டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது

டீசல், சமையல் காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அடுத்த மாதம் உயர்த்தப்படுகிறது. விலை குறித்து முடிவு செய்வதற்காக, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூட்டம், ஜூன் 9ம் தேதி கூடுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்துவருவதால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவேண்டும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கோரி வந்தன. பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் கட்டுப்பாடு அரசு வசம் இருந்து வந்தது. இது கடந்தாண்டு நீக்கப்பட்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே சர்வதேச நிலைமைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைதொடர்ந்து, பலதடவை பெட்ரோல் விலை ஏற்றப்பட்டது. சமீபத்தில், மத்திய கிழக்கில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இருப்பினும் இந்தியாவில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் காரணமாக, பெட்ரோல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் தள்ளிப்போட்டு வந்தன. தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டது. உயர்வு இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ஐந்து ரூபாய் உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை மட்டும் மத்திய அரசு உயர்த்தவில்லை.

இது பற்றி முடிவு செய்வற்கு, நிதி அமைச்சர் பிரணாப் தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த குழுவின் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு வந்தது. டீசல், காஸ் சிலிண்டர் , மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு மானியம் அளிக்கப்பட்ட போதிலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையால் பெரும் இழப்பு ஏற்பட்டு வந்தது. இதனால், இவற்றின் விலையை உடனடியாக உயர்த்தியே ஆக வேண்டும் என்று இந்த நிறுவனங்கள், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளன.

டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை, கடைசியாக கடந்தாண்டு ஜூன் மாதம் தான் உயர்த்தப்பட்டது. அப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் ரூ. 3,500 ஆக இருந்தது. இருப்பினும் டீசல் லிட்டருக்கு இரண்டு ரூபாயும், காஸ் சிலிண்டர் ரூ.35ம், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.3ம் உயர்த்தப்பட்டது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெயை ரூ. 5,500 கொடுத்து இந்தியா வாங்கியுள்ளது. இந்நிலையில் விலையை உயர்த்தாமல் இருப்பதால், நாள் ஒன்றுக்கு ரூ.500 கோடி இழப்பு வருகிறது. இதை சமாளிக்க, விலை உயர்வு உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் கூறின. எண்ணெய் நிறுவனங்கள் டீசல், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியே ஆக வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருவதால், இது பற்றி முடிவு செய்வதற்காக மத்திய அமைச்சர்கள் குழு, ஜூன் மாதம் 9ம் தேதி கூட உள்ளது. இத்தகவலை பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,” இதுவரை நாங்கள் தாக்குப்பிடித்து வந்தோம். இப்போது தப்பிக்க முடியாது. டீசல், காஸ் சிலிண்டர் , மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்த உடனடியாக முடிவு எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்’ என்றார். டீசல் விலையை லிட்டருக்கு நான்கு ரூபாயும், காஸ் சிலிண்டர் விலையை ரூ25ம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர்கள் குழு முடிவு செய்யும் என தெரிகிறது.

பெட்ரோல் விலை குறையுமா? புதுடில்லி: ஜூன் மாதத்தில், அரசு வாங்கும் கச்சா எண்ணெயின் ஒட்டுமொத்த விலைக்குறியீடு இறங்கும் பட்சத்தில், பெட்ரோல் விலையை தங்கள் நிறுவனம் குறைக்கும் என்று இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் தலைவர் ராய்சவுத்ரி நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “பெட்ரோல் விலையானது சந்தைவிலைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுவதால், கச்சா எண்ணெய் ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப அதன் விலை மாற்றப்படும். இன்றுள்ள நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்தால் அடுத்த மாதத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய்வரை குறைக்க வாய்ப்பு உள்ளது’ என்றார்.

நன்றி-தினமலர்

%d bloggers like this: