Daily Archives: ஜூலை 7th, 2011

ஆரோக்கிய சுற்றுலா: (பூலாம்பட்டி நீர்த்தேக்கம்)

மேட்டூர் அணைக்கு தம்பி என்று சொல்லும் அளவிற்கு பரந்து கிடக்கிறது பூலாம்பட்டி நீர்த்தேக்கம்)
காவிரிக் கரையோரம் மலை அதனையொட்டி கடல் போல் தண்ணீர். தென்னை மரங்கள். கேட்கவா வேண்டும்… அளவான பசுமை, இதமான படகுப் பயணம் என அச்சு அசலாக கேரளா போலவே உள்ளது நம்ம சேலத்துப் பக்கமுள்ள பூலாம்பட்டி. இப்படியொரு அழகான இடமா என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. காவிரி, தனது பயணத்தில் மேட்டூரில் இளைபாறிவிட்டு, அடுத்த 15-வது கிலோ மீட்டரில் பயணத்தின் நடுவே டீ குடிக்க நிற்பது போல் நின்று செல்லும் இடம்தான் பூலாம்பட்டி 20 ஆண்டுகளுக்கு முன்பு பாக்யராஜ் “பவுனுபவுனுதான் படம் முழுவதையும் பூலாம் பட்டியில் எடுத்த பின்பு இந்த இடம் சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது. அந்தப்படத்திற்காக விடப்பட்ட விசைப்படகுதான் இங்கு விடப்பட்ட முதல் விசைப்படகு அதன்பிறகு விஜய்யின் நினைத்தேன் வந்தாய் அருண்பாண்டியனின் “முற்றுகை  என சினிமாக்காரர்களின் லொகேஷனாகிவிட்டது பூலாம்பட்டி. எடப்பாடியிலிருந்து நான்கு ரூபாய் கொடுத்து பூலாம்பட்டிக்கு பஸ் ஏறியதுமே தூரத்திலிருக்கும் பூலாம்பட்டி மலை அழகாக நம்மை வரவேற்கிறது. வழியெங்கும் சிற்றூர்களும் ஏரிகளும் தோப்புகளும் துரவுகளும் வந்து வந்து செல்கின்றன. மேட்டூர் அணையின் தம்பி என்று சொல்லும் அளவிற்கு பரந்துவிரிந்து கிடக்கிறது. நீர்த்தேக்கம், குளிக்க ஏற்ற இடம், உற்சாகக் குளியலுக்குப் பின் படகுச்சவாரி ஆள் ஒன்றுக்கு 30 ரூபாய். குரூப்பாக செல்பவர்கள் மொத்த படகையும் ரூ.500-க்கு வாடகை பேசி எடுத்துக் கொள்கிறார்கள். 1கி.மீ தூரத்திலுள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தை படகு அடைந்து மீண்டும் திரும்பி பூலாம்பட்டிக்கு வரும், நதியில் ஒரு கடல் பயணம் என்ற திருப்தியுடன் கரையிறங்கினால் காவிரியில் பிடித்த மீனைப் பொரித்துத் தருகிறார்கள். ஒரு கிலோ 150 ரூபாய்தான். ஆற அமர உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஒரு குளியலைப் போட்டுவிட்டு ஊர் திரும்பினால் குறைந்த செலவில்
குட்டி கேரளா சென்று வந்த திருப்தி ஏற்படும். எப்படி செல்வது?: சேலம் டூ எடப்பாடி-12ரூ, எடப்பாடி டூ பூலாம்பட்டி – ரூ.4 , தங்குவதற்கு சேலத்தில் ரூம்போட்டுக் கொள்ளலாம்.

ஹார்ட் அட்டாக் தெரியும்! இயர் அட்டாக் தெரியுமா?

கோவிலுக்கு கோபுர வாசல்கள்!
மனித முகத்துக்கு?
“வாய், மூக்கு, காது, கண் இவைதாம்!’
சிரித்தபடி சொல்கிறார், காது, மூக்கு, தொண்டை நிபுணர் பத்மஸ்ரீ டாக்டர் மோகன் காமேஸ்வரன்!
“உடம்பின் உள் கோளாறுகளைச் சரியாக எச்சரிக்கும் இண்டிகேட்டர்கள் இவை’ என்கிறார்.
ஹார்ட் அட்டாக் கேள்விப்பட்டிருக்கிறோம்… இயர் அட்டாக்…?
“நாம் ஓரளவு பாலன்ஸ்ட் ஆக நாடமாடுகிறோம் என்றால் காது என்ற அற்புத உறுப்பில் உள்ள திரவத்தால் தான்.’
ஸடன் சென்ஸரிநியூரல் ஹியரிங் லாஸ் சுருக்கமாக எஸ்.எஸ்.ஹெச்.எல் (Sudden Neural Hearing Loss) என்பதுதான் இவ்வகை பாதிப்புக்கான மருத்துவப் பெயர். திடீரென்று காது கேட்காமல் போய்விடும்!
“இயர் அட்டாக் ஏற்பட பல காரணங்கள் உண்டு… சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், மூச்சுப் பாதையில் இன்ஃபெக்ஷன் இவற்றுள் எது ஏற்பட்டாலும் திடீரென்று காது கேட்காமல் போய்விடும். பெரும்பாலானோருக்கு சரியான சிகிச்சை கொடுத்தால் இரண்டு வாரங்களுள் குணமாகி விடுவார்கள்…’ என்கிறார் டாக்டர் பரமேஸ்வரன்.
காதில் வெளிகாது, நடுக்காது, உள் காது என்று மூன்று அமைப்புகள் உள்ளன அல்லவா… அதில் உள் காது பாதிக்கப்பட்டால்தான் இத்தகைய பாதிப்பு திடீரென்று வருமாம்!
“உள்காதே இல்லாமல் பிறந்த ஒரு குழந்தைக்கு அதன் இரண்டாவது வயதில், அறுவை சிகிச்சை செய்து மூளையில் “சிப்’ (கம்ப்யூட்டர் போல) ஒன்று வைத்தோம்… மூளை நரம்புகளுடன் இணைந்து செயல்பட்டு, இன்று நான்கு வயதாகும் அக் குழந்தைக்கு நன்றாக கேட்கிறது… பேசுகிறது… இவ்வகை பிரெயின் ஸ்டெம் ட்ரான்ஸ்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை நடந்தது ஆசியாவிலேயே இதுதான் முதல் முறை…’
“உள் காதில் இருக்கும் காக்லியா (Cochlea) என்ற அமைப்பை இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் பிறவியிலேயே கேட்கும் திறன் இல்லாத பல குழந்தைகளுக்கு அத்திறனைக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று அவர்கள் வளர்ந்து ஐ.ஐ.டி.யிலும் கல்கலைக் கழகங்களிலும் படிக்கிறார்கள்’ என்று பெருமிதப்படுகிறார் டாக்டர் காமேஸ்வரன்.

நன்றி-மங்கையர் மலர்

உணவே மருந்து: நீரிழிவு: எதைச் சாப்பிடக்கூடாது?

உலகிலேயே இந்தியாவில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம் அதுவும் தமிழகத்தில் இன்னும் அதிகம் என்பது சாதாரண செய்தியாகிவிட்டது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எட்டுக்கோடியே எட்டப்போகிறார்கள் என்ற பேராபத்தைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை அண்மையில் எடுத்த ஆய்வு.இந்தியர்களின் உணவுப் பழக்க வழக்கமே இவ்வளவு நோயாளிகளின் பெருக்கத்திற்கு காரணம் என்கிறது. சர்க்கரை நோயைப் பொறுத்தவரை மருந்துகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உணவுகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். * சர்க்கரை நோய் என்பது எது? சிலருக்கு கணையம் இன்சுலினைச் சுரக்க இயலாமல் போய்விடும். இதனால் சர்க்கரை சக்தி உடலில் சேராமல் போய் ரத்தத்திலேயே தங்கிவிடும் அதுதான் சர்க்கரை நோய் கண்டுகொள்ளாமல் விட்டால் ஆபத்தான நோயும் கூட * இரண்டு வகைகள்: இதில் அடிப்படையாக இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று கட்டாயமாக தினமும் இன்சுலின் ஊசிமூலம் ரத்தத்தில் ஏற்றிக்கொள்ளும் நிலை. இது டைப் 1 நீரிழிவு இரண்டாவது. மாத்திரைகளாலேயே ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் நிலை இது டைப் 2 நீரிழிவு. நீரிழிவு நோயாளிகள் அதிக கவனம் செலுத்த வேண்டியது கார்போஹைட்ரேட் விஷயத்தில்தான் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவை அதிகம் உண்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்.எனவே, ஒரே தடவையாக உணவை எடுத்துக் கொள்ளாமல் பிரித்துப் பிரித்துக்கூட உண்ணலாம். நீரிழிவு நோயாளிகள் உண்ண வேண்டிய உணவுகள், தவர்க்க வேண்டிய உணவுகள் சில கீழே தரப்பட்டுள்ளன. இவற்றைக் கடைப்பிடித்தாலே ஒரளவிற்கு நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியும். * சேர்க்க வேண்டிய உணவுகள்: தவிட்டரிசி, ஓட்ஸ், ஆட்டாமா, வாழைத்தண்டு, வாழைப்பூ, வெள்ளை முள்ளங்கி, முட்டைக்கோஸ், வெண்டை, பீர்க்காய், வெள்ளப்பூசணி, புடலங்காய், சுரைக்காய்,  பாகற்காய், காராமணி, கொத்தவரை, அவரை, பீன்ஸ், வெங்காயம், முருங்கை, நூல்கோல், வெள்ளரிக்காய், தக்காளி, கத்தரிக்காய், காலிஃபிளவர், குடைமீளகாய், கோவக்காய், சௌசௌ முருங்கை, மணத்தக்காளி, பசலை, கொத்துமல்லி, புதினா, சிறுகீரை, பருப்புக்கீரை, அகத்திக்கீரை, மூளைக்கீரை, புளிச்சக்கீரை, வெள்ளரி, சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜுஸ், வெஜிடேபிள் சூப், எண்ணெய், இல்லாத உப்பிட்ட ஊறுகாய், இஞ்சி.  நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரீஃபைண்ட் ஆயில். முட்டை வெள்ளைக் கரு மட்க்ஷடும் மீன் இரண்டு துண்டு கோழிக்கறி தோல் நீக்கியது நான்கு துண்டு ஆட்டுக்கறி நான்கு துண்டு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் போது மட்டும் அதுவும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டும் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, கொய்யா, தர்பூசணி, கேரட், பீடருட், பட்டாணி, டபுள் ஃபீன்ஸ் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
*தவிர்க்க வேண்டியவை: சர்க்கரை, தேன், வெல்லம், ஜாம், தேங்காய்ச் சட்னி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் டால்டா, ஹார்லிக்ஸ், போன்விட்டா, பூஸ்ட், கூல்டிரிங்ஸ் அனைத்தும், டின்னில் அடைக்கப்பட்டிருக்கும் பழச்சாறு: வேர்க்கடலை, பாதாம்பருநப்பு, முந்திரிப்பருப்பு, உலர்ந்த பழங்கள், கேக்,
ஈரல், மூளை, ஆட்டுக்கால்,மாம்பழம், அன்னாசிப்பழம், சாப்போட்டா, சீதாப்பழம், பனம்பழம், திராட்சை, இளநீர்,வாழைப்பழம், உருளை, சேனை, மரவள்ளி, சேப்பழங்கு. இனிப்பைத் தவிர்த்து குறைந்த கொழுப்பை
உணவில் சேர்த்து, நார்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்களை உட்கொண்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

கூகுள் மொழி பெயர்க்கிறது

சென்ற வாரம் கூகுள் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது. ஆங்கிலம் தமிழ் மொழிகளுக்கிடையே மொழி பெயர்த்துத் தந்திடும் வசதியே அது. http://translate.google.com/#ta|en என்ற இணைய தளம் சென்றால் ஆங்கிலத்தி லிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.
தளத்தைத் திறந்தவுடன் இடது பக்கம் இருக்கும் ஆப்ஷன் விண்டோவில், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலம் என நம் விருப்ப மொழியினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். பின்னர் நாம் மொழி பெயர்த்திட விரும்பும் வாக்கியத்தினை அமைக்க வேண்டும். தமிழில் அமைப்பதாக இருந்தால், யூனிகோடு தமிழில் அமைக்க வேண்டும். நாம் வாக்கியத்தை அமைக்கத் தொடங்கியவுடன், அதற்கான மொழி பெயர்ப்பு தரப்படுகிறது. தொடர்ந்து வாக்கியம் அமைக்கப்படுகையில், சேர்க்கப்படும் சொற்களுக்கேற்ப மொழி பெயர்ப்பு மாற்றப்பட்டு இறுதியான மொழி பெயர்ப்பு கிடைக்கிறது.
மொழி என்பது மனிதனின் எண்ணங்களின் வெளிப்பாடு. இதயத்துடிப்பின் இன்னொரு வடிவமே அவன் எண்ணங்கள். எனவே அவன் எண்ணங்களைத் தாங்கி வரும் சொற்களை இன்னொரு மொழியில் மொழி பெயர்த்துச் சொல்வது மனிதனால் மட்டுமே முடியும். இயந்திரத்தால் முடியாது என்று ஆணித்தரமாக நம்பியவர்களை, ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் மொழி பெயர்த்துத் தந்து ஆச்சரியத்தைத் தந்துள்ளது கூகுள்.
இந்த தளம் சென்று நான் கீழ்க்காணும் வரிகளைக் கொடுத்தேன்.
அங்கு ஒரு அழகான பெண்ணைப் பார்த்தேன். அவள் ஒரு கவிதையைப் போல் இருந்தாள். பேசலாம் என்று அருகே சென்றேன். அருகில் சென்ற பின்னர் அது ஒரு சிலை என்று தெரிந்தது.
இதனைக் கீழ்க்கண்டவாறு கூகுள் மொழி பெயர்த்துத் தந்தது.
I saw a beautiful girl there. She was like a poem. I went around to talk. After that it was a statue nearby
இதை மிகச் சரியான மொழி பெயர்ப்பு என ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஓரளவிற்கு நேரடியான மொழி பெயர்ப்பு என்றே சொல்ல வேண்டும். வாக்கிய அமைப்பில் மாற்றங்கள் ஏதும் இல்லாமல், நேரடியாகத் தரப்படும் வாக்கியங்களுக்குச் சரியான மொழி பெயர்ப்பினையே இது தருகிறது.
வியந்து பாராட்டப்பட வேண்டிய கூகுளின் முயற்சி இது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பங்கு என சி.பி.ஐ., அம்பலம்: சிவசங்கரனை மிரட்டினார்

“2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு விவகாரத்தில், தயாநிதிக்கும் பங்கு உள்ளது என, சி.பி.ஐ., அம்பலப்படுத்தியுள்ளது. “2004ம் ஆண்டு, தயாநிதி, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனபங்குகளை மலேசியநிறுவனத்திற்கு விற்க, அதன் உரிமையாளர் சிவசங்கரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். அதற்கான அடிப்படைமுகாந்திரம் உள்ளது’ என, சி.பி.ஐ., நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த விரிவானஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“2ஜி’ ஸ்பெக்ட்ரம் வழக்கில் இதுவரையில் நடந்துள்ள விசாரணை விவரங்கள் அடங்கிய 71 பக்கங்கள்கொண்ட அறிக்கையை, சி.பி.ஐ., நேற்று சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தது.இந்த வழக்கு விசாரணையை கண்காணித்துவரும் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய “பெஞ்ச்’ முன், சி.பி.ஐ., மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், அந்த அறிக்கையை அளித்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:கடந்த 2004 -2007 காலகட்டத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார். அப்போது, ஏர்செல் தனது சேவையை விரிவாக்கம் செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கான உரிமம் கேட்டு தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பம் செய்தது.ஏர்செல் நிறுவனத்தோடு மேலும் இரு நிறுவனங்களும்உரிமம் கேட்டு விண்ணப்பித்தன. உரிமம் வழங்குவதற்காக, ஏர்செல் நிறுவனத்திடம், தேவையில்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணைகள் நடத்தப்பட்டன.ஆனால், இந்த நடைமுறையை மற்ற இரு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம், அமைச்சகம் மேற்கொள்ளவில்லை. அவர்களுக்கு உடனடியாக உரிமம் வழங்கப்பட்டுவிட்டது. அதே நேரம், ஏர்செல்லுக்கு உரிமம் வழங்குவதில் இழுத்தடிப்பு நடந்தது.

இவ்விவகாரத்தில் சி.பி.ஐ., யின் முதற்கட்ட விசாரணையில், தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர், ஏர்செல் நிறுவனத்திற்கு நிர்பந்தம் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளைவிற்கும்படி, ஏர்செல்லின் அப்போதைய அதிபர் சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.அந்த நெருக்கடியின் விளைவாக, சிவசங்கரன், ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்ற பின்தான், அதாவது 2006, மார்ச் மாதத்திற்கு பின்தான், ஏர்செல் நிறுவனத்திற்கான உரிமங்கள் வழங்கும் நடவடிக்கைகள் துவங்கின. இறுதியில் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் பங்குகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை.

மேக்சிஸ் நிறுவனத்திற்கான, “இன்டென்ட்’ 2006 நவம்பரில் அளிக்கப்பட்டு, டிசம்பரில் உரிமம் வழங்கப்பட்டு விட்டது. இந்த பரிமாற்றத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தற்போது சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. அதேநேரம், சிங்கப்பூர் வங்கி மூலம், நடந்த இறுதிக் கட்ட பணப் பரிமாற்றங்கள் குறித்தும் விசாரித்து வருகிறது. வரும் 13ம் தேதி அந்த வங்கி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சி.பி.ஐ., தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தயாநிதி,முன்னாள் செயலர் நிருபேந்திர மிஸ்ரா, சி.பி.ஐ.,க்கு அளித்த விளக்கத்தில் ,” தயாநிதி , தனது அண்ணன் கலாநிதி நிறுவனத்திற்கு சாதகமாக, ஏர்செல் நிறுவனத்தை குறிவைத்தார்’ என்று தெரிவித்துள்ளார். இவ்வழக்கை, வரும் 11ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது.

* ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் கைப்பற்றியது.
* இதற்காக, ஏர்செல் நிறுவன தலைவர் சிவசங்கரனை தயாநிதி மாறன் மிரட்டினார் என்பது குற்றச்சாட்டு.
* ஏர்செல் நிறுவனம் கைமாறியதும், சன் குழுமம் நடத்தும் “சன் டி.டி.எச்’ நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் 600 கோடி ரூபாய் முதலீடு செய்தது.
* “2ஜி’ ஊழல் விசாரணையை, வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடித்துக்கொள்வதாக சி.பி.ஐ., தரப்பில் மூத்த வக்கீல் வேணுகோபால், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார்.
* கடந்த 2001 முதல் 2008 வரையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த குளறுபடிகள் பற்றிய விசாரணை, செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிந்து விடும் என்றும் தெரிவித்தார்.

நிம்மதி: அது தெய்வத்தின் சந்நிதி-கவியரசு கண்ணதாசன்

ஒருவன் பணக்காரனோ, ஏழையோ, எங்கும் புகழ் பெற்றவனோ, காதவழி கூடப் பெயரில்லாதவனோ, எவனாக இருந்தாலும் அவனவன் உள்ளத்திலும் ஒரு நெருப்பு எரிந்து கொண்டே இருக்கிறது.

அந்த நெருப்பின் ஜுவாலை கூடலாம், குறையலாம். குறைந்த பட்சம் புகை மண்டலமாவது மண்டிக் கிடக்கிறது.

ஒவ்வொரு நெஞ்சிலும் ஏதேனும் ஒரு வடு விழுந்திருக்கிறது.

ஒரு வேளையாவது மனிதன் மூச்சு, அனல் மூச்சாக இறங்குகிறது.

அவலம், ஆதங்கம், ஏக்கம், தோல்வி, குத்தல், குடைச்சல்.

ஒவ்வொரு மனிதனும், மரணத்தைப் பற்றி ஒரு முறையாவது சிந்திக்கிறான்.

`இதைவிடச் செத்துப்போவது நல்லது கடவுளே’ என்று நூற்றுக்குத் தொண்ணூறு பேர் சொல்லியிருக்கிறார்கள்.

`போதுமடா சாமி’ என்று அலுத்துக் கொள்ளாதவர்களே இல்லை.

`என்னை நிம்மதியாக இருக்க விடுங்களேன்’ என்று ஒவ்வொரு குடும்பஸ்தனும் சத்தம் போட்டிருக்கிறான்.

நிம்மதி: அது தெய்வத்தின் சந்நிதி.

துன்பம்: அது சாத்தானின் சந்திதி.

சாத்தானின் சந்நிதியில் இருந்து நீங்கள் தெய்வத்தின் சந்நிதிக்குப் போக விரும்புகிறீர்களல்லவா?

வாருங்கள்! உலகத்தின் மூலத்தைக் காண்பதற்கு முன்னால், துயரத்தின் மூலத்தைக் காணலாம்.

துன்பம் மொத்தத்தில் இரண்டு வகையாக வருவது.

ஒன்று, மனிதன் தானாகவே கை கால்களை மாட்டி இழுத்துக் கொள்வது; மற்றொன்று, அவனுக்குச் சம்பந்தமில்லாமலேயே விதி விளையாடுவது.

இரண்டாவது வகையில் அவனுக்குச் சம்பந்தமில்லையாயினும், விதி அவன் மூலமாகவே செயல்படுகிறது.

விளையாட்டிலே நீ கீழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டால், அது விதியின் செயல்தான். ஆனால், உன்னையே விளையாடச் சொல்லி, நீயாகவே விழுந்து கால் ஒடியும்படி அது வைத்து விடுகிறது.

ஒரு பெண்ணை நீ காதலித்து, அந்தக் காதலே துயரமாகி விடுமானால், விதி உன் கண்களிலிருந்து விளையாடி இருக்கிறதென்று பொருள்.

சரியான தொழில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அது தவறானதாகிக் கையைச் சுட்டுக்கொள்ள நேருமானால், விதி உன் மூளையில் நின்று விளையாடி இருக்கிறதென்று பொருள்.

ஒவ்வொரு சிக்கலிலும், பின்னலிலும் விதியின் பங்கு பெரியது.

நீ சாப்பிடும் சாப்பாட்டில் பல்லி எச்சமிட்டு நீ நோய் வாய்ப்பட நேர்ந்தால், உனக்குச் சம்பந்தமில்லாமல் விதி செயல்பட்டதாகப் பொருள்.

`இது என்ன செய்துவிடப் போகிறது’ என்று ஏதாவதொரு தவறான வழியில் நீ இறங்கிவிட்டால், அதில் உன் செயல் முக்கால் பங்கு, விதி கால் பங்கு.

ஆகவே, ஒவ்வொரு துன்பத்திற்கும் ஒரு பின்னணி இருக்கிறது.

அதனால்தான், புத்தி தாமதமாக உதயமாகியது.

இந்தத் துன்பங்களைக் களைவதற்கு வழி என்ன?

ஒரே வரியில் சுலபமாகச் சொல்வதென்றால், சித்தர்களும், ஞானிகளும் சொன்னது போல் பந்தம், பாசம், உடமைகள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு, `வீடு நமக்குண்டு திருவாலங்காடு, நிமலர் தந்த ஓடுண்டு அட்சய பாத்திரம்’ என்று கோவணத்தோடு ஓடி விடுவதுதான் ஒரே வழி.

ஆனால், லெளகீகத்தில் இருப்பவனுக்கு இப்படியொரு யோசனையைச் சொல்வதை விட மடத்தனம் வேறு இருக்க முடியாது.

ஏற்படும் பிணைப்புகளை உறுதி செய்துகொண்டே நிம்மதியாக வாழ்வதற்கு வழி செய்வதுதான், பயனுள்ளதாக அமையும்.

மனிதன் அனுபவிக்க விரும்பும் பொருள்களில் இருந்து அவனை அப்புறப்படுத்துவதும் சுலபமான காரியமல்ல.

எல்லோரையும் அப்படி அப்புறப்படுத்தி விட்டால், உலக இயக்கங்கள் ஸ்தம்பித்துப் போகும்.

ஆகவே, வாழ்க்கை நடைமுறைகள் பற்றிய சில எச்சரிக்கைகளை, வலிமையான உள்ளத்தை அவனுக்குத் தந்து, இன்பத்தோடு கலந்து வரும் துன்பங்களைக் களைந்தெடுக்க வழி காண்பதே நல்லது.