Daily Archives: ஜூலை 12th, 2011

பெண்ணின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

அன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவதில்லை. நேசம் மிகுந்த வார்த்தைகளைத்தான் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

இந்த விசயம் ஆண்களுக்குத் தெரியாமல் போகும்போதுதான் கருத்து மோதல்கள் ஏற்பட்டு விரிசல்கள் தோன்றுகின்றன. பெண்களின் மனதை புரிந்து கொண்டு உரிமையோடு நேசத்தை வெளிப்படுத்தினால் உறவுகள் வலுப்படும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

ஆறுதலாய் பேசுங்கள்

பேச்சுதான் பெண்களின் விருப்பத்திற்குரிய செயல். திருமணத்திற்கு முன்பு வரை உறவுகளோடும், நண்பர்களோடும் சந்தோசமாய் பேசிக்கழித்த பொழுதுகள் அடிக்கடி பெண்களின் நினைவுகளில் நிழலாடும். இது போன்ற சமயங்களில் ஆறுதலாய் பேசினால் அது பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும். உங்களின் காதலையும், அன்பையும் முதலில் பேச்சின் மூலம் வெளிப்படுத்துங்கள்.

நடந்து கொண்டே படிப்பது எத்தனை சுகமானதோ, அதுபோல இல்லறத் துணையுடன் நடந்து கொண்டே பேசுவது இனிமையானது. நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த நடை பேச்சு உதவும்.

இதய சிம்மாசனம்

திருமணம் செய்தவர்களின் வாழ்க்கையில் உடலுறவு என்பது பிரிக்க முடியாதது. எந்த வித வருத்தமும், வலியும் இன்றி அதனை அனுபவிக்க வேண்டும். இந்த விசயத்தில் பெண்களை ஜெயித்த ஆண்கள் நிரந்தரமாக பெண்களின் இதய சிம்மாசனத்தில் அமரலாம்.

தனது வாழ்க்கைத் துணைவர் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பல விசயங்களை அவர்கள் மனதுக்குள் கற்பனை செய்து பார்த்திருப்பார்கள். எனவே எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

விளையாட்டாக விளையாடுங்கள்

பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஆண்களோ, காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.

மடியில் தலைசாய்ப்பது, விரலால் தலைகோதுவது, அன்பான, ஆறுதலான முத்தம், என சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. இதில்தான் சிக்கலே ஆரம்பிக்கிறது.

நேரடியாக விசயத்தை தொடங்குவதை விதம் விதமான முன் விளையாட்டுகளை விளையாடுங்கள். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாலே உறவுகளில் விரிசல் விழ வாய்ப்பில்லை

பூப்பு காலத்தில் பூரிப்பில்லையா?

ஒரு பெண் பருவமடைந்ததும், மாதந்தோறும் தோன்றும் பூப்பு என்னும் மாதவிலக்கானது பெண்ணின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தக்கூடியதாக அமைகிறது. ஆனால், ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின்போது ஏற்படும் வேதனையும், மாதவிலக்கிற்கு முந்தைய காலங்களில் தோன்றும் உடல் மற்றும் மன உபாதைகளும் பெண்ணிற்கு மாதவிலக்கின்மேல் வெறுப்பை ஏற்படுத்துகின்றன. பூப்புக்கு முந்தைய குறிகுணங்கள் என்று அழைக்கப்படும் பி.எம்.எஸ். பல பெண்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் சோர்வை ஏற்படுத்துகின்றன.மாதவிலக்கிற்கு 14 நாட்கள் முன்பாகவே உடல் மற்றும் மனதளவில் சில பாதிப்புகள் தோன்றி, பின் மாதவிலக்கு ஏற்பட்டதும் இயல்பு நிலைக்கு திரும்பும் சில தொல்லைகள் மாதந்தோறும் பெண்களை பாடாய்படுத்துகின்றன.

ஒருவித எரிச்சல் உணர்வு, பதட்டம், மகிழ்ச்சியின்மை, மன இறுக்கம், மன அழுத்தம், தூக்கமின்மை, தலைவலி, முரண்பட்ட மனநிலை, வயிறு உப்புசம், வயிற்று சதைகள் இறுக்கி பிடித்தல், வாந்தியோ, குமட்டலோ உண்டாதல், மலச்சிக்கல், மார்புகளில் இறுக்கம், முகப்பருக்கள் ஆகியன மாதவிலக்குக்கு முன்பாக தோன்றி, உதிரப்போக்கு ஏற்பட்டதும் மறைந்துவிடுகின்றன.அதிகமாக காபி, தேநீர் அருந்துபவர்கள், மன அழுத்தமுடையவர்கள், முதிர் கன்னிகள், குறைந்த ரத்த அழுத்தமுடையவர்கள், ஹார்மோன் குறைபாடு உடையவர்கள், மெக்னீசியம், மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்து பற்றாக்குறை உடையவர்கள், வைட்டமின் பி6, ஈ மற்றும் டி சத்து குறைபாடு உடையவர்கள் பூப்புக்கு முந்தைய தொல்லைகளால் பாதிக்கப்படுகின்றனர்.அறிவியல் ஆய்வுப்படி மத்திய நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தரும் செரடோனின், என்டோர்பின் போன்ற ஹார்மோன்களின் குறைபாட்டினாலும், மரபு சார்ந்த காரணிகளாலும் இந்த தொல்லைகள் உண்டாவதாக கண்டறியப் பட்டுள்ளது. இந்த தொல்லை உடையவர்கள் காபி, தேநீர், இனிப்பு, உப்பு போன்றவற்றை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும். சுண்ணாம்புச்சத்து அதிகம் நிறைந்த கீரைகளையும், பழங்களையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அதிகமாக நிறைந்துள்ள இடங்களில் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். அத்துடன் உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும் தியானத்தை முறையாக பின்பற்ற வேண்டும். அப்பொழுதுதான் ஹார்மோன்கள் சீரடையும். பெண்களுக்கு பூப்பு காலத்திற்கு முன்பு தோன்றும் பலவித தொல்லைகளை நீக்கி, புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் தரும் அற்புத மூலிகை ஈவினிங் ப்ரைம்ரோஸ் என்ற சீமை செவந்தி.மஞ்சள் மற்றும் சிவப்புநிற அழகிய பூக்களை உடைய இந்த பெருஞ்செடிகள் மேற்கத்திய நாடுகளில் ஏராளமாக வளருகின்றன.

இந்தியாவின் தோட்டங்களிலும் பயிரிடப்படுகின்றன. இதன் நீண்ட விதைகளிலுள்ள பன்பூரித அமிலங்களில் காணப்படும் ஒமேகா கொழுப்பு அமிலம் ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. வெயில் காலத்தில் அதிகமாக பூக்கும் இந்த செடிகளின் விதைகளிலிருந்து, இயற்கை முறைப்படி பிரித்தெடுக்கப்படும் வேதிச்சத்துக்களில் பெண்களின் பூப்புகால தொல்லைகளை கட்டுப்படுத்தும் மருந்துகள் ஏராளமாக காணப்படுகின்றன. ரினோலிக் அமிலம் ஜி.எல்.ஏ. என்ற காமாலினோலெனிக் அமிலம், லினலூல் மற்றும் புரோஸ்டோகிளான்டின்களின் மூலகங்கள் மாதவிலக்குக்கு முந்தைய காலங்களில் தோன்றும் வயிற்றுவலி, வயிற்று உப்புசம், மார்பகங்களின் இறுக்கம், பிறப்புறுப்பில் தோன்றும் தேவையற்ற நீர்க்கசிவு, மனம் மற்றும் உணர்வு சார்ந்த இறுக்கநிலை ஆகியவற்றை கட்டுப்படுத்தி, மகிழ்ச்சியானபூப்பை உண்டாக்குகின்றன.ஈவினிங் ப்ரைம்ரோஸ் எண்ணெயில் உள்ள மருந்துச் சத்துகள் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியை தருகின்றன. பலஹீனமான சர்க்கரை நோய் பெண்களுக்கு இன்சுலினின் சுரப்பை சமப்படுத்துகின்றன. மாதவிலக்கு முதிர்வுக்கு பிந்தைய நிலையில் உடல் பருமன் மற்றும் தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கின்றன. மாதவிலக்கின் முந்தைய காலத்தில் தோன்றும் மார்பு துடிப்பு சீரற்ற நிலை, வயிற்றுவலி, வாந்தி ஆகியவற்றையும் கட்டுப்படுத்துகின்றன. ஒரு நாளைக்கு குறைந்தது 500 மி.கிராம் முதல் 2 கிராம் வரை காமாலினோலினிக் அமிலம் தேவைப்படுகிறது. இதனை ப்ரைம்ரோஸ் எண்ணெயிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

மருந்துக்கடைகளில் கிடைக்கும் ஈவினிங் ப்ரைம்ரோஸ் அல்லது ப்ரைம்மோஸ் மென்குமிழ் மாத்திரையை தினமும் 1 வீதம் மாதவிலக்கான மூன்றாம் வாரத்திலிருந்து 14 நாட்கள் தொடர்ந்து உட்கொள்ள பூப்பு காலத்தில் தோன்றும் பலவிதமான தொல்லைகள் நீங்கும். ஈவினிங் ப்ரைம்ரோஸ் விதையிலிருந்து எடுக்கப்படும்
எண்ணெயை உப உணவாகவும், ஊட்டச்சத்து உணவாகவும் அறிவியல் உலகம் அங்கீகரித்துள்ளது.

*காபி, தேநீர், இனிப்பு, உப்பு போன்றவற்றை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும். கீரைகளையும், பழங்களையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அதிகமாக நிறைந்துள்ள இடங்களில் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்.

* வெயில் காலத்தில் அதிகமாக பூக்கும் இந்த செடிகளின் விதைகளிலிருந்து, இயற்கை முறைப்படி பிரித்தெடுக்கப்படும் வேதிச்சத்துக்களில், பெண்களின் பூப்பு கால தொல்லைகளை கட்டுப்படுத்தும் மருந்துகள் ஏராளமாக காணப்படுகின்றன.

* நன்னாரியால் நன்மையே நன்னாரி ரத்தத்திலுள்ள கால்சியம் ஆக்சலேட் அளவை கட்டுப்படுத்தி, அவற்றின் கூட்டுத்தன்மையை குறைக்கும் தன்மை உடையதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சிறுநீரை நன்கு வெளியேற்றி, பாக்டீரியாக்கள் மற்றும் அதற்காக உட்கொண்ட எதிர் உயிரி மருந்துகளால் ஏற்பட்ட பாதிப்புகளையும் நீக்குகின்றன. அலனைன் கிளைக்காக்ஸ்லேட் அமினோடிரான்ஸ்பரேஸ் பற்றாக்குறையினால் அதிகப்படும் ஆக்சலேட் உப்புகளை நீக்கி, நீரில் கரையக்கூடிய கால்சியம் ஆக்சலேட்டுகளாக மாற்றும் தன்மை நன்னாரிக்கு உண்டு.இதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பலவகையான கற்கள் தோன்றுவது தவிர்க்கப்படுகிறது. நன்னாரியை நீரில் ஊறவைத்தோ அல்லது வேகவைத்து சர்பத் போல் செய்தோ வெயில் காலத்தில் சாப்பிடுவது சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கும். நன்னாரியை அரசர் காலத்திலிருந்தே பானகமாக பயன்படுத்தி, பொதுமக்களுக்கு வழங்கி வந்த வரலாற்று குறிப்புகள் உள்ளன.
– டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ்

`காபி’யில் கண் விழித்தால்…

காலையில் சிலர் காபி முகத்தில் தான் கண் விழிப்பார்கள். இன்னும் சிலரோ டீ வாசனை முக்கைத் துளைக்கும் போதுதான் படுக்கையில் இருந்தே எழுவார்கள். இப்படி காபி, டீயுடன் அன்றைய நாளைத் தொடங்கும் சுவைப்பிரியர்களின் மனதில் கூட எப்போதாவது எட்டிப்பார்க்கும் கேள்வி: `எது நல்லது? காபியா? டீயா?’

முதலில் `டீ’க்கு வருவோமா? டீ குடித்தால் சில புற்று நோய்களும், இதயநோய்களும் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள். அதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க டீ உதவுகிறது.

ஒரு கப் டீயில் காபியை விட குறைவான `காபினே’ இருக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் பற்றி கவலைப்பட அவசியமில்லை. உயர்ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஒருநாளைக்கு ஒரு கப் டீயுடன்நிறுத்திக் கொள்வது நல்லது. இப்படிப்பட்டவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து விடக்கூடும்.

சிலர் டீ கொதிக்க கொதிக்க இருக்கும்போதே அதே சூட்டில் தொண்டைக்குள் இறக்குவார்கள். இப்படியே தொடர்ந்தால் தொண்டையில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறது, சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று.

காபி கதைக்கு வருவோம். `டீ’யை விடவும் காபியில் `காபின்’ அதிகம் இருப்பதால் டீயை விட சிறப்பாகவும், வேகமாகவும், அதிக செயல்திறனை உணரமுடிகிறது. டீ குடிப்பவர் களுக்கு ஏற்படும் சுறுசுறுப்பை விட இது அதிகம். குறிப்பாக டிகாக்ஷன் காபிக்கு நகர்ப்புறத்தில் பிரியர்கள் அதிகம்.

வடி கட்டப்பட்ட `பிளாக் காபி’க்கு அல்சைமர்ஸ், பெருங்குடல் புற்றுநோய், டைப்-2 நீரிழிவு நோய் ஆகியவற்றை தடுக்கும் வாய்ப்பு அதிகம்.

சிலர் கையில் எப்போதும் காபிக்கோப்பை புகைந்து கொண்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் பின்னாளில் மனக்கவலை சார்ந்த நோய்களுக்கு உள்ளாகக்கூடும். எனவே காபியானாலும் அளவோடு குடித்து ஆரோக்கியம் காக்கலாம். காபிக்கு அடிமையாகி விட்டதை உணர்ந்து திடுமென அதை நிறுத்த முயல்பவர்கள் ஒரேயடியாக சோர்ந்து போவார்கள். கவனம் செலுத்துதலில் குறைபாடு ஏற்படக்கூடும். கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம்.

சனி கிரகத்தில் உப்பு நீர் ஏரி ; விஞ்ஞானிகள் தகவல்!

 கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சனி கிரகத்தில் உள்ள என்செலாடஸ் என்ற சந்திரனில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வெந்நீர் ஊற்றுகளும், ஐஸ் கட்டிகளும் இருப்பதை கண்டறிந்தனர்.

இந்நிலையில் ஜெர்மனியைச் சேர்ந்த ஹெய் டெல்பெர்க் பல்கலைக்கழக வானவியல் விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையில் நிபுணர்கள் அந்த நீர் ஊற்றுகள் அங்குள்ள ஏரியிலிருந்து உற்பத்தி ஆவதாக கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கு முன்பு என்செலாடஸ் சந்திரனில் இருக்கும் ஐஸ் படிவங்களை நாசா விண்வெளி மையத்தின் காசினி விண்கலம் போட்டோ எடுத்து அனுப்பியது. அதன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் அந்த ஐஸ் கட்டியில் அதிகளவு உப்பு படிவங்கள் இருப்பதை விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையிலான நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே இங்கு உப்பு நீர் ஏரி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த உப்பு படிவங்களில் 30 சதவீதம் என்செலாடஸ் சந்திரனின் நீரூற்றுகளில் உள்ளது. நீரூற்றுகள் 2 ஏரிகளில் இருந்து வருகின்றன. அதில் ஒன்று என்செலாடஸ் மேற்பரப்பின் அருகே அமைந்திருக்க வேண்டும் என்றும் இது மிகவும் பெரியதாகவும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆசையைத் தூண்டும் `ஆடிப்பால்’

டிப் பண்டிகை தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். `ஆடிப் பட்டம் தேடி விதை` என்பது முதுமொழி. விதைப்பதற்கேற்ற பருவம் என்பதால் விவசாயிகள் பயிரிட தொடங்குவார்கள். நல்ல மழை மற்றும் மகசூல் வேண்டி விழாக்கள் கொண்டாடி வழிபாடு செய்வது உண்டு.

விழாக்கள் என்றாலே சிறப்பு பதார்த்தங்கள் செய்து ருசிப்பது நமது மரபல்லவா? ஆடிப் பண்டிகைக்கு ஆடிப்பால் காய்ச்சி உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தவர்களுக்கும் கொடுக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் இருந்து வந்தது. இன்று அந்த வழக்கம் குறைந்துவிட்டாலும் இன்னும் பல இடங்களில் ஆடிப்பால் உபசரிப்பு நடக்கத்தான் செய்கிறது.

இயற்கை நமக்கு அளித்திருக்கும் பொருட்களான தேங்காய், வெல்லம், ஏலக்காய் முதலியவற்றைக் கொண்டு ஆடிப்பால் செய்வார்கள். சற்றே இனிப்பான சுவையை தன்னிடத்தே அடக்கி உள்ள தேங்காயின் பாலெடுத்து, அதனுடன் இயற்கை இனிப்பான வெல்லம், ஏலக்காய்ப் பொடி சேர்த்து செய்யப்படும் ஆடிப்பால் தனிச்சுவை கொண்டது.

இரும்புச்சத்து நிறைந்த வெல்லம் நம் ரத்தத்தை சுத்திகரிக்க வல்லது. மேலும் சற்று விஷ முறிவுத் தன்மையும் வாய்ந்தது. அற்புத மணமிக்க ஏலக்காய்த் தூள் இதனுடன் சேர்க்கப்படுவதால் ஆடிப்பால் மணமும், சுவையும் ஒருங்கே கொண்டது.

வாருங்கள், பாரம்பரிய பானமான ஆடிப்பால் தயாரித்து பருகலாம்…

தேவையான பொருட்கள்

தேங்காய் – 1
பொடியாக அரிந்த வெல்லம் – 1/2 கப்
ஏலக்காய்ப் பொடி – 1/2 டீ ஸ்பூன்

செய்முறை

* தேங்காயைத் துருவி, சிறிது நீருடன் மிக்சியில் ஓடவிட்டு, உலோக வடிகட்டியில் போட்டு கரண்டியால் நன்கு கசக்கி தேங்காய்ப் பால் எடுக்கவும்.

* உலோக வடிகட்டியில் உள்ள சக்கையுடன் மீண்டும் சிறிது நீர் விட்டு அரைத்து மீண்டும் மேற்கண்ட முறையில் பால் எடுக்கவும். மீண்டும் சிறிது நீர் சேர்த்து சுற்றி மூன்றாம் முறை பால் எடுக்கவும்.

* பொடியாக அரிந்த வெல்லம், மூன்றாம் முறை எடுத்த தேங்காய்ப் பால் சேர்த்து அடிகனமான வாணலியில் கொதிக்கவிட்டு வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும்.

* அதை சிறிது கொதிக்க விட்டு, இரண்டாம் முறை பிழிந்த பாலைச் சேர்த்து கொதிக்க விடவும்.

* பிறகு முதல் தேங்காய்ப் பாலை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் ஏலக்காய்ப் பொடி சேர்த்து கலந்து இறக்கி வைத்து பரிமாறவும்.

குறிப்பு

* தேங்காய் நன்கு முற்றியதாக இருந்தால் ஆடிப்பாலின் சுவை மிகவும் தூக்கலாக இருக்கும்.

* தேங்காயைப் பூத்துருவலாக வெள்ளை வெளேர் என்று துருவி உடனே பால் எடுத்தால் நல்ல சுவை மிக்க பால் கிடைக்கும்.

கீதா பாலகிருஷ்ணன்

டிஜிட்டல் வடிவில் 4 கோடி பக்கங்கள்

பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ள நூல்களை, கூகுள் நிறுவனம் டிஜிட்டல் வடிவிற்கு மாற்றுகிறது. கூகுள் நிறுவனத்தின் கூகுள் புக்ஸ் மற்றும் பிரிட்டிஷ் லைப்ரேரிக்கும் இடையே இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. காப்புரிமை இல்லாத 2 லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் இவ்வகையில் வடிவம் பெற உள்ளன. இவை 1700 – 1870 ஆண்டுகளில் வெளிவந்தவை. ஏறத்தாழ 4 கோடி பக்கங்களைப் பொதுமக்கள் டிஜிட்டல் வடிவில் எளிதாகப் பெற்றுப் பயன்படுத்தலாம். இந்த கால கட்டத்தில் தான் அமெரிக்க மற்றும் பிரெஞ்ச் புரட்சிகள் நடந்தேறின. தந்தி அனுப்பும் முறை, பயண ரயில், அடிமைத்தன ஒழிப்பு ஆகியன மக்களை அடைந்ததும் இந்தக் கால கட்டத்தில் தான்.
இந்த டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான அனைத்து செலவுகளையும் கூகுள் ஏற்றுக் கொள்கிறது என்பது இத்திட்டத்தின் சிறப்பாகும். திட்டம் தொடங்கப்பட்டு சில நூல்கள் டிஜிட்டல் வடிவில் வந்துள்ளன. இந்த திட்டம் முடிய சில ஆண்டுகள் ஆகலாம்.
பிரிட்டிஷ் நூலகம் கடந்த 258 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. கூகுள் புக்ஸ் நிறுவனத்துடன் இத்தகைய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 40 ஆவது நூலகம் இது. பிரிட்டிஷ் நூலகம் ஏற்கனவே மைக்ரோசாப்ட் மற்றும் பிரைட் சாலிட் (BrightSolid) நிறுவனங்களுடனும் இது போன்ற ஒப்பந்தத்தினை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறது. என்ற திட்டத்தின் கீழ் இத்தகைய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டு நூல்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் அமைக்கப்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் வடிவில் கிடைக்கும்போது, அவற்றை பரிமாறிக் கொள்வது மிக எளி தாகும். உலகில் எங்கிருந்தும் இவற்றை டவுண்லோட் செய்து கொள்ளலாம். ஆய்விற்குத் தகவல்களைத் தேடுவது எளிதாகும். இதன் மூலம் மனித குலத்தின் அறிவுத் தேடல்கள் அனைத்தும் வாழும் மற்றும் வருங்கால சந்ததியினருக்கு கிடைக்கும். அறிவின் படிமங்கள் மட்டுமின்றி, நம் சமுதாயப் பண்பாடு, கலை, சரித்திர நிகழ்வுகளை எதிர்காலத்தில் அனைவரும் பெறும் வாய்ப்பினைப் பெறுவார்கள்.
அனைத்து நாடுகளும், நிறுவனங்களும், சமுதாயமும் இதனைப் பின்பற்ற கூகுள் மற்றும் பிரிட்டிஷ் நூலகமும் பாதை வகுத்துள்ளன என்றால் அது உண்மையான ஒரு கூற்றே.

தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!

சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:

நச்சுக்களை அகற்றுபவை:

நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.

எலும்புகளை வலுவாக்குபவை:

இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சினை இல்லை.

கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:

அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.

எளிதில் ஜீரணம்:

சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.

ஆரோக்கியமான மேனி:

பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

குழந்தைகளைப் பழக்க வேண்டிய விஷயங்கள்…-கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசன்

`ஆரம்பத்தில் பிறப்பும் நம்கையில் இல்லை;
அடுத்தடுத்து நடப்பும் நம்வசம் இல்லை.’

குழந்தை பிறந்ததிலிருந்து சுமார் பன்னிரண்டு வருஷங்கள் வரை இது முழுக்கப் பொருந்தும்.

`இந்தப் பருவத்தில் எப்படி வாழ்வது’ என்று அவனுக்குச் சொல்லிப் புரியாது. ஆனால், அவனை `எப்படி வளர்ப்பது’ என்று தாய் தந்தையர்க்குச் சொல்வது முக்கியம்.

இந்தப் பருவத்தில் ஒரு குழந்தையைக் கவனமாகப் பழக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு.

ஒன்று, உணவு; மற்றொன்று, கல்வி.

சுத்தமாக இருக்கப் பழக்கி வைப்பது முக்கியம்.

கிராமத்தில் நான் வெளியே போய்விட்டு வீட்டுக்குத் திரும்பினால், கால்களை அலம்பிக் கொள்ளாமல் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள், என் தாயார்.

காலைக் கழுவும் போது, முழுப் பாதத்திலும் தண்ணீர் ஊற்றி ஒரு காலால் இன்னொரு காலைத் தேய்த்துக் கழுவச் சொல்வார்கள். முன் காலில் தண்ணீர் விழுந்து கணுக்காலில் விழாமல் போனால், `எந்த இடத்தில் தண்ணீர் படவில்லையோ அந்த இடத்தில் சனீஸ்வரன் வந்து உட்கார்ந்து கொள்வான்’ என்பார்கள். நள மகா
ராஜனை அப்படித்தான் சனீஸ்வரன் பற்றிக் கொண்டானாம்.

பேரின்பம் தருகின்றவன் பரமேஸ்வரன்; பெருந்துன்பம் தருகின்றவன் சனீஸ்வரன். இந்த இரண்டு பேருக்கு மட்டும்தான் `ஈஸ்வரன்’ பட்டம் உண்டு.

இந்த இரண்டாவது ஈஸ்வரன் எப்பொழுது ஒரு குழந்தையைப் பற்றி கொள்கிறானாம்?

தயிரும், கீரையும் அதிகம் சாப்பிட வேண்டியவை.

ஆனால், இரவிலே இவற்றைச் சாப்பிடவே கூடாது. அப்படிச் சாப்பிட்டால், `சனீஸ்வரன் பிடிப்பான்’ என்பார்கள்.

ஏன் சொன்னார்கள்?

தயிரும், கீரையும் முழு அளவில் ஜீரணமாகப் பதினெட்டு மணி நேரமாகும்.

பகலில் சாப்பிட்டால், காலையிலேயே தெளிவாக மல ஜலம் கழியும். இரவிலே சாப்பிட்டால் மறுநாள் மத்தியானம் அகாலத்தில் வயிற்றைக் கலக்கும்.

இந்துக்களின் தெய்வ நம்பிக்கை பெரும்பாலும் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஒன்று, உடல் ஆரோக்கியம்; மற்றொன்று, ஆன்ம ஆரோக்கியம்.

பன்னிரண்டு வயது வரையில் நான் தலை முடியை கிராப்பு வெட்டிப் பழகியதில்லை. மொத்தமாக வளர விட்டு விடுவார்கள். எனக்கு என் தாயார் ஜடை போட்டு விடுவார்கள். `மலைக் கோயிலுக்கு முடி, அழகர் கோயிலுக்கு முடி’ என்று ஒவ்வொரு கோயிலுக்காக முடி வளர்க்கச் சொல்வார்கள்.

ஒரு கோயிலுக்குப் போய் முடி இறக்கிக் கொண்டு வந்தவுடனேயே, அடுத்த கோயிலுக்காக `நேர்ந்து’ விடுவார்கள்.

காரணம், பால வயதில் சேருகிற அழுக்கு, மூளையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கா வண்ணம் அடிக்கடி `முடி இறக்குதல்’ என்ற பெயரில் மொட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள். அதையும் தெய்வத்தின் பெயரால் கட்டுப்பாடாகச் செய்வார்கள்.

புத்த சந்நியாசிகளும் சரி, சமண சந்நியாசிகளும் சரி, இந்து சந்நியாசிகளில் ஒரு பகுதியினரும் சரி தலையை மொட்டையாக வைப்பதற்குக் காரணம் இதுதான்.

அடுத்தது, புதன் கிழமையும், சனிக்கிழமையும், மறந்து விடாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள்.

செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு.

உடம்பிலே உஷ்ணக் கோளாறு வராமல் இருக்க இதுவே ஒரே வழி.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாளில் மோர் சாதமோ, தயிர் சாதமோ சாப்பிட விடமாட்டார்கள்.

குளிர்ச்சியாக எண்ணெய் தேய்த்துக் கொள்ளும்போது மேலும் குளிர்ச்சி தரக்கூடிய பொருள்களைச் சாப்பிடக் கூடாது என்பார்கள்.

தாய் தந்தையின் சுவை உணர்ச்சிதான் குழந்தையைப் பற்றிக் கொள்கிறது. அதனால்தான் குழந்தை கருவில் இருக்கும் போது தாய் பத்தியமாக இருக்கிறாள். குழந்தை பிறந்த பிறகும் பெற்றோர் உணவு முறையைக் கட்டுப்பாடாகக் கடைப்பிடித்தால், குழந்தைக்கும் அதே பழக்கம் வரும்.

அதோடு உணவு நேரத்தைப் பற்றிய உணர்ச்சியையும் குழந்தைக்கு உண்டாக்க வேண்டும்.

காலையில் ஆறு மணியடித்தால், `ஆறு மணி, ஆறு மணி எழுந்திரு’ என்று எழுப்ப வேண்டும்.

காலைக் கடன்களை முடிக்க வைக்க வேண்டும்

எட்டு மணியடித்ததும், `எட்டு மணி, எட்டு மணி பலகாரம்’ என்று அவசரப்படுத்த வேண்டும்.

பள்ளிக்குச் சென்று திரும்பியதும், `ஒரு மணி, ஒருமணி’ என்று சாப்பாட்டுக்கு அவசரப்படுத்த வேண்டும்.

இரவிலே `எட்டு மணி, எட்டு மணி’ என்று, துரிதப்படுத்த வேண்டும்.

பல வருஷங்கள், இந்த மணியைப் பற்றிய உணர்ச்சி ஒரு குழந்தைக்குப் படிந்து விட்டால், உடம்புக்கே இது பழக்கமாகி விடும்.

அகால உணவை அந்த உடம்பு ஏற்க மறுக்கும்.

காலம், ஆரோக்கியமான உணவு, அதன் அளவு இந்த மூன்றையும் குழந்தையின் உடற் பழக்கமாக ஆக்கிவிட வேண்டும்.

படிப்பு என்பது, இயற்கையாகவே சில குழந்தைகளுக்கு வரும்; சில குழந்தைகளுக்கு வராது. வராத குழந்தையை உதைத்துப் படிக்க வைப்பது பயன் தராது.

`படிக்காவிடில் வாழ்க்கை இருண்டு போகும்’ என்று அடிக்கடி சொல்வதன் மூலம், கல்வியைப் பற்றி ஒரு உணர்ச்சியை உண்டாக்கலாம்.

ஒழுங்கான பழக்க வழக்கங்களை மட்டும் ஒரு குழந்தைக்கு உண்டாக்கி விட்டால், பிறகு அது எந்தத் துறையில் ஈடுபடுவதையும் அனுமதித்து விடலாம். ஏதாவது ஒரு துறையில் அது முன்னேறி விடும்.

பின்னாளில் அதற்கு வரக்கூடிய உடல் துன்பம் மனத் துன்பம் இரண்டில் இருந்தும், பெற்றோர் அந்தக் குழந்தையை ஓரளவு காப்பாற்றிவிட முடியும்.

`வறுமை நிறைந்த வீட்டில் பெரும்பாலும் அகால நேரத்தில்தானே உணவு கிடைக்கும்’ என்ற கேள்வி எழும்.

அகாலத்தில் கிடைக்கும் உணவைக் கூடச் சூடாக்கிக் காலத்தில் சாப்பிடப் பழக்க வேண்டும்.

`கல்வி கற்க முடியாதே’ என்பீர்கள்.

வறுமையைவிடச் சிறந்த பள்ளிக்கூடம் வேறெதுவும் கிடையாது.

நான் சொல்வது நம்மால் ஆகக்கூடிய காரியங்களை மட்டுமே.

உங்கள் பெயர் நிலைத்து நிற்க வேண்டுமா?

“பாடுபட்டு தேடி பணத்தை புதைத்து வைக்கும்…’ என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல் நினைவு இருக்கிறதா; தேடி வைத்த பொருளை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும்; தான, தர்மங்கள் செய்ய வேண்டும்.
பணத்தை சேர்த்து பூட்டி வைத்தால், “ஐயோ… ஏழைகளுக்கு உதவாமல், இவனிடம் வந்து அகப்பட்டு, பெட்டியில் பூட்டி வைக்கப்பட்டுள்ளோமே; இவனிடமிருந்து எப்போது விடுதலை கிடைக்குமோ…’ என்று அந்த பணம் அழுமாம்.
கோடிக்கணக்கான பணம் இருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்வதால், பிரயோஜனமில்லை; அது பிற்காலம் யாருக்கு போய் சேருமோ! இருக்கும் போதே நல்ல காரியங்களுக்கு செலவிட வேண்டும்.
துளசிதாசருடைய மடத்தில், ஏராளமான செல்வம் குவிந்து கிடந்தது. நிறைய சாதுக்கள் வந்து நன்றாக சாப்பிடுவர்; தேவையான பணம், பொருள் பெற்று செல்வர். ஒரு சமயம் நான்கு திருடர்கள், சாதுக்கள் போல வேஷமிட்டு மடத்துக்குள் வந்து தங்கி விட்டனர்.
இரவு நேரம் வந்ததும் மடத்திலிருந்த சில பொருட்களை திருடி, கொல்லை வழியாக வெளியேற முயன்றனர்; ஆனால், அங்கிருந்த இரண்டு காவலர்கள் திருடர்களை அடித்து, உதைத்து மடத்திலிருந்தவர்களின் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.
விஷயம் அறிந்த துளசிதாசர், திருடர்களைப் பார்த்து, “இந்த பொருளுக்காக இப்படி இரவில் வந்து ஏன் கஷ்டப்பட்டீர்; பகலிலேயே வந்து என்னை கேட்டிருந்தால், நானே கொடுத்திருப்பேனே; இதை நீங்களே எடுத்து செல்லுங்கள்…’
என்றார்; திருடர்கள் மனம் மாறினர்.
“ஐயா… எங்களுக்கு புத்தி வந்தது. காவல்காரர் அடித்த அடியை மறக்க மாட்டோம்…’ என்றனர். இதை கேட்ட துளசிதாசர், “என்னது… காவல்காரர்கள் உங்களை அடித்து விட்டனரா? அவர்களை காட்டுங்கள், நான் தண்டிக்கிறேன்…’ என்றார். திருடர்கள், காவல்காரர்களை தேடிச் சென்றனர்; ஆனால், அவர்களை காணவில்லை.
துளசிதாசருக்கு கோபம் தணியவில்லை. அப்போது ராமர், லஷ்மணர் இருவரும், தாசர் முன் தோன்றி, “நாங்கள் தான் திருடர்களை அடித்தது; காவலுக்கு இருந்ததும் நாங்கள் தான். எங்களை தண்டியுங்க…’ என்றனர்.
தாசர் மனமுருகி, “தங்களை, என் பொருளை காக்கும்படி செய்து விட்டேன். அபசாரம்; என்னை மன்னியுங்கள்…’ என்று கூறி, விழுந்து வணங்கினார்.
அவரை பார்த்து, ராமர், லஷ்மணர், “தாசரே… பொருளை சேர்த்து வைக்காதீர். அன்னதானம் மிகச்சிறந்த தானம். ஆகவே, உம் பொருளை அன்னதானம் செய்து செலவிடுங்க…’ என்று கூறி, அருள் செய்து மறைந்தனர். பிறகு, அவர் அப்படியே செய்தார்.
பணம், பொருள் என்பது பகவானால், ஒரு சிலருக்கு கொடுக்கப்படுகிறது. அவன் மூலமாக அது தர்மத்துக்கு செலவிடப்பட வேண்டும் என்பது பகவானின் எண்ணம். பகவானின் எண்ணத்தை இவன் பூர்த்தி செய்ய வேண்டும்; சேர்த்து வைத்துவிட்டு போகக் கூடாது.
என்ன கொண்டு வந்தோம்; என்ன கொண்டு போகப் போகிறோம் என்று நினைக்க வேண்டும். உயிருடன் இருக்கும் போதே தான, தர்மங்களை செய்து விட்டால், தர்மவான் என்ற பெயராவது என்றென்றும் நிலைத்திருக்கும்.
எனவே, நாம் உயிருடன் இருக்கும் போதே, நல்ல காரியங்களுக்கு செலவழித்து, திருப்தியுடன் வாழலாம்!