உங்கள் பெயர் நிலைத்து நிற்க வேண்டுமா?

“பாடுபட்டு தேடி பணத்தை புதைத்து வைக்கும்…’ என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல் நினைவு இருக்கிறதா; தேடி வைத்த பொருளை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும்; தான, தர்மங்கள் செய்ய வேண்டும்.
பணத்தை சேர்த்து பூட்டி வைத்தால், “ஐயோ… ஏழைகளுக்கு உதவாமல், இவனிடம் வந்து அகப்பட்டு, பெட்டியில் பூட்டி வைக்கப்பட்டுள்ளோமே; இவனிடமிருந்து எப்போது விடுதலை கிடைக்குமோ…’ என்று அந்த பணம் அழுமாம்.
கோடிக்கணக்கான பணம் இருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்வதால், பிரயோஜனமில்லை; அது பிற்காலம் யாருக்கு போய் சேருமோ! இருக்கும் போதே நல்ல காரியங்களுக்கு செலவிட வேண்டும்.
துளசிதாசருடைய மடத்தில், ஏராளமான செல்வம் குவிந்து கிடந்தது. நிறைய சாதுக்கள் வந்து நன்றாக சாப்பிடுவர்; தேவையான பணம், பொருள் பெற்று செல்வர். ஒரு சமயம் நான்கு திருடர்கள், சாதுக்கள் போல வேஷமிட்டு மடத்துக்குள் வந்து தங்கி விட்டனர்.
இரவு நேரம் வந்ததும் மடத்திலிருந்த சில பொருட்களை திருடி, கொல்லை வழியாக வெளியேற முயன்றனர்; ஆனால், அங்கிருந்த இரண்டு காவலர்கள் திருடர்களை அடித்து, உதைத்து மடத்திலிருந்தவர்களின் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.
விஷயம் அறிந்த துளசிதாசர், திருடர்களைப் பார்த்து, “இந்த பொருளுக்காக இப்படி இரவில் வந்து ஏன் கஷ்டப்பட்டீர்; பகலிலேயே வந்து என்னை கேட்டிருந்தால், நானே கொடுத்திருப்பேனே; இதை நீங்களே எடுத்து செல்லுங்கள்…’
என்றார்; திருடர்கள் மனம் மாறினர்.
“ஐயா… எங்களுக்கு புத்தி வந்தது. காவல்காரர் அடித்த அடியை மறக்க மாட்டோம்…’ என்றனர். இதை கேட்ட துளசிதாசர், “என்னது… காவல்காரர்கள் உங்களை அடித்து விட்டனரா? அவர்களை காட்டுங்கள், நான் தண்டிக்கிறேன்…’ என்றார். திருடர்கள், காவல்காரர்களை தேடிச் சென்றனர்; ஆனால், அவர்களை காணவில்லை.
துளசிதாசருக்கு கோபம் தணியவில்லை. அப்போது ராமர், லஷ்மணர் இருவரும், தாசர் முன் தோன்றி, “நாங்கள் தான் திருடர்களை அடித்தது; காவலுக்கு இருந்ததும் நாங்கள் தான். எங்களை தண்டியுங்க…’ என்றனர்.
தாசர் மனமுருகி, “தங்களை, என் பொருளை காக்கும்படி செய்து விட்டேன். அபசாரம்; என்னை மன்னியுங்கள்…’ என்று கூறி, விழுந்து வணங்கினார்.
அவரை பார்த்து, ராமர், லஷ்மணர், “தாசரே… பொருளை சேர்த்து வைக்காதீர். அன்னதானம் மிகச்சிறந்த தானம். ஆகவே, உம் பொருளை அன்னதானம் செய்து செலவிடுங்க…’ என்று கூறி, அருள் செய்து மறைந்தனர். பிறகு, அவர் அப்படியே செய்தார்.
பணம், பொருள் என்பது பகவானால், ஒரு சிலருக்கு கொடுக்கப்படுகிறது. அவன் மூலமாக அது தர்மத்துக்கு செலவிடப்பட வேண்டும் என்பது பகவானின் எண்ணம். பகவானின் எண்ணத்தை இவன் பூர்த்தி செய்ய வேண்டும்; சேர்த்து வைத்துவிட்டு போகக் கூடாது.
என்ன கொண்டு வந்தோம்; என்ன கொண்டு போகப் போகிறோம் என்று நினைக்க வேண்டும். உயிருடன் இருக்கும் போதே தான, தர்மங்களை செய்து விட்டால், தர்மவான் என்ற பெயராவது என்றென்றும் நிலைத்திருக்கும்.
எனவே, நாம் உயிருடன் இருக்கும் போதே, நல்ல காரியங்களுக்கு செலவழித்து, திருப்தியுடன் வாழலாம்!

%d bloggers like this: