக்கிறது. இதில் ஏதாவதொன்றை பாடி இறுதி வரி யார் மீது முடிகிறதோ அவர் ஆட்டத்தை தொடங்க வேண்டும் என்பது விதி.

***

இருகுழுவாக பிரிந்து ஆடும் ஆட்டத்துக்கு குழு பிரிக்கவும் ஒரு முறை உண்டு. உத்தி பிரித்தல், அணி பிரித்தல் என்று இதனைக் கூறுவர். அணித் தலைவர்களாக இருவர் இருந்து கொள்ள, மற்றவர்கள் ஜோடி ஜோடியாக பிரிந்து வந்து சிங்கம் வேண்டுமா, யானை வேண்டுமா? தாமரை வேண்டுமா, மல்லிகை வேண்டுமா என்று தலைவர்களிடம் கேட்பார்கள். அவர்கள் எந்தப் பெயரை தேர்வு செய்கிறாரோ அதற்குரியவர் அந்த அணி உறுப்பினராக சேர்க்கப்படுவார். குழு பிரிந்ததும் நாணயத்தை சுண்டி அல்லது உடைந்த ஓட்டுத் துண்டில் எச்சில் தடவி உயரே வீசி போட்டுப் பார்த்து ஆட்டம் தொடங்கப்படும்.

***

விளையாட்டில் தோற்பவர்களை கிண்டல் செய்து கேலிப்பாடல் பாடுவதுண்டு. குட்டுதல், முதுகில் சவாரி செய்தல், ஓட வைத்தல் போன்ற சில தண்டனைகளும் உண்டு. நாட்டுப்புற விளையாட்டுகளை பருவ காலப்படி வகையிடலாம். வேனிற்காலத்தில் புளியங்கொட்டை ஆட்டம், கிட்டிப்புள், பச்சைக் குதிரை, பந்து, கபடி, கள்ளன்-போலீஸ், கண்ணாமூச்சி, எலியும் பூனையும் போன்ற ஆட்டங்கள் ஆடப்படும். மழைக்காலத்தில் பல்லாங்குழி, தாயம், தட்டாமலை, ஆடுபுலி, கொழுக்கட்டை ஆட்டம் பிரபலம். வீட்டுக்குள் ஆடுதல், வெளியில் ஆடுதல், ஆண்- பெண் ஆட்டம் என்றும் பல வகைகள் உண்டு.

***

விளையாட்டுப் பருவம் என்றாலே அது குழந்தைப் பருவம்தான். குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் ஏராளம். வீடும், வீதியும், பொட்டலும், ஊர் மந்தையும் குழந்தைகளின் விளையாட்டுக் களங்கள். குழந்தை ஆட்டங்கள் பெரும்பாலும் குழு நிலையில் ஆரம்பித்து பிறகு வருவோரையும் தம்முடன் இணைத்துக் கொள்வதாக இருக்கும். இவர்களின் ஆட்டங்கள் பொழுதுபோக்கும், மனமகிழ்ச்சியும் தருபவை. போட்டி விளையாட்டுகள், உடல் திறன் விளையாட்டுகள், அறிவு விளையாட்டுகள் என சில வகைகள் உண்டு. கிட்டிப்புள், பம்பரம், கோலி, கபடி, நீச்சல் என்று பருவம் தோறும் விளையாட்டுகள் மாறும்.

***

சிறுவர்களின் பச்சைக்குதிரை ஆட்டம் பிரபலமானது. இது உயரம் தாண்டுதலின் முன்னோடி விளையாட்டு. இதில் முதலில் ஒருவர் தரையில் காலை நீட்டி அமருவார். மற்றவர்கள் காலை தாண்டுவார்கள். பிறகு கால்மேல் கால் வைத்து உயரத்தை கொஞ்சம் கூட்டப்படும். அதையும் எல்லோரும் தாண்டிவிட்டால் கைகளை நீட்டுவார், பிறகு குனிந்து நிற்பார், கழுத்தை மட்டும் குனிவார், இறுதியில் நிமிர்ந்து நிற்க அனைவரும் தாண்டுவர். இதில் எந்த நிலையில் ஒருவர் தாண்ட முடியாமல் போகிறாரோ அவர் தோற்றவராக காலை நீட்டி உட்காருவார், மற்றவர்கள் தாண்டுவார்கள். இது உடல் திறனை சோதிப்பதும், கூட்டுவதுமான விளையாட்டு.

***

`பூப்பறிக்க வருகிறோம்` ஆட்டம் சிறுமிகளுக்கானது. முதலில் இரு குழுவாக பிரிவர். ஒரு பிரிவினர் ஒவ்வொருவருக்கும் பூக்களின் பெயரைச் சூட்டிக்கொள்வர். பிறகு எதிர் குழுவினர் பூப்பறிக்க வருகிறோம் என்று பாடிக்கொண்டே முன்னே வருவர். என்ன பூ என்று கேட்டதும் ஒரு பூவின் பெயரைச் சொல்வார்கள். அந்த பூ பெயருடையவர் முன்னே வந்து நிற்க (கயிறு இழுத்தல் ஆட்டம் போல) அவரை தங்கள் பக்கம் இழுக்க எதிர் குழு முயற்சிக்கும். இதை பூக்குழுவினர் தடுப்பர். இந்த ஆட்டம் பூக்களை அறிதல் மற்றும் உடல்திறனை மேம்படுத்துகிறது. குழுவாக செயல்படுதல், பொறுப்புணர்ச்சியை வளர்க்கிறது.

***

எலி- பூனை ஆட்டம் ஒன்று உண்டு. இதில் பங்கேற்கும் குழுவினர் வட்டமாக நிற்பர். ஒருவர் வட்டத்திற்குள் எலியாகவும், மற்றொருவர் பூனையாக வட்டத்திற்கு வெளியும் நிற்பார். `எலி என்ன செய்யுது, எலி என்ன செய்யுது?’ என்று பூனை நபர் கேட்பார். ஆடுது, பாடுது என்று சொல்லியபடியே இறுதியில் வெளியே வரப்போகுது என்று பதில் சொன்னதும், அவர் வட்டத்தைவிட்டு வெளியே வருவார். அவர் வரும் வழியைப் பார்த்து பூனை நபர் அவரை பிடிக்க வேண்டும். வட்டமாக நிற்பவர்கள் எலிக்கு வழி விட்டும், பூனையை தடுத்தும் ஆடுவர். இதன் நவீன வடிவமே இன்றைய `டாம் அன்ட் ஜெர்ரி’ கார்ட்டூன் படம் என்றால் மிகையில்லை.

***

பெரியவர்கள் ஆடும் சமுதாய போட்டிகளும் உண்டு. கபடி, சிலம்பம், ஜல்லிக்கட்டு, உறியடி, வழுக்குமரம், வண்டிப்பந்தயம், புலியாட்டம், ஆடுபுலி ஆட்டம், மான்கொம்பாட்டம், சுருள் சுழற்றுதல், வடம் இழுத்தல் போன்றவை ஆடவர் ஆட்டங்களாகும். இவை உடல்திறன், அறிவுத்திறன், வீரப்பண்பை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. பல போட்டிகள் இரு குழுவுக்கு இடையே நடப்பதால் பார்வையாளர்களும் இருகூறாக இருந்து வீரர்களை உற்சாக மூட்டுவர். காளை பிடித்தல், சிலம்பாட்டம், மாட்டுவண்டி பந்தயம் பரபரப்பாக இருக்கும். ஆண்களின் உடல் வலிமைக்கேற்ப விளையாட்டுகளும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

***

இளம் வயதுப் பெண்கள் ஆடும் ஆட்டங்கள் மிகவும் குறைவு. அதுவும் வீட்டுக்குள் ஆடும் ஆட்டமே. கடும் கட்டுப்பாடு, மிகுதியான வேலை நேரம் தவிர்த்து பல்லாங்குழி, தாயம், சில்லுக்கோடு, தட்டாமலை போன்ற ஆட்டங்களை ஆடுவர். வெளியில் சென்றால் கும்மியாட்டம், கோலாட்டம் ஆடுவார்கள். திருவிழாக் காலங்களில்தான் இந்த விளையாட்டுகள் மிகுதியாக ஆடப்படும். மகளிர் விளையாட்டுகள் மன மகிழ்ச்சியையும், பொழுதுபோக்கையும் அடிப்படையாக கொண்டுள்ளன. இவ்விளையாட்டுகள் அறிவுத்திறனையும், உடல்திறனையும் மேம்படுத்துகின்றன.

***

%d bloggers like this: