தர்மம் செய்யுங்கள்

ஏழையாய் இருந் தாலும், தங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்ய வேண்டும் என்ற உயரிய தத்துவத்தை, ஆதிசங்கரரின் வரலாறு நமக்கு எடுத்துச் சொல்கிறது. அவர் பிறந்த நன்னாளான இன்று, அவரது சரிதத்தை படிக்கும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது.
கேரள மாநிலம், திருச்சூர் அருகிலுள்ள காலடியில் அவதரித் தார் ஆதிசங்கரர். இவரது காலம், ஏழாம் நூற்றாண்டு. இவரது தந்தை சிவகுரு; பணக்கார குடும்பம், படித்த குடும்பம். சிவகுருவுக்கு எர்ணா குளம் அருகிலுள்ள மேல்பாழூர் மனையைச் சேர்ந்த ஆர்யாம்பாளைத் திருமணம் செய்து வைத்தனர்; இருவருமே சிவ பக்தர்கள்.
இவர்களுக்கு நீண்டகாலமாக குழந்தை இல்லை. திருச்சூர் வடக்குநாதர் கோவிலுக்குச் சென்று, சிவனிடம், குழந்தை வரம் வேண்டி, தீவிர வழிபாடு செய்தனர். அவரது பக்தியின் பலத்தை சோதிக்க முடிவெடுத்தார் சிவபெருமான். சிவகுருவின் கனவில் தோன்றிய சிவன், “உனக்கு தீர்க்காயுள் உள்ள தீய குணங்களையுடைய, 100 புத்திரர்கள் வேண்டுமா அல்லது குறைந்த ஆயுளே உள்ள ஒரே ஒரு சிறந்த புத்திரன் வேண்டுமா?’ என்றார்.
“என் மனைவியிடம் கேட்டு சொல்கிறேன்…’ என்ற சிவகுரு, தூக்கத்திலிருந்து விழித்து, மனைவியிடம் நடந்ததைச் சொன்னார். “இது, நமக்கு சிவன் வைத்த சோதனை. இதில், நம் தேர்வு ஏதுமில்லை. அவர் ஏதோ முடிவு செய்து தான் இப்படி கேட்கிறார். எனவே, அவர் விருப்பம் எப்படியோ, அப்படியே செய்யட்டும்…’ என்றார் ஆர்யாம்பாள்.
இந்த முடிவை திருச்சூர் சென்று, வடக்குநாதரிடம் கூறி, பிரார்த்தித்தனர். சுவாமி மீண்டும் கனவில் தோன்றி, “நானே உங்களுக்கு புத்திரனாக பிறக்கிறேன்; ஆனால், ஆயுள் எட்டு தான்…’ என்று சொல்லி விட்டார். இறைவனே தங்கள் வயிற்றில் பிறப்பதாக தெரிவித்ததால், அவர்கள் மனதைத் தேற்றிக் கொண்டனர். ஆர்யாம்பாளின் வயிற்றில் ஐஸ்வரியமான ஒரு தேஜஸ் புகுந்தது; அவர் கர்ப்பமானார்.
சித்திரை மாத அமாவாசை கழித்து வந்த சுத்த பஞ்சமியை, வைகாச சுத்த பஞ்சமி என்பர். அன்று, சிவனுக்குரிய திருவாதிரை நட்சத்திரமும் இணைந்து வந்தது. ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்த மதிய வேளையில் அவதரித்தார் சங்கரர்.
குழந்தைக்கு, “சங்கரர்’ என்று பெயர் சூட்டப் பட்டது. இரண்டு வயதிலேயே எழுத்துக்களை வாசிக்கத் துவங்கி விட்டது குழந்தை. மூன்று வயதாகும் போது, தந்தை சிவகுரு காலமானார். ஆர்யாம்பாள் மிகுந்த சிரத்தையுடன் குழந்தையை வளர்த்து வந்தார். ஐந்து வயதிலேயே சகல சாஸ்திரங்களையும் படித்து தேறினார் சங்கரர். படிக்கும் காலத்தில் பிச்சை எடுத்து, தன் குருவுக்கு கொடுத்து விட்டு, மீதியை உண்பது சங்கரரின் வழக்கம்.
ஒருமுறை, ஒரு ஏழைத் தம்பதியின் வீட்டில் பிச்சை கேட்டார். வீட்டில் முதல் நாள் ஏகாதசி விரதம் முடித்து, மறுநாள் துவாதசி விரதம் முடிப்பதற்காக ஒரே ஒரு நெல்லிக் கனியை மட்டும் வைத் திருந்தனர்; அதுவும் உலர்ந்து போயிருந்தது. அதையும், அவ் வீட்டுப் பெண், நிறைந்த மனதுடன் சங்கரருக்கு அளித்தாள். பரம ஏழையாக இருந்தாலும், தர்மம் செய்யும் எண்ணமுள்ள அவளைப் போன்றவர்களிடமே செல்வம் நிறைந்திருக்க வேண்டுமென எண்ணிய சங்கரர், லட்சுமியை வேண்டி, கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். “கனகம்’ என்றால், “தங் கம்!’ “தாரை’ என்றால், “பொழிதல்!’ லட்சுமி, அவர் முன் தோன்றி, “அந்தப் பெண், முற்பிறவியில் புண்ணியம் ஏதும் செய்யவில்லை; அதனால், அவள் ஏழ்மையையே அனுபவித்தாக வேண்டும்…’ என்றாள். இருப்பினும், லட்சுமியிடம் வாதாடினார் சங்கரர். உடனே, அவ்வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனிகள் நிறைந்தன.
துறவறம் மேற்கொள்ள தாயிடம் அனுமதி கேட்டார் சங்கரர். ஆனால், தாயார் சம்மதிக்கவில்லை. ஒரு முறை தன் தாயுடன் நதியில் குளிக்கச் சென்றார். ஒரு முதலை அவரது காலைக் கவ்வியது. “துறவறம் பூண சம்மதித்தால், முதலை காலை விட்டு விடும். இல்லாவிட்டால், நான் இப்போதே முதலைக்கு இரையாகி விடுவேன்…’ என்றார் சங்கரர். குழந்தை உயிரோடு இருந்தால் போதுமென தாயார் சம்மதிக்க, முதலை, காலை விட்டது. அவர் காசிக்கு சென்று தங்கினார்.
தன் ஆயுட்காலம் முடிந்ததை எண்ணிய அவர், கங்கையில் மூழ்கச் சென்றார். வியாசர் அவரைத் தடுத்து, ” நீ செய்ய வேண்டிய புண்ணியச் செயல்கள் எவ்வளவோ உள்ளன; அவற்றை செய்ய இன்னும் சில ஆண்டுகள் வாழ்வாய்…’ என்றார். அதன் பின், பல அற்புதங்களைச் செய்தார் சங்கரர். இறந்து போன மகனின் உடலுடன், மூகாம்பிகை கோவிலுக்கு வந்த ஒரு தம்பதியின் மகனுக்கு, உயிர் கொடுத்தார். சைவம், வைணவம், காணாபத்யம், சாக்தம், கவுமாரம், சவுரம் என்று பிரிந்து கிடந்த மதங்களை இணைத்து, “சனாதன தர்மம்’ என்ற பெயரில் ஒரே மதமாக்கினார். 32 வயது வரை அவர் வாழ்ந்தார்.
முற்பிறவியில் செய்த கர்மவினைகளின் பலனாக ஏழ்மையை அனுபவிப்போர், கஷ்டத்திலும் தங்களால் முடிந்த தர்மத்தை பிறருக்கு செய்ய முன்வந்தால், அதற்கு பலன் நிச்சயம் என்பது சங்கரரின் சரிதம் நமக்கு சொல்லும் பாடம்?

%d bloggers like this: