Advertisements

Daily Archives: மே 15th, 2011

தக்காளி பழப் பச்சடி

நம்முடைய நாவின் சுவை நாளங்களை சுண்டி இழுத்து தன்னுடைய சிவப்பு நிறத்தினால் உணவையே பிரகாசிக்க வைக்க வல்லது தக்காளிப்பழம். பாலும், தேனும், பாகும், பருப்பும் கலந்து கரிமுகத்து தூமணியான விநாயகப் பெருமானுக்குப் படைத்து சங்கத் தமிழ் மூன்றும் வேண்டிய அவ்வையைப்போல தக்காளிக் சாற்றுடன், பழத்துண்டுகள், அளவான சர்க்கரை சேர்த்து நம் உடலாருக்குப் படைத்தால் ஆரோக்கிய வாழ்வை நம்மால் பெற இயலும்.

தக்காளி பழப் பச்சடி

கடும் கோடையின் கடுமையை நாம் உணராதவாறு செய்து உடலைக் குளிர்விக்க வல்லது தக்காளிப் பழம். இயற்கை இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையுடன் கூடிய தக்காளி, உடலுக்கு புற்று நோயிடமிருந்து எதிர்ப்பு சக்தி தர வல்லது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

வைட்டமின்கள், லைகோபின் மற்றும் நார்ச்சத்து நிறைந்த தக்காளி உடலுக்கு பலப்பல நன்மைகளை அளிக்கவல்லது. தக்காளியில் இயற்கையாகவே இனிப்பு இருப்பதால் சிறிதளவு சர்க்கரை மட்டுமே சேர்த்து நாம் மிகுந்த சுவையுடன் தக்காளிப் பழப்பச்சடி செய்ய முடியும்.

சுவை மிகுந்த பழத்துண்டுகளின் கலவை, உடலை ஆரோக்கியமாக வைப்பதுடன், உடலுக்கு அழகையும், தோலுக்கு பளபளப்பையும் அளிக்க வல்லது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

நன்மை பல விளைவிக்கவல்ல தக்காளி மற்றும் பழங்களைச் சேர்த்து இம்முறை நாம் தக்காளிப் பழ பச்சடி செய்யலாமா?

தேவையான பொருட்கள்

தக்காளிப் பழங்கள் – 4
சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்
துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம், அன்னாசி, திராட்சை, ஆப்பிள், பப்பாளி – 1 கப்
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை

* தக்காளிப் பழங்களை மிக்சியில் போட்டு அடித்து ஒரு உலோக வடிகட்டியில் போட்டுக் கசக்கி வடிகட்டி சாற்றை எடுக்கவும்.

* தக்காளிச் சாறை அடிகனமான வாணலியில் கொதிக்கவிட்டு சர்க்கரை சேர்த்து கைவிடாமல் சிறிது கிளறி இறக்கி ஆற வைக்கவும்.

* துண்டுகளாக நறுக்கிய பழங்களை ஆறிய தக்காளிச் சாறில் போட்டு ஏலக்காய்த்தூள் சேர்த்து குலுக்கி கலந்து (பழத்துண்டுகள் உருக்குலையாமல் இருக்க குலுக்கிக் கலக்க வேண்டும்) தேவையானால் பிரிஜ்ஜில் 2 மணி நேரம் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.

* வேறுபட்ட சுவையுடன் கூடிய ஆரோக்கியம் மிகுந்த தக்காளிப் பழப்பச்சடி ரெடி.

சுவைக்கான குறிப்பு

* சர்க்கரைக்கு பதிலாக தூசு நீங்க கெட்டியாகக் கொதிக்கவிட்ட வெல்ல நீர் சேர்க்கலாம். அல்லது தக்காளிச் சாற்றை நன்கு கொதிக்கவிட்டு பழத்துண்டுகள் ஏலக்காய்த்தூள் சேர்க்கையில் தேன் சேர்க்கலாம்.

Advertisements