Daily Archives: மே 20th, 2011

நீச்சல் உடை: எத்தனை வகை… என்னென்ன நிறம்…

கோடை உஷ்ணம் தாக்கும்போதெல்லாம் தண்ணீர்… நீச்சல்…நீச்சல் உடை எல்லாம் நம் நினைவுக்கு வந்து விடும். இந்தி திரைஉலகில் நீச்சலும், நீச்சல் உடையும் நிறைந்திருக்கிறது. எந்த நடிகைக்கு எந்த உடை பொருத்தமாக இருக்கிறது என்று பாருங்கள். அந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை நீச்சல் உடையும் ரொம்பத்தான் மாறி வந்திருக்கிறதே!

* பாலிவுட்டின் பார்பி பொம்மை என்று அழைக்கப்படும் காத்ரினா, முதன் முதலாக பூம் என்ற படத்தில் டூபீஸ் என்ற கருப்பு நிறத்திலான நீச்சல் உடையை அணிந்து நடித்தார். நீச்சல் உடையில் மிகவும் சிறிய உடையை அணிந்து, தனது உடலை கவர்ச்சியாக காட்டிய காத்ரினா, இதற்கு பின்னர் இந்த மாதிரி கவர்ச்சியில் இதுவரை தோன்றவில்லை. (இவரது அழகான உடலுக்கு இந்த உடை ரொம்ப பொருத்தமாம்.)

* ஐஸ்வர்யாராய், மிஸ் இந்தியா பட்டம் வாங்கிய சமயத்தில் எல்லாம் நீச்சல் உடையில் காட்சி அளித்ததில்லை. அதன் பின்னர் தூம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும்போது, நீச்சல் உடையின் டாப் மற்றும் மினி ஸ்கர்ட் அணிந்து நடித்தார். அதன் பின்னர் `கிரேஸி கியா ரே…’ என்ற படத்தில் நீச்சல் உடையைப் போன்ற சிக்கென்ற ஆடையை அணிந்து நடித்தார்.(இப்போது நீச்சல்உடைகள் தனக்கு பொருத்தமாக இருக்காது என்கிறார்)

* தீபிகா படுகோனேவுக்கு நீச்சல் உடை என்பது புதியது அல்ல. ஏற்கனவே அவர் சூப்பர் மாடல் அழகியாக இருந்தபோது, வருடாந்திர காலண்டருக்காக விதவிதமான நீச்சல் உடை அணிந்து வலம் வந்தவர். ஆடைப் போட்டிகளிலும் வென்றவர். மெல்லிய குர்தாவை மேலாடையாக அணிந்தபடி, சிறிய ஷாட்ஸ் மற்றும் நீச்சல் டாப் உடையுடன் உள்ள படமே இப்போது ரொம்ப பிரபலம்.

* மெலிந்த உடலாக இல்லாமல், வனப்புடன் கவர்ச்சியை தாராளமாக காட்டும் முன்னாள் உலக அழகி லாராதத்தாவுக்கு, கவர்ச்சியான நீச்சல் உடை அணிவது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. விதவிதமான நிறங்களில் வித்தியாசமான நீச்சல் உடைக்கு சொந்தக்காரர் லாரா என்கிறார்கள் இந்தி திரையுலகினர். புளூ என்ற படத்தில் இவர் நீச்சல் உடையுடன் நடித்த காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது.(எந்த நிற நீச்சல் உடையும் இவருக்கு பொருத்தமாக இருக்குமாம்.)

* ஜீரோ சைஸ் ராணி என்று செல்லமாக அழைக்கப்படுகிறார் கரீனா கபூர். தாஸன் என்ற படத்தில் இவர் பச்சைக் கலர் நீச்சல் உடையில் நடித்த பாடல் காட்சியைப் பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போனார்கள்.

* கவர்ச்சி பிசாசு என்றழைக்கப்படும் பிபாசாவுக்கு பரந்த தோள்கள், நெடிய உயரம், சிக் உடல். கவர்ச்சிக்கு பஞ்சமில்லாதவர். நீச்சல் உடையில் இவர் நடித்த தூம் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிபாசாவுக்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகம். இவர் அணியும் டூபீஸ் உடையுடன், தொப்புளைத் தொடும் பாசி மாலை, வளையல்கள் மற்றும் கூலிங் கிளாஸ் என அனைத்தும் இளம்பெண்களிடம் பிரபலம். (பல தென்னிந்திய நடிகைகளே இவரது நீச்சல் உடைக்கு ரசிகர்கள் தானாம்.)

* நீச்சல் உடைக்காக உருவாக்கப்பட்டவர் என்கிறார்கள் பிரியங்கா சோப்ராவை! இவருடைய உடல்வாகு எப்போதுமே கட்டுக்குலையாமல் இருக்கும். மேலும் இவருடைய ஹேர் ஸ்டைலும் பிரசித்தம். `தோஸ்தானா’ படத்தில் தங்கக் கலரில் இவர் அணிந்திருக்கும் நீச்சல் உடையை `அடிச்சுக்க’ ஆள் இல்லை. இவருடைய உடைக்கு தகுந்தாற்போல், சந்தனக் கலரில் இருக்கும் இவருடைய சிக் உடல் பார்ப்பவருக்கும் கிக் ஏற்றும் என்றால் அது மிகையில்லை.

* நடிகை அமீஷா படேல் நடித்த `தோடா பியார் தோடா மேஜிக்’ என்ற படத்தில் இடம் பெறும் `லேஸி லம்ஹே…’ என்ற பாடலில் இவர் அணிந்திருக்கும் மெல்லிய உடையும், மஞ்சள் கலரில் உள்ளாடையாக அணிந்திருக்கும் டூபீஸ் உடையும் ரசிகர்களை சுண்டி இழுத்தது. ஆனாலும் அதிகமாக நீச்சல் உடையில் நடிக்காதவர் அமீஷா.(`நீச்சல்உடை காட்சியா? வேண்டாமே’ என்கிறார், இப்போது!)

* நடிகை முக்தா கோத்ஸேவுக்கு உடையின் அளவு எல்லாம் ஒரு விஷயமே இல்லை. எந்த அளவான உடையாக இருந்தாலும் அவருடைய உடலுக்கு கச்சிதமாக பொருந்தும். பேஷன் படத்தில் சில்வர் கலரில் மினுமினுக்கும் டாப் உடையும், இடையில் கருப்பு நிற ஷாட்ஸும் இவருடைய உடல் கவர்ச்சிக்கும் மேலும் புகழ் சேர்த்தன.

(தற்கால நீச்சல் உடைகளை எல்லாம் பார்த்து விட்டீர்கள் அல்லவா! இனி பழையகால நீச்சல் உடைகள் எப்படி இருந்தன என்பதை பார்ப்போம்.)

* புகார் என்ற படத்தில் முதன்முதலாக நடிகை ஜீனத் அமன் சிவப்பு நிற பிகினி உடையில் தோன்றினார். அந்த உடையே அவரது கவர்ச்சியின் அடையாளமாகவும் மாறியது. அதன்பின்னர் பல இயக்குனர்கள் சிவப்பு நிற உடையை அணியுமாறு கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

* எப்போதுமே கறுப்பு நிற ஸ்விம் ஷூட் அணிவார் பழம்பெரும் நடிகை தனுஜா. அது அவருக்கும் அதிர்ஷ்டமாக அமைவதாக நம்பினார். இவருடைய நீச்சல் உடை அதிக கவர்ச்சியாக இல்லாமல், பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

* `ஆன் ஈவினிங் இன் பாரிஸ்’ என்ற படத்தில் நீர்ச் சறுக்கு விளையாட்டுக் காட்சியில் நடிக்கும்போது இழுத்துக் கட்டப்பட்ட `போனிடைல்’ ஹேர்ஸ்டைல் மற்றும் நீச்சல் உடை ஆகியவற்றுடன் நடித்த நடிகை ஷர்மிளாதாகூர், அதன் பின்னர் இந்தி திரையுலகில் முடிசூடா ராணியாக திகழ்ந்தார். பின்பு இவர் கறுப்பு நிறத்தில் நீச்சல் உடை அணிந்து நடித்த படங்களும் அவருடைய கவர்ச்சிக்கு மெருகூட்டின.

* கறுப்பு வெள்ளை படங்களில் தனது கவர்ச்சியின் மூலம் இந்திய ரசிகர்களை கட்டிப் போட்டவர் நடிகை நூதன். கருப்பு நிற நீச்சல் உடை மற்றும் ரவுண்டு தொப்பி அணிந்து வந்தால் இந்தி ரசிகர்கள் கை தட்டிக் கொண்டே இருப்பார்கள் என்கிறார் வயதான சினிமா ரசிகர்!

* நடிகை சோனம், கறுப்பு வட்டங்கள் நிறைந்த பிங்க் நிறத்தில் டூபீஸ் நீச்சல் உடையில் தோன்றும் காட்சிகள் அந்த காலத்தில் ரொம்ப பிரபலம். விஜய் என்ற படத்தில் நீச்சல் உடையில் சோனம் அதிக கவர்ச்சியில் தோன்றினார்.

* பாபி படத்தில் டூபீஸ் நீச்சல் உடையில் நீச்சல் குளம் அருகே நடிகை டிம்பிள் கபாடியா உட்கார்ந்திருக்கும் காட்சியை சினிமா ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். எந்த டிசைனும் இல்லாமல், ஒரே கலரில் டூபீஸ் உடையில் அணிந்து நடிப்பது டிம்பிளின் வழக்கம். கவர்ச்சி மற்றும் அப்பாவியான பார்வையுடன் நீச்சல் உடை அணிந்து நடிப்பது டிம்பிள் கபாடியாவின் சிறப்பு!

நீச்சல் உடைகள் காலத்துக்கு ஏற்றவாறு எப்படி மாறி வந்திருக்கிறது என்பதை பார்த்தீர்களா?!

ஜெய்ப்பூர் மன்னராக, 12 வயது சிறுவன்!

இந்தியாவில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு விட்டது; ஆனாலும், அரச வம்சங்கள் இன்னமும் உள்ளன. கோட்டைகள், அரண்மனைகள் என, ஏராளமான சொத்துக்கள் அரச வம்சத்திடம் உள்ளன. ஆட்சி அதிகாரத்தை அவர்கள் இழந்து விட்ட போதிலும், பரம்பரை பழக்க வழக்கங்களை அவர்கள் இன்னமும் விடவில்லை. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மன்னராக, 12 வயது சிறுவன் பத்மநாபசிங் என்பவர் பதவி ஏற்றுள்ளார். இதற்கு முன் ஜெய்ப்பூர் மன்னராக, எண்பது வயது சவாய் பவானிசிங் என்பவர் இருந்தார். ராணுவத்தில் பிரிகேடியர் அந்தஸ்தில் பதவி வகித்து வந்த அவர், ஏப்., 17ம் தேதி மரணமடைந்தார். துக்க தினம் முடிந்த பின், ஏப்., 27ம் தேதி, ஜெய்ப்பூர் அரண்மனையில், மன்னராக, முறைப்படி பொறுப்பேற்றார் பத்மநாபசிங். பவானிசிங்கின் மகள் தியா குமாரி; அவரது மகன்தான் பத்மநாபசிங். நவம்பர் 2002ல், தன் வாரிசாக பத்மநாபசிங்கை அறிவித்தார் பவானிசிங். இப்போது, கச்வாகா ராஜ்புத் வம்ச மகாராஜாவாக பத்மநாபசிங் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜெய்ப்பூர் நகரில் உள்ள பல அரண்மனைகள், கோட்டைகள் இவருக்கு சொந்தம்.

அசர வைக்கும் அணிகலன்கள்

ஆடைகள் நம்முடைய அழகை அதிகமாக்கிக் காட்டுகின்றன. அதேநேரத்தில் ஆடைகளுக்கு பொருத்தமான அணிகலன்களை அணிந்து கொண்டால் அழகு மேலும் கூடுகிறது. நாம் அணிந்திருக்கும் உடைகளின் கலருக்கும், ஸ்டைலுக்கும் பொருத்தமான அணிகலன்களைத் தேர்வு செய்து அணியும்போது, நம்மை பார்ப்பவர்கள் முக்கின்மேல் விரல் வைத்து ஆச்சரியப்படுவர். எனவே, உடைகளுக்கு பொருத்தமானதாக இருக்கும் அணிகலன்களைத் தேர்வு செய்வதில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அணிகலன்கள் நமக்கு ஒருவிதமான சந்தோஷத்தையும், அழகின்மேல் ஈர்ப்பையும் ஏற்படுத்துகின்றன.நகைகளை மட்டுமே அணிகலன்கள் என கருதக் கூடாது. நகைகளோடு சேர்ந்து காலணிகள், ஹேட் பேக், கண்ணாடி, வாட்ச், பெல்ட், ஸ்கார், வாசனைத் திரவியங்கள், துப்பட்டா, பெல்ட், தொப்பி, கர்ச்சப், டை போன்றவையும் அந்த லிஸ்ட்டில் இடம் பெறும். இதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை நகைகளே. இன்றைக்கு நகைகளை விரும்பாதவர்கள் என்று யாரும் இல்லை. ஆண்கள், பெண்கள் என இருவருக்குமே நகைகள் மீது பிரியம் இருந்தாலும், பெண்களின் பிரியமே அதிகமாக இருக்கிறது. பெண்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்த, அவர்களுடைய உணர்வுகளில் கலந்த ஒன்றாக நகைகள் மாறிவிட்டன.

பெண்கள் எங்கு சென்றாலும், அது திருமண விழாவாக இருந்தாலும் அல்லது பார்ட்டியாக இருந்தாலும் அல்லது வேலை செய்யும் இடமாக இருந்தாலும் உடைகளோடு சேர்த்து நகைகளும் பிறரால் கவனிக்கபடுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த விதவிதமான நகைகளை அணிந்து பிறரைக் கவர்கின்றனர். சிலருக்கு பாரம்பரிய நகைகள் பிடிக்கும், சிலருக்கு பேஷன் நகைகள் பிடிக்கும், இன்னும் சிலருக்கு மரம், கண்ணாடி, சணல், பேப்பர் போன்றவற்றில் தயாரான நகைகள் பிடிக்கும்.

எந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு எந்த மாதிரியான நகைகளையே அணிந்து செல்ல வேண்டும் என்றதொரு வரைமுறைம் உள்ளது. இந்த வரைமுறை மாறும்போது அல்லது மீறப்படும்போது அது பிறரை ரசிக்க வைப்பதற்கு மாறாக முகம் சுளிக்க வைக்கும். குறிப்பாக உடைகளுக்கு பொருந்தும் நகைகளையே அணிய வேண்டும். உதாரணமாக பட்டுபுடவை கட்டினால் அதற்கு பொருத்தமான நெக்லஸ், ஆரம், முத்துமாலை போன்றவற்றை அணியலாம். அப்படி இல்லாமல் பட்டுபுடவை கட்டி மெல்லிய செயின், மரம், கண்ணாடிகளால் ஆன நகைகளை அணிந்து கொடால் பார்க்க சிறப்பாக இருக்காது.

இந்த நேரத்திற்கு இந்த கலர் நகைகளை அணிந்தால் நன்றாக இருக்கும் என்ற நடைமுறைம் உண்டு. அப்படி பார்த்தால் பகல் நேரத்தில் சில்வர் கலர் நகைகளும், மாலை நேரத்துக்கு கோல்டு கலர் நகைகளும் ஏற்றவை. நகைகளை பொறுத்தவரை பார்மல், கேஷுவல், ரைடல், ஈவ்னிங், ஸ்பிரிச்சுவல் என 5 வகையாக பிரிக்கலாம். இந்த ஐந்தும் வடிவமைப்பாலும், பயன்படுத்தபடும் நேரத்தாலும், தயாரிக்கபடும் பொருட்களாலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை.

பார்மல்: திருமணம், மீட்டிங் போன்ற சம்பிரதாயமான விழாக்களில் அணிந்து கொள்ளக்கூடிய நகைகள் இவை. நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட், மோதிரம், காதுவளையம் போன்றவை இதில் குறிபிடத்தக்கவை. இந்த நகைகள் ஒயிட் மெட்டல், பிளாக் மெட்டல், களிம, சிபி, துருபிடிக்காத எக்கு போன்றவற்றால் தயாரிக்கபடுகின்றன. ரத்தினம், கிரிஸ்டல், அலங்காரக்கல் போன்றவைம் இந்த நகைகளில் பயன்படுத்தபடுகின்றன.

கேஷுவல்: தினமும் அணிந்து கொள்ளக்கூடிய நகைகளை கேஷுவல் லிஸ்ட்டில் சேர்க்கலாம். இவை தண்ணீரில் நனைந்தாலும் பாதிப்படை யாது. கைவேலைபாடுகள் மிகுந்த நகைகளும் இதில் அடங்கும். சணல், மரம், பேப்பர் போன்றவற்றால் இவை தயாரிக்கப்படும். செயின், வளையல், மோதிரம் போன்றவை கேஷுவல் நகைகளில் குறிப்பிடத்தக்கவை. சிப்பிகளால் தயாரிக்கப்படும் இதுபோன்ற நகைகளை இளம்வயதினர் விரும்பி வாங்குகின்றனர்.

ரைடல்: திருமண பெண் அணிந்து கொள்ளக்கூடிய நகைகள் ரைடல் எனப்படும். இவை ஒயிட் மெட்டல், ஒயிட் கோல்டு, மஞ்சள் கோல்டு, வைரம், ரத்தினம் போன்றவற்றால் தயாரிக்கபடும். இதுபோன்ற நகைகள் மணப்பெணுக்கு என்றே விசேஷமாகத் தயாரிக்கப்படுகின்றன. பலவிதமான வெரைட்டிகளுடன் இந்த நகைகள் உருவாக்கப்படுவது குறிபிடத்தக்கது.

ஈவ்னிங்: மாலை நேரங்களில் நடைபெறும் பார்ட்டிகள், ரிசப்ஷன் போன்றவற்றிற்கு அணிந்து செல்லக்கூடிய நகைகள். துருபிடிக்காத எக்கு, ஒயிட் மெட்டல், பிளாக் மெட்டல், களிம, கிரிஸ்டல் போன்றவற்றால் செய்யப்படும். செயின், வளையல், பெரிய காது வளையம் போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை.

ஸ்பிரிச்சுவல்: மதம் சார்ந்த, வழிபாடு சார்ந்த நகைகள் இவை. மதக் குறியீடுகளுடனும், அடையாளங்களுடனும் இந்த நகைகளை ஆண், பெண் என இருவருமே பயன்படுத்துகின்றனர்.

விண்வெளியில் 10 மிதக்கும் கோள்கள் கண்டுபிடிப்பு!

விண்வெளியில் உள்ள கோள்கள் பொதுவாக ஏதாவது ஒரு சூரியனை சுற்றி வரும். ஆனால் அப்படி சூரியனை சுற்றாமல் தனியே மிதக்கும் 10 புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியாளர் அயன்பாண்ட் தலைமையில் சர்வதேச விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அயன்பாண்ட் கூறியதாவது:

நட்சத்திர குடும்பத்தில் 10 புதிய மிதக்கும் கோள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இவை வியாழன் கிரகத்தின் அளவுக்கு உள்ளன. பால் வெளி மண்டலத்தில் இத்தகைய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை. மாசே பல்கலைக்கழக கம்ப்யூட்டர் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் புதிய சாப்ட்வேர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வு மூலம் இவை கண்டறியப்பட்டுள்ளன.

இவை பூமியில் இருந்து சுமார் 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. வெறும் கண்ணால் புதிய கோள்களை பார்க்க முடியாது. இவை ஏதேனும் ஒரு சூரிய குடும்பத்தில் இருந்து தப்பித்து வந்த கோள்களாக இருக்கலாம்.

ஒரே நாளில் இரண்டு இடங்கள் – வெப்பம் தணிக்கலாம் வாங்க!

தேனி மாவட்டம் பெரியகுளம் வழியாக தேவதானப்பட்டியிலிருந்து 6-வது கிலோ மீட்டரில் கொடைக்கானல்-பழனிமலை அடிவாரத்தில் ரம்மியமாக அமைந்திருக்கிறது மஞ்சளாறு அணை.
போகும் வழியிலே பிரசித்தி பெற்ற மூங்கிலணை காமாட்சியம்மன் திருக்கோயில் முன்பாக ஓடும் மஞ்சளாறு.
“U’ வடிவில் அமைந்த மஞ்சளாறு அணையில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள். சுற்றிலும் மூன்று பக்கமும் உயர்ந்த அடர்ந்த பசுமையான மலைகள்.
கொடைக்கானல் மலையடிவாரத்தில் அமைந்த இந்த அணைக்கு இருட்டாறு, தலையாறு, மூலையாறு என மூன்று மலையருவிகளில் இருந்து வரும் நீர் தேங்கி நிற்கும்.
தென்மேற்கு, வடமேற்கு பருவ காலங்களில் நீர் நிரம்பி மலைகளை முட்டி மோதி விளையாடும்.
தலையாறு அருவி பசுமை மலைகளுக்கு இடையே பாறையில் சறுக்கி விழுவது மேகக் கூட்டங்களுக்கு இடையே ரம்மியமாக இருக்கும்.
தலையாறு அருவியின் அடிவாரத்தில்தான் காமாட்சி அம்மன் பிறந்த “அம்மா மச்சு’ கோயில் அமைந்துள்ளது.
கொடைக்கானல் செல்லும் பயணிகள் “மலைச் சாலையில் நின்று டம் டம் பாறை அருகே டவரில் ஏறி ரசிக்கும் முதல் பசுமைப் பள்ளத்தாக்கு இந்த மஞ்சளாறு அணைதான். காலை முதல் மதியம் வரை இந்த அழகை ரசித்துவிட்டு மதியத்துக்கு இன்னொரு இடம் போவோம் வாருங்கள்.’

மஞ்சளாறு டேமிலிருந்து கிளம்பி தேவதானப்பட்டி வழியாக பெரியகுளம் நகருக்கு முன்பே வடக்குப் பக்கம் கும்பக்கரை அருவி வரவேற்கும்.
இயற்கையாய் உற்பத்தியாகி கொடைக்கானல் சாரலில் குதித்து வரும் ஆரோக்கிய அருவிதான் கும்பக்கரை அருவி.
குதித்து, சறுக்கி, தவழ்ந்து தேங்கி ஓடிவரும் இந்த அருவியின் பல்வேறு அமைப்புகள் குடும்பத்தோடு குளியல் போட்டு மகிழ சிறந்த இடம்.
இது பெண்கள், குழந்தைகள் நீந்தி, தண்ணீருக்குள் உட்கார்ந்து குதித்து பாதுகாப்பாக குளிக்கும் சகல குளியல் வசதி கொண்ட அருவி.
நம் உச்சந்தலையில் குதித்து சூடு குறைக்கும் அருவிக்குளியலும் படு சூப்பர்.
ஆக, ஒரே நாளில் இரண்டு சுற்றுலாவாக குடும்பத்தோடு சுற்றி வரலாம். சுற்றுப்புற தேனிமாவட்ட மக்களுக்கு சுருக்குப் பையில் காசு இருந்தால் போதும்.
வெளி மாவட்ட விருந்தாளிகள் வந்து போக, அரசு பஸ், ஆட்டோ வசதி உள்ளது. பெரிய குளத்தில் இருந்து காபி செலவுதான் கட்டணம்.
உடனே கிளம்பலாம் வாங்க!

`குளு குளு’ மில்க்ஷேக்

த்திரி வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த வெயிலில் வெளியில் அலைந்து திரிந்து வீட்டிற்கு வந்தால் அசதி ஆளை சோர்வில் ஆழ்த்தி விடும். அந்த வேளையில் வீட்டிற்கு வந்தவுடன் குளிர்ந்த பாலுடன் பழத்தைச் சேர்த்து செய்யப்படும் `மில்க் ஷேக்’ ஒரு டம்ளர் குடித்தால் உடனடியாக வெயிலின் அயர்ச்சி நீங்கி உடல் புத்துணர்ச்சி அடைவதை உணரலாம்.

`குளு குளு’ மில்க்ஷேக்

பாலின் சக்தியுடன், சப்போட்டா பழத்துக்கே உரித்தான சத்து மற்றும் இயற்கையான இனிப்புச் சுவை சேர்த்துச் செய்யப்படும் `சப்போட்டா மில்க் ஷேக்’ அனைத்து வயதினருக்கும் விருப்பமான வயிறு நிரப்பும் பானம். உடலை குளிர்விக்க வல்லதும் கூட.

வெயிலின் தாக்கத்தையும் அலைந்து திரிந்ததனால் ஏற்படக்கூடிய உடல் அயர்ச்சியையும், மனத் தளர்வையும் உடனடியாக குறைக்க வல்லது இந்த குளுகுளு சப்போட்டா மில்க் ஷேக்.

வெயில் காலத்தில் வியர்த்து விறுவிறுக்காமல் மிகமிக சுலபமாக இதனை தயாரிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

தேவையான பொருட்கள்

சப்போட்டா பழங்கள் – 4
குளிர்ந்த பால் – 2 கப்
சர்க்கரை – 6 டேபிள் ஸ்பூன்
ஐஸ் கட்டிகள் – 4 அல்லது 5

செய் முறை

* சப்போட்டா பழங்களின் தோலை மெல்ல சீவி, அவற்றின் விதையை எடுத்துவிட்டு, பழத்தை சிறு துண்டுகளாக்கி மிக்சியில் போடவும்.

* பழத்துண்டுகளுடன், பால், சர்க்கரை சேர்த்து அவை நன்கு நுரைத்து வரும் வரை விட்டுவிட்டு மிக்சியில் அடிக்கவும். (பல்ஸ் மோட் உபயோகித்து மிக்சியில் அடிக்கலாம்).

* நுரைத்து வந்த பால்- பழக் கலவையை, உயரமான கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மேலே ஜில்லென்று ஐஸ் கட்டிகள் போட்டால் குளுகுளு மில்க் ஷேக் ரெடி. அப்படியே குடிக்கக் கொடுக்கலாம்.
” alt=”” />
சுவைக்கான குறிப்பு

* சப்போட்டா மில்க் ஷேக் மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்கிரிம் (வெனிலா அல்லது சாக்லெட் ஐஸ்கிரீம்) போட்டுக் கொடுத்தால் குளிர்ச்சியும் சுவையும் கூடும்.

உபயோகமான குறிப்பு

* சர்க்கரை சேர்த்து காய்ச்சி ஆறிய பாலை, ஐஸ் கியூப் டிரேயில் ஊற்றி பால் ஐஸ் கியூபுகளாக செய்து சப்போட்டா மில்க் ஷேக் மேலே போட்டும் கொடுக்கலாம்.

* பழுத்த வாழைப் பழங்களை உபயோகித்து வாழைப்பழ மில்க் ஷேக் இம்முறையில் தயாரிக்கலாம்.

* சர்க்கரைக்கு பதிலாக தேன், பொடித்த பனங்கற்கண்டு உபயோகித்து சற்றே வேறுபட்ட சுவையுடனும் மில்க்ஷேக் தயாரிக்கலாம்.

கீதா பாலகிருஷ்ணன்

வேர்ட் டிப்ஸ்-மெனு செல்லாமல் பாண்ட் டயலாக் பாக்ஸ்

மெனு செல்லாமல் பாண்ட் டயலாக் பாக்ஸ்
வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில், அவசரமாக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியைக் குறிப்பிட்ட வகையில் பார்மட் செய்திட வேண்டியதிருந்தால், மெனு பார் சென்று Format கிளிக் செய்து பின்னர், Font தேர்ந்தெடுக்கிறோம். பின்னர், நமக்கு பாண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் டெக்ஸ்ட் பார்மட் செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் தரப்பட்டிருக்கும். இது நேரம் எடுக்கும் வேலை ஆகும்.
ஒரு சில சொற்கள் அல்லது வரிகளில், ஏதேனும் பார்மட்டிங் வேலையை மேற்கொள்ள கீழ்க்காணும் வகையில் செயல்படலாம். முதலில் பார்மட் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், அந்த பகுதியில், மவுஸ் கர்சரைக் கொண்டு, ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில், Font கிளிக் செய்தால் Font Dialogue Box கிடைக்கும். தேவையான பார்மட்டிங் பணியை நிறைவு செய்திடுங்கள். இறுதியில் ஓகே கிளிக் செய்து முடிக்கவும்.

பைண்ட் அண்ட் ரீபிளேஸ் – கீ போர்ட் இயக்கம்
வேர்ட் டாகுமெண்ட்களில் நாம் அடிக்கடி பயன்படுத்துவது, பைண்ட் அண்ட் ரீபிளேஸ் (Find and Replace) வசதியாகும். ஆனால் இந்த விண்டோ வினைப் பயன்படுத்துகையில், மவுஸ் கொண்டு பலமுறை விண்டோவின் டேப்களை இயக்க வேண்டியதிருக்கும். இருப்பினும், மவுஸ் இல்லாமலேயே, கீ போர்ட் மூலம் இந்த டூலின் முழு இயக்கத்தையும் மேற்கொள்ளலாம். அவற்றை இங்கு காணலாம்.
Ctrl+H கீகளை அழுத்தினால், Find and Replace டயலாக் பாக்ஸின். Replace டேப் நேரடியாகக் கிடைக்கும்.
உங்களுக்கு இந்த டயலாக் பாக்ஸ் தேவையில்லையா? நீக்குவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் உள்ளன. எஸ்கேப் (Esc)கீயை அழுத்தலாம். அல்லது Ctrl+F4 கீகளை இயக்கலாம். அல்லது Tab அழுத்தி Cancel பட்டன் பெற்றுப் பின்னர் என்டர் அழுத்தலாம்.
உங்கள் டாகுமெண்ட் மற்றும் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் டயலாக் பாக்ஸினை மாற்றி மாற்றி செயல்பட வேண்டுமா? இதற்கு Ctrl+Tab அழுத்திச் செயல்படலாம்.
டாகுமெண்ட் கிடைத்தவுடன், நீங்கள் டாகுமெண்ட்டில் எந்த பக்கத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம். பைண்ட் அண்ட் ரீபிளேஸ் டயலாக் பாக்ஸ் அப்படியே எங்கும் செல்லாமல் இருக்கும். ஆனால் ஒளி குன்றிய நிலையில் இருக்கும். மீண்டும் Ctrl+Tab கீகளை அழுத்தினால், உயிர் பெற்று சரியான வண்ணத்தில் இருக்கும். அது மட்டுமின்றி, நீங்கள் கர்சரை எந்த இடத்தில் வைத்திருந்தீர்களோ, அந்த இடத்தில் கர்சர் இருக்கும்.
ஆனால், டயலாக் பாக்ஸ் இருப்பது, உங்களுக்கு டாகுமெண்ட்டைக் கையாள்வதில் சிரமத்தினைத் தரும் என்று நீங்கள் எண்ணினால், அதனை நீக்க, மேலே சொன்ன மூன்று வழிகளில் ஒன்றைப் பின்பற்றலாம். பின்னர், டயலாக் பாக்ஸ் தேவைப்படுகையில் Ctrl+H என்ற கீகளை அழுத்திப் பெறலாம்.

ஷிப்ட் கீ
ஒரு டெக்ஸ்ட்டை இன்னொரு இடத்திற்கு நகர்த்த அல்லது காப்பி எடுக்க முதலில் என்ன செய்ய வேண்டும்? அதனை பிளாக் செய்து தேர்ந்தெடுக்க வேண்டும். மவுஸ் கொண்டு இதனை மேற்கொள்ளலாம். ஆனால் கீ போர்டு வழியாக இதனை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு ஷிப்ட் கீ கை கொடுக்கிறது. இதோ, வேர்ட் தொகுப்பில் ஷிப்ட் கீயுடன் கூடிய சில செயல்பாடுகள்.
ஷிப்ட் + வலது அல்ல து இடது அம்புக் குறி கீ: ஒரு எழுத்தை பிளாக் செய்திடும்.
ஷிப்ட் + மேல் அல்லது கீழ் அம்புக்குறி கீ : ஒரு வரியை பிளாக் செய்திடும்.
ஷிப்ட் + கண்ட்ரோல் + மேல் அல்லது கீழ் அம்புக் குறி கீ : கர்சர் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு பாராவை பிளாக் செய்திடும்.

மூச்சில் முன்னூறு விஷயம்


– மூச்சு வாங்குது.

– மூச்சு திணறுது.

– மூச்சுவிட கஷ்டமா இருக்கு.

– மூச்சு நின்னுடுச்சு.

இப்படி மூச்சு, மூச்சு என்று அடிக்கடி எல்லோரும் சொல்வதை, நீங்களும் கேட்டிருப்பீர்கள். மூக்கு வழியாக காற்றை உள்ளிழுத்து, வெளியே விடுவதைத்தான் `மூச்சு’ என்று சொல்லிப் பழகிவிட்டோம். இதையே `சுவாசித்தல்’ என்றும் நாம் சொல்வதுண்டு.

நம்மை அறியாமலே, இயற்கையாக, தன்னிச்சையாக, சுவாசித்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதைப் பற்றி நாம் யாரும் கண்டுகொள்வதில்லை. கணக்கில் எடுத்துக் கொள்வதும் இல்லை.

சுவாசித்தல், நுரையீரல் என்கிற உறுப்பு மூலமாகத்தான் நடைபெறுகிறது. நுரையீரல் நமது உடலில் மார்பின் இரண்டு பக்கமும் நிறைந்திருக்கிறது. நமது மார்பிலுள்ள இரண்டு நுரையீரல்களிலும், கண்ணுக்குத் தெரியாத அளவில் மிகமிகச் சிறிய பலூன் போன்ற காற்றுப்பைகள் சுமார் முப்பது கோடி எண்ணிக்கையில் இருக்கின்றன. வெளியிலிருந்து உள்ளே இழுக்கப்படும் காற்று, இந்த முப்பது கோடி காற்றுப் பைகளுக்குள்ளும் சென்றுதான், மாற்றமாகி, மறுபடியும் வெளியே வருகிறது.

உலகமெங்கும் பரவியிருக்கும் காற்றைத்தான், நாம் பிறந்த நாளிலிருந்து இறக்கும் நாள் வரை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். காற்று, கண்ணுக்குத் தெரியாதது. ஆனால் எங்கும் நிறைந்து இருப்பது. செடி, கொடிகள் அசையும்போது நாம் காற்று அடிக்கிறது என்று சொல்கிறோம். காற்றை நம்மால் உணர மட்டும் தான் முடியும்.

காற்றை நாம் சுவாசிப்பதனால்தான் உயிர் வாழ்கிறோம். சுவாசித்தல் நின்று விட்டால், உயிரும் நின்று விட்டதாக அர்த்தம். `தூங்கையிலே வாங்குகிற மூச்சு, சொல்லாமல் நின்னாலும் போச்சு’ “ராத்திரி படுத்து, காலையில் எழுந்தால்தான் உயிர் நிச்சயம்” என்று சுவாசித்தலைப் பற்றி கிராமத்திலுள்ள பெரியவர்கள் கூறுவதுண்டு.

காற்றில் கலந்திருக்கும் `பிராணவாயு’ என்ற `ஆக்ஸிஜன்’ வாயு தான், நாம் உயிர்வாழ பெரிதும் உதவுகிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத காற்றில், ஆக்ஸிஜன் தவிர, இன்னும் நிறைய வாயுக்கள் இயற்கையாகக் கலந்துள்ளன. அதாவது, காற்றில் சுமார் 78 சதவீதம் நைட்ரஜன் வாயுவும், 21 சதவீதம் ஆக்ஸிஜன் வாயுவும் இருக்கின்றன. மீதமுள்ள ஒரு சதவீதத்தில் 0.93 சதவீதம் ஆர்கான், 0.039 சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நியான், ஹீலியம், மீதேன், கிரிப்டான், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, ஓஸோன், அயோடின், அம்மோனியா போன்ற சுமார் பதினாறு விதமான வாயுக்கள் கலந்திருக்கின்றன.

காற்றில் 21 சதவீதம் இருக்கும் ஆக்ஸிஜன் வாயுதான், நம்மை உயிர்வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த 21 சதவீத ஆக்ஸிஜன் வாயு, 1 சதவீதம் குறைந்தால் கூட, உடலில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும். சுமார் ஐந்து சதவீதம் குறைந்தால் எல்லோர் உயிருக்கும் ஆபத்துதான்.

இந்த 21 சதவீத ஆக்ஸிஜனே உலகிலுள்ள அனைவரும் உயிர்வாழ போதுமானது. இதைக் கெடுக்காமல், இது இன்னும் குறையாமல் பார்த்துக் கொண்டால் சரிதான். காற்றின் அழுத்தமும், காற்றின் அடர்த்தியும் உயரம் போகப் போக குறைந்துகொண்டே போகும். சுமார் பத்தாயிரம் மீட்டருக்கு மேலே போகும்போது, காற்றில் உள்ள வாயுக்களின் சதவீதம் மாறும்.

நீருக்குள் காற்று இருக்கிறது, நீருக்குள்ளேயே வாழும் உயிரினங்கள் அனைத்துமே, தனக்குள்ள `கில்ஸ்` என்று சொல்லக்கூடிய விசேஷ நுரையீரலைப் பயன்படுத்தி, தண்ணீரிலுள்ள காற்றிலிருந்து, ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுவை மட்டும் பிரித்தெடுத்து சுவாசிக்கின்றன.

விண்வெளியில் ஆக்ஸிஜன் வாயு கிடையாது. ஆகவே விண்வெளி வீரர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை உடன் எடுத்துச் சொல்கிறார்கள். வானத்தில் `ஓஸோன் திரை’ என்று சொல்லக்கூடிய இடம் வரைக்கும் தான் ஆக்ஸிஜன் வாயு உண்டு. அதற்கு மேல் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு காற்று இருக்கும். ஆனால் ஆக்ஸிஜன் வாயு இருக்காது.

பூமிக்கடியில் அதிக ஆழத்திலுள்ள சுரங்கத்தில் வேலை செய்பவர்களுக்கு, `வென்டிலேடிஸ் ஷாப்ட்’ என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய ராட்சத குழாய், பூமியிலிருந்து சுரங்கத்திற்குள் நுழைக்கப்பட்டு, தரையிலுள்ள இயற்கைக்காற்று உள்ளே அனுப்பப்படுகிறது. இதன் மூலம்தான் சுரங்கத் தொழிலாளர்கள் சுவாசிக்கிறார்கள்.

தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களுக்கு, நுரையீரலில் காற்று இருப்பதற்குப் பதிலாக தண்ணீர் நிரம்பி விடுகிறது. இதனால்தான் இறக்கிறார்கள்.

`சூரிய ஒளிச்சேர்க்கை’ அதாவது `போட்டோ சிந்தெஸிஸ்’ (Photo Synthesis) என்று சொல்லக்கூடிய செயல்முறையில், தாவரங்கள் அனைத்தும், சூரிய ஒளிசக்தியை பயன்படுத்தி, ஆக்ஸிஜன் வாயுவை உண்டாக்குகிறது. இந்த ஆக்ஸிஜனை உயிரினங்கள் எடுத்துக் கொள்கின்றன. உயிரினங்கள் தான் உண்ணும் உணவை எரித்து, அதன் மூலம் கிடைக்கும் சக்தியை உடலுக்கு கொடுக்க, ஆக்ஸிஜன் வாயு மிகவும் உபயோகப்படுகிறது.

மனிதன் ஆக்ஸிஜன் வாயுவை சுவாசித்து, (அதாவது உள்ளே இழுத்து) கார்பன் டை ஆக்சைடு என்கிற வாயுவை வெளியே விடுகிறான். இதற்கு நேர்மாறாக, எல்லா செடி, கொடிகளும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளே இழுத்து, ஆக்ஸிஜன் வாயுவை வெளியே விடுகிறது. சூரிய வெளிச்சம் இருந்தால்தான் இப்படி நடக்கும். சூரிய வெளிச்சம் இல்லாத நேரத்தில் அதாவது இரவில், மனிதனைப் போல தாவரங்களும் ஆக்ஸிஜன் வாயுவை உள்ளே இழுத்து, கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியே விடுகிறது.

ஆக்ஸிஜன் வாயு நமக்கு தேவை. கார்பன் டை ஆக்ஸைடு வாயு நமக்குத் தேவையில்லை. பகலில் ஆக்ஸிஜன் மரத்தடியில் கிடைக்கும். அதனால் பகலில் மரத்தடியில் படுக்கலாம். இரவில் ஆக்ஸிஜன் மரத்தடியில் கிடையாது. கார்பன் டை ஆக்ஸைடு தான் கிடைக்கும். இரவில் மரத்தடியில் படுக்கக்கூடாது என்று சொல்வதன் காரணம் இதுதான்.

என் நண்பர் ஒருவர் வாக்கிங் போகும்போதும், சும்மா இருக்கும்போதும், வழியிலிருக்கும் செடி, கொடிகளின் அருகில் போய் இலைகளுக்கு பக்கத்தில் மூக்கைக் கொண்டு போய், நன்றாக மூச்சை உள்ளே இழுத்துவிட்டு வருவார். “என்ன சார் இது, வழியெல்லாம் செடி, கொடிகளை மோப்பம் பிடித்துக்கொண்டே வருகிறீர்கள்” என்றேன்.

“எல்லாச் செடி கொடிகளும் பகலில் ஆக்ஸிஜனை வெளியே விடும். இவைகளிலிருந்து வெளியே வரும் இந்த சுத்தமான ஆக்ஸிஜன் நமக்குத் தேவை. அதனால்தான் இலைகளின் கிட்டே போய் அந்த சுத்தமான ஆக்ஸிஜனை, கலப்படமில்லாத ஆக்ஸிஜனை உள்ளே இழுத்து, உடம்பை தெம்பாக்கிக் கொள்கிறேன் டாக்டர்” என்றார் அந்த நண்பர். அவர் செய்வது சரிதான்.

அதிக மக்கள் கூட்டத்தில் நாம் இருக்கும்போது, ஆக்ஸிஜன் நமக்கு கிடைப்பது குறைந்து விடுகிறது. அதாவது பத்து பேர் இருக்க வேண்டிய இடத்தில் நூறு பேர் இருந்தால் நமக்கு ஆக்சிஜன் குறைவாக கிடைக்கும். அதே நேரத்தில், எல்லோரும் சுவாசித்து விட்டு, காற்றை வெளியே விடும்போது அந்த இடத்தில் கார்பன் டை ஆக்ஸைடு வாயு அதிகமாகி விடுகிறது. கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்று சொல்வது இதனால் தான்.

குழந்தைகளின் குட்டி உலகம்!

தூங்குடா செல்லம் தூங்கு…


வாழ்வின் இனிமையான பருவங்களுள் ஒன்று, குழந்தைப் பருவம். எந்தக் கவலையையும், சுமையையும் உணராத பருவம். பெற்றோரின் அன்பு, அரவணைப்பை, தாயின் பாச மழையை முழுமையாக அனுபவிக்கும் பருவம்.

வெளிக்காற்றைச் சுவாசிக்கும் முதல் நொடி துவங்கி, விவரம் அறியும் வயது வரை குழந்தைப் பருவம் அடங்கும். ஒரு குழந்தையின் ஆரம்ப அடிகள் சில இங்கே…

உணவும், உறக்கமும்

உணவு தான் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு முதல் முக்கியமான விஷயம். தூக்கம், இரண்டாவது. சிசு, ஒவ்வொரு இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பால் பருகுகிறது. அதைப் போல தூக்கமும் விட்டு விட்டுத் தொடரும். சுமார் எட்டுப் பகுதிகளாக, 24 மணி நேரத்தில் 16 முதல் 17 மணி நேரம் தூங்குகிறது, புதிய குழந்தை. ஒரு மாத அளவில், குழந்தையானது தூக்கம், பால் அருந்துவதில் ஒரு குறிப்பிட்ட சீரான முறைக்கு வந்து விடுகிறது.

* குழந்தையை அழாமல் சந்தோஷமாக வைத்திருப்பதை எந்தக் கல்லூரியும், படிப்பும் ஒரு தாய்க்குப் போதிப்பதில்லை. அது அவரின் உள்ளுணர்வில் பிறக்கிறது.

பார்வை

புதிதாகப் பிறந்த குழந்தையால் 12 அங்குலங்கள், அதாவது 30 சென்டிமீட்டர் நீளத்துக்குத்தான் தெளிவாகப் பார்க்க முடியும். நேரடியாகச் சொல்வதென்றால், குழந்தை தன்னை வைத்திருப்பவரின் முகத்தைத்தான் நன்றாகப் பார்க்க முடியும். எனவே குழந்தைக்கு அதிக ஆர்வமூட்டும் விஷயம், அதன் அம்மாவின் முகம் தான். அதைப் போல, எதிரெதிர் வண்ணங்கள் கொண்ட பொருட்களும் குழந்தைகளை ஈர்க்கின்றன.

தொடுவதும்… அணைப்பதும்…

தங்களைத் தூக்கி வைத்திருப்பதை புதிய குழந்தைகள் விரும்புகின்றன. முத்தமிடுவது, உடம்பைத் தடவுவது, மென்மையாகத் தட்டிக்கொடுப்பது, `மசாஜ்’ செய்வது ஆகியவற்றையும் குழந்தைகள் ரசிக்கின்றன. உங்கள் குழந்தையுடன் தொடர்பு கொள்ள, தொடுகை ஒரு முக்கியமான வழியாகும்.

* நான் எனது முதல் குழந்தையைப் பெற்றபோதுதான், எனது தாய் என்னை எந்த அளவு நேசித்திருக்கிறார் என்று புரிந்து கொண்டேன். -ஓர் இளம்தாய்.

கற்பது உடனே தொடங்குகிறது

சில வேளைகளில் உங்களின் குட்டிப் பாப்பா அமைதியாகவும், உஷாராகவும் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். குழந்தை கற்பதற்குச் சிறந்த நேரம் அதுவே. அந்தக் காலகட்டத்தை, குழந்தையுடன் விளையாடவும், பேசவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த நிலையிலேயே குழந்தைகளால் முகங்கள், சைகைகளைப் புரிந்து கொள்ளவும், சிலவற்றை `இமிடேட்’ செய்யவும் கூட முடிகிறது. திருப்பிச் செய்வதற்கு நீங்களே அதற்கு வாய்ப்புக் கொடுக்கலாம். திரும்பத் திரும்ப நாக்கை நீட்டுவது, புருவங்களை உயர்த்துவது போன்றவற்றைக் குழந்தை கவனிக்கும். சில நிமிடங்களில் அவற்றைத் திரும்பச் செய்யும். திரும்பச் செய்யாவிட்டாலும் அது கவனிக்கவில்லை என்று அர்த்தமில்லை.

குழந்தையுடன் விளையாடுவது

`பளிச்’சென்ற வண்ணங்கள் கொண்ட நகரும் பொருட்கள், பட்டையான கோடுகளால் ஆன பெரிய படங்கள் கொண்ட புத்தகங்கள், பிறந்த குழந்தையைக் கவருகின்றன. ஆனால் அவற்றை யெல்லாம் அதற்கு அதிகமாகக் காட்டித் திணிக்க முயல வேண்டாம்.

குழந்தையால் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் தான் கவனம் செலுத்த முடியும். சிலநேரங்களில் அந்த ஆர்வத்தையும் காட்டாது. தனக்கு ஆர்வமில்லை என்பதை, கொட்டாவி விடுவது, பார்வையை விலக்குவது, முகத்தைத் திருப்புவது, முதுகை வளைப்பது, முனகுவது, அழுவது போன்றவற்றின் மூலம் காட்டும். அதைப் போல தான் விரும்பி ரசிப்பதையும் குழந்தை உங்களுக்குப் புரிய வைத்துவிடும்.

எழுத்துகளைக் கற்பிக்கச் சிறந்த வழி

இரண்டு முதல் மூன்று வயதுக் காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் சில எழுத்துகளைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கின்றன. நான்கு- ஐந்து வயதில் ஏறக்குறைய எல்லா எழுத்துகளையும் கற்றுக்கொள்கின்றன. அதாவது நீங்கள் இரண்டு வயதிலேயே குழந்தைக்கு எழுத்துகளைக் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கலாம்.

ஆனால் உடனேயே அவர்கள் எல்லா எழுத்துகளையும் கற்றுக் கொண்டுவிட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். படங்கள் நிறைந்த, பெரிய எழுத்துகள் கொண்ட புத்தகங்கள், குழந்தைக்கு ஆர்வமூட்டும். தான் கற்றுக்கொண்ட எழுத்துகள், வண்ணங்கள், வடிவங்கள், பொருட்கள், விலங்குகளைச் சுட்டிக் காட்டுவதில் குழந்தை ஆர்வம் காட்டும்.

பேச்சு

குழந்தைகள் தங்கள் முதல் இரண்டாண்டுகளில் பேசக் கற்றுக்கொள்கின்றன. தாங்கள் பார்ப்பதை, கேட்பதை, உணர்வதை விவரிக்க முயல்கின்றன. ஒரு குழந்தை தனது முதல் வார்த்தையைப் பேசும் முன்பே, மொழியின் விதிகளையும், பெரியவர்கள் அதை எப்படிப் பயன்படுத்தித் தொடர்புகொள்கிறார்கள் என்றும் புரிந்து கொள்கின்றன என்பது ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு.

வளைந்திருக்கும் கை, கால்கள்

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கை, கால்கள் நேராக இருப்பதில்லை. அவை சற்று வளைந்த நிலையில் இருப்பது இயற்கை. வெளிப்புற உலகுக்கு வந்ததுமே அவற்றின் கை, கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக நேராகத் தொடங்கி விடும்.

தர்மம் செய்யுங்கள்

ஏழையாய் இருந் தாலும், தங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்ய வேண்டும் என்ற உயரிய தத்துவத்தை, ஆதிசங்கரரின் வரலாறு நமக்கு எடுத்துச் சொல்கிறது. அவர் பிறந்த நன்னாளான இன்று, அவரது சரிதத்தை படிக்கும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது.
கேரள மாநிலம், திருச்சூர் அருகிலுள்ள காலடியில் அவதரித் தார் ஆதிசங்கரர். இவரது காலம், ஏழாம் நூற்றாண்டு. இவரது தந்தை சிவகுரு; பணக்கார குடும்பம், படித்த குடும்பம். சிவகுருவுக்கு எர்ணா குளம் அருகிலுள்ள மேல்பாழூர் மனையைச் சேர்ந்த ஆர்யாம்பாளைத் திருமணம் செய்து வைத்தனர்; இருவருமே சிவ பக்தர்கள்.
இவர்களுக்கு நீண்டகாலமாக குழந்தை இல்லை. திருச்சூர் வடக்குநாதர் கோவிலுக்குச் சென்று, சிவனிடம், குழந்தை வரம் வேண்டி, தீவிர வழிபாடு செய்தனர். அவரது பக்தியின் பலத்தை சோதிக்க முடிவெடுத்தார் சிவபெருமான். சிவகுருவின் கனவில் தோன்றிய சிவன், “உனக்கு தீர்க்காயுள் உள்ள தீய குணங்களையுடைய, 100 புத்திரர்கள் வேண்டுமா அல்லது குறைந்த ஆயுளே உள்ள ஒரே ஒரு சிறந்த புத்திரன் வேண்டுமா?’ என்றார்.
“என் மனைவியிடம் கேட்டு சொல்கிறேன்…’ என்ற சிவகுரு, தூக்கத்திலிருந்து விழித்து, மனைவியிடம் நடந்ததைச் சொன்னார். “இது, நமக்கு சிவன் வைத்த சோதனை. இதில், நம் தேர்வு ஏதுமில்லை. அவர் ஏதோ முடிவு செய்து தான் இப்படி கேட்கிறார். எனவே, அவர் விருப்பம் எப்படியோ, அப்படியே செய்யட்டும்…’ என்றார் ஆர்யாம்பாள்.
இந்த முடிவை திருச்சூர் சென்று, வடக்குநாதரிடம் கூறி, பிரார்த்தித்தனர். சுவாமி மீண்டும் கனவில் தோன்றி, “நானே உங்களுக்கு புத்திரனாக பிறக்கிறேன்; ஆனால், ஆயுள் எட்டு தான்…’ என்று சொல்லி விட்டார். இறைவனே தங்கள் வயிற்றில் பிறப்பதாக தெரிவித்ததால், அவர்கள் மனதைத் தேற்றிக் கொண்டனர். ஆர்யாம்பாளின் வயிற்றில் ஐஸ்வரியமான ஒரு தேஜஸ் புகுந்தது; அவர் கர்ப்பமானார்.
சித்திரை மாத அமாவாசை கழித்து வந்த சுத்த பஞ்சமியை, வைகாச சுத்த பஞ்சமி என்பர். அன்று, சிவனுக்குரிய திருவாதிரை நட்சத்திரமும் இணைந்து வந்தது. ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்த மதிய வேளையில் அவதரித்தார் சங்கரர்.
குழந்தைக்கு, “சங்கரர்’ என்று பெயர் சூட்டப் பட்டது. இரண்டு வயதிலேயே எழுத்துக்களை வாசிக்கத் துவங்கி விட்டது குழந்தை. மூன்று வயதாகும் போது, தந்தை சிவகுரு காலமானார். ஆர்யாம்பாள் மிகுந்த சிரத்தையுடன் குழந்தையை வளர்த்து வந்தார். ஐந்து வயதிலேயே சகல சாஸ்திரங்களையும் படித்து தேறினார் சங்கரர். படிக்கும் காலத்தில் பிச்சை எடுத்து, தன் குருவுக்கு கொடுத்து விட்டு, மீதியை உண்பது சங்கரரின் வழக்கம்.
ஒருமுறை, ஒரு ஏழைத் தம்பதியின் வீட்டில் பிச்சை கேட்டார். வீட்டில் முதல் நாள் ஏகாதசி விரதம் முடித்து, மறுநாள் துவாதசி விரதம் முடிப்பதற்காக ஒரே ஒரு நெல்லிக் கனியை மட்டும் வைத் திருந்தனர்; அதுவும் உலர்ந்து போயிருந்தது. அதையும், அவ் வீட்டுப் பெண், நிறைந்த மனதுடன் சங்கரருக்கு அளித்தாள். பரம ஏழையாக இருந்தாலும், தர்மம் செய்யும் எண்ணமுள்ள அவளைப் போன்றவர்களிடமே செல்வம் நிறைந்திருக்க வேண்டுமென எண்ணிய சங்கரர், லட்சுமியை வேண்டி, கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். “கனகம்’ என்றால், “தங் கம்!’ “தாரை’ என்றால், “பொழிதல்!’ லட்சுமி, அவர் முன் தோன்றி, “அந்தப் பெண், முற்பிறவியில் புண்ணியம் ஏதும் செய்யவில்லை; அதனால், அவள் ஏழ்மையையே அனுபவித்தாக வேண்டும்…’ என்றாள். இருப்பினும், லட்சுமியிடம் வாதாடினார் சங்கரர். உடனே, அவ்வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனிகள் நிறைந்தன.
துறவறம் மேற்கொள்ள தாயிடம் அனுமதி கேட்டார் சங்கரர். ஆனால், தாயார் சம்மதிக்கவில்லை. ஒரு முறை தன் தாயுடன் நதியில் குளிக்கச் சென்றார். ஒரு முதலை அவரது காலைக் கவ்வியது. “துறவறம் பூண சம்மதித்தால், முதலை காலை விட்டு விடும். இல்லாவிட்டால், நான் இப்போதே முதலைக்கு இரையாகி விடுவேன்…’ என்றார் சங்கரர். குழந்தை உயிரோடு இருந்தால் போதுமென தாயார் சம்மதிக்க, முதலை, காலை விட்டது. அவர் காசிக்கு சென்று தங்கினார்.
தன் ஆயுட்காலம் முடிந்ததை எண்ணிய அவர், கங்கையில் மூழ்கச் சென்றார். வியாசர் அவரைத் தடுத்து, ” நீ செய்ய வேண்டிய புண்ணியச் செயல்கள் எவ்வளவோ உள்ளன; அவற்றை செய்ய இன்னும் சில ஆண்டுகள் வாழ்வாய்…’ என்றார். அதன் பின், பல அற்புதங்களைச் செய்தார் சங்கரர். இறந்து போன மகனின் உடலுடன், மூகாம்பிகை கோவிலுக்கு வந்த ஒரு தம்பதியின் மகனுக்கு, உயிர் கொடுத்தார். சைவம், வைணவம், காணாபத்யம், சாக்தம், கவுமாரம், சவுரம் என்று பிரிந்து கிடந்த மதங்களை இணைத்து, “சனாதன தர்மம்’ என்ற பெயரில் ஒரே மதமாக்கினார். 32 வயது வரை அவர் வாழ்ந்தார்.
முற்பிறவியில் செய்த கர்மவினைகளின் பலனாக ஏழ்மையை அனுபவிப்போர், கஷ்டத்திலும் தங்களால் முடிந்த தர்மத்தை பிறருக்கு செய்ய முன்வந்தால், அதற்கு பலன் நிச்சயம் என்பது சங்கரரின் சரிதம் நமக்கு சொல்லும் பாடம்?