Monthly Archives: ஜூன், 2011

அந்த’ நேரத்தில் என்ன நினைப்போ?

ஒவ்வொருவருக்கும் ‘ஆப்சென்ஸ் ஆப் மைன்ட்’ இருப்பது சாதாரண விஷயம். ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் மனது அந்த வேலையிலிருந்து டக்கென விலகி வேறொன்றில் மூழ்கி விடும்.

இது செக்ஸ் உறவின்போது கூட நிகழ்கிறது. செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது ஒவ்வொருவரின் மனதிலும் அதைத் தவிர வேறு சில மன ஓட்டங்களும் இருக்கிறதாம். குறிப்பாக பெண்களுக்கு அது சற்று கூடுதலாகவே இருக்குமாம்.

இதுகுறித்து ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளனர் இங்கிலாந்து ஆய்வாளர்கள். நீங்கள் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது எந்த நினைவில் இருப்பீர்கள் என்று பெண்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சொன்ன பதிலில் சுவாரஸ்யமான பல விஷயங்கள் கிடைத்துள்ளன.

34 வயது பெண் ஒருவர் கூறுகையில், எனது தோழிகள் பலரும், அவர்கள் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது எந்த நினைவில் இருப்பார்கள் என்பதைக் கூறுவது வழக்கம். சிலர் இதை முடித்து விட்டு அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிப்பார்களாம். சிலரோ, துணிகளை துவைக்க வேண்டியது குறித்து நினைத்துக் கொண்டிருப்பார்களாம். இன்னும் சிலர் மளிகை சாமான்கள் வாங்குவது குறித்து சிந்திப்பார்களாம்.

சில பெண்களுக்கு மனதில் தாங்கள் வரித்து வைத்துள்ள ஆண்களின் நினைவுகள் வந்து போகுமாம். இதுகுறித்து ஒரு பெண் கூறுகையில், நான் எனது கணவரை மிகவும் நேசிக்கிறேன். இருப்பினும் உறவின்போது அவரைத் தவிர வேறு சில ஆண்களும் கூட எனது மனதில் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. அவர்கள் நான் சிறு வயது முதல் பார்த்து, நேசித்தவர்கள். இதனால் அவர்கள் எனது மனதில் வந்து போகிறார்கள். இருந்தாலும் அவர்களை நான் நேரில் பார்த்தது கிடையாது என்றார்.

51 வயதான ஒரு பெண் கூறுகையில், எனக்கு இரண்டு முறை கல்யாணமாகியுள்ளது. நிறைய காதலர்களும் இருந்தார்கள். நான் படுக்கையில் இருக்கும்போது அந்தக் காதலர்களின் நினைவு வருவது வழக்கம். அதேபோல டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குப் போவது குறித்தும் நான் அந்த சமயத்தில் திட்டமிடுவது வழக்கம். மேலும் எனது வீட்டில் எத்தனை ஷூக்கள் உள்ளது என்பதையும் நான் மனதுக்குள்ளாகவே கணக்கிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளேன் என்கிறார்.

சில பெண்களுக்கு தங்களுக்குப் பிடித்த சினிமா ஸ்டார்களின் நினைவு வருமாம்.

இது இங்கிலாந்துக் கணக்காக இருக்கலாம். இருப்பினும் செக்ஸ் உறவின்போது வேறு சில சிந்தனைகளிலும் பெண்கள் மற்றும் ஆண்கள் ஈடுபடுவது சாதாரணம்தான் என்கிறார்கள் மன நல நிபுணர்கள்.

சில நேரங்களில் கணவர்களுடனான உறவு பெண்களுக்குக் கசந்து போக இத்தகைய மாறுபட்ட சிந்தனைகளும் காரணமாகி விடுவதாகவும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

மனதொத்த உறவின் மூலம்தான் ஆணும், பெண்ணும் முழுமையான அன்பையும், இன்பத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும். மாறாக இதுபோன்ற வேறு பாதைகளில் சிந்தனகைள் திரும்பும்போது அது கசப்பான விளைவுகளுக்கான ஆரம்ப கட்டமாகவே கருதப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

உயிரின் கதை – 4(இந்திய ஞானம் – சில குறிப்புகள்)

இந்திய ஞானம் – சில குறிப்புகள்

இந்திய, கிரேக்க தத்துவங்களுக்கு பல சுவாரஸ்யமான ஒற்றுமைகள் உண்டு. நிறையச் சொல்லலாம் என்றாலும் சுருக்கமாகச் சில: 1) பிளாட்டோ சொன்ன ந்யூமா(pneuma) இந்தியத் தத்துவத்தில் பிராணா(prana) என்று சொல்லப்பட்டுள்ளது. 2) உலகம் பஞ்ச பூதங்களால் ஆகியது என்பதும் நம் வேதங்களில் உள்ளது, உயிர்/ ஆன்மா (atman) அழிவற்றது என்பதை கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார். இதையே பிளாட்டோவும் சொல்லியிருக்கிறார். 3)Animisiam என்று அறியப்படும் கிரேக்க சிந்தனை இந்து ஞானமரபில் ’சாங்கியம்(Sankya)’ அதாவது ’ஆதி இயற்கை வாதம்’ என்று அறியப்பட்டுள்ளது. 4) ஹிப்போகிரடெஸ் சொன்ன வாதம், பித்தம், கபம் போன்ற விஷயங்கள் ஏற்கனவே நம் சம்ஹிதைகளில் இன்னும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. 5) நம்மூர் பௌத்தாயனர் எழுதிய சுலபசூத்ரா(Baudhayana Sulbasutras)வில் வரும் சூத்திரங்களும் பித்தாக்ரஸின் தேற்றத்தை விவரிக்க கிரேக்கத்தின் ஜுக்லிட் (Euclid) பயன்படுத்திய கணித விளக்கங்களும் ஒத்துள்ளன என்பதை சைய்டன்பர்க் (Seidenberg) என்ற பேராசிரியர் தன் ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். வேதங்கள், புராணங்கள், சம்ஹிதைகள், பௌத்தாயன சுலபசூத்ரா ஆகியவை முறையே பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹிப்போகிரடெஸ் பித்தாக்ரஸ் ஆகியோரின் காலத்துக்கும் முந்தியவை என்பது இதில் முக்கியமான விஷயம்.

இந்திய-கிரேக்க தத்துவத்தின் ஒற்றுமைக்கு மூன்று வகையான விளக்கங்கள்: 1) இந்திய மற்றும் கிரேக்கத் தத்துவத்தின் வேர் இரண்டு நாடுகளுக்கும் வெளியே, மத்திய ஆசியாவில் உள்ளது என்பது ஆராய்சியாளர்களுள் ஒரு சாரார் சொல்வது. 2) கடல் கடந்து சென்ற வணிகர்கள், சிந்தனையாளர்கள் வழி இந்திய கிரேக்க தத்துவங்கள் பரிமாறப் பட்டு வளர்ந்தன என்பது இன்னொரு சாரார் சொல்வது. ஹரப்பா காலத்திலேயே (கி.மு. 1700–1300) இந்தியாவுக்கும் மேற்குக்கும் வியாபாரப் போக்குவரத்துகள் இருந்தன என்பதும், கிரேக்கத் தத்துவ வரலாற்றில் முக்கிய புராதான ஊரான மைலிடஸ் (Miletus) ஆசிய கடல் போக்குவரத்தின் முக்கியத்தடமாகவும் கிரேக்கத்தின் ஆசிய வணிக மையமாகவும் இருந்தது என்பதும் ஆதாரங்கள். அலெக்ஸாண்டருடன் வந்த கிரேக்க வரலாற்று ஆய்வாளர்கள் ஆப்கானிஸ்தானில் கிரேக்க தேசத்தவர்கள் வசித்ததைப் பதிவு செய்தது போலவே, தெற்கு எகிப்தில் கெய்ரோவுக்கு 20 மைல் தொலைவில் நைல் நதிக்கரையின் மேற்குக் கரையில் அமைந்த மெம்பிஸ்(Memphis) என்ற ஊரில் இந்தியர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன(1979-ம் ஆண்டு முதல் மெம்பிஸை உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக அறிவித்து யுனெஸ்கோ பேணி வருகிறது). 3) ஒரே மாதிரியான சிந்தனைகள் தனித்தனியே இரு நாடுகளிலும் தோன்றின என்பது மூன்றாவது தரப்பு.

“வரலாற்றைத் தீர்மானிப்பது அதை எழுதுபவர்கள்தான்” என்று ஒரு ஜோக் உண்டு. இன்று பல்கலைகளில் பாட நூல்களாக உள்ள வரலாற்று, தத்துவ நூல்களை எழுதியவர்களுள் பெருவாரியானவர்கள் கீழைத் தத்துவங்களை ஐரோப்பாவின் கண்களோடு பார்த்த கனவான்கள் என்பது கீழைத் தத்துவங்களுக்கு நேர்ந்த துரதிருஷ்டம். அரிஸ்டாட்டில் தனி ஆளாக புத்தகங்களை எழுதிக் கொண்டிருந்த கி. மு 350 களில் பீகாரின் பாட்னா நகருக்கு 55 மைல் தென்கிழக்கில் 1500 ஆசிரியர்களும் 10,000 மாணவர்களும் கொண்ட நாளந்தா என்ற ஒரு சர்வதேச பல்கலைக் கழகமே நம் நாட்டில் இயங்கிக் கொண்டிருந்தது என்ற உண்மையை நினைத்துப் பார்த்தால், மேற்க்கண்டவற்றுள் கடைசி இரண்டு தரப்புகளை தைரியமாக நம்பலாம். இதையெல்லாம் ஒரு அமெரிக்கப் பேராசிரியர் எழுதிய ஆங்கிலப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டினால் தான் நாமே நம்புவோம் என்பதுதான் கி.பி.2011-ம் ஆண்டின் துரதிருஷ்டம். இதில் எளியேனும் அடக்கம்.

முதல் கட்டுரையில் சிவவாக்கியரின் வரிகளை ’கொடுமை’ என்றும் இரண்டாம் கட்டுரையில் டெமக்ரடீஸ் வரியை ’அமேஸிங்’ என்றும் ஆங்கிலத்தில் வியந்து தொலை பேசினார் எக்ஸ். ”அடுத்த வாரம் ஊருக்கு வரும்போது நாளந்தா யுனிவர்சிட்டிக்குப் போகணும், எப்படிப் போவது என்று விசாரித்து வையும்” என்று நான் சொன்னபோது எதிர் முனையில் முறுக்கு கடிபடும் ஒலி. தொடர்ந்து ”அதுவா பக்கத்துல தான் இருக்கு’ என்று பதில் வந்தபோதே நான் சுதாரித்திருக்க வேண்டும். கிளம்பிச் சென்று நேரில் பார்த்தபோது ”ஓ யெஸ். பைக்லயே போயிடலாமே” என்று சீட்டியடித்தவாறே கூலிங்கிளாஸ் சகிதம் கிளம்பலானார். பாட்னாவுக்கு எப்படி பைக்கில் போவது என்று நான் குழம்பியபோது ”ஓல்டு யுனிவர்ஸிட்டி கேம்பஸ் தான” என்றார் எக்ஸ் சாவதானமாக.

nalanda-university-big

வாழ்நாளில் ஒருமுறையாவது நாளந்தாவைச் சென்று காணும் பாக்கியம் வாய்க்க அங்கு விசிட்டிங் புரபஸராக இருந்த புத்தரும் நாகார்ஜுணரும் அருள வேண்டும். இதுவரை நாளந்தாவைப் பார்க்காதவர்கள் ஜெயமோகன் அவர்களின் பயணக்குறிப்பையும், நாளந்தா பற்றிய குறும்படத்தையும் பார்க்கலாம்.

-o00o-

வேதங்களின் தத்துவ விசாரங்கள் மற்றும் இந்து ஞானமரபு முழுதையும் ஜெயமோகன் ’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ நூலில் தெளிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். தத்துவங்களைத் தவிர்த்து இந்து ஞான மரபில் உடல், உயிர் பற்றிய குறிப்புகளை மட்டும் மிகச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

உடல், உயிர் பற்றிய இந்திய சிந்தனை ரிக் வேதத்திலிருந்தே ஆரம்பிக்கிறது. ரிக் வேதம் எழுதப்பட்ட காலம் சுமார் கி.மு. 1700–1100 என்பது கணிப்பு. ரிக் வேதத்தில் வரும் சரஸ்வதி நதி கி. மு. 1900 களிலேயே வரண்டு விட்டது என்று கண்டுபிடிக்கப் பட்டிருப்பதால் (ரிக் வேதத்தில் வளமான சரஸ்வதி நதியைப் பற்றிய வர்ணனைகள் உண்டு) ரிக் வேதத்தின் காலம் கி.மு 3100 க்கும் முற்பட்டதாக இருக்கக் கூடும் என்கிறார் சுபாஸ் கக் என்ற அமெரிக்க பேராசிரியர் (பேராசிரியர் என்பவர் அமெரிக்காவில் மட்டும் தானே இருக்க முடியும்?).

வேத மரபுப்படி தேவர்களின் முதல் மருத்துவரும், முதல் அறுவை சிகிச்சை நிபுணருமான தன்வந்திரியே ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம். ”காஸ்யரின் மகன் காசி, அவனின் மகன் திர்கத்தாமனின் தகப்பனாகிய ரஸ்த்ரன். திர்கத்தாமனுக்கு தன்வந்திரி என்ற மகன் இருந்தான். மருத்துவ விஞ்ஞானத்தைத் தொடங்கியது வாசுதேவரின்(விஷ்ணு) வடிவமாகிய தன்வந்திரியே. தன்வந்திரியின் பெயரை நினைப்பவர் எல்லா நோயிலிருந்தும் விடுவிக்கப்படுவர்” -என்கிறது பாகவத புராணம் (Srimad Bhagavatam 9.17.4).

அக்னிவேசர், பேலர், ஜதுகர்ணர், பரசரர், ஹரிதர், க்ஷ்ரபனி ஆகியோருக்கு குருவாக இருந்தவர் புனர்வாச ஆத்ரேயர் (Punarvasu Atreya) என்ற மருத்துவ விற்பன்னர், இவரின் காலம் தெரியவில்லை. அவருக்குப் பிறகு அவரின் இந்த ஆறு சிஷ்யர்களும் மருத்துவதைப் பற்றி ஆளுக்கொரு சம்ஹிதையை (samhita, means “collection” in Sanskrit) எழுதினர். இவற்றுள் சிறந்ததாகக் கருதப்படும் அக்னிவேசர் எழுதிய அக்னிவேச சம்ஹிதை (Agnivesa Samhita)யை பின்நாளில் சரகர் விரிவுபடுத்தி எழுத அது சரக சம்ஹிதை(Saraha Samhita) என அறியப்பட்டது. அதே போல சுஸ்ருதரின் நூல் சுஸ்ருத சம்ஹிதை (Sushruta Samhita) என்று அறியப்படுகிறது. மூத்த வாகபதர் (Vagbhata the elder) என்பவர் இவ்விரண்டு நூல்களையும் சேர்த்து அஷ்டாங்க சங்ரகம் (Astanga Sangraha) என்ற ஒரே நூலாகத் தொகுத்தார். இம்மூன்று நூல்களும் ’மூத்தோரின் மூன்றுவழிகாட்டிகள்’ (Vrddha Trayi) என்று அறியப்படுகின்றன.

அதற்குப்பிறகு வந்த இளைய வாகபதர் (Vagbhata the younger) எழுதிய அஷ்டாங்க ஹிருத சம்ஹிதா (Astanga Hrdaya Samhita) என்ற நூலில் சுஸ்ருதரின் அறுவை சிகிச்சை முறைகளைப் பற்றிய தெளிவான விளக்கங்கள் உள்ளன. மிகச் சில பகுதிகளே இன்று கிடைக்கும் பேலரின் பேல சம்ஹிதை (Bhela Samhita) மனம் (manas) மூளையிலும் தண்ணுணர்வு (citta, அதாவது consciousness) இதயத்திலும் மையம் கொண்டுள்ளது என்கிறது. உயிரிகளை கருப்பையிலிருந்து பிறப்பவை, முட்டையிலிருந்து பிறப்பவை, விதைகளிலிருந்து பிறப்பவை என மூன்று வகைளாகப் பிரிக்கிறது சந்தோகிய உபநிடதம் (Chandogya Upanisad). மனித உடலில் மொத்தம் 727,210,201 நரம்புகள் உள்ளன என்கிறது பிரஸ்ன உபநிடதம் (Prasna Upanisad). மனித உடலின் 107 மூட்டுக்கள், 180 தையல்கள், 700 நாளங்கள், 360 எலும்புககள், 500 தசைகள், 900 உடற்குழிகள், 45 மில்லியன் முடிகள் உள்ளன என்ற செய்தி கர்ப உபநிடதத்தில் (Gharbha Upanisad) உள்ளது.

நிற்க! ‘இதென்ன பிரமாதம், என் அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டரின் அலமாரியில் இதைவிட நல்ல புத்தகமெல்லாம் இருக்கே’ எனும் பிரகிருதிகள் மேற்சொன்ன புத்தகங்கள் எழுதப்பட்டது சுமார் கி.மு.1500-ம் ஆண்டு முதல் கி.மு.1000-ம் ஆண்டு வரை உள்ள ஏதோ ஒரு வருடத்தில் என்பதை நினைத்து, கொஞ்சமாவது ஆச்சரியப்படவும். முடியாதவர்கள் அடுத்து வரும் ஆச்சரியக்குறியைப் பார்த்து சமாளிக்கலாம்!

சம்ஹிதைகளின் சாரமாக உடல், உயிர் பற்றிய செய்திகளை பின் வருமாறு சுருக்கலாம். ஆயுர்வேதம் என்றால் ஆயுள் + வேதம் ஆயுளை நீட்டும் அறிவியல் என்று பொருள். வாதம் (காற்று, ஆகாயம்), பித்தம் (நெருப்பு), கபம் (நிலம், நீர்) என மனித உடல் பஞ்ச பூதங்களிலான மூன்று காரணிகளால் கட்டுப் படுத்தப்படுகிறது என்பது அடிப்படை. வாதம், பித்தம், கபம் மூன்று காரணிகளும் உடலின் தலா ஐந்து செயல்களோடு தொடர்புடையவையாக அறியப்படுகின்றன. ’வாதம்’- முறையே சுவாசம் (prana), பேச்சு (udana), சீரணித்துப் பிரித்தல் (samana) இரத்த ஓட்டம் (vyana), உடல் கழிவுகளை நீக்குதல் (apana) ஆகியவற்றோடு தொடர்புடையது. ’பித்தம்’- சீரணம் மற்றும் உடல் சூடு (pacaka), குடல் கூழ் மற்றும் இரத்தத்தின் செந்நிறம் (ranjaka), மனப் பயிற்சி (sadhaka), கண்பார்வையின் வலிமை (alocaka), உடலின் செந்நிறம் (bhrajaka) ஆகியவற்றை நிர்ணயிக்கிறது. ‘கபம்’- எச்சில் சுரப்பு (kledaka), உடலின் சக்தி மற்றும் வலிமை (avalambaka), சுவையுணர்ச்சி (bodhaka), கண் மற்றும் இதர புலன்கள் (tarpaka), உடலின் மசகு (slesmaka) ஆகியவற்றோடு தொடர்புடையது.

மனித உடல் என்பது ரஸம் (rasa), குணம்( guna), வீரியம் (virya), விபகம் (vipaka) மற்றும் பிரபவம் (prabhava) ஆகிய தன்மைகளை வெவ்வேறு விகிதததில் கொண்டது. உணவு அடையும் ரசவாத மாற்றங்களை விபகமாகப் புரிந்து கொள்ளலாம். சூடு (usna), குளுமை (sita) போல மொத்தம் இருபது குணங்கள் சொல்லப்பட்டுள்ளன. சூடு, குளுமை போன்ற சக்தியை உருவாக்கும் தன்மையே வீர்யம். மதுரம் (madhura), அமலம் (amla), லாவணம் (lavana), திகதம் (tikta), கடு (katu) மற்றும் கஸாயம் (kasaya) என ‘ரஸம்’ ஆறு வகைப்படும். ஒவ்வொரு ரஸமும் இரு கூறுகளின் கலவையாகவும் தனித்த சுவையாலும் அறியப்படுகிறது. மதுரம், அமலம் லாவணம் இவை வாததிற்கும், மதுரம், திகதம், காஸ்யம் ஆகியவை பித்தத்திற்கும், கடு மற்றும் காஸ்யம் ஆகியவை கபத்திற்க்கும் எதிராகச் செயல்படுகின்றன.

மனித உடல் என்பது பஞ்ச பூதங்களின் கலவையே. பஞ்ச பூதங்கள் பல்வேறு விகிதங்களில் கலப்பதன் மூலமே ரஸம் (plasma), இரத்தம் (blood), மாமிசம் (flesh), கொழுப்பு (fat), எலும்பு (bone), மஜ்ஜை (marrow), மற்றும் சுக்ரம் (semen) ஆகிய ஏழு வகையான திசுக்கள் (dhatu) உண்டாகின்றன. இத்திசுக்கள் இணைந்து கலந்து ஓடுவதால் உடலில் ஏற்படும் உயிர்த்தன்மை வெண்ணிறமான எண்ணெய் போன்ற நிணம் வழியே மனித உடல் முழுக்க பரவியுள்ளது. உடலின் ஆதார நீர்மங்களான நிணம், ரஸம், இரத்தம் ஆகிய மூன்றும் இதயத்தில் சேகரமாகிறது. அடிப்படை விதிகள் (Sutrasthana), நோயின் மூலம் (Nidanasthana), நோய்க்குறிகள் (Vimanasthana), உடற்கூறியல் (Sarirasthana), நோய் அறிதல் (Indriyasthana), நோய் சிகிச்சை (Cikitsasthana), மருந்தியல் (Kalpasthana), நோய் தீர்த்தல் (Siddhisthana) என ஆயுர்வேத மருத்துவம் எட்டு பெரும் பகுதிகளைக் கொண்டது.

சம்ஹிதைகளின்படி ஆயுர்வேத மருத்துவத்தில் தேர்ச்சி பெற ஒருவர் உடற்கூறியல் (kayacikitsa) அறுவை சிகிச்சையியல் (salyacikitsa) காது, மூக்கு தொண்டை மருத்துவம் (salakyacikitsa) குழந்தை மருத்துவம் (kaumarabhrtya) உளவியல் (bhutavidya) நச்சியல் (agadatantra) வேதியியல் (rasayana) பாலியல் மருத்துவம் (vajikarana) ஆகிய எட்டுப் பிரிவுகளையும் பயில வேண்டும். தவிர மருத்துவத்தோடு தொடர்புடைய உப கலைகளான வாலை வடித்தல் (distillation), பொறிகளை கையாளுதல் (operative skills), சமையல் (cooking), தோட்டக்கலை (horticulture), தாது அறிவியல் (metallurgy), சர்க்கரைத் தாயாரிப்பு (sugar manufacture), மருந்தியல் (pharmacy) பண்பறி பகுப்பாய்வு (analysis of minerals), உலோகவியல் (compounding of metals), காரங்களைத் தயாரித்தல் (preparation of alkalis) ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

கீறி அறுத்தல் (chedya), வெட்டி நீக்குதல் (bhedya), தழும்பேற்றுதல் (lekhya), துளையிடுதல் (vedhya), உட்செலுத்துதல் (esya), பிடுங்கி எடுத்தல் (aharya), உறிஞ்சி நீக்குதல் (visravya), தையல் (svya) என எட்டு வகையான அறுவை சிகிச்சை முறைகளை விளக்கும் சுஸ்ருதர், தான் அறுவை சிகிச்சையில் பயன்படுத்திய ஆயுதங்களாக 20 கூர்மையான மற்றும் 101 மழுங்கலான உபகரணங்களைப் பட்டியலிடுகிறார்.

sushustra21

அறுவை சிகிச்சைக்கு முன் தன்ணுர்வு நீக்கி நோயாளியை தாயார்படுத்த sammohini என்ற மருந்தும் சிகிச்சைக்குப் பின் புத்துணர்வூட்டி எழுப்ப சஞ்சீவனி (sanjvini) என்ற மூலிகையும் வலி நீக்க திராட்சை ரசமும் பயன்படுத்தப்பட்டது. கனவுகளை விளக்க சரக சம்ஹிதையில் ஒரு தனி அத்தியாயமே ஒதுக்கியிருக்கிறார் சுஸ்ருதர். இதை சிக்மண்ட் ஃபிராய்ட் படித்துப் பார்த்திருப்பாரா தெரியவில்லை.

சம்ஹிதைகளின் காலம் ஏறக்குறைய கி.மு. 1500 – 1000. அதாவது ஹிப்போகிரடெஸின் காலத்துக்கு (கி.மு. 460 BC – 370) ஏறக்குறைய ஆயிரம் வருடத்துக்கும் முன்னால். ஆகவே மனித வரலாற்றில் மருத்துவம் தோன்றியதும், மனித உடல் மற்றும் மருத்துவம் பற்றிய ஆரம்ப நூல்கள் எழுதப்பட்டதும் இந்தியாவில்தான் என்பதைச் சொல்ல பயப்படத்தேவையில்லை என்றே நினைக்கிறேன். ‘pseudoscience எழுதுகிறேன்’ என்று எக்ஸ் போன்ற நண்ப விவாதிகள் பிராது பண்ணுவார்கள் என்பதால் மேலது விஷயத்துக்கு மங்களம். தலைப்பை விட்டு விலகிவிடுவோம் என்பதால் அடுத்து வரிசையில் காத்திருக்கும் ஆர்யபட்டர், பிரம்மகுப்தர், பாஸ்கரர் ஆகியோரை ’மன்னிக்கவும், அடுத்தமுறை சந்திப்போம்’ என்று அனுப்பிவிடுவோம்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால், இந்திய சிந்தனை மரபில் உள்ள ஏறக்குறைய அதே விஷயங்களைத்தான் பிளாட்டோ, பித்தாக்ரஸ், அரிஸ்டாட்டில், ஹிப்போகிரடெஸ் ஆகியோரும் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. தொல் இந்திய நூல்களின் காலம் இவர்களின் காலத்துக்கும் முந்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அப்படியானால் இச்சிந்தனைகள் இந்தியாவில் தோன்றி பிற்காலத்தில் பரவி கிரேக்கத்திற்குச் சென்றவையா என்ன?

(இன்னும் வரும்)

உதவியவை & மேலும் படிக்க:

1.Sulaba Sutra, http://www.math.ubc.ca/~cass/courses/m309-01a/kong/sulbasutra_geometry.htm
2.Indian Mathematics, http://en.wikipedia.org/wiki/Indian_mathematics
3.Dutta, A,K., 2002. Mathematics in Ancient India
http://www.ias.ac.in/resonance/April2002/pdf/April2002p4-19.pdf
4.Euclid, Encyclopedia Britannica, http://www.britannica.com/EBchecked/topic/194880/Euclid
5.Seidenberg, A., The origin of mathematics. Archive for History of Exact Sciences. 18: 301-342, 1978.
6.ஜெயமோகன், 2009. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், தமிழினி பதிப்பகம்
7.Subhash Kak, 2003, Greek and Indian Cosmology: Review of Early history, http://cdsweb.cern.ch/record/607500/files/0303001.pdf?version=1
8. Srimad Bhagavatam, http://vedabase.net/sb/9/17/4/en1
9.சரக சம்ஹிதையை தரவிறக்கம் செய்ய: http://www.ayurveda-berkeley.com/Ayurveda_Books_Ayurvedic_Articles_Correspondence/Ayurvedic_Sutras_Ayurveda_Sanskrit_Books/Ayurvedic-Sanskrit-Writings/Charaka’s-Carak-Samhita-Sanscrit-Sutra-Ayurveda/Charaka-Samhita-2003-rev2_Vol_I.pdf
10. சுஸ்ருத சம்ஹிதையை தரவிறக்கம் செய்ய: http://www.archive.org/details/englishtranslati00susruoft
11. நாளந்தா பல்கலைக் கழகம், http://en.wikipedia.org/wiki/Nalanda

——————————–

வேணுகோபால் தயாநிதி

நன்றி-சொல்வனம்

வேர்ட் டிப்ஸ்-மார்ஜினுக்குள் டேபிள்

மார்ஜினுக்குள் டேபிள்
வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை இணைக்கையில், சில வேளைகளில், அது நாம் விரும்பும் இடத்தில், எதிர்பார்க்கும் மார்ஜின் இடைவெளியில் அமையாது. சில எடிட்ஸ் மற்றும் நகர்த்தல் முயற்சிகளுக்குப் பின்னரே, டேபிள் நாம் விரும்பிய மார்ஜினில் அமையும். இதனை நாம் விரும்பிய இடத்தில் அமைக்க, ஒரு சுறுக்கு வழியும் உண்டு.
மிக அகலமான டேபிள் ஒன்றை எப்படி நாம் விரும்பிய மார்ஜினுக்குள் அமைப்பது என்று இங்கு பார்க்கலாம். இதனை வேர்ட் 2000 மற்றும் அதன் பின்னர் வந்த எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளில் மேற்கொள்ளலாம்.
டேபிளில் எங்காவது, ரைட் கிளிக் செய்திடவும். வேர்ட் கான்டெக்ஸ்ட் (Context) மெனு ஒன்றைக் காட்டும். இதில் AutoFit என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது துணை மெனு ஒன்றைக் காட்டும். இதன் உள்ளாக AutoFit to Window என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இனி ஒவ்வொரு நெட்டு வரிசையின் அகலமும் ஒரே மாதிரியாக அமையும். அதே நேரத்தில், டேபிள்முழுவதும், மார்ஜினிலிருந்து எதிர் மார்ஜின் வரை சமமாக அமைக்கப்படும்.

நம் விருப்பப்படி வேர்ட் பட்டன்கள்
நாம் அடிக்கடி பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பில், சில பட்டன்களை இங்கு இருந்தால், நமக்கு இயக்க வசதியாக இருக்குமே என்று எண்ணுவோம். நம் மவுஸ் நகர்த்தல் அல்லது கீ போர்டு பயன்பாடு காரணமாக நமக்கு இந்த எண்ணம் தோன்றும். வேர்ட் இதற்கான வசதிகளை நமக்குத் தருகிறது. அந்த வழிகளை இங்கு பார்க்கலாம்.
இதற்கு முதலில் Alt கீயை அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். அடுத்து நாம் இடம் மாற்ற விரும்பும் மெனு பட்டனை, உங்கள் மவுஸால் கிளிக் செய்து அப்படியே இழுத்து நீங்கள் விரும்பும் புதிய இடத்திற்குச் செல்லுங்கள். அப்போது பாய்ண்ட்டர் ஒரு நான்கு முனை சக்கர அம்பாக மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள். புதிய இடத்திற்குச் சென்றவுடன் மவுஸை விட்டு விடுங்கள். நீங்கள் விரும்பிய வகையில் மெனு பாரில் பட்டன்கள் அமைந்திருக்கும்.

கர்சரைக் கொண்டு செல்ல:
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டும். என்ன செய்திடலாம்? ஏணிட்ஞு அழுத்தினால் வரியின் தொடக்கத்திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்குச் செல்லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களா!

மெனு மாற்றம்
வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.
1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.
2. மெனுமீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால் மெனு மறையும்.
3. மெனுவிற்கு வெளியே டாகுமெண்ட்டில் எங்கு கிளிக் செய்தாலும் மெனு உடனே மறைந்துவிடும்.

கூரான பொருட்கள் குத்துவது ஏன்?

கூரான ஊசியானது துணி, அட்டை போன்ற பொருட்களை எளிதில் துளைத்துக் கொண்டு செல்வதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இதுபோன்ற பொருட்களில் மழுங்கலான ஆணியால் குத்துவதற்கு கடினமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம்?

கூரான ஊசியைச் செலுத்தும்போது முழுச்சக்தியும் அதன் முனை மீது செலுத்தப்படுகிறது. ஆனால், மழுங்கலான ஆணியில் முனையின் பரப்பு அதிகமாக இருப்பதால், அதே சக்தி அதிகப் பரப்பின் மீது செயல்பட வேண்டியிருக்கிறது. எனவே, அதே சக்தியைச் செலுத்தினாலும், மழுங்கலான ஆணியை விடக் கூரான ஊசியை உபயோகிக்கும்போது அதிக அழுத்தம் குறுகிய இடத்தில் பாய்கிறது.

அழுத்தத்தைக் குறிக்கும்போது சக்தியின் அளவை மட்டுமின்றி, அது செயல்படும் பரப்பின் அளவையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று மட்டும் சொன்னால், அதில் இருந்து இது அதிகமா, குறைவா என்று கண்டுகொள்ள முடியாது. ஏனெனில், இந்த சம்பளம் மாதத்திற்கா, வருடத்திற்கா என்பது தெரியாது.

அதுபோலத்தான் சக்தி குறித்த விஷயம். அது ஒரு சதுர சென்டி மீட்டர் மீது பரவியுள்ளதா, ஒரு சதுர மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்குப் பரப்பின் மீது பரவியுள்ளதா என்பதைச் சார்ந்திருக்கிறது.

பனிச்சறுக்கு மட்டைகள் நம்மைப் பளபளப்பான வெண்பனியின் மீது எளிதில் எடுத்துச் செல்கின்றன. அவை இல்லாவிட்டால், நாம் பனியினுள் அழுந்திவிடுவோம். ஏன்? இம்மட்டைகளைப் போட்டுக் கொள்ளும்போது உடல் எடை அதிகப் பரப்பின் மீது பரவியுள்ளது.

மட்டைகளின் பரப்பு, நமது உள்ளங்கால் களின் பரப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், மட்டைகள் அணிந்திருக்கும் போது வெண்பனியின் மீது நாம் செலுத்தும் அழுத்தம், அவை இல்லாமல் இருக்கும்போது செலுத்தும் அழுத்தத்தை விட இருபது மடங்கு குறைவாக இருக்கும். ஏற்கனவே கூறியபடி, பனிச் சறுக்கு மட்டைகள் அணிந்து கொண்டால்தான் வெண்பனி நம்மைத் தாங்கும். அவை இல்லாவிட்டால், பனியினுள் நம் கால்கள் புதைந்துவிடும்.

தண்டர்பேர்ட் ஷார்ட்கட் கீகள்

மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரபலமான பிரவுசராக, அனைத்துப் பிரிவினரிடத்திலும் பெயர் பெற்று வருவதைப் போல, பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமாக, தண்டர்பேர்ட் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதனைத் தனியாகவும் விரும்பிப் பயன்படுத்துவோரும் உண்டு.
தண்டர்பேர்ட் இமெயில் தொகுப்பில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ தொகுப்பு இங்கே தரப்படுகிறது.
புதிய செய்தி எழுத (மாறா நிலையில்) – Ctrl + M
புதிய செய்தி எழுத (மாற்றப்பட்ட நிலையில்) – Shift + Ctrl + M
செய்தி திறக்க – Ctrl +O
அச்சிட – Ctrl+ P
நகலெடு (காப்பி செய்திட) – Ctrl + C
செய்ததை உடனே ரத்து செய்திட – Ctrl + Z
மீண்டும் அதனை மேற்கொள்ள – Ctrl+ Y
முந்தைய போல்டருக்குச் செல்ல – Ctrl+ Alt+ M
அழிக்க – Del
ட்ரேஷ் பெட்டிக்குச் செல்லாமல் அழிக்க – Shift + Del
அனைத்தையும் தேர்ந்தெடுக்க (அனைத்து செய்திகள் மற்றும் ஒரு செய்தியில் உள்ள டெக்ஸ்ட் மட்டும்) – Ctrl+ A
செய்திக்கு முன்னர் வந்த அனைத்து செய்திகளையும் சேர்ந்த்து தேர்ந்தெடுக்க – Ctrl + Shift + A
செய்தியை எடிட் செய்திட (புதியதாக) – Ctrl + E
அனைத்து சார்ந்த செய்திகளையும் விரிக்க – *
அனைத்து சார்ந்த செய்திகளையும் மடக்க – \
டேக் இணைக்க / நீக்க – 1 to 9
செய்தியிலிருந்து அனைத்து டேக்குகளையும் நீக்க – 0 (zero)
உடனடியாக பில்டர் செய்திட – Ctrl+F
அப்போதைய செய்தியில் டெக்ஸ்ட் கண்டறிய – Ctrl+F
தற்போதைய அஞ்சல் செய்தியில் மீண்டும் ஊடிணஞீ பயன்படுத்த – Ctrl+G or F3
அப்போதைய அஞ்சல் செய்தியில் முந்தைய தேடியதைக் கண்டறிய – Ctrl+ Shift + G (or Shift + F3)
போல்டரில் உள்ள அனைத்து செய்திகளையும் தேட Ctrl + Shift + F
டேப் அல்லது விண்டோவினை மூட – Ctrl + W
விண்டோ அல்லது டேப் மூடுவதை மீண்டும் மேற்கொள்ள – Ctrl+ T
மின்னஞ்சல் செய்தியை பார்வேர்ட் செய்திட – Ctrl+ L
தற்போதைய அக்கவுண்ட்டில் உள்ள புதிய அஞ்சல் செய்திகளைப் பெற – F5
அனைத்து அக்கவுண்ட்களிலும் உள்ள புதிய அஞ்சல் செய்திகளைப் பெற Ctrl+ Shift + T
டெக்ஸ்ட்டின் அளவினை அதிகரிக்க – Ctrl + +
டெக்ஸ்ட்டின் அளவினைக் குறைக்க – Ctrl+
டெக்ஸ்ட்டின் அளவினை பழையபடி அமைக்க – Ctrl+ 0 (zero)
ஸ்டார் இணைக்க, நீக்க – S
அஞ்சல் செய்தியை கிடப்பில் பாதுகாப்பாய்ப் போட – A
மின்னஞ்சல் செய்தியின் மூலத்தைக் காண – Ctrl+ U
மின்னஞ்சல் செய்தியினைப் படித்து விட்டதாக/ படிக்காமல் விட்டதாகக் குறியிட – M
மின்னஞ்சல் செய்தியினைப் படித்து விட்டதாகக் குறியிட – R
அனைத்து மின்னஞ்சல் செய்திகளையும் படித்துவிட்டதாகக் குறியிட – Shift + C
தேதி குறித்து படித்ததாகக் குறியிட – C
குப்பை செய்தியாகக் குறியிட (Junk) J
குப்பை இல்லை எனக் குறியிட – Shift + J
மின்னஞ்சல் செய்திக்கு மாறா நிலையில் உள்ள படிவத்தில் பதிலளிக்க – Ctrl+ R
மின்னஞ்சல் செய்திக்கு மாற்றப்பட்ட நிலையில் உள்ள படிவத்தில் பதிலளிக்க Shift + Ctrl + R
அனைத்து அஞ்சல் செய்திகளுக்கும் பதில் அளிக்க (மாறா நிலையில் உள்ள வடிவமைப்பில்) Ctrl+ Shift + R
அஞ்சல் செய்தியில் உள்ள அனைவருக்கும் பதிலளிக்க – Shift + Ctrl + R
லிஸ்ட்டுக்குப் பதில் அளிக்க – Ctrl+ Shift + L
அஞ்சல் செய்தியை பைலாக சேவ் செய்திட – Ctrl+ S
செய்திகளைத் தேடுக – Ctrl + Shift + F
அனைத்து செய்திகளையும் அனுப்ப மற்றும் பெற – Ctrl+ T or F5
நிறுத்த – Esc
வெளியேற – Ctrl+ Q

உயிரின் கதை – 3(ஆதி மனிதனின் நாட்குறிப்பிலிருந்து)

ஆதி மனிதனின் நாட்குறிப்பிலிருந்து

“இப்பிரபஞ்சம் என்பதுதான் என்ன?” -என்ற கேள்விக்கு நாம் வைத்திருக்கும் பதிலை அடிப்படையாகக் கொண்டு நம்மைச் சுற்றியுள்ள எந்த விஷயத்தையும் நாம் இரண்டு விதமாகப் புரிந்து கொள்ள முடியும். வரலாற்றுக் காலந்தொட்டு ஒன்றுக்கொன்று எதிரான முற்றிலும் வேறான இரு பதில்கள் இக்கேள்விக்கு விடையாக வைக்கப் பட்டுள்ளன. நம் புலன்களால் அறிய முடிகிற பொருள்களால் ஆகியது என்பது ஒரு பதில். நம் புலன்களால் அறிய முடியாதவற்றால் ஆகியது என்பது இரண்டாவது பதில்.

அதாவது ஒரு கோணத்தில் இப்பிரபஞ்சம் முழுக்க பொருள் வடிவானது. இன்னொரு கோணத்தில் இப்பிரபஞ்சம் முழுக்க ஆன்மீக வடிவானது.

“குறைந்தது ஒரு கருத்தாக்கம் என்றாகவாவது அறிவியல் முதலாவது கோணத்தை ஏற்றுக் கொள்கிறது. ஆன்மிகமும் மதமும் சற்றும் தயங்காமல் இரண்டாவது கோணத்தை ஏற்றுக் கொள்கின்றன” என்கிறார் ஜேம்ஸ் ஃபிரேஸர் (James Frazer) எனும் மானுடவியலாளர். ஆனால் இது போல ஒரு கண்ணோட்டத்தை மட்டும் சார்ந்து யோசிப்பது சிந்தனையை எளிமைப்படுத்தி முழுமையற்றதும் பிழையானதுமான முடிவுகளை நோக்கி நம்மை இட்டும் செல்லும். முற்றிலும் வேறுபட்ட சிந்தனைகளை உள்வாங்கிய அவற்றிலிருந்து தொகுக்கப் பட்ட ஒரு புதிய சிந்தனையே மேம்பட்ட தாகவும் முழுமையானதாக இருக்க முடியும். கென் வில்பர் (Kenneth Earl Wilber II) போன்ற நவீன சிந்தனையாளர்கள் முன்வைப்பது இதைத்தான்.

உயிர் என்றால் என்ன? -என்ற கேள்வியை மனிதன் புரிந்து கொண்ட விதம் மனித நாகரீகத்தின் அடிப்படைக் கூறாக அமைந்து, பிற்காலதில் மதங்கள் தோன்றுவது வரை முக்கியப் பங்கு வகித்தது என்பதால் எவரும் இக்கேள்வியை அறிவியல் நோக்கை மட்டும் கொண்டு மேலோட்டமாக விவாதித்து விட முடியாது என்றே நினைக்கிறேன்.

-o00o-

வரலாற்றுக்கு முந்திய காலத்தில் ’உயிர் என்றால் என்ன’ என்பதை மனிதன் எவ்விதமாகப் புரிந்து கொண்டான் என்பதை மானுடவியலின் ஆய்வு மூலம் கிடைக்கும் தொன்மங்களின் வழியே சென்று யூகித்து அறிய முடியும். நம் புலன்களின் வழி அறியும் இயற்கையின் ஒவ்வொரு பொருளுக்கும் காரணமாக இருப்பது புலன்களால் அறிய முடியாத இயற்கைக்கும் அப்பாற்பட்ட (supernatural) அதன் சக்தி, அல்லது ஆன்மா என்பதுவே ஆதிப் பழங்குடி சமூகத்தின் நம்பிக்கையாக இருந்தது.

இயற்கையான காற்று, ஆறு, பூமி, பாறை, மலை, மரம், தண்ணீர் வரையாடு, பறவை என எல்லாவற்றுக்கும் தனித்தனியே தனித்தன்மையான ஆன்மா உள்ளது. அதனாலேயே காற்று காற்றாகவும், ஆறு ஆறாகவும், பாறை பாறையாகவும் உள்ளது என்பது ஆதி மனித நம்பிக்கை.

ஒரு பறவை பறவையாக இருப்பதற்குக் காரணம் அதன் தனித்துவமான ஆன்மாவே காரணம். பறவையும் அதன் ஆன்மாவும் ஒன்றின் இரு வடிவங்களே என்பதைத் தாண்டி அதீதமான கேள்விகளுக்கு இச்சிந்தனையில் இடமில்லை. இருந்தும் இயற்கையும் இப்பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்வதற்குரிய வழி முறையாக இச்சிந்தனை இன்றும் கூட இருந்து வருகிறது. ’உயிர்’ அல்லது ’ஆன்மா’ என்று பொருள் படும் இலத்தீனின் ‘anima’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து விரிக்கப்பட்டு ஆங்கிலத்தில் ‘Animism’ என்று அறியப் படும் இத்தத்துவத்தை ‘உயிர்த்துவம்’ அல்லது ‘ஆன்மத்துவம்’ என்று மொழி பெயர்க்கலாம். இத்தத்துவத்தின் மூலம் பிரபஞ்சத்தை அறியும் சிந்தனை முறை அனைத்து நாகரீகங்களிலும் இருந்து வந்துள்ளது. ஓரிடத்தில் தோன்றி, பல நூறு ஆண்டுகள் வழி ஒரு நாகரீகத்திலிருந்து இன்னொன்றுக்கு இச்சிந்தனை பரவியது என்பது ஒரு சாராரின் கருத்து என்றாலும் ஆதி மனித குடிகளிடையே இந்நம்பிக்கை ஆங்காங்கே தனித்தனியாகவும் தோன்றியிருக்க் கூடும். நிராதரவாகத் தனித்து விடப்பட்ட ஆதி மனிதனின் எளிய மனம் இப்பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை இதை விட வேறு எவ்விதமாகப் புரிந்து கொண்டிருந்திருக்க இயலும்.

தன்னால் முற்றிலும் அறிய முடியாத மரணம், புயல், தீ, பெருமழை, கொடிய காட்டு விலங்குகள் ஆகியவற்றால் குழப்பம் மற்றும் பீதியடைந்து இயற்கைச் சக்திகளின் மூலம் ஏற்படும் துன்பத்திற்கும் அழிவுக்கும் காரணம் கண்ணுக்குப் புலப்படாத இச்சக்திகளின் கடுங்கோபமே காரணம் என்று கருதிக் கொண்டு அவற்றின் வலிமைக்குத் தலை வணங்கி கோபத்தைத் தணிக்க பலி/ காணிக்கை இடும் வழக்கம் இருந்தது.

நத்தை, நன்ணீர் நண்டு, கெண்டை மீன், பாம்பு, புறா, கொக்கு, வான்கோழி, காகம், கழுகு, நாய், ஓநாய், கரடி, காட்டெருமை என ஏதாவது ஒரு விலங்கிலிருந்தே தன் குலம் தோன்றியது என்று ஆதி மனிதக் குலங்கள் நம்பின. ஆகவே இவற்றை தன் குலக்குறியாகக் கொள்ளும் வழக்கம்(totemism) இருந்தது. குலச் சடங்குகளில் தன் குலக்குறியான (totem) முன்னோரைப் போல உடை, ஒப்பனையுடன் தோன்றுவதும் வழக்கமாக இருந்தது. குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆதி குடிகளிடம் இவ்வழக்கம் மிக வலுவாக நிலவியதற்கான ஆதாரங்கள் உள்ளன. நீர், வெள்ளம், இடி, மின்னல், பனிக்கட்டி, வானவில், காற்று, எலும்பு என உயிரற்ற பொருள்களைக் குலக்குறியாகக் கொள்ளும் வழக்கமும் இருந்தது.

ஒவ்வொரு குலத்திலும் எல்லாம் அறிந்த தலைவன் (shaman) மூலிகைகளைப் பற்றி அறிந்தவனாகவும் தன் உடலை விட்டு வெளியேறி வேறு பல வேலைகளைச் செய்பவனாகவும் இருந்தான். நோய்க்கு மருந்து தருவதே தலைவனின் தலையாய பணியாக இருந்தது. மனிதனின் ஆவி/ ஆன்மா அவன் உடலை விட்டு விலகி விடுவதாலேயே வியாதி வருகிறது என்பது ஆதி மனிதனின் நம்பிக்கை. அவ்வாறு பிரிந்து சென்ற ஆவியைப் பிடித்து அதைச் சரியான உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைத்து நோயைக் குணப்படுத்துவது தலைவனின் முக்கிய வேலை. ஒரு வேளை இம் முயற்சி வெற்றி பெறாமல் நோயாளி இறந்து விட்டால், ஆன்மாவைப் பின் தொடர்ந்து சென்று அது அடுத்த உலகத்திற்குச் செல்லும் கடுமையான நெடிய பயணத்துக்கு துணை போவதும் தலைவனின் வேலைதான். அவ்வாறு மேற்கொண்ட தன் பயணத்தை முழுக்க ஒன்று விடாமல் உணர்ச்சி வயப்பட்டு விவரித்து வர்ணித்துச் சொல்லும் நிகழ்வும் முக்கியமான ஒரு குலச் சடங்காக இருந்தது.

-o00o-

மெஸபடோமியாவின் (இன்று இராக் நாடு) ஒரு பகுதியான சுமேரிய மக்களின் குல நம்பிக்கைகள் மேற்கத்திய நாகரீகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தின என்று நம்ப ஆதாரங்கள் உள்ளன. மனிதன் உட்பட எல்லா உயிரிகளும் தெய்வீக சக்திகளால் படைக்கப் பட்டவையே என்பதும் சுமேரியர்களின் நம்பிக்கை. அவர்கள் நம்பிக்கையில் இயற்கையும் தெய்வமும் ஒன்றே. நம்மு (Nammu) என்ற கடல் தேவதை பால்வழியல்லாத இனபெருக்கம் மூலம் வானமாகிய அன் (An) என்ற ஆண் தேவனையும் என்-கி (En-ki ) அல்லது இயா (Ea) என்ற பூமியாகிய பெண் தேவதையையும் தோற்றுவித்தாள். அன், என்-கி இவர்களின் பாலியல் உறவு மூலம் என்-லில்(En-lil) என்ற காற்றுக் கடவுள் பிறந்தார். இவ்வாறாக கடல், காற்று, பூமி, ஆகாயம் இவையனைத்தும் கடவுளின் அம்சங்களே. மேலும் இதைப் போல சுமார் 5,000 தேவர்கள் மற்றும் தேவதைகளைப் பற்றிய வர்ணனைகள் சுமேரிய நாகரீக ஆய்வு நூல்களில் காணக்கிடைக்கின்றன.

சுமேரியாவை வென்ற அக்கடியர்களால் (Akkadians) எழுதப் பட்ட ’எனும எலிஷ்’ (Enuma Elish) என்ற ஆவணம் உலகம் படைக்கப் பட்டதைப் பற்றிய சுமேரியர்கள் சிந்தனையையைக் காட்டும் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. இந்நம்பிக்கையில் முதல் மூதாதையாக வருபவர்கள் தேவ ஜோடிகளான ’அஸ்பு’ (Aspu) என்ற ஆணும் டியாமத் (Tiamat) என்ற பெண்ணும். சுருக்கமாகச் சொன்னால், பிற்பாடு நேர்ந்த ஒரு சண்டையில் டென்ஷனாகி டியாமத்தை திரு. மார்டுக் (Marduk) என்ற ஒரு ஆண் கடவுளார் இரண்டாக வெட்டிப் பிளக்க அவளின் ஒரு பாதி ஆகாய வளைவாகவும் இன்னொரு பாதி பூமியாகவும் ஆகியது என்பது ஐதீகம்.

தீமை ஏற்படுத்த முயன்ற கெட்ட சர்ப்பம், சாப்பிடக்கூடாத பழத்தைச் சாப்பிட்டு சாகவரத்தை இழந்த என்-கி, என்று பழைய ஏற்பாட்டில் உள்ள நிகழ்வுகளோடு ஒப்பிடும் படியான நிகழ்வுகளும் சுமேரிய புராணங்களில் உள்ளன.

மெஸபடோமியர்கள் இவ்வுலகம் யுகாந்திரமாக என்றும் இருப்பது என்ற கருத்தை ஏற்கவில்லை. உலகம் கடவுளால் படைக்கப் பட்டது என்றே நம்பினார்கள். கடவுளால் நேரடியாகப் படைக்கப் படுதல் அல்லது இரண்டு கடவுளர்களின் குருதி கலத்தல், கடவுளால் களிமண்ணால் செய்யப்படுதல், விதைகளிலிருந்து முளைத்தல் ஆகியவற்றின் வழி மனிதன் தோன்றினான் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.

-o00o-

“மேற்கத்திய தத்துவம் அனைத்தும் பிளாட்டோ (வின் தத்துவதிற்கு) ஒரு அடிக்குறிப்பு மட்டுமே (All of western philosophy is a footnote to Plato)!” என்றார் ஒயிட்ஹெட் (Alfred North Whitehead) எனும் தத்துவ அறிஞர். ஒயிட்ஹெட் ரஸலின் (Bertrand Russell) பிஎச்டி ஆய்வுக் கட்டுரையை மேற்பார்வை செய்தவர்.

அதுபோல உயிரியல் மொத்தமும் அரிஸ்டாட்டிலுக்கு (அவரின் சிந்தனைக்கு) ஒரு அடிக்குறிப்பே என்று சொன்னால் அது மிகையாகாது என்கிறார் ஜான் மூர்(John Moore) எனும் உயிரியல் பேராசிரியர்.

அப்படி அரிஸ்டாட்டில் என்ன தான் செய்தார்?

வாழ்க்கையின் பெரும்பகுதியை ஏதென்ஸில் கழித்த அரிஸ்டாட்டில் (கி. மு. 384 – 322) பிளாட்டோவின் மாணவராகவும் அலெக்ஸாண்டரின் ஆசிரியராகவும் இருந்தார். உயிரிகளின் வரலாறு (The History of Animals), விலங்குகளின் நடையைப் பற்றி (On the Gait of Animals), வாழ்வின் நீட்சியும் குறுக்கமும் (On Longevity and Shortness of Life) ஞாபகமும் கடந்த காலநினைவும் (On Memory and Reminiscence), விலங்குகளின் இடப்பெயர்ச்சி (On the Motion of Animals), விலங்குகளின் உடற்கூறு (On the Parts of Animals), புலனும் உணர்வும் (On Sense and the Sensible), உறக்கமும் உறக்கமின்மையும் (On Sleep and Sleeplessness), இளமை முதுமை, உயிர்ப்பு மரணம், மற்றும் சுவாசம் (On Youth and Old Age, On Life and Death, On Breathing), ஆன்மாவைப் பற்றி (On the Soul) எனப் பல நூல்களை எழுதிக் குவித்தார் அரிஸ்டாட்டில் (உயிரியல் சம்பந்தப் படாத நூல்கள் இங்கு குறிப்பிடப்படவில்லை).

கிரேக்கத்திலிருந்து அரபிக்கும் பிறகு பிறகு அரபியிலிருந்து இலத்தீனினுக்கும் மொழிபெயர்க்கப் பட்டதில் இந்நூல்களில் சில பல தவறுகள் நேர்ந்திருக்கலாம் என்றாலும் காலாவதியாகி விட்ட (இன்று கேலிக்குரிய) வர்ணனைகள் கருத்துக்கள் நிரம்பியிருந்தாலும் எழுதப் பட்ட காலத்தின் தொன்மைக்கு (கி.மு 350கள்) இவை முதல் தரமான அறிவியல் நூல்களே. ஒரு நவீன விஞ்ஞானிக்குரிய தர்க்கத்துடன், தரவுகளைச் சேகரித்து, அவற்றை அலசி ஆராய்ந்து பார்த்து அறிவியல் ரீதியாக கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு தர்க்கத்தின் அடிப்படையில் பதில் காண முயன்றார் என்பது அரிஸ்டாட்டிலின் தனிச் சிறப்பு.

AD 77-79-ல் ரோம் நாட்டைச் சேர்ந்த பிலினி (Pliny the Elder) என்பவர் ’இயற்கையின் வரலாறு’ (Naturalis Historia) என்ற பெயரில் உயிரியல், இயற்பியல், பூகோளம், நுண் கலைகள் ஆகியவற்றைப் பற்றிய ஒரு தகவல் களஞ்சியத்தை (encyclopedia) வெளியிட்டார். சுமார் 473 ஆசிரியர்களால் எழுதப் பட்ட பல்வேறு புத்தகங்களைப் படித்துத் திரட்டிய 34,707 தகவல்கள் அடங்கியது இது. ”ஆன்மா என்றும் நீடித்து நிலைப்பது என்றோ மரணத்தின் போது புதுப்பிக்கப் பட்டு மறுபிறப்பை அடைகிறது என்றோ நம்புவது சிறு பிள்ளைத் தனமானது. சொர்க்கம், நரகம் இவையெல்லாம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை!” என்பது போன்ற அதிரடியான குறிப்புகளை இந்நூலில் காணலாம்.

‘மருத்துவத்தின் தந்தை’ (Father of Medicine) எனக் கருதப் படும் ஹிப்போகிரடெஸ் (Hippocrates of Cos, 460 BC – 370 BC) எழுதிய புத்தகங்கள் (Hippocratic Corpus) நவீன மருத்துவத்தின் ஆரம்பமாகும். நோயாளியின் உணவு, பழக்க வழக்கங்கள், சுற்றுப் புறம் ஆகியற்றால் உடலின் நான்கு விதமான திரவங்களான இரத்தம் (blood), கபம் (phlegm), பித்தம் (yellow bile), கறும் பித்தம் (black bile) ஆகியவற்றில் ஏற்படும் சமநிலைக் குறைவே நோய்கள் ஏற்படக் காரணமே தவிர கடவுளின் கோபமோ சாபமோ காரணம் அல்ல என்பது ஹிப்போகிரடெஸின் முக்கியமான தத்துவம்.

நோய் உண்டாகும் காரணத்தை கடவுள் மற்றும் மத நம்பிக்கையிலிருந்து விடுவித்து உடற்கூறியல், உடலியங்கியல் நோக்கித் திருப்பியது இவரின் முக்கியப் பங்களிப்பாகும். இதன் மூலம் உடற்கூறியல், உடலியங்கியல் ஆகிய துறைகள் அதுவரை இல்லாத முக்கியத்துவம் பெற்றதோடு பிற்காலத்தில் அவை தனித் துறைகளாக வளர்ந்து விரிவடையவும் வித்திட்டது தலைவர் ஹிப்போகிரடஸ்தான்.

(இன்னும் வரும்)

உதவியவை & மேலும் படிக்க

1. Burns, Edward M., et al., 1986. World Civilizations. 2 vols. 7th edition, Norton: New York.
2. Campbell, Joseph. 1988, Historical atlas of world mythology. Vol.1. The way of animal powers, New York: Harper and Row.
3. Tylor, Edward B, 1881, Anthropology: An introduction to the study of man and civilization, New York: Appleton.
4. Kramer Samuel., 1972, Sumerian Mythology. Philadelphia: University of Pennsylvania Press.
5. Mayr, E., 1982. The Growth of Biological Thought: Diversity, Evolution, and Inheritance, Cambridge: Harvard University Press.
6. அரிஸ்டாட்டில் மற்றும் ஹிப்போகிரடெஸின் நூல்களை இங்கே வாசிக்கலாம்: http://classics.mit.edu/Browse/index-Aristotle.html

——————–

வேணுகோபால் தயாநிதி

நன்றி-சொல்வனம்

தானியங்கி மாலுமி!

கடலில் செல்லும் கப்பல்களில் மனித மாலுமியுடன் `தானியங்கி மாலுமி’யும் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்தத் தானியங்கும் மாலுமி, கப்பலைத் துல்லியமாக சரியான பாதையில் செலுத்துகிறது. இது மனித மாலுமியைவிட திறமையாக வேலை செய்கிறது. இதை நவீன சுழல் காம்பசுடன் இணைக்க வேண்டும்.

நவீன சுழல் காம்பஸ் சிறு தட்டச்சு எந்திரம் அளவுதான் இருக்கும். கப்பலின் ஆட்டம் அதைப் பாதிக்காது. கப்பலின் அளவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அந்தக் காம்பஸ் போதுமானது.

தானியங்கி மாலுமியில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களை உத்தரவாகப் பதிந்து விட்டால், அதன்படி கப்பலைச் செலுத்தும். ராடார் மூலம் உத்தரவு கொடுப்பதற்கேற்ப கப்பலை ஓட்டும் தானியங்கி மாலுமியும் உண்டு. ராடாரின் உத்தரவுக்கேற்ப தானியங்கி மாலுமி கப்பலைச் செலுத்தும்.

அவ்வப்போது கடலின் நிலைமையை அனுசரித்து இந்தத் தானியங்கி மாலுமி மனித மாலுமியைப் போல் வேலை செய்யும் ஆற்றல் கொண்டது. தானியங்கி மாலுமி பொருத்தப்பட்டு, முதன்முதலில் தானியங்குக் கப்பலாக பயணம் செய்தது `மோர்ம கார்கோ’ என்ற 12 ஆயிரம் டன் எடையுள்ள அமெரிக்கக் கப்பல். அது 1964-ல் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்குச் சென்றது.

அதன்பின்னர் இரண்டாண்டுகள் கழித்து, 65 ஆயிரம் டன் எடை உள்ள பிரெஞ்சுக் கப்பல் எஸ்.எஸ்.டோலபெல்லா, தானியங்கு வசதியால் செயின்ட் நசயேர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. அதில், கப்பலைச் செலுத்துவதற்கான சக்தி உற்பத்திச் சாதனமும் தானியங்கு முறையில் அமைக்கப்பட்டிருந்தது.

விம்பிள்டன் டென்னிஸ் – சுவையான தகவல்கள்!

ஜூன் 20 – ஜூலை 3 விம்பிள்டன் டென்னிஸ் போட்டி!

உலகின் மிகப் பழமையான விளையாட்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டி.
* 1877ம் ஆண்டு முதல், போட்டிகள் நடந்து வருகின்றன.
* 1915 – 1918; 1940 – 1945ம் ஆண்டுகளில், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களால் போட்டிகள் நடத்தப்படவில்லை.
* இந்த ஆண்டு ஜூன் மாதம், 20ம் தேதி முதல், ஜூலை 3ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.
* பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி, ஜூலை 2ம் தேதியும், ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி, ஜூலை 3ம் தேதியும் நடைபெறுகின்றன.
* 1877ல் நடந்த முதல் போட்டியை, 200 ரசிகர்கள் மட்டுமே பார்த்தனர்; மொத்தம், 22 வீரர்கள் பங்கு கொண்டனர்.
* போட்டிகள் அனைத்தும் புல் தரையில் நடப்பதால் இது, “லான் டென்னிஸ் போட்டி’ என அழைக்கப்படுகிறது.
* 1884ம் ஆண்டிலிருந்து பெண்கள் ஒற்றையர் மற்றும் ஆண்கள் இரட்டையர் போட்டிகள் நடக்கத் துவங்கின.
* 1913ம் ஆண்டு முதல், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகள் துவங்கின.
* 1937ம் ஆண்டு தான், “டிவி’யில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
* 2014ம் ஆண்டு வரை, பி.பி.சி., 1 மற்றும் 2, இந்த போட்டியை ஒளிபரப்ப உரிமை பெற்றுள்ளது. அதுவே, உலக நாடுகளின் மற்ற சேனல்களுக்கு இலவசமாகவும், கட்டணத்திற்கும் வழங்கி வருகிறது.
* லண்டனில், இந்த போட்டி நடக்கும் கிராமத்தின் பெயரே விம்பிள்டன்!
*1992ம் ஆண்டு முதல் ரேடியோ விம்பிள்டன் இயங்கி வருகிறது. போட்டி நடக்கும் இரு வாரமும், போட்டிகளின் வர்ணனைகள், சங்கீதம், பேச்சு என மாற்றி, மாற்றி ஒலிபரப்பி அசத்தும்.
* இந்த ஆண்டு வழங்கப்படவுள்ள மொத்த பரிசு தொகை, ஒரு கோடியே, 46 லட்சம் பவுண்ட்ஸ். (ஒரு பவுண்ட் – 73 ரூபாய்!)
* ஆண், பெண் ஒற்றையர் சேம்பியன்களுக்கு கிடைக்கும் பரிசு தொகை, ஒரு கோடியே ஏழு லட்சம் பவுண்ட்ஸ். 2007ம் ஆண்டு வரை, ஆண் வீரர்களுக்கு அதிகமாகவும், பெண் வீரர்களுக்கு குறைவாகவும் வழங்கப்பட்டு வந்தது; பிறகு தான் சமமாக வழங்கப்படுகிறது.
* இரட்டையர் ஆட்டத்தில் வென்றவர்களுக்கு பரிசு, 2 லட்சத்து, 50 ஆயிரம் பவுண்ட்ஸ்.
* கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் வென்றவர்களுக்கு பரிசு, 92 ஆயிரம் பவுண்ட்ஸ்.
* இரண்டு வாரத்திற்கு நடுவில் வரும் ஞாயிற்றுக் கிழமையை, “ரெஸ்ட் அல்லது மிட்சன் சண்டே’ என அழைக்கின்றனர்; அன்று போட்டிகள் கிடையாது. ஆனால், மழையால் போட்டிகள் தள்ளிப் போனால், “பீப்புள் சண்டே’ என அழைத்து, அன்று போட்டியை தொடருவர். இதற்கு, ரிசர்வேஷன் கிடையாது; யார் வேண்டுமானாலும் டிக்கெட் வாங்கிச் செல்லலாம். இறுதி ஆட்டம் ஞாயிறன்று நடக்கும் போது, மழை வந்து போட்டி திங்கட்கிழமை தொடரப்பட்டால், அதை, “பீப்புள் மண்டே’ என அழைக்கின்றனர்.
* விம்பிள்டன் டென்னிஸ் போட்டிக்காக மொத்தம், 19 கோர்ட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. சென்டர் கோர்ட் மற்றும் நம்பர் ஒன் கோர்ட்டில் வருடத்திற்கு, இரு வாரங்கள் மட்டுமே போட்டிகள் நடைபெறும்.
*சென்டர் கோர்ட்டில் முக்கிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.
* 1997ல் புதிய நம்பர் ஒன் கோர்ட் கட்டப்பட்டது. இதில், 11 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கலாம்.
* நம்பர் 2 கோர்ட்டில், 4,000 பேர் அமர்ந்து பார்க்கலாம்.
விம்பிள்டனில், பல நாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டாலும், இந்தியாவை பொறுத்தவரை ராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன், லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோரே சாதித்து காட்டினர்.

விலங்குகளின் அறம்

1-elephant-family-carl-purcell

அண்மையில் நான் படித்ததொரு செய்தி வியப்பளிப்பதாக இருந்தது. செய்தி என்னவோ எளிமையான ஒன்றுதான், ஆனால் அதன் அவசியம் நம் அறிவியல் அடிப்படையிலான தேர்வுகளைக் கேள்விக்குறியாக்குவதாக இருந்தது – மரபணுவின் அடிப்படையில் மனிதர்கள் சிம்பன்ஸீக்களைவிட பொனோபோ குரங்குகளுக்கே நெருங்கியவர்களாக இருக்கிறார்கள்.

குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்று சொல்கிறோம், ஆனால் மனிதன், சிம்பன்ஸீ, பொனோபோ இந்த மூன்றும் (இதில் மனிதனைத் தவிர மற்ற இரண்டும் குரங்குகள்) 98.8 சதவிகித மரபணுத் தொகுப்பில் ஒன்றே போலிருக்கின்றன. இவற்றுக்குப் பொதுவான யாரோ ஒரு மூதாதையர் இருக்கிறார். இவர்களில் இத்தனை நாட்கள் நாம் சிம்பன்ஸீ குரங்குகளைப் போலிருக்கிறோம் என்று அறிவியலாளர்கள் சொல்லி வந்தனர். ஆனால் இப்போது சிம்பன்ஸீயின் மரபணுத் தொகுப்பு விரைவான மாற்றங்களுக்கு உட்படுவதால் அவை மனிதனை விட வெகு தூரம் விலகிப் போய் விட்டதாகவும், மனிதன் பொனோபோ குரங்கைப் போன்றவன் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று சொல்கின்றனர்.

bonobo

இது ஒன்றும் அறிவுலகில் ஒரு ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பைப் போன்ற மாபெரும் புரட்சியல்ல. ஆனால் இதைத் தொட்டு எழும் சிந்தனைகள் மனிதனுடைய இயல்பு குறித்து ஒரு பெரிய அளவில் பார்வை மாற்றம் செய்வதாக இருக்கிறது.

டார்வினின் காலம் வெள்ளையர்களை உயர்ந்தவர்களாகப் பார்த்த காலம். மற்றவர்கள் விலங்களைப் போன்றவர்கள் என்று நினைத்த காலம். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது அறிவியல் உண்மையாக அடையாளம் காணப்பட்டு அதைத் தொடர்ந்து அது பொருளாதார உண்மையாகவும் அறியப்பட்டு, அரசியலில் சொல்லப்படாத நடைமுறையாக இன்று இருக்கிறது.

இதற்கெல்லாம் மனிதன் சிம்பன்ஸீயைப் போன்றவன் என்று சொல்வது பயனுள்ளதாக இருந்தது. காரணம் சிம்பன்ஸீக்களின் இயல்பு அப்படி. குரங்குகள் தங்கள் பகுதியைக் காக்க ஆண்களைக் காவல் குரங்குகளாய் நியமிக்கின்றன – அவை அந்நியக் குரங்குகளைக் கொலை செய்கின்றன. குழந்தைகளைக் கொல்கின்றன, அடித்துக் கொன்ற குரங்குகளைத் தின்கின்றன, வழிக்கு வராத தம் கூட்டத்தைச் சேர்ந்த குரங்குகளையும் கொல்லத் தயங்குவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் குரங்குகள் வேட்டையில் ஆவேசமான களிப்படைகின்றன. இது எல்லாம் மனிதன் வன்முறைக்குப் புதியவனல்ல, அது அவனது இயல்பு என்று நியாயப்படுத்த உதவுவதாக இருந்தன. ஆனால் பொனோபோக்கள் பாவம், அவற்றின் பெண்கள் ஆண்களை எதிர்த்து நிற்கிறார்கள், ஒன்றோடொன்று சேர்ந்தியங்குகின்றன:

இதெல்லாம் நமக்கு சரிப்படவில்லை. இங்கு மனிதனின் பிம்பம் கிடைக்கவில்லை. இப்போதிருப்பதற்கு இணையான தகவல் அப்போது இருந்தாலும், நமக்கு சிம்பன்ஸீக்களே நெருங்கியவர்களாக இருந்தார்கள். பொனோபோ குரங்குகள் புறக்கணிக்கப்பட்டன.

காலம் மாறுகிறது, நமது விழுமியங்களும் மாறி வருகின்றன. இப்போது பொனோபோக்கள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அவை நம்மைப் போன்ற இனமாக அடையாளம் காணப்படுகிறது. சிம்பன்ஸீக்கள் இனி மெல்ல மெல்ல நமது ஆய்வுக் கூடங்களில் இருந்து வெளியேற்றப்படும் என்று நம்பலாம். எதிர்கால ஆய்வுகளில் பொனோபோக்கள் உட்படுத்தப்படும்.

–ooOOOoo–

பொனோபோக்கள் என்றில்லை, அனைத்து விலங்குகளும்கூட வளமான உணர்வுலகில் வாழ்வனவாக இருக்கின்றன என்று சில தகவல்களைப் படிக்கும்போது தோன்றுகின்றது. அறவுணர்வு, அல்லது நடத்தையின் அடிப்படையில் நம் முன்னோர்களைத் தீர்மானிப்பதானால் அதற்குத் தகுதியுள்ள விலங்குகளுக்குப் பஞ்சமில்லை.நாய்களின் நுகர்வுத்திறன் மனிதனதைவிட இருபத்து ஐந்து மடங்கு ஆற்றல் மிகுந்தது. பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தன் சகாக்களுடன் யானைகள், திமிங்கலங்கள், நீர்யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள் மற்றும் முதலைகள் தாழ் அலைவரிசை ஓலி எழுப்பி உரையாடுகின்றன. இவற்றுக்கு மாறாக வௌவால்கள், டால்பின்கள் போன்றவை உயர் அலைவரிசையைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

மனிதனைத் தவிர வேறெவருக்கும் கருவிகளை வடிவமைக்கத் தெரியாது என்று சொல்லலாம். சிம்பன்சிகளுக்கு இதில் ஓரளவு நிபுணத்துவம் உண்டு. பசிபிக் தீவிலுள்ள காகங்கள் கருவிப் பயன்பாட்டில் தேர்ந்தவைகளாகவே இருக்கின்றன. நீளமான ஒயர்களை வெவ்வேறு வடிவங்களில் வளைத்து அவை தம் உணவைக் கைப்பற்றுகின்றன. ஆய்வுக்கூடத்தில், ஒரு நூலில் கட்டப்பட்ட குச்சியை அந்த நூலை இழுத்துக் கைப்பற்றுகின்றன. இந்த சிறு குச்சியைக் கொண்டு இதனினும் பெரிய குச்சியைத் தம் பக்கம் இழுத்து, அதைக் கொண்டு தொலைவில் இருக்கும் உணவை அடைகின்றன.

ந்யூசீலாந்தில் உள்ள காகங்கள் தம் குஞ்சுகளுக்கு கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுத் தருகின்றன. ஆக்லாந்து பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இத்தகைய கல்வி பழக்க இந்தக் காகங்கள் பிரத்யேக இடம் வைத்திருப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.

மிருகங்களுக்கும் ஆனந்தம், மகிழ்ச்சி, கருணை, துக்கம், வெட்கம் போன்ற உணர்ச்சிகள் உண்டு. இதில் சந்தேகப்படவோ ஆச்சரியப்படவோ ஒன்றுமில்லை. நம்மைப் போன்றே அவற்றுக்கும் மூளையின் லிம்பிக் அமைப்பு உணர்ச்சிகள் எழும் மையமாக இருக்கிறது.

ஸீ லயன்களின் குழந்தைகளைத் திமிங்கலங்கள் கொன்று தின்னும்போது அவை துயரத்தில் ஓலமிடுகின்றன. இறந்து போன தன் குட்டியை டால்பின்கள் கடலின் மேற்பரப்புக்குத் தள்ளி வந்து உயிர்ப்பிக்க முனைகின்றன. சிம்பன்ஸீ குரங்குகளும் யானைகளும் தங்கள் நட்பு மற்றும் சுற்ற வட்டத்தில் இழப்புகள் நேரும்போது வருந்துகின்றன. கொரில்லாக்கள் இறந்தவர்களுக்காக இரங்கி அழுகின்றன. பாஸ்டன் பிராங்க்ளின் ஜூவில் புற்றுநோயால் இறந்த தன் துணைக்காக ஒரு கொரில்லா ஓலமிட்டு தன் நெஞ்சில் அறைந்து கொண்டது. இறந்த கொரில்லாவுக்குப் பிடித்தமான பண்டத்தை அதன் கையில் தந்து அதை எழுப்பப் பார்த்தது.

b-315034-gorilla_looking_to_him_dead_baby_cry_cry

[தன் இறந்த குழந்தைக்காக அழும் கொரில்லா]

மாக்பை என்ற சிறு பறவைகள், தம் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இறக்கும்போது அவற்றை எழுப்ப முயற்சி செய்கின்றன; அதன் அருகில் சுள்ளிகளை வைத்து அஞ்சலி செலுத்துகின்றன. இறந்த நரிகள் புதைக்கப்படுகின்றன. யானைகள் உடல் ஊனமுற்ற சக யானைக்காக நிதானித்து அதையும் தம்முடன் அழைத்துச் செல்கின்றன.

துயரம், கருணை ஆகிய உணர்வுகள் மட்டுமல்ல, ஆனந்தம் கூட விலங்குகளுக்கு சாத்தியமாக இருக்கிறது. ஜேன் குட்டால் ஒரு அருவிக்கு மெய்யாகவே மெய் சிலிர்த்த நிலையில் வந்தடைந்த ஒரு சிம்பன்ஸீ குறித்து விவரிக்கிறார். “நெருங்கி வருகையில், அருவியின் நீர் வீழ்ச்சி அதன் செவியில் உரத்து ஒலிக்கையில் அதன் நடையில் வேகம் கூடுகிறது; அதன் சரும முடிகள் குத்திட்டு நிற்கின்றன; அருவியின் அண்மையை நெருங்கியதும் அது நீரினருகில் அற்புதமாக ஆடக் கூடும். நிமிர்ந்து நிற்கிறது, காலோடு கால் மாற்றி ஒரு லய உணர்வுடன் சாய்ந்தாடுகிறது. பெருகி ஓடும் ஆழமில்லாத தண்ணீர் பரப்பைத் தன் கால்களால் தட்டுகிறது; மிகப் பெரிய கற்களை எடுத்து வீசுகிறது. சில சமயங்களில் அது நெடிந்து வளர்ந்து நிற்கும் மரங்களின் சன்ன விழுதுகளைப் பற்றி மேலேறுகிறது- அருவியிலிருந்து தெறிக்கும் நீர்த்திவலைகளில் அந்த விழுதுகளைப் பற்றித் தொங்கி ஆடி மகிழ்கிறது. இந்த “அருவி நடனம்” பத்து பதினைந்து நிமிடங்களுக்கு நீடிக்கலாம்” என்று எழுதுகிறார் குட்டால். சிம்பன்ஸீக்கள் பலமான மழை வரும்போதும் கடுங்காற்று வீசும்போதும் அருள் வந்தது போன்ற உத்வேகத்துடன் ஆடுகின்றன.

ஜேன் குட்டால் பொருத்தமான பெயர் சூட்டப்பட்ட ஒரு சிம்பன்ஸீ குடும்பத்தில் நடந்த நிகழ்வை விவரிக்கிறார். பிபியின் ஐந்தரை வயது மகன் பிராய்ட். அவளது அண்ணன் பிகாண் அந்தக் கூட்டத்தின் தலைவன். ஒரு முறை பிபி தன் அண்ணனுக்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தபோது காட்டு வாழை மரமொன்றின் மேலேறிய பிராய்ட் தண்டு உடைந்து கீழே விழுந்ததாம். விழுந்ததும், தான் விழுந்ததைத் தன் மாமன் கவனித்துவிட்டானா என்று ஒரு அவமான உணர்ச்சியுடன் அவனைப் பார்த்தது பிராய்ட். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றறிந்ததும் சத்தமில்லாமல் இன்னொரு மரமேறி சாப்பிடத் துவங்கிற்று.

மார்க் ஹௌசர் ரீசஸ் குரங்கு ஒன்றைப் பற்றி சுவையான கதை சொல்கிறார். அந்தக் கூட்டத்தின் தலைவன் ஒரு பெண் குரங்கைப் புணர்ந்து முடித்ததும் பெருமிதமாக நடை போடுகையில், கவனமில்லாமல் போய் ஒரு சாக்கடையினுள் விழுந்து விட்டது. அது அவசர அவசரமாக எழுந்து, தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு ராஜ நடையைத் தொடர்ந்தது என்கிறார் ஹௌசர். அந்த ரீசஸ் குரங்கு உண்மையில் இப்படியெல்லாம் அவமானப்பட்டதா இல்லையா என்பது உறுதியாகத் தெரியாது, ஹௌசர் அந்தக் கவலை எதுவும் இல்லாமல் தன் ஆய்வு முடிவுகளைத் திருத்தி எழுதி அவமானப்பட்ட கதை நமக்குத் தீர்மானமாகத் தெரியும், இல்லையா? அவமானப்பட்ட பிறகு அவர் இன்னும் ஹார்வர்ட் பல்கலை வகுப்பறைகளில் ‘ராஜ நடை’ போடுகிறாரா என்பது குறித்துத் தகவல் இல்லை, ஆனால் ஹார்வர்ட் அவமானப்பட்ட பிறகு ஒரு நிறுவனமாக நடந்து கொண்டு அவரை வேலையை விட்டுத் தள்ளி வைத்திருக்கிறது. இன்னும் நீக்கவில்லை. ஹார்வர்ட் அவரை நீக்காமல் மறுபடி வேலையில் அமர்த்தினால், அவமானப்பட்ட பிறகு ஹார்வர்டும், ஹௌசரும் மேற்படி ரீசஸ் குரங்கைப் போல நடந்தனரா என்று நாம் யோசிக்கலாம்.

யானைகள் புதிதாக அறிமுகமாகிக் கொள்ளும்போது அவ்வளவு சீக்கிரம் பழகுவதில்லை. டென்னசீயில் உள்ள யானைகளின் சரணாலயத்துக்கு கொண்டு வரப்பட்ட இரு முதிய யானைகள் ஒன்றை ஒன்று கண்டதும் பிளிறி அழைக்கத் துவங்கின. அவை இருந்த கூண்டுகளின் கம்பிகளுக்கு இடையே தம் துதிக்கைகளை நுழைத்து ஒன்றை ஒன்று தொட்டுத் தடவின. என்ன நடக்கிறது இங்கே, என்ற ஆச்சரியத்துடன், இந்த யானைகள் குறித்த ஆவணங்களைத் தேடிப் பார்த்தபோதுதான் இவை இரண்டும் இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு சர்க்கஸில் இணைந்திருந்திருக்கின்றன என்ற தகவல் தெரிந்ததாம். யானைகளின் நினைவுத் திறன்!

சிறு வயதில் தன்னைக் குட்டியாக எடுத்து வளர்த்த எஜமானர்களை மீண்டும் பார்த்தபோது ஒரு ஆப்பிரிக்க சிங்கம் கட்டியணைத்துக்கொண்டது ஒரு பிரபலமான நிகழ்ச்சி.

கூட்டங்களாய் வாழும் மிருகங்களின் அறம் சார்ந்த விதிகள் கூட்டத்தினுள் சண்டையைக் குறைத்து ஒத்துழைப்பை அதிகரிக்கின்றன. ஓநாய்கள் கூட்டம் கூட்டமாக வேட்டையாடும் என்பது நாமனைவரும் அறிந்த ஒன்று. அவை மிக சாதுரியமாக தாம் வேட்டையாடும் விலங்கை சுற்றி வளைக்கின்றன. விளையாட்டின் மூலமே இவை இத்திறனை வளர்த்துக் கொள்கின்றன. ஓநாய்களின் விளையாட்டு விதிகள் மிகக் கடுமையானவை, அவற்றின் வேட்டை விதிகளைப் போலன்றி விளையாட்டு விதிகள் நியாயமானவை. விளையாடும்போது அதிகாரம் செலுத்தும் ஓநாய்கள் மற்ற ஓநாய்களிடம் பணிந்து போகின்றன, ‘செல்லமாகக்’ கடிக்க அனுமதிக்கின்றன- ஓநாய்களின் அதிகாரம் கவர்ச்சியாலோ பிரபல்யத்தாலோ அடையப்பட்ட ஒன்றல்ல- அது ஆற்றலால் ஈட்டப்பட்ட ஒன்று. எளிதில் தம்மால் வெல்லப்படக் கூடியவர்களிடம் விளையாட்டுக்காக கடி வாங்குவது, அவற்றுக்கு நுட்பமான்தொரு அற உணர்வு உள்ளது என்ற உண்மையைச் சுட்டுகிறது, இல்லையா? அப்படி விளையாட்டு சுவாரசியத்தில் கொஞ்சம் பலமாக பதம் பார்த்து விட்டால் தவறு செய்த ஓநாய் வணங்கி மன்னிப்பு கேட்டுவிட்டு விளையாட்டைத் தொடர்கிறது.

wolves

கொயோட் என்றழைக்கப்படும் நாய் வகை பிராணிகளின் விளையாட்டு விதிகள் இன்னமும் கடுமையானவையாக இருக்கின்றன. வெறித்தனமாக விளையாடும் குட்டிகள் வலுவாகக் கடித்த காரணத்துக்காக கூட்டத்தை விட்டு விரட்டப்படுகின்றன. இவை தனியாக வேட்டையாடி வாழ்வது என்பது மிகக் கடினமான ஒன்று- இங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக ’இயற்கை நெறி’ தெரிவு செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும். காலப்போக்கில் கூட்டங்களில் இருக்கும் கொயோட்கள் அனைத்தும் விதிகளுக்குப் பணிந்து ஒத்துழைப்பனவாகவே இருக்கும், இல்லையா? சொன்ன பேச்சு கேட்காதவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அழிந்து போகிறார்கள். இவை போலல்லாமல் மனிதர்களின் அறவுணர்வு கூட்டத்துக்கு எதிரானவர்களின் உரிமைகளுக்காகவும் வாதாடுகிறது என்பது மானுடத்தின் பலமும் பலவீனமுமாகும்.

ஆனால் நமது தேவைகள் மற்ற விலங்குகளில் தேவைகளைப் போன்றதல்ல, நமது வாழ்வாதார கட்டாயங்கள் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவனவாக இருப்பதால் தனி மனித உரிமைகள் குழு சார்ந்த உரிமைகளுக்கு இணையான முக்கியத்துவம் கொண்டிருக்கின்றன.

கூடி வாழும் பிராணிகளுக்கு கருணையும் இரக்கமும் தேவைப்படுகின்றன. அவை குழு ஒற்றுமையைக் கூட்டி வாழ்வாதாரத் தேவைகளை நிறைவு செய்துகொள்ள உதவுவதால் இக்குணங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்று சொல்லலாம்- அல்லது கூடி வாழும் எந்தக் குழுவிலும் தம் குழுவைச் சார்ந்தவர்கள்பால் அனுதாப உணர்வு தோன்றுவது இயற்கையே என்றும் சொல்லலாம். டயானா குரங்குகள் சோதனைக் கூடத்தில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கின்றனர். ஒரு சோதனையில் ஸ்லாட்டில் வில்லையை நுழைத்தால்தான் உணவு அவற்றுக்குத் தரப்பட்டது. இந்தக் கலையில் தேர்ந்த குரங்கு ஒன்று, தன் கூட்டத்தின் மூதாட்டியின் சார்பில் ஸ்லாட்டுக்குள் வில்லையைப் போட்டு உணவு வரவழைத்துக் கொடுத்தது- இதில் அதற்கு என்ன லாபம் இருந்திருக்க முடியும்?

செரிப்ரல் பால்சி என்பது உடல் மற்றும் மனதைப் பெருமளவில் பாதிக்கும் நிலை- நம் ஊரில் பெற்ற தாயே இத்தகைய குழந்தையைக் கைவிடுவதும் உண்டு. ஆனால் ப்ளோரிடாவில் உள்ள ஒரு வனவிலங்கு மையத்தில் இந்நிலையில் உள்ள சிம்பன்ஸீ குரங்கை மற்ற சிம்பன்ஸீக்கள் கருணையுடன் அணுகுவதை விஞ்ஞானிகள் கவனித்திருக்கின்றனர். பொதுவாகவே சிம்பன்ஸீகள் நியாய உணர்வு மிகுந்தவை. யாராவது இவற்றின் நடத்தை விதிகளை மீறினால் உடனே மற்றவர்கள் ஒன்று சேர்ந்து தண்டிப்பது உறுதி.

சிம்பன்ஸீக்களாவது மனிதனுக்கு நெருங்கின சொந்தம், அவற்றுக்கு அறவுணர்வு இருப்பதிலோ அதைக் கட்டிக் காக்கக்கூடிய சட்ட விதிகள் இருப்பதிலோ ஆச்சரியமில்லை. ஆனால் எலிகள்?

ஒரு குரூர சோதனை- சோதனைக் கூடத்து எலிகளை இரண்டு குழுக்களாகப் பிரித்தனர் விஞ்ஞானிகள். ஒரு குழு சாப்பிடும்போது மற்ற குழுவில் உள்ள எலிகளுக்கு மின் அதிர்ச்சி தரப்பட்டது. சகாக்கள் தம் செயலால் வதைபடுவதைப் பார்த்து தாம் சாப்பிடுவதை நிறுத்துகின்றன எலிகள்.

வலியால் அவதிப்படுகிற ஒரு எலியைப் பார்க்கிற இன்னொரு எலி, தானும் வதை செய்யப்படும்போது மிகை வலியை உணர்கிறது. பிறரது உதவியைப் பெற்ற எலிகள் மற்ற எலிகளுக்கு உணவு பெற்றுத் தந்து உதவுகின்றன. சில வௌவால்கள் பிராணிகளின் ரத்தத்தைக் குடிக்கும். இந்த காட்டேரி வௌவால்கள் வேட்டை முடிந்து திரும்பியதும் இரை கிடைக்காமல் பசியோடிருக்கும் சகாக்களுக்கு தாமருந்திய ரத்தத்தைப் பகிர்ந்தளித்து உதவுகின்றன. பெண் வௌவால் ஒன்று பிரசவ வேதனையில் இருக்கும் இன்னொரு வௌவாலுக்கு சரியான முறையில் பிரசவிக்க உதவியதை ஃஃப்ளாரிடாவில் ஒரு விஞ்ஞானி ஆவணப்படுத்தி இருக்கிறார்.

–ooOOOoo–

விலங்குகளுக்கு விளக்கத் தெரியாது- இருந்தாலும் அவை அற உணர்வுகளால் உந்தப்படுகின்றன என்பதை அவற்றின் செயல்களைக் கொண்டு நாம் அனுமானிக்க முடியும். அடுத்தது மனிதனின் கதையைப் பார்க்கலாம்.

உலகில் உள்ள பண்பாடுகளில் பல பண்பாடுகள் மனிதனை மனிதன் தின்பதை அங்கீகரிக்கின்றன. இன்னும் அதிக அளவிலான பண்பாடுகள் பலதார மணம் செய்வதை ஊக்குவிக்கின்றன. விளையாட்டுக்காக வேற்றுக் குடிகளுடன் மோதி அவர்களது தலைகளை மனிதர்கள் கொய்கிறார்கள். சித்திரவதை காலங்காலமாக மனிதனால் கையாளப்பட்டு வந்திருக்கிறது. இது தவிர உடல் உறுப்புகளைப் பின்னப்படுத்திக் கொள்வதும் மனிதனின் இயல்பாக இருக்கிறது- சீனாவில் ஆயிரமாண்டுகள் போல, சில குழுப் பெண்களின் கால்கள் இறுக்கக் கட்டி வைக்கப்பட்டு ஊனமாக்கப்பட்டது ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. சிசுக்கள் கொலை செய்யப்படுகின்றன. இன்றும் சில இசுலாமிய நாடுகளில் பெண்களின் பாலியல் உறுப்புகள் பின்னப்படுத்தப்படுகின்றன. எந்திரமயமாகிவிட்ட முன்னேறிய நாடுகளில்கூட அடிமை முறை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக மிகச் சமீப காலம் வரை இருந்திருக்கிறது. சட்ட அங்கீகாரம் இல்லாத, ஆனால் சமூக கவனிப்பு அதிகம் இல்லாது இன்றும் அடிமை முறைப் பாலுறவு மேற்கு நாடுகளில் ஒரு வாணிபமாகவே புழங்குகிறது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இன்று அறிவியலின் பயன்கள் அனைவருக்கும் உரியனவாக இல்லை. வறுமை நிலையில் வாழ்பவர்களை அலட்சியப்படுத்தி வளங்கள் ஒரு சிலரால் மட்டும் ஆண்டனுபவிக்கப்படுவதை பொருளாதாரக் கோட்பாடுகள் நியாயப்படுத்துகின்றன- அவற்றை ஏற்பவர்கள் கல்வி அறிவற்ற காட்டுமிராண்டிகள் அல்ல- மிக்கப் படித்தவர்கள், உயர் பண்பாட்டின், நாகரீக வளர்ச்சியின் பிரதான முகங்கள்.

யோசித்துப் பாருங்கள், பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு அசையக்கூட இடமில்லை. மேலை நாடுகளில் மாடுகளுக்கும் இந்நிலைதான். நம்மால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பேரழிவு பூமி முன்னெப்போதும் காணாதது. இது போதாதென்று அணு ஆயுதங்கள். முதலியத்தின் பெயரால் சுரண்டல், சமத்துவத்தின் பெயரால் அடக்குமுறை, உலகமயமாக்கத்தின் கோரப் பசிக்கு இரையாகும் மூன்றாம் உலக வளங்கள்…

மனிதனின் அறவுணர்வுக்கு என்னாயிற்று? அது தர்க்க நியதிகளால்- சுருக்கமாக சொன்னால் அறிவால்- மிகைபலம் பெற்றிருக்கிறது. நியாயப்படுத்துவதன் மூலம் எதையும் நிகழ்த்திக் காட்டக் கூடியவனாக மனிதன் இருக்கிறான். அறிவு, மனிதனின் அறவுணர்வின் கேடாக இருக்கிறது.

hh-cover

ஒரு யானைப் பாகனைப் போன்றது அறிவு, என்று சொல்கிறார் ஜோனதன் ஹெய்ட். நமக்கு விலங்கு உணர்வுகள் உண்டு, அவையே மேலோங்கிய ஆற்றல் கொண்டவை. அவற்றுக்கு திசையறிவிக்கும் பணியையே அறிவு செய்கிறது என்கிறார் அவர். ஆமாம், அறவுணர்வு அறிவைக் கொண்டு அடையப்பட்டதல்ல என்கிறார் ஹெய்ட். அறிவு அறம் குறித்தெழும் உணர்ச்சிகளுக்கு நியாயப்படுத்தலை மட்டுமே செய்கிறது. இதை சுட்டும் விதமாக ஒரு கேள்வியை முன் வைக்கிறார்-

ஒரு சகோதரனும் சகோதரியும் பயணம் செய்கிறார்கள். ஒரே ஒரு நாள் இரவு, ஒருவரை ஒருவர் மகிழ்விப்பதற்காக காண்டம் அணிந்து பாதுகாப்பான பாலுறவு கொள்கிறார்கள். இதை யாரிடமும் சொல்வதுமில்லை, இனித் தொடர்வதுமில்லை என்று உறுதி பூண்டவர்களாக அடுத்த நாள் அவரவர் வேலையைப் பார்க்கிறார்கள். இவர்கள் செய்தது சரியா?

நாமெல்லாரும் தவறு என்றுதான் சொல்வோம், ஆனால் ஏன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியாது, இல்லையா? ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று சொல்ல முடியாது. இதில் யாருக்கும் எந்த கெடுதலும் இல்லை. அப்புறம் என்ன? இருந்தாலும் இது ஒழுக்கக் கேடான செயல் என்றுதான் நாம் சொல்வோம். காரணம், அறத்தை நாம் அறிவைக் கொண்டு அறிவதில்லை. நாமறிந்த அறத்துக்கான நியாயங்களை மட்டுமே அறிவு கொடுக்கிறது.

நிலைமை இப்படி இருக்கையில், எந்த நம்பிக்கையில் குறிப்பிட்ட சில அறங்களை மேலான அறங்களாக நாம் முன் வைக்கிறோம்? சிந்திக்க வேண்டிய கேள்விதான், இல்லையா?

ஹெய்ட் அறவுணர்வின் அடிப்படைகளை ஐவகையாக பிரிக்கிறார்-

1. நியாயவுணர்வு: நாம் நியாயமாக நடந்து வேண்டும், அனைவருக்கும் சம உரிமை, நமக்குக் கிடைத்த நன்மைகள் பிறருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

2. தீதின்மை, அக்கறை – எல்லாருக்கும் நன்மை செய்யவேண்டும், யாருக்கும் தீமை செய்யக் கூடாது.

இவ்விரண்டு விழுமியங்களும் தனி மனித உரிமைகளை அரண் போல் காக்கின்றன. இவையே தற்போது நாகரீக நாடுகளில் மேலாதிக்கம் செய்யும் அற விழுமியங்களாக இருக்கின்றன.

ஆனால், இவற்றை அன்றி மேலும் மூன்று முக்கியமான விழுமியங்கள் இருக்கின்றன என்கிறார் ஹெய்ட். அவை,

1. குழு மனப்பான்மை, விசுவாசம்
2. மதிப்பு, மரியாதை
3. சுத்தம், புனிதம் குறித்த அக்கறை.

இந்த மூன்றும் குழு ஒற்றுமைக்கு உதவி செய்கின்றன என்கிறார் ஹெய்ட்.

இவை குறித்து நிறைய விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது- ஆனால் தற்போது நாம் கவனிக்க வேண்டியவை இந்த ஐந்து அற அடிப்படை உணர்வுகளும் மனிதனோடு ஏனைய மிருகங்களுக்கும் இருக்கின்றன: ஓநாய்கள்கூட விளையாடும் பொழுதில் சம உரிமை தருகின்றன, எலிகள் மற்ற எலிகள் தங்கள் செயலால் வதைபடுவதை விரும்புவதில்லை, விலங்குகளின் குழு ஒற்றுமை குறித்தும் கீழ்படிதல் குறித்தும் சொல்லவே வேண்டாம்- நரிகள் கூட இறந்த நரிகளைப் புதைத்து ஏதோ ஒரு வகையில் அவற்றின் சீர்கேட்டைத் தவிர்க்கின்றன. இதற்குத் தற்காப்பு என்பது ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் நரிகளின் தர்க்கத்தை நாம் எப்படி அறிவோம்?

அறத்தின் இந்த ஐந்து அடிப்படை கூறுகளையும் நாம் மற்ற உயிர்களோடு பகிர்கிறோம். அறிவைக் கொண்டு ஒன்றை மற்றதைவிட உயர்த்திக்கூற முடிகிறதென்பதால் மட்டுமே அவை உயர்வானவையாகி விடுவதில்லை. அற உணர்வு அறிவை விட உணர்ச்சியின் ஆளுகைக்கு உட்பட்டிருப்பதால் இந்த ஐந்து கூறுகளும் ஒன்றுக்கொன்று இணையாகவே கருதப்பட வேண்டும். சரியாக சொல்வதென்றால், ஒன்றைக் காட்டிலும் மற்றதை உயர்வாய்ப் பேசுதல் ஒரு சுவை மற்றதைக் காட்டிலும் உயர்ந்ததென்று கொண்டாடுவதைப் போன்றது: இனிப்பு எனக்கு புளிப்பைக் காட்டிலும் உவப்பானதாக இருக்கலாம். ஆனால் அதற்கு என் சுவை நுகர்வுக்கு அப்பால் வேறென்ன நியாயம் இருக்க முடியும்?

இங்கே நாம் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். அறம் என்பது அதன் பயன்பாட்டை ஒட்டியோ அதன் பின்விளைவுகளை ஓட்டியோ தீர்மானிக்கப்படுவதில்லை. ஹெய்ட்டின் பார்வையில் அத்தகைய வாதங்கள் நம் அடிப்படை உணர்வுகளின் தர்க்க ரீதியான நியாயப்படுத்துதல்கள் மட்டுமே- உண்மையில் அறம் உணர்வுகளின் எழுச்சி. அறிவின் சமன்பாடு அதன் பிற்சேர்க்கை.

தனி மனித சுதந்திரத்தை ஒரு பண்பாடு கொண்டாடலாம். ஆனால் அது அந்த ஒரு காரணத்தால் மட்டும் குழு ஒற்றுமையைக் காக்க அதிகாரத்தை வெவ்வேறு தளங்களில் பகிர்ந்தளிக்கும் பண்பாட்டைவிட உயர்ந்ததாக மாறி விடாது. ‘தூய்மை’யைக் காரணம் காட்டி பெண்களுக்கு திரை போடும் பண்பாடுகள், மாதவிலக்கைக் காரணம் காட்டி பெண்களை ஒதுக்கி வைக்கும் பண்பாடுகள் நமக்கு பிற்போக்கானவையாகத் தெரியலாம். ஆனால் அத்தகைய அடையாளப்படுத்துதல் பொருளற்றது. எனது பண்பாட்டின் சுதந்திர உணர்வின் அடிப்படை எதுவோ அங்கிருந்துதான் இன்னொரு பண்பாட்டின் சுகாதார உணர்வும் குழு மனப்பான்மையும் எழுகின்றன.

இன்று நாம் பல பண்பாடுகளாய்ப் பிரிந்து நிற்கிறோம். நமக்கிடையே உள்ள இடைவெளி இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு ஆழமானதாகத் தோற்றம் தருகிறது. இதில் ஒரு பண்பாடு தன்னை முற்போக்கு என்று சொல்லிக் கொண்டு இன்னொரு பண்பாட்டைப் பிற்போக்கானதாக அடையாளம் காட்டி அதைத் தர்க்கத்தின் வழியாகவும் அதிகாரத்தின் வழியாகவும் திருத்த நினைப்பது பெரும் பிழையாகவே இருக்கும்.

ஹெய்ட் சுட்டிக் காட்டும் அறத்தின் ஐந்து அடிப்படைக் கூறுகளையும் அவற்றின் தொன்மை மற்றும் பரிணாமப் பயன்பாடுகளையும் குறித்த அறிதல் வெவ்வேறு விழுமியங்களை மேலானதாகக் கருதும் பல்வகைப் பண்பாடுகளுக்கிடையில் ஒரு புரிதலை உருவாக்கக் கூடும். அறம் உணர்ச்சி சார்ந்தது, அறிவு சார்ந்ததல்ல என்ற பார்வை, தர்க்கம் மற்றும் பொருளாதார, அறிவியல் ஆதாரங்களைத் துணைக்கழைத்து நியாயப்படுத்துதலின் நீட்சியான ஆதிக்க உணர்வுகளுக்கு அணை போடக் கூடும். அடிப்படையில் அறம் பல வண்ணங்களைக் கொண்ட நிறப்பிரிகையை ஒத்தது- உயர்ந்து செல்லும் ஒரு நேர்கோட்டின் முனையில் நிற்கும் இலக்கல்ல அது என்பது ஹெய்ட்டின் புதிய அறத்தின் அடிப்படையாக இருக்கிறது.

குறிப்புகள்:

http://www.timeshighereducation.co.uk/story.asp?sectioncode=26&storycode=415874&c=2
http://www.yesmagazine.org/issues/can-animals-save-us/we-second-that-emotion
http://www.telegraph.co.uk/earth/wildlife/5373379/Animals-can-tell-right-from-wrong.html
http://faculty.virginia.edu/haidtlab/mft/index.php

மித்திலன்

நன்றி-சொல்வனம்

உயிரின் கதை – 2(உடலில் உயிர் எங்கே இருக்கிறது?)

உடலில் உயிர் எங்கே இருக்கிறது?

பன்னிரண்டு ’உயிர்’ எழுத்துக்களை வைத்துத்தான் தமிழில் எழுதிக்கொண்டிருக்கிறோம். வீட்டில் தொந்தரவு செய்யும் குழந்தையை ’உயிரை வாங்காதே’ என்று திட்டுகிறோம்.

’உயிரே, உயிரே, வந்து என்னோடு கலந்து விடு’ – என்று ஹரிஹரன் பாடாத ஊரே ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் இல்லை. பாட்டைக் கேட்ட நம்மில் நூத்துக்கு ஒருத்தராவது மனீஷாவை அன்றி ”உயிர்” என்றால் என்ன, என்று ஒருவேளை யோசிக்க ஆரம்பித்திருந்தால்?… தமிழ்நாட்டில் பெரும் அறிவியல் புரட்சியே நடந்திருக்கும்… என்ன செய்வது.

துரியோதனின் உயிர் அவன் தொடையில். பொன்னி காமிக்ஸ் கதைகளில் மந்திரவாதி வில்லனின் உயிர் எப்பவும் ஏழு கடல் ஏழு மலை தாண்டிய ஒரு மாளிகையில் உள்ள கூண்டில் அடைத்த கிளியில் பத்திரமாக இருக்கும். இளவரசன் சென்று அதன் கழுத்தைத் திருகும் வரை.

நம் உடலிலே உயிர் எங்கே இருகிறது?

-o00o-

உயிர் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஆன்மிக, தத்துவ விளக்கங்களை சுருக்கமாகப் பார்ப்போம். ஆவி (spirit), ஆன்மா (soul), உயிர் (life) ஆகிய வார்த்தைகள் பொது மொழியில் ஒரே அர்த்தத்தில் ஒன்று போலப் பயன்படுத்தப் பட்டாலும் இவற்றுக்கிடையே உள்ள நுண்ணிய வித்தியாசங்களைக் கவனிக்கவும். ஆவி என்ற வார்த்தையில் தொனிக்கும் தீவிரமும், ஆன்மா என்ற வார்த்தையில் பொதிந்துருக்கும் அமைதியும், உயிர் என்ற வார்த்தையின் பின் நிற்கும் எளிமையும் தர்க்கமும் இவ்வார்த்தைகளை வேறுபடுத்திக் காட்டுகிறது அல்லவா? ஆங்கிலத்திலும் இந்த வித்தியாசங்களைக் கவனிக்கவும். ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்த, அதற்க்கென்றே உரிய நுண்ணிய அர்த்தம் உண்டுதான். ஒரு சொல்லுக்கு எந்த இன்னொரு சொல்லும் சமமாகாது போல.

சிந்தனை (thought), மனம் (mind), தன்ணுணர்வு (consciousness) இவையெல்லாம் உயிரின் வெளிப்பாடுகளாக இருப்பதால் ஒன்றோடொன்று தொடர்புடையவையே. இவைகளை தத்துவ, ஆன்மீக, உளவியல் நோக்கில் ஆராய்ந்தும் உயிர் என்றால் என்ன என்ற கேள்வியை விவாதிக்க முடியும். காட்டாக, தன்ணுணர்வு (consciousness) என்றால் என்பதை நண்பர் அரவிந்தன் நீலகண்டனின் பின்வரும் கட்டுரையில் காண்க http://www.thinnai.com/?module=displaystory&story_id=40410211.

சிந்தனை, மனம், தன்னுணர்வு ஆகியவை தன்னளவில் தனியாக விவாதிக்கத் தக்க ஆழமான விஷயங்கள் என்பதால் முதலில் உயிர் என்றால் என்ன என்ற கேள்வியை மட்டும் நேரடியாக விவாதிப்போம். அறிவியல் ரீதியான விளக்கம் மட்டுமே முழுமையாகாது என்பதால் கொஞ்சம் தத்துவ விளக்கத்தையும் பார்க்க வேண்டியது கட்டாயமாகிறது. நண்பர் எக்ஸ் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். “என்ன ஓய்! தத்துவம் பற்றி எதுவுமே சொல்லாமல் எஸ்கேப் ஆனது மட்டும் இல்லாமல், அறிவியல் தத்துவம் இரண்டும் ஒன்று என்று வேறு ஜல்லியடித்திருக்கிறீரே” என்று.

-o00o-

முற்காலத்தில் (கி.மு. 500 களில்) தத்துவம் என்ற வார்த்தை இன்றை விடவும் ஆழமான பொருளில் வழங்கியது. அறிந்திராத ஒன்றைப் பற்றிய அறிய முற்படும் சிந்தனையும் தர்க்கமும் தத்துவம் (philosophy, Greek: love of wisdom) என்றே அறியப்பட்டது. விஞ்ஞானம் என்று தனித்துறையாக வளர்ந்து பரவியிராததால், பெரும்பாலும் விஞ்ஞானிகள் என்று தனியாக எவரும் இருக்கவில்லை. எதைப்பற்றியும் சிந்திக்கும், அறிய முற்படும் சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள் என்று அறியப்பட்டார்கள். நீங்கள் பள்ளியில் படித்த ஜ்யாமெட்ரியில் வரும் a2+b2=c2 என்ற தேற்றத்தை கண்டுபிடித்தது அரிஸ்டாட்டில் காலத்துக்கு முந்திய, கி.மு 495ல் காலமான அதே கிரேக்க தத்துவ ஞானி பித்தாகரஸ் தான். ’பித்தாகரஸ் தேற்றத்தைக் கண்டுபிடித்தது பித்தாகரஸ் அல்ல! அவர் காலத்துக்கும் முந்தைய ஒருவர்’ -என்று வாதிடும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் உண்டு.

அறிவியல், அரசியல், பொது மேலாண்மை, வரலாறு, மொழியியல் உட்பட எந்த ஒரு துறையிலும் தரப்படும் அதிகபட்சமான பட்டம் இன்றும் கூட, Ph.D (Doctor of Philosophy) என்றே அறியப் படுகிறது, என்பதை நினைவு கொள்வோம்.

-o00o-

”பிறப்பிற்கு முன்பும் இறப்பிற்குப் பின்பும் இருப்பதும், உடலை விட்டும் தனித்து இயங்குவதும், ஸ்தூலமானதும் பொருள் அல்லாததும் ஆன்மா. அதுவே எல்லா உயிர்களையும் இயக்குவிக்கிறது” என்று நம்பியவர் வேறு யாரும் அல்ல. கிரேக்க தத்துவ ஞானி தாத்தா பிளாட்டோ (கி.மு. 428–348). மரணத்திற்குப் பிறகு மீளவே முடியாத மாயைக்குள் (hades, meaning the unseen) அமிழ்ந்து விடுகிறது ஆன்மா என்று நம்பினார் பித்தாகரஸ்.

உயிர் / ஆன்மா என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளச் சிரமப்படுவது நாம் மட்டும் அல்ல. டி அனிமா (Latin, De anima) என்ற தலைப்பில் உயிர்/ ஆன்மா பற்றி கி.மு. 350ல் ஒரு தனிப் புத்தகமே எழுதியிருக்கிறார் அரிஸ்டாட்டில். ”உலகில் இதுவரை கேட்கப் பட்ட கேள்விகளிலேயே மிகவும் கடினமானது உயிர்/ஆன்மா என்றால் என்ன என்ற கேள்விதான்” -என்று சொல்லித்தான் அதன் முதல் அத்தியாயத்தை ஆரம்பிக்கிறார் அவர். ஆன்மா என்பது உடலின் இயக்கத்திற்கு அவசியமானது என்று கருதினாலும் அது உடல் இல்லாமல் தனித்து இயங்க முடியும் என்று தன் குரு பிளாட்டோ சொன்னதை அரிஸ்டாட்டில் முழுக்கவும் ஏற்கவில்லை என்பது இப்புத்தகத்திலிருந்து தெரிகிறது. அதற்குப் பிறகு ரொம்ப நாள் கழித்து இதையெல்லாம் படித்துப் பார்த்த இத்தாலியின் போதகரும் தத்துவ அறிஞருமாகிய தாமஸ் அக்யுனாஸ் (Thomas Aquinas கி.பி.1225–1274) ஆன்மாவை கிறித்துவ அடிப்படையில் மறு விளக்கம் செய்தார் எனினும் தர்க்க ரீதியாக விளக்கவில்லை.

“தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்” (Genesis 2:7). என்று பைபிளில் இருப்பதால் ஆன்மா தனித்து இயங்க முடியும் என்ற பிளாட்டோவின் சிந்தனையை கிறித்தவம் ஏற்கவில்லை என்றே கருத இடமிருக்கிறது. கிறித்தவ இஸ்லாமிய யூத வழி வந்த மதங்கள் எவையும் மறு பிறப்பைப் பற்றிப் பேசுவதில்லை. இருந்தும் மரணத்தின் பிறகு மனிதர்களின் ஆன்மாக்கள் சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ நிரந்தரமாகத் தங்கிவிடும் என்பது கிறித்தவ நம்பிக்கை. காட்டாக, “அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து” (மத்தேயு 12:43) “திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து அங்கே குடியிருக்கும்” (மத்தேயு 12:45) என்ற வரிகள்.

இஸ்லாமும் ஏறக்குறைய அவ்வாறே கருதுகிறது. “அப்போதும் நபி(ஸல்) அவர்கள், ‘அவர் நரகத்திற்கே செல்வார்” என்று (மீண்டும்) கூறினார்கள். ‘முஸ்லிமான ஆன்மா தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும்”. குர்ஆன், 3062, Volume :3 Book :56.

இந்து ஞான மரபு வழி வந்த மதங்களான இந்து, சீக்கிய, ஜைன மற்றும் புத்த மதங்கள் அறம் மற்றும் கடமையை வலியுறுத்தும் பொருட்டு பிறப்பையும் முக்தியையும் முன் வைக்கின்றன. அத்வைதம் பற்றி சென்ற கட்டுரையில் மிகச் சுருக்கமாகப் பார்த்தோம். மேலும் த்வைதம், விஷிஷ்டாத்வைதம் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிய ஜெயமோகனின் இந்திய ஞானம், இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் ஆகிய புத்தகங்களைப் பார்க்கவும்.

“நான்” (“I”, self) என்ற பொருளில் அகவயமான அனுபவமாக மட்டுவே விளக்க முடியும் எனவே இல்லை அல்லது இருக்கிறது என்று நிறுவ முடியாத ஒன்று ஆன்மா -என்கிறார் இம்மானுவெல் கன்ட் (Immanuel Kant,1724–1804). Psychology (உளவியல்) என்ற வார்த்தைக்கே ”ஆன்மா இயல்” (psykhe- breath, spirit, soul + logia- study of; = study of the soul) என்று தான் பெயர்! இந்தப் பத்தியை நண்பர் எக்ஸூக்குப் படித்துக் காட்டியபோது அவர் சொன்னது – ”என்ன கொடுமை சரவணன் இது?”

-o00o-

உயிர் என்பது, உருண்டை வடிவில் பச்சை நிறத்தில் ஒரு கிலோ எடையில் உள்ள ஒரு பொருள் அல்ல. கால் பந்துக்குள் இருக்கும் காற்று போன்றதும் அல்ல. ’உயிர்’ என்று நாம் அறிவது உயிரியின் ஒரு தனித்த பண்பு அல்லது பண்புகளின் தொகுப்பையே. பிறப்பிற்கு முன்னும், மரணத்திற்குப் பின்னும் உயிர் இருப்பதில்லை. இது நவீன அறிவியல் தரும் விளக்கம்.

நீங்கள் பார்க்க முடிகிற, தொட்டு அல்லது சுவைத்து உணர முடிகிற அனைத்தும் பருப் பொருள்களே (Matter). பொருள்கள் மூலகங்களினால் (elements) கட்டப் பட்டவை. மூலகங்களின் அடிப்படைக் கட்டுமானம், மூலகங்கள் இணைந்து மூலக்கூறுகள் (molecules) உருவாகும் அடிப்படை விதிகள் ஒரே மாதிரியானவை.

ஒருவகையில் பார்த்தால் உங்களுக்கும் நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணினிக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை. அணு மற்றும் எலக்ட்ரான் அமைப்பு அடிப்படைகள் ஒன்றே.

உலோகக் கலவைகள், பிளாஸ்டிக் போன்ற எளிய சிறிய மூலக்கூறுகளால் ஆகியது கணினி. நம் உடலோ சிக்கலான அமைப்புள்ள பல வகையான பெரிய மூலக்கூறுகளால் ஆகி, உயர் நிலையில், இயைந்து இயங்கும்படி சிறப்பான ஒரு ஒழுங்கு வரிசையில் அணியாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

சிறப்பான அரிய கலவையான மூலக்கூறுகள் இணைந்து ஸெல் சிறு உறுப்புகளாகவும் ஸெல் சிறு உறுப்புகள் இயங்கும் வகையில் ஸெல்களாகவும் தொகுக்கப் பட்டுள்ளன. நம் உடல் கட்டிடத்தின் செங்கல் ஸெல். ஒரே மாதிரியான ஸெல்கள் தசை, நரம்பு, எலும்பு, இரத்தம் என திசுக்களாகவும் ஒரேமாதிரியான திசுக்கள் உடல் உறுப்புகளாகவும் தொகுக்கப்பட்டு உள்ளன.

சாப்பிட, செரிக்க, உணவைச் சேமிக்க, என்று தனித் தனி உறுப்புகள். பார்க்க, கேட்க, கழிவுகளைச் சேகரிக்க, சேகரித்து வெளியேற்ற, யோசிக்க, விதண்டாவாதம் பேச -இவ்வாறு பல உறுப்புகள் இணைந்து ஒருமித்து ஒரு தொகுப்பாக இயங்குவதால் நம் உடல் பல வேலைகளைச் செய்யும் திறன் பெறுகிறது. ஒரு கணினியை விடச் சிக்கலான அமைப்புடன் பல செயல்களைச் செய்யும் திறன் பெற்றுள்ளது. என் நண்பர் எக்ஸைப் போல அடுத்த கேள்வியைக் கேட்கும் முன், கீழே உள்ள வரிகளைப் படித்து விடவும்.

“இந்த பிரபஞ்சத்தில் இருப்பது ’அணுக்களும் வெற்றிடமும் மட்டுமே; மீதி அனைத்தும் நம் கருத்துக்களே” (Nothing exists except atoms and empty space; everything else is opinion – Democritus 460 – 370 BC).

டெமக்ரடீஸ் என்ற கிரேக்க ஞானி 450 பி.சி.யில் சொல்லியது. இப்பவும் பிரம்மிக்கத்தக்கது.

நீங்களும் இதை ஒரு முறை ஆழ்ந்து யோசிக்கவும். எச்சரிக்கை: மரத்தடியிலிருந்து யோசிக்க வேண்டாம், புத்தருக்கு ஆனது போல ஏடாகூடமாக ஆகிவிடக் கூடும்.


பெட்டிச் செய்தி

• உடலில் மொத்தம் 100 டிரில்லியன் (1 x 1012) ஸெல்கள் உள்ளன, ஒரு சதுர அங்குலத்தில் உள்ள ஸெல்களின் எண்ணிக்கை, 19 மில்லியன் (19 x 106).

• சராசரியாக ஒரு மனித தலையில் 100,000 முடிகள் உள்ளன.

• மனித உடலில் இரத்தம் ஓடும் தமனி, சிரை, நாளங்கள் இவற்றை நீளமாக வைத்தால் அவை 60,000 மைல் நீளம் வரும்.

• பிறந்தது முதல் இறப்பது வரை நம் இதயம் சராசரியாக குறைந்தது 2.5 பில்லியன் தடவைகள் துடிக்கிறது.

• மனித இதயம் உண்டாக்கும் அழுத்தம் சுமார் 30 அடிகளுக்கு இரத்தத்தை பீய்ச்சி அடிக்கப் போதுமானது.

• உடலின் இருப்பதிலேயே உறுதியான தசை, நாக்கு.

• 2010ல் உங்கள் ஒவ்வொரு இமையும் சுமார் 10,000,000 தடவைகள் மூடித் திறந்தன (ஒவ்வொரு வருடமும்).

• ஒரு இரத்த சிவப்பணு உடலை முழுக்க சுற்றி வர ஆகும் நேரம் 20 நொடிகள்.

• மனிதர்களுள் இடது கைப்பழக்கமுள்ளவர்கள் மொத்தம் 10 சதம் மட்டுமே.

• உடலின் மொத்த எலும்புகளில் நாலில் ஒரு பகுதி பாதத்தில் உள்ளது.

• இளவேனில் காலத்தில் குழந்தைகள் வேகமாக வளருகின்றனர்.

உதவியவை, மற்றும் மேலும் படிக்க

1. Aristotle, De anima (on the soul) Translated by J. A. Smith http://classics.mit.edu/Aristotle/soul.html
2. King James Bible: http://www.tamil-bible.com/lookup.php?Book=Genesis&Chapter=2; http://kingjbible.com/genesis/2.htm
3. அரவிந்தன் நீலகண்டன், அறிவியலில் தன்னுணர்வுத் தேடல் – ஒரு எளிய பறவை நோக்கு http://www.thinnai.com/?module=displaystory&story_id=40410211
4. From the Beginning to Plato, Edited by C.C.W.Taylor, 2005; Routledge History of Philosophy, Volume I.
5. Soul, http://www.encyclopedia.com/topic/soul.aspx#1
6. Soul, http://en.wikipedia.org/wiki/Soul
7. ஜெயமோகன், அத்வைதம் ஒரு விவாதம், http://www.jeyamohan.in/?p=7583
8. குர் ஆன், http://www.tamililquran.com/main.asp
9. Encyclopedia of Death and Dying, http://www.deathreference.com/
10. மனித உடல், http://www.kidskonnect.com/subject-index/31-health/337-human-body.html
11. ஜெயமோகன், 2009. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், தமிழினி பதிப்பகம்
12. ஜெயமோகன், 2009. இந்திய ஞானம், தமிழினி பதிப்பகம்
13. Encyclopedia of Philosophy, 2006. second edition, Thomson gale.

—————-

வேணுகோபால் தயாநிதி

நன்றி-சொல்வனம்