மொஸில்லா சுறுசுறுப்பு

பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு 4 பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதனால், மொஸில்லா தன் அடுத்த பதிப்புகள் வெளியிடப்பட இருக்கும் நாட்களை அறிவித்துள்ளது. பயர்பாக்ஸ் 5, வரும் ஜூன் 21லும், பயர்பாக்ஸ் 6 ஆகஸ்ட் 18லும் வெளியிடப் படுகின்றன. 2011 ஆம் ஆண்டிலேயே அடுத்த பயர்பாக்ஸ் பதிப்பு 7ம் வெளியிடப்பட இருக்கிறது. தொடர்ந்து தன் ஒவ்வொரு பதிப்பிலும் புதிய வசதிகளை இணைத்து ஆறு வாரங்கள் ஆய்வு செய்து இவற்றை மொஸில்லா வெளியிடுகிறது.
பயர்பாக்ஸ் பிரவுசரின் ஒரு சிறப்பான வசதி அதற்கெனப் பிறர் தயாரித்து வழங்கும் ஆட் ஆன் தொகுப்புகளாகும். ஆனால் பல ஆட் ஆன் தொகுப்புகள் ஒரே நேரத்தில் பின்னணியில் இயங்குகையில், பிரவுசரின் வேகம் குறைவதாகக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. எனவே இந்த புரோகிராம் தயாரிப்பாளர்களிடம், அவற்றை முழுமையான திறனுடன் இயக்கும்படியும், மற்றவற்றைப் பாதிக்காத வகையில் அவை வடிவமைக்கப்பட வேண்டும் எனவும் வற்புறுத்துகிறது.
மொஸில்லா நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட் ஆன் புரோகிராம்கள் பயன்பாடு, பிரவுசரின் செயல்பாட்டினை மந்தப்படுத் துவதாக இருந்தாலும், பயனாளர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர், இன்டர்நெட் இணைப்பும் இதில் பங்கெடுக்கிறது என அறிவித்துள்ளது. வாரம் தோறும் சராசரியாக 100 ஆட் ஆன் தொகுப்புகளின் இயக்கத்தினை ஆய்வு செய்து, அவற்றைப் பயன்படுத்துகையில் எவ்வளவு வேகம் குறைகிறது என்பதனை மொஸில்லா அறிவித்து வருகிறது.
பிரவுசரின் செயல்பாட்டினை 10 சதவிகித நேரத்திற்கு மேல் பாதிக்கும் புரோகிராம்களின் தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு அவற்றைச் சரி செய்திடத் தேவையான ஆலோசனையை வழங்குகிறது.

%d bloggers like this: