Advertisements

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மாமரம்…

மரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டு அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களுக்கு பயன்படுகிறது.  சில வகை உணவுகளைக் கொடுத்தும், சிலவகை மருந்தாகவும், சில வகை இருப்பிடங்களை உருவாக்கவும், என இவற்றின் பயன்பாடுகளை அளவிட முடியாது.

நாம் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு மரத்தின் மருத்துவப் பயன்கள் பற்றி அறிந்து வருகிறோம்.  இந்த இதழில் மாமரத்தைப் பற்றியும், அதன் மருத்துவக் குணங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

கனிகளில் ராஜ கனியாக மாங்கனியைக் குறிப்பிடுகின்றனர்.  அதுபோல் முக்கனியில் முதல் கனியும் மாங்கனிதான்.

மாமரம் சைவ சமயத்தில் ஒரு சில சிவாலயங்களில் தல விருட்சமாக விளங்குகிறது. மாமரத்தின் பூர்வீகம் இந்தியா தான்.  குறிப்பாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் அதிக மாமரம் உள்ள மாவட்டமாகும்.

மாமரத்தை, ஆமிரம், எகின், சிஞ்சம், சூதம், குதிரை, மாழை, மாந்தி என பல பெயர்களில் சித்தர்கள் அழைக்கின்றனர்.  மா, பெருமர வகையைச் சார்ந்தது.  இதில் பல வகைகள் உள்ளன.

இந்துக்கள் பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில்  கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது.  மா இலை ஒரு கிருமி நாசினியாகும்.    வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு.  இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.

கோமியத்தை வீட்டில் தெளிக்கும் போது மா விலையை பயன்படுத்துவதை நம் கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.

நீரிழிவு உள்ளவர்கள், மாவின் கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து  தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும்.

மாவின் கொழுந்து இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.

தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.

மாம்பூ

மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும்.

மாம்பிஞ்சு

இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், சீரண சக்தி அதிகரிக்கும்.  வாந்தி, குமட்டல் நீங்கும்.

மாங்காய்

மாங்காயை சமைத்துச் சாப்பிடுவது நல்லது.  அல்லது ஊறுகாய் செய்து சாப்பிடலாம்.   மாங்காய் அதிகம் சாப்பிட்டால், பசியின்மை, புண் ஆறாமை, பல் கூச்சம், சிரங்கு போன்றவை உண்டாகும்.

மாம்பழம்

கோடைக்காலத்தில் அதிகம் விளையும் மாங்கனி மிகுந்த சுவை கொண்டது.

மலச்சிக்கலைப் போக்கும், சீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும்.
மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.

வேத சத்திய மாக விளம்புவோந்
தாது விர்த்திருக்குந் தம்பன மாங்கனி
போதம் மர்த்தனம் புன்காயி னால்வடு
வாத பித்த கபங்களை மாற்றுமே
(அகத்தியர் குணவாகடம்)

மாம்பழம் அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது.  இதனை  கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை அடையலாம்.

மாங்கொட்டை

பேசுமே சீதப் பெருக்குஞ்சோ ரிக்கடுப்பும்
வீசுமோ மூலமுறு வெங்கொதிப்பு – மாசுடைய
பூங்கொட்டை யைத்தள்ளிப் போட்டுக் கனியில்வந்த
மாங்கொட்டையைக் காணில் வாது

-அகத்தியர் குணவாகடம்

மாங்கொட்டை பருப்பை எடுத்து காயவைத்து பொடித்து கஷாயம் செய்து மாதவிலக்குக் காலத்தில் அருந்தினால், அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைப்படுதல் குணமாகும்.

வயிற்றுப் புழுக்கள் நீங்கி, வயிற்றுப்புண் ஆறும்.  வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு குணமாகும்.
மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.

மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது.
மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.

மாம்பிசின்

கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.

அளவில்லாப் பயன்களை அள்ளித்தரும் மாமரத்தை நாமும் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்.

Advertisements
%d bloggers like this: