குழந்தைகளைப் பழக்க வேண்டிய விஷயங்கள்…-கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசன்

`ஆரம்பத்தில் பிறப்பும் நம்கையில் இல்லை;
அடுத்தடுத்து நடப்பும் நம்வசம் இல்லை.’

குழந்தை பிறந்ததிலிருந்து சுமார் பன்னிரண்டு வருஷங்கள் வரை இது முழுக்கப் பொருந்தும்.

`இந்தப் பருவத்தில் எப்படி வாழ்வது’ என்று அவனுக்குச் சொல்லிப் புரியாது. ஆனால், அவனை `எப்படி வளர்ப்பது’ என்று தாய் தந்தையர்க்குச் சொல்வது முக்கியம்.

இந்தப் பருவத்தில் ஒரு குழந்தையைக் கவனமாகப் பழக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு.

ஒன்று, உணவு; மற்றொன்று, கல்வி.

சுத்தமாக இருக்கப் பழக்கி வைப்பது முக்கியம்.

கிராமத்தில் நான் வெளியே போய்விட்டு வீட்டுக்குத் திரும்பினால், கால்களை அலம்பிக் கொள்ளாமல் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள், என் தாயார்.

காலைக் கழுவும் போது, முழுப் பாதத்திலும் தண்ணீர் ஊற்றி ஒரு காலால் இன்னொரு காலைத் தேய்த்துக் கழுவச் சொல்வார்கள். முன் காலில் தண்ணீர் விழுந்து கணுக்காலில் விழாமல் போனால், `எந்த இடத்தில் தண்ணீர் படவில்லையோ அந்த இடத்தில் சனீஸ்வரன் வந்து உட்கார்ந்து கொள்வான்’ என்பார்கள். நள மகா
ராஜனை அப்படித்தான் சனீஸ்வரன் பற்றிக் கொண்டானாம்.

பேரின்பம் தருகின்றவன் பரமேஸ்வரன்; பெருந்துன்பம் தருகின்றவன் சனீஸ்வரன். இந்த இரண்டு பேருக்கு மட்டும்தான் `ஈஸ்வரன்’ பட்டம் உண்டு.

இந்த இரண்டாவது ஈஸ்வரன் எப்பொழுது ஒரு குழந்தையைப் பற்றி கொள்கிறானாம்?

தயிரும், கீரையும் அதிகம் சாப்பிட வேண்டியவை.

ஆனால், இரவிலே இவற்றைச் சாப்பிடவே கூடாது. அப்படிச் சாப்பிட்டால், `சனீஸ்வரன் பிடிப்பான்’ என்பார்கள்.

ஏன் சொன்னார்கள்?

தயிரும், கீரையும் முழு அளவில் ஜீரணமாகப் பதினெட்டு மணி நேரமாகும்.

பகலில் சாப்பிட்டால், காலையிலேயே தெளிவாக மல ஜலம் கழியும். இரவிலே சாப்பிட்டால் மறுநாள் மத்தியானம் அகாலத்தில் வயிற்றைக் கலக்கும்.

இந்துக்களின் தெய்வ நம்பிக்கை பெரும்பாலும் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஒன்று, உடல் ஆரோக்கியம்; மற்றொன்று, ஆன்ம ஆரோக்கியம்.

பன்னிரண்டு வயது வரையில் நான் தலை முடியை கிராப்பு வெட்டிப் பழகியதில்லை. மொத்தமாக வளர விட்டு விடுவார்கள். எனக்கு என் தாயார் ஜடை போட்டு விடுவார்கள். `மலைக் கோயிலுக்கு முடி, அழகர் கோயிலுக்கு முடி’ என்று ஒவ்வொரு கோயிலுக்காக முடி வளர்க்கச் சொல்வார்கள்.

ஒரு கோயிலுக்குப் போய் முடி இறக்கிக் கொண்டு வந்தவுடனேயே, அடுத்த கோயிலுக்காக `நேர்ந்து’ விடுவார்கள்.

காரணம், பால வயதில் சேருகிற அழுக்கு, மூளையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கா வண்ணம் அடிக்கடி `முடி இறக்குதல்’ என்ற பெயரில் மொட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள். அதையும் தெய்வத்தின் பெயரால் கட்டுப்பாடாகச் செய்வார்கள்.

புத்த சந்நியாசிகளும் சரி, சமண சந்நியாசிகளும் சரி, இந்து சந்நியாசிகளில் ஒரு பகுதியினரும் சரி தலையை மொட்டையாக வைப்பதற்குக் காரணம் இதுதான்.

அடுத்தது, புதன் கிழமையும், சனிக்கிழமையும், மறந்து விடாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள்.

செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு.

உடம்பிலே உஷ்ணக் கோளாறு வராமல் இருக்க இதுவே ஒரே வழி.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாளில் மோர் சாதமோ, தயிர் சாதமோ சாப்பிட விடமாட்டார்கள்.

குளிர்ச்சியாக எண்ணெய் தேய்த்துக் கொள்ளும்போது மேலும் குளிர்ச்சி தரக்கூடிய பொருள்களைச் சாப்பிடக் கூடாது என்பார்கள்.

தாய் தந்தையின் சுவை உணர்ச்சிதான் குழந்தையைப் பற்றிக் கொள்கிறது. அதனால்தான் குழந்தை கருவில் இருக்கும் போது தாய் பத்தியமாக இருக்கிறாள். குழந்தை பிறந்த பிறகும் பெற்றோர் உணவு முறையைக் கட்டுப்பாடாகக் கடைப்பிடித்தால், குழந்தைக்கும் அதே பழக்கம் வரும்.

அதோடு உணவு நேரத்தைப் பற்றிய உணர்ச்சியையும் குழந்தைக்கு உண்டாக்க வேண்டும்.

காலையில் ஆறு மணியடித்தால், `ஆறு மணி, ஆறு மணி எழுந்திரு’ என்று எழுப்ப வேண்டும்.

காலைக் கடன்களை முடிக்க வைக்க வேண்டும்

எட்டு மணியடித்ததும், `எட்டு மணி, எட்டு மணி பலகாரம்’ என்று அவசரப்படுத்த வேண்டும்.

பள்ளிக்குச் சென்று திரும்பியதும், `ஒரு மணி, ஒருமணி’ என்று சாப்பாட்டுக்கு அவசரப்படுத்த வேண்டும்.

இரவிலே `எட்டு மணி, எட்டு மணி’ என்று, துரிதப்படுத்த வேண்டும்.

பல வருஷங்கள், இந்த மணியைப் பற்றிய உணர்ச்சி ஒரு குழந்தைக்குப் படிந்து விட்டால், உடம்புக்கே இது பழக்கமாகி விடும்.

அகால உணவை அந்த உடம்பு ஏற்க மறுக்கும்.

காலம், ஆரோக்கியமான உணவு, அதன் அளவு இந்த மூன்றையும் குழந்தையின் உடற் பழக்கமாக ஆக்கிவிட வேண்டும்.

படிப்பு என்பது, இயற்கையாகவே சில குழந்தைகளுக்கு வரும்; சில குழந்தைகளுக்கு வராது. வராத குழந்தையை உதைத்துப் படிக்க வைப்பது பயன் தராது.

`படிக்காவிடில் வாழ்க்கை இருண்டு போகும்’ என்று அடிக்கடி சொல்வதன் மூலம், கல்வியைப் பற்றி ஒரு உணர்ச்சியை உண்டாக்கலாம்.

ஒழுங்கான பழக்க வழக்கங்களை மட்டும் ஒரு குழந்தைக்கு உண்டாக்கி விட்டால், பிறகு அது எந்தத் துறையில் ஈடுபடுவதையும் அனுமதித்து விடலாம். ஏதாவது ஒரு துறையில் அது முன்னேறி விடும்.

பின்னாளில் அதற்கு வரக்கூடிய உடல் துன்பம் மனத் துன்பம் இரண்டில் இருந்தும், பெற்றோர் அந்தக் குழந்தையை ஓரளவு காப்பாற்றிவிட முடியும்.

`வறுமை நிறைந்த வீட்டில் பெரும்பாலும் அகால நேரத்தில்தானே உணவு கிடைக்கும்’ என்ற கேள்வி எழும்.

அகாலத்தில் கிடைக்கும் உணவைக் கூடச் சூடாக்கிக் காலத்தில் சாப்பிடப் பழக்க வேண்டும்.

`கல்வி கற்க முடியாதே’ என்பீர்கள்.

வறுமையைவிடச் சிறந்த பள்ளிக்கூடம் வேறெதுவும் கிடையாது.

நான் சொல்வது நம்மால் ஆகக்கூடிய காரியங்களை மட்டுமே.

%d bloggers like this: