Daily Archives: ஜூலை 2nd, 2011

உயிரின் கதை – 6

“நம்மூர் ஞானம் உண்மையிலேயே அவ்வளவு பழையதா? சுஸ்ருதர் என்பவர் உண்மையிலேயே இருந்தாரா? சுஸ்ருதரின் காலம் உண்மையிலேயே கி.மு.600-800 வருடமா?” என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். இக்கேள்விகளை விவாதித்துவிட்டுக் கட்டுரையைத் தொடர்வோம்.

சுஸ்ருதரின் காலம்

ரிக் வேதத்தில்[1] (கி.மு. 1500) உடலின் மூன்று கூறுகளைப் பற்றி கூறப்பட்டுள்ளது. ரிக் வேதத்திற்குப் பிறகு கி. மு. 700-800-களில் எழுதப்பட்ட இருபது பகுதிகளையும், 731 செய்யுள்களையும் கொண்ட அதர்வ வேதமே ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை. அதர்வ வேதத்தின் மொழியை ஆராய்ந்த ஆர்தர் மெக்டோனெல்[2] ‘பல்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டதே தவிர இது தனி ஒருவரால் எழுதப்பட்டதல்ல’ என்ற முடிவுக்கு வருகிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலையின் சம்ஸ்கிருதப் பேராசிரியரான மெக்டோனெல் 1900-ஆம் ஆண்டில் ‘சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு’[3] என்ற புத்தகத்தை எழுதியவர். கி. மு. 700-800-களில் தொகுக்கப்பட்டது என்றால் அதர்வ வேதத்தில் வரும் செய்யுள்கள் அதற்கும் முன்பே எழுதப்பட்டிருக்கவேண்டும்.

கி.மு. 600 முதல் கி.மு. 800-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம்  ‘இந்தியாவின் அறுவை சிகிச்சையின் பொற்காலம்’ என்றறியப்படுவதற்குக் காரணம் கங்கைக்கரையில் அமைந்த பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்த சுஸ்ருதரே. உறுப்புகளை அறுத்து தண்டிப்பது வழக்கில் இருந்ததால் மூக்கையும் காதையும் அறுவைசிகிச்சை மூலம் திருத்த இக்காலத்தில் நிறையவே வாய்ப்புகள் இருந்தன.[4] ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலையின் சமஸ்கிருதப் பேராசிரியரான ஹாமில்டன் போயரினால் 1889-90-ஆம் ஆண்டு துர்க்கிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டு கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று உறுதிசெய்யப்பட்ட ‘போயர் கைப்பிரதியில்’ (Bower manuscript) [5] சுஸ்ருதர் வெள்ளைப்பூண்டின் மருத்துவக்குணத்தைக் கண்டறிந்ததை விளக்கும் குறிப்பு, சுஸ்ருதரின் காலத்தை கி.மு.ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு உறுதிசெய்யும் இன்னுமொரு முக்கிய ஆவணமாகும். போயர் கைப்பிரதியை ஆராய்ந்து அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஹொன்லெ[6] தன் நூலில் இதை உறுதி செய்கிறார். கிறித்தவப் பாதிரியாரான ஹொன்லெ இந்தியத் தொல் மொழியியல் வரலாற்று அறிஞர்களுள் முக்கியமானவர்.[6]

sushrutaநோயாளியின் சிறுநீரைச் சுவைத்துப் பார்த்து அது தேன் போல இனிப்பாக இருந்தால் நீரிழிவு நோய் என்று புதிய நோயறியும் முறையை விளக்கும் சுஸ்ருதர், நோயாளியின் உடலைத் தன் எல்லாப் புலன்களின் வழியாகவும் அறிய வேண்டும் என்கிறார். கீறி அறுத்தல், வெட்டி நீக்குதல், தழும்பேற்றுதல், துளையிடுதல், உட்செலுத்துதல், பிடுங்கி எடுத்தல், உறிஞ்சி நீக்குதல், தையல் ஆகிய அறுவை சிகிச்சை முறைகளை வெள்ளரிக்காய், சுரைக்காய், தாமரைத்தண்டு, இறைச்சி, விலங்குகளின் தோல் மற்றும் சிறுநீர்ப்பை, துணி ஆகியவற்றைக் கொண்டு தன் மாணவர்களைப் பயிற்சி கொடுத்து கற்பித்தார். புத்தக அறிவைத்தாண்டி (இறந்த) மனித உடலை நேரடியாகத் தானே அறுத்துப்பார்த்து உடற்கூறியலைக் கற்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் சுஸ்ருதர், “ஏட்டுப்படிப்பை மட்டுமே நம்பியவர், சந்தனக்கட்டையைச் சுமக்கும் கழுதைபோல, சுமையின் பாரத்தையன்றி, அதன் மதிப்பை உணராதவர்” என்கிறார்.[7]

இரண்டு வயதுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகளின் சடலத்தை வைக்கோலினால் சுற்றி ஆற்று நீரில் ஏழுநாள்கள் அழுகிச்சிதையவிட்டு உடலின் ஒவ்வொரு அடுக்காகத் தேய்த்து நீக்கி உடல் உறுப்புகளின் அமைப்பும் உடற்கூறியலும் சுஸ்ருதரின் வகுப்பில் கற்றுத்தரப்பட்டது.[7] “மனிதநேயத்துக்குக் களங்கம் விளைக்கும் காமம், கோபம், குரோதம், கர்வம், பேராசை, பொறாமை, அறியாமை, முரட்டுத்தனம், கபடம் போன்ற குணங்களைக் கைவிட்டு… துறவியைப் போலத் தனித்திருந்து சத்தியம், சுயகட்டுப்பாடு, ஆகியவற்றை மேற்கொண்டு… ஆதரவற்றோர், தூரதேசத்தவர் அனைவருக்கும் மருத்துவ உதவியளிப்பேன் என்று குருவின் சொற்படி கீழ்ப்படிந்து உறுதி கூறுகிறேன்” என்று படிப்பின் இறுதியில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை சுஸ்ருதர் நடைமுறைப்படுத்தினார். சுமார் 400 வருடங்களுக்குப் பிறகு கிரேக்கத்தில் ஹிப்போகிரடெஸ் உருவாக்கிய சத்தியப் பிரமாணமும் ஏறக்குறைய இதைப்போன்றதே.[7]

சுஸ்ருத சம்ஹிதை 8-ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்திலிருந்து அரபிக்கு மொழிபெயர்க்கப்பட்டு பிறகு லத்தீன், ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. 1910-ல் கவிராஜ் பிஷ்கஹர்தன் என்பவருக்குப் பிறகு நேரடி ஆங்கில மொழிபெயர்ப்பாக எம்.எஸ்.வலையத்தன் எழுதி சமீபத்தில் புதிய பதிப்பாக வெளிவந்துள்ளது.[8] சுஸ்ருத சம்ஹிதையை மேலும் படிக்க விரும்பும் வாசகர்கள் இந்நூலைப் பார்க்கலாம் .[9]

