Daily Archives: மே 19th, 2011

கம்ப்யூட்டர் இயங்கிய நேரம்

சிலர் கம்ப்யூட்டரை எந்நேரமும் இயக்க நிலையிலேயே வைத்திருப்பார் கள். சற்று நேரம் தாங்கள் ஓய்வெடுக்க விரும்பினால், அதனை ஷட் டவுண் செய்திடாமல், ஹைபர்னேட் செய்து, பின்னர் மீண்டும் பணி செய்திட விரும்புகையில் இயக்க நிலைக்குக் கொண்டு வருவார்கள். பல இடங்களில் ஒரு கம்ப்யூட்டரை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்து வார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலை களில், கம்ப்யூட்டர் ஒன்று, அதனை பூட் செய்த பின்னர், எவ்வளவு நேரம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அறிய ஆவலாய் இருக்கலாம். இதற்கான வழியினை விண்டோஸ் சிஸ்டம் கொண்டுள்ளது.

விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத்தில், இதனைக் காண்பதற்கான வழி முறைகள்:
டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Task Manager என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது (Ctrl+Shift+Esc) என்ற கீகளை அழுத்தவும். இப்போது டாஸ்க் மானேஜர் விண்டோ கிடைக்கும். இதில் தரப்பட்டுள்ள டேப்களில் Performance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு பிரிவில், உங்கள் கம்ப்யூட்டர் பூட் செய்த பின்னர் எவ்வளவு நேரம் இயங்கியுள்ளது என்று காட்டப்படும்.
விண்டோஸ் எக்ஸ்பியில் (புரபஷனல் எடிஷனில் மட்டும்) ஸ்டார்ட், ரன் விண்டோ (Start>Run) செல்லவும். அதில் cmd என டைப் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இப்போது டாஸ் இயக்கக் கட்டளைப் புள்ளி (Command Prompt) கிடைக்கும். இங்கு systeminfo என டைப் செய்து என்டர் தட்டவும். கம்ப்யூட்டர் சில நிமிடங்கள் அல்லது விநாடிகள் எடுத்துக் கொண்டு, நேரத்தைக் கணித்துச் சொல்லும். இது நாள், மணி, நிமிடம் மற்றும் விநாடி என்ற அளவுகளில் காட்டப்படும்.

பெண்ணுக்குள் அதிசயம்

– ழகில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?

– தாம்பத்ய ஆசை யாருக்கு அதிகம்?

– பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?

– ஆண்கள் எந்த விஷயத்தில் கோட்டைவிடுகிறார்கள்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிஞ்சுக்கணுமா? உளவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில அடிப்படை உண்மைகள் இங்கே…

* பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறாமல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.

* ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.

* குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொல்லிவிட்டு மறந்துவிடுவார்கள்.

* ஆண்களுடைய சிந்தனை, செயல்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக்கும். சுயநலவாதிகள். ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.

* உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.

* ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வேண்டும். கூடுதலாக சந்தோஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வேண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழுதுபோக்கு, நல்ல சந்தோஷம்… இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைவார்கள்.

* பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசைகளையும் ஒளிவுமறைவாக வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்’. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார்கள். ஆசையையும் கொட்டித் தீர்த்துவிடுவார்கள்.

* பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள்.

– சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும்
விதிவிலக்கானவர்களாகவும் இருப்பார்கள்.

ஜப்பான் நாட்டில் மூன்றே நாளில் வீடு தயார்!-

அதிவேக வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டில், மார்ச், 11ம் தேதி மற்றும் ஏப்ரல், 7ம் தேதி என சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக, அணு உலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு, 140 ஆண்டுகளுக்குப் பின், இதுபோன்ற சோக நிகழ்வு மீண்டும் நிகழ்ந்துள்ளது. இன்னமும் அங்கு நிலைமை முழுமையாக சீராகவில்லை. இருப்பினும், அந்நாட்டு மக்கள் வீடிழந்து தவிப்பதை, அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கவில்லை. வீடுகளை இழந்தும், வீட்டை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றவர்களுக்கும் என, தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசு தயாராகி விட்டது.
அணு உலைகள் மூலம் மட்டுமே அங்கு மின் உற்பத்தி என்ற நிலையில், அதற்கும் பாதிப்பு வந்து விட்ட நிலையில், தற்போது பெரும்பாலோர் சூரிய மின்சக்தியை பெரிதும் பயன்படுத்த துவங்கி விட்டனர். அரசும் அதற்கு பெருமளவு உதவி வருகிறது. தற்போது, சுனாமி மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, புதிய வீடுகளை கட்டித் தரும் முனைப்பில் இருக்கும் ஜப்பான் அரசு, அவ்வீடுகளில் முழுக்க முழுக்க அனைத்து பயன்பாட்டிற்கும் சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்கு, “டிமோர் வீடுகள்’ என பெயரிடப் பட்டுள்ளது. நான்கு முதல், பத்து பேர் வரை வசிக்கும் அளவில், மூன்று மாடல்களில் வீடுகளை கட்டி வருகிறது. இதில், சமையல், படுக்கை, ஹால், குளியலறை ஆகிய பகுதிகளில் விளக்கெறியவும், வானொலி, “டிவி’ மற்றும் மின் சாதனப் பொருட்கள் அனைத்திற்கும் சூரிய சக்தி மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன. இதில், குறிப்பிட்ட அம்சம் என்னவென்றால், வெறும் இரண்டு நபர் இருந்தால் போதும், ஒரு வீட்டை கட்டி விட முடியும்.
அதற்கடுத்த சிறப்பம்சம் என்னவெனில், வெறும் மூன்று நாளில் ஒரு வீடு, குடியேற தயாராகி விடுகிறது. இவற்றின் மேற்கூரைகள், எளிதில் தீப்பிடிக்காத ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளால் வேயப்பட்டு, அதன் கீழ், மரத்தாலான பகுதி அமைக்கப்படுவதால், வீட்டுக்குள் வெப்பம் இருக்காது. சூரிய வெப்பத்தையே முழுக்க முழுக்கப் பயன்படுத்த இருப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை.
மேலும், இவ்வீடுகளை ஓரிடத்திலிருந்து பெயர்ந்து, வேறொரு இடத்தில் அமைக்க வேண்டுமானாலும், அதே வசதிகளுடன் மாற்ற முடியும் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம்.
ஜப்பான் நாடு சுனாமி, பூகம்பம், அணு உலை விபத்து என, அடுத்தடுத்து சோதனைகளை சந்தித்தும் கூட, சிறிதும் அசராமல், பாதிக்கப்பட்ட தன் மக்களுக்காக அதிவேகத்தில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது அந்நாட்டு அரசு. இவ்வீடுகள் அனைத்தும் பங்களா வீடுகளில் காணப்படும் அனைத்து நவீன வசதிகளை உள்ளடக்கி அமைக்கப்படுகிறது.
அதிலும், மிக விரைவாக, மூன்றே நாளில் அமைக்கப்படுவது தான், பல நாட்டின ரையும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு வியப்படைய செய்துள்ளது.

கார் நம்பர் வாங்க 180 கோடி ரூபாய்!

கத்தார் நாட்டைச் சேர்ந்த பெரும் தொழில் அதிபர் ஒருவர், தனக்கு பிடித்த கார் நம்பரை வாங்க, 180 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். இந்த நாட்டில் மிகவும் பிரபலமான, “55555′ என்ற கார் நம்பரை வாங்க, பலர் போட்டி போட்டனர். எனவே, அந்த நம்பர் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. குறைந்தபட்ச தொகை, ஐந்து கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. பல கோடீஸ்வரர்கள் போட்டி போட்டனர். கடைசியாக ஒருவர், 180 கோடி ரூபாய் கொடுத்து அந்த நம்பரை வாங்கினார். கடந்த, 2008ல், அரபு நாட்டைச் சேர்ந்த அப்துல் கபார் என்ற ஷேக், தன் காருக்கு, “1′ என்ற நம்பரை, 686 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார்; அந்த சாதனை, இன்னமும் முறியடிக்கப்படவில்லை.

புத்தியை பயன்படுத்தினால் எந்த எதிர்ப்பையும் சமாளிக்கலாம்

குருவே, எனக்கு எதுவுமே சரிப்பட மாட்டேன்கிறது என்று சொன்னவனை பார்த்தார் குரு. என்ன பிரச்னை?என்றார். எல்லாமே எனக்கு எதிராக இருக்கிறது. என்னால் சமாளிக்க சிரமமாக இருக்கிறது என்றான் வந்தவன்.
குரு சற்று சிந்தித்தார். அவனின் பிரச்னை அவருக்கு புரிந்ததது. அவனுக்கு ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு வேட்டைக்காரன் தன் நாயுடன் வேட்டைக்க போயிருந்தான். அங்கே நாய் திசை மாறி ஓடி விட்டது. வழி தப்பிய நாய் ஓர் இடத்தில் பதட்டமாய் நின்று கொண்டிருந்தது. நாய்க்கு பயம் அதிகரித்தது. அந்த சமயம் ஏதோ சலசலப்பு கேட்க. திரும்பி பார்த்த நாய்க்கு அதிர்ச்சி. அங்கே ஒரு சிறுத்தை. உடனே ஒரு நாய்க்கு ஒரு யோசனை தோன்றியது. அங்கே கிடந்த ஒரு எலும்பை நக்கிக்கொண்டே இன்னும் பசி தீரலையே, வேற எதை சாப்பிடறது? என்று சத்தமாக சொல்லிக்கொண்டே சுற்றுமுற்றும் பார்த்து. இதை கேட்ட சிறுத்தைக்கு பயம் எடுத்தது. அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. நாய் நிம்மதியானது.
ஆனால் அந்த நிம்மதி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த குரங்கு ஒன்றுக்கு கடுப்பு. சிறுத்தையை நாய் எளிதாய் சமாளித்து விட்டதே என்று தாவிப்போய் சிறுத்தையிடம் சொல்லிவிட்டது. சிறுத்தைக்கு கடுங்கோபம். நாயைத் தாக்க சீறிக்கொண்டு வந்தது. அதன் மேல் குரங்கு.
இரண்டு ஒன்று சேர வருவதை பார்த்ததுமே நாய்க்கு புரிந்து விட்டது. உடனே நன்றி குரங்கே. சிறுத்தையை ஏமாற்றி கூட்டி வந்ததற்கு நன்றி என்று சொன்னதும் சிறுத்தை மீண்டும் ஓட்டம் பிடித்தது.
குரு இந்த வேடிக்கை கதையை சொன்னதும் வந்தவனுக்கு எதிர்ப்புகளிடமிருந்து தப்பிப்பது எப்படி என்பது புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன  பொன்மொழி
புத்தியை பயன்படுத்தினால் எந்த எதிர்ப்பையும் சமாளிக்கலாம்

தன்மானத் தமிழன்!

தமிழகத் தேர்தல் முடிவு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது என்று நாம் முன்பே எதிர்பார்த்தோம் என்றாலும் இந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அதிமுகவுக்கு அளிப்பார்கள் என்பதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்துக்குக்கூட அருகதை இல்லாத அளவுக்கு திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு மக்கள் திமுக ஆட்சியின்மீது வெறுப்படைந்திருந்தனர் என்பது தெளிவாகிறது.இதை ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கூட்டணியின் அமோக வெற்றி என்று கூறுவதைவிட, திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக எழுந்த மக்களின் மௌனப் புரட்சி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக ஒரே மாதிரியான மனோபாவம் காணப்பட்டிருப்பது புதியதொன்றும் அல்ல. தமிழக மக்கள் கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலைத் தவிர, ஏனைய தேர்தல்களில் எல்லாம் ஏதாவது ஒரு கட்சிக்குப் பேராதரவு அளித்துத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்பதுதான் சரித்திர உண்மை.1967-லும், 1977-லும், 1996-லும் காணப்பட்ட எழுச்சியை இந்தத் தேர்தலிலும் காண முடிகிறது. பெருந்திரளாக மக்கள் வாக்குச்சாவடியை நோக்கிப் படையெடுத்ததை, ஆளும் கட்சியினர் தங்களது பணப் பட்டுவாடாவின் விளைவு என்று தப்புக்கணக்குப் போட்டனர் என்றால், பல தேசியத் தொலைக்காட்சி சேனல்களின் கருத்துக் கணிப்புகளும்கூட அல்லவா, எதார்த்த நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்குக் கட்டியம் கூறின? குழப்பம் ஆட்சியாளர்களிடமும், ஊடகங்களிடமும் இருந்ததே தவிர, மக்களிடம் இருக்கவில்லை.மின் வெட்டு, விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பிரச்னைகள் திமுக ஆட்சியினர்மீது மக்களுக்குப் பரவலான அதிருப்தி ஏற்படுவதற்குக் காரணிகள் என்றாலும், திமுகவைத் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட ஓட விரட்டியது என்னவோ “குடும்ப ஆட்சி’ என்கிற அருவருப்பான விஷயம்தான். ஜெயலலிதா தலைமையில் அமைய இருக்கும் அதிமுக ஆட்சியில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாவிட்டாலும் நிச்சயமாகத் தலையீடு தவிர்க்க முடியாதது என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். அது நன்றாகத் தெரிந்திருந்தும் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?கருணாநிதியின் தலைமையிலான திமுக ஆட்சியில், அவரது மனைவி மட்டுமோ அல்லது அவரால் வாரிசு என்று அடையாளம் காட்டப்பட்ட துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் குடும்பம் மட்டுமோ ஆதிக்கம் செலுத்தி இருந்தால்கூட மக்கள் இந்த அளவுக்குக் கோபமும் வெறுப்பும் அடைந்திருக்க மாட்டார்கள். கருணாநிதியின் குடும்பம் என்கிற பெயரில், மனைவி, துணைவி, மக்கள், பேரக் குழந்தைகள் என்று ஒரு டஜன் குடும்பங்களின் ஆதிக்கமல்லவா நடந்தது?அதைக்கூடப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். மாவட்டத்துக்கு மாவட்டம், தொகுதிக்குத் தொகுதி, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு என்று அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள், வட்டச் செயலர்கள் என்று பல நூறு குடும்பங்கள் செலுத்திய ஆதிக்கமும், அரங்கேற்றிய அட்டகாசங்களும் கொஞ்சமா நஞ்சமா? அத்தனை அடாவடிப் பேர்வழிகளுக்கும் வாக்குச் சீட்டின் மூலம் தக்க பாடம் புகட்டி இருக்கிறாôர்கள்.தமிழனை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. தமிழன் இந்தியாவையும், மக்களாட்சியையும் காப்பாற்றி இருக்கிறான். அதற்காக அவனுக்குத் தலைவணங்க வேண்டும் போலிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில், நாங்கள் முறையாகப் பணம் விநியோகம் செய்திருப்பதால் வெற்றிபெற்று விடுவோம் என்றும், எங்களது இலவசத் திட்டங்கள் சென்றடையாத வீடுகளே இல்லை அதனால் வெற்றி பெற்று விடுவோம் என்றும் எத்தனை திமிராகத் திமுகவினர் பேசினார்கள்.யோசித்துப் பாருங்கள். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், திருமங்கலம் ஃபார்முலா, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் அந்தந்த ஆளும் கட்சியினராலோ, எதிர்க்கட்சியினராலோ, அரங்கேற்றப்பட்டிருக்காதா? மக்களின் நியாயமான உணர்வுகள் தேர்தலில் பிரதிபலிக்காமல் போனால், வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் அவலம் இந்தியா முழுவதும் அரங்கேறினால், அதன் தொடர்விளைவு அராஜகத்திலும், தீவிரவாதத்திலும் அல்லவா முடிந்திருக்கும்? இந்தியா தமிழனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறதா, இல்லையா?முன்னாள் அமைச்சர் ஒருவரின் தொகுதியில் ஏறத்தாழ 10,000 வாக்காளர்களுக்கு, அதுவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை வாக்காளர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு மாவட்டத் தலைநகரிலுள்ள ஷோரூமிலிருந்து டிவிஎஸ் 50 இலவசமாக எடுத்துச் செல்லும்படி பணித்தார்கள். எட்டே எட்டுபேர் மட்டும்தான், டிவிஎஸ் 50 எடுத்துச் சென்றார்கள். ஏனையோர் அந்த டோக்கனைக் கிழித்துப் போட்டுவிட்டு வாக்களித்திருக்கிறார்கள். பல இடங்களில் நரிக்குறவர்களின் காலனியில் பண விநியோகம் செய்தவர்களை விரட்டி அடித்திருக்கிறார்கள்.பட்டணத்தில் படித்தவர்கள் காரில் வந்து இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வெட்கமில்லாமல் கேட்டுச் செல்லும்போது, பல கிராமத்து ஏழைத் தமிழர்கள் தங்களை விலைபேச வந்தவர்களை விரட்டி அடித்திருப்பதைப் பற்றிக் கேள்விப்படும்போது மேனி சிலிர்க்கிறது. இனிமேல், அரசியல்வாதிகள் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முயற்சிக்க மாட்டார்கள். பண விநியோகத்தால் மட்டுமே வெற்றி உறுதி செய்யப்படாது என்பதால், தங்கள் கைப்பணத்தை விரயமாக்கத் தயாராக மாட்டார்கள்.பணத்துக்கு ஆசைப்பட்டும், இலவசங்களில் மயங்கியும் தனது வாக்குகளை விலைபேசத் தயாராக இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தி விட்டிருக்கிறான் தன்மானத் தமிழன். ஆட்சியாளர்கள் என்னதான் இலவசங்களை அள்ளிக் கொடுத்தாலும், அடிப்படை நிர்வாகம் இல்லாமல் போனால், மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்னைகளைத் தீர்க்காமல் போனால், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தாவிட்டால், அந்த ஆட்சியைத் தூக்கி எறியத் தயங்க மாட்டோம் என்பதை அழுத்தம்திருத்தமாகத் தெளிவாக்கி இருக்கிறார்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள். என்னவொரு அரசியல் முதிர்ச்சி, பெருமிதமாக இருக்கிறது!ஈரோட்டில் முத்துசாமி, முதுகுளத்தூரில் சத்தியமூர்த்தி, கிணத்துக் கடவில் மு. கண்ணப்பன், ஆர்.கே. நகரில் சேகர்பாபு என்று கடைசி நேரத்தில் கட்சி மாறிய அத்தனை சந்தர்ப்பவாதிகளும் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள். ஜாதிக் கட்சிகளான பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்று சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்தவை மண்ணைக் கவ்வி இருக்கின்றன. காங்கிரûஸப் பற்றி சொல்லவே வேண்டாம். வாக்காளர்களிடம்தான் என்னவொரு தெளிவு…கடந்த மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் ஒரு மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பூத் வாரியான வாக்குகளைப் பதிவு செய்து காட்டுகின்ற படிவம் 20-ல் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனுக்குக் கிடைத்த வாக்குகளைக் காங்கிரஸ் வேட்பாளரான மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துக்கும், அவரது வாக்குகளை ராஜகண்ணப்பனுக்கும் மாற்றி எழுதி, காங்கிரஸ் வேட்பாளர் ப. சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் ஜெயலலிதா. யார் கண்டது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக அணியின் முழு வெற்றியே இப்படி ஒரு தில்லுமுல்லால் பெறப்பட்டதுதானோ என்னவோ? சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அப்படி ஓர் ஐயத்தை எழுப்புகிறதே…தேர்தல் முடிவுகள் திமுகவுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் தரப்பட்டிருக்கும் தண்டனை என்றால், திறமையான அதேநேரத்தில் நேர்மையான நிர்வாகம், மக்களின் உணர்வுகளையும், பிரச்னைகளையும் பிரதிபலிக்கும் ஆட்சி, கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய குடும்ப ஆதிக்கமும், தலையீடும் இவையெல்லாம் இல்லாமல், கேவலம், பணத்தையும், இலவசங்களையும் காட்டி இனிமேலும் யாரும் எங்களை ஏமாற்ற முடியாது என்பது அதிமுகவுக்கும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கும் செல்வி. ஜெயலலிதாவுக்கும் அவர்கள் உணர்த்தும் பாடம்.””தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா!” என்கிற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களை’ பெருமிதத்துடன் தலைவணங்கிப் பாராட்டுகிறோம்.

நன்றி-தினமணி

காற்றும் ஒரு வலி நிவாரணிதான்! – வலி நீக்கும் ஓஸோன் ஊசி

வலி என்பது நோயல்ல; நோய்க்கான அறிகுறிகளுள் ஒன்று. நோயின் வருகையை அறிவிக்கும் அலாரம்தான் வலி. நாம் வலியை உடனடியாக நிறுத்தித் தப்பித்துக் கொள்கிறோம் தற்காலிகமாய். ஆனால், வலிக்கான அடிப்படை அப்படியே மறைந்து பதுங்கித்தான் இருக்கும். அந்த ஆணிவேரை அகற்றுவதுதான் அவசியமான சிகிச்சை.
வலியையும் நிறுத்தி, காரணத்தையும் கண்டறிந்து அகற்று இப்போது வந்திருக்கும் புதிய வழிமுறைதான் ஓஸோன் ஊசி. ஓஸோன் என்றால் பரிசுத்தமான ஆக்ஸிஜன்தான். காற்று மருந்தாகும் அந்த மகத்துவம் பற்றி, டாக்டர் பிரபு திலக்கிடம் கேட்டபோது…

மருந்து, மாத்திரை, ஆயின்மென்ட், அறுவைச் சிகிச்சை இல்லாமல் வலி எப்படிச் சரியாகும்?
“இது ஒன்றும் மாயமந்திரம் கிடையாது. எங்களது வலி நிர்வாகத் துறை, வலி எதனால் வருகிறது? என்ன சிகிச்சை தர வேண்டும்? நோய் எப்பொழுது முழுமையாகக் குணமடையும் என்பதை முதலில் அதிக செலவு, அலைச்சல்படுத்தாமல் கண்டுபிடித்த விடுவார்கள்.
இது ஏற்கெனவே புழக்கத்தில் இருந்து வரும் அல்ஜியாட்ரி என்னும் ஒருவித அலோபதி மருத்துவம்தான். இதனால் சுலபமாக வலி குறைகிறது.’

ஓஸோன் ஊசி என்றால் என்ன?
“விசேஷக் கருவி மூலமாக ஆக்ஸிஜனை ஓஸோனாக மாற்றி, அதனை ஊசி வழியே செலுத்தவதுதான் இந்தச் சிகிச்சை முறை. இதுபற்றியான ஃபெல்லோஷிப் சிறப்புப் படிப்பை தில்லி பெயின் மானேஸ்மெண்ட் சென்டரில் படித்து முடித்தேன். எனக்கு ஜி.பி. துரோஜா என்ற துறையின் பிரபல மருத்துவர் பயிற்சி கொடுத்தார்.’

ஓஸோன் ஊசி எப்படி வேலை செய்கிறது?
“மிக அதிகமாக வலியால் பாதிக்கப்பட்ட அந்தந்தப் பகுதிகளுக்கு, பிரச்னைகளுக்குத் தகுந்த மாதிரி தன் செயல்பாட்டை மாற்றிக் கொள்ளும் சிறப்பம்சம் வாய்ந்தது இந்த ஓஸோன் ஊசி. தண்டுவடப் பிரச்னை என்றால் (ஸ்லிப் ஸ்டிக்) இதில் பிதுங்கி இருக்கும் சவ்வைச் சுருங்க வைக்கும். இதே ஊசி மூட்டுவலிப் பிரச்னையில் தேய்ந்த சவ்வை வளர வைக்கிறது. ட்ரை ஜெமினல் நியூரானியா என்ற முகவலி ஏற்படும் பொழுது மின்னலடித்த மாதிரி கடுமையாக வலிக்கும். இதை ரேடியோ பிரிக்கொண்ஸி ஆபரேஷன் மூலமாகக் குணப்படுத்துகிறது.’

பக்கவிளைவுகள் ஏற்படுமா?
“கொஞ்சமும் ஏற்படாது. வியாதியின் காரணம், தாக்கம் புரியாமலும், சில சமயம் அதிக வீரியமான மாத்திரைகளைச் சாப்பிடுவதாலும் சிறுநீரகப் பாதிப்புகள் போன்ற அபாயகரமான பக்கவிளைவுகள் வரை ஏற்படும். அத்துடன் மாத்திரைகளால் நமக்குக் கிடைப்பது தற்காலிக நிவாரணம்தான்.
ஆனால் ஓஸோன் ஊசி மூலம் நம் உடலில் செலுத்தப்படுவது சுத்தமான காற்று. வலி ஏற்படுவதற்கான பிரச்னையைச் சரி செய்யும். அறுவைச் சிகிச்சையை அவசியம் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்துகிறது. பெரும் அளவிலான செலவு ஏதும் கிடையாது.’

என்ன செலவாகும்?
“வெறும் ஆறாயிரம் ரூபாய் மட்டும் தான்.
அதிகமான கை கால் குடைச்சல், மாத விடாய் மற்றும் மெனோபாஸ் கால வலிகள் ஆகியவற்றையும் ஓஸோன் ஊசி குணப்படுத்திவிடும். நோயாளியை வலியிலிருந்தும் அதன் ஆதார நோயிலிருந்தும் முற்றிலும் விடுபட வைக்கிறோம். மனிதர்களை தற்கொலைக்குக் கூட அழைத்துச் செல்லும் கடுமையான வலிகளைக் குறைத்து ஒரு கட்டத்தில் அது இல்லாமலேயே போக ஓஸோன் ஊசி சிகிச்சை வரம் தருகிறது என்றே சொல்லலாம்.’

நன்றி- கல்கி

பயணிகளின் கனிவான கவனத்திற்கு

விடுமுறை விட்டாச்சு. டூர், பிக்னிக் என்று ஊர், உறவு, வீடு, நண்பர் வீடு என நகர்ந்து விட வேண்டியதுதான். புறப்படுவதற்குமுன், என்ன செய்யணும். எதை தூக்கணும், யாருகிட்ட சொல்லணும் என்று ஒரு ரவுண்டு போவோமா!
பயணச்சீட்டின் ஜெராக்ஸை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் கை கொடுக்கும். பயணத்தில் “மூத்த குடிமக்கள்’ இருந்தால், அவர்களின் வயது சான்றிதழை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும்.
நீண்ட நாள் டூர் என்றால், நகைகள், பத்திரங்கள், பணம் போன்றவற்றை வங்கி லாக்கரில் வைத்து விட வேண்டும். குறைந்த நாள் போனமா வந்தமா டைப் டூர் என்றால் தினப்படி வந்து செல்லும் பால்/ பேப்பர்க்காரர்கள், வீட்டு பணி செய்பவர்களுக்கு கூட தெரிவிக்காமல், அக்கம் பக்கத்து ஒரு வீட்டில் பார்த்துக்க சொல்லிவிட்டு, சுருக்க போய் உடனே வந்துவிடலாம்.

நகை, வாட்ச், உடை, காலணி…
வீட்டில் இருக்கும் நகை எல்லாவற்றையும் போட்டு கொண்டு “வா திருடா, திருட வா’ன்று நாமே இன்விடேலின் கொடுக்க கூடாது.
மிக மெல்லிய, சிறிய,குறைந்த நகைகள் அணியலாம். பிளாட்டினம், பிளாஸ்டிக் ஐயிட்டங்கள் ஸ்மார்ட்டாய் காட்டும். ஒரு நாளிலேயே பல அணிகளை அணிய முடியும். விலை உயர்ந்த வாட்ச்கள் வேண்டாம்; வாட்ச்சே வேண்டாம். “செல்’லில்தான் டையம் இருக்கே. குட்டீஸ் கையில் பொம்மை வாட்ச்களை பார்த்து கொள்ளலாம். எவ்வளவுக்கெவ்வளவு விலையுயர்ந்த பொருட்கள் இல்லாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு டூரை மகிழ்ச்சியால் அனுபவிக்கலாம். அதிக எடையில்லாத, காட்டன் உடைகளை எடுத்து செல்லலாம்.
பெண் குழந்தைகள் என்ன வயது என்றாலும் உடலின் பெரும்பகுதி துணியால் மூடப்பட்டு இருக்கட்டும். மிடி, பிராக், எல்லாம் போடும்போது முட்டி வரை கூட உள்ளாடை போடலாம். வீணாய் தீயவர்களை தூண்ட வேண்டாமே.காலணிகளை லகுவானதாய் இருக்கட்டும். முக்கியமாய் ஆளுக்கொரு “செல்’ கண்டிப்பாய் இருக்கணும். அவரவர் அதை பொறுப்பாக வைத்து கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டு நண்பரிடம் வீட்டின் வெளிசாவியின் டூப்ளிகேட்டையும், குடும்பத்தாரின் செல்போன் நம்பர்களையும் கொடுத்து வையுங்கள்.
வீட்டு கதவை பூட்டும் முன் காஸ் சிலிண்டரையும் எல்லா சுவிட்ச்சுகளையும் ஆப் செய்திருக்கிறீர்களா… கதவுகளை சரியாக தாழிட்டிருக்கிறீர்களா… என்பதை சரி பாருங்கள். ஒருவருக்கு இருவராய் செக் செய்தா, சந்தேகம் தோன்றாது. வெளிப்புறமாக சில ஜோடி செருப்புகளையும், காய வைத்த நிலையில் சில துணிகளையும் விட்டு வைப்பது நல்லது.
ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற பிரச்னை இருப்பவர்கள் டாக்டரை சந்தித்து உங்கள் பயண விவரங்களை சொல்லி அவரின் ஆலோசனையும் அவருடைய செல்போன் எண்ணையும் வாங்கி கொள்ளுங்கள். எல்லா மருந்துகளும் எல்லா ஊரிலும் கிடைக்காது என்பதால், மருந்துகளையும் டோசேஜ் விவரங்களையும் எடுத்து செல்ல மறக்காதீர்கள்.

முதலுதவி விஷயங்கள்:
தைலம், குளூக்கோஸ் எடுத்து செல்ல வேண்டும். வலி நிவாரணம் களிப்பு, பஞ்சு, பேண்ட் எய்டு முதலியவற்றையும் உங்கள் பேக்கில் கட்டாயம் இருக்க வேண்டும்.

மற்ற பொருட்கள்!
எண்ணெய், பற்பசை, டூத் பிரஷ், சோப், பவுடர், ஷாம்பு, கொசுவர்த்தி, டார்ச் லைட், கத்திரிக்கோல், சிறிய கத்தி, கோப்பை, “செல்’ சார்ஜர் ஆகியவற்றையும் எடுத்து செல்ல மறக்க வேண்டாம்.
சோப் எடுத்து செல்ல வேண்டாம். கொழகொழப்பாய் இருக்கும். அதற்கு பதில் லிக்விட் சோப் எடுத்து செல்லலாம். அனைவரும் பயன்படுத்தலாம்.

பரிசு!
தங்கப் போகிற உறவினர் வீடுகளுக்கு பயனுள்ள பரிசுகளுடன் செல்லுங்கள். குழந்தைகள் இருந்தால் அந்த வீட்டிற்கு போகும்போது விளையாட்டு பொருட்கள்… வேலைக்கு செல்கிறவர்களுக்கு, அவர்கள் தயாரிக்க நேரமில்லாமல் சிரமப்படும் தோசை மிளகாய் பொடி, வத்தல், வடகம்… வயதானவர்களுக்கு பூஜையறை பொருட்கள், சுவாமி படங்கள் என்று கொடுத்து அன்பை தெரிவியுங்கள்.

முகவரி!
போகும் இடத்து உறவினரின் முகவரியை தெளிவாய் எழுதி பாத்திரமா வைத்துக் கொள்ளுங்கள். பஸ், டாக்ஸி, ஆட்டோ, நடை எப்படி வர வேண்டும் என, கேட்டு கொள்ளுங்கள். அவர்களிடையே ஆட்டோ அல்லது சொந்த வண்டி எடுத்து வந்து பிக்-அப் செய்ய சொல்வது மிகவும் சிறப்பான வழியாகும்.

உணவு!
உணவு விஷயத்தில் இவனுக்கு இந்த காய் பிடிக்காது. அவளுக்கு இந்த பானம் பிடிக்காது என்றெல்லாம் அடம் பிடிக்காமல் அட்ஜஸ்ட் செய்து போங்கள். உங்கள் உணவு முறையே இதுவரை பழகி இருப்பீர்கள். மாறுதலுக்கு பாதி நாட்கள் அவர்கள் உணவு முறையை ஏற்று உண்ணுங்கள். அதேபோல உங்கள் உணவு முறையை பாதி நாட்கள் கடைபிடியுங்கள். இரு குடும்பத்திற்கும் இன்ப மாறுதாய் இருக்கும். அதோடு சமையல் வேலைகளில் பங்கு கொள்ளுங்கள். விரைவாய் சமையல் வேலை முடியும். ஆண்கள், காய்கறிகள் பர்சேஸ் செய்யலாம். ஒருநாள் மாறுதலாய் ஓட்டலில் சாப்பிடலாம். நீங்கள் போன ஊரின் சிறப்பு உணவு பொருட்களை ருசித்து மகிழுங்கள்.

பணிபார்வை!
அவர்கள் வீட்டில் வேலைக்கு ஆள் இருந்தால், அதை உங்களின் ஏகபோக உரிமையாக கருதி, உங்கள் வேலைகளை ஏவாதீர்கள். உங்கள் வரவு யாருக்கும் தொந்தரவாய் இருக்க கூடாது.

டிவி!
ஊருக்கு போய் இந்த பெட்டி முன் டேரா போட்டு விடாதீர்கள். எல்லாரும் பார்க்க வேண்டிய இடங்களை பார்த்து விட்டு, வீட்டில் இரவு வேளையில் ரிலாக்ஸாக இருக்கும்போது குழு விளையாட்டு விளையாடலாம்.

வாங்கி வாருங்கள்!
காய்கறி, பேப்பர், பால், வாட்டர் கேன், இப்படி அத்தியாவசிய பொருட்கள், குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என நிறைய வாங்கி தாருங்கள்.

மறக்காதீங்க!
நாம டூர் அடிக்கும்போது நம்ம வீட்டை பார்த்து கொள்கிற வேலையை செய்யும் நண்பர் வீட்டுக்கும் கண்டிப்பாய் பரிசு பொருட்கள் வாங்க வேண்டும்.

கேமரா!
கண்டிப்பாய் இது வேண்டும். ஒவ்வொரு கணமாய் பதிவு செய்யுங்கள். ஊருக்கு போனபின் பிரிண்ட் போட்டு, ஆல்பமாக்கி உங்கள் உறவினருக்கு அனுப்புங்கள்.

கடிதம்!
என்னதான் வாயாற நன்றி சொல்லி, பெரியவர்களை நமஸ்கரித்து விடை பெற்றிருந்தாலும், விருந்துண்ட வீடுகளுக்கு எழுத்து மூலம் ஒரு நன்றி கடிதம் அனுப்புங்கள். அதில் அவர்களை அவசியம் உங்கள் வீட்டுக்கு வருமாறு அழையுங்கள்.

கோவில்!
நீங்கள் செல்லும் கோவில்களின் வழிபாட்டு முறைகளை தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக, கேரளா கோவில்களில் ஆண்கள் வேட்டியும், பெண்கள் புடவையும் அணிய வேண்டும் என்பது கட்டாயம். சுடிதாரோ, பேண்ட்டோ அணிந்து சென்றால் அனுமதி கிடையாது. அதோடு, வழிபாட்டு நேரம் சிறப்பு வழிபாட்டு தினங்கள் பற்றியும் அறிந்து போக வேண்டும். தரகர்களிடம் மாட்டி கொள்ளாதீர்கள்.

வலை!
சுற்றுலாவிற்கென அரசாங்கம் முதல் தனியார் வரை ஏகப்பட்ட வெப்சைட் உண்டு. சிறப்பான சைட்களை விசிட் அடித்து, ஒரு அழகான பிளானை போட்டு போகலாம். இன்டர்நெட்டின் மூலம் எல்லா விவரமும், உதவியும், ஆலோசனையும் பெறலாம்.

போர்டு!
தீயில் கை வைக்காதே; ரெயிலில் ஓரமாக நிற்காதே எங்களோடே இரு, தூரப்போகாதே; இப்படிப்பட்ட வாசகங்கள் டூரின்போது நிச்சயமாய் பெற்றோர்களால் சொல்லப்படும். வாண்டுகளோ சொன்னபடி நடக்காமல் வாலை அவிழ்க்கும். எச்சரிக்கை, ஆபத்து போன்ற போர்டு உள்ள இடத்தில் குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம். என்ன தவறு செய்தாலும் குட்டீஸை அடிப்பது பப்ளிக்காக திட்டுவது என அநாகரிகம் வேண்டாம். தனியே, மிக இனிமையாக நிலைமையை விளக்கவும்.

பணம்!
பயணத்துக்கு தேவையான பணத்தை மொத்தமாக எடுத்து செல்லாமல், டிராவல் செக் ஆகவோ பண அட்டையாகவோ வைத்து கொள்ளவும். 1000 ரூபாய்க்கு 100,50,20,10 மற்றும் சில்லறை காசுகளையும் வைத்து கொள்ளவும். அவசர தேவைகளுக்கும், சிறிய தேவைகளுக்கும் இவை உதவும்.

சில முக்கிய ஆலோசனைகள்!
உங்கள் பயணம் பற்றிய தெளிவான குறிப்பை, நம்பிக்கையான அண்டை வீட்டாரிடம் சொல்லி விட்டு செல்லவும். கோபம், குற்றம் கண்டுப்பிடித்தல், மட்டம் தட்டுதல், மனதை நோகடித்தல் போன்ற குணங்களை தவிர்த்து அனைவரிடமும் இனிமையாக பேசி பயணத்தை மகிழ்ச்சியாக்கி கொள்ளுங்கள்.உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அரை வயிறு நிரப்பினாலே போதும். செல்லும் இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப எளிய உடைகளை எடுத்து செல்லவும். நிறைய நகைகள் வேண்டாம். புதிய மனிதர்களிடம் மிக கவனமாய் பழகவும். புதியவர் கொடுக்கும் திண்பண்டத்தை குழந்தைகளை உண்ண வேண்டாம் என அறிவுறுத்துங்கள்.
காசு இல்லை என்று சொல்லாமல், குழந்தைகளை மிக சந்தோஷமாய் வைத்துக் கொள்ளுங்கள். டூரின் சந்தோஷத்தில் அவர்கள் 10 மாதங்கள் சந்தோஷமாக கல்வி கற்க வேண்டும். ஓகே!

சி.கிளீனர் – முக்கிய குறிப்புகள்

கம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்த நமக்கு உதவிடும் ஒரு நல்ல, இலவச புரோகிராம் “சி கிளீனர்’ ஆகும். அதனை முழுமையாகப் பயன்படுத்த சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.
கம்ப்யூட்டரில் குவியும் தேவையற்ற பைல்களை நீக்கும் பணியினை மேற்கொள்ள பல புரோகிராம்கள் நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன. இருப்பினும், மற்றவற்றிற்கும் “சி கிளீனர்’ புரோகிராமின் செயல்பாட்டிற்கும் பலத்த வேறுபாடுகள் உள்ளன.
“சி கிளீனர்’ பயன்படுத்த மிக எளிதான ஒன்றாகும். அது மட்டுமின்றி அதிக வேகத்தில் தன் செயல்பாட்டினை மேற்கொண்டு கம்ப்யூட்டரையும் கூடுதல் வேகத்தில் இயங்க வைக்கும். இணையத்தைப் பயன்படுத்துகையில் நம் கம்ப்யூட்டரை வந்தடையும் பல தற்காலிக பைல்களை நீக்குவது, ரெஜிஸ்ட்ரியில் உருவாக்கப்படும் தேவை யற்ற வரிகளை அழிப்பது, தற்காலிக இணையக் கோப்புகளை முற்றிலுமாக எடுப்பது மற்றும் அண்மையில் பயன்படுத்தப்பட்ட கோப்புகளின் பட்டியலை அழிப்பது போன்ற பல செயற்பாடுகளை மேற்கொண்டு,
“சி கிளீனர்’ கம்ப்யூட்டரை கூடுதல் வேகத்தில் இயங்க வைக்கிறது. இதனை இயக்குவது எளிதாக உள்ளது என்பதற்காக, அலட்சியமாக இதனைக் கையாள்வது சில வேளைகளில் ஆபத்தில் கொண்டு விட்டுவிடும். அப்படிப்பட்ட ஆபத்துக்களைத் தவிர்க்கவே இந்த குறிப்புகள் தரப்படுகின்றன.

1. ஆய்வு செய்திடவும் (Analyze): “சி கிளீனர்’ பயன்படுத்தும் அனைவரும், சிகிளீனரை இயக்கினால், எந்த எந்த பைல்களை அது நீக்கும் என ஆய்வு செய்வதில்லை. இதற்கெனத் தந்திருக்கும் பட்டனைப் பயன்படுத்துவதே இல்லை. இந்த பட்டனை அழுத்தினால், இது குறித்து நமக்கு ஓர் அறிக்கை கிடைக்கும். இதனைப் படித்துப் பார்த்த பின்னர், நாம் கிளீன் செய்வதற்கான (Run Cleaner) பட்டனை அழுத்தலாம். இதன் மூலம் அழிக்கக் கூடாதது எதுவும் அழிக்கப்படாது என்ற நம்பிக்கையை நாம் பெறலாம். அனலைசர் இயங்கிய பின்னர் கிடைக்கும் பட்டியல் மூலம், அப்ளிகேஷன் புரோகிராம் சார்ந்து எவை அழிக்கப்படுகின்றன என்ற தகவல் கிடைக்கும். இவற்றைப் பார்த்த பின்னர், எதனையாவது நாம் தக்க வைக்க வேண்டும் என எண்ணினால், அதற்கான விலக்கும் கட்டத்தில் டிக் அடையாளத்தை நீக்கி செட் செய்திடலாம்.

2.தேவைப்படும் குக்கிகளை வைத்துக் கொள்ள: “சி கிளீனர்’ இயக்கப்படுகை யில் அனைத்து குக்கிகளும் அழிக்கப்படும். குக்கிகள் பல, நமக்கு இணையப் பயன்பாட்டினை விரைவாகத் தருவதற்கு அமைக்கப்படுவதால், நாம் சிலவற்றை அப்படியே விட்டுவிட விரும்புவோம். “சி கிளீனர்’, மாறா நிலையில் கூகுள் மற்றும் யாஹூ தளங்கள் ஏற்படுத்தும் குக்கிகளைத் தொடுவதில்லை. மற்ற சிலவற்றையும் தக்கவைக்க விரும்பினால், Options டேப்பில் கிளிக் செய்து, Cookies பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் விண்டோவின் மூலம், நாம் வைத்துக் கொள்ள விரும்பும் குக்கிகளை “சி கிளீனர்’ இயக்கத்திலிருந்து விலக்கி வைக்கலாம். இதன் மூலம் முக்கிய, பயனுள்ள குக்கிகளை “சி கிளீனர்’ இயக்கத்திலிருந்து விலக்கி வைத்துக் காப்பாற்றிப் பயன்படுத்தலாம்.

3.ரெஜிஸ்ட்ரி பேக் அப் செய்க: “சி கிளீனர்’ எவ்வளவுதான் திறமையுடன் செயல் பட்டாலும், ரெஜிஸ்ட்ரியில் தேவையற்ற வரிகளை நீக்கினாலும், “சி கிளீனரை’ இயக்கும் முன்னர், ரெஜிஸ்ட்ரியை பேக் அப் செய்து கொள்வது நல்லது. ரெஜிஸ்ட்ரியை கிளீன் செய்திட முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும், அதனை பேக் அப் செய்து வைக்க
“சி கிளீனர்’ நம்மை நினைவு படுத்தும். ஏதேனும் ஒரு ரெஜிஸ்ட்ரி கீக்கான வரிகளை, “சி கிளீனர்’ நீக்கிவிட்டால், விளைவுகள் கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடக்கும் அளவிற்குச் செல்லலாம். எனவே ரெஜிஸ்ட்ரியை பேக் அப் செய்வது நல்லது. “சி கிளீனர்’ தொகுப்பின் மூலமாகவே, ரெஜிஸ்ட்ரியை இரண்டு கிளிக் மூலம் பேக் அப் செய்து கொள்ளும் வசதி தரப்படுகிறது.

4.ஸ்டார்ட் அப் கிளினீங்: “சி கிளீனர்’ ஒரு போனஸ் பயன்பாட்டினையும் கொண்டுள்ளது. ஸ்டார்ட் அப் தொகுப்பில் உள்ள புரோகிராம்களை இயக்கவும், முடக்கவும் அல்லது நீக்கவும் எளிமையான வழிகளைத் தருகிறது. வழக்கமான விண்டோஸ் தரும் வழியைக் காட்டிலும் இது எளிமையானதும் வேகமானதும் ஆகும். Tools டேப் சென்று Startup பட்டன் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம். புரோகிராமின் முன் உள்ள enabled/disabled பிரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் தற்காலிகமே. எப்போது வேண்டுமானலும், நிறுத்தி வைத்துள்ள புரோகிராம்களை ஸ்டார்ட் அப்பில் இயங்கும் வகையில் அமைக்கலாம்.

5. பதிந்ததை நீக்குதல் (uninstaller): “சி கிளீனர்’ தரும் மிக முக்கிய செயல்பாடு, கம்ப்யூட்டரில் பதிந்துள்ள புரோகிராம் களை நீக்குவதே. வழக்கமாக, கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள புரோகிராம்களை நீக்க, நாம் விண்டோஸ் தரும் Windows Add/Remove Programs டூலினைப் பயன்படுத்துவோம்.
“சி கிளீனர்’ அதனைக்காட்டிலும் முழுமையாகவும், வேகமாகவும் புரோகிராம்களை நீக்குகிறது. புரோகிராம்களை நீக்கிய பின்னர், ரெஜிஸ்ட்ரி கிளீனிங் ஒருமுறை மேற்கொண்டால், புரோகிராம்களை நீக்கும் வேலை முழுமையாக மேற்கொள்ளப்படும்.
தற்காலிக பைல்களை நீக்குவதற்கும், ரெஜிஸ்ட்ரியைக் கிளீன் செய்வதற்கு மட்டுமே சிகிளீனர் என்று பலர் எண்ணிக் கொண்டுள்ளனர். அதற்கும் மேலாக, “சி கிளீனர்’ தரும் சில வசதிகளையும், நாம் மேற்கொள்ள வேண்டிய சில செட்டிங்ஸ் முறைகளையும் மேலே பார்த்தோம். கூடுதல் பயன்பாட்டினைப் பெறுவது இனி உங்கள் சாமர்த்தியம்.
CLICK HERE FOR DOWNLOAD CCLEANER

தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா?

மனிதர்களுக்கு ஆசார, அனுஷ்டானம் போன்ற கட்டு திட்டங்களை ¬முன்னோரும், மகரிஷிகளும் ஏற்படுத்தியுள்ளனர்; அதன்படி நடப்பது நல்லது என்றனர். இதில், சந்தியா வந்தனம் செய்வதும் ஒன்று. சந்தியா வந்தனம் செய்ய வேண்டிய நேரங்களும் சொல்லப்பட்டுள்ளது.
“காணாமல், கோணாமல், கண்டு கொடு!’ என்பது வாக்கியம். அதாவது, சூரியன் கண்ணுக்குத் தெரியாத போது, சூரிய உதயத்துக்கு ¬முன் அர்க்யம் கொடு; இது, காணாமல் கொடு என்பதை குறிக்கும். கோணாமல் என்பது, சூரியன் தலைக்கு நேராக உள்ள உச்சி காலத்தில், அர்க்யம் கொடு என்பது.
அடுத்து, கண்டு கொடு என்பது, சூரியன் மறைவதற்கு ¬முன், மாலை வேளையில் அர்க்யம் கொடுக்க வேண்டும். இதை சிரத்தையுடன் செய்து வந்தால், ஆரோக்கியம், புண்ணியம் எல்லாம் கிடைக்கும்.
“காணாமல், கோணாமல், கண்டு கொடு…’ என்பதற்கு, வேறு ஒரு விளக்கமும் உள்ளது. தர்மம் செய்யும் போது, அதை விளம்பரப்படுத்தாமல், யாருக்கும் தெரியாமல் கொடு; இது, காணாமல் கொடு என்பது.
கோணாமல் கொடு என்பது, தர்மம் செய்யும் போது, மனம் கோணாமல், ¬முழு மனதோடு கொடு என்பது. கண்டு கொடு என்பது, யாருக்கு என்ன தேவை என்று பார்த்து, ஸத் பாத்திரத்துக்கு கொடு என்பது. படிப்பில் ஆர்வமில்லாதவனுக்கு புத்தகமும், கல்யாண ஆசை இல்லாதவனுக்கு பெண்ணும், பசி இல்லாதவனுக்கு அறுசுவை உணவும் கொடுப்பது பயனற்றது.
அதனால், யாருக்கு, என்ன தேவை என்பதை அறிந்து, கொடுக்கச் சொன்னார்கள். தர்மம் செய்வதிலும் இத்தனை சூட்சமங்கள் உள்ளன. ஏதோ நானும் தர்மம் செய்து விட்டேன் என்று, பெருமைபட்டுக் கொள்வதில் பிரயோசனமில்லை.
இப்படியாக காணாமல், கோணாமல், கண்டு கொடு என்பதற்கு, சந்தியா வந்தனம் செய்வதிலும், தர்மம் செய்வதிலும் சில நியதிகள் உண்டு. இவைகளைத் தெரிந்து செய்வது நல்லது!