Advertisements

Daily Archives: ஜூலை 1st, 2011

பொருளாதாரப் பேதைகள்

விண்ணை முட்டும் விலைவாசி காரணமாக நாட்டு மக்கள் தாங்கொணாத தவிப்புக்கு ஆளாகிவருகிறார்கள். ஆட்சியாளர்களோ சதவீதக் கணக்கைப் போட்டுக்கொண்டு “”ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிட்டது, வந்து கொண்டிருக்கிறது, வருவது உறுதி” என்று கட்டியங்கூறிக் கொண்டே காலத்தைக் கடத்துகிறார்கள்.விலைவாசி உயர்வுக்கு காரணம் கேட்டால் “”இது சர்வதேசச் சந்தையின் பாதிப்பு, எங்களுடைய சாமர்த்தியத்தால்தான் இது தீவிரமாக உங்களைத் தாக்கவில்லை” என்று கூறுகிறார்கள்.பன்னாட்டு நிறுவனங்களுக்கு நடைபாவாடை விரிக்க எங்கே சந்தர்ப்பம் என்று அலைபாயும் நம்முடைய ஆட்சியாளர்கள், “”சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்துவிட்டால் இந்த விலைவாசி குறைந்துவிடும்” என்று புதிதாக ஓத ஆரம்பித்திருக்கிறார்கள்.””விலைவாசி ஒன்றும் அப்படி ஒரேயடியாக உயர்ந்துவிடவில்லை, நம் நாட்டு மக்கள் தாங்கும் அளவுக்குத்தான் இருக்கிறது, நம் நாட்டின் எந்தப் பகுதியிலும் பட்டினிச் சாவு நிகழவில்லை, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு மலிவு விலையிலோ இலவசமாகவோ கோதுமையும் அரிசியும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம், நம்முடைய களஞ்சியங்களில் அடுக்க இடம் இல்லாமல் வெட்ட வெளியில் தானியங்களை மழைக்கும் வெயிலுக்கும் தீனியாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்றெல்லாம் இறுமாப்புடன் பதில் சொல்கிறார்கள்.ஆனால் இந்தப் பணவீக்கம் என்ற பகாசுரன் பாமர மக்களின் வாழ்க்கையைச் சூறையாடி வருவதை “”கிரைசில்” என்ற தர மதிப்பீட்டு அமைப்பின் சமீபத்திய ஆய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது.கடந்த 3 நிதியாண்டுகளில் மட்டும் 5.8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மக்களுக்குக் கூடுதல் செலவு ஏற்பட்டிருக்கிறது.ஏழைகள், நடுத்தர மக்களை இந்த விலை உயர்வு கடுமையாகப் பாதித்துக் கொண்டிருக்கிறது. சாப்பாட்டுச் செலவை மட்டுமே சமாளிக்க முடியாமல் குடும்பங்கள் அரை வயிறு, கால் வயிறு என்று சாப்பிடத் தொடங்கிவிட்டன. ஏழை, நடுத்தர மக்களுடைய வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்துவிட்டது.சாப்பாட்டுச்செலவு அதிகமாகிவிட்டதால் மருத்துவச் செலவு, கல்விச் செலவு போன்றவற்றைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். நோய் முற்றி பாயில் விழுந்தால்தான் இனி சிகிச்சை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.2008-09-ம் நிதியாண்டு முதல் 2010-11-ம் நிதியாண்டு வரை பணவீக்க விகிதம் 8% ஆக அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இது வெறும் 5% ஆகத்தான் இருந்தது.அரிசி, கோதுமை, பருப்பு, இதர தானியங்கள், சமையல் எண்ணெய், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வு மட்டும் 11.6% ஆக இந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. உணவுப் பொருள் அல்லாத பண்டங்களின் விலை உயர்வோ 5.7% ஆகத்தான் இருந்திருக்கிறது. இதில் இரட்டை ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதாவது சாமான்யர்கள் உற்பத்தி செய்யும் பண்டங்களுக்குத் தேவை குறைந்து அவற்றை வாங்குவோர் குறைந்ததால் அவற்றின் விலையை உயர்த்த முடியாமல் குறைத்துவிட்டனர். இதனால் அந்தத் துறையில் வேலை இழப்பும் ஆள் குறைப்பும் ஏற்பட்டிருக்கிறது. விலைவாசியைக் குறைக்க அரசு எடுத்த ஒரே நடவடிக்கை ரிசர்வ் வங்கி மூலம் வட்டி வீதத்தை கால், கால் (0.25) சதவீதமாக பத்து முறை உயர்த்தியதுதான். வீடு கட்டக் கடன் வாங்கியவர்களும் வாகனக்கடன் வாங்கியவர்களும் மேலும் தங்களுடைய பொருளாதாரச் சக்தியை இழந்ததுதான் மிச்சம்.அதனால், வங்கிகளின் புத்தக மதிப்பு லாபம் பல மடங்கு கூடியது; எனவே ஆட்சியாளர்கள் “”தங்களுடைய திறமையால் வங்கிகள் லாபம் ஈட்டி வருவதாக” தம்பட்டம் அடித்து வருகின்றனர்.””சர்வதேச பண்டச் சந்தையில் விலைவாசி உயர்ந்து கொண்டே வருவதால், அதிலும் குறிப்பாக கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால் நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் விலைவாசி குறையாது, உயர்ந்துகொண்டே போகும்” என்று ஆரூடம் கூறுகிறது ரிசர்வ் வங்கியின் அறிக்கை.சமீபத்திய டீசல், சமையல் கேஸ், கெரசின் விலை உயர்வால் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கை ஜூலையிலேயே தாண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.3 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் தன் வருவாயில் வெறும் 14 சதவீதத்தைத்தான் தன்னுடைய செலவுகளுக்காக ஒதுக்கினார். இப்போது அந்தத் தேவைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டாலும்கூட 17% அளவுக்கு அவருக்குப் பணம் தேவைப்படுகிறது. இந்த நிலைமை இப்படியே போனால் நடுத்தர மக்களிடம் சேமிப்பே இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும்கூட இந்தியாவில் பொருளாதாரச் சக்கரம் சுழல்வதற்கு நடுத்தர மக்களின் சேமிப்புதான் அச்சாணியாக இருந்தது. இப்போது அந்த அச்சாணியும் முறியத் தொடங்கியிருக்கிறது.தாங்க முடியாத விலைவாசி உயர்வுதான் தீவிரவாதத்துக்கு அடிப்படைக் காரணமாக அமையும். சராசரி மனிதனின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவுக்கு விலைவாசி உயரும்போது அது சட்ட ஒழுங்கு பிரச்னையாக மாறிவிடுகிறது. இதுகூடப் புரியாமல் ஆட்சி செய்த பிரெஞ்சு மன்னன் 16}ம் லூயியின் சரித்திரத்தை இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் படித்துத் தெரிந்து கொள்வது நல்லது.மக்களவை பொதுத் தேர்தலுக்குத்தான் இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறதே என்று மெத்தனமாக இராமல் விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க முழு முனைப்புடன் அரசு செயல்பட வேண்டும். பொருளாதாரம் வளருவது இருக்கட்டும். முதலில் விலைவாசியைக் குறைப்பது பற்றிக் கவலைப்படுவோம். பொருளாதாரம் படித்தால் மட்டும் போதாது. மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

Advertisements

5 இருந்தால் ஆளலாம்

வாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்…

1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கையாளர்களை பேசவிட்டு அவர்களின் மனநிலையை நன்றாக புரிந்து கொண்டு அவர்களுக்கு தகுந்தவாறு நீங்கள் பேச வேண்டும். இந்த இணக்கமான உறவினை மேற்கொள்ள விரும்புபவர்கள் சில அத்தியாவசியமான நுட்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது ஒருவர் பேசும் பேச்சுக்களில் இருந்தே பேசுபவர் எந்த துறையை சேர்ந்தவர், அவர் எப்படிப்பட்டவர், எந்த வழியில் பேசினால் அவரை ஈர்க்க முடியும் என்பது குறித்து தெரிந்து கொள்ளும் திறமையை வளர்க்க வேண்டும். இந்த வகையில் வாடிக்கையாளர்களை பேசவிட்டு அவர்களின் கருத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி பேசப்படும் நடவடிக்கை மூலம் உங்கள் வியாபார வெற்றி பெருகும்.

2. குழப்பங்களை நீக்கும் தெளிவு: நம் மனதை எப்பொழுதும் தூய்மையானதாகவும், தன்னம்பிக்கையுடனும் குழப்பங்களை நீக்கி தெளிவாகவும் வைத்திருக்க வேண்டும். எந்த காரியத்தையும் நம்மால் செய்ய முடியும் என்கிற மனோதிடம் வேண்டும். நாம் ஏதேனும் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்ட நிலையிலும் அதைப்பற்றி பெரிதுபடுத்தாமல், அந்த இடத்தில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று நினைத்து அந்த சிக்கலை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் சிக்கல் நிறைந்த வேலைகளை செய்யப்போகும்போது `அய்யோ இந்த வேலையை எப்படி செய்யப் போகிறோமோ!’ என்று தயக்கத்துடன் செல்லாமல் ஏதோ விளையாட்டாக அந்த வேலையை செய்வது போன்ற எண்ணத்துடன் செய்தால் அது சிறப்பாக முடியும்.

ஒரு வேலையை ரசித்து செய்யும்போது மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதுமையான ஒரு செயல் அல்லது திட்டம் தீட்டும்போது ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், நம் மனதிற்குள் நாமே ஆழமாக பல வழிகளில் சிந்திக்கும்போது பல புதிய வழி முறைகள் தோன்றும். எப்பொழுது நமக்குள் நாமே சிந்திக்க ஆரம்பிக்கின்றோமோ அப்போது மனதில் உள்ள குழப்பங்கள் மாறி முழுமையான சக்தியுடன் கூடிய பல வழிகள் உருவாகும்.

3. ஒருநிலைப்படுத்துதல்: எப்பொழுது ஒருவர் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, மனதை ஒருநிலைப்படுத்தி செயலில் ஈடுபடுகின்றாரோ அப்பொழுது அவரால் எளிதில் வெற்றி பெற முடியும். குழப்பமான நேரங்களில் எல்லாம் மனதை ஒருநிலைப்படுத்தி சிந்திப்பதன் மூலம் குழப்பங்கள் நீங்கி புதிய வழி பிறக்கும்.

முதன் முதலில் நீங்கள் முழுமூச்சாக ஒரு காரியத்தில் ஈடுபட்டு அதில் முழுமையான சந்தோஷம் மற்றும் வெற்றியை பெறும்பொழுது நீங்கள் உங்கள் உண்மையான மகிழ்ச்சி உணர்வை வெளிப்படுத்தும் விதமாக உங்கள் கை விரல்களை மடக்கி முழங்கையை கீழ்நோக்கி இழுத்து உங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்துவீர்கள். இது மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் தானாக வெளிப்படும் உணர்வுகளின் செயல்பாடாகும். ஆனால் எப்பொழுது உங்கள் வேலை சரியாக அமையவில்லையோ அப்போது உங்களுக்குள் இது போன்ற உணர்வுகள் தோன்றாது.

4. ஒருங்கிணைத்து முடிவெடுத்தல்: ஒவ்வொருவருக்கும் தங்கள் வேலையை செய்யும்போது சில குழப்பங்கள் ஏற்படும். இந்த சமயங்களில் தங்கள் நண்பர்களிடம் இருந்தோ அல்லது ஏற்கனவே இந்த வேலையை செய்து முடித்துள்ள அனுபவசாலிகளிடம் இருந்தோ உதவிகளை பெற வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் அந்த வேலையில் உள்ள அனைத்து செயல்களையும் ஒருமுகப்படுத்தி சிந்தனை செய்து முடிவெடுக்கும்போது நல்ல தீர்வு கிடைக்கிறது.

எடுத்துக்காட்டாக உங்களுக்கு உங்கள் உடலை ஒல்லியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதேநேரத்தில் சாக்லேட் தின்பதற்கும் ஆசை உள்ளது என்று வைத்துக் கொள்வோம். சாக்லேட் தின்பதால் உடல் எடை அதிகரிக்கும். இதனால் உங்கள் உடல் ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாது. இதில் சாக்லேட் தின்பதை விட உங்கள் உடல் ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. எனவே இரண்டு ஆசைகளையும் ஒரே நேரத்தில் சிந்தித்து அதில் எது சிறந்ததோ அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

5. சிறந்த மொழி வெளிப்பாடு: பேசும்போது சில வார்த்தைகள் எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கிவிடும். குறிப்பாக ஆனால் என்ற வார்த்தையானது எதிர்மறையான ஒரு விளைவை ஏற்படுத்தும் வார்த்தையாகும். எடுத்துக்காட்டாக நீங்கள் உங்கள் நண்பரிடம் பேசும்போது `நான் உங்கள் நலனை விரும்புகிறேன் ஆனால்….’ என்று கூறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வார்த்தையில் இருந்தே அவரது உடல்நலனில் நீங்கள் அக்கறையில்லாமல் இருப்பதுபோல் ஆகிவிடுகிறது.

இதை கேட்டதுமே உங்கள் நண்பருக்கு இதுவரை பேசியது அனைத்தும் பயனற்று போய்விட்டது என்ற எண்ணம் தோன்றிவிடும். இதனால் நீங்கள் எந்த காரியத்தை பேசிக் கொண்டிருந்தீர்களோ அதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுவிடும். எனவே அந்த மாதிரியான பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். மேலும் எதற்கெடுத்தாலும் இல்லை, தெரியாது என்று சொல்லுவதை தவிர்த்து ஆம், தெரியும் என்று பேசுங்கள் வெற்றி பெறலாம்.

உயிரின் கதை – 5(உயிரிகளின் திடீர்த் தோற்றம்)

உயிரிகளின் திடீர்த் தோற்றம்

“உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான். (10:20)”

“எல்லா உயிர்களிலும் விதை அதுவோ அது நான். (10:39)”

“பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம்; அதில் நான் கருத்தரிக்கிறேன். பாரதா, எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன. (14:3)”

“நான் பூமியுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன், ரச வடிவமுள்ள சோமமாகிப் பூண்டுகளை எல்லாம் வளர்க்கிறேன். (15:12)”

“நான் வைசுவாநரனாய், உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன். (15:14)”

“எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் என்னிடமிருந்தே பிறக்கின்றன. (15:15)”

“எனது அம்சமே ஜீவலோகத்தில் என்றுமுள்ள ஜீவனாகி, இயற்கையில் உள்ளவனாகிய மனது பட்ட ஆறு இந்திரியங்களையும் கவர்கிறது. (15:7)”

“மண், நீர், தீ, காற்று, வான், மனம், மதி, அகங்காரம் இவ்வெட்டு வகையாக என் இயற்கை பிரிந்து தோன்றுகிறது. (7:4)”

“எல்லா உயிர்களுக்கும் அது காரணம் என்று உணர். அதனால் நான் உலக முழுமைக்கும் ஆக்கமும் அழிவுமாவேன். (7:6)”

“நூலில் மணிகளைப் போல் இவ்வையகமெல்லாம் என் மீது கோக்கப்பட்டது. (7:7)”

“மண்ணில் தூய நாற்றமும், தீயில் சுடரும், எல்லா உயிர்களிலும் உயிர்ப்பு நான் (7:9). எல்லா உயிர்களுக்கும் நான் சநாதனமாகிய விதை என்று உணர். (7:10)”

“நைந்த துணிகளைக் கழற்றி எறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல ஆத்மா நைந்த துணிகளைக் களைந்து விட்டு புதியனவற்றை எய்துகிறான். (As a person puts on new garments, giving up old ones, the soul similarly accepts new material bodies, giving up the old and useless ones.) – 2:22”

இவனை ஆயுதங்கள் வெட்டமாட்டா: தீ எரிக்காது; நீர் இவனை நனைக்காது; காற்று உலர்த்தாது. (The soul can never be cut to pieces by any weapon, nor burned by fire, nor moistened by water, nor withered by the wind.) – 2:23”

“பிளத்தற் கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; நித்தியன்; எங்கும் நிறைந்தவன்; உறுதியுடையான்; அசையாதான்; என்றும் இருப்பான். (This individual soul is unbreakable and insoluble, and can be neither burned nor dried. He is everlasting; present everywhere, unchangeable, immovable and eternally the same.) – 2:24”

2010_02_27_vrindavan_0669

பகவத் கீதையின் மேற்கண்ட தமிழ் வரிகளுக்குச் சொந்தக்காரர் சுப்பிரமணிய பாரதியார். [ஆங்கில வரிகளை எழுதியவர் பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதா என நினைக்கிறேன்.] தடிமனான வார்த்தைகளைக் கவனித்தால் ஆங்கிலத்தில் He/soul அவன்/ஆத்மா என்ற வார்த்தைகள் மாறி வருவதையும் ஒரே பொருளில் வழங்குவதையும் காணலாம். மொழிபெயர்ப்பு வேறுபாடு என்பதைத் தாண்டி இன்னும் ஆழமாக இதை யோசித்துப்பார்க்கலாம்.

o0OOO0o

“நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான். (2:28)”

“மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களைக் கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (24:45)”

“மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான். (26:81)”

“அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான். (40:68, 44:8, 45:26)”

“வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; அவனே உயிர்ப்பிக்கிறான்; மரிக்கும் படியும் செய்கிறான் – மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். (57:2)”

“எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு (இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய். (2:258)”

“வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் – சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக்காட்டும்) சான்றுகள் உள்ளன. (2:164, குர்ஆன்)”

namaz11ch0

o0OOO0o

“அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று (1:11). பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது. (1:12)”

“பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். (1:20) தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார். (1:21) பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதி ஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. (1:24) தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார். (1:25)”

“தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்(1:27). தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் (2:7, ஆதியாகமம், பழைய ஏற்பாடு).”

prayer

o0OOO0o

உயிர் என்றால் என்ன, உயிரிகள் எவ்வாறு தோன்றின என்ற கேள்வியை வரலாறு வழி சொல்வதைத் தாண்டி, மத நூல்களை அல்லது கடவுள் நம்பிக்கையை ஆராய்வதோ விமர்சிப்பதோ இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. உயிர் என்றால் என்ன என்ற கேள்வியை ஆன்மீக, தத்துவ நோக்கில் விளங்கிக் கொள்ள சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே மேற்கண்ட வரிகள். இவற்றை முழுதும் வாசிக்க பின்னிணைப்பில் வரும் மூல நூல்களைப் பார்க்கவும். கட்டுரையின் நீளம் கருதி புத்த, சமண, சீக்கிய மற்றும் இதர நூல்களில் வரும் உயிர் பற்றிய சிந்தனைகளையும் இங்கு சேர்க்கவில்லை. இவையெல்லாம் ஆன்மீக நோக்கில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை. அன்றாடமும் இந்நூல்களை ஆழ்ந்து கற்கும் அறிஞர்கள் மட்டுமே அதற்குத் தகுதியுடையவர்கள்.

ஒரு மனிதன் இறந்த பிறகு உடல் இருக்கிறது. உயிர் என்ன ஆகிறது, எங்கே போகிறது? என்ற கேள்விக்குப் பல ஆன்மீக விளக்கங்கள். முழுமையான பதில் இல்லை என்றாலும் ஒரு தர்க்கத்திற்காக இப்படியும் யோசித்துப்பார்க்கலாம். ஒரே அளவிலான ஆறு சதுர மரப்பலகைகள் மற்றும் கொஞ்சம் ஆணிகள். சுத்தியலால் அடித்து இவைகளை வைத்து ஒரு பெட்டி செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆணியால் பிணைக்கப் படுவதன் மூலம் மரப்பலகைகள் ஒரு சதுரப் பெட்டியாக மாறி விடுகின்றன. இங்கே இருப்பது பெட்டிதான், பலகைகள் அல்ல.

இப்போது ஆணிகளைப் பிடுங்கி எடுக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். பெட்டி வெறும் பலகைகளாகப் பிரிந்து விடுகிறது. அப்படியானால் பெட்டி என்ன ஆனது? எங்கே போனது?

பெட்டி எங்கும் போய்விடவில்லை. இதோ இங்கேதான் இருக்கிறது, பலகைகளின் வடிவில். ஆனால் பலகை பெட்டியாக இருப்பதை நிறுத்தி விட்டது. அவ்வளவுதான். உயிர் பற்றி நவீன உயிரியல் தரும் விளக்கம் ஏறக்குறைய இதுவே.

o0OOO0o

நம் உடலிலே உயிர் எங்கே இருக்கிறது என்ற கேள்வியைத்தான் நானும் சின்னப் பையனாக காய்ச்சல் வந்து வீட்டில் தனியாகப் படுத்திருந்தபோது ஒருநாள் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆஸ்பத்திரியில் ஊசி போடப்போன டாக்டர் மாமாவிடம் கேட்டபோது, “இதயத்துக்குள், வலது ஓர மூலையில், ஆவி ரூபத்தில்!” சொல்லிவிட்டு தாம்பூலத்தை எடுத்து வாயில் போட்டு குதப்பிக்கொண்டே சிரிஞ்சில் மருந்தை எடுத்துக் கொண்டிருந்தார். வழக்கம் போல அவர் சீர்காழி கோவிந்தராஜனின் பாடலை உரக்கப் பாடாததால் அறையில் மயான அமைதி. பயந்து கொண்டே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “அப்ப ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது வெளியே போய்டாதா?” என்றேன்.

மூக்குக் கண்ணாடியை நிமிர்த்தி மூக்கின் நுனியில் விட்டு குனிந்து சில வினாடிகள் முறைத்தவர் திடீரென முகவாயை உயர்த்தி தாம்பூலத்தைத் தாடையில் சேகரித்துக் கொண்டு, ”இண்ட மாதிரி கேழ்வி கேட்டே, அண்ட கைழயும் ஊழ்ஷி போட்டுருவேன்!” என்று சொல்லி விட்டு சுருக் என்று ஊசியைக் குத்தினார். “ஆஸ்பத்திரிக்கு வந்த எடத்துல என்ன அதிகப்பிரசங்கித்தனமா பேச்சு?” என்றாள் பாட்டி. வலித்த கையைத் தேய்த்துக் கொண்டே வீட்டுக்கு வந்து விட்டேன்.

o0OOO0o

இனப்பெருக்கம் வழி அன்றி உயிரற்ற பொருள்களிருந்தும் உயிரிகள் ’திடீரென’ தோன்ற முடியும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு நிலவும் ஒன்று. மரத்தில் சாறுண்ணும் பேன்கள் (aphids) மூங்கில் மரத்திலிருந்து தோன்றுகின்றன என்று பண்டைய சீனர்கள் நம்பினர். நைல் நதியின் சேற்றுப் படுக்கையிலிருந்து ஈல் மீன்களும் தவளைகளும் தானாகவே தோன்றுகின்றன என்ற நம்பிக்கை எகிப்து மக்களிடமிருந்தது. புராதான பாபிலோனிய ஏடுகளில் ‘கால்வாயின் சேறு தானாகவே புழுக்களை ஜனிக்கும் வல்லமை படைத்தது’ என்ற குறிப்பு காணக் கிடைக்கிறது. ‘ஈக்கள் தூசியிலிருந்தும் வியர்வையிலிருந்தும் தானாகவே உருவாகின்றன’ என்று இந்தியத் தத்துவ நூல் ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது என்று ஒரு ஆங்கிலக் கட்டுரையில் சொல்லப் பட்டுள்ளது. அது எந்த தத்துவ நூல் என்று தெரிந்து எழுதும் வாசக நண்பர்களுக்கு அந்த ஆங்கிலக் கட்டுரையின் pdf பிரதி பரிசு!

உயிரிகள் உயிரற்ற பொருள்களிலிருந்து தானாகவே தோன்ற முடியும் என்ற கருத்து அதாவது ‘உயிரிகளின் திடீர்த் தோற்றம்’ (spontaneous generation theory) பண்டைய கிரேக்கத் தத்துவவாதிகளான தேல்ஸ், எபிகுரஸ், டெமாக்ரடஸ், லுக்ரிடியஸ், பிளாட்டோ உள்பட பலராலும் முன்வைக்கப்பட்டது. இக் கருத்துகளையெல்லாம் யோசித்துத் தொகுத்து கி.மு. 350-களில் அரிஸ்டாட்டில் ‘விலங்குகளின் வரலாறு’ (History of animals, Latin Historia Animālium) என்ற தலைப்பில் ஒரு தனிப் புத்தகமாகவே எழுதினார். “விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் பொதுவான ஒரு பண்பு ஒன்று உண்டு. சில தாவரங்கள் எப்படி விதையிலிருந்து தோன்றுகின்றனவோ அதே போல விதையைப் போன்ற விதை அல்லாத சில அடிப்படைக் கூறுகளிலுருந்தும் உண்டாகின்றன. அதைப் போலவே சில விலங்குகள் பெற்றோர்கள் வழியாகவும் பூச்சிகளைப் போன்ற சில உயிரிகள் அழுகிய தாவரக்கழிவுகளிலிருந்தும் உண்டாகின்றன.” என்பது போன்ற தகவல்களை இந்நூலில் காணலாம்.

முட்டம், கன்னியாகுமரி போன்ற கடலோர மற்றும் மீன் பண்ணை உள்ள ஊர்க்காரர்களிடம் இதைச் சொன்னால் நம்மை அடிக்காமல் விடமாட்டார்கள். நெத்திலி மீன்கள் (anchovy) கடல் நுரையிலிருந்து உண்டாகி வளர்கின்றன என்று நம்பினார் அத்தினயுஸ் என்ற கிரேக்க அறிஞர். அரிஸ்டாட்டிலோ விலாங்கு மீன்கள் (eel) உண்டாவது மண்புழுவிலிருந்துதான் என்று நம்பினார்!

உயிரிகள் மற்றும் இப்பிரபஞ்சமே பஞ்சபூதங்களால் ஆகியது என்று இந்தியத் தொல் நூல்களில் உள்ளது யாவரும் அறிந்ததே. தந்தையின் விந்திலிருந்து வரும் ஆன்மா தாயின் தொகுக்கப் படாத பொருளுடன் கலந்து கரு உண்டாகி வளர்கிறது என அரிஸ்டாட்டில் நம்பினார். உயிரற்ற பொருள்களில் ‘உயிர்மூச்சு (அல்லது) உயிர்ச்சூடு’ (pneuma or vital heat) பஞ்ச பூதங்களுள் இணைந்து உட்புகுவதன் மூலம் உயிரிகள் உருவாக முடியும் என்பது அரிஸ்டாட்டிலின் நம்பிக்கை. அழுகிய வைக்கோலிலிருந்து எலிகள் உண்டாவதும், நீர்நிலையின் அழுகிய மரக்கட்டைகளிலிருந்து முதலைகள் உண்டாவதும் எவரும் கண்டு அறியத்தக்க உண்மைகளே என்று நம்பினார் அவர். அரிஸ்டாட்டிலின் ‘உயிர் வழியில்லாப் பிறப்புக்கொள்கை’ கடல் கடந்து பரவி வரை நியூட்டன், பேகன் உட்பட 17-ஆம் நூற்றாண்டின் ஏறக்குறைய எல்லா முக்கிய சிந்தனையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. 1605-களில் எழுதப்பட்ட ஷேக்ஸ்பியரின் ‘அந்தோனியும் கிளியோபாட்ராவும்’ என்ற துன்பியல் நாடகத்தில் கூட ‘நைல் நதியின் சேற்றிலிருந்து சூரிய ஒளியால் பாம்பும் முதலையும் உண்டாவது’ பற்றிய ஒரு குறிப்பைக் காண முடியும்.

1630-களில் அழுக்குச்சட்டை மற்றும் கோதுமை ஆகியவற்றிலிருந்து எலிகள் தோன்றுகின்றன என்றும், அவை இனப்பெருக்கம் மூலம் உருவான எலிகளை அப்படியே அச்சு அசலாக ஒத்திருக்கின்றன என்றும் ஆச்சரியப்பட்டு, தன் கண்டுபிடிப்பை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் வான் ஹெல்மாண்ட் என்ற பெல்ஜியத்துக்காரர். அதுவரையிருந்த புரிதல்களைப் புரட்டிப் போட்டு, நவீன உயிரியலின் அடிப்படையையே தீர்மானித்த முக்கியமான சம்பவங்கள் இதற்குப் பிறகு நிகழ்ந்தன.

(இன்னும் வரும்)

 

உதவியவை & மேலும் படிக்க:

1. Bhagvad Gita, http://www.bhagavad-gita.us/
2. மகாகவி பாரதியார், பகவத் கீதை, தமிழ்இந்து.காம் வெளியீடு
3. Aristotle, The History of Animals, Translated by D’Arcy Wentworth Thompson http://classics.mit.edu/Aristotle/history_anim.html
4. King James Bible: http://www.tamil-bible.com/lookup.php?Book=Genesis&Chapter=2
5. குர்ஆன், http://www.tamililquran.com/
6. What Buddhists Believe: http://www.buddhanet.net/pdf_file/whatbelieve.pdf
7. Shakespeare, Anthony and Cleopatra (Folio 1, 1623) http://internetshakespeare.uvic.ca/Library/Texts/Ant/F1/Scene/2.7
8. The Molecular Origins of Life Edited by Andre Brack, Introduction http://assets.cambridge.org/97805215/64755/excerpt/9780521564755_excerpt.pdf

—————-

வேணுகோபால் தயாநிதி

நன்றி-சொல்வனம்

எக்ஸெல் டிப்ஸ்-1.7.2011

நெட்டு வரிசை முழுவதும் செலக்ட் செய்திட வேண்டுமா? கர்சரை அங்கு கொண்டு சென்று கண்ட்ரோல் +ஸ்பேஸ் பார் (Ctrl+Spacebar) அழுத்தவும்.
படுக்கை வரிசை முழுவதும் செலக்ட் செய்திட கர்சரை அந்த வரிசையில் கொண்டு சென்று ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (Shift+Spacebar) அழுத்தவும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.
Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப் பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப் படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+Home) கீகள் அழுத்தப் படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.
என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.
ஆல்ட் + என்டர் (Alt +Enter) அழுத்தினால் அதே செல்லில் அடுத்த வரிக்குக் கர்சர் செல்லும்.
டேப் கீ (TAB) அழுத்தப் படுகையில் கர்சர் இருக்கும் செல்லில் டேட்டா தருவது நிறைவடைந்து கர்சர் வலது புறம் இருக்கும் அடுத்த செல்லுக்குச் செல்லும்.
ஷிப்ட்+ டேப் (Shft+TAB) கீகளை அழுத்தினால் செல்லில் டேட்டா தருவது நிறைவடைந்து கர்சர் இடது புறம் இருக்கும் முந்தைய செல்லுக்குச் செல்லும்.
செல் ஒன்றில் என்டர் செய்த டேட்டா வினைக் கேன்சல் செய்திட எஸ்கேப் கீயை அழுத்தவும்.
செல் என்ட்ரிக்குள்ளாக ஆரோ கீ அழுத்தினால் ஆரோவின் திசைக்கேற்ப இடது, வலது, மேல், கீழாகச் செல்லும்.
எக்ஸெல் ஷார்ட்கட்ஸ் எக்ஸெல் தொகுப்பில் செயல்படுகையில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட் கட் வழிகள் இங்கு தரப்படுகின்றன.
CTRL+SPACEBAR – கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
SHIFT+SPACEBAR : கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
CTRL+HOME : ஒர்க் ஷீட்டின் தொடக்கத்திற்கு செல்ல
CTRL+END: ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்ல
SHIFT+F3 : பார்முலாவில் ஒரு பங்ஷனை ஒட்ட
CTRL+A: பார்முலா என்டர் செய்கையில் பங்ஷன் பெயர் டைப் செய்தவுடன் பார்முலா பேலட்டைக் காட்டும்
CTRL+A: பார்முலா என்டர் அல்லது எடிட் செய்யாதபோது அனைத்தையும் தேர்ந்தெடுக்கும்.
CTRL+‘ : (சிங்கிள் லெப்ட் கொட்டேஷன் மார்க்) செல் வேல்யூ மற்றும் செல் பார்முலாவை அடுத்தடுத்துக் காணலாம்.
F11 or ALT+F1: அப்போது உள்ள ரேஞ்ச் சார்ந்து சார்ட் தயார் செய்யப்படும்.
CTRL+; –– (செமிகோலன்) தேதியை இடைச் செருக
CTRL+: (கோலன்) நேரத்தை இடைச் செருக
CTRL+ENTER: தேர்ந்தெடுக்கப்பட்ட செல் ரேஞ்சில் அப்போதைய என்ட்ரி உருவாக்க
F5: Go To டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+1: Format Cells டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+C: காப்பி செய்தல்
CTRL+V: ஒட்டுதல்
CTRL+Z: செயல்படுத்தியதை நீக்க
CTRL+S: சேவ் செய்திட
CTRL+P : பிரிண்ட் செய்திட
CTRL+O : புதிய பைல் திறக்க போல்டரைக் காட்டும்