-o0OOO0o-

clip_image008

கண்ணுக்குத் தெரியாத உலகங்கள்

இறந்த மனித உடலை அறுத்துப் பார்ப்பதற்கு ஐரோப்பாபில் (மூட நம்பிக்கைகளின் காரணமாக) அனுமதியில்லை என்பதால் ஆடு, மாடு, நாய், குரங்கு, கரடி ஆகியவற்றை அறுத்துப்பார்த்து கி.பி.170-களில் அனத்தோலியாவின் (இன்றைய துருக்கி) கேலன் என்ற மருத்துவர் எழுதிய 256 பகுதிகளைக் கொண்ட உடற்கூறியல் புத்தகம் அடுத்த 1400 வருடங்களுக்கு (வெஸாலியஸ் வரும் வரை) முக்கிய பாடப்புத்தகமாக இருந்தது. கிறித்தவ மடாலயங்களுக்கு வெளியே கற்கும் மையங்களாக கி.பி.பதினோராம் நூற்றாண்டில் பல்கலைக்கழகங்கள் தோன்ற ஆரம்பித்த பிறகு இத்தாலியின் சலயெர்னோ (Salerno) பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக மருத்துவம் தனிப்பாடமாகக் கற்றுத்தரப்பட்டது. பிறகு பொலோக்னா (இத்தாலி), பாதுவா (இத்தாலி), பீஸா (இத்தாலி), பாரிஸ் (பிரெஞ்சு), ஆக்ஸ்போர்ட், கேம்பிர்ட்ஜ் (இங்கிலாந்து), போன்ற பல்கலைக்கழகங்களும் நிறுவப்பட்டன.

மோனலிஸா ஓவியத்தைப் பற்றி தமிழ் சினிமாப் பாட்டில் கூட எழுதியாகிவிட்டது. உலக வரலாற்றில் பலகலைவித்தகர்கள் (polymath) என்று ஒரு பட்டியல் எடுத்தால், இத்தாலியின் லியனார்டோ டவின்ஸி அதில் இருக்க நூறு சதம் சாத்தியம் உண்டு. சர்ச்சைக்குரிய மனிதர் என்றாலும் ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, கணிதம், பூகோளம், இசை, இலக்கியம் எனப் பல துறைகளிலும் அவர் வல்லவராக இருந்தார்.

1489-இல் டவின்ஸி மனித உடற்கூற்றை வரைய ஆரம்பித்திருந்தார். எலும்பு, தசை, உள்ளுறுப்புகள், மூளை, கருவிலிருந்த சிசுவின் பல்வேறு கோணங்கள் என ரோமின் பிணவறையில் அறுத்துப் பார்த்து அடுத்த 25 வருடங்களுக்கு சுமார் 750 படங்களை வரைந்து தள்ளினார். மனித உடற்கூற்றை அதுவரை அவ்வளவு நுணுக்ககாகவும் தத்ரூபமாகவும் எவரும் வரைந்ததில்லை. அதிர்ச்சி, ஆச்சரியம், அருவருப்பு என அறியப்பட்டு மனித உடற்கூறைப் பற்றி மிகப்பெரிய விழிப்புணர்வையும் கூடவே பரபரப்பையும் ஏற்படுத்தியது. கடைசியில் போப் பத்தாம் லியோ 1515-ஆம் வருடம் ஆணையிட்டு அவரை நிறுத்த வேண்டிவந்தது என்று சொல்லப்படுகிறது. இரத்தம் எவ்வாறு உடலில் சுற்றி வருகிறது என்பதை ஏறக்குறைய கண்டுபிடித்திருந்தார் என்பதை நம்புவதற்கான சாத்தியங்கள் அவரின் படங்களில் காணக்கிடைகின்றன.

சிறுவனாக இருந்தபோது வீட்டின் சமையல் கூடத்தில் எலி, பூனை, நாய் ஆகியவற்றை அறுத்துப்பார்ப்பதை பொழுதுபோக்காகக் கொண்ட பெல்ஜியத்தின் வெஸாலியஸ் பின்னாளில் மருத்துவம் பயின்று பாதுவா பல்கலையின் மருத்துவப் பேராசிரியராகி பல ஊர்களுக்குப் பயணம் செய்து மனித உடலை தொழில்ரீதியாக, முறையாக அறுத்துக் காண்பித்து உரைகள் நிகழ்த்தியும், 1543-ஆம் ஆண்டு வெளியிட்ட ‘மனித உடற்கூறியல்’ உட்பட இன்னும் பல நூல்களையும் எழுதியதால் நவீன உடற்கூறியலின் தந்தை என அறியப்டுகிறார்.

வில்லியம் ஹார்வி (William Harvey) என்ற இங்கிலாந்து மருத்துவர் 1628-இல் வெளியிட்ட ‘விலங்குகளின் இதய இரத்த உடற்கூறு இயங்கியல்’ (The Anatomical Function of the Movement of the Heart and the Blood in Animals) என்ற புத்தகம் உடலியங்கியலின் வரலாற்றில் மிக முக்கியமான புத்தகமாக இன்றும் கருதப்படுகிறது. கிளிஞ்சல், நத்தை முதல் நாய், பன்றி வரை அனனத்து விலங்குகளையும் அறுத்துப் பார்த்து இதயம் இரத்தத்தை உடலில் மாறாத பாதையில் தொடர்ந்து உந்தி சுற்றச் செய்கிறது என்பதை சந்தேகத்திடமின்றி நிரூபணங்களுடன் விளக்கினார் ஹார்வி. ‘ஏதோ ஒரு சக்தி’ இரத்தம் மூலம் சுற்றி வருகிறது என்று அறிந்திருந்தாரே தவிர அது எது என்றோ (ஆக்ஸிஜன் அப்போது கண்டறிப்பட்டிருக்கவில்லை), முக்கியமாக இரத்த நுண்குழாய்களையும் அவர் அறிந்திருக்கவில்லை.

நீர் நிரம்பிய கண்ணாடி லென்ஸ் பயன்படுத்தப்பட்டதை கி.மு. 424-லியே அரிஸ்டோபேன்ஸ் (Aristophanes, 446- 386 BC) என்ற கிரேக்க ஹாஸ்ய நாடக ஆசிரியரும் செனகா (Seneca the Younger, first BC – 65 AD) என்ற கிரேக்க அறிஞரும் பதிவுசெய்திருந்தாலும், ஆடியியலின் (optics) முன்னோடிகளுள் ஒருவரான இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஜர் பேகன் (Roger Bacon), 1267-ல் பார்வை குன்றிய வயதானவர்கள் படிக்க கண்ணாடிப் படிகங்களைப் பயன்படுத்தலாம் என்று சொல்லியிருந்தாலும், உருப்பெருக்கி மற்றும் ஒற்றைக் கண் கண்ணாடிகள் (மூக்குக் கண்ணாடி அல்ல!) இத்தாலியிலும் இங்கிலாந்திலும் 13-ஆம் நூற்றாண்டிலேயே புழக்கத்தில் இருந்தன என்றாலும், கலிலியோ தன் முதல் தொலைநோக்கியை வடிவமைத்துப் பயன்படுத்தி, அதைப் போன்ற ஒரு கருவி நுண்ணிய பொருள்களைப் பெரிதுபடுத்தி தெளிவாகப் பார்க்கப் பயன்படும் என்று ஆருடம் சொல்லியிருந்தாலும், ஹார்வி இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1661-ல் மார்ஸலோ மால்பிஜி (Marcello Malpighi) என்ற இத்தாலிய மருத்துவர் பொலோனா (Bologna) என்ற ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மலைகுன்றில் ஒரு மாலைப் பொழுதில் ஏறி நின்று, ’இது ஒரு பொன்மாலைப் பொழுது’ -என்று உணர்ச்சி வசப்பட்டு பாட்டுப் படிக்காமல், சிறு படலங்களாகச் சீவிய தவளையின் நுரையீரலை மாலைச் சூரியனின் ஒளியில் உருப்பெருக்கும் கண்ணாடியில் வைத்துப் பார்த்து அதில் இரத்தம் நிரம்பிய தந்துகிகள் என்று அழைக்கப்படும் இரத்த நுண்சிறு குழாய்கள் (blood capillaries) இருப்பதைக் கண்டுபிடித்தது, உயிரியல் ஆராய்ச்சியில் உருப்பெருக்கக் கண்ணாடியின் முக்கியத்துவத்தை பிற்காலத்தில் வந்த விஞ்ஞானிகளுக்கு உணர்த்தியதோடு, இரண்டு உருப்பெருக்கக் கண்ணாடிகளை ஒரு இரும்புக் குழாயில் அசையாமல் இறுத்திப் பொருத்தி நுண்ணோக்கிகள் வடிவமைக்கும் தொழில் நுட்பம் பின் நாளில் தோன்றவும் வழி வகுத்தது என்பதால், உயிரியலின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும் [அ.கு-1].

1665-ல் ராபர்ட் ஹூக் (Robert Hooke) என்ற இங்கிலாந்துக்காரர் தக்கையின் மெல்லிய சீவல்களை நுண்ணோக்கியில் வைத்துப் பார்த்து, தான் கண்டறிந்ததைவைகளை விளக்கி மைக்ரோகிராபியா (Micrographia) என்ற நூலை எழுதினார்.[10] தக்கையில் காணப்பட்ட தேன் கூடு போன்ற ஆழமற்ற சிறு அறை போன்ற வடிவ அமைப்புகளை ’சிறுஅறை’ அதாவது ஸெல் (cell) என்று அழைத்தார். (தக்கையில் இருந்த இறந்த தாவர ஸெல்களின் ஸெல் சுவர்களே இவை.) நவீன உயிரியலில் இன்று அதிகமாகப் பயன்படுத்தப்படும் சொல்லாகிய ஸெல் எனும் சொல் தோன்றியதன் கதை இதுவே. பேன், உண்ணி (flea), ஆகியவற்றை நுண்ணோக்கிப் பார்த்து வரைந்த பல படங்கள் அந்தப் புத்தகத்தில் உள்ளன. [அ.கு-2]

verkportraitதுணி வியாபாரம் செய்யும் ஆன்டன் வான் லீவன்ஹாக் (Anton Van Leeuwenhoek) என்ற டச்சுக்காரர் 1674-இல் ஒருநாள் படகில் சவாரி போய்விட்டுத் திரும்பியபோது கொண்டுவந்த தண்ணீரை, ஒரு கண்ணாடிக் குப்பியில் ஊற்றி எண்ணெய் விளக்கை ஒளி ஆதாரமாகக் கொண்டு தானே வடிவமைத்து உண்டாக்கிய நுண்ணோக்கியில் பார்த்து அதுவரை வெறும் கண்ணால் பார்க்க முடியாத நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து அவற்றுக்கு ’உயிரித்துணுக்குகள்’ (animalicule) என்று பெயரிட்டார். பிற்பாடு இவை நுண்ணுயிரிகள் (microorganisms) என அறியப்பட்டன. உயிருள்ள ஒரு பொருளை முதன் முதலில் நுண்ணோக்கிய பெருமை, அண்ணல் லீவன்ஹாக்கையே சாரும்.

லீவன்ஹாக் உருப்பெருக்கிக் கண்ணாடிகளைத் தயாரிப்பதில் கில்லாடியாக இருந்தார்.[அ.கு-3] உருப்பெருக்கக் கண்ணாடிகளைத் தயாரிக்க புதிய முறையைக் கண்டுபிடித்து அவைகளைப் பயன்படுத்தி, தானே நுண்ணோக்கிகளைத் தயாரித்து எச்சிலில் இருந்த பாக்டீரியா, முகச்சவரம் செய்த முடி, இரத்தத்தின் சிவப்பணு, குளத்துத் தண்ணீரில் இருந்த புரோட்டோஸோவா (protozoa), பச்சைப்பாசி (algae), ஈயின் கண், மீனின் செதில், தவளையின் உடல், வீட்டில் இருந்த காப்பிக் கொட்டை, நாயின் விந்து (இதற்காக கண்டனத்துக்கும் ஆளானார்) – என்று கைக்குக் கிடைத்த பலதையும் நுண்ணோக்கிப் பார்த்து அவற்றின் வடிவ அமைப்புகளை விவரித்து கட்டுரைகள் எழுதி வாசகர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தினார். ஏறக்குறைய 250 நுண்ணோக்கிகளை இவர் உருவாகியதாகக் கருதப்படுகிறது. லீவன்ஹாக் தொழில் ரீதியாக விஞ்ஞானியாக இல்லாவிட்டாலும் லண்டனிலிருந்து வெளிவரும் ராயல் சொஸைட்டியின் பிரசுரங்களில் இவர் கண்டுபிடிப்புகள் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றன. ஒருநாள் காலையில் சூடான காப்பியைக் குடித்தபிறகு தன் பல்லின் பற்காரையில் (tartar) உள்ள கிருமிகள் அசைவற்று ஆகிவிடுவதன் மூலம் அவை இறந்து விடுவதைக் கண்டறிந்து தனியே இன்னொரு பரிசோதனையில் வெந்நீர் மூலம் கிருமிகளைக் கொல்ல முடியும் என்பதையும் லீவன்ஹாக் நிரூபித்தார்.

கொதிக்க வைப்பதன் மூலம் நுண்ணுயிரிகளைக் கொல்ல முடியும் என்பது அறியப்பட்டாலும் அவை காற்று முதல் நீர் வரை எல்லா இடத்திலும் இருக்கக் கூடும் என்பது, 1660-களில் கூட பெரும்பாலானோர் அறியாததாகவே இருந்தது. உயிரற்ற பொருள்களிலிருந்து உடனடியாக தானகவே திடீரென உயிரிகள் தோன்ற முடியும் என்ற நம்பிக்கை இன்னமும் பரவாலாக இருந்தது. காட்டாக, இறைச்சியிலிருந்து புழுக்கள் திடீரெனத் தானாகவே தோன்றுகின்றன என்றும், தானாகவே திடீரென நுண்ணுயிரிகள் தோன்றி விடுவதே சூப்பு உணவுகள் (broth) கெட்டுப் போவதற்குக் காரணம் என்றும் ஐரோப்பா முழுதும் நம்பப்பட்டது.

பிரான்ஸிஸ்கோ ரெடி (Francesco Redi) என்ற இத்தாலிய மருத்துவர் 1668-இல் ஒரு உருப்படியான பரிசோதனையைச் செய்தார். அழுகிய இறைச்சியிலிருந்து ஈக்கள் தோன்றுகின்றன என்ற நம்பிக்கையை பரிசோதிக்க, இறைச்சியை ஈக்கள் உட்காராதவாறு மெல்லிய சல்லாத் (மஸ்லின்) துணியால் மூடிவைத்தால் அந்த இறைச்சி அழுகிய பிறகும் அதிலிருந்து ஈக்கள் உண்டாவதில்லை என்று கண்டுபிடித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஈக்கள் இறைச்சியில் இட்ட முட்டைகளிலிருந்துதான் புழுக்கள் உண்டாகின்றன என்பது இதன் மூலம் நிரூபணமாகியது.

1718-ல் வான் லீவன்ஹாக்கின் மாணவரான லூயி ஜொப்லோ (Louis Joblot) காற்று வழியாகத்தான் நுண்ணுயிரிகள் பரவுகின்றன என்று கண்டறிந்திருந்தாலும் அதைப் பெரும்பாலனோர் ஏற்றுக் கொள்ளவில்லை. உலகின் உயிரற்ற எல்லாப் பொருள்களிலும் ‘உயிர் சக்தி’ நிரம்பியுள்ளது. ஆகவே, காற்றிலிருந்து நுண்ணுயிரிகள் தானாகவே தோன்ற முடியும் என்று நம்பியதால், 1745-ல் ஜான் நீடம் (John Needham) என்ற ஸ்காட்லாந்துப் பாதிரியார் பிரான்ஸிஸ்கோ ரெடியின் கண்டுபிடிப்பை நம்பவில்லை.

நன்றாகக் கொதிக்க வைத்த இரவு உணவு சூப்பை (குடித்து விட்டு தூங்கப் போகாமல்) நுண்ணுயிரிகள் இல்லாத சுத்தமான புட்டிகளில் அடைத்து கார்க் மூடியால் மூடிய பிறகும் கூட அதில் அடைக்கப் பட்ட சூப் நுண்ணுயிரிகள் வளர்வதால் கலங்கி கெட்டுப் போவதைச் செய்து காண்பித்தார் ஜான் நீடம். இதில் உடன்பாடில்லாதவர்கள் கூட, சோதித்துப் பார்த்து ஒத்துக் கொள்ளும்படி ஆகிவிடவே, உயிரிகள் உயிரற்ற பொருள்களிலிருந்து தானாகவே திடீரெனத் தோன்ற முடியும் என்ற கருத்து ஒரு சாராரிடம் வலுப்பட்டு அதன் பிறகு ஏறக்குறைய 25 வருடங்களுக்கு நீடித்திருந்தது.

1768-ல் லசாரொ ஸ்பலன்ஸனி (Lazzaro Spallanzani) என்பவர் நீடமின் பரிசோதனையில் உள்ள குறையை யோசித்துப் பார்த்துக் கண்டுபிடித்தார். வேகவைத்த சுத்தமான சூப்பை சுத்தமான குடுவையில் அடைத்தாலும் அப்படி அடைக்கும்போது காற்றில் உள்ள கிருமிகளினால் ஏற்படும் தொற்றுதான் சூப்பு கெட்டுப் போவதற்குக் காரணம் என்றும் காற்றுப்படாமல் அடைத்து சூப்பைக் கொதிக்க வைத்தால் கெட்டுப்போகாது என்றும் அவர் அறிந்திருந்தார். அடைக்கப்பட்ட குடுவையில் (வெடித்து விடாமல் இருக்க காற்றை நீக்கி) கொதிக்க வைக்கப்பட்ட சூப் கெடாமல் இருப்பதை பரிசோதனையாகச் செய்தும் காண்பித்தார். இதைப் பார்த்துவிட்டு, ‘காற்றை நீக்கி விட்ட பிறகு சூப் கெடாமல் இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? காற்றிலிருந்து தானே உயிரிகள் தோன்றுகின்றன’ என்றனர் நீடமும் ‘தானாகவே உயிரிகள் தோன்றுகின்றன’ சித்தாந்திகளும். இதனால் நீடம், ஸ்பலன்ஸனி இருவருக்குமிடையே கடும் விவாதம் எழுந்து நீண்டு வளர்ந்தது.

1837-இல் சர்லஸ் டிலா டூர் (Charles Cagniard de la Tour) என்ற பிரெஞ்சு மருத்துவரும் தியோடர் ஸ்வான் (Theodor Schwann) என்ற ஜெர்மானிய விஞ்ஞானியும் பியரைக் குடித்துவிட்டு நைட்ஷோ போகாமல் பியர் நுரையை நுண்நோக்கியில் வைத்துப் பார்த்து அதில் ஈஸ்ட் (yeast) உயிரிகள் இருப்பதை (தனித்தனியே) கண்டுபிடித்தனர். சிறு கோளங்கள் போன்ற இவை ஒன்று இரண்டாகப் பிரிந்து பெருகுவதையும் ‘ஈஸ்ட் இல்லையேல் பியர் இல்லை’ என்பதையும் கண்டுபிடித்தனர்.

இருந்தும் ‘தானாகவே உயிரிகள் தோன்றுகின்றன’ சித்தாந்திகள் இதை அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாததால் ‘நுண்ணுயிரிகள் திடீரென தானகத் தோன்ற முடியுமா இல்லையா?’ என்ற விவாதம் நீண்டு வளர்ந்து பரவலாகி பிரபலமாகியது. 1860-இல் பிரெஞ்சு விஞ்ஞானக்கழகத்திலும் எழுந்த இந்த விவாதம் கடுமையாகி முடிவுக்கு வராமல் போகவே, கடைசியில் ‘தானாகவே உயிரிகள் தோன்றுகின்றனவா இல்லையா?’ என்பதைப் பரிசோதனை மூலம் சந்தேகமின்றி நிரூபிப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என்று திருவிளையாடல் படத்தின் பாண்டிய மன்னன் மாதிரி பிரெஞ்சு அறிவியல் அழகம் உண்மையிலேயே ஒரு அறிவியல் போட்டியை அறிவிக்கும்படி ஆயிற்று.

(இன்னும் வரும்)

உதவியவை & மேலும் படிக்க:

1. ரிக் வேதம், Wilson, H.H., 1866, Edited by N.Trubner and co., London. இங்கே தரவிறக்கம் செய்யலாம்.
அதர்வ வேதம், இங்கே தரவிறக்கம் செய்யலாம்.
2. Macdonell, A.A.,
3. Macdonell, A.A., 1900. A History of Sanskrit literature. இங்கே தரவிறக்கம் செய்யலாம்.
4. Gardner, E.J., 1972. History of biology, p13-14, Burgess publishing company, Minneapolis.
5. Hamilton Bower Manuscript
English translation from Dutch இங்கே தரவிறக்கம் செய்யலாம்.
6. ஹொன்லெ, Hoernle, Augustus Frederick Rudolf: philologist of Indian languages.
7. Kansupada, K.B., and Sassani, J.W., 1997. Sushruta: The father of Indian surgery and ophthalmology, Documenta ophthalmologica, 93: 159-167.
8. Valiathan, M.S., 2007. The legacy of Susruta, Orient Longman, 160 Anna salai, Chennai.
9. சுருக்கம் கருதி பண்டைய சீன, மெசபடோமிய, எகிப்து. பெர்ஸிய, அரேபிய சிந்தனைகள் இங்கு இடம்பெறவில்லை.
10. Robert Hooke, 1665, Micrographia: or Some Physiological Descriptions of Minute Bodies Made by Magnifying Glasses, Royal Society of London. இங்கே தரவிறக்கம் செய்யலாம்.

அடிக்குறிப்புகள்:

[அ.கு-1] கேள்வி: தலா 1437 எழுத்துக்கள் மற்றும் 175 வார்த்தைகளைக் கொண்டு, பின்நவீனத்துவ வாடையடிக்காத ஒரு சொற்றொடரை, நண்பர் எக்ஸுக்கும் புரியும்படி தமிழில் எழுத முடியுமா? பதில்: முடியும், இந்தப் பத்தியே ஒரு எடுத்துக்காட்டு. (கோணங்கியின் பாழி நாவலை பத்து வருசத்துக்குப் பிறகு மீண்டும் படித்துப் பார்த்ததன் விளைவு).

[அ.கு-2] இப்புத்தகத்தில் அறிவியலைத் தவிர இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் 1665-ஆம் ஆண்டு வழக்கப்படி அரசருக்கு ராபர்ட் ஹூக் எழுதியிருக்கும் அர்ப்பண உரை. “மிகவும் பணிவுடன் தங்கள் அரச பாதங்களின் கீழ் இந்தச்சிறிய காணிக்கையை சம்ர்ப்பிக்கிறேன்” ……மாட்சிமை பொருந்திய தங்களின் மிகவும் பணிந்த, மற்றும் மிகவும் கீழ்ப்படிந்த குடிமகனும் பணியாளனுமாகிய (Your Majesties most humble and most obedient subject and servant)….ராபர்ட் ஹுக்.

[அ.கு-3] தான் லென்ஸ் தயாரிக்கும் முறையை லீவன்ஹாக் எவரும் அறியாத ரகசியமாகவே வைத்திருந்தார். சுத்தப்படுத்திய கண்ணாடி நார் இழைகளை சூடாக்கி உருக்கி இணையவைத்து லென்ஸ் தாயரித்தார் என்று பின் நாளில் அறியப்பட்டது.

[அ.கு-4] உயிர், உடல் பற்றிய தொன்மையான, அசலான சிந்தனைகள் என்பதற்காகவே சுஸ்ருதரையும் சம்ஹிதையையும் குறிப்பிட நேர்ந்தது. மற்றபடி, ஆயுர்வேத மருந்து வியாபாரிகளுடன் எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை பகிரங்கமாகவே அறிவித்துவிடுகிறேன்.

[அ.கு-5] இதில் சுட்டிய ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பதிவேற்றினால், காப்பிரைட் சட்டம் பாய்ந்து என்னைக் கைது செய்ய ஆள் அனுப்பிவிடுவார்கள். இதில் சுட்டிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் (புத்தகங்கள் நீங்கலாக), தேவைப்படும் வாசகர்கள் venu.biology@gmail.com என்ற முகவரிக்கு எழுதலாம். தவிர பின் இணைப்பில் காணும் புத்தகங்களை தரவிறக்கம் செய்வது சட்டப்படி அனுமதிக்கப்பட்டதே.

[அ.கு-6] இக்கட்டுரை முற்றிலும் பின் இணைப்பில் கண்ட ஆங்கில மூலங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இதில் பிழை காணும் நண்பர்கள் தகுந்த ஆதாரங்களுடன் மறுத்து சொல்வனம் ஆசிரியருக்கு எழுதலாம்.

—————–

வேணுகோபால் தயாநிதி

நன்றி-சொல்வனம்

குஷி தரும் குழிப்பணியாரம்

குழந்தைகள் பள்ளிவிட்டு வரும் பொழுது இட்லி அல்லது தோசை டிபன் இருந்தால் அது அவர்களுக்கு அவ்வளவு சுவாரசியமாக தெரியாது. அதே இட்லி மாவை குழிப்பணியாரத் தட்டுக்களில் ஊற்றி குழிப்பணியாரங்களாக செய்து வைத்திருந்தால் குழந்தைகள் குஷியுடன் உண்பார்கள்.

குழிப் பணியாரங்களை மேலும் விருப்பமான ஒன்றாக மாற்ற, மாவுக் கலவையில் சட்னி தொக்கு, ஜாம் போன்றவற்றைக் கலந்து சுவையும், சுவாரசியமுமாக தயாரிக்கலாம். இதனால் சத்தும், சுவையும் கூடுவதுடன் பல்வேறு வண்ணங்களிலும் பணியாரம் இருக்கும். இதை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

பயணம் செய்பவர்கள் இம்முறையில் குழிப்பணியாரம் செய்தால் தொட்டுக் கொள்ள `சைடு-டிஷ்’ எதுவும் செய்ய வேண்டிய தேவையில்லை. பயணத்தின்போது உண்பதற்கும் மிகவும் சவுகரியமாக இருக்கும்.

பலவண்ணங்களில், புதுசுவை நிறைந்த குழிப்பணியாரம் எப்படி செய்வதென்று பார்ப்போமா…

தேவையான பொருட்கள்

இட்லி மாவு – 5 கப்
தக்காளித் தொக்கு – 2 டேபிள் ஸ்பூன்
பழ ஜாம் (மிக்ஸ்டு புரூட்ஸ்) – 2 டேபிள் ஸ்பூன்
வெல்லச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
வதக்கிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி சட்னி – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணை – 10 டேபிள் ஸ்பூன்

செய்முறை

* வெல்லத்தைப் பொடியாக நறுக்கி சிறிது நீர் சேர்த்து கெட்டியாகக் கொதிக்கவிட்டு உலோக வடிகட்டியில் தூசு நீங்க வடிகட்டி வெல்லச்சாறு தயாரிக்கவும்.

* நான்ஸ்டிக் தவாவில் சிறிது எண்ணை ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம் உப்பு சேர்த்து நன்கு வதக்கி எடுத்து வைக்கவும்.

* இட்லி மாவை 5 கப்களில் ஊற்றவும். 1 கப் இட்லி மாவில் தக்காளித் தொக்கும், இன்னொரு கப்பில் பழ ஜாம், ஒன்றில் வெல்லச்சாறு, ஒன்றில் வதக்கிய வெங்காயம், ஒன்றில் புதினா, கொத்தமல்லி, சட்னி என்று சேர்த்துக்கொள்ளவும்.

* குழிப் பணியார நான்ஸ்டிக் பாத்திரத்தில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணை ஊற்றி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கலவை மாவை குழியின் பாதியளவு இருக்கும் வரை ஊற்றி மெல்லிய தீயில் அடுப்பை எரியவிடவும். பணியாரங்கள் ஒருபக்கம் வெந்தவுடன் திருப்பி மறுபக்கம் வேகவிட்டு எடுக்கவும்.

* பல வண்ணங்களுடன் மிளிரும் சுவையான குழிப்பணியாரங்கள் தயார்.

கீதா பாலகிருஷ்ணன்

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்

ஜாதகம், குடும்பம், கோத்திரம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும் திருமணங்கள், திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

இன்னொரு புறத்தில் 30 வயதை கடந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள் நண்பர்களுக்குள், `என்னடா நேத்து போன இடம் என்ன ஆச்சு? என் கதையும் உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என்னை வேண்டாம்னு சொல்லிட்டா! நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங்கிறது..` என்று தங்களுக்குள் போன் போட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர்களின் அம்மாக்கள் நிலை அதைவிட மோசம். நெல்லையில் இருந்து சென்னைக்கு போன் போட்டு, `எங்கேயாவது நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க.. பையனுக்கு வயது ஏறிட்டே போகுது!’ என்று கவலைப்படுகிறார்கள்.

இதைவிட எல்லாம் அதிர்ச்சியான விஷயம். பெண் பார்த்து பேசி முடிவு செய்து, நிச்சயதார்த்தம் முடிந்த பின்பும் மாப்பிள்ளை வீட்டார் தினமும் தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்திலும் பெண் வீட்டில் இருந்து போன் வரலாம். `கல்யாணத்தில் விருப்பமில்லை. நிறுத்திடுங்கோன்னு `குண்டு போடலாம்’ என்று பயந்து போயிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

சமூக ஆர்வலர் பார்வதி பாலசுப்பிரமணியன் சொல்கிறார்…

“இளம்பெண்களிடம் சுயநலம் மிகுந்துவிட்டது. மாமனார், மாமியார், மைத்துனர், நாத்தனார்கள் எல்லாம் இருக்கக்கூடாது. கணவர் மட்டுமே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் திருமணம் செய்துகொள்ள அவள் சம்மதித்தாலும் `திருமணம் ஆனதும் இன்னொரு ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டு போய்விட வேண்டும்’ என்று தூரத்தில் தனிக்குடித்தனம் நடத்த நிபந்தனை போடுகிறாள்.

பெண்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதனால் நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அனுசரிக்கவும் வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள். அதை பெண்களின் தன்னம்பிக்கை என்று சொல்வதா அல்லது அடாவடித்தனம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. பெற்றோரும் மகளின் வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருப்பதால் மகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களால் கருத்துசொல்ல முடியவில்லை. அதனால்தான் முதிர்கன்னிகள் அதிகரித்து வருகிறார்கள்.

பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிடம், `வீட்டில் சமைக்கணும்’ என்று சொன்னால், அவள் கேட்டாலே கெட்ட வார்த்தையை கேட்டதுபோல் துடித்துப்போகிறாள். `என் அம்மாவுக்கே நான் சமையல் செய்து போட்டதில்லை. மாமியாருக்கு ஏன் சமைத்து போடவேண்டும்?` என்று கேட்கிறாள்.

இப்போது பெண்கள் ஒவ்வொரு வரனையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள். அதனால் வீட்டுக்கு பெண் பார்க்க வரவேண்டாம் என்று கூறிவிடுகிறார்கள். அவர்கள் வீட்டிற்கும்- பையன் வீட்டிற்கும் நடுவில் இருக்கும் `காபிடே` க்கு வரச்சொல்கிறார்கள். அங்குதான் பெரும்பாலும் பேச்சு நடக்கிறது. அங்குதான் முதன் முதலில் பார்க்கிறார்கள். கோவில்களில் பெண் பார்த்த காலம் போய், காபி ஷாப்களில் பார்க்கும் நிலையில் இன்றைய கல்யாணத்தின் மரியாதை கட்டெறும்பாக தேய்ந்து போய்க்கொண்டிருக்கிறது.

என் உறவுக்கார பையன் ஒருவன் பிரபலமான வெளிநாட்டு வங்கி ஒன்றில் வேலைபார்க்கிறான். அவனுக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை. ஒருமுறை அவனது வங்கிக்கு போன நான் அங்கே அழகழகான பெண்கள் இருப்பதை பார்த்துவிட்டு, `அவர்களில் யாரையாவது காதலித்து கல்யாணம் செய்துகொள்ளேன்’ என்றேன். உடனே அவன், `இந்த பெண்களுக்கு உடைகளும், லிப்ஸ்டிக்கும் வாங்கிக்கொடுத்து ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் செல்வதற்கே என் சம்பளம் போதாது. திருமணம் முடிந்த பின்பும் அவர்கள் சம்பளத்தை அப்படியே வங்கியில் சேமித்துவிடுவார்கள். நம்ம சம்பளத்தில்தான் எல்லாம் நடக்கும். அதனால் நான் காதலிக்கவே மாட்டேன்’ என்று கூறிவிட்டான். இப்போதும் அவனுக்கு பெண் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போது திருமணம் நடக்குமோ தெரியவில்லை..”- என்கிறார், அவர்.

“திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம் நான், `சமைக்கத் தெரிந்த, பொறுப்பாக உங்கள் பெற்றோரைக் கவனித்துக்கொள்ளக்கூடிய, உங்கள் மீதும் அதிக அக்கறை செலுத்தக்கூடிய பெண் தேவையா? அதிகமாக சம்பாதிக்கும் டீகூட போடத் தெரியாத பெண் தேவையா?` என்று கேட்டேன். அவர் என்னைப் பார்த்து, `என்ன மேடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டீங்க. என்னை கவனிச்சுக்கிறது, பெற்றோரை கவனிச்சிக்கிறது எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. பணம் ரொம்ப முக்கியம். அதனால வேலைக்கு போய் நிறைய சம்பளம் வாங்குகிற பெண்தான் வேண்டும்` என்றார். இப்படி ஆண்கள் பணத்தை அடிப்படையாக வைத்து பெண் தேடுவதுபோல், பெண்களும் பணத்தை அடிப்படையாக வைத்துதான் மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இளைஞர்கள், `அம்மாவைப் போல் கவனித்துக்கொள்ளும் பெண் தேவை’ என்கிறார்கள். அவர்கள் என்ன தப்பு செய்தாலும் அதை எல்லாம் அம்மா தாங்கிக்கொண்டு அனுசரித்துப்போவாள். அதுபோல் தன் மனைவியும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த நிலை இப்போது அப்படியேமாறி பெண்களும், `எங்களை அப்பா நன்றாக கவனித்துக்கொள்கிறார். அதனால் அப்பா போன்று பாதுகாக்கும் மாப்பிள்ளை வேண்டும்` என்கிறார்கள். இங்குதான் நெருக்கடி உருவாகிறது. அம்மா மாதிரி பெண்ணும் கிடைக்கமாட்டாள். அப்பா மாதிரி மாப்பிள்ளையும் கிடைக்கமாட்டார்.

பெற்றோரின் நிர்ப்பந்தம், வரனின் அழகு, வருமானம், அவருடைய குடும்பம் போன்றவைகளை எல்லாம் பார்த்து முதலில் பெண் நிச்சயதார்த்தத்திற்கு சம்மதித்துவிடுகிறாள். பின்பு திருமணத்திற்கு முந்தைய கால இடைவெளியில் பையன், பெண் இருவரும் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள். அப்போதுதான் அவளது சிந்தனை பல்வேறு விதங்களில் விரிகிறது. இருவருக்கும் இடையே பொருத்தமில்லாமல் முரண்பாடாக இருக்கும் விஷயங்களை அவள் ஆழ்ந்து கவனிக்கிறாள். அவைகளை திருமணத்திற்கு பின்பு சரிசெய்து விடலாம் என்று பெண்கள் `ரிஸ்க்’ எடுக்க தயார் இல்லாததால், நிச்சயதார்த்தம் முடிந்தாலும் திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள்.

இன்றைய பெண்கள் அவர் களே சம்பாதித்து தன் பெற்றோருக்கும் கொடுக்கும் நிலையில் இருப்பதால் அவளுக்கு பிடிக்கவில்லை என்றால், `உடனே நிறுத்திவிடுங்கள்’ என்று உத்தரவிடுகிறாள். பெற்றோருக்கு அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்றாகிவிட்டது.

முன்பெல்லாம் சமூக அந்தஸ்து, சமூக பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, நல்ல துணை கிடைத்தல், சட்டரீதியான செக்ஸ் தேவை ஈடேறுதல் போன்றவை எல்லாம் பெண்களுக்கு திருமணத்தின் மூலம்தான் கிடைத்தது. இன்று அவை அனைத்தும் திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது என்று சொல்வதற்கில்லை.

பெண்கள் கல்யாணத்தை தவிர்க்க அல்லது கல்யாணத்தைப் பற்றி பயப்பட நிறைய காரணங்கள் இருக்கின்றன. கல்யாணம் செய்துகொண்டால் நிறைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியதிருக்கும். நிறைய கடமைகள் தங்களுக்கு வந்துவிடும் என்று நினைத்து திருமணத்தை தவிர்க்கிறார்கள். இதற்கு `கமிட்மென்ட் போபியா’ என்று பெயர்.

ஒரு சில இடங்களில் தங்களுக்கு வரதட்சணை எதுவும் தேவையில்லை என்று சொல்லும் பையன் வீட்டார், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு `அது கிடைக்குமா.. இது கிடைக்குமா?’ என்று பெண்வீட்டாரிடம் கேட்கத் தொடங்குவார்கள். அதனால் வெறுப்படைந்துபோய் திருமணத்தை நிறுத்திவிடும் பெண்களும் உண்டு. நிச்சயதார்த்தம் நடந்த பின்பு திருமணம் நடக்காமல் போக, பெண்கள் மட்டும் காரணம் அல்ல. ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள்.

சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டிருந்தால்- செக்ஸ்ரீதியான கசப்புகளை சந்தித்திருந்தால்- தாம்பத்ய வாழ்க்கைக்கு தான் பொருத்தமானவள் இல்லை என்று பெண்கள் கருதினால்- அவர்கள் திருமணத்தினை தவிர்த்துவிடுகிறார்கள். அத்தகைய பாதிப்புகள் அனைத்துமே சரிசெய்யக்கூடியவை” -என்கிறார், சூர்யா ஆஸ்பத்திரியின் மனோதத்துவ ஆலோசகர் பிரீத்தி ராவ்.

***

* சம்பவம் ஒன்று: 26 வயதான அழகான அந்த பெண்ணுக்கும், 30 வயதான அஜீத் சாயல் இளைஞனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. விறு விறுப்பாக மணவிழா அழைப்பிதழை வழங்கிக் கொண்டிருந்த மணமகன் வீட்டாரை, முகத்தை தொங்கபோட்டபடி சந்திக்க வந்திருந்தார், மணப் பெண்ணின் அப்பா.

“மன்னிச்சிடுங்க..! நேற்று திடீர்னு என் மகள் `கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்கன்னு` சொன்னாள். காரணத்தைக் கேட்டோம், `உங்க பையனை கட்டிக்கிட்டா அவளோட திருமண வாழ்க்கை தோல்வி யில் முடிஞ்சிடும்ன்னு அவ உள்ளுணர்வு சொல்லுதாம். அழுறாள்… ஆர்ப்பாட்டம் பண்றாள். அவள் எதுவும் தப்பான முடிவு எடுத்திடக்கூடாது. எனக்கு என் பொண்ணு முக்கியம். எப்படியாவது கல்யாணத்தை நிறுத்திடுங்கோ” என்று அவர் கையெடுத்து கும்பிடுகிறார். கல்யாண ஏற்பாடுகள் அப்படியே நிறுத்தப்படுகின்றன.

** சம்பவம் இரண்டு: இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். பரஸ்பரம் இருவரும் பார்த்து பேசி `ஓ.கே’ சொன்ன பிறகுதான் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு இருவரும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தனர். நேரடியாக சந்தித்து பழகவும் செய்தார்கள். அன்று இருவரும் ரசித்து, ருசித்து காபி அருந்திக்கொண்டிருந்தபோது பையன், `நீ காபி பைத்தியம். உன்னை மாதிரி என் அம்மாவும் காபி பைத்தியம். நம்ம கல்யாணத்திற்கு பிறகு தினமும் காலையில் என் அம்மாவுக்கு ஒரு கப் காபி போட்டுக் கொடுக்கவேண்டியது உன் பொறுப்பு’ என்றிருக்கிறான். உடனே அவள் முகம் இறுகிவிட்டது.

மறுநாள் காலையில் தன் வருங்கால கணவருக்கு போன் செய்த அவள், `ப்ளீஸ் நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். நீங்களும், உங்க அம்மாவும் என்னை உங்க வீட்டு சமையல் அறையில் அடைக்கிறதுக்கு முயற்சி பண்றீங்க! நான் உங்க அளவுக்கே படிச்சிருந்தாலும், உங்களை விட அதிகமாக மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். இப்பவே என்னை சமையல் வேலை பார்க்க சொல்றீங்களே, கல்யாணத்திற்குப் பிறகு என்னவெல்லாம் சொல்வீங்க..? வேண்டாம்.. இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம்’ என்றாள். அவர்கள் இருவருக்கும் செல்போனிலே வார்த்தைகள் தடிக்க அவ்வளவுதான் அந்த கல்யாணம் அப்படியே ரத்து செய்யப்பட்டுவிட்டது.

*** சம்பவம் மூன்று: சென்னையில் உள்ள `காபி டே` ஒன்றில் இரு குடும்பத்தாரும் சந்தித்தார்கள். பெண், மாப்பிள்ளை பையன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். ஐந்து நிமிட பேச்சுக்கு பிறகு, `உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து இருக்கிறது. உங்கள் பெயரில் என்னென்ன இருக்கிறது. நமது திருமணத்திற்கு முன்பே உங்கள் பங்கு சொத்துக்களை எல்லாம் பிரித்து வாங்கிவிடவேண்டும். திருமணத்திற்கு பின்பு நாம் வாங்கும் சொத்துக்களை எல்லாம் என் பெயருக்குத்தான் வாங்கவேண்டும். சம்மதமா?’ என்று கேட்க, அந்த இளைஞன் பக்கத்து டேபிளில் இருந்த தன் தாயாரிடம் இதைச் சொல்லத் தயங்க, அந்த தயக்கத்தைக்கூட அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் பில்லுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு எழுந்து போய்விட்டாள். அதோடு அந்த பேச்சுவார்த்தை முடிந்தது.

***

தட்டிக்கழிக்க பல காரணங்கள்…

“இன்றைக்கு நல்ல வரன்களைக்கூட மிகச் சாதாரண விஷயத்திற்காக, பெண்கள் வேண்டாம் என்று தட்டிக்கழித்து விடுகிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு, மாப்பிள்ளை பையன், தன் வருங்கால மனைவியிடம் `நேற்று மாலையில் எங்கே போயிருந்தாய்?’ என்று கேட்டிருக்கிறான், அவள் ஷாப்பிங் போனதாக கூறியுள்ளாள். `யாருடன் போனாய்?’ என்று அவன் யதார்த்தமாக கேட்க, `நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க..!

இப்படி சில்லரைத்தனமா கேள்வி கேட்கிறவங்களை எல்லாம் எனக்கு பிடிக்காது. ரொம்ப ப்ராட்மைன்டட் பையன்தான் எனக்கு வேணும்’ என்று கூறி திருமணத்தை நிறுத்திவிட்டாள். திருமணமாகாத பல இளம்பெண்கள், `எங்களுக்கு லைப்லேயே பிடிக்காத வார்த்தை `காம்ப்ரமைஸ்’. நாங்கள் எதுக்காகவும், யாருக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கமாட்டோம். அப்படி ஒரு வாழ்க்கை தங்களுக்கு தேவையே இல்லை’ என்கிறார்கள்.

சில பெண்களின் அம்மாக்கள் சொல்வதைக் கேட்டால் இதைவிட வேடிக்கையாக இருக்கும். `எங்க பொண்ணுக்கு விட்டுக்கொடுத்து போகிற பழக்கம் கிடையாது. அதனால் தனிக்குடித்தனம் போகிற மாதிரி குடும்பம் இருந்தால் சொல்லுங்கள்’ என்கிறார்கள். எங்க பொண்ணு ரொம்ப `இன்டிபென்ட்டன்ட்’. யாரும் கேள்விகேட்டால் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதை மறந்திடாமல் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லிடுங்கோ’ என்று சொல்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிப்பதால், 30 வயதான பின்பும் மாப்பிள்ளை அமையாத பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது”- என்கிறார், கீதா தெய்வசிகாமணி. இவர் திருமண தகவல் மையம் நடத்துகிறார்.

“நமது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என்ற திடமான நம்பிக்கை இன்றைய பெண்களிடம் இல்லை. `எப்படி அமையுமோ?’, `சரிப்பட்டு வருதான்னு பார்ப்போம்’ என்பது மாதிரியான குழப்பங்களோடுதான் ஒவ்வொரு வரனையும் அணுகுகிறார்கள்.

ஒருவழியாக ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து கல்யாணத்தை நடத்தும்போது, இவர்களது பெற்றோர் 70 வயதைக் கடந்துவிடுகிறார்கள். இதனால் சீரும், சிறப்புமாக நடக்கவேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பின் காரணமாக தானே நடத்திக்கொள்ளவேண்டிய நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.

* கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டிவிடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவ பரிசோதனை என்று அலைச்சல், மன உளைச்சல், பணச் செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

நன்றி-தினத்தந்தி

சுழலும் இன்டர்நெட்

இணைய வைய விரிவலை உலகை வளைத்து நம் கரங்களில் தரும் சாதனமாகும். உலகம் உருண்டை போல, இணையமும் சுழல்கிறதா? ஏன், சுழலச் செய்தால் என்ன! என்ற வேடிக்கையான எண்ணம் சிலருக்கு ஏற்பட்டிருக்கும் போலத் தெரிகிறது. இதன் விளைவு, அவர்கள் இணையத்தையும் சுழல விட்டுள்ளனர்.
இதனால், நீங்கள் பார்க்கும் இணைய தளங்கள், உங்கள் கம்ப்யூட்டர் மானிட்டரில், சுழன்று காட்சி அளிப்பதனைக் காணலாம். இது ஒரு வேடிக்கையான தளம். இதன் பெயர் Revolving Internet. இது ஒரு சிறிய இணைய தளம். இதன் முகவரி http://therevolvinginternet.com. இந்த தளத்தில் நுழைந்து பாருங்களேன். இதன் ஹோம் பேஜாக, கூகுள் சர்ச் இஞ்சின் உள்ளது. அது அப்படியே சுழல்வதனைக் காணலாம். கூகுள் சர்ச் இஞ்சின் என்றால், அதில் தளங்களைத் தேடிப் பார்த்தால் என்னவாகும்? என்று எண்ணத் தோன்றுகிறதா? செய்து பாருங்கள். அவையும் கடிகாரச் சுழற்சியில் மெதுவாகச் சுழலும். அப்படியே, கம்ப்யூட்டரில் மேற் கொள்ளும் அனைத்து வேலைகளையும், சுழன்ற படியே மேற்கொள்ளலாம்.