Advertisements

Daily Archives: மே 17th, 2011

காகிதங்கள் இல்லாத அலுவலங்கள்-பேப்பர்லெஸ் ஆபீஸ்

பேப்பர்லெஸ் ஆபீஸ் – அதாவது, காகிதங்களே இல்லாத அலுவலகம் என்பது இன்றைய அலுவலக நடை முறையாக மாறிவருகிறது. தனியார் அலுவலகங்கள் மட்டுமின்றி, அரசு அலுவலகங்களும் இவ்வாறு மாறுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன. இது சாத்தியமா? இதனால் நன்மைகள் என்ன? பார்ப்போமா!
எல்லா அலுவலகங்களிலும் நீக்கமற நிறைந்து காணப்படுவது காகிதங்கள்தான். ஆயிரக்கணக்கான கோப்புகள் குவிந்து காணப்படும். இவை தவிர, புத்தகங்கள், பத்திரிகைகள், கையெழுத்து பிரதிகள் எனவும் நிறைந்து கிடக்கும். இவற்றின் ஊடே அமர்ந்து, பதுங்கி, மறைந்து இருப்பது போல பணியாற்றுகிற அலுவலர்களை வெளியே கொண்டு வந்து, அவர்களுக்கு எப்படி புத்துணர்ச்சி கொடுக்கலாம்?
காகிதமற்ற அலுவலகம் வந்தால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். காகித வடிவில் இல்லாமல் டிஜிட்டல் வடிவில் தகவல்களைச் சேகரித்து வைப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
1. மரங்களை வெட்டிக் காகிதங்களைத் தயாரிப்பது குறைந்து விடும். எனவே மரங்கள், நம் வாழ்நாட் களுக்குப் பின்னரும், நீண்ட நாட்கள் வாழும். சுற்றுப்புறம் பசுமையாகத் திகழும்.
2. காகிதங்களை கட்டி “மாரடிக்கும்’ தொழிலில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். காகிதங்களைப் பராமரிக்கும் கடின வேலையில் இருந்து நாம் தப்பலாம்.
3. தகவல்களை டிஜிட்டல் வடிவில் பதிவதால், அவற்றை எளிதாகக் கையாள முடியும். விரைவாகத் தேடி, வேண்டிய தகவல்களைப் பெற முடியும். தகவல்களை வேண்டிய வகையில் அடுக்க முடியும். மொத்தத்தில் தகவல்களை எளிதாக மேலாண்மை செய்ய முடியும்.
4. காகிதங்களை வைத்துப் பராமரிக்க ஏராளமான இடம் தேவை. டிஜிட்டல் வடிவத்துக்குத் தகவல்களை மாற்றினால், காகிதங்களை வைத்திருக்கப் பயன்படுத்தும் இடம் மிச்சமாகிறது.
5. பேக்கப் எடுத்து வைப்பதால் டிஜிட்டல் வடிவில் உள்ள தகவல்களை எப்போதும் நம்பலாம். காகிதங்கள் தொலைந்து போகலாம்; அவற்றைக் கரையான்கள் அரிக்கலாம். எனவே காகிதத்தில் உள்ள தகவல்களை நம்ப முடியாது.
6. டிஜிட்டல் வடிவில் உள்ள தகவல்களில், வேண்டிய பகுதியைக் கண்டு பிடித்து, விரைவாக மற்றவர்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.
மேலே கண்ட நன்மைகளைப் படித்ததும், தகவல்களை டிஜிட்டலாக மாற்ற எல்லாரும் விரும்புவது இயற்கையே. எனினும் சில சந்தேகங்கள், கேள்விகள் நம் மனதில் எழுலாம்.
1. டிஜிட்டலாகத் தகவல்களை மாற்ற ஏராளமான பணத்தைச் செலவழிக்க வேண்டியிருக்குமா?
2. இனிமேல் கிடைக்கிற தகவல்களை டிஜிட்டலாக மாற்றினால் போதாதா? ஏற்கனவே காகிதங்களில் உள்ளவற்றை டிஜிட்டலாக மாற்ற பணம் அதிகம் செலவாகுமா?
3. டிஜிட்டல் வடிவத் தகவல்களை ஹார்ட் டிஸ்க்கில் போட்டு வைக்கிறோம். ஹார்ட் டிஸ்க்கை நம்ப முடியுமா? ஹார்ட் டிஸ்க் பழுதாகிவிட்டால் எல்லா தகவல்களும் போய்விடுமே?
மேலேயுள்ள கேள்விகளும், ஐயங்களும் வீணான பயத்தை ஏற்படுத்தியுள்ளன. தகவல்களை டிஜிட்டலாக மாற்ற அதிகப் பணம் தேவைப்படுவதில்லை. ஏற்கனவே உள்ள தகவல் மற்றும் புதிய தகவல் என எல்லாவற்றையும் டிஜிட்டலாக மாற்றி விடுவதே நல்லது. ஹார்ட் டிஸ்க்கின் விலை குறைவு. எனவே ஒரு ஹார்ட் டிஸ்க்கில் உள்ள டேட்டாவை மற்றொரு ஹார்ட் டிஸ்க்கில் பேக்கப் எடுக்கலாம்; சிடி-ஆர், டிவிடி டிஸ்க்குகள் போன்றவற்றிலும் பதியலாம். Raid முறையில் பல ஹார்ட் டிஸ்க்குகளை வைத்து டேட்டாவை பேக்கப் எடுக்கலாம். (Redundant Array of Inespensive Devices என்பதன் சுருக்கமே Raid.)

டிஜிட்டலாக மாற்ற என்ன தேவை?
நல்ல வேகம் கொண்ட கம்ப்யூட்டர் தேவை. தரமான ஸ்கேனர் தேவை.
ஸ்கேன் செய்கிற காகித டாக்குமெண்டுகளைப் படங்களாகச் சேமிக்க விரும்பாமல் அவற்றை டெக்ஸ்ட் பார்மட்டில் சேமிக்க Optical Character Recognition (OCR) என்னும் சாப்ட்வேர் தேவை. பொதுவாக ஸ்கேனருடன் இலவசமாக ஓஆர்சி சாப்ட்வேரைத் தருவார்கள். இந்த சாப்ட்வேர் போதுமானது. ஏராளமான காகித டாக்குமெண்டுகளை பிழையில்லாமல் டெக்ஸ்ட் பார்மட்டுகளாக மாற்ற விரும்புபவர்கள் ABBYY Fine Reader போன்ற ஓஆர்சி சாப்ட்வேர்களை விலைக்கு வாங்கலாம். இன்னும் பல சாப்ட்வேர் தொகுப்புகளும் கிடைக்கின்றன.
டிஜிட்டல் வடிவில் உள்ள உங்கள் தகவல்களை பேக்கப் செய்ய தரமான சாப்ட்வேர் தேவை. அந்த சாப்ட்வேரில் Scheduler வசதியும் இருக்க வேண்டும். அப்படியானால்தான் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பைல்களை உங்கள் உதவியின்றியே அந்த சாப்ட்வேரால் பேக்கப் எடுக்க முடியும். Second Copy, Win Backup போன்ற பேக்கப் சாப்ட்வேர்களில் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம்.
அடுத்ததாக Docment Management software தேவை. Newsoft வழங்கும் Presto1 Page Manager போன்ற சாப்ட்வேர்கள் பல உள்ளன. ஸ்கேனருடன் இலவசமாக இத்தகைய சாப்ட்வேரைத் தருவார்கள். அதையும் பயன்படுத்தலாம்.

டிஜிட்டலாக மாற்ற:
காகித வடிவில் உள்ள டாக்குமெண்டை எப்படி டிஜிட்டலாக மாற்றுவது எனப் பார்ப்போம்.
காகிதத்தை ஸ்கேனரில் வைத்து ஸ்கேன் செய்யுங்கள். ஓசிஆர் சாப்ட்வேர் மூலம் காகிதத்தில் உள்ளதை டெக்ஸ்ட் பார்மட்டமாக மாற்றுங்கள்.
டாக்குமெண்ட் மேனேஜர் சாப்ட்வேர் மூலம், அந்த டாக்குமெண்ட் தொடர்பான முக்கிய குறிப்பைக் கொடுங்கள். பின்னாளில் இந்த குறிப்பை வைத்தே அந்த டாக்குமெண்டைத் தேடிக் கண்டு பிடிக்க முடியும்.
முந்தைய பத்திகளில் குறிப்பிட்டபடி எல்லா காகித டாக்குமெண்டுகளையும் ஸ்கேன் செய்து பைல்களாக மாற்றுங்கள். பின்பு பேக்கப் சாப்ட்வேர் மூலம் அவற்றைப் பேக்கப் எடுங்கள்.

Advertisements

2006, 2011 தேர்தல்களில் பதிவான ஓட்டுகளையும், கட்சிகள் பெற்ற ஓட்டு ஓர் ஒப்பீடு

2006, 2011 தேர்தல்களில் பதிவான ஓட்டுகளையும், கட்சிகள் பெற்ற ஓட்டுகளையும் ஒப்பிட்டால், தி.மு.க., மிகப்பெரிய சரிவையும், அ.தி.மு.க., அமோக உயர்வையும் சந்தித்துள்ளன. பா.ம.க., – காங்கிரஸ் கட்சிகளும் சரிவில் இருந்து தப்பவில்லை.

இந்த தேர்தல்களை ஒப்பிட்டால், தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம், 2006 தேர்தலை விட, 2011ல் 4.08 சதவீதம் குறைந்துள்ளது. அ.தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம், 2006 தேர்தலை விட, 6.44 சதவீதம் அதிகரித்துள்ளது. காங்கிரசின் ஓட்டு சதவீதம், சென்ற தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் 0.92 சதவீதம் சரிந்துள்ளது.அதே நேரம், தே.மு.தி.க.,விற்கு, 2006ல் பெற்றதை விட இப்போது 0.5 சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளன. ஆனால், வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையும், பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், 2006ல் 232 தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட்டதும், 2011ல் 41 இடங்களில் மட்டுமே போட்டியிட்டதும் தான். இது தான், சதவீதம் குறைய காரணம். பா.ம.க.,வின் ஓட்டுகளிலும் 0.42 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட், பா.ஜ., இந்திய கம்யூ., ஓட்டு சதவீதத்தில் பெரிய மாற்றம் இல்லை.

தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?

தமிழகத்தில் குறுநில மன்னர்களை போல் பாவித்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, தி.மு.க.,வுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களாக இருந்தவர்கள் என, முக்கிய தலைவர்கள் ஓரங்கட்டப்பட வேண்டும் என்பதே உண்மையான தி.மு.க.,தொண்டர்களின் கருத்தாக உள்ளது.

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் தோல்விக்கு விலைவாசி உயர்வு, மின் வெட்டு மட்டுமே முக்கிய காரணம் என்று கூறினாலும், அதற்கு மேல் முக்கிய காரணமாக இருப்பது, கட்சியின் முக்கிய தலைவர்கள், அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்கள் செய்த சட்ட விரோத செயல்பாடுகளே, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தி.மு.க.,வுக்கு கடும் எதிர்ப்பை பெற்று தந்தது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத, கட்சி நலம் விரும்பும் தொண்டர்கள் கூறியதாவது: தி.மு.க., தோல்விக்கு விலைவாசி உயர்வு, மின் வெட்டு தான் காரணம் என்று கூறுவது தவறு. இப்பிரச்னைகள் உள்ள சில மாநிலங்களில் நடந்த தேர்தலில், ஆளும்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. உதாரணத்துக்கு, அஸ்ஸாமில் நடந்த தேர்தலில் ஆளும்கட்சியாக உள்ள காங்கிரஸ், தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. பல இலவசங்களை அள்ளி வழங்கிய தமிழகத்தில் மட்டும் தி.மு.க., ஏன் தோற்க வேண்டும். அதற்கு முக்கிய காரணம், அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள், தங்கள் பகுதிகளில் குறு நில மன்னர்களாக செயல்பட்டனர். அவர்கள் மன்னர்களாக இருந்து மக்களுக்கு நல்லது செய்திருந்தால் எல்லோரும் வரவேற்றிருப்பர். ஆனால், அவர்கள், உண்மையான கட்சி தொண்டரை அவமதித்தனர். தங்கள் உறவினர்களையும், தங்களின் சட்டவிரோத செயல்களுக்கு புகலிடம் தேடி, நெருங்கி வந்தவர்களையும் வளர்த்து விட்டனர்.

சில குறிப்பிட்ட அமைச்சர்கள், தங்கள் மாவட்டத்தில் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வாங்குபவர்களிடம், “குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் மட்டுமே, பத்திரப்பதிவு செய்ய முடியும்’ என்று மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் உள்ள மதிப்புமிக்க சொத்துக்களையும், குறைந்த விலையில் தங்களுக்கு விற்க கோரி, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களை மிரட்டினர். இதெல்லாம், தி.மு.க.,வின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசு அலுவலகங்களில் புகுந்து, அனைத்து பணிகளிலும் தலையிட்டனர். எதிர்ப்பு தெரிவித்த அரசு அதிகாரிகளை மிரட்டி, ஆட்சிக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் போல் காட்டி, அமைச்சர்கள் மூலம் இடம் மாற்றினர்.

பார்லிமென்ட் தேர்தலை போல, பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விட முடியும் என்று நினைத்தது தவறு. அத்தேர்தலில், மத்தியில் கிளீன் இமேஜ் பெற்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங்க்கு ஆதரவான நிலையை தான் மக்கள் எடுத்திருந்தனர். தற்போது, ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று, காங்கிரஸ் மேல் இருந்த மதிப்பும் மக்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இனி நடக்கும் பார்லிமென்ட் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் எந்த கட்சியும் தோல்வியடையும் என்ற நிலை உள்ளது.

தற்போது, அ.தி.மு.க., கூட்டணி பெற்றுள்ள ஓட்டுக்கள் அனைத்தும், ஜெயலலிதாவுக்காக விழுந்த ஓட்டுக்கள் அல்ல… தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுக்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க., இனி மக்களிடையே நல்ல பெயரை பெற வேண்டுமானால், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகளை கட்சியை விட்டே ஓரங்கட்ட வேண்டும். கருணாநிதி குடும்பத்தினர், அதிகாரத்தை பயன்படுத்தி, சில குறிப்பிட்ட தொழில்களில் ஆதிக்கம் செலுத்துவதை விட்டு, கட்சி பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போது தான், தி.மு.க., மக்களிடையே மீண்டும் எழுச்சி பெறும். தி.மு.க., தலைவர் கருணாநிதி, எதிர்கட்சி தலைவராக கூட சட்டசபைக்குள் போகமுடியதா நிலைக்கு யார் காரணம் என்பதை அறிந்திருப்பார். அந்த வகையில் கட்சி தலைவர் என்ற முறையில், நடவடிக்கை எடுத்து, சாமானிய தொண்டர்களுக்கு மதிப்பளித்தால், தி.மு.க.,வுக்கு உயிர் கொடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக அமைச்சரவையில் ஒவ்வொரு சமூகம் பெற்ற பிரதிநிதித்துவம்

அ.தி.மு.க., அமைச்சரவையில் இடம் பெற்ற 33 அமைச்சர்களில், வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எட்டு பேரும், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆறு பேரும், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேரும் இடம் பெற்றுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 33 அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றனர். அதில் 24 பேர், புதுமுகங்களாக இடம் பெற்றுள்ளனர். கொங்கு மண்டலம் எப்போதும் அ.தி.மு.க., கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில், அனைத்து தொகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி வாகை சூடியது.வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவான கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்ற கட்சி, சட்டசபை தேர்தலில் தி.மு.க., அணியில் இடம் பெற்றிருந்தது. அக்கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், அ.தி.மு.க., அணியில் இடம் பெற்ற கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள், அமோக வெற்றி பெற்றனர். எனவே, அச்சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், எட்டு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த செங்கோட்டையனுக்கு விவசாயத் துறை, கே.வி.ராமலிங்கத்திற்கு பொதுப்பணித் துறை, தங்கமணிக்கு வருவாய் துறை, சண்முகவேலுக்கு தொழில் துறை, எடப்பாடி பழனிச்சாமிக்கு நெடுஞ்சாலைத் துறை, செந்தில் பாலாஜிக்கு போக்குவரத்து துறை போன்ற முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, எஸ்.பி.வேலுமணிக்கு சிறப்பு திட்டங்கள் அமலாக்கம் என்ற புதிய துறையும் உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. வின் ஓட்டு வங்கியாக அருந்ததியர் சமுதாய ஓட்டுகளும் கணிசமாக உள்ளது. அந்த சமுதாயத்தினருக்கு உள்ஒதுக்கீடு, கடந்த தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது.ஆனால், அச்சமுதாயத்தினரின் ஓட்டுகளும் அ.தி.மு.க.,வுக்கு கிடைத்துள்ளது. ஆனால், அமைச்சரவையில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. அச்சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தனபாலுக்கு துணை சபாநாயகர் பதவி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

வடசென்னை மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற குறையும் அக்கட்சியில் நீடிக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என, வடசென்னை மாவட்ட அ.தி.மு.க.,வினர் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.ஆனால், அமைச்சரவை பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை என தெரிய வந்ததும், அதிருப்தி அடைந்தனர். மூன்று முறை எம்.எல்.ஏ., இரண்டு முறை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஜெயக்குமாருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. தென் மாவட்டங்களில் அ.தி.மு.க., தனது வெற்றியை கோலோச்சியுள்ளதால் முக்குலத்தோர் சமுதாயத்தினர் ஆறு பேருக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம், மின் துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன், வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக வைத்திலிங்கம், கூட்டுறவுத்துறை அமைச்சராக செல்லூர் ராஜு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஆர்.பி.உதயகுமார், சட்டத்துறை அமைச்சராக சுப்பையா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றிருந்தாலும், வட மாவட்டங்களிலும் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது. வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தென்சென்னை மாவட்டச் செயலர் செந்தமிழனுக்கு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி சி.வி.சண்முகத்திற்கும், சிறுதொழில்கள் துறை அமைச்சர் பதவி எம்.சி.சம்பத்திற்கும், உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி கே.பி.முனுசாமிக்கும், சமூக நலத்துறை அமைச்சர் பதவி, செல்வி ராமஜெயத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கருப்பசாமிக்கு கால்நடைத்துறை அமைச்சர் பதவியும், ஆதிதிராவிடர் சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி சுப்பிரமணியனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.யாதவர் சமுதாயத்தில் கோகுல இந்திராவுக்கு வணிக வரித்துறையும், முத்தரையர் சமுதாயத்தில் சிவபதிக்கு விளையாட்டுத் துறையும், உடையார் சமுதாயத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு உணவுத் துறையும், முதலியார் சமுதாயத்தில் டாக்டர் விஜய்க்கு சுகாதாரத்துறையும், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு மரியம் பிச்சைக்கு சுற்றுச்சூழல் துறையும், படுகர் சமுதாயத்தில் புத்திசந்திரனுக்கு சுற்றுலா துறையும், மீனவர் சமுதாயத்தில் ஜெயபாலுக்கு மீன்வளத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.

செட்டியார் சமுதாயத்தில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், சமீபத்தில் பிஎச்.டி., முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள வைகைச்செல்வன் ஆகியோர் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். பழ.கருப்பையாவுக்கு சபாநாயகர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அவர் பட்டிமன்றம், இலக்கியக் கூட்டங்களில் சிறப்பாக பேசுவார். ஆனால், சட்டசபைக்கு புதியவர் என்பதால் அவருக்கு அப்பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர்களும் முரண்பாடாக வெளியிடப்பட்டுள்ளது. அதாவது புதிய அமைச்சராக பதவி ஏற்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி பெயர், எட்டாவது இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த சி.வி.சண்முகம் பெயர் 10வது இடத்திலும், எம்.சி.சம்பத் பெயர் 19வது இடத்திலும், எஸ்.பி.சண்முகநாதன் பெயர் 15வது இடத்திலும் இடம் பெற்றிருந்தது.

சுகாதாரம், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய் துறை, உயர்கல்வித் துறை, போக்குவரத்து துறை புதியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் திறமையாக நிர்வாகப் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. மின் துறை தவிர, அனைத்து துறைகளுக்கும் பொறுப்பேற்றிருப்பவர்கள், துறை பற்றி இனிமேல் தான் தெரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம், ஓரிரு மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.