Daily Archives: மே 26th, 2011

விலங்குகளின் குழந்தைப் பருவ பாடம்!


நாம் நமது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி பாடம் படிக்கச் செய்கிறோம். குட்டி விலங்குகளுக்கு யார் போதிப்பது? அவற்றுக்கு, பெற்றோர்தான் ஆசிரியர்கள். சில மிருகங்கள் எப்படிப் பாடம் கற்றுக்கொள்கின்றன என்று பார்ப்போம்…

சிறுத்தைக்குட்டியின் தாய் வேட்டையாடி இறைச்சியைக் கொண்டு வருகிறது. அதைச் சுவைத்துப் பார்க்கும் குட்டி, ருசி காண்கிறது. முதன்முதலாக வெளியுலகுக்கு வரும் சிறுத்தைக்குட்டிக்கும், மனம் குழப்பமடைந்துள்ள ஒரு பூனைக்குட்டிக்கும் பெரிதாக வித்தியாசம் இருக்காது.

சிறுத்தைக்குட்டி, முதன்முதலாக ஒரு குழிமுயலைப் பார்க்கிறது. இரு தரப்புக்கும் இந்த முதல் சந்திப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

குழிமுயல் அபாயத்தை உணர்ந்து தப்பியோட முயற்சிக்கிறது. சிறுத்தைக்குட்டி அதைத் துரத்துகிறது. எதையும் துரத்திப் பிடிக்கும் இயல்பு, பூனை இனத்துக்கு உண்டு. அதன்படி சிறுத்தைக்குட்டி துரத்து கிறதே தவிர, இரையைப் பிடிக்கத் தெரியாது. அந்தப் பாடத்தை சிறுத்தைக்குட்டி தனது தாயிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு கற்காமல் சிறுத்தைக்குட்டி ஒரு காட்டெருமையைத் தாக்கினால் நல்ல உதை வாங்கும்.

சிறுத்தைக்குட்டி உடம்பில் சற்று தெம்பு ஏறியதும் தமது தாயைப் பின்தொடர்ந்து செல்கிறது. தாய் வேட்டையாடுவதைப் பார்த்துக் குட்டிகள் கற்றுக்கொள்கின்றன. பிறகு தாமே தனியாக வேட்டையாடத் துணிகின்றன. அவை தவறு செய்தால் அவற்றின் தாய் உதவிக்கு வருகிறது.

ஆனால், சிறுத்தைக்குட்டிகள் தமது மரபுக்கு ஏற்ப சூழ்ச்சிகளையும், கொல்லும் திறமையையும் விரைவாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவை உயிர் வாழ்வது கடினம்.

நீர்நாய்க் குட்டிகள் இளம்பருவத்திலேயே மிகவும் சிக்கலான அணைகளைக் கட்டிவிடுகின்றன. அதற்கு அவற்றின் தாய் கற்றுக்கொடுப்பதில்லை. அவற்றின் பராம்பரிய உணர்வே அவற்றுக்கு வழிகாட்டுகிறது.

நீர்யானைக் குட்டி, நிலத்தில் தனது தாயின் தோளோடு தோளாக நெருக்கமாகச் செல்கிறது. தாயின் தோளில் செருகப்பட்டிருப்பது போல அது தோன்றுகிறது. குட்டி தன்னை விட்டு விலகிச் சென்றால் தாய் அதைத் தலையால் முட்டுகிறது. தவறு இழைத்ததற்குத் தண்டனை போலும்.

ஆஸ்திரேலியாவில் மரங்களில் காணப்படும் கோலா கரடியின் குட்டி பிறக்கும்போது வெறும் 3 கிராம் எடைதான் இருக்கும். அது ஊர்ந்து சென்று தாயின் பின்புறத்தில் உள்ள பை போன்ற உறுப்புக்குள் சென்று பால் குடிக்கும். பத்து மாதங்கள் வரை அது அங்குதான் இருக்கும்.

பின்னர், குட்டி தாமாக இலைகளை உண்ணத் தயாராகும்வரை, தாய் இலைகளைத் தின்று ஜீரணம் செய்து `அரைவேக்காடாக’ குழந்தைகளுக்குக் கொடுக்கிறது.

“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில் வசதி!

காதலர்களாகட்டும், கணவன் – மனைவியா கட்டும், தங்கள் முத்த உணர்வுகளை ஒருவருக்கு ஒருவர் இன்டர்நெட் மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையில், ஜப்பானில் நவீன கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
மனித உறவுகளில், தாய், தந்தை, மகன், மகள், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, குழந்தை என பல தரப்பினரும், தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ள, முத்தம் கொடுத்துக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில், நெருங்கி பழகி, பின் பிரிந்து, நீண்ட தூரத்திற்கு பிரிந்து சென்று வசிக்கும் போது, முத்தப் பரிமாற்றத்திற்கு வாய்ப்பில்லா மல் போகிறது.
இவ்வாறு பிரிந்து துன்பப் படும் கணவன் – மனைவி, காதலன் – காதலிகளுக்கு முத்த மிடும் உணர்வை தரும் கருவி ஒன்று, ஜப்பானில் உள்ள எலக்ட்ரோ கம்யூனிகேஷன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த காஜி மோடோ ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கருவியில் உள்ள கொள் கலத்தின் வாய் பகுதியில் ஒருவர், தன் நாக்கை வைத்து உரசும் போது, அதில் உள்ள சாப்ட்வேர், நாக்கின் இயக்கம், மூச்சு, சுவை, ஈரப்பதம் ஆகியவற்றை பதிவு செய்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் மற்றொரு வருக்கு அனுப்புகிறது. இதன் மூலம், எதிர்முனையில் உள்ளவர், தன் துணை அனுப்பிய முத்த உணர்வுகளை பெறுகிறார்.
இயந்திர கதியில் இயங்கும் இன்றைய வாழ்க்கை முறையில், நெருங்கிப் பழகியவர்கள் ஒரே இடத்தில் இருப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகி விட்டது. இந்நிலையில், ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த முத்தக் கருவிக்கு, எதிர்காலத்தில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிரியஸ் பி…….

சிரியஸ் B என்பது வெறுமனே 11,100 கிலோ மீட்டர்கள் விட்டம் கொண்ட ஒரு சிறிய விண்மீன். இது நம் பூமியின் விட்டத்தை விடவும் குறைவாகும். இதன் நிறை நம் சூரியனின் நிறை அளவு உள்ளது. சூரியன் அளவு கனமான ஒரு உருவம் பூமி போன்ற ஒரு வடிவத்தில் அடங்கியிருந்தால் அதன் அடர்த்தியும் அதன் ஈர்ப்பு விசையும் எவ்வளவு இருக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இந்த வெள்ளைக் குள்ளன் வகை விண்மீன்கள் மிக அதிக வெப்பநிலையும் அழுத்தமும் கொண்டிருப்பதால், அவற்றின் உள்ளே இருக்கும் தனிம அணுக்கள் உடைந்து அவற்றினுள்ளே உள்ள அணுக்கருக்கள் (Atomic Nuclei)  மிகவும் இறுக்கமாக அழுந்தி இணைந்து காணப்படுகின்றன. இவ்வாறு உடைந்து, சிதறி, பிரிந்து போன அணுக்களை ‘சிதைந்த பருப்பொருள்’ (Degenerate Matter) என அழைக்கின்றனர். நம் சூரியன் போன்ற முக்கிய வரிசை விண்மீன்களின் மையக்கரு (Core) மட்டுமே அபரிமிதமான வெப்பம் மற்றும் அழுத்தத்தினால் அதன் உள்ளே இருக்கும் தனிம அணுக்கள் சிதைந்து இப்படியான ‘சிதைந்த பருப்பொருட்களால்’ ஆகியுள்ளன.

ஆனால் வெள்ளைக் குள்ளன் வகை விண்மீன் முழுவதுமே சிதைந்த பருப்பொருட்களால் ஆனவையாக உள்ளன. (சூரியனின் மையக்கருவின் வெப்பநிலை சுமார் 16 மில்லியன் டிகிரி கெல்வின்கள் ஆகும்). சிவப்பு ராட்சதன்கள் இவ்வாறு வெள்ளைக் குள்ளன்களாக சுருங்கும் போது, அவற்றின் வெளி அடுக்குகளில் இருக்கும் வாயுக்கள் சில நேரம், சுருங்கும் போது ஏற்படும் அழுத்தத்தின் விளைவாக வெளியேற்றப்படுகின்றன. இவ்வாறு வெளியேறும் வாயுக்கள் வெள்ளைக் குள்ளன்களைச் சுற்றிலும் ஒரு புகை வளையம் போலக் காட்சியளிக்கின்றன. இது ஒரு கிரகத்தின் அல்லது கோளின் சுற்றுப்பாதை போல இருப்பதால், இதனை ‘கிரக நெபுலா’ (Planetary Nebula) என்று அழைக்கின்றனர்.

மருத்துவ காப்புறுதி பாலிசி…


மருத்துவம் மற்றும் உடல் நல காப்புறுதி செலவு மிகுந்த தனியா மருத்துவ சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டது. குறிப்பாக மருத்துவமனையில் சேர்த்தல் மற்றும் அறுவை சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட ஒரு காப்புறுதி பாலிசி. அவசர நேரத்தில் சிகிச்சை செலவுக்காக நீங்கள் வருந்தாமல் இருக்கவும், உரிய நேரத்தில் சிகிச்சை பெறவும் இந்த மருத்துவம் மற்றும் உடல்நல காப்புறுதி உறுதிப்படுத்துகிறது.

மருத்துவ காப்புறுதி பாலிசி எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை…

* தனிநபர் அல்லது கூட்டுமுறையில் மருத்துவம் மற்றும் உடல் நல பாலிசிகளை காப்புறுதி நிறுவனங்கள் கொடுக்கின்றன.

* காப்புறுதி ஒப்பந்தம் வாங்கும்போது புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டும். வாங்குவதற்கு முன்பாக, வெவ்வேறு காப்புறுதி நிறுவனங்களின் பாலிசிகளை ஒப்பிட வேண்டும்.

* மிகவும் கவனத்துடன், பலரிடம் ஆலோசித்து உங்களுக்கு சிறப்பாக பொருந்தும் காப்புறுதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

* நீங்கள் தேர்ந்தெடுத்த மருத்துவம் மற்றும் உடல் நல பாதுகாப்புக்கு உங்களால் பிரிமியம் கட்ட இயலுமா என்பதை நன்றாக யோசித்து முடிவெடுக்கவும். உங்களால் தாங்கமுடியாத பிரிமியத்தை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

* நீங்கள் வாங்க இருக்கும் மருத்துவம் மற்றும் உடல் நல பாலிசி பற்றி காப்புறுதி நிறுவனத்தின் முகவரிடம் கலந்துரையாட சரியான நேரத்தை தேர்ந்தெடுங்கள்.

* முகவர் மற்றும் காப்புறுதி நிறுவனம் பற்றிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள். பிரதிநிதி பெயர், முகவரி, நிறுவன பெயர் மற்றும் தொலைப்பேசி எண்ணை கொண்ட வர்த்தக அட்டையை பெற்றுக் கொள்ளுங்கள்.

* பாலிசியை புதுப்பிக்கும்போது அல்லது பாலிசியின் உரிமை கோரல் கேட்கும்போது இந்த அட்டை அவசியம்.

* பாலிசியின் தவணைகளையும், நிபந்தனைகளையும், இவை தவிர வழங்கியுள்ள பாதுகாப்பின் பரப்பையும் அறிந்து கொள்ளுங்கள்.

* உங்கள் பாலிசி ஒப்பந்தத்தை ஒருமுறைக்கு இரண்டு முறை மிகவும் கவனமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* ஒரு நிறுவனத்தில் நீங்கள் பணிபுரியும்போது, உங்கள் நிறுவனத்தின் சார்பில் கூட்டுத் திட்டம் எடுக்கப்பட்டிருக்கும். இதன் பிரிமியத்தை நிறுவனமோ அல்லது நீங்களோ சொந்தமாக கட்டினாலும், நீங்கள் அந்த பாலிசியின் பாதுகாப்பு மற்றும் நிபந்தனை விவரங்களைப் பெற்றிருக்க வேண்டும்.

* நீங்கள் கூட்டுத் திட்டம் கொண்டிருந்தாலும், தனிப்பட்ட திட்டத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். காரணம், நீங்கள் அதை உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.

* ஒவ்வொரு பாலிசியும் வேறுபட்ட பயன்களை மற்றும் வேறுபட்ட காப்புறுதி நிறுவனங்கள் வேறுபட்ட பாதுகாப்பு நோக்கங்களை கொடுக்கின்றன. சில காப்புறுதி நிறுவனங்கள் விரிவான பாலிசிகளை வழங்குகின்றன. இவை அடிப்படை பாலிசியைவிட அதிக பாதுகாப்பை கொடுக்கின்றன.

சோனியின் டேப்ளட் பிசி

மொபைல் கம்ப்யூட்டிங் பிரிவில், ஆப்பிள் நிறுவனம் தன் ஐ-பாட் டேப்ளட் பிசிக்களுடன் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் நிலையில், இரண்டாவது இடத்தையாவது முதலில் கைப்பற்ற வேண்டும் என்ற ஆவலில், சோனி நிறுவனம், சென்ற மாதம் இரண்டு டேப்ளட் பிசிக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் ஆண்ட்ராய்ட் பதிப்பு 3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதில் பயன்படுத்தப் படுகிறது.
ப்ளே ஸ்டேஷனில் பயன்படுத்தப் படும் விளையாட்டுக்களை இதில் விளையாடலாம். இந்த வகையில், சோனியின் பட்டயக் கம்ப்யூட்டர்களே முதலில் இந்த வசதியைத் தரும் கம்ப்யூட்டர்களாகும். இந்த இரண்டு டேப்ளட் பிசிக்களும் S1 மற்றும் S2 என அழைக்கப்படுகின்றன. இவை வை-பி மற்றும் 3ஜி/4ஜி நெட்வொர்க் இணைப்பினை எளிதாக மேற்கொள்கின்றன. இவற்றின் திரை 9.1 அங்குல அகலத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது. S2 என அழைக்கப்படும் டேப்ளட் பிசியில், இரண்டு 5.5 அங்குல திரைகள் உள்ளன.
காலம் கழித்து இந்த பிரிவில் சோனி நிறுவனம் நுழைந்தாலும், பல வகைகளில் இவற்றின் டேப்ளட் பிசிக் கள், மற்றவற்றிடமிருந்து வேறுபட்டு இருக்கின்றன.
ஜப்பானில் விற்பனைக்கு அறிமுகமான இந்த டேப்ளட் பிசிக்கள், தொடர்ந்து மற்ற நாடுகளிலும் வர இருக்கின்றன. அவற்றில் இந்தியா முதலிடம் பெறும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது, இந்தியாவில் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் டேப்ளட் பிசிக்கள் விற்பனையாகி வருகின்றன. 3ஜி சேவை பரவும் பட்சத்தில், டேப்ளட் பிசிக்கள் விற்பனை மேலும் அதிகமாகலாம்.
சோனி இன்னும் இந்த டேப்ளட் பிசிக்களுக்கான விலையை அறிவிக்கவில்லை.

மனநோய்!


மனித உடலானது நோயினால் பாதிக்கப்படும் என்ற விஷயம் எல்லோருக்கும் எக்காலத்திலும் தெரிந்திருந்தது. மனமும் நோயினால் பாதிக்கப்படக்கூடும் என்று அறிவியல் அறிஞர் ஒருவர் கூறியபோது மக்கள் அடைந்த வியப்புக்கு எல்லையே இல்லை.

அவ்வாறு மனநோய் பற்றி எடுத்துச் சொன்னவர், சிக்மண்ட் பிராய்டு என்பவர் ஆவார். அவர், ஆஸ்திரியாவின் வியன்னா நகரத்தில் வசித்துவந்த ஒரு மருத்துவர்.

மனதைப் பற்றியும், அதன் செயல்பாடு குறித்தும், மனதுக்கு ஏற்படக்கூடிய நோய்கள் குறித்தும் தீவிரமான ஆராய்ச்சிகள் செய்து பல உண்மைகளைக் கண்டறிந்த பிராய்டு, திட்டமிட்டு அம்மாதிரியான முயற்சிகளில் இறங்கவில்லை. தற்செயலாக அப் பணியில் கவனத்தைச் செலுத்தவேண்டி வந்தது.

டாக்டர் பிராய்டு, தன்னிடம் சிகிச்சை பெற்றுவந்த பல நோயாளிகள் பலவிதமான மனத்துன்பங்களுக்கு இலக்காகித் தவித்ததைக் கண்டு வியப்படைந்தார். அவர்களின் உடலில் எந்த நோயும் இல்லை.

உடலில் பாதிப்பு ஏதும் இல்லையென்றால் மனதில்தான் ஏதோ குறைபாடு இருக்கக்கூடும் என்று அவர் யூகித்தார். அந்த நோக்கில் ஆய்வு செய்து, மனநோய்கள் குறித்த உண்மைகளை பிராய்டு வெளியிட்டார்.

போகட்டும் புழுத்தொல்லை: யானை திப்பிலி

குடலில் புழுக்கள் தங்கி, குடலுறிஞ்சிகளில் ரத்தத்தை உறிஞ்சி, இனப்பெருக்கம் செய்து வருகின்றன. இவை நமது உணவை மலமாக மாறுவதற்கு உதவி புரிகின்றன. இவ்வாறு புழுக்கள் நமது செரிமான மண்டலத்திற்கும், உணவு கழிவு மண்டலத்திற்கும் பேருதவி புரிந்தாலும், அளவுக்கு மீறும் பொழுது, இந்த புழுக்கள் உடலில் பலவித உபாதைகளை ஏற்படுத்துகின்றன. வட்டப்புழுக்கள், உருண்டை புழுக்கள், தட்டைப்புழுக்கள், நாடாப்புழுக்கள் என பலவகையான புழுக்கள் நமது குடலில் வசிக்கின்றன. இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் இனப்பெருக்கம் செய்து, ஒருவித நிலைத்தன்மையை ஏற்படுத்துகின்றன. ஆனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுதும், இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போதும், வேறு சில புழுக்கள் மற்றும் கிருமிகள் சுகாதாரமற்ற நீர் மற்றும் கெட்டுப்போன உணவுகள் மூலமாக உடலில் நுழையும்பொழுதும், தங்களை காத்துக்கொள்வதற்காக குடல் புழுக்களும் பெருகுகின்றன.

இதனால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. தோலில் தடிப்பு, அரிப்பு, மலவாயில் எரிச்சல் மற்றும் வெடிப்பு, மலச்சிக்கல் அல்லது கழிச்சல், தலையில் பொடுகு, வாயில் புண்கள் மூக்குத்துளை ஓரங்களில் அரிப்பு, முகம் மற்றும் கன்னப்பகுதிகளில் ஒரு வித வெளுப்பு, வாயில் துர்நாற்றம், மலம் கழிக்கும்பொழுதும், அபானவாயு பிரியும்பொழுதும் துர்நாற்றம், புழுக்கள் இனப்பெருக்க பாதையில் தொற்றை ஏற்படுத்தி வெள்ளைப்படுதல், மாதவிலக்கு திரவம் மற்றும் வெள்ளையில் சிறுசிறு புழுக்கள் வெளியேறுதல், சிறுநீர்ப்பாதையில் அரிப்பு, மலவாயைச் சுற்றி துளைகள் ஏற்பட்டு பவுத்திரம், மூலம் உண்டாதல், சில நேரங்களில் அந்த துளைகளிலும் புழுக்கள் வெளியேறுதல் மற்றும் ஆசனவாய் வெடிப்பு ஆகியன புழுக்களால் உண்டாகின்றன. அது மட்டுமின்றி தொடை இடுக்கு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் நெறி கட்டுதல், சிறு சுரம், அடிக்கடி குமட்டல், வாந்தி போன்ற சில தொல்லைகளுக்கும் வயிற்றுப்புழுக்கள்தான் காரணம்.

அவசியமற்ற குடற்புழுக்களை நீக்கி, வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் மூலிகைதான் யானை திப்பிலி. பைப்பர் சாபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட, பைபரேசியே குடும்பத்தைச் சார்ந்த கொடிகளின் உலர்ந்த பூ தண்டுகளே, யானை திப்பிலி என்று வழங்கப்படுகின்றன. நாட்டு மருந்துக்கடைகளில் யானை திப்பிலி விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தண்டுகளில் பைப்பரின், பைப்பலார்டின், பைப்பலோரின்ஸ் மற்றும் பலவித ஒத்த பியூட்டைல் அமைடுகள் காணப்படுகின்றன. இவை குடல் பகுதியிலுள்ள மென்மையான சளிச்சவ்வு படலத்தை தூண்டி, குடற்புழுக்களை வெளியேற்றுகின்றன. அது மட்டுமல்லாமல் குடற்பாதையில் உறுத்தலை ஏற்படுத்தும் பாக்டீரியா, வைரஸ் போ ன்ற நுண்கிருமிகளையும் நீக்குகின்றன. யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.

இறுக்கமான பேண்ட் அணிந்தால்…


காலை ஒட்டிப் பிடித்திருக்கும் இறுக்கமான பேண்டை அணிவதில் சிலருக்கு விருப்பம் அதிகம். அதிலும், பெண்களுக்கு. அது தங்களை அழகாகவும், நாகரீகமாகவும் காட்டுவதாக நினைக்கிறார்கள்.

ஆனால், தொடர்ந்து இறுக்கமான பேண்ட்களை அணிவது, கால் தசைகளை தொய்வடையச் செய்து `தொளதொள’வென்று ஆக்கிவிடும் என்கிறார்கள், நிபுணர்கள். இறுக்கிப் பிடிக்கும் பேண்ட், `சோம்பேறித் தசைகளை’ உருவாக்கி, கால்களையும், வயிற்றையும் தொய்வடையச் செய்துவிடும் என்று கூறுகிறார்கள்.

“இறுக்கமான பேண்ட்கள், கச்சிதமான உணர்வையும், நல்ல தோற்றத்தையும் தருகின்றன என்பது உண்மை. பலரையும் போல நானும் அதற்கு அடிமையாக இருந்தேன். அவை, தொடை தசைகள், பின்புறம் மற்றும் வயிற்றுப் பகுதித் தசைகளைப் பற்றியிருக்கின்றன, ஆதரவாக இருக்கின்றன. அதாவது, தசைகள் செய்ய வேண்டிய வேலையை இவை செய்கின்றன. எனவே, தசைகள் தளர்வாகவும், தங்கள் பணியில் இருந்து விலகியும் இருக்கின்றன.

தொடர்ந்து இறுக்கமான கால்சட்டையை அணிந்து பின் தளர்வான ஆடைகளை அணியும்போது, தசைகள் அவை இருக்க வேண்டிய விதத்தில் இறுக்கமாகவும், உறுதியாகவும் இருப்பதில்லை என்பதை நான் கண்டுகொண்டேன்” என்கிறார், பிசியோதெரபிஸ்ட் சாம்மி மார்கோ.

பெண்கள் பொதுவாக உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்பதால் அவர்களுக்கு இந்தப் பாதிப்பு கூடுதலாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மணப்பெண் அலங்காரம்!

நிச்சயதார்த்தத்தின் போதே உங்களையும், உங்கள்
அலங்காரத்தையும் பார்த்து சொக்கிப் போயிருக்கும்
உங்களவர் மணக்கோலத்தில் நீங்கள் பட்டுடுத்தி, நகைகள் அணிந்து தேவதையாய் பிரகாசிக்கப் போகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் அல்லவா? அதனால் இந்த இதழில் மாலை ரிசப்ஷனுக்கும், காலை முகூர்த்தத்திற்கும் என்னென்ன நகைகள் தேர்வு செய்து, எப்படி அணியலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

நிச்சயதார்த்த அலங்காரத்தை, திருமண அலங்காரத்துக்கு ஒரு ஒத்திகையாக (trial dressing) எடுத்துக் கொள்ளலாம். நிச்சயதார்த்த போட்டோ ஆல்பத்தையும், வீடியோவையும் பார்த்தாலே, நீங்கள் அணிந்திருக்கும் நகைகள் உங்களுக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதை நன்கு உணரலாம். உதாரணமாக பெரிய ஜிமிக்கி உங்களுக்கு சற்று
பொருந்தாமல் இருக்கலாம் அல்லது நெத்தி சுட்டியின்
அகலமான பதக்கம் உங்கள் முக அமைப்புக்கு சரியில்லாமல் இருக்கலாம். இவற்றை மனதில் கொண்டு, இது போன்ற சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து கொண்டால் திருமணத்தின்போது பர்ஃபெக்ட் மணமகளாக காட்சியளிப்பீர்கள்.

