Daily Archives: ஜூலை 13th, 2011

தயாநிதி உட்பட ஏழு பேரிடம் மந்திரி பதவி பறிப்பு : மத்திய அமைச்சரவையில் சிறிய அளவில் மாற்றம்

தயாநிதி உள்ளிட்ட ஏழு பேரை தனது அமைச்சரவையில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் கழற்றிவிட்டுள்ளார். அமைச்சரவையில் பெரிய அளவில் இல்லாது, குறிப்பிடத்தக்க மாற்றங்களை மட்டுமே செய்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், முக்கிய அமைச்சர்களான வீரப்ப மொய்லி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டவர்களின் இலாகாக்களை மாற்றியமைத்துள்ளார். சல்மான் குர்ஷித், புதிய சட்ட அமைச்சராக்கப்பட்டுள்ளார். எதிர்பார்க்கப்பட்டது போலவே, உத்தரபிரதேச மாநிலத்திற்கு இந்த அமைச்சரவை மாற்றத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவை, நேற்று மூன்றாவது மாற்றத்தை சந்தித்தது. நீண்டநாட்களாக கூறப்பட்டு வந்த அமைச்சரவை மாற்றத்தை ஒருவழியாக, பிரதமர் மன்மோகன் சிங் செய்து முடித்துள்ளார். நிதித்துறை, உள்துறை, வெளியுறவு மற்றும் ராணுவம் ஆகிய மிக முக்கிய நான்கு இலாகாக்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும், பெரிய அளவில் இல்லாமல், ஓரளவு குறிப்பிடத்தக்க அளவில் மட்டும் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தயாநிதி, கிருஷ்ணா – கோதாவரி எரிவாயு பிரச்னையில் சிக்கிய முரளி தியோரா, காமன்வெல்த் போட்டி சர்ச்சையில் சிக்கிய எம்.எஸ்.கில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளராக அறியப்படும் சாய்பிரதாப், உடல்நிலை சரியில்லாத ஹண்டிக், காந்திலால்புரியா, அருண் யாதவ் என ஏழு பேருக்கு அமைச்சரவையில் இருந்து, “கல்தா’ கொடுக்கப்பட்டுள்ளது.
வீரப்ப மொய்லியிடம் இருந்த சட்ட இலாகா பறிக்கப்பட்டுள்ளதுதான் மிக முக்கிய மாற்றமாக கருதப்படுகிறது. அரசாங்கத்திற்கும், சுப்ரீம் கோர்ட்டிற்கும் சமீபகாலமாக பிரச்னை இருந்து வருகிறது. நீதித்துறையுடன் மோதல் போக்கு உருவாகிவருவதுபோல தெரிவதால், மொய்லியின் இடத்திற்கு சல்மான் குர்ஷித் கொண்டு வரப்பட்டுள்ளார். தவிர, உ.பி.,யில் தேர்தல் வருவதால் முஸ்லிம்களின் ஓட்டு வங்கியை கருத்தில்கொண்டு, குர்ஷித்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
உ.பி.,யில் குர்மி வகுப்பைச் சேர்ந்த பெனிபிரசாத் வர்மாவுக்கும் கேபினட் அந்தஸ்துடன் கூடிய இரும்புத்துறை அளிக்கப்பட்டுள்ளது. 10 சதவீத ஓட்டு வங்கியுடைய பிராமண சமூகத்தையும் கவரும் நோக்கில், ராஜிவ் சுக்லாவுக்கு பார்லிமென்ட் விவகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மம்தா வகித்துவந்த ரயில்வே துறையை, அதே கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி மூலம், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளது. திரிவேதி வகித்துவந்த சுகாதாரத்துறை இணையமைச்சர் பதவியையும், அதே திரிணமுல் கட்சியைச் சேர்ந்த சுதிப் பண்டேபாத்தியாயா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ராகுல் சிஷ்யர்களுக்கும் இந்த மாற்றத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. கழற்றிவிடப்பட்ட முரளி தியோராவின் மகன் மிலன் தியோராவுக்கு தொலைத்தொடர்பு துறை இணையமைச்சர் பதவி கிடைத்துள்ளது. மற்றொரு முக்கிய சிஷ்யரான ஜிதேந்திர சிங்கிற்கு உள்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
லோக்சபா சபாநாயகர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டு, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு கடைசியில் பதவி கிடைக்காமல் போனவராக கருதப்படும் கி÷ஷார் சந்திரதேவுக்கு, இம்முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. மிகவும் அனுபவம் வாய்ந்த இவருக்கு பழங்குடியினர் நலம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் இலாகா கிடைத்துள்ளது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது மிக அதிக சர்ச்சைகளில் சிக்கிய ஜெய்ராம் ரமேஷும், இம்முறை தனது இலாகாவை பறிகொடுத்துள்ளார். பெரிய நிறுவனங்களின் கோபத்தை இவர் சம்பாதித்த காரணத்தால் சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, கேபினட் அந்தஸ்துடன் கூடிய ஊரக வளர்ச்சித்துறை வழங்கப்பட்டுள்ளது. ஜெய்ராம் ரமேஷிடம் இருந்த சுற்றுச்சூழல் துறை, ஜெயந்தி நடராஜனிடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவரான இவர், ஏற்கனவே குஜ்ரால் அரசில் விமானப்போக்குவரத்து இணையமைச்சராக இருந்தார்.
தி.மு.க.,வைச் சேர்ந்த யாரும் புதிதாக அமைச்சராக்கப்படவில்லை. ஏற்கனவே இருக்கும் அமைச்சர்களின் இலாகாக்களிலும் கைவைக்கப்படவில்லை. இருப்பினும், “அமைச்சரவை மாற்றம் இன்னும் முற்றுப்பெறவில்லை’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியிருப்பதால், அடுத்த மாற்றத்தின்போது தி.மு.க., சார்பில் சிலர் அமைச்சராக்கப்படலாம் என்று தெரிகிறது.
புதிய அமைச்சர்கள் அனைவரும் நேற்று மாலை ஜனாதிபதி மண்டபத்தில் உள்ள அசோகா ஹாலில் பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சரவை மாற்றம் என்பது இம்முறை பெரிய அளவில் இருக்கும் என்றும், இந்த மாற்றத்தின் மூலம் மன்மோகன் சிங் அரசின் மீதான தோற்றமேகூட மாறும் என்றும் கூறப்பட்டது. ஆனால், எந்தவொரு பெரிய மாற்றத்தை இம்முறையும் மன்மோகன் சிங் செய்திடாதது பல தரப்பையும் ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது.

புதிய அமைச்சர்கள் – அறிமுகம்

பவன்சிங் கடோவர்: புதிய அமைச்சரவையில், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி இணை அமைச்சர் பதவி, பவன்சிங் கடோவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர், அசாம் மாநிலத்தில், 1950ல் பிறந்தவர். திப்ருகார் லோக்சபா தொகுதியிலிருந்து, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது தந்தை, கனய் கடோவர். மனைவி ஜிபோந்தரா கடோவர். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கவுகாத்தி பல்கலையில், பி.ஏ., பட்டம் பெற்றவர். 1985ம் ஆண்டிலிருந்து, காங்., கட்சியில், பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

தினேஷ் திரிவேதி: புதிய அமைச்சரவையில், ரயில்வே துறை அமைச்சர் பதவி, தினேஷ் திரிவேதிக்கு வழங்கப்பட்டுள்ளது. திரிணமுல் காங்., கட்சியைச் சேர்ந்த இவர், பாரக்பூர் லோக்சபா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஹீராலால், ஊர்மிளாபென் திரிவேதி தம்பதியினருக்கு, 1950ல் டில்லியில் பிறந்தார்.
இவரது மனைவி மினல் திரிவேதி. ஒரு மகன் உள்ளார். பி.காம்., எம்.பி.ஏ., பட்டம் பெற்றவர். முதன்முதலில், 1990ம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்.

கிஷோர் சந்திர தியோ: புதிய அமைச்சரவையில், கி÷ஷார் சந்திர தியோவுக்கு, பழங்குடியினர் விவகாரம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர், அரக்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர், பி.வி.தியோவுக்கும், சோபலதா தேபிக்கும், 1947ல் பிறந்தார். பி.ஏ., பொருளாதாரமும், எம்.ஏ., அரசியல் அறிவியல் பட்டமும் பெற்றவர். மனைவி பிரீத்தி தியோ. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 1977ல் முதன்முதலில், லோக்சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திர மாநில காங்., கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

சுதீப் பந்தோபாத்யா: புதிய அமைச்சரவையில், சுதீப் பந்தோபாத்யாவுக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. திரிணமுல் காங்., கட்சியைச் சேர்ந்த இவர், உத்தர் லோக்சபா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிஸ்வேஷ்வர், ஜியோத்ஸ்னா பந்தோபாத்யா தம்பதியினருக்கு, 1952ல், மே.வங்கத்தில் பிறந்தார். மனைவி நயனா பந்தோபாத்யா. இவர், 1987ல், மேற்குவங்க சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.எஸ்சி., பட்டம் பெற்றவர். பல்வேறு சமூகசேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

மிலிந்த் தியோரா: புதிய அமைச்சரவையில், மிலிந்த் தியோராவுக்கு தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர், முரளி தியோராவின் மகன். மும்பை தெற்கு தொகுதியில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர். முரளி தியோரா, ஹேமா தியோரா தம்பதியினருக்கு, 1976ல் மும்பையில் பிறந்தார். இவரது மனைவி பூஜா தியோரா. பி.பி.ஏ., பட்டம் பெற்றவர். காங்., கட்சி சார்பாக, 2004ல் முதன்முதலில் எம்.பி., ஆனார். தற்போது காங்., கட்சியின் இளம் அமைச்சர்கள் பட்டியலில் இவரும் சேர்ந்துள்ளார்.

ஜிதேந்திர சிங்: புதிய அமைச்சரவையில், ஜிதேந்திர சிங்குக்கு, உள்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர், சோனிபேட் தொகுதியில் இருந்து, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜிந்தர் சிங், தனபதி தம்பதியினருக்கு, 1970ல், சோனிபேட்டில் பிறந்தார். 41 வயதான இவர், காங்., கட்சியில், ராகுலுக்கு நெருக்கமானவர். பி.ஏ., எல்.எல்.பி., பட்டம் பெற்றவர். 1995ம் ஆண்டு அரசியல் வாழ்க்கையை துவங்கிய இவர், 2000ம் ஆண்டு, அரியானா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்., கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவர்.

ஜெயந்தி நடராஜன்: காங்., கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த, தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன், புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இவர், சுற்றுச்சூழல் அமைச்சராக (தனிப்பொறுப்பு) பதவியேற்கிறார். 1954, ஜூன் 7ல் பிறந்த இவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் பேத்தி. ஆரம்ப காலத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர், காங்., கட்சியில் இணைந்த இவர், முதல் முறையாக, 1986ல், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். 1992ல், மீண்டும் ராஜ்யசபா எம்.பி., ஆனார். இதற்கிடையே காங்., கட்சியில் இருந்து விலகி, மூப்பனார் தலைமையிலான த.மா.கா.,வில் இணைந்தார்.
இக்கட்சி சார்பாக, 1997ல், மீண்டும் ராஜ்யசபாவுக்கு தேர்வானார். மத்திய விமான போக்குவரத்து இணை அமைச்சராக பணியாற்றினார். மூப்பனார் மறைவுக்குப் பின், த.மா.கா., – காங்., கட்சியுடன் இணைக்கப்பட்டது. பின், பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து அமைக்கப்பட்ட பார்லி கமிட்டியின் தலைவராக இருந்தார். பின், காங்., கட்சியின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றினார்.

ராஜிவ் சுக்லா: உத்தர பிரதேசத்தின் கான்பூரில், 1959, செப்.,13ல் பிறந்த ராஜிவ் சுக்லா, தற்போதைய புதிய அமைச்சரவை பட்டியலில் பார்லிமென்ட் விவகாரத் துறை இணை அமைச்சராக பதவியேற்கிறார். பத்திரிகையாளராக தன் வாழ்க்கையை துவக்கிய இவர், 2000ம் ஆண்டு முதன்முதலாக ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். அகில பாரதிய லோக்தந்த்ரிக் என்ற கட்சியை நடத்தி வந்த இவர், 2003ல் அதை காங்கிரசுடன் இணைத்தார். பின்னர், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். அடுத்து அகில
இந்திய காங்., கட்சி செயலராகவும் நியமிக்கப்பட்டார். 2006ல் காங்., சார்பாக, 2வது முறையாக, ராஜ்யசபா எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.சி.சி.ஐ.,யின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். இவரது மனைவி அனுராதா பிரசாத், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும், “டிவி’ தொகுப்பாளராக உள்ளார்.

சரண் தாஸ் மகந்த்: சத்திஸ்கரின் கோர்பா லோக்சபா தொகுதியில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட சரண் தாஸ் மகந்த், வேளாண்மைத் துறை இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். 1954, டிச.,13 ல் பிறந்த இவர், மூன்று முறை மத்திய பிரதேச மாநிலத்தில், எம்.எல்.ஏ., ஆக தேர்வு செய்யப்பட்டார். மாநில அமைச்சராகவும் பதவி வகித்தார். முதல்முறையாக, லோக்சபாவுக்கு, 1998ல் தேர்வு செய்யப்பட்டார். தற்போது மூன்றாவது முறையாக லோக்சபா எம்.பி.,யான இவருக்கு, புதிய அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது.

மீடியாவை ஆயுதமாகக் கொண்டு தன்னை அழிக்க சன் டி.வி., முயற்சி: நித்யானந்தா குற்றச்சாட்டு

மீடியாவை ஆயுதமாகக் கொண்டு தன்னை அழிக்க நினைக்கிறார்கள் என சன் டி.வி., மற்றும் தினகரன் மீது நித்யானந்தா குற்றம் சாட்டியுள்ளார்.

நீண்ட நாட்களுக்குப்பிறகு தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க சென்னையில் உள்ள மெரினா டவர்ஸ் ஓட்டலில் நிருபர்களை சாமியார் நித்யானந்தா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சன் டி.வி.,யில் கடந்த சில மாதங்களுக்கு முன் தானும் ரஞ்சிதாவும் படுக்கையறையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சன் டி.வி., மற்றும் சில இணைய தளங்களில் ஒளிபரப்பானது. இது முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் உண்மைத்தன்மை அறிய தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையிலேயே சன் டி.வி.,யில் ஒளிபரப்பான அந்த சி.டி., தான் அனுப்பப்பட்டதா என்பதை தெளிவாக்க வேண்டும் என்று கூறினார்.

மீடியாவை ஆயுதமாகக்கொண்டு தன்னை அழிக்க சன் டி.வி., மற்றும் தினகரன் நாளிதழ் ஆகிய ராட்சசர்கள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், தானும் ஒரு பத்திரிக்கைக்காரன் தான். இது ஒரு ஒழுக்கப்பிரச்னை. தன் மீது ஏதேனும் புகார் இருந்தால் தனது மூத்த சீடர்களோ அல்லது மூத்த நடுநிலை பத்திரிக்கையாளர்களோ தன்னிடம் நேரிடையாகவே கேட்டிருக்கலாம். அதை விடுத்து தன்னை அழிக்க சன் டி.வி., முயற்சித்தது என்று தெரிவித்தார்.

இந்த பிரச்னைக்கு மூல காரணம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சக்சேனாவின் கூட்டாளியான ஐயப்பனும், வக்கீல் ஸ்ரீதரும் தான் காரணம் என்று குற்றம் சாட்டிய நித்யானந்தா, இவர்கள் இருவரும் எங்களிடம் நில அபகரிப்பு, பணம் கேட்டு மிரட்டல், அடித்து உதைத்தல் மற்றும் பணப்பிரச்னைகளை ஏற்படுத்துதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். முதலில் ரூ. 100 கோடி கேட்டு மிரட்டிய அவர்கள், பின் 60 கோடி கேட்டு மிரட்டியதாக தெரிவித்தார். ஆனால் தனக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக தனது சீடர்கள் அவர்களிடம் 25 முதல் 30 லட்சம் வரை தந்துள்ளனர் என்று கூறிய நித்யானந்தா, எனினும் அவர்கள் தொல்லை தொடர்ந்தாக தெரிவித்தார்.

தனக்கு என்ன நடந்தாலும் அதற்கு சன் டி.வி.,யும், தினகரன் நாளிதழுமே முழுப்பொறுப்பு என்று தெரிவித்த நித்யானந்தா, இது தொடர்பாக தாங்கள் அளித்த புகாரை எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார். தமிழகம் மற்றும் பெங்களூரில் 120 தியான மையங்கள் சன் டி.வி., ரவுடிகளால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும், பிடதி, திருவண்ணாமலை போன்ற ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தங்கள் சீடர்கள் 17 பேரின் வேட்டியை உருவி விட்டும், 7 பேர் மீது கொலை வெறி தாக்குதலும் நடத்தப்பட்டதாக நித்யானந்தா தெரிவித்தார். தாரமங்கலம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஏம்பலம் தியான பீடத்தில் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிடதியில் உள்ள எங்களது ஆசிரமத்தின் மீது பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே சன் டி.வி., நிருபர்களும், கேமிரா மேன்களும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டனர். இவை அனைத்தும் சன் டி.வி.,யின் தூண்டுதலின் காரணமாகவே நடந்துள்ளது என்று நித்யானந்தா குற்றம் சாட்டினார்.

தன் மீது 376 சட்டப்பிரிவின் கீழ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதில் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறிய நித்யானந்தா, தனது மீதான தாக்குதல் மற்றும் பொய்ப்பிரச்சாரம் குறித்து சில மாதங்களுக்கு முன் அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்தித்து கடிதம் கொடுத்ததாகவும், ஆனால் அதற்கு பின்னும் எங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படவில்லை. ஆசிரமத்தின் முன்னாள் சீடரான லெனின் கையாள் பிரசன்னா என்பவர் ரூ. 100 கோடி பணம் கொடுத்தால் இப்பிரச்னைகளை எல்லாம் ஊதித்தள்ளிவிடலாம் என தனது ஆசிரமத்தில் உள்ளவர்களுடன் பேசிய ஆடியோ டேப் தன்னிடம் உள்ளது என்றும் நித்யானந்தா தெரிவித்தார்.

இப்பேட்டியின் போது, நடிகை ரஞ்சிதாவும் நித்யானந்தாவுடன் இருந்தார். எங்களுடன் நடிகை ரஞ்சிதாவும் பேட்டியில் அமர்ந்திருப்பது தனது நேர்மையையும், தைரியத்தையும் எடுத்துக்காட்டுவதாக நித்யானந்தா தெரிவித்தார். மேலும் இலங்கை பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்த நித்யானந்தா, இலங்கை போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆசிரமம் ஒன்று ஏற்படுத்தவிருந்ததாகவும் ஆனால் அப்போதைய ஆட்சியாளர்கள் இதற்கு ஒப்புதல் அளிக்க வில்லை என்று தெரிவித்தார். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் 3வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாளை மறுநாள் (ஜூலை 15)ம் தேதி குரு பவுர்ணமியையொட்டி, பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் பொதுமக்கள் மத்தியில் அறிவியல் செயல் முறை விளக்கம் செய்து காட்டப்படவுள்ளது. இதில் மனித உடலானது சூரியனிலிருந்து பெறும் ஒளியைக் கொண்டு தியான நிலையில் சில அடி உயரம் மேலெழும்ப முடியும் என்பது செய்து காட்டப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

கைகள் பாதுகாப்பு

வீட்டில் துணி துவைப்பது என்பது அன்றாட அத்தியாவசிய பணியும் கூட. கையால் துணிக்கு சோப்பு போடும்போது நாளடைவில் அலர்ஜி காரணமாக சருமத்தில் பாதிப்பு ஏற்படும். இதை தவிர்க்க, மிருதுவான `கிளவ்ஸ்’ அணிந்து கொண்டு துணி துவைக்கலாம்.

சிலருக்கு வேலையின் பொருட்டோ, வெயிலின் பொருட்டோ முழங்கை பகுதி கறுப்பாகி விடும். நன்றாக பழுத்த ஏத்தம்பழத்தை தேயிலை சக்கையுடன் பிசைந்து அந்தப்பகுதியில் போட்டு வந்தால் கறுப்பு மாறிவிடும். கேரட் சாறுடன் முள்ளங்கிச்சாறை கலந்து பூசினாலும் கை மூட்டில் உள்ள கறுப்புநிறம் மறையத் தொடங்கும்.

சமையலுக்கு நாம் பயன்படுத்தும் சில காய்கறிகளில் இருந்து வெளிப்படும் ஒருவித கறை கையில் ஒட்டிக் கொண்டுவிடும். கறை ஏற்படுத்தும் காய்கறிகளை நறுக்கும்முன்பாக கொஞ்சம் எலுமிச்சை சாறில் உப்புத்தூள் கலந்து அந்தக் கலவையை கைளில் தடவிக்கொள்ள வேண்டும்.

அன்றாட வேலை முடித்து படுக்கைக்குப் போகும்போது அதுவரை வேலை செய்த உடம்பு அடித்துப்போட்டமாதிரி ஆகிவிடும். உடம்பே இப்படியென்றால் அந்த உடம்பின் ஒரு உறுப்பான `கை’க்கும் அசதி இருக்கத் தானே செய்யும். படுக்கைக்குப் போகும்முன் பியூமிக் ஸ்டோனை உள்ளங்கைக்குள் வைத்து உருட்டி மசாஜ் செய்யலாம்.

சமையல் அறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களும் இதற்கு `கை’ கொடுக்கும். டீத்தூளின் சக்கை, தேங்காய்ப்பால் பிழிந்தபின் கிடைக்கும் சக்கை இரண்டையும் எடுத்துக்கொண்டு மிக்சியில் போட்டு அடித்து அதில் ரவை கலந்து கைகளில் தடவலாம். கைகளில் ரத்தஓட்டத்தை அதிகரிக்கும் மசாஜ் ஆக இது இருக்கும்.

பொதுவாக எந்தக் காய்கறி நறுக்குவதாக இருந்தாலும் விரல்களில் `கேப்’ அணிந்து கொண்டால் பிரச்சினை இல்லை. `இதற்கெல்லாம் எதற்கு கிளவ்சும், கேப்பும் என்று கருதுபவர்கள் கட்டிங் போர்டில் வைத்து காய்கறி நறுக்குவது நல்லது.

சிறிதளவு வினிகருடன் தக்காளி சாறு கலந்து கைகளில் தடவலாம். கற்றாழையில் உள்ள குழம்பை எடுத்து அதில் கொஞ்சம் பால் சேர்த்து கைகளில் தடவி வரலாம். அல்லது பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து கைகளில் தேய்க்கலாம்.

பாலுடன் கேரட்டை மிக்சியில் போட்டு அடித்து கூழாக்கி அதை பிரிஜ்ஜில் வைத்து தேவைப்படும்போதும் பயன்படுத்தலாம்.

அனிமேஷன் திரைப்பயணம்: 04 – தொழில்நுட்ப வரலாறு

இந்திய நதிகளைப் பற்றி எழுதும்போது கங்கையைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. அதேபோல, கங்கையைப் பற்றி எழுதும் போது, கங்கோத்ரி பற்றி எழுதாமல் முழுமையடையாது. ஒரு விதத்தில் கங்கோத்ரி எல்லா இந்திய நதிகளின் ஆரம்பம் என்று சொல்ல்லாம். குறைந்தபட்சம் கங்கோத்ரியிலிருந்து இந்திய நதிப் பயணத்தை ஆரம்பிக்கலாம். க்ராபிக்ஸ் உலகில் அப்படிப்பட்ட கங்கோத்ரி, இவான் சதர்லாண்ட் என்ற விஞ்ஞானி. இவரிடம் தொடங்கி எல்லா அனிமேஷன் விஷயங்களும் வளர்ந்தன என்றால் மிகையாது. இவர் Sketchpad என்ற புதுமை நிரல் ஒன்றை 1960-களில் உருவாக்கினார். முதன் முறையாக கோடுகள், வளைவுகள், கணினி திரையில் வரைய வழி வகுத்தார். இவற்றைக் கொண்டு வரைந்த படங்களை நகல் எடுக்க முடிந்த்து, ஒட்ட முடிந்தது, சுழற்ற முடிந்தது. முதன் முறையாக இன்னொரு விஷயம் – ஜூம் செய்வது எப்படி என்று அழகாக இந்த நிரல் மூலம் விளக்கினார் சதர்லாண்ட். இவரது மாணவர் வானெவர் புஷ் எழுதிய ‘As we may think’ என்ற கட்டுரை மிகவும் சரித்திர புகழ் பெற்றது.

இவான் சதர்லாண்ட் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பொழுது பல மாணவர்களின் டாக்டர் பட்ட ஆராய்ச்சிக்கு உதவி செய்து ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கினார் என்றால் மிகையாகாது. இவருடைய மாணவர் டேனி கோஹென் உலகின் முதல் விமான சிமுலேட்டர் மென்பொருளை உருவாக்கினார். சதர்லாண்ட் அவருடைய மாணவர் கோஹெனுடன் முப்பரிமாண அனிமேஷன் பற்றிய அடிப்படைக் கொள்கைகளை புத்தகம் மூலம் விளக்கினார். பல்கலைக்கழகங்கள் கணினி க்ராபிக்ஸ் பற்றிய பாடங்கள் நடத்தத் தொடங்கின. சதர்லாண்ட் யூட்டா பல்கலைகழகத்திற்கு 1968-இல் மாறினார். ஒரு க்ராபிக்ஸ் புரட்சியே உருவாக்க இது உதவியது என்று அப்பொழுது அவருக்கு தெரியவில்லை. மற்றொரு மாணவர் ஹென்ரி கெளராட் முதல் நிழலமைப்பு நிரலை உருவாக்கினார். இவருடைய மற்றுமொரு புகழ்பெற்ற மாணவர் எட் காட்மல் – இவர், இன்று டிஸ்னி பிக்ஸாரின் தலைவர்.

