Daily Archives: ஜூலை 11th, 2011

பெண்களை கவிழ்க்கும் `ரேவ்’ பார்ட்டி

இளைஞர்களிடையே இப்போது அதிகமாக உச்சரிக்கப்படும் சொல், `ரேவ் பார்ட்டி’! `ரேவ்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு துள்ளல், ஆரவாரம் என்று பொருள். இந்த பார்ட்டிகளும் துள்ளலும், ஆரவாரமுமாகத்தான் நடக்கின்றன.

அதிர வைக்கும் இசை, லேசாக மிளிரும் லேசர் விளக்கு, உயர்தர மது மற்றும் சட்டவிரோத போதைப் பொருட்களுடன் ஆரவார காட்சிகள் அரங்கேறும் கச்சேரிதான் `ரேவ் பார்ட்டி’.

`ரிசார்ட்’டில் ஒரே நேரத்தில் 300 பேருக்கு மேற்பட்ட வாலிபர்களும், இளம் பெண்களுமாக கூடிவிடுகிறார்கள். அங்கே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். அதிரும் இசை ஆடத் தெரியாதவர்களையும் துள்ள வைக்கும். அருகில் நிற்பவர்களோ, `கமான்… கேரி ஆன்… டோன்ட் ஷை’ என்று ஊக்கப்படுத்தி ஆட வைக்கிறார்கள். அரைகுறை வெளிச்சம் வெட்கத்தைவிட்டு ஆடச் சொல்கிறது. நண்பர்களும் உடன் இருப்பதால் ஆடிப் பழகாதவர்களாக இருந்தாலும் தானாகவே ஆட்டம் வந்துவிடுகிறது.

ஆண்களும், பெண்களும் பேதமில்லாமல் இப்படி ஆடிப்பாடி கும்மாளமடிப்பது இளவட்டங்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அதுமட்டுமின்றி அவர்கள் ரேவ் பார்ட்டியில் மயங்கிக் கிடப்பதற்கு வேறு சில காரணங்களும் இல்லாமல் இல்லை. ஆமாம், இங்கு கிடைக்கும் வசதிகளோ ஏராளம், தாராளம்!

ரிசாட்டுகளின் வசதி, கட்டணம் போன்றவற்றிற்கு ஏற்ப வசதிகள் கூடும், குறையும். இருந்தாலும் எல்லா விடுதிகளிலும் இளசுகளை இழுத்து மயக்கும் போதைப் பொருட்கள் தாராளமாக புழங்கும்.

ரேவ் பார்ட்டி நடக்கும் இடங்களில் வெளியே இருந்து கொண்டு செல்லப்படும் போதைப் பொருட்களை பயன்படுத்த அனுமதி கிடையாது. `என்ன நடந்தாலும் தெரியாது’ என்பதுபோல் மூளையை மழுங்கடிக்கும் வீரியமிக்க போதைப் பொருட்கள் அங்கு பயன்படுத்தப்படுகின்றன. அதற்காக தண்ணீர் போல் பணம் செலவிடப்படுகிறது. 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதோடு முடிவதில்லை உள்ளே எதை எதை எல்லாம் `அனுபவிக்கிறார்களோ’ அதற்கு தக்கபடி கூடுதல் கட்டணமும் உண்டு. ஆசிட் ஊசிகளும் இங்கு பயன்படுத்துவது உண்டாம்.

எவ்வளவு போதைப்பொருட்கள் புழங்கினாலும் போலீஸ் கெடுபிடிகள் இருக்காது. ஏனெனில் பார்ட்டிகள் அரங்கேறும் இடம் நகர்ப்புறத்தில் இருந்து ஒதுக்குப்புறமாக இருக்கும். பார்ட்டி நடைபெறும் நேரம் மிக ரகசியமாக வைக்கப்படுவதால் மிக நெருங்கிய வட்டாரத்தினருக்கு மட்டுமே பார்ட்டியைப் பற்றி தெரியும். ரேவ் பார்ட்டியில் ஆடப்படும் நடனம் பிரபலமானது. சில பிரபலங்களும் சேர்ந்து ஆடுவார்கள். சினிமா பிரபலங்களை அழைத்து வந்து ஆடவைக்கும் ரிசாட்டுகளும் இருக்கின்றன.

வசதிபடைத்தவர்கள், பிரபலங்களின் பிள்ளைகள் தங்கள் பிறந்தநாள், திருமணநாள் விசேஷங்களின்போது பார்ட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ரேவ் பார்ட்டியில் `இலவச அனுமதி’ பெற்றுத் தருவதும் உண்டு.

இவ்வளவு கூத்தும், கும்மாளமும் நடந்தாலும், விரும்புபவர்கள் எல்லாம் இந்த பார்ட்டியில் கலந்து கொள்ள முடியாது. ஏனெனில் பார்ட்டிகள் அவ்வளவு ரகசியமாக நடைபெறும். மறைமுக குழுவினர் பார்ட்டிகளுக்கு ஆட்களை திரட்டும் வேலையை கவனிக்கிறார்கள். அதற்கு கணிசமாக சம்பளம் பெறுகிறார்கள்.

முதலில் இந்த நிகழ்ச்சிகள் ரகசிய குறியீடுகள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டன. 30 முதல் 40 பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். பார்ட்டி எங்கு நடக்கிறது, எந்த நேரத்தில் நடக்கும் என்பது மிக ரகசியமாக இருக்கும். நிகழ்ச்சி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்புதான் தகவல்கள் வரும். இப்போது இணையங்கள், செல்போன்கள் மூலம் குறியீட்டுச் சொற்களால் ஆள்பிடிக்கிறார்கள். அதை புரிந்து கொண்டு, தேடிப்போய் 300 பேர் 400 பேர் கூடி கும்மாளமிடுகிறார்கள்.

முன்பெல்லாம் மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில்தான் இந்த பார்ட்டிகள் நடைபெற்றன. தற்போது சென்னையிலும் தலைதூக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

இந்த பார்ட்டிகளுக்கு நண்பர்களுடன் செல்பவர்களைவிட கேர்ள் பிரண்ட் உடன் செல்பவர்கள் அதிகம். பார்ட்டிகளுக்கு அழைத்துச் செல்ல இளம் பெண்களை ஆண்கள் எப்படி தயார்படுத்துகிறார்கள் என்பது தனிக் கதை.

இளமைக்கே உரித்தான வாட்டசாட்டமான தோற்றத்துடன் காரில் வரும் ஆண்களைப் பார்த்ததும் அவர் நல்ல பணியில் இருப்பதாக பெண்கள் நம்பிவிடுகிறார்கள்.

இவர்களின் நட்பு முதலில் மிக ஒழுக்கமாக இருக்கும். கோவில்கள், ஓட்டல்களுக்கு மட்டுமே சென்று வருவார்கள். இந்த ஒழுக்கமான நடத்தைகள் ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கையை அதிகரித்துவிடுகிறது. உடனே `வாழ்க்கை இவரோடுதான்’ என்ற முடிவுக்கு பெண்கள் வந்துவிடுகிறார்கள்.

எப்படியோ நம்பிக்கையைப் பெற்றுவிட்ட பிறகு அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகிவிடுகிறது. அவர்களின் அடுத்தகட்ட பயணம் தியேட்டர் அல்லது பீச். அங்கு அரங்கேறும் காதல் காட்சிகள் இவர்களுக்கு கிளுகிளுப்பைத் தரும். `நாளை நாமும் இப்படி சந்தோஷமாகத்தான் இருக்கப் போகிறோம்` என்ற நம்பிக்கைப் பேச்சுடன் தொடுதல்கள் ஆரம்பமாகின்றன. முதலில் முத்தங்கள் அளவுடன் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

இந்த நம்பிக்கையின் அடுத்த கட்டம் பீர் அருந்துவது. உடலுக்கு நல்லதுதான் என்ற நம்பிக்கையுடன் மதுப்பழக்கத்துக்கும் தயாராகிறார்கள். பின்பு ரேவ் பார்ட்டிக்கு இழுக்கப்படுகிறார்கள். அங்கு ஆண்பெண் பேதமில்லாமல் ஆடுவது அவர்களுக்கிடையே கூச்சத்தை அறவே போக்கிவிடுகிறது.

அரைகுறை வெளிச்சத்தில் இடையை தொட்டுக் கொண்டும், தோளில் கைபோட்டுக் கொண்டும் ஆடுவதால் உணர்ச்சி தூண்டப்படு கிறார்கள். கூடவே போதைப்பொருட்கள், மது அருந்தி யிருப்பதால் தன்னிலை மறந்துவிடுகிறார் கள். இந்த இன்பச் சீண்டல்கள் தாராளமான உறவுக்கு வழிவகுத்துவிடுகிறது. சீக்கிரமே உறவும் அரங்கேறுகிறது.

உறவுக்குப் பிறகு புதுசுகம் தேடி வேறு பெண்களைத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள் ஆண்கள். ஆனால் பெண்களின் நிலைமையோ கவலைக்குரியதாக மாறிவிடுகிறது. அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல பாதிப்புகளை சந்திக்கிறார்கள். சிந்திக்கும் ஆற்றல் செயல் திறன் குறைந்து ஆரோக்கியத்தை இழக்கிறார்கள். பல பெண்கள் திருமணம் செய்து கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள். தொடர்ந்து இதுபோன்ற பார்ட்டிகளுக்கு அடிமையாகிவிடவும் செய்கிறார்கள்.

2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்!

மனிதர்கள் 2031 ஆம் ஆண்டில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஷ்யன் அகாடமி ஆப் சயின்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டியூட்’ இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் என்ற ரஷ்ய விஞ்ஞானி கூறியுள்ளார். வேற்றுக் கிரக வாசிகள் சம்பந்தமான ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன.

அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்’ என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் 10 % பூமியை ஒத்தவை. இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார். வேற்றுக் கிரக வாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்ததாக காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓ.எஸ். மறுபதிவு – முன்னும் பின்னும்

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அடிக்கடி மறுபதிவு செய்வது என்பது மிக எளிதாக அனைவரும் மேற்கொள்ளும் ஒரு வேலையாக உள்ளது. வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல், விண்டோஸ் பைல்கள் கெட்டுப் போதல் மற்றும் வேறு சில பிரச்னைகளால், விண்டோஸ் சிஸ்டம் முடங்கிப் போகும்போது, அனைவரும் விண்டோஸ் சிஸ்டத்தை மீண்டும் பதிந்து விடலாமே என்று எண்ணிச் செயல்படுத்து கின்றனர். பூட்டபிள் சிடி, ட்ரைவர்கள் தொகுப்பு தயாரித்தல் போன்றவைகள் இவர்களின் எண்ணத்தினை மிக எளிதாக்குகின்றனர். ஆனால் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீண்டும் பதித்தலில் எதுவும் சிக்கல் இருக்காது. அதன்பின்னரே, நாம் சில எதிர்பாராத பிரச்னைகளைச் சந்திப்போம். சில சாப்ட்வேர் புரோகிராம்களின் மூல சிடிக்கள் இல்லாமல் இருக்கலாம். சில பைல்களைத் தெரியாமல் அழித்திருப்போம். இது போன்ற சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, ஆப்பரேட்டிங் சிஸ்டம் மறுபதிப்பிற்கு முன்னரும் பின்னரும் என்ன என்ன வேலைகளை மேற்கொள்ள வேண்டும் என இங்கு பார்க்கலாம்.
1. பைல் பேக் அப்: நீங்கள் உருவாக்கும் அனைத்து பைல்களையும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், அவற்றை நல்ல முறையில் பேக் அப் எடுக்கும் வேலையை மேற்கொள்ளுங்கள். மை டாகுமெண்ட்ஸ், மை பிக்சர், மை மியூசிக் மற்றும் மை வீடியோஸ் ஆகிய போல்டர்களில் உள்ள பைல்கள் மற்றும் எந்த வகை பைல்கள் எல்லாம் தேவையோ, அவை அனைத்தையும் வேறு ஒரு போல்டருக்கு மாற்றவும். இதனை மேற்கொள்ளவில்லை என்றால், இந்த பைல்களை நீங்கள் இழக்க வேண்டிய திருக்கும். ஏனென்றால், எந்த ட்ரைவில், சி ட்ரைவில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மீண்டும் பதிய இருக் கிறீர்களோ, அந்த ட்ரைவிலேயே இவை ஏற்கனவே பதியப்பட்டு இருக்கும். எனவே இவை இழக்கப்படலாம்.
2.சாப்ட்வேர் தன் அமைப்பு: சாப்ட்வேர் புரோகிராம்களைப் பதிகையில், அதனை வடிவமைப்பதில் நம்முடைய விருப்பம் மற்றும் தேவைகளுக்கேற்ப வடிவமைத் திருப்போம். ஆங்கிலத்தில் இதனை Configuration and Profile என அழைக் கின்றனர். பல சாப்ட்வேர் புரோகிராம்கள் இவற்றிற்கான பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளவும் வாய்ப்புகளைத் தருகின்றன. எனவே எப்போதும் இவற்றை ஒரு காப்பி எடுத்து வேறு ஒரு ட்ரைவில் வைத்திருப்பது நல்லது. ஓ.எஸ். மறுபதிவு முடிந்து, குறிப்பிட்ட சாப்ட்வேர் புரோகிராமினையும் இன்ஸ்டால் செய்தவுடன், இந்த பேக் அப் பைலை இயக்கினால் போதும்.
3. டவுண்லோட் போல்டர் மற்றும் பைல்கள்: இணையத்திலிருந்து நாம் டவுண்லோட் செய்திடும் பைல்கள் அனைத்தையும் என்ற போல்டரில் மாறா நிலையில் சேவ் ஆகும். இந்த போல்டரும் ஓ.எஸ். மறுபதிவில் அழிந்து போகும் என்பதால், இந்த போல்டர் மற்றும் அதில் உள்ள பைல்களை இன்னொரு ட்ரைவிற்கு மாற்றி சேவ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
4. ஹார்ட் டிஸ்க் பிரித்தல்: நீங்கள் உங்கள் ஹார்ட் டிஸ்க்கினை ஒரே ட்ரைவாக வைத்திருந்தால், மேலே சொன்ன அனைத்து பேக் அப் வேலைகளையும், தனியே இணைத்து இயக்கும் ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து மேற்கொள்வது நல்லது. அவ்வாறு செய்த பின்னர், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பதியும் முன்னர், ஹார்ட் டிஸ்க்கினைப் பல ட்ரைவ்களாகப் பிரித்துப் பதிவது நல்லது. பாதுகாப்பாக வைத்திருக்க எண்ணும் பைல்களை அப்போதுதான் சி ட்ரைவ் இல்லாமல் வேறு ட்ரைவ்களில் சேவ் செய்து பாதுகாக்க முடியும். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில், வேறு சாப்ட்வேர் எதனையும் பயன்படுத்தாமல், ஹார்ட் டிஸ்க்கில் காலியாக இருக்கும் இடத்தைப் பயன்படுத்தி, புதிய ட்ரைவ்களை உருவாக்குவது குறித்து தகவல் தரப்பட்டுள்ளது.
5. இன்ஸ்டால் செய்ய வேண்டியதைக் குறித்துக் கொள்ளுங்கள்: எப்போது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மறுபடி இன்ஸ்டால் செய்தாலும், சாப்ட்வேர் புரோகிராம்கள் அனைத்தையும் மீண்டும் இன்ஸ்டால் செய்தாக வேண்டும். எனவே எம்.எஸ்.ஆபீஸ், பேஜ் மேக்கர் போன்ற பெரிய புரோகிராம்களிலிருந்து, சிறிய வேலைகளை நமக்காக மேற்கொள்ளும் சிறிய புரோகிராம்கள் வரை அனைத்தையும் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அந்த பட்டியலில் இருக்க வேண்டிய முக்கிய பைல்களாக இவற்றைக் கொள்ளலாம் — ட்ரைவர் பைல்கள், ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்கள், பிரவுசர்கள் மற்றும் சார்ந்த ஆட் ஆன் தொகுப்புகள், ஆபீஸ் தொகுப்பு, மீடியா பிளேயர்கள், அப்டேட்கள் மற்றும் பிற தேவையான தொகுப்புகள்.
6. ஓ.எஸ். மற்றும் சாப்ட்வேர் பதிதல்: ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மறுபடியும் பதிந்த பின்னர், பயன்படுத்தக் கூடிய அனைத்து சாப்ட்வேர் புரோகிராம்களையும் பதியவும். சில வேளைகளில் ட்ரைவர் புரோகிராம்களைப் பதிந்தவுடன், சிஸ்டத்தினை மீண்டும் ஸ்டார்ட் செய்திட வேண்டியதிருக்கும். எனவே அனைத்து இன்ஸ்டலேஷனையும் முடித்து, சிஸ்டத்தினை ரீஸ்டார்ட் செய்திடவும்.
7. பேக் அப் மீண்டும் காப்பி செய்தல்: ஏற்கனவே முதல் இரு நிலைகளில் கூறியபடி, பேக் அப் எடுத்து வைத்த பைல்களை, சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னர், அதன் போல்டர்களுக்கு மாற்றுங்கள். இந்த பைல்களை, நீங்கள் பயன்படுத்தும் வகையில் பிரிக்கலாம். மியூசிக், படம், இணையம் சார்ந்தது எனவும், டாகுமெண்ட் பைல்களில், அலுவலகப் பணி மற்றும் தன் சொந்த பைல் எனவும் பிரித்து வெவ்வேறு ட்ரைவ் அல்லது போல்டர்களில் போட்டு வைக்கலாம். இந்தபோல்டர்களை, ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்த ட்ரைவில் உருவாக்காமல், வேறு ட்ரைவ்களில் ஏற்படுத்தவும்.
8. ரெஸ்டோர் பாய்ண்ட்: அனைத்தும் முடிந்து, உங்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கினால், அந்நிலையில் ஒரு ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றை உருவாக்கி வைக்கவும். இதன் மூலம், இன்னொரு நாளில் விண்டோஸ் இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டால், அந்த நாளில் கம்ப்யூட்டர் இருந்த நிலைக்குக் கொண்டு வந்து பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.
9. ஒரு முறைக்கு இரு முறை சோதித்தல்: இதுவே இறுதியான செயல்பாடு. அனைத்தையும் இன்ஸ்டால் செய்து, இயக்கிய பின்னர், ஒருமுறைக்கு இருமுறை அனைத்தையும் சோதித்து, தேவையான அனைத்தும் சரியான முறையில் கம்ப்யூட்டரில் அமைந்து விட்டதா எனப் பார்த்து உறுதி செய்து கொள்ளவும். செய்த பின்னர், கம்ப்யூட்டரில் இன்னொரு ட்ரைவில் இருந்த பேக் அப் பைல்கள் அனைத்தை யும் நீக்கிவிடவும். இல்லையேல், ஒரே பெயரில் இரண்டு ட்ரைவ்களில் பைல்கள் தங்கி, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பிடிப்பதோடு, எது அப்டேட்டட் பைல் என்பதில் நமக்கும் சிக்கலைத் தரும்.