ஒவ்வொரு பிரிவினருக்கும் திருமண சடங்கு,
சம்பிரதாயங்கள் மாறுபடும் காரணத்தால் முதலில்
மணப்பெண் அவர்களது கலாச்சார முறைப்படி என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு, எந்த நிகழ்ச்சிக்கு எந்த புடவை மற்றும் நகை அணியலாம் என்று ஒரு தனி லிஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரே சமயத்தில் மாமன் சீர், பெண் அழைப்பு என்று இரண்டு மூன்று சடங்குகள் இருந்தால், மணப்பெண் 2 அல்லது 3 புடவைகளை மாற்றி மாற்றி அணிய வேண்டியிருக்கும். அந்தச் சமயம், ஒவ்வொரு முறையும் நாம் நகைகளையும், அலங்காரங்களையும் புடவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியாது. அதனால் நாம் தேர்வு செய்யும் நகைகள் பொதுவாக அனைத்துப் புடவைகளுக்கும் பொருந்துமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, நீல நிறப் புடவைக்கு மேட்சாக நாம் நீல
நிறத்தில் நகைகள் மற்றும் மலர்கள் அணிந்துக் கொண்டால், பிறகு உடுத்தப்போகும் “மெரூன்” நிறப் புடவைக்கும், “லேவண்டர்” நிறப் புடவைக்கும் அது சற்றும் பொருந்தாதது. எனவே கோல்டன் நிற நெக்லஸில் மெரூன் நிற கற்கள் மற்றும் பீட்ஸ்கள் பொருந்திய நகைகள் அல்லது வெள்ளைக் கல் நகைகளை அணியலாம்.அதுவே ரிசப்ஷன் என்று பார்த்தால், மாப்பிள்ளை அருகில் ஜம்மென்று நீங்கள் நிற்க, அட்டகாசமாய் ட்ரெஸ்ஸிங் செய்து கொள்ளலாம். ஏனெனில் பெரும்பாலும் வரவேற்பின்போது, அலுங்காமல் குலுங்காமல் நின்றுக்
கொண்டு முகத்தில் புன்னகையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதால், சற்று ஹெவியான புடவையும் நகைகளும் அணிந்துக் கொள்ளலாம்.மாலை நேரம் என்பதால், வெள்ளைக்கல் நகைகள், பிரகாசமாக இருக்கும் என்று நீங்கள் விரும்பினால் அமெரிக்கன் டைமண்ட் பதித்த வெள்ளி, கோல்டு ஃபார்மிங் நகைகளில் பிரைடல் செட்டுகளைத் தேர்வு செய்யலாம்.

தங்க வைர நகைகளில் ஆரம், நெக்லெஸ், கம்மல்கள்
எல்லாம் செட்டாக சிலரிடம் இருந்தாலும்கூட ஒட்டியாணம், வங்கி, ஜடைசெட் போன்றவை இல்லாமல் இருக்கலாம். அதனால் பெண் அலங்காரத்தைப் பொறுத்தவரை செட்டாகக்
கிடைக்கும் ஒரு கிராம் பிரைடல் நகைகளுக்குத்தான் மவுசு அதிகம்.அதுவே வைர நகைகளின் பொலிவில் லேட்டஸ்ட் மாடல் நகைகள் அணிய நினைத்தால், இருக்கவே இருக்கிறது

ஜெர்கான் கற்கள் பதித்து, பிளாட்டினம் கோட்டிங்
செய்யப்பட்ட நகைகள். நாம் முன்பே குறிப்பிட்டிருந்த
ஜோதிகாவின் திருமண செட் போன்ற கலெக்ஷன்ஸ்தான் இன்றும் பிரபலமாக இருக்கிறது. ஒரே ஒரு பெரிய நெக்லெஸ்சும், காதணிகளும், நெத்திச் சுட்டியும் மட்டும் அணிந்தாலே ரிசப்ஷன் டிரஸ்ஸிங் களைக்கட்டிவிடும். எந்த நகைகள் அணிந்தாலும், முக்கியமாக கழுத்தில் உள்ள பூமாலை சன்னமாகவும், நகைகளை மறைத்துக் கொள்ளாமல், சற்று அகண்டு இருக்குமாறும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
காலை சுப முகூர்த்ததிற்கு என்ன நகைகள் என்று
பார்க்கலாமா? முகூர்த்தம் என்றாலே பாரம்பரிய பட்டுப்
புடவைதான் உடுத்துவோம் என்ற காரணத்தால், மாடர்ன் மற்றும் ஃபேன்ஸி நகைகளைத் தவிர்த்து கலாச்சார நகைகளை அணிய வேண்டும். சுமாராக 80% பெண்கள் அணிவது கெம்புக் கல் பதித்த “டெம்பிள் ஜூவல்லரிதான்.

இது கவரிங் மற்றும் வெள்ளியிலும் கிடைக்கிறது. இதில் காலங்காலமாய் வரும் அதே பட்டை சுட்டி, ஒற்றை சுட்டி, குடை ஜிமிக்கி, அட்டிகை, மயில் ஆரம் அல்லது மாங்காய் ஆரம் போன்றவற்றைப் போட்டுப் போட்டு அலுத்துவிட்டிருக்கலாம். என்னிடமே பலர் இதே கருத்தைச் சொல்வதால், தற்போது அசல் தங்கத்தில் வரும் “செட்டி நாட்டு ஆண்டிக்” நகைகள் போன்று ஒரு கிராம் தங்கத்தில் விதவிதமாக டிசைனிங் செய்து கொண்டிருக்கிறேன். இந்த மாதிரி நகைகள் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரிஜினல் கெம்புக் கற்கள் பதிக்கப்பட்ட
“கெஜல் ஆரங்கள், பதக்கங்கள், காப்புகள், ஜடை
வில்லைகள், கெம்பு ஒட்டியாணம், மற்றும் வங்கிகள் என ஒரு செட்டாக அணியலாம். “கெம்புக்கல்” நகைகளை விரும்பாதவர்கள் நஹாஸ் வேலைப்பாட்டில் செய்யப்பட்ட பிளையின் செட்டுகளையும் அணியலாம். எந்த நகைகளைத்
தேர்வு செய்தாலும், உச்சி முதல் பாதம் வரை ஒரே
செட்டாக இருந்தால் பார்க்க சீராக, அழகாக
இருக்குமல்லவா?…

திருமணங்களில் இன்று மிகவும் பிரபலமாக இருக்கும்
“ட்ரெண்ட்” “தீம்கலரிங்”தான். அதாவது மணமகளின்
புடவைக்கு மேட்சாக மணவறையின் “பேக்ட்ராப்”,
மாப்பிள்ளையின் சர்ட், லைட்டிங்ஸ், மாலைகள் போன்ற எல்லாவற்றையும் அமைப்பதுதான் இது! இத்தனையும் மேட்சாக இருக்கும்போது, நகைகளை மட்டும் விட்டுவிடுவோமா என்ன?!
குந்தன் நகைசெட் என்று பார்த்தால் வெள்ளை நிற குந்தன் கற்களுடன் வண்ண பீட்ஸ்கள் சேர்த்து சோக்கர், ஆரம், இயர்செட், சுட்டி, ஒட்டியாணம், வங்கி, விரல்களில் அணியும் ஃபிங்கர்செட், ஹிப் செயின், கொலுசுகள், மெட்டி, கடா வளையல், ஜடை செட், குஞ்சம் அத்தனையும் புடவையின் நிறத்துக்குப் பொருத்தமாகத் தேர்வு செய்ய வேண்டும். புடவையில் கற்கள் மற்றும் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்தால் இந்த வகை நகைகள் பொருத்தமாக இருக்கும். மணப்பெண்ணின் தோற்றத்துக்குப் பொருந்துமேயானால், அகலமான, “ஜோதா அக்பர்”
நெக்லெஸ்களையும் கூட அணியலாம்.

இந்த வார இணையதளம் உடலின் கூறுகள்

மாணவர்களுக்கு நம் உடலின் பாகங்கள் குறித்தும், அவை எப்படி இயங்குகின்றன என்பதனையும் விளக்கும் அருமையான கல்வித் தளம் ஒன்றினை இணையத்தில் காண நேர்ந்தது. இதன் முகவரி http://medtropolis. com/VBody.asp. ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் இந்த தளம் இயங்குவதால், தளம் தொடங்கிய வுடன், நமக்கான மொழியை (ஆங்கிலம்) முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த தளத்தின் பெயர் The Virtual Body. பின்னர், முதல் மெனு பக்கம் காட்டப்படுகிறது. இதில் The Human Brain, Skeleton, Human Heart, Digestive Tract எனப் பிரிவுகள் தரப்படுகின்றன. நாம் தேடிப் பெற விரும்பும் தகவல்களுக்கான பிரிவினைத் தேர்ந்தெடுத்தால், ஒவ்வொரு பிரிவிலும் கூடுதல் தளங்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு தகவலாகச் சொல்லி, அதற்கான படத்தையும் காட்டி நம்மை அழைத்துச் செல்கின்றன. சில பிரிவுகளில் படங்கள் இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக இதயம் சம்பந்தப் பட்ட பிரிவில், இதயம் இயங்குவது அனிமேஷன் மூலம் காட்டப்படுகிறது. விளக்கங்களை முன், பின்னாகச் சென்று கற்கலாம். ஒவ்வொரு பிரிவும் எளிய ஆங்கிலத்தில் விளக்கப்படுகிறது. நம் உடற்கூறு அமைப்பு குறித்து எளிதாக அறிந்து கொள்ள, நல்ல தளமாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. மாணவர் கள் மட்டுமின்றி, பெரியவர் களும் இதிலிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்.
அனைவரும் அவசியம் ஒருமுறையாவது காண வேண்டிய தளம்.