Advertisements

எதிர்பாராமல் நடப்பவை விபத்துகள்

திர்பாராமல் நடப்பவை விபத்துகள். விலை மதிப்பற்ற உயிர்களை விபத்தில் பறிகொடுக்காமல் காக்க உதவுவது மருத்துவம் மட்டுமல்ல. காலம் தவறாமல் செய்யும் முதலுதவியும் தான். முதலுதவி என்பது மருத்துவர்களால் அளிக்கப்படுவதல்ல. ஆபத்துக் காலத்தில் சம்பவ இடத்தில் இருக்கும் யாரும் முதலுதவி அளிக்கலாம். பிறகு மருத்துவர் அவசியமான சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றுவார். ஒரு மனிதருக்குச் செய்யும் முதல்உதவி என்பது மிக முக்கிய உதவி.

***

காயத்தின் தன்மை மற்றும் அதன் கடுமையை உணர்தல், பாதிக்கப்பட்டவரின் மூச்சு, இருதயப் பணிகளை கவனித்து அவற்றில் ஏற்பட்ட கோளாறுகளுக்கு ஏற்ப கட்டுப்படுத்தும் முறையை அறிதல், ரத்தப்போக்கை நிறுத்துதல் போன்றவை குறிப்பிடத்தக்கது. காயங்களுக்கு கட்டுப்போடுதல், எலும்பு முறிவின்போது பாதிக்கப்பட்ட பகுதியை அசையாமல் கையாளுதல், பாதிக்கப்பட்டவர்களை ஒழுங்காக தூக்குதல், வேண்டாத துணிகளை அகற்றுதல், வாகனத்தில் ஏற்றும் முறையை தெரிந்து வைத்திருத்தல் போன்றவைகளும் முதலுதவி செய்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்களாகும்.

***

விபத்தில் அடிபட்டவரை தூக்கும்போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். காயத்தின் தன்மை, ரத்தப்போக்கு, எலும்பு முறிவை கவனித்து அதிக அழுத்தம் கொடுக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். படுகாயம் அடைந்தவர்களை குறைந்தது 3 பேர் சேர்ந்து தூக்கி உதவ வேண்டும். எந்த பாகமும் பிடிமானம் இல்லாமல் வளையும்படியாக தூக்கக்கூடாது. கூடுமான வரையில் தூக்குக்கட்டில் கொண்டு காயமடைந்தவரின் உடலை தூக்குவது சிறந்தது. கிடைக்கும் கம்புகளைக் கொண்டு தற்காலிகமாக டோலி உருவாக்கி செயல்படுவது சிறப்பாகும்.

***

காயங்களில் இருந்து குருதி வெளியேறும். இதன் வழியே கிருமிகள் நுழைந்து காயத்தை பெரிதாக்கி, வேறு வியாதிகளையும் உருவாக்கக்கூடும். எனவே சிறிதளவு ரத்தப்போக்கு என்றால் கட்டுப்போடுவதன் மூலம் தடுத்து விடலாம். அதிக ரத்தப்போக்கை தடுக்க முதலில் காயத்திற்கு மேல் விரல்களால் அழுத்திப்பிடித்து சும்மாடு (பட்டைவார்) கட்ட வேண்டும். ரப்பர் பட்டை குழாய், இடுப்பு பெல்ட், டை ஆகியவை கொண்டு பட்டைவார் கட்டலாம். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பட்டைவாரை தளர்த்தி ரத்தஓட்டத்திற்கு வகை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தசை செல்கள் பாதிக்கும்.

***

லும்பு முறிவு பார்வைக்குத் தெரியாது. வீக்கம், அசைக்க முடியாத வலியை வைத்து எலும்பு முறிந்த இடத்தை கண்டுபிடிக்கலாம். பாதித்த இடத்தில் கொதித்து ஆறிய தண்ணீரில் நனைத்த பஞ்சால் சுத்தம் செய்ய வேண்டும். எலும்பு சதையை கிழித்து வெளியே தெரிந்தால் பெருங் காயம். இத்தகைய பாதிப்பு கொண்டவர்களை இடம் மாற்றும்போது கவனமாக இருக்க வேண்டும். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். எலும்புகள் அசையாமல் இருக்க மரப்பட்டைகள் வைத்து பஞ்சு, துணிகொண்டு கட்டுப்போடலாம். மரப்பட்டைகளுக்குப் பதில் சாதுரியமாக வேறு பொருட்களையும் பயன்படுத்தலாம்.

***

மின் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்க முதலில் மின்தடை செய்யுங்கள். முடியாவிட்டால் ரப்பர் செருப்புகள் அணிந்து, மரக்கட்டை மீது நின்றுகொண்டு கயிறு, சாக்கு கொண்டு பாதிக்கப்பட்டவரை மின்தாக்குதலில் இருந்து விடுவிக்க வேண்டும். மூச்சு தடைபட்டால் வாயால் ஊதி செயற்கை சுவாசமூட்டலாம். இதயதுடிப்பை சீராக்க மார்பில் கைகளால் அழுத்த வேண்டும். தோல் கருகிய இடங்களை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரினால் நனைத்து அதேநீரில் தோய்த்த துணியால் கட்டு போடுங்கள்.

***

விபத்துகளில் சிக்குபவர்களுக்கு மூச்சுவிட சிரமம் ஏற்படலாம். அப்போது செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும். முதலில் அவரது உடைகளை தளர்த்தி மார்பை அழுத்தமாக தேய்த்துவிடவும், பிறகு குப்புற படுக்கவைத்து கைகளை அவரது தலைக்குமேல் குவித்து வைக்கவும். பிறகு சுவாசமளிப்பவர் தலைப்பக்கமாக அமர்ந்து பின்புஜத்தின் அடி முதுகை அழுத்தம் கொடுக்கவும். பிறகு ஆளை நிமிர்த்தியும், கீழ்நோக்கி சாய்த்தும் சுவாசம் கொடுக்கலாம். வாயில் ஊதுதல், மூக்கில் ஊதுதல் முறையிலும் செயற்கை சுவாசம் கொடுக்கலாம்.

***

ண்ணீரில் மூழ்கியவர்களுக்கு முதலில் அவர்கள் குடித்த தண்ணீரை வெளியேற்ற வேண்டும். இதற்கு தலையையும், தோள்களையும் முன்னோக்கி வளைத்தபடி அழுத்த வேண்டும். பிறகு குப்புற படுக்க வைத்து, கால்களை சற்று உயரமாக வைக்க வேண்டும். இதனால் தண்ணீர் வெளியேறும். வயிற்றின் இருபுறமும் கைகளை வைத்து அழுத்தியும் வெளியேற்றலாம். தொண்டைக்குள் விரல் விட்டு வாந்தி எடுக்க வைக்கலாம். மூச்சுத்தடை இருந்தால் செயற்கை சுவாசமூட்டலாம். மின்னல் தாக்கியவர்களுக்கும் சுவாசமூட்டி சிகிச்சைக்கு கொண்டு செல்லலாம்.

***

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவரை படுக்க வைக்காமல் உட்கார வைத்து பின்புறம் தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். சுற்றிலும் கூட்டம் கூடி நிற்கக்கூடாது. கழுத்து, இடுப்பு உடைகளை தளர்த்த வேண்டும். புகைமூட்டத்தால் மூச்சடைப்பு ஏற்பட்டால் ஜன்னல், கதவுகளை திறந்து காற்றோட்டமான இடத்துக்கு கொண்டு செல்லுங்கள். புகை மூட்டத்துக்குள் செல்ல வேண்டி இருந்தால் சுத்தமான துணியை நனைத்து வாய், மூக்கை கட்டிக்கொண்டு நுழையவும். குனிந்து தவழ்ந்த நிலையில் வருவது விஷவாயுக்களில் இருந்து உங்களை காப்பாற்றும்.

***

தீ விபத்தின்போது கோணி அல்லது போர்வையால் மூடி தீயை அணைக்கலாம். சூடான பாத்திரம், எண்ணை தெறித்தலால் கொப்புளங்கள் ஏற்பட்டால் அவற்றை கிள்ளிவிடக்கூடாது. ஆன்டிசெப்டிக் மருந்துகளை தடவுங்கள். தேன், முட்டை வெள்ளைக்கரு தடவலாம். கடுமையான தீக்காயம் ஏற்பட்டால் காயத்தை காற்றுபடாமல் மூட வேண்டும். கருகிய துணி உடலுடன் ஒட்டியிருந்தால் அகற்ற வேண்டாம். சமையல்சோடா சேர்த்து கொதிக்க வைத்த நீரில் சுத்தமான துணியை நனைத்து புண்ணில் கட்டலாம். காயம்பட்டவருக்கு உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்து அடிக்கடி கொடுக்க வேண்டும்.

Advertisements
%d bloggers like this: