Daily Archives: மே 30th, 2011

கூகுள் இந்தியா – சில தகவல்கள்

அண்மையில் கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் துணைத் தலைவர் ராஜன் ஆனந்தன், இந்தியாவில் கூகுள் தளம் பயன்படுத்துவது குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இன்டர்நெட்டைப் பயன்படுத்து பவர்களில் அதிகமான எண்ணிக்கை உள்ள நபர்களைக் கொண்ட நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. பத்து கோடிக்கும் மேலானவர்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 4 கோடி பேர் தங்கள் அலுவலகங்களில் இன்டர்நெட்டைப் பயன்படுத்து கின்றனர். 3 கோடி பேர் இன்டர்நெட் மையங்களில் காண்கின்றனர். ஒரு கோடியே பத்து லட்சம் பேர் வீடுகளில், பிராட்பேண்ட் இணைப்பு மூலம் பயன்படுத்தி வருகின்றனர்.
மொபைல் வழி இன்டர்நெட்டைப் பொறுத்த வரை, இந்தியாவில் 4 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். ஒரு வாரத்தில், 3 கோடி அப்ளிகேஷன் புரோகிராம்கள், மொபைல் போன் வழி டவுண்லோட் செய்யப்படுகின்றன.
கடந்த 12 மாதங்களில், மொபைல் போன் வழியாகக் கிடைக்கும் தேடல் வினாக்கள், 4 மடங்கு அதிகரித்துள்ளது. 2007 ஆம் ஆண்டுக்குப் பின் இது மொத்தம் 50 மடங்கு அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு வாக்கில், மொபைல் வழி இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 30 கோடியாக உயரும் வாய்ப்புகள் இருப்பதாக ராஜன் குறிப்பிட்டார்.
இந்தியாவில் பொருட்கள் வாங்குகையில், இன்டர்நெட்டில் அது குறித்து தேடிவிட்டு, நேரடியாகச் சென்று வாங்கவே, பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர்.
இன்டர்நெட் வழியாக வங்கி கணக்குகளைக் கையாள்வோரின் எண்ணிக்கை, கடந்த 18 மாதங்களில், 200 மடங்கு அதிகரித்துள்ளது.
இன்டர்நெட் வழி பொருட்களை விற்பனை செய்பவர்கள், தங்கள் இணைய தளத்தினைத் தெளிவான முறையில் வடிவமைத்து, சிக்கல்கள் எதுவுமின்றி, பயன்படுத்துவோருக்கு பயனளிக்கும் வகையில் நடத்த வேண்டும். பெரும்பாலான இந்தியர்கள், பொருட்கள் வழங்கப்படுகையில் பணம் செலுத்துவதனையே விரும்புகின்றனர் என்று கூறுகிறார்.

வெடிகுண்டு வண்டு!

புழு, பூச்சிகள், ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன. அதே சமயத்தில் ஒன்றிடம் இருந்து ஒன்று தப்பித்து வாழவும் இயற்கை அவற்றுக்கு வகை செய்திருக்கிறது. ஒவ்வொரு உயிரினத்துக்கும் நிறைய எதிரிகள் இருக்கின்றன. மனிதர்களைவிட பிராணிகள், பூச்சியினங்களின் வாழ்க்கைதான் போராட்டக் களமாக உள்ளது.

இந்தப் பூச்சிகளுள் சிலந்தி, தன் இரையை மிகவும் தந்திரமாகப் பற்றுகிறது. வலையைப் பின்னிவிட்டு, எப்போது பூச்சி மாட்டிக்கொள்ளும் என்று சிலந்தி காத்திருக்கும். பின்னிய வலையில் பூச்சி வந்து மாட்டிக்கொண்டதும் ஒருவகை சிலந்தி, கப்பென்று பாய்ந்து கடித்து விடும். இந்த அவசர வகை சிலந்திக்கு `நெபிலியா’ என்று பெயர்.

சிலந்தி வலையில் அடிக்கடி அகப்பட்டுக் கொள்வது ஒரு வகைச் சில்வண்டு தான். சிலந்திகளிடம் இருந்து தப்பித்துக்கொள்ள இந்த வண்டுகளுக்கு ஒருவகை ஆற்றலை இயற்கை அளித்திருக்கிறது. இந்த வண்டுகளை `குண்டு வெடிக்கும் வண்டு’ (Bombardier Beetle) என்று கூறுகிறார்கள்.

இந்த வண்டுகளின் வயிற்று அடிப்பாகத்தில் சிறிய சுரப்பி இருக்கிறது. அந்தச் சுரப்பியில் ஒரு வேதித் திரவமும், பிராண வாயுவும் சுரக்கின்றன. இந்த இரண்டும் சேர்ந்து வெடிக்கும் தன்மை கொண்டவை. சிலந்தி வலையில் இந்த வண்டு மாட்டிக்கொண்டதும், நெபிலியா வகைச் சிலந்தி அதைத் தின்ன உடனே பாய்ந்து போய் கவ்வும். ஆபத்தை அறிந்த வண்டு, தன் வயிற்றுப் பாகத்தைச் சிலந்தியின் பக்கம் திருப்பி, குறிபார்த்துச் சுரப்பியை வெடிக்கச் செய்யும். அந்த வெடிச் சத்தத்தை சிலந்தியால் தாங்க முடியாது. மேலும் காரமான ஒரு திரவமும் அதன் மீது பீய்ச்சப் படும். வெடிச்சத்தம், திரவ முழுக்கில் இருந்து சிலந்தி மீள்வதற்குள் அந்த வண்டு தப்பித்துப் போய்விடும்.

இந்த வகை ஆற்றல் இருப்பதால் `குண்டு வெடிக்கும் வண்டு’க்கு ஆபத்தோ, எதிரிகளோ அதிகம் இல்லை என்று சொல்லலாம். ஆனால், இதற்கும் ஓர் எதிரியை இயற்கை படைத்திருக்கிறது. இந்த வண்டை அவசரப்படாமல் சாமர்த்தியமாகப் பிடிக்கும் தன்மை கொண்ட இன்னொரு வகைச் சிலந்தி இருக்கிறது. அதற்கு `அர்கோபி’ என்று பெயர்.

ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்

எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.

* நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

* நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

* நல்லெண்ணைய்யை, ‘இயற்கை நமக்கு அளித்த கொடை’ என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம். நல்லெண்ணைய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது.

* நல்லெண்ணைய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.

* நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்!

நாம் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தும் வாக்கியம், “என்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?”. பொதுவாகவே நம்மைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், வேறுவிதமாகக் கூறுகிறார்கள், மனோவியல் நிபுணர்கள்.

அவர்கள், நமது ஆளுமையின் சில அம்சங்களை நம்மை விடப் பிறர் நன்றாக அறிவார்கள் என்கிறார்கள்.

“நமது ஆளுமையில் சில அம்சங்களை நாம் அறிய மாட்டோம். ஆனால், அதைப் பிறர் நன்றாக அறிவார்கள். அதைப் போல பிறர் தங்களைப் பற்றி அறியாத சில அம்சங்களை நாம் அறிவோம்” என்கிறார் உளவியலாளர் சிமின் வஸிரே. இவர், வாஷிங்டன் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்.

எரிக்கா என் கார்ல்ஸன் என்பவருடன் இணைந்து இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டவர் சிமின். இவர், “ஓர் ஆளுமை பற்றி அறிய, அதை இரு கோணங்களில் நோக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்.

எனவே நமக்கு நெருக்கமானவர்களும், நம்முடன் அதிக நேரத்தைக் கழிப்பவர்களும் நன்றாக நம்மைப் பற்றி அறிவார்கள் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை. ஆனால், புதியவர்களும் கூட, நமது ஆடைத் தேர்வு, இசை விருப்பம், `பேஸ்புக்’கில் வெளியிட்டிருக்கும் தகவல்கள் போன்றவற்றின் மூலம் நம்மைப் பற்றி யூகிக்க முடியும் என்பது, வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் கருத்து.

பிறரைச் சரியாகக் கணிக்க முடியும் என்றபோதும் ஒவ்வொருவரும் அதைத் தமது இஷ்டம்போல மாற்றிக்கொள்கிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, `காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்கிற மாதிரியான செயல்பாடுகள். அடுத்தவீட்டுக் குழந்தை அறிவாளியாக இருந்தாலும், அது நமக்குத் தெரிந்திருந்தாலும், நம்முடைய குழந்தையே அறிவாளி என்று கருதத்தான் நாம் விரும்புகிறோம் என்று ஆய்வாளர்கள் தடாலடியாகக் கூறுகின்றனர்.

 

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

கணவனை சந்தேகப்படலாமா?


“ஏன் இவ்ளோ லேட்? எங்கே போயிட்டு வர்றீங்க…” – புது மனைவி அனிதாவின் அதிகாரமான குரல் அசோக்கை முதன் முறையாக அதிரச் செய்தது.

“வரும் வழியில் பெட்ரோல் இல்லாமல் டூவீலர் நின்றுவிட்டது. அதான் லேட்டாகி விட்டது”.

“இந்த உப்பு சப்பு இல்லாத காரணம் எல்லாம் வேண்டாம். உண்மையில் எங்கே போயிட்டு வர்றீங்க”.

“ஏன் அனிதா இப்படியெல்லாம் கேட்குற? உன் கிட்ட நான் ஏன் பொய் சொல்லணும்?”

“அதைத்தான் நானும் உங்க கிட்ட கேக்குறேன்?”

“நம்பு அனிதா. உன் மேல சத்தியமா ஆபீசில் இருந்து நேரா வீட்டுக்குத்தான் வர்றேன்…”

அசோக் எவ்வளவோ சொல்லியும் அனிதா அவனை புரிந்து கொண்டபாடில்லை. அவன் கூறியதையும் நம்பவில்லை.

ஏன் அவர்களுக்குள் ஆரம்பத்திலேயே இந்த முட்டல், மோதல்?

அசோக்கிற்கும், அனிதாவிற்கும் 3 மாதத்திற்கு முன்புதான் திருமணம் ஆனது. சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள். அசோக்கிற்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை. அனிதா பட்டதாரி பெண். வேலைக்கு செல்வது பற்றி இன்னும் அவள் முடிவெடுக்கவில்லை.

தன் மீதான சந்தேகம் அனிதாவிற்கு வலுத்ததால் அவளை பெண் சைக்காலஜிஸ்ட் ஒருவரிடம் அழைத்துச் செல்ல முடிவெடுத்தான் அசோக். இதை அப்படியே அவளிடம் சொன்னால், அவளது சந்தேகம் இன்னமும் அதிகமாகும் என்று எண்ணியவன், நேராக தான் மட்டும் அந்த பெண் சைக்காலஜிஸ்ட் வீட்டிற்குச் சென்றான்.

தனது நிலைமையை முழுமையாக கூறியவன், ஒரு உறவினர் என்கிற பார்வையில் தனது மனைவிக்கு அறிவுரைகள் கூறுமாறு கேட்டுக்கொண்டான். அதற்கு பெண் சைக்காலஜிஸ்ட்டும் ஒத்துக்கொண்டார்.

அனிதாவிடம், விருந்தினர் ஒருவர் தங்களை விருந்துக்கு அழைத்திருப்பதாக பொய் சொல்லி, அவளை சைக்காலஜிஸ்ட் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அந்த சைக்காலஜிஸ்ட்டும் உறவினர் போலவே அனிதாவிடம் பேசினார். அவர் சில கேள்விகளைக் கேட்டபோது, அனிதா தனது மனதிற்குள் பூட்டி வைத்திருந்த பல விஷயங்களை கொட்டத் தொடங்கினாள்.

எந்தவொரு ஆணுக்கும் அழகான மனைவி இருந்தாலும், அடுத்த பெண் மீதான மோகப் பார்வை மட்டும் குறையாது என்று சக தோழியர் கூறியதை அப்படியே மனதில் ஆழமாக பதிந்து வைத்திருந்தாள் அனிதா. நாம் எவ்வளவுதான் தைரியமாக – அதிகாரமாக பேசினாலும், கடைசியில் கணவனிடம் பணிந்து தான் போக வேண்டும் என்றும் கூறி, அறிவுரை என்கிற பெயரில் அவளை மனக்குழப்பத்திற்கு ஆளாக்கி உள்ளனர், அந்த தோழியர்.திருமணமாகி தனிக்குடித்தனம் வந்த நிலையில் பக்கத்து வீட்டுப் பெண்கள் அனிதாவிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.

`காலம் கெட்டுக் கிடக்குதும்மா. உன் புருஷனை நீதான் பாத்துக்கணும். புருஷன் தொடர்ந்து வீட்டுக்கு தாமதமா வந்தா, வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் பிடித்துவிட்டார் என்று அர்த்தம். இந்த விஷயத்தில் நீ ஏமாந்து விடாதே’ என்று அவர்கள் கூறியது அனிதாவை மேலும் குழப்பமாக்கி விட்டது.

இதை உறுதி செய்வது போல், புது மனைவி மீதான ஆசை, மோகத்தால் தினமும் அலுவலகம் முடிந்ததும் வேகமாக வந்த அசோக், அதன் பிறகு மனைவி சலித்துப் போனதாலோ என்னவோ தாமதமாக வரத் தொடங்கினான். இதுவே அனிதாவின் சந்தேகத்தை பூதாகரமாக கிளப்பி விட்டு விட்டது.

ஒரு உறவினராக சைக்காலஜிஸ்ட் தந்த பல்வேறு அறிவுரைகளுக்குப் பிறகு அசோக்கை முழுமையாக புரிந்து கொண்டாள் அனிதா. இந்த விஷயத்தில் அசோக்கிற்கும் மனைவியிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சில உண்மைகள் சொல்லப்பட்டன. அதன்பிறகே அவர்களது வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்தது.

ராமையாவும் மனைவியின் சந்தேகப் பிடியில் சிக்கி மீண்டவர் தான். தான் தவறே செய்யாத நிலையில், தன் மீது சந்தேகப்படும் மனைவியை மேலும் உசுப்பேற்ற வேண்டும் என்பதற்காக காலையில் 8 மணிக்கு வேலைக்கு சென்றவர் இரவு 10 மணிக்குத்தான் வீடு திரும்பினார். மனைவி என்னதான் சந்தேகத்தோடு கத்தினாலும், அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு வந்தார்.

ஒருநாள் இரவு 10 மணிக்கு மேலாக வீடு திரும்பிய ராமையாவுக்கு அன்போடு உணவை பரிமாறிய அவரது மனைவி, “ஆமாங்க… உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா? நம்ம தெருவுல பேய் நடமாடுதாம். நேற்று கூட ஒருவரை பேய் பிடித்துவிட்டதாம்” என்று சும்மா ஒரு பொய்யை கொளுத்திப் போட்டாள்.

`பேயா… உன்னையே நான் சமாளிக்கும்போது, எந்த பேயும் என்னை ஒன்றும் செய்து விடாது’ என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டவர், “அப்படியா?” என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டதோடு அமைதியாகிவிட்டார்.

மறுநாள் வழக்கம்போல் இரவு 10 மணிக்குப் பிறகு வீட்டுக்கு வந்தார் ராமையா. அன்று வழக்கத்திற்கு மாறாக வீட்டின் முன்புறம் இருந்த பெரிய கேட்டை பெரிய பூட்டு போட்டு பூட்டிவிட்டார் அவரது மனைவி. எவ்வளவோ கத்திப் பார்த்தும் அவரது மனைவி வெளியே வரவேயில்லை. செல்போனை தொடர்பு கொண்டும் பயனில்லை.

நேரம் வேகமாக நகர்ந்தது. நேரம் என்னாச்சு என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது அது சரியாக நள்ளிரவு 12 மணியை தொட்டுக் கொண்டிருந்தது. அந்தநேரத்தில் சில தெருநாய்கள் வேகமாக குரைக்க, முந்தைய நாள் மனைவி சொன்ன பேய் ஞாபகம் வந்தது.

பேய் இல்லை என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்ட ராமையா, திடீரென்று நள்ளிரவு 12 மணிக்கு ஆள் நடமாட்டமே இல்லாத நடுத்தெருவில் நின்றதால் சற்று நடுங்கித்தான் போனார். நீண்ட நேரம் நின்றதால் கால் வலிக்க… அருகில் இருந்த மின் கம்பத்தின் அடியில் அமர்ந்தார். ஒரு நிமிடம் தான் ஓடியிருக்கும். வழக்கமாக பகலில் `கட்’ ஆகும் மின்சாரம் அப்போது திடீரென்று `கட்’ ஆனது.

பயத்தில் வேகமாக எழுந்த ராமையாவின் சட்டையை யாரோ பிடித்து இழுப்பது போல் இருந்தது. பேய்தான் இழுக்கிறது என்று நினைத்து, அலறியபடியே தனது வீட்டு கேட்டின் முன்பு போய் விழுந்தார். அவரது கை, கால்கள் வேகமாக நடுங்க ஆரம்பித்தன.

தலை நிமிர்ந்து, வீட்டின் கேட்டைப் பார்த்தார். அது லேசாக ஆட ஆரம்பித்து, பின் பலமாக நடுங்கியது. உண்மையிலேயே பேய் வந்துவிட்டது என்ற அதிர்ச்சியில் மயக்கமாகிப் போனார் ராமையா.

மறுநாள் காலையில் வெகுநேரத்திற்குப் பிறகே கண் விழித்தார். வீட்டுக்குள் அவர் படுத்திருக்க, அருகில் அவரது மனைவியும், மகளும் சோகத்தோடு நின்று கொண்டிருந்தனர்.

ராமையா கண் விழித்ததைப் பார்த்த அவரது மனைவி, “நேற்று இரவு மின் கம்பத்தில் என்ன செய்தீர்கள்? உங்கள் சட்டையின் பாதிப் பகுதி அதில் இருந்த கம்பியில் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. நீங்களோ கேட் வாசலில் மயங்கி கிடக்கிறீர்கள். பேய் வந்ததாக நான் சும்மாதான் சொன்னேன். ஆனால், நீங்களோ பேய் அறைந்தது போல் கிடந்தீர்களே…” என்று சொன்னபோதுதான், `அப்போ என்னை இருந்தது பேய் இல்லையா?’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டார் ராமையா. நடந்த சம்பவத்திற்குப் பிறகு இரவு 7 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வர ஆரம்பித்துவிட்டார் அவர்.

கணவன் மீது சந்தேகம் வந்தால், இந்த பேய் பிரச்சினை மட்டுமல்ல, பல பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி வரும். தம்பதியர் இருவருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டு விடும். தற்கொலை முடிவு கூட எடுக்க நேரலாம்.

அலுவலகத்திலும், அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியிலும் எவ்வளவோ நெருக்கடிகளை ஒரு ஆண் சந்திக்க நேரலாம். வெளியில் தான் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு ஆண் வீட்டில் கொட்டினால், அங்கே நிம்மதி போய் விடும்.

மொத்தத்தில் மனைவி தன்னிடம் அன்பு மழை பொழிந்தால் எந்த கணவனும் தொடர்ந்து தாமதமாக வீட்டிற்கு வர மாட்டான். நல்ல கணவனாகத்தான் இருப்பான். இதில் விதிவிலக்காக இருப்பவர்களும் உண்டு. மனைவி உயிருக்கு உயிராகவே வைத்திருந்தாலும் இப்படிப்பட்டவர்கள் இரவில் கொஞ்சமாச்சும் ஊர் சுற்றிவிட்டுத்தான் வீட்டுக்குள் காலெடுத்து வைப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களை என்ன செய்யலாம்? இதுபற்றி முடிவெடுக்க வேண்டியவர்கள், அவர்களது மனைவிமார்களே!

எக்ஸெல் டிப்ஸ்-அலகுகளை மாற்ற பார்முலா தேவையா?

அலகுகளை மாற்ற பார்முலா தேவையா?
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் வெகு காலத்திற்கு (?) முன்பு அடிக் கணக்கில் டேட்டா அமைத்ததாகவும், அதனை ஒரே கட்டளையில் பார்முலா கொடுத்து மீட்டர் அலகில் மாற்ற என்ன செய்திட வேண்டும் என விருதுநகர் வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். இது போல அலகுகள் மாற்றத்திற்கு பொதுவான கட்டளை என்னவென்று பார்க்கலாம்.
எக்ஸெல் தொகுப்பில் CONVERT என்ற பங்சனைக் கட்டளை வரியில் கொண்டு வந்து, எந்த அலகுகளையும் மாற்றலாம். இந்த பங்சனை அமைக்கை யில் நீங்கள் பார்முலா எதனையும் அறிந்திருக்கத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக Column B–யில் வரிசையாக அடிக் கணக்கில் டேட்டா கொடுத்து வைத்திருக்கிறீர்கள். இதனை மீட்டர் கணக்கில் Column இயில் கொண்டு வர ஆசைப்படுகிறீர்கள். இனி Column B–யில் டேட்டா உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும். இது B2 முதல் B8 வரை இருப்பதாக வைத்துக் கொள்வோம். முதலில் B2:B8 வரையிலான செல்களைத் தேர்ந்தெடுங் கள். அடுத்து C2:C8 தேர்ந்தெடுங்கள். இப்போது =CONVERT(B2,”ft”,”m”) என பார்முலாவினை டைப் செய்திடவும். அடுத்து Ctrl + Enter என்ற இரு கீகளையும் அழுத்தவும். இவ்வகைக் கட்டளை மூலம் பல வகையான அலகுகளை மாற்றி அமைக்கலாம். மைல் -கி.மீ, காலன் – லிட்டர் என பல கிடைக்கின்றன. பாரன்ஹீட் – செல்சியஸ் மாற்றத்திற்கான பார்முலா இப்படி இருக்கும். =CONVERT(68, “F”, “C”) செல்சியஸ் – பாரன்ஹீட் பார்முலா =CONVERT(68, “C”, “F”) என அமையும். எக்ஸெல் ஹெல்ப் மெனு சென்று மற்றவற்றிற்கான பார்முலாக்களை அமைக்கவும். உங்களிடம் பதியப் பட்டுள்ள எக்ஸெல் CONVERT பார்முலாவினை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எக்ஸெல் தொகுப்பு எடுத்துக் கொள்ளவில்லை என்றால், Analysis ToolPak – னை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பின்னர் பயன்படுத்தவும்.

எக்ஸெல் தொகுப்பில் எழுத்துவகை
எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் செயல்படும்போது அவ்வப்போது நாம் எழுத்து வகையினை மாற்ற எண்ணுவோம். நமக்குப் பிடித்த அல்லது அப்போது தேவையான எழுத்து வகையினை எப்போதும் உள்ளதாக (Default Font) மாற்ற முடியாமல் ஒவ்வொரு முறையும் மாற்ற பார்மட் மெனு சென்று மாற்றுவோம். வேர்ட் தொகுப்பில் உள்ளது போல பார்மட் மெனுவில் Default Font பிரிவு இல்லாமல் இருக்கும். அப்படி என்றால் தேவைப்படும் எழுத்துவகையினை எப்போதும் வரும்படி அமைத்திட எக்செல் தொகுப்பில் வழி இல்லையா? இருக்கிறது. முதலில் Tools மெனு செல்லுங்கள். அதில் உள்ள Options என்ற இடத்திற்குக் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பிறகு கிடைப்பதில் ஜெனரல் டேபை கிளிக் செய்தால் அங்கு நீங்கள் தேடியது “Standard font”. என்ற பெயரில் இருக்கும். இதில் கீழ் விரியும் பட்டியலை இயக்கி அதில் நீங்கள் விரும்பும் எழுத்துவகையினையும் அளவையும் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் அதன்பின் எக்ஸெல் இயக்கும் போது நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்து வகை அனைத்து செல்களிலும் கிடைக்கும். தமிழ் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்றாலும் அதனையும் அமைத்துக் கொள்ளலாம்

டேட்டாவினைச் சுற்றி பார்டர்கள்
ஒரு செல்லில் எந்த பக்கத்திலும் வரையப்படும் கோட்டினை அதன் Border என்று சொல்கிறோம். இது செல்லைச் சுற்றியும் அல்லது பல செல்களைச் சுற்றியும் இருக்கலாம். தேர்ந்தெடுக்கப் பட்ட செல் அல்லது பல செல்களின் முனைகளிலும் கோடுகளை இணைக் கலாம். இதில் Borders என்னும் கட்டளை செல்களில் உள்ள தகவலின் கீழாக கோட்டினை இடாது. ஆனால் இந்த கட்டளை மூலம் செல்களின் ஓரத்தில் பார்டர்களை அமைக்கலாம். தேர்ந்தெடுக் கப்பட்ட செல்களைச் சுற்றி பார்டர்களை அமைக்கக் கீழ்க்கண்டபடி செயல் படவும். முதலில் எந்த செல்களுக்கு பார்டர்கள் அமைக்க வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் பார்மட்டிங் டூல் பார் செல்லவும். இதில் “Borders” ஐகானை அடுத்து உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் பார்டர்கள் அமைப்பதற்குத் தேவையான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் டயலாக் பாக்ஸில் உள்ள பார்டர் டேப் மீது கிளிக் செய்து அதில் பார்டர் ஆப்ஷன்ஸ், லைன் ஸ்டைல் போன்ற தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் டயலாக் பாக்ஸில் ஓகே பட்டனில் என்டர் தட்டி வெளியேறவும். இனி நீங்கள் செட் செய்தபடி பார்டர் லைன்கள் செல்களில் அமைக்கப் பட்டிருக்கும்.
இதே போல் பார்டர் லைன் ஸ்டைலையும் மாற்றலாம். அல்லது செல்களில் ஒவ்வொரு பக்கங்களிலும் மாறுபட்ட பார்டர் லைன்களை அமைக் கலாம். செல்களைச் சுற்றி மாறுபட்ட பார்டர் லைன்களை அமைக்கக் கீழ்க்காணும் வழி முறைகளைப் பின்பற்றவும். அமைக்கப்பட வேண்டிய அல்லது மாற்றப்பட வேண்டிய செல் அல்லது செல்களைத் தேர்ந்தெடுக்கவும். “Format Cells” டயலாக் பாக்ஸைத் தேர்ந்தெடுத்து அதில் பார்டர் டேப் மீது கிளிக் செய்திடவும். இதில் வேறு வேறு வண்ணங்களில் கோடுகளை அமைத் திட Color என்னும் இடத்தில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் தேவையான வண்ணத்தினைத் தேர்ந் தெடுக்கவும். பின் அந்த டயலாக் பாக்ஸில் “OK” கிளிக் செய்து வெளியேறவும். இனி தேர்ந்தெடுத்த வண்ணங்களில் செல்களில் பார்டர்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

தூங்கா நரகம் மருவு

தூக்கத்திற்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நாம் தூங்கும் பொழுது நம் மூளையின் முக்கிய பாகங்களும் சற்று ஓய்வெடுக்கின்றன. மூளை சரியாக ஓய்வெடுக்கவில்லையெனில், நம்மால் நிம்மதியாக தூங்க முடியாது. எப்பொழுதாவது தூக்கம் வராமல் இருப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால், தொடர்ந்து தூக்கம் வராமல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மன அழுத்தம், மனச்சோர்வு, பயம், நாளமில்லா சுரப்பிகளின் குறைபாடுகள், பாலுறவு சிக்கல்கள், குடும்பச் சூழ்நிலை, கடன் தொல்லை, உடலின் அதிக உஷ்ணம் போன்றவற்றால் தூக்கமின்மை ஏற்படுகிறது. தூக்கத்தை சீராக ஏற்படுத்துவதும், தூங்கும் பொழுது மனதில் அமைதியை உண்டாக்குவதும் சில மின்காந்த அலைகளே.

மூளை பகுதியில் இருந்து சுரந்து, உடலின் அனைத்து உறுப்புகளையும் கட்டுப்படுத்தி, பலவிதமான ஹார்மோன்களையும் என்சைம்களையும் செவ்வனே பணி செய்ய உதவும் ஆல்பா, பீட்டா, தீட்டா போன்ற மின் அலைகள் நமது தூக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றன. இவற்றில் ஆல்பா அலைகள் அமைதியான, ஆழ்ந்த தூக்கத்திற்கு பேருதவி புரிகின்றன. ஆசனம், பிராணாயாமம், தியானம் போன்றவற்றின் மூலமாக இந்த அலைகளை ஒருநிலைப்படுத்த முடியும். தூக்கத்தை தருவதற்காக உட்கொள்ளும் மருந்துகளால் ஆண்மைக்குறைவு, கை, கால் நடுக்கம், நரம்புத்தளர்ச்சி மற்றும் கடும் சோர்வு ஆகியவை உண்டாவதால் அவற்றை தவிர்த்து, யோகாவில் கவனம் செலுத்துவது நல்லது.

நாம் சரியாக தூங்காவிட்டால் ரத்தக்கொதிப்பு, மனச்சோர்வு, கண்களை இழுத்து பிடிப்பது போன்ற உணர்வு, கண் சிவப்பு, கோபம், கை, கால் நடுக்கம், தூக்கம் இடையில் கலைந்தவுடன் மலம் மற்றும் சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு, கொட்டாவி, கண், மூக்கு மற்றும் வாய் பாதையில் ஒரு வறட்சி, உச்சந்தலையில் சூடான சட்டியை கவிழ்த்து வைத்தது போன்ற உணர்வு, கண்ணை சுற்றியுள்ள பகுதிகள் வீங்கி, கன்னங்கள் ஒட்டிப் போதல், அல்சர், தலைவலி மற்றும் பலவித உடல் உபாதைகளும் சுறுசுறுப்பின்மையும் உண்டா கின்றன. உடல் மற்றும் மனதை குளிர்ச்சிப்படுத்தி, மூளைக்கு அமைதியை ஏற்படுத்தி, தூக்கத்தை உண்டாக்கும் அற்புத மூலிகை மருவு. ஓரிகானம் மேஜரேனா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தை சார்ந்த மருவு செடிகள் விவசாயப் பயிராகவும் வளர்க்கப்படுகின்றன. இதன் இலைகளிலுள்ள நறுமண எண்ணெய், சாபினின், கார்வக்ரால் மற்றும் பல டெர்பின்கள், பிளேவனாய்டுகள் மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, ஆழ்ந்த தூக்கத்தை உண்டாக்குவதுடன், மன இறுக்கத்தையும் குறைக்கின்றன.

மருவு இலை மற்றும் சிறு பூக்களை ஒரு துணியில் முடிந்து, தலையணை போல் வைத்து உறங்க தூக்கம் உண்டாகும். அது மட்டுமின்றி அறை முழுவதும் நறுமணம் வீசும். மருவு இலைகளை இடித்து, சாறெடுத்து, சம அளவு நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை தலையில் தேய்த்து, குளித்து வர இரவில் நன்கு தூக்கம் உண்டாகும். தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெயில் மருவு இலைகளை ஊற வைத்து மாலையில் தலையில் தேய்த்து வந்தாலும் தூக்கம் உண்டாகும்.

வாயுக்களைஅடக்கலாமா?: அபான வாயு, தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, தாகம், இருமல், பெருமூச்சு, தூக்கம், வாந்தி, கண்ணீர், காம இச்சை மற்றும் சுவாசம் ஆகிய பதினான்கும் உடலின் இயல்பான வேகங்கள் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இவற்றை அடக்குவதால் நோய்கள் உண்டாகும். அபான வாயுவை அடக்குவதால் மார்பு வலி, வயிற்றுவலி, உடலில் குத்தல், மலம், சிறுநீர் தடை, பசி மந்தம் உண்டாகும். தும்மலை அடக்குவதால் தலைவலி, முகம் கோணல், இடுப்புவலி உண்டாகும். சிறுநீரை அடக்குவதால் நீரடைப்பு, நீர்த்தாரை புண், உறுப்பு சோர்வு உண்டாகும். மலத்தை அடக்குவதால் முழங்கால் வலி, கபம், தலைவலி, உடல் பலகீனம் உண்டாகும். கொட்டாவியை அடக்கினால் முகவாட்டம், செரியாமை மற்றும் புத்தி மங்கல் ஏற்படும். பசி மற்றும் தாகத்தை அடக்கினால் உடல் முழுவதும் குத்தல், உடல் இளைத்தல், முகச்சோர்வு மற்றும் மூட்டு வலி உண்டாகும்.இருமல் மற்றும் பெருமூச்சினை அடக்கினால் மூச்சில் துர்நாற்றம், இதய நோய், வயிற்றுப் புண்கள், மயக்கம் மற்றும் நடுக்கம் உண்டாகும். தூக்கத்தை அடக்கினால் தலைவலி, கண் சிவப்பு, செவிட்டுத்தன்மை உண்டாகும். வாந்தியை அடக்கினால் தோலில் தடிப்பு, கண் நோய், இருமல் உண்டாகும். கண்ணீரை அடக்கினால் மார்பு வலி, பீனிசம், ரோமக்கால்களில் புண்கள், அல்சர் உண்டாகும். காம இச்சையை அடக்கினால் திடீர் சுரம், மூட்டுகளில் வீக்கம், இரவில் இந்திரியம் வெளியேறுதல் ஆகியனவும், மூச்சை அடக்கினால் இருமல், சுவையின்மை, வெட்டை என்னும் உடல்சூடு ஆகியன ஏற்படுமென சித்த மருத்துவ நூல்கள் எச்சரிக்கை செய்கின்றன.
– டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,

நண்டு புளிக்குழம்பு


தேவையான பொருட்கள்

நண்டு – 1/2 கிலோ
புளி – எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
தனியாத் தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
வெங்காயம், தக்காளி – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி

தாளிக்க

கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

* நண்டை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.

* புளியைக் கரைத்து அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், போதுமான அளவு உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

* அகலமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து தாளிக்கவும்.

* நறுக்கிய வெங்காயம், தக்காளி இவற்றை வதக்கவும்.

* பிறகு புளிக்கரைசல், மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும்.

* மேற்கண்ட கலவை கொதித்ததும் நண்டை சேர்த்து குழம்பு கெட்டியாக வந்ததும், இறக்கி விடவும்.

* ருசிக்க சுவையான நண்டு புளிக் குழம்பு தயார்.

மைக்ரோசாப்ட் ஸ்கைப் – அடுத்து என்ன?

இணையத்தில், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எதேனும் ஒரு நிறுவனம் தன் தனித்துவம் பெற்ற புரோகிராம் மூலம், மக்களிடம் நல்ல பெயரைப் பெற்றிருந்தால், அதனுடன் போட்டியிட புரோகிராம் எதனையும் தயாரிக்காமல், அதனை அப்படியே விலைக்கு வாங்கி, தன் குடைக்குள் கொண்டு வருவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வாடிக்கை. அந்த வகையில் அண்மையில் இணையத்தில் நண்பர்களுடன் வீடீயோ காட்சியுடன் பேச, சேட் செய்திட மற்றும் சார்ந்த சேவையினை, உலகளாவிய அளவில் வழங்கி வரும் ஸ்கைப் சாப்ட்வேர் நிறுவனத்தினை, மைக்ரோசாப்ட் வாங்கியுள்ளது. இதற்கென மைக்ரோசாப்ட் செலுத்திய தொகை 850 கோடி டாலர். இனி ஸ்கைப் என்னவாகும்? என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது. சிலவற்றிற்கான பதிலை இங்கு காணலாம்.
ஸ்கைப் சேவை தற்போது இலவசமாகவே மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதனாலேயே மக்கள் ஸ்கைப் நிறுவனத்தினை மிகவும் நேசிக்கின்றனர். எனவே, மைக்ரோசாப்ட் இந்த சேவையினை கட்டண சேவையாக நிச்சயம் மாற்றப்போவதில்லை. அப்படி மாற்றினால், இந்த சேவையின் பண்பு மாறும். பல வாடிக்கையாளர்கள் இதிலிருந்து விலகிவிடுவார்கள்.
உயர்நிலையில் ஸ்கைப் சேவை கட்டணத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அது மிகவும் குறைவு என்பதுடன், தொடர்ந்து பல ஆண்டுகளாகக் குறைந்தும் வந்தது. ஸ்கைப் பயன்படுத்தும் 17 கோடிப் பேர்களில், 90 லட்சம் பேர் மட்டுமே கட்டண சேவையினைப் பயன் படுத்தி வந்தனர். இவர்களின் எண்ணிக்கையும் கடந்த மூன்று ஆண்டுகளில் 20% ஆகக் குறைந்தது. எனவே கட்டண சேவையில் மைக்ரோசாப்ட் ஆர்வம் காட்டாது என உறுதியாகச் சொல்லலாம்.
மைக்ரோசாப்ட் ஸ்கைப் சேவையினை ஒரு தனி நிறுவனப் பிரிவாக அமைத்துள்ளது. ஏற்கனவே அதன் தலைமைப் பொறுப்பில் இருந்த டோனி பிளேட்ஸ் அதே நிலையில் தொடர்கிறார். இதில் மைக்ரோசாப்ட் மேலும் முதலீடு செய்து, இந்த சேவையினை இன்னும் சிறப்பான முறையில் அதிக மக்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளை நிச்சயம் எடுக்க இருக்கிறது.
ஏற்கனவே மைக்ரோசாப்ட் இதே போன்றதொரு சேவையினை, விண்டோஸ் லைவ் மெசஞ்சர் மற்றும் எம்.எஸ்.என்.மெசஞ்சர் என்ற பெயர்களில் நடத்துகிறது. இனி, இதனை ஸ்கைப் சேவைக்குள் கொண்டு வந்து, கூகுள் டாக் மற்றும் யாஹு மெசஞ்சர் சேவைகளுக்குப் போட்டியாக மாற்றலாம்.
இதுவரை ஸ்கைப் சேவையில் மாற்றத்திற்கான புரோகிராம் மாறுதல்கள் அறிமுகப்படுத்தப் படுகையில், முதலில் விண்டோஸ் சிஸ்டத்திற்கான அப்டேட்டட் புரோகிராம் தரப்பட்டது. அடுத்து சில மாதங்கள் கழித்தே மேக் மற்றும் லினக்ஸ் பயனாளர்களுக்கு அவை வழங்கப் பட்டன. அனைத்து ஸ்கைப் பயனாளர் களுக்கும், சேவை தொடர்ந்து கிடைக்கும் என மைக்ரோசாப்ட் உறுதி அளித்திருப்பதால், மேக் மற்றும் லினக்ஸ் பயனாளர்கள் கவலைப்பட வேண்டிய தில்லை. தற்போதுள்ள மக்களுக்கான இலவச சேவையை அப்படியே வைத்துக் கொண்டு, இதே ஸ்கைப் சேவையினை நிறுவனங்களுக்கான சேவையாகத் தனியாக வடிவமைத்து, கட்டண அடிப்படையில் மைக்ரோசாப்ட் வெளியிடலாம்.
இந்த ஸ்கைப் சேவை மைக்ரோசாப்ட் சர்வர், பிசினஸ் சாப்ட்வேர் மற்றும் நிறுவனங்களுக்கான சர்வீஸ்களுடன் இணைந்து வெளியிடப்படலாம்.
ஸ்கைப் சேவை, மைக்ரோசாப்ட் வழங்கி வரும் லிங்க், மெசஞ்சர், அவுட்லுக், எக்ஸ் பாக்ஸ் லைவ் மற்றும் விண்டோஸ் போன் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு கிடைக்கலாம்.
ஆனால், இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு நிச்சயம் ஒரு விஷயம் மைக்ரோசாப்ட் மனதில், ஸ்கைப் சேவையை வாங்கும்போது இருந்திருக்க வேண்டும். அது விளம்பர வருமானமே. சாப்ட்வேர் நிறுவனங்கள் அனைத்துமே, தற்போது இணைய வெளி விளம்பரங்களுக்கு இடம் கொடுத்து வருமானம் ஈட்ட திட்டமிடுகின்றன. குறிப்பாக வீடியோ அடிப்படையிலான விளம்பரங்கள், ஸ்கைப் சேவையில் நிறையத் தர முடியும் என்பதால், மைக்ரோசாப்ட் இந்த வருமானத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.