குளம் வெட்டுவது ஏன்?

புதிது, புதிதாக கோவில் அமைப்பது, குளம் வெட்டுவது, நீர் நிலைகளை ஏற்படுத்துவது புண்ணியம் தான். ஆனால், ஏற்கனவே உள்ள கோவில்களையும், நீர்நிலைகளையும், அவை பழுதடைந்திருந்தால், அவற்றை சீர் செய்து, பயனுள்ளதாகச் செய்வது மகா புண்ணியம்; ஆனால், நடப்பது வேறுவிதமாக அல்லவா உள்ளது.
எங்கேயாவது ஒரு குளம் இருந்தால், அதை தூர்த்து, அந்த இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டி, பணம் சம்பாதித்து விடுகின்றனர். கோவில் இருந்த இடத்தில், பிளாட்டுகள் போட்டு, காலனியாக்கி விடுகின்றனர்; இதெல்லாம் கலிதோஷம். ஒரு நல்ல காரியம் செய்தவனுக்கும், அதைச் செய்யத் தூண்டியவனுக்கும் கூட புண்ணியலோக வாசம் கிடைக்கும் என்பதற்கு ஒரு சின்ன கதை…
கவுட தேசத் தலைவனான வீரபத்ரன், வேட்டையாட வனம் சென்றான். வெயிலில் தாகம் எடுத்தது.
அருகிலிருந்த குளத்துக்குப் போனான். அதில் தண்ணீர் இல்லை; வறண்டு போயிருந்தது. தன் உடை வாளால் ஒரு பள்ளம் தோண்டினான். அந்த பள்ளத்திலிருந்து சுவையான தண்ணீர் வந்தது. அதைப் பருகி, தாகம் தணித்துக் கொண்டான் வீரபத்ரன்.
அருகில் இருந்த மந்திரி, “அரசே… இந்த இடத்தை சுத்தம் செய்து, இன்னும் ஆழமாகவும், அகலமாகவும் வெட்டி, ஒரு குளம் ஏற்படுத்தினால், பல ஜீவன்களுக்கும், மக்களுக்கும் பயன்படும்; புண்ணியமும் கிடைக்கும்…’ என்றான். அரசனும், தன் ஆட்களைக் கூப்பிட்டு, அந்த குளத்தை சீர் செய்து ஆழப்படுத்த உத்தரவிட்டான். குளத்தில் நீர் நிரம்பியது; பல ஜீவன்களுக்கும், மக்களுக்கும் பயன்பட்டது.
இந்த புண்ணிய காரியத்தின் பயனாக அரசனும், மந்திரியும் எல்லா சுகங்களையும் அனுபவித்து, முடிவில் பிரம்மலோகம் போய் சேர்ந்து, பல்லாண்டு காலம் சுகமாக இருந்தனர் என்று கதை உள்ளது. புதிதாக ஏற்படுத்துவதை விட, பழையதை சீர் செய்வது மகா புண்ணியம். தண்ணீர் தானம் மிகவும் உயர்ந்ததாக சொல்லப்படுகிறது.
அதேபோல், அன்ன தானம், வஸ்திர தானம், கோவிலில் விளக்கு ஏற்றுதல் என்று பல வழிகளில் புண்ணியம் சேர்த்துக் கொள்ள முடியும். மனம் தான் இருக்க வேண்டும். பிரசாதம் தவிர, வேறு எதையும் கோவிலிலிருந்து வீட்டுக்கு எடுத்து வரக் கூடாது. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டால் நல்லது.

%d bloggers like this: