Daily Archives: மே 25th, 2011

மனஅழுத்தத்தைப் போக்கும் `ஸ்பிரே’!

மனஅழுத்தம், படபடப்பைப் போக்கும் ஒரு `ஸ்பிரே’யை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த `ஸ்பிரே’யை இலேசாக மூக்கருகே பீய்ச்சி, வாசத்தை நுகர்ந்தால் போதும், இரண்டு மணி நேரத்தில் மனம் அமைதியாகிவிடும் என்கிறார்கள்.

இந்த `ஸ்பிரே’யில் உள்ள இயற்கையான வேதிப்பொருள், மன நிலையைக் கட்டுப்படுத்தும் மூளைப் பகுதிக்கு ஊடுருவி, `மாயம்’ புரியும் என்று கூறுகிறார்கள்.

மனஅழுத்தத்தைப் போக்க ஏற்கனவே சில மருந்துகள் இருக்கின்றன. ஆனால் அவை பலன் தர சில நாட்கள் ஆகும். அவற்றுடன் ஒப்பிடும்போது தங்களின் `ஸ்பிரே’ உடனடியானது என்கிறார்கள் இதை உருவாக்கியிருக்கும் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த `ஸ்பிரே’யில் உள்ள வேதிப்பொருளான `நியூரோபெப்டைடு ஒய்’, மூளையில் ஏற்கனவே காணப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது. மூளையில் உள்ள நரம்புச் செல்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ள இந்த வேதிப்பொருளைப் பயன்படுத்துகின்றன.

நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவக் கல்வி நிலையத்தில் தற்போது சோதனை முறையில் இந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நடத்தை, மனநிலையைக் கட்டுப்படுத்துவதில் மூளையில் காணப்படும் `நியூரோபெப்டைடு ஒய்’ உள்ளிட்ட வேதிப்பொருட்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்கிறார்கள், விஞ்ஞானிகள். புதிய `ஸ்பிரே’யை 25 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட 15 பேரிடம் பரிசோதித்துத் திருப்தி அடைந்திருக்கும் ஆய்வாளர்கள், அடுத்தகட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உளவு பார்க்கும் ரோபோ கேமரா

வானத்தில் பறந்தபடியே ஆயிரம் அடி தொலைவில் இருந்து தெள்ளத் தெளிவாக படம் எடுக்கக் கூடிய ரோபோ கேமராவை கனடாவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. கனடாவை சேர்ந்த நிறுவனம் ஏரியன் லேப்ஸ். உளவு நிறுவனங்களுக்கு தேவையான எலக்ட்ரானிக் கருவிகளை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் உருவாக்கியிருப்பது ‘ஏரியன் ஸ்கவுட்’ எனப்படும் ரோபோ கேமரா. இதில் உள்ள தொடுதிறன் மானிட்டரில் (டச் ஸ்கிரீன்) முதலில் கூகுள் நிறுவனத்தின் வேர்ல்டு மேப் சாப்ட்வேர் மூலமாக நமக்கு வேண்டிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

உதாரணமாக, ‘நியூயார்க்’ என்று தேர்வு செய்தால், ஏரியன் ஸ்கவுட் உடனே புறப்பட்டு நியூயார்க் நோக்கி பறக்கத் தொடங்கும். அங்கு சென்றதும் 500 அடி உயரத்தில் பறந்தபடியே, கீழே நடப்பவற்றை தனது டிஜிட்டல் கேமராவில் போட்டோவாக அல்லது வீடியோ காட்சியாக தொடர்ச்சியாக பதிவு செய்யும். கீழே இருந்து பார்த்தால் ரோபோவை கண்டுபிடிக்க முடியாது. சுமார் ஆயிரம் அடி தொலைவில் இருந்துகூட தெள்ளத் தெளிவான படங்களை எடுக்கும்.

பதிவாகும் காட்சிகளை இமெயிலுக்கோ, ஐபோனுக்கோ அனுப்பிக்கொண்டே இருக்கும். இதன் விலை ரூ.22 லட்சம். காரில் மிக வேகமாக செல்பவரின் முகத்தைக்கூட இக்கேமரா தெளிவாக படம் பிடிக்கும். தப்பிச் செல்லும் கொள்ளையரை பிடிக்கவும், மறைந்திருக்கும் கிரிமினல்களை பிடிக்கவும் இது உதவிகரமாக இருக்கும் என்கிறது ஏரியன் லேப்ஸ் நிறுவனம்.

அறிவியல் தகவல்களுக்கு ஒரு தேடுதளம்

தேடலுக்கான தளம் என்றால், நம் நினைவில் முதலில் நிற்பது கூகுள் தேடுதளம் மட்டுமே. ஆனால் அறிவியல் தகவல்கள் தேடுவதற்கு மட்டும் என ஓர் தளம், கூகுள் தேடல் தளத்தைக் காட்டிலும் முன்னணி இடம் பெற்று இயங்குகிறது. இதன் பெயர் “சைரஸ் (Scirus)’. இயங்கும் முகவரி http://www.scirus.com. கூகுள் தளத்திற்கும் மேலாக இதனை நீங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களை, இந்த தளம் கொண்டுள்ள http://www.scirus.com/srsapp/aboutus/ என்ற இணையப் பக்கத்தில் காணவும்.
இந்த தேடுதல் தளம் கொண்டுள்ள முகப்புப் பக்கத்தில், ஏறத்தாழ 41 கோடி தளங்கள் உள்ளன. தேடும்போது, முக்கிய சொல், தலைப்பு அல்லது அறிவியல் கலைச் சொல் என ஏதேனும் ஒன்றைத் தரலாம். அந்த தலைப்பு அல்லது சொல் குறித்த தளங்கள் மட்டுமின்றி, பல முக்கிய கட்டுரைகளையும் இந்த தளம் சுட்டிக் காட்டுகிறது.
இதனுடைய ஒரு சிறப்பம்சம் என்னவெனில், அறிவியல் அல்லாத மற்ற தளங்களை இந்த தேடல் தளமே ஒதுக்கிவிடுகிறது. எனவே தொடர்பு இல்லாத மற்ற தளங்களின் லிங்க் மீது கிளிக் செய்து, அவற்றைத் தேவையின்றி இறக்கி நேரத்தை வீணடிக்கும் வேலை இங்கு எழாது.
இந்த தளம் சுட்டிக் காட்டும் தளங்கள் அனைத்தும், 1) அறிவியல் சார்ந்த, தொழில் நுட்பம் அல்லது மருத்துவம் சார்ந்த தகவல்கள் உள்ள தளங்களாக இருக்கும்.
2)அண்மைக் காலத்தில் அந்த அறிவியல் பிரிவில் வெளியான அறிக்கைகள், வல்லுநர்களின் கட்டுரைகள், காப்புரிமை பெற்ற தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள், ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வரும் ஆய்வு இதழ்கள் ஆகியவற்றைக் காட்டும் இணைய தளங்களுக்கான தொடர்புகளாக இருக்கும்.
3)ஆய்வு மேற்கொள்பவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கான தனிப்பட்ட தகவல்களைக் காட்டும் தளங்களாக இருக்கும்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக, அறிவியல் தேடல்களுக்கான இணைய தளத்திற்கான விருதை இந்த தளம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தளத்தின் மூலம் குறிப்பிட்ட பொருள் குறித்த தேடல் மட்டுமின்றி, கட்டுரை எழுதியோர், கட்டுரைத் தலைப்பு, அதனை வெளியிட்ட ஆய்வு இதழ் ஆகியவற்றின் அடிப்படையிலும் தேடலாம். நாட்கள் அடிப்படை யிலும் தேடலை மேற்கொள்ளலாம்.
தளங்கள் மட்டுமின்றி, பல்வேறு ஆய்வு இதழ்களில் வெளியான கோடிக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் தாங்கியுள்ள தளங்களையும், இந்த தேடல் தளம் நமக்குக் காட்டுகிறது.
அறிவியல் அடிப்படையில் இயங்கும் இன்றைய உலகில் நாம் அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய தளம் இது.

புற்று நோய்: – ஏன்? – எப்படி?

– புற்று நோய்.

– `யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய் இது!

– ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன. அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது.

புற்று நோய்க்கு என்ன காரணம்?

பல காரணங்கள் இருக்கின்றன. பாரம்பரியத்தாலும் வரும். பழக்கவழக்கங்களாலும் வரும். உணவாலும் வரும். அதிகமாக உடலில்படும் சூரிய ஒளியாலும் வரும். ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும், இருபாலருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு. ஜீரண குடல் புற்றும், விரைப் பகுதி புற்றும் ஆண்களுக்கு அதிகம் வருகின்றன. மார்பு புற்றும், தைராய்டு புற்றும் பெண்களுக்கு அதிகம் வருகிறது.

இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறிகள் இருக்கின்றன. நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி. இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகுறிகள் மாறும். ஆயினும் பொதுவாக 10 அறிகுறிகள் உள்ளன. அவை: குணமாகாத புண். ரத்த வாந்தி அல்லது புறவழி ரத்தப்போக்கு. சளியில் ரத்தம் வெளிப்படுதல். கட்டி பெரிதாகிக் கொண்டே இருப்பது. மச்சத்தில் அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுதல். கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம். திடீரென ஏற்படும் எடை குறைவு, காய்ச்சல். (குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு) மார்பில் வலியற்ற கட்டி தோன்றுதல். உணவை விழுங்குவதில் ஏற்படும் சிரமம். திடீரென்று தோன்றும் அதிக மலச்சிக்கல்.

எந்தெந்த பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு என்னென்ன காரணங்கள்?

வாய் புற்று: புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.

நுரையீரல் புற்று: புகைப் பிடித்தல், ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.

வயிற்றுப் புற்று: மது அருந்துதல், புகைப்பிடித்தல், வறுத்த- பொரித்த- உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.

ஈரல் புற்று: மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.

மார்புப் புற்று: குழந்தையில்லாமை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.

கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் இப்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது)

சரும புற்று: சருமத்தில் அதிக அளவு வெயில் படுதல், சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள், நாள்பட்ட ஆறாத புண்.

(இந்தெந்த புற்றுநோய்க்கு இவைகள் காரணங்கள் என்று சொல்லப்பட்டாலும், பிரச்சினைக்குரிய பழக்கமே இல்லாத ஒருவருக்குகூட இந்த நோய் ஏற்படலாம். `மது அருந்தமாட்டார். புகைப்பிடிக்கும் மாட்டார். அவருக்கு வயிற்று புற்றுநோய் வந்துவிட்டதே’ என்று வருந்திப்பயனில்லை. முற்றிலும் மாறுபட்ட இதர காரணங்களால் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்)

இந்த புற்றுநோய்களை தடுக்க முடியுமா?

தடுக்க முயற்சிக்கலாம். மேற்கண்ட பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருந்தால் முடிந்த அளவு தடுக்கலாம்தானே! குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் புகையிலை, மது, புகைப்பிடித்தல், பான்பரக் பயன்படுத்துதல் போன்றவைகளை தவிர்த்திடுங்கள். முடிந்த அளவு தவிர்த்திட முடியும்.

`ஹியூமன் பபிலோமா வைரஸ்’ (Human Papilloma Virus – H.P.V) மூலம் கருப்பை புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய் ஏற்படுகிறது. இவைகளை தடுப்பதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் உள்ளன. அவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நோய் தாக்கியிருப்பதை எத்தகைய சோதனை மூலம் கண்டறிய முடியும்?

முதலில் நாம் குறிப்பிட்டிருக்கும் 10 அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டால் உடனே டாக்டரிடம் சென்றுவிடவேண்டும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி- எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், என்டோஸ்கோபி அல்லது ஐசோடோபிக் ஸ்கேன்கள் போன்றவைகளில் உங்களுக்கு எந்த மாதிரியான பரிசோதனை தேவை என்பதை டாக்டர் சொல்வார். அதைவைத்து நோயை கண்டறிவார். ஆனால் பயாப்ஸி மூலமே நூறு சதவீதம் கண்டறிய முடியும்.

சரி கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்திவிட முடியுமா?

ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப்படுத்திவிடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும். முற்றிய நிலை என்றால் குணப்படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் சில வகை புற்றுநோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு `பெட்டன்சியலி க்யூரபுள் கேன்சர்’ என்று பெயர். சில வகை ரத்த புற்று, நெரி கட்டுவதில் ஏற்படும் புற்று, ஆண் உறுப்பில் பிராஸ்டேட் சுரப்பி அருகில் தோன்றும் புற்று போன்றவை இந்த வகையை சார்ந்ததாகும்.

புற்றுநோயை குணப்படுத்த ஆபரேஷன் செய்துகொள்வது அவ்வளவு நல்லதில்லை என்பது சரியா?

காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நவீன ஆபரேஷன் முறைகளும்- கருவிகளும் வந்துகொண்டிருக்கின்றன. மருத்துவ நிபுணர்களும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். 30, 40 வருடங்களுக்கு முன்னால் புற்றுநோய்க்கு `மேஜர்’ ஆபரேஷன்கள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. இப்போது `சிம்பிளான’ ஆபரேஷன்கள் செய்து, நவீன மருந்து- நவீன தெரபிகள் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் மற்ற நோய்களுக்கான ஆபரேஷன்களோடு ஒப்பிடும்போது புற்றுநோய்க்கான ஆபரேஷன் சற்று `ரிஸ்க்’தான். இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை.

புற்றுநோய்க்கு இருக்கும் சிகிச்சைகள் என்னென்ன?

மூன்றுவிதமான சிகிச்சைகள் கையாளப்படுகின்றன. அவை: 1. ஆபரேஷன்,
2. கீமோ தெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்), 3. ரேடியேஷன் (எக்ஸ்-ரே ட்ரீட்மென்ட்).

பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி, DSc., F.R.C.S.

கண்களை கண்காணித்தல் அவசியம்!

கோடையில் சூடு காரணமாக பாதிக்கப்படும் உறுப்புகளில் முக்கியமானது கண்! கண்வலி, கருவளையம் என்று கண் பாதிப்பின் வெளிப்பாடு நமக்கு தெரியும்போது, உடனே அதற்கான சிகிச்சையை எடுப்பது நல்லது. கண்ணுக்குக் கீழே உள்ள ரத்த நாளங்களில் இருந்து சிவப்பணுக்கள் வெளியே அருகே உள்ள சருமப் பகுதிக்குச் சென்றுவிடும்போது கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுகிறது. உங்கள் உடம்பில் உள்ள நொதிகள் அந்த ரத்த சிவப்பணுக்களை உடைக்கின்றன. `ஹíமோகுளோபின்’ உடைக்கப்படும்போது மீதமுள்ள பகுதிகள் அடர்நíல- கறுப்பு நிறம் அடைகின்றன. அவை தோலில் ஏற்படும் சிராய்ப்பு போல கருவளையங்களை உண்டாக்குகின்றன. எனவே கண்களுக்குக் கீழே ஏற்படும் கருவளையமானது, ரத்த நாளங்களின் இருந்து வெளியேறுபவற்றால் உருவாவதுதான். கண்களைச் சுற்றியுள்ள சருமம் மென்மையாகவும், ரத்த நாளங்கள் சரும வெளிப்பரப்பு மிக அருகில் இருப்பதாலும் கருவளையங்கள் `பளிச்’சென்று தெரிகின்றன. பலருக்குக் கண்களுக்குக் கீழே உள்ள சருமம் ஒளி ஊருவக்கூடியதாகவும் இருக்கிறது. அதுவும் கருவளையங்கள் தெளிவாகத் தெரிவதற்கு ஒரு முக்கியக் காரணம். நீங்கள் ஜலதோஷம் அல்லது சைனஸால் பாதிக்கப்பட்டிருக்கும்போது கண்களுக்குக் கீழே உள்ள ரத்தக் குழாய்களுக்கு அழுத்தம் அதிகரிப்பதாலும் கருவளையம் ஏற்படுகிறது. தவறான கண்ணாடி, அலர்ஜிகள் போன்றவையும் கருவளையங்களுக்குக் காரணமாக அமையலாம். கண்களுக்கு ஒரு மலர்ச்சியை அளிக்கவும், கண்களுக்குக் கீழே நிற மாற்றத்தைத் தவிர்க்கவும் வெள்ளரித் துண்டுகள் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. `டீ பேக்’கை வெநëநீரில் நனைத்து கண்களுக்குக் கீழே ஒத்தடமிடலாம். அதில் உள்ள `டானின்’ பலனளிக்குமë. நிறையத் தண்ணீர் குடிப்பதும் நல்லது.

சர்க்கரை நோயை வெற்றிகரமாக குணப்படுத்துவதற்கான முன்னோட்டம்

பெரும்பான்மையான சர்க்கரை நோயாளிகள் Type-2 சர்க்கரை நோயால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். Type-2 சர்க்கரை நோய் என்பது இன்சுலீன் பற்றாக்குறையால் வருவதில்லை. மாறாக சுரக்கின்ற இன்சுலீனை செயல்பட விடாமல் உடம்பிலுள்ள செல்கள் அதை எதிர்ப்பதனால் இந்த சர்க்கரை நோய் வருகிறது. நகரவாசிகள் பெரும்பாலும் இப்பொழுது அமர்ந்த இடத்திலேயே வேலை செய்வதால் உடம்பிற்கு தேவையான உடற்பயிற்சி கிடைக்காமல் போய்விடுகிறது. இது மட்டுமின்றி அளவுக் கதிகமாக செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்கள் இப்பொழுது சுலபமாகக் கிடைக்கின்றது. ஒரு வரம்பின்றி நாள்தோறும் மக்கள் இத்தகைய உணவுப் பண்டங்களை உண்பதால் ரத்த ஓட்டத்தில் ஏராளமான கார்போஹைட்ரேட் என்ற மாவுச்சத்து சேர்ந்து விடுகிறது. இதை ஜீரணிப்பதற்காக நம்முடைய உடம்பும் ஏராளமான இன்சுலீனை சுரந்து கொண்டிருக்கிறது. இன்சுலீன் குறைந்தால் செல்கள் பாதிக்கப் படுவது எவ்வளவு உண்மையோ அதே அளவிற்கு இன்சுலீன் அதிகமானாலும் செல்கள் பாதிக்கப்படுவதும் உண்மை. ஆகவே இன்சுலீன் அளவு அதிகரிக்கும் பொழுது அதை உள்ளே விடாமல் செல்கள் தடுக்கின்றன. இப்படி குறைவான உடற்பயிற்சி மற்றும் தவறான உணவு பழக்கங்கள் மற்றும் செல்களைப் பாதிக்க கூடிய அளவிற்கு இன்சுலீன் சுரந்து போதல் அதற்கு உடம்பில் வருகின்ற எதிர்ப்பு என்று இவையெல்லாம் சேர்ந்து Type-2 சர்க்கரை நோயை கொண்டு வந்துவிடுகிறது. இம்மாதிரியான சர்க்கரை நோய் நகரவாசிகளிடையே வேகமாக பரவியும் வருகிறது.

இத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இப்பொழுது சுலபமாகக் கிடைக்கின்ற மாத்திரைகளை உட்கொள்கின்றனர். மருந்தின் விளைவாக சர்க்கரை லெவல் குறையும் பொழுதோ நார்மலுக்கு வரும் பொழுதோ இப்படியே ஆயுள் பூராவும் சர்க்கரையை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். இனிமேல் உடல் நலத்தை பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று நோயாளிகள் எண்ணுகிறார்கள். ஆனால் இப்படி நம்புவது தவறான நம்பிக்கையாகும். மருந்து, மாத்திரைகள் நோயின் சின்னங்களையும், அறிகுறிகளையும்தான் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் அடிப்படைக் காரணங்களான உடற்பயிற்சியின்மை மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் ஆகியவை தொடரும் வகையிலும் நோயின் பாதிப்பு தொடரத்தான் செய்யும். இந்த அடிப்படைக் குறைபாடுகளை தீர்க்காத பட்சத்தில் நோயாளி மேலும் மேலும் அதிகமாக மாத்திரைகளைச் சாப்பிட்டால்தான் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம் என்ற நிலை வரும். இரத்த ஓட்டம், அடர்த்தியாகி வேகமும் குறைந்து விடுகிறது. இதன் காரணமாக இதயம், ஈரல், சிறுநீரகம், கண்கள் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்காமல் அவைகளுடைய செயல்பாடு பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் நீண்டகாலம் இருக்கும் பொழுது நோயாளியின் ஆயுட்காலம் 13.5 ஆண்டுகளுக்கு குறைவதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

Dewayne Mcculley என்ற அமெரிக்க என்ஜீனியர் ஒருவருக்கு திடீரென்று Type-2 சர்க்கரை நோய் உருவாகி அவருடைய சர்க்கரை லெவல் கிடுகிடுவென 1300 mg/dl புள்ளிகளுக்கு உயர்ந்து விட்டது. அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அவர் பிழைப்பாரென்று யாருமே எதிர்ப் பார்க்கவில்லை. இருந்தாலும் உடனடியாக சிகிச்சை ஆரம்பித்ததன் பலனாக அவருடைய உயிரைக் காப்பாற்ற முடிந்தது. தன் உடம்புக்கு திடீரென்று இந்தப் பாதிப்பு எப்படி வந்தது? இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று அவர் யோசிக்க ஆரம்பித்தார். சர்க்கரை வியாதியைப் பற்றி கிடைத்த தகவல்களையெல்லாம் படித்து அந்த வியாதியைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டார். ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் என்ற நிலை அவருக்குப் பிடிக்கவில்லை. தனக்கு வந்துள்ள இந்தக் குறைபாடு தவறான உணவுப் பழக்கங்களாலும், போதிய உடற்பயிற்சியின்மையாலும்தான் வந்திருக்கிறது என்று நம்பினார். ஆகவே தன் உணவுப் பழக்கங்களை மாற்ற ஆரம்பித்து தான் சாப்பிடும் கார்போஹைட்ரேட் அளவை பெரும் அளவு குறைத்தார். மாவுச்சத்து மிக்க நன்கு பதப்படுத்தப்பட்ட செயற்கையாக சுவையூட்டப்பட்ட உணவுப் பண்டங்களை சாப்பிடுவதைக் குறைத்தார். இதற்குப் பதிலாக super-meal என்ற ஒரு புது உணவுத் திட்டத்தைத் தயாரித்தார். இந்த உணவுத் திட்டத்தில் 50% கார்போஹைட்ரேட் 25% புரோட்டீன், 25% கொழுப்புச்சத்து கிடைக்குமளவிற்கு உணவுப் பண்டங்களைச் சேர்த்தார். இவற்றோடு கூட கால்சீயம் மற்றும் விட்டமின்கள் ஆகிய கூடுதல் சத்துப் பொருள்களையும் சேர்த்தார். இந்த super-meal திட்டத்தில் நிறைய காய்கறிகள் மற்றும் கீரை வகைகளையும் சேர்த்துக் கொண்டுள்ளார். பப்பாளி, பம்பளிமாஸ், என்ற பழவகை களையும், முட்டைகோஸ் ஆகியவற்றை சேர்க்கிறார். அரிசியானாலும், கோதுமையானாலும், பழுப்பு நிற அரிசியினால் செய்யப்பட்ட சாதம் மற்றும் பழுப்பு நிற கோதுமையால் செய்யப்பட்ட ரொட்டியைத்தான் சாப்பிடச் சொல்கிறார். இந்த முறையான உணவுத் திட்டம் மற்றும் போதிய உடற்பயிற்சி ஆகிய இரண்டின் காரணமாக நாலே மாதங்களில் தனக்கு வந்த சர்க்கரை நோயிலிருந்து விடுபட்டார். இப்பொழுது மருந்து மாத்திரைகளின் உதவியில்லாமலேயே வெறும் உணவு கட்டுப்பாட்டின் மூலமாகவே சர்க்கரை நோயின்றி ஆரோக்கியமாக இருக்கின்றார்.

அவர் தயாரித்த super meal அமெரிக்கர்களுக்காக தயார் செய்யப்பட்டது என்றாலும் நம் நாட்டில் கிடைக்கின்ற உணவுப் பொருட்களை வைத்துக் கொண்டு நமக்கேற்ற மாதிரி உணவு தயார் செய்து கொள்ளலாம். ஒரு பக்கம் அவர் காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டுமென்று வலியுறுத்துகிறார் என்றாலும் அதே சமயத்தில் இன்னொரு பக்கம் மணிலா எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்ற எண்ணெய்களுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய்யை வறுவலுக்கு பயன் படுத்தச் சொல்கிறார். அவர் தவிர்க்க வேண்டுமென்று சொல்வதில் சர்க்கரை சத்து மிகுந்த பழங்களான வாழைப்பழம், திராட்சை, அன்னாசி போன்றவைகளும், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவைகளும் அடங்கும். நம்முடைய அன்றாட உணவில் 25%ஆவது கறி, மீன் வகைகள் இருக்கலாம் என்று அவர் சொல்கிறார் என்றாலும் சைவ சாப்பாடு சாப்பிடும் பல இந்தியர்களுக்குப் பொருந்தாது. ஆகவே அவர்கள் புரதச்சத்து பெறுவதற்காக நிறைய தயிர் மற்றும் சோயா, முந்திரி, மணிலா கொட்டைகளைச் சாப்பிடலாம்.

உடற்ப்பயிற்சியை மிக முக்கியமாக‌ ஆக எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் கருத்துப்படி தினசரி காலையிலும், மாலையிலும் ஒரு மணி நேரமாவது வேகமாக நடக்க வேண்டும் என்கிறார். எடை கூடுதலாக இருப்பது மற்றும் தொப்பை போட்டிருப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்கிறார். கூடுதல் எடைக்கும் உடம்பின் உடைய இன்சுலீன் எதிர்ப்பிற்கும் சம்மந்தம் இருக்கிறது என்கிறார். அவருடைய ஆராய்ச்சியில் கூடுதல் எடையை குறைத்தவர்களுக்கு சர்க்கரை அளவும் நன்றாக குறைந்துள்ளதாகச் சொல்கிறார்.

Dewayne Mcculley தான் சாதித்ததை மற்ற சர்க்கரை நோயாளிகளும் சாதிக்கலாம் என்று திட்டவட்டமாகச் சொல்கிறார். அந்த நம்பிக்கையில்தான், தன்னுடைய அனுபவங்களையும், தன்னுடைய super meal திட்டங்களையும், தான் இந்த சர்க்கரை நோயி லிருந்து மீண்ட விவரங்களையும், தான் எழுதியுள்ள Death to Diabetes என்ற புத்தகத்தின் மூலம் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். அவருடைய ஆலோசனைகளையும், வழி காட்டல்களையும் பின்பற்றுபவர்கள் எவரும் சர்க்கரை வியாதியிலிருந்து விடுபட்டு நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார்கள் என்பது உறுதி.

இமெயில் கடிதங்கள்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு முக்கிய டிஜிட்டல் சாதனம் இமெயில். இதனை முழுமையாகப் பயன்படுத்த சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.

பதில் அனுப்ப:
நமக்கு வந்துள்ள கடிதங்களைப் படித்துவிட்டு நாம் அப்படியே விட்டு விடுவதில்லை. அதற்கான பதிலைத் தயாரித்து அனுப்புகிறோம். அப்போது சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அந்தக் கடிதம் நமக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் அனுப்பப் பட்டிருக்கலாம். அல்லது, பலருக்கும் அந்த கடித்ததில் உள்ள விஷயம் தெரிய வேண்டும் என்பதற்காக, அது நகலாக மேலும் சிலருக்கு அனுப்பப் பட்டிருக்கலாம். அதனை அந்தக் கடிதத்திலேயே காணலாம். நகல் பெற்றவர்களின் இமெயில் முகவரிகள் அங்கு தரப்பட்டிருக்கும். இந்தச் சூழ்நிலையில், நீங்கள் ரிப்ளை பட்டனைத் தட்டி பதில் கடிதம் எழுதினால், அதனை எழுதியவருக்கு மட்டுமே அந்த பதில் போகும். ஆனால் நீங்கள் அந்தக் கடிதத்தை நகலாகப் பெற்றவர்களும், உங்கள் பதில் கடிதத்தினையும் படிக்க வேண்டும் என எண்ணினால் பதில் அனுப்ப வேண்டிய கடிதத்தைத் திறந்த பின்னர், டூல்பாரில் Reply to All என்ற பட்டனை அழுத்தவும். இமெயில் மெசேஜ் விண்டோ கிடைக்கும். இங்கு பதிலை எழுதி முடித்தவுடன் Send பட்டனை அழுத்தினால், பதில் கடிதம் மூலக் கடிதம் பெற்ற அனைவருக்கும் அனுப்பப்படும்.
ருசிகரமான அல்லது பயன் தரத்தக்க கடிதம் ஒன்றைப் பெறுகிறீர்கள். அதனை உங்களின் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்களும் பெற்று பயன் அடைய எண்ணுகிறீர்கள். இதனை பார்வேர்ட் செய்தால் போதும். அனுப்ப வேண்டிய தகவல் கொண்ட கடிதத்தினைத் திறந்து பின் டூல் பாரில் Forward பட்டனை அழுத்தவும். பார்வேர்ட் மெசேஜ் விண்டோ ஒன்று திறக்கப்படும். இதில் To பெட்டியில் நீங்கள் யாருக்கு அனுப்ப வேண்டு மென்று திட்டமிடுகிறீர்களோ அவர்களின் இமெயில் முகவரிகளை டைப் செய்து பின் கடிதத்துடன் உங்கள் குறிப்புகளையும் அமைத்து, Send பட்டனை அழுத்தினால் கடிதம் பார்வேர்ட் செய்யப்படும். செய்யப்பட்டு முடிந்தவுடன் பார்வேர்ட் மெசேஜ் விண்டோ தானாக மூடப்படும்.

ஸ்பெல் செக் :
நாம் அனுப்பும் கடிதங்கள் பிழைகள் ஏதுமின்றி அனுப்பப்படுவதனையே நாம் விரும்புவோம். கடிதத்தின் டெக்ஸ்ட்டில் எழுத்துப்பிழைகள் உள்ளதா என்று கம்ப்யூட்டரே சோதனை செய்திடும். இதற்கான செட்டிங் வழிகள்: 1.முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு ஏதேனும் பதியப்பட்டிருக்க வேண்டும். 2. அவுட்லுக் எக்ஸ்பிரஸ் தொகுப்பைத் திறந்து இயக்கவும். 3. பின் டூல்ஸ் மெனு கிளிக் செய்து வரும் பிரிவுகளில் ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக் கவும். 3. டேப்களுடன் வரும் விண்டோவில் ஸ்பெல்லிங் டேபில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் General options என்ற பிரிவில் கிளிக் செய்து “Always check spelling before sending” என்று இருக்கும் இடத்திற்கு எதிரான செக் பாக்ஸில் ஒரு டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். மவுஸை அதன் மீது வைத்துக் கிளிக் செய்தால் டிக் அடையாளம் ஏற்படுத்தப் படும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் கடிதம் டைப் செய்து அதனை அனுப்புவதற்கான சென்ட் பட்டனை அழுத்தினால் அப்போது தவறான சொற்களுக்குச் சரியான எழுத்துக்களை அவுட்லுக் எக்ஸ்பிரஸ் காட்டும். இந்த வசதி அனைத்து இமெயில் கிளையண்ட் புரோகிராம்களிலும் (ஜிமெயில், இடோரா, தண்டர்பேர்ட் போன்ற) உண்டு.

மாலைக்குள் பாம்பு- கவியரசு கண்ணதாசன்

மாலைக்குள் பாம்பு

கவியரசு கண்ணதாசன்

`உலகத்தைப் பிரபஞ்சம்’ என்றது வடமொழி. பஞ்ச பூதங்களின் சேர்க்கைதான் உலகமாக உருவாகி இருக்கிறது. அதனாலேயே, இந்தப் பெயர்.

இந்த உலகத்தை மறந்து, இதில் ஏற்படும் பற்று, பாசம், இன்பம், துன்பம் அனைத்தையுமே மறந்து இறைவனிடம் லயிப்பது எப்படி? அந்த ஞானத்தைப் பெறுவது எப்படி?

அழகான பெண் கண்ணெதிரே தோன்றினாலும் அதில் அவள் தெரியக்கூடாது; இறைவனே தெரிய வேண்டும்.

கோடிக்கணக்கான ரூபாய்கள் கண் எதிரே கொட்டிக் கிடந்தாலும், அதிலே செல்வம் தெரியக்கூடாது; தெய்வமே தெரிய வேண்டும்.

உலகத்திலேயே உயர்ந்தது என்று கருதப்படுகிற பதவியே உனக்குக் கிடைத்தாலும், அந்தப் பதவியின் சுகம் உனக்குத் தெரியக்கூடாது; பரம்பொருளே தெரிய வேண்டும்.

உற்றார் உறவினர்கள் செத்துக்கிடக்கும்போது கூட அங்கே ஒரு சடலம் சாய்ந்து கிடப்பது உனக்குத் தெரியக் கூடாது; தர்மதேவன் பள்ளி கொண்டிருப்பது தெரிய வேண்டும்.

`இன்பங்களில் அவன்; துன்பங்களில் அவன்; பிறப்பில் அவன்; இறப்பில் அவன்.’

`அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த மூர்த்தியாக’ அவனே உன் கண்ணுக்குத் தெரிய வேண்டும்.

இது எப்படிச் சாத்தியமாகும்?

அழகான மான்குட்டி இறந்து போனால், உள்ளே இருக்கும் மாமிசப் பிண்டத்தை வெளியே தூக்கி எறிந்து விட்டு அதைப் பாடம் பண்ணி வைத்துவிட வேண்டும்.

கல்லின்மீது மழை விழுந்தாலென்ன, வெயில் விழுந்தாலென்ன?

சிலையின் மீது தண்ணீரை ஊற்றினாலென்ன, வெந்நீரை ஊற்றினாலென்ன?

சலனங்களுக்கு ஆட்படாத சமநிலை அதுவே.

அந்தச் சமநிலையில் இறைவனைக் காணமுடியும்.

மனிதனைப் பாவம் செய்யத் தூண்டுவது எது என்று கண்ணனிடம் அர்ஜுனன் கேட்டான்.

அதன் பெயரே `ஆசை’ என்றான் கண்ணன்.

பகவத் கீதை இதைக் கூறுகிறது.

காம குரோத மத மாச்சரியங்கள் ஒன்றா, இரண்டா?

எதுவும் பூர்த்தியடைவதில்லை.

`இத்தோடு போதும்’ என்று எதையும் விடமுடிவதில்லை.

நினைவுகள் பின்னிப் பின்னி இழுக்கின்றன.

மனித வீணையில் விநாடிக்கு விநாடி சுதிபேதம்.

ஆயிரக்கணக்கான சிக்கல்களில் இருந்து விடுபட்டு ஆண்டவனிடத்தில் ஐக்கியமாவதற்கு இந்துமதம் வழி காட்டுகிறது.

அதிலே ஒரு சுகம் இருக்கிறது; பயமற்ற நிலை இருக்கிறது.

வாழ்ந்துக்கொண்டே சாவது லெளகீகமாகி விட்டால், செத்தவன் போல் வாழ்வதுதான் ஞானமாகி விடுகிறது.

தாமரை இலைத் தண்ணீரை இந்து மதம் உதாரணம் காட்டுகிறது.

அதையும் தாண்டித் தத்தளிக்காத தண்ணீராக வாழ்வதற்கும் வழி சொல்கிறது.

ஒரு கட்டம் வரையில் இனிப்பை ருசி பார்த்த பிறகு அதுவே கசப்பாகி விடுகிறது.

கசப்பை உணரத் தொடங்கும் போது, வாழ்க்கை வெறுப்பாகி விடுகிறது.

வெறுப்பே வளர்ந்து வளர்ந்து, இதயம் நெருப்பாகி விடுகிறது.

இந்த வளர்ச்சிக்கு ஆசைதான் காரணமாகி விடுகிறது.

பிரபஞ்ச உணர்ச்சிகளில் இருந்து தன்னை முற்றிலும் விலக்கிக் கொண்டு, சாவைக் கண்டு அழாமலும், பிறப்பைக் கண்டு மகிழாமலும், ஞான யோக நிர்விகல்ப சமாதி அடைவதில் ஒரு சுகம் இருக்கிறது.

`இந்தப் பூமியில் வாழ்ந்துகொண்டே இந்தப் பூமியின் நிகழ்ச்சிகளுக்கு ஆட்படாமல் இருப்பது எப்படி?’ என்று கேட்பீர்கள்.அதைத்தான் சொல்ல வருகிறேன்.

சில நாட்களுக்கு முன் பாதி முடிந்த தெலுங்குப் படம் ஒன்றைப் பார்த்தேன். அதன் பெயர் சீதா கல்யாணம்.

திரையில் சீதை காட்சியளித்தாளோ இல்லையோ, என் நினைவு கம்ப ராமாயணத்திற்குத் தாவி விட்டது.

பிறகு படத்தில் என்ன காட்சிகள் வந்தன என்பது எனக்கு நினைவில்லை.

கண்கள் திரையையே பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால் இதயமோ, கம்ப ராமாயணத்தின் மிதிலைக் காட்சிப் படலத்தை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது.

மீண்டும் அதை இழுத்து வந்து, படத்திலே நிறுத்துவது, எனக்குச் சிரமமாகத்தான் இருந்தது.

அங்கே ஒரு நிகழ்ச்சியில் லயித்த மனம், அடுத்தடுத்த நிகழ்ச்சிகளைக் கண்டும், காணாமல் இருந்து விட்டது.

லயித்து நிற்பது, ஒருவகைச் சித்தப் பிரமையே.

இறைவனிடத்தில் லயித்து நின்றுவிட்டால், பிரபஞ்சத்தின் சகல நிகழ்ச்சிகளில் இருந்தும் நாம் விடுபட்டு விடுகிறோம்.

காஞ்சிப் பெரியவர்களின் கருத்துகளைத் திரட்டித் `தெய்வத்தின் குரல்’ என்றொரு புத்தகத்தை 900 பக்கங்களில் வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

அதிலுள்ள பெரியவர்களின் கருத்து ஒன்றை, முழுமையாக இங்கே தந்தால், உங்களுக்கு விவரம் புரியும்.

எந்த வரியையும் விலக்க முடியாதபடி அந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது.

`கண்ணனும் சொன்னான், கம்பனும் சொன்னான்’ என்பது அந்தக் கட்டுரையின் தலைப்பு.

அந்தச் சிறிய கட்டுரையை அப்படியே தருகிறேன்.

ஆத்மா தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஆனால், அதுவே அவற்றைக் கடந்திருக்கிறது என்றால் அதெப்படி என்று தோன்றுகிறது; குழப்பமாயிருக்கிறது; ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் இம்மாதிரிப் பல தினுசாக குழப்பிக் குழப்பிப் பிறகு ஒரேயடியாகத் தெள்ளத் தெளிவாகப் பண்ணிவிடுவார்.

`நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடம் இருக்கின்றன’ என்று கீதையில் ஓரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார் (யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் சமயி பச்யதி) எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால், இவர் தான் அவற்றுக்கெல்லாம் ஆதாரமான ஆத்மா என்றாகும். ஆனால், எல்லாப் பொருட்களிலும் இவர் இருக்கிறார் என்றால், அவைதான் இவருக்கு ஆதாரம் என்று ஆகுமே, இதில் எது சரி என்ற குழப்பம் ஏற்படலாம்.

ஸ்வாமி அல்லது ஆத்மாவே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதுதான் சரி. அவர் எல்லாவற்றுள்ளும் இருக்கிறார் என்பதால் அவை இவரைத் தாங்குகின்றன என்று ஆகாது. இவரால்தான் அவற்றுக்கு உருவமும் உயிரும். இவர் இல்லாமல் அவை இல்லை. எனவே, அவை இவருக்கு ஆதாரமல்ல; இவர்தான் சகலத்தையும் ஆட்டிப் படைப்பவர். இதை ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்கிறார்.

பொம்மலாட்டப் பொம்மை மாதிரிதான் சகல பிராணிகளும். உள்ளேயிருந்து ஈசுவரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான் (ஈச்வர ஸர்வ பூதானாம் ஹ்ருதே தேசே அர்ஜீனதிஷ்டத பிராம்யன் ஸர்வ பூதானி யந்த்ராரு டானி மாயயா) என்கிறார்.

இப்படிக் குழப்பத்தைத் தெளிவு செய்கிற பகவான், அதே கீதையில் மறுபடியும் குழப்பம் செய்கிறார். `எல்லாப் பொருட்களிலும் நான் இருக்கிறேன்; எல்லாப் பொருட்களும் என்னிடம் உள்ளன’ என்று கூறுபவரே, `என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை. நானும் ஒரு பொருளிலும் இல்லை’ என்கிறார் (நச மத் ஸ்தானி ந சாஹம்தேஷீ அவஸ்தீத;)

இங்கே ஆத்மா எல்லாவற்றையும் கடந்தது என்ற தத்துவம் பேசப்படுகிறது.

`இது என்ன குழப்புகிறாயே’ என்றால் எல்லோருக்கும் விளங்குவதில்லை (ந அகம் ப்ரசாக ஸர்வஸ்ய;) அதுதான் `என் யோக மாயா’ (யோக மாயா ஸமாவ்ருத;) என்று ஒரு போடு போடுகிறார்.

`இது என்ன உபதேசம் வேண்டிக் கிடக்கிறது? ஒன்றும் புரியவில்லையே!’ என்று தோன்றுகிறதா?

நன்கு ஆலோசித்துப் பார்த்தால் குழப்பத்துக்குத் தெளிவு காணலாம்.

`நான் ஒருவருக்கும் விளங்க மாட்டேன்’ என்று பகவான் சொல்லியிருந்தால், `ஆயிரம் பேர் இருந்தால் ஆயிரம் பேருக்கும் விளங்கமாட்டான்’ என்று அர்த்தமாகும். ஆனால் அப்படியின்றி `நான் எல்லாருக்கும் விளங்க மாட்டேன்’ என்றால் `ஆயிரம் பேரில் 999 பேருக்கு விளங்காமலிருந்தாலும் இருக்கலாம். ஒருவனுக்காவது விளங்குவேன்’ என்றுதான் பொருள். பகவான் `எல்லோருக்கும் (ஸர்வஸ்ய) விளங்க மாட்டேன்’ என்றாரேயன்றி `ஒருவருக்கும் (கஸ்யாபி) விளங்க மாட்டேன்’ என்று சொல்லவில்லை.

அப்படியானால் அவரும் சிலருக்கு விளங்குகிறார் என்றாகிறது.

அந்தச் சிலர் யார்? இவர் சொன்ன யோக மாயையால் பாதிக்கப்படாத ஞானிகள். `நான் எல்லாப் பொருளிலும் இருக்கிறேன், ஒரு பொருளும் என்னிடம் இல்லை’ என்று பகவான் முரண்பாடாகப் பேசியது போலத் தோன்றுவதற்கு இத்தகைய ஞானிகளே விளக்கம் தந்து தெளிவு செய்வார்கள்.

தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு; எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்து விட்டு, `ஐயோ பாம்பு, பாம்பு’ என்று பயத்தால் கத்துகிறான்.

மாலையாக இருப்பதும், பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன் அவனுக்குப் பாம்பு இல்லையென்று தெரிந்து விடுகிறது. ஆனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.

மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரும்மம்தான்.

`இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன். பிரபஞ்சம் என்னிடத்திலிருக்கிறது’ என்று சொன்னால் என்ன அர்த்தம்?

`மாலைக்குள்தான் பாம்பு இருக்கிறது. பாம்புக்குள்தான் மாலை இருக்கிறது’ என்பது எப்படியோ, அப்படித்தான்.

இரண்டும் உண்மைதானே?

பாம்பு என்று அலறியவனுக்குப் பாம்பு, மாலையைத் தனக்குள் `விழுங்கி’ விட்டது. அவன் பார்வையில் ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி `இது மாலைதான்’ என்று உணர்ந்து கொண்டவனுக்கு மாலை பாம்பைத் தன்னுள் மறைத்துவிடுகிறது. மாலை தான் ஆதாரமாகத் தெரிகிறது.

மாயையினால் மூடப்பட்டுப் பிரபஞ்சத்தைச் சத்தியம் என்று பார்த்தாலும், பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருந்து தாங்குபவன் ஈசுவரன் தான்.

பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விலக்கியவனுக்கு ஈசுவரனே எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான். ஈசுவரனைத் தவிர வெறும் தோற்றமாகக்கூடப் பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப ஸமாதியில் தெரியாது. பிரபஞ்சம் என்றே ஒன்று இல்லாத போது, அது ஈஸ்வரனிடத்தில் இருப்பதாகவோ அல்லது ஈசுவரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும் அபத்தம் தானே!

அஞ்ஞான தசையில் உடம்பு, பிராணன், மனசு, அறிவு என்றெல்லாம் தெரிகின்றன. ஞானம் வந்தால், ஆத்மானந்தம் புரிகிற போது இது எதுவுமே இல்லைதான்; இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று `என்னிடத்திலும் பொருள்கள் இல்லை’, `நானும் பொருள்களிடத்திலில்லை’ என்று கூறி விட்டார். எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக நினைத்தான் என்பதால் உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள் இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள் மாலை இருந்ததாகவோ சொல்லலாமோ?

கம்பர், சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்கிறார்.

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபா டுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர்என்பர் கைவி லேந்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்!

`அலங்கல்’ என்றால் மாலை. `அரவு’ என்றால் பாம்பு. அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு மாலையில் தோன்றும் பாம்பு என்ற மெய்யான எண்ணம். இது போலப் பஞ்சபூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம் என்ற வீக்கிமாகி மயக்குகிறதே. அது யாரைக்கண்டால் விலகிப் போய் மாலையான ஈசுவரன் மட்டும் தெரியுமோ அவர்தான் ராமச்சந்திர மூர்த்தி என்றார்.

பரம வைஷ்ணவரான கம்பர், வைரமாத்ம ஸ்வரூபத்தை இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷையில் சொல்கிறார்.

இயற்கையிடம் பாடம் படியுங்கள்!-மே 27 – தத்தாத்ரேயர் ஜெயந்தி!

இறைவனே, தத்தாத்ரேயர் எனும் பெயரில், பூமியில் ரிஷியாகப் பிறந்தார். இயற்கையைப் பார்த்து, வாழ்வை வகுத்துக் கொள்ளுங்கள் என, அறிவுறுத்தினார். இவரது வரலாறை கேளுங்கள்…
அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசூயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசூயாவின் பணி. தினமும், தன் கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை, தலையில் தெளித்த பிறகே, பணிகளைத் துவக்குவாள். அந்தளவுக்கு கணவர் மீது பாசம். குழந்தை இல்லாத அவள், தனக்கு சிவன், விஷ்ணு, பிரம்மாவைப் போல தெய்வக் குழந்தைகள் பிறக்க வேண்டுமென விரும்பினாள்.
மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அவளுக்கு, ஒரு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளது குழந்தையாகப் பிறக்கலாம் என அவர்கள் யோசனை தெரிவித்தனர். எப்படியும், இந்த சோதனையில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு.
அதன்படி, மூவரும் துறவி வடிவில் அவளது குடிசைக்கு வந்து, உணவிடும்படி கேட்டனர். அவள் உணவுடன் வரும் போது, “பெண்ணே… நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான், அதை ஏற்போம்…’ என்றனர்; அனுசூயா கலங்கவில்லை. அவளுக்கு, தன் கற்புத்திறன் மீதும், பதிவிரதா தன்மையின் மீதும் அதீத நம்பிக்கையுண்டு.
கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, “நான், என் கணவருக்கு செய்யும் பணிவிடை உண்மையானால், இந்த துறவிகள் குழந்தைகளாகட்டும்…’ எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள்; மூன்று தெய்வங்களும் குழந்தைகளாகி விட்டனர்.
தனக்கு பால் சுரக்கட்டும் என, அடுத்த வேண்டுகோளை வைத்தாள். நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு, “தத்தாத்ரேயர்’ என்று பெயரிட்டார்.
தங்கள் கணவன்மாருக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசூயாவின் குடிசைக்கு வந்தனர். நடந்ததை கூறி, தங்கள் கணவன்மாரை சுயவடிவில் திருப்பித் தர கேட்டனர். அவர்களிடம், “உங்கள் கணவன்மார் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும்…’ என்று கோரிக்கை வைத்தார் அத்திரி மகரிஷி.
உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். “ரிஷியே… உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும்; இவன் பெரிய ரிஷியாக விளங்குவான்…’ என்று கூறி, மறைந்தனர்.
தத்தாத்ரேயர் சிறந்த ஞானியாக விளங்கினார். வேதாந்த உண்மைகளை விளக்கும் அவதூத கீதையை முருகப் பெருமானுக்கு கற்றுக் கொடுத்தார். எந்நேரமும் மகிழ்ச்சியாக இருப்பார். இயற்கையிடம் இருந்து, மகிழ்ச்சியாக வாழ்வதைக் கற்றுக் கொண்டார்.
“பொறுமை யையும், பிறருக்கு நன்மை செய்வதையும் பூமியிடமிருந்து கற்றேன். தூய்மையை, தண்ணீரிடம் படித்தேன். பலருடன் பழகினாலும் அவர்களிடம் பற்று வைக்கக் கூடாது என்பதை, காற்றிடம் கற்றேன். உணவுக்காக அலையக் கூடாது என்பதை, ஒரே இடத்தில் கிடக்கும் மலைப்பாம்பிடம் படித்தேன். வேடனிடம் தாய்ப்புறா சிக்கியதைப் பார்த்து, தாங்களும் சிக்கிக் கொண்ட குஞ்சு புறாக்களைப் பார்த்து, பாசமே துன்பங்களுக்கு காரணம் என, புரிந்து கொண்டேன். நிலைகுலையாமல் இருக்க வேண்டும் என்பதை, நூற்றுக்கணக்கான நதிகள் பாய்ந்தாலும் கலங்காமல் இருக்கும் கடலைப் பார்த்து, புரிந்து கொண்டேன். சிறிது <உணவே போதும் என்பதை, மலரில் தேன் குடிக்கும் வண்டிடம் கற்றேன். மீன் துண்டுடன் பறந்த பருந்தை, பிற பருந்துகள் துரத்தின. அந்தப் பருந்து, மீனை கீழே போடவே, விரட்டிய பருந்துகள் அதை விட்டு விட்டன. இதில் இருந்து உலகத்தின் மீது ஆசையை விட்டால், எல்லா துன்பமும் பறந்துவிடும் என்று உணர்ந்தேன்!’ இப்படி, வாழ்வுக்கு தேவையான அரிய கருத்துக்களை சொன்ன தத்தாத்ரேயரின் பிறந்தநாளன்று, அவரை நினைவு கூர்வோம். சென்னை கந்தாஸ்ரமம், பவானி சங்கமேஸ்வரர் கோவில்களில் தத்தாத்ரேயருக்கு சன்னிதி உள்ளது.

குழந்தைகளின் பயம் போக்கும் கருப்பசாமி

பட்டாசு, தீப்பெட்டிக்கு புகழ்பெற்ற நகரம் சிவகாசி. இங்குள்ள கீழ ரதவீதியில் கோவில் கொண்டிருக்கிறார் கருப்பசாமி. தன்னை நாடிவரும் பக்தர்களின் தீராத நோய்களையும் தீர்த்து அருள்கிறார்.

அது மட்டுமா, இவரின் சன்னதியில் கற்பூரம் ஏற்றி வழிபட்டால் எல்லா பிரச்சினைகளும் நீங்கி விடும் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களின் இருந்தும் பக்தர்கள் திரளாக வருகின்றனர்.

உருட்டு விழியும், முரட்டு மீசையும் கையில் அரிவாளும் கொண்டு ஆக்ரோஷமாக காட்சி அளிக்கிறார் கருப்பசாமி. இருப்பினும் குழந்தைகளின் பயத்தை போக்கி அவர்களை, காத்து-கருப்பு அண்டாதபடி காத்தருளுவதும் கருப்பசாமிதான்.

ஒவ்வாமை அதாவது அலர்ஜி காரணமாக குழந்தைகள் சரிவர சாப்பிட மாட்டார்கள். திடீர், திடீரென பயத்தால் அழுது கொண்டே இருப்பார்கள். இந்த குழந்தைகளுடன் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து கருப்பசாமியை மன
முருக பிரார்த்தித்து கோவிலில் தரும் விபூதியை குழந்தைகளுக்கு பூச வேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கருப்பு மை வைக்கப்பட்டு கருப்பசாமி அருள் பெற்ற தீர்த்தம் (பால்) முகத்தில் தெளிக்கப்படும்.

இதன்மூலம் குழந்தைகளின் பயம் நீக்கி அவர்கள் வழக்கம்போல் விளையாட தொடங்குவார்கள் என்பது ஐதீகம்.

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் கருப்பசாமியை வணங்கி மை பூசிக்கொண்டால் தங்களது பிரச்சினைகள் நீங்கி நிம்மதி பெறலாம்.

கருப்பசாமி கோவிலில் கருப்பாயி அம்மன் சிலையும் உள்ளது. இவரையும் வணங்கி அருள்பெற்றால் தீராத பிரச்சினைகளும் தீரும் என்கிறார்கள். சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது.

இந்த கருப்பசாமி கோவிலுக்கு வந்து அவரை மனதார பிரார்த்தித்து விட்டு புதிய தொழிலை தொடங்கினால் லாபம் கொழிக்கும், வியாபாரம் செழிக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.