இதே சமயத்தில் சதர்லாண்ட் புதிய நிறுவனம் ஒன்றை டேவிட் இவான்ஸ் என்ற சக விஞ்ஞானியுடன் தொடங்கினார். அதில் அவருடைய முதல் ஊழியர்கள் இன்று இந்த தொழிலின் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். ஜிம் க்ளார்க் அதில் ஒருவர் – இவர் சிலிகான் க்ராபிக்ஸ் என்ற மிக பெரிய க்ராபிக்ஸ் மென்பொருள் மற்றும் வன்பொருள் கம்பெனியை உருவாக்கியவர். மற்றவர் – ஜான் வார்னாக், இவர் அடோபி என்ற மிக பெரிய மீடியா நிறுவனத்தை தொடங்கினார். அனிமேஷன் துறையில் உள்ள இன்னொரு மாபெரும் நிறுவனம், ட்ரீம்வர்க்ஸ் – இந்நிறுவனம் ஒன்றுதான் சதர்லாண்டுடன் நேரடி சம்மந்தம் இல்லாதது. சதர்லாண்டின் புரட்சிகரமான கணினி முன்னேற்றம் பல இளம் விஞ்ஞானிகளை க்ராபிக்ஸ் துறையில் ஆர்வம் கொள்ளச் செய்த்து. கடந்த 40 வருடங்களில் இத்துறையின் முன்னேற்றம் அசாத்தியமானது. விஞ்ஞானிகள் சிக்க்ராஃப் (SIGGRAPH) என்ற அமைப்பில் ஒவ்வொரு சந்திப்பிலும் தங்களது புதிய உத்திகளை விவரித்து இத்துறையை முன்னேற்றினார்கள். பல பல்கலைக்கழக டாக்டர் பட்ட ஆராய்ச்சிகள் இத்துறையின் இன்றைய நிலைக்கு காரணம். இவான் சதர்லாண்ட் இத்துறையின் தந்தை என்று சொன்னால் மிகையாகாது.

ஜிம் க்ளார்க் பல க்ராபிக்ஸ் சம்மந்தப்பட்ட கேத்திர மாற்றங்கள் (geometry pipelines) பற்றி ஆராய்ச்சி செய்து வந்தார். 1979 ல் இவருடைய ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக ஆய்வு குழு கேத்திர என்ஜின் (geometry engine) ஒன்றை மென்பொருளில் உருவாக்கியது. இன்றுவரை அனைத்து விதமான அனிமேஷனுக்கும் ஆதாரம் இந்த அடிப்படை கொள்கையாக விளங்குகிறது. இவர் சில சக விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களுடன் 1982-இல் சிலிகான் க்ராபிக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். 1980/90-களில் ஹாலிவுட்டின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எல்லாம் சிலிகான் க்ராபிக்ஸ் மென் மற்றும் வன்பொருளாலேயே செய்யப்பட்டது என்றால் மிகையாகாது. ’Jurassic Park’, ‘Congo’, போன்ற திரைப்படங்கள் SGI புண்ணியத்தில் நம்மையெல்லாம் இருக்கை நுனிக்கு வரச் செய்தது!

இதே காலகட்டத்தில் அருகே கனடாவில் உள்ள டெரொண்டோ நகரில் உள்ள ஷெரிடன் கல்லூரியில் சிலர் க்ராபிஸ் மீது ஈடுபாடு கொண்டு பல புதிய மென்பொருள் உத்திகளை கண்டுபிடித்து வந்தனர். இவர்கள் இந்த கல்லூரியிலிருந்து வெளியேறி, ஏலியஸ் (Alias Wavefront) என்ற நிறுவனத்தை தொடங்கி ’Maya’ என்ற உலகின் முதல் முப்பரிமாண மென்பொருள் தொகுப்பை வெளியிட்டார்கள். பல அனிமேஷன் ஸ்டூடியோக்கள் இதை வைத்து பல திரைப்படங்கள், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எல்லாம் உருவாக்கத் தொடங்கினார்கள். ‘Jurassic Park’ ல் டைனாஸர் மிரட்டுவதெல்லாம் ’மாயா’ புண்ணியத்தில். அதே போல, ‘Terminator-இல் ஆர்னால்டு, தீயிலிருந்து எழுந்து வந்து அனைத்தையும் துவம்சம் பண்ணுவதும் ‘மாயா’ உபயத்தால். 1995 ஆம் ஆண்டு சிலிகான் க்ராபிக்ஸ் ஏலியஸ் நிறுவனத்தை வாங்கியது. இன்று சிலிகான் க்ராபிக்ஸ் நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. ஏலியஸ் ஆட்டோடெஸ்க் என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டு மாயா தொடர்கிறது. ஆட்டோடெஸ்க் ‘மாயா’வைப்போல 3DS Max என்ற முப்பரிமாண அனிமேஷன் மென்பொருள் தொகுப்பையும் விற்கிறது.

ஜான் வார்னாக் யூட்டா பல்கலைகழகத்தில் ஸதர்லாண்டிடம் க்ராபிக்ஸ் படித்தார் என்று பார்த்தோம். இவரின் டாக்டரேட் ஆராய்ச்சி, எப்படி மறை தளத்தை (hidden surface elimination) கையாள்வது என்பதைப் பற்றியது. இதை க்ராபிக்ஸ் உலகின் வார்னாக் அல்கரிதம் என்று அழைக்கிறார்கள். இவர் 1982 ல் அடோபி என்ற நிறுவனத்தை தொடங்கினார். இன்று உலகின் மிகப் பெரிய மீடியா மென்பொருள் நிறுவன்ங்களில் அடோபியும் ஒன்று. அடோபியின் முக்கிய மீடியா மென்பொருட்களில் ட்ரீம்வீவர், ஃப்ளாஷ் அனிமேஷன் துறையில் இணையதளங்களில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகின்றன.

ஜானைப் போல எட் காட்மல் லும் ஸதர்லாண்டின் மாணவர். எட், நியூ யார்க் இன்ஸ்டிட்யூட் என்ற அமைப்பில் க்ராபிக்ஸ் ஆராய்ச்சி செய்து வந்தார். க்ராபிக்ஸில் ஆர்வமுள்ள ஜார்ஜ் லூகாஸ் என்பவர் (புகழ் பெற்ற Star Wars திரைப்பட தொடரை உருவாக்கியவர்) க்ராபிக்ஸில் ஆர்வம் கொண்டவர். லூகாஸுடன் வேலை செய்த எட், லூகாஸின் ஸ்டூடியோவில் சேர்ந்தார். Star Trek II போன்ற வெற்றி திரைப்படங்களில் பல அனிமேஷன் சாதனைகளை படைத்தவர் எட். 1986 ஆம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேறிய ஸ்டீவ் ஜாப்ஸ் (இவர் மீண்டும் 1997 ல் ஆப்பிளுக்கே திரும்பி விட்டார்) ஜார்ஜ் லூகாஸ், எட் காட்மல் மற்றும் ஆல்வி ரே ஸ்மித் சேர்ந்து பிக்ஸார் என்ற அனிமேஷன் நிறுவனத்தை தொடங்கினார்கள். ஆரம்பத்தில் வன்பொருள் மற்றும் விளம்பர படங்கள் தயாரித்து வந்தார்கள். டிஸ்னி ஸ்டூடியோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு முதல் முறையாக முப்பரிமாண ‘Toy Story’ என்ற திரைப்படத்தை 1995-இல் வெளியிட்டார்கள். ஜான் லாஸட்டர் இயக்கிய இப்படத்தைப் பற்றி மூன்றாம் பகுதியில் விவரமாகப் பார்த்தோம். பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கிய பிக்ஸாரை டிஸ்னி 2006-இல் வாங்கியது. சென்ற ஆண்டு பல ஆஸ்கர்களை வென்ற ‘Up’ திரைப்படம் பிக்ஸார் படைப்பு. இவ்வாண்டு வெளிவந்து பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘Toy Story 3’ பிக்ஸார் படைப்பு. அனிமேஷன் திரைப்பட நிறுவனங்களில் டிஸ்னி பிக்ஸார் மிகவும் முக்கியமான வெற்றி நிறுவனம். அத்துடன் பல புதிய அனிமேஷன் நுணுக்கங்களை க்ராபிக்ஸ் உலகிற்கு அளித்த பங்கும் பிக்ஸாருக்கு உண்டு.

முன்பு சொன்னது போல ட்ரீம்வர்க்ஸ் SKG ஸதர்லாண்டுடன் நேரடி சம்பந்தமில்லாத ஸ்டூடியோ. இதில் S என்பது Speilberg ஐயும், K என்பது Katzenberg ஐயும், G என்பது Geffen – ஆகிய மூன்று நிறுவனர்களை குறிக்கும். 2005-இல் வியாகாம் என்ற மிக பெரிய சினிமா கம்பெனி ட்ரீம்வர்க்ஸை வாங்கியது. இந்தியாவைச் சேர்ந்த அனில் அம்பானி இந்த ஸ்டூடியோவின் 50% சொந்தக்காரர். Katzenberg டிஸ்னியிலிருந்து வெளியேறி, ஸ்பீல்பெர்குடன் இந்த புதிய அனிமேஷன் ஸ்டூடியோவை ஆரம்பித்தார். முதல் தயாரிப்பு Antz – இதைப்பற்றி முதல் பாகத்தில் பார்த்தோம். பூச்சிகளைக் களமாக வைத்து எடுத்த படம். இவர்களுடைய மிக பெரிய படைப்பு Shrek – சமீபத்தில் நாலாவது பாகம் வெளிவந்து ஒளி முப்பரிமாண அனிமேஷன் படமான இது, அவ்வளவு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

ட்ரீம்வர்க்ஸுக்கும் பிக்ஸாருக்கும் எப்பொழுதும் கடும் போட்டி. இதனால் நமக்கு நல்ல அனிமேஷன் திரைப்படங்கள் கிடைப்பதோடு, மிக வேகமாக இத்துறையில் தொழில்நுட்பம் வளரவும் காரணமாக இருக்கிறது. பிக்ஸாரின் ரெண்டர்மேன் மென்பொருளும், ட்ரீம்வர்க்ஸின் மனித சித்தரிப்பு அனிமேஷன் சாதனைகளும் குறிப்பிடத்தக்கவை. பொதுவாக பெரிய ஸ்டூடியோக்கள் வணிக ரீதியான மென்பொருள் தொகுப்புகளை ஆரம்பத்தில் உபயோகித்துப் படமெடுத்தாலும், மெதுவாக தங்களது ஸ்டூடியோவிலேயே உழைத்து உருவாக்கிய மென்பொருள் சாதனங்களையே பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இது ஓரளவு புதிய அனிமேட்டர்களுக்கு சவாலாக உள்ளது. பலகலைக்கழகங்களில் சொல்லித்தராத மென்பொருளால் அனிமேஷன் திரைப்படங்கள் உருவாவதால் வந்த சிக்கல். ஆனால், இந்த பெரிய ஸ்டூடியோக்கள், இதை தங்களது வெற்றிக்குக் காரணமாக இருப்பதால் வெளியே அதிகம் புழங்க விடுவதில்லை. அத்துடன் புதிய படங்களில் புதிய சவால்கள் இருப்பதால், இத்துறையை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். வருடத்திற்கு பிக்ஸாரும் ட்ரீம்வர்க்ஸும் குறைந்தது 2 படங்கள் வெளியிடுகிறார்கள். இது மனிதக்கற்பனை மற்றும் உழைப்பு அதிகமாக உள்ள கூட்டு முயற்சித் துறை. பல்லாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றும் கணினித் தொழில் இது. அமெரிக்க அனிமேஷன் திரைப்படத்துறை ஆண்டுக்கு ஆயிரம் கோடி டாலர் வியாபாரம் நடக்கும் தொழில்.

அனிமேஷன் சினிமாக்களில் பல கணினி தொழில்நுட்பங்கள் எப்படி உபயோகிக்கிறார்கள் என்று பரவலாக அலசினோம். வெறும் கணினி தொழில்நுட்பம் மக்களை கவருவதில்லை. நம் குடும்பங்களிலேயே கவனித்திருப்பீர்கள்.

“என் மகள் ஏதோ கணினியில் செய்து கொண்டே இடுப்பாள். அவள் என்ன செய்கிறாள் என்று மட்டும் கேட்காதீர்கள்” என்று பெற்றோர் சொல்லுவதை அடிக்கடி கேட்கிறோம். இப்படி கணினி என்றாலே ஒதுங்கும் கூட்டத்தை எப்படி கணினியால் உருவாக்கிய படைப்பை பார்க்கக் கவருவது? வல்லுநர்களின் அழகியல், கூட்டு முயற்சி மற்றும் கடின உழைப்புதான் காரணம்.

மனித சினிமாக்களுடன் ஒப்பிட்டு சில விஷயங்களை பார்ப்போம். வீடு, வயல், நகை எல்லாம் அடகு வைத்து சென்னை/மும்பாய் சென்று ராமராஜன் கணக்கில் படமெடுக்கும் சமாச்சாரம் இல்லை அனிமேஷன் திரைப்படம். நல்ல சினிமா எப்படி எடுப்பது என்று தெரிந்திருந்தால் தான் நல்ல அனிமேஷன் சினிமாவும் எடுக்க முடியும்.

மனித சினிமாக்களின் மிகப் பெரிய எதிரி ஹீரோ மற்றும் இமேஜ் சமாச்சாரங்கள். அப்படி, இப்படி இருந்தாலும் கூட ஷாருக்கான் மற்றும் ரஜினிக்காக படம் ஓடுவதைப் போல அனிமேஷனில் எதிர்பார்க்க முடியாது. அனிமேஷன் பாத்திரங்களுக்கு ஸ்டார் வால்யூ எல்லாம் கிடையாது. முதல் விஷயம் ‘திரைக்கதை’. அனிமேஷன் திரைப்படங்களில் வழக்கமான திரைப்படங்களை விட மிகத் தெளிவாகக் கதை சொல்லப்பட வேண்டும். மிக நேர்த்தியான திரைக்கதை அவசியம். குத்து மதிப்பான ஸ்க்ரிப்டை வைத்துக் கொண்டு ஸ்பாட்டில் பார்த்துக்கொள்ளலாம், நடிப்பை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அனிமேஷன் திரைப்படங்களில் வள, வள வென்று பேசி சிரிக்க வைக்க முடியாது. விஜயின் ஷூவை முன்னும் பின்னும் காட்டி ஜல்லியடிப்பது, விக்ரம் கண்களை க்ளோஸப்பில் காட்டி மிரட்டுவது அனிமேஷன் திரைப்படத்தில் செல்லாது. 2011-இல் முதல்வர் என ஓப்பனிங் சாங் வைக்க முடியாது. ஹீரோ இமேஜ் குழி தோண்டிப் புதைக்கப்படும். கணினியில் அசைவிக்கப்படும் உருவங்களோடு சுவாரசியமாகக் கதை சொல்வது மனித நடிகர்கள் நடிக்கும் படங்களை விடப் பல மடங்கு கடினமானது. காட்சிதான், இசைதான் எல்லாமே.

இப்படி திரைக்கதைதான் எல்லாம் என்று சும்மா புருடா விட முடியாது. ஒவ்வொரு காட்சியும் ‘ஸ்டோரி போர்டு’ மூலம் விவரமாக விளக்கப்பட வேண்டும். அதற்கு முன் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களம் அனைத்தையும் முன்கூட்டியே முடிவு எடுக்க வேண்டும். இதற்காக வரைபடம் வரையும் கலைஞர்கள் மற்றும் களிமண் பொம்மை செய்யும் கலைஞர்கள் என்று பல தரப்பட்டவர்கள் தேவைப்படலாம். ஹீரோவுக்கு பணத்தை அட்வான்ஸாக கொடுத்து இயக்குனரை பதிவு செய்து விட்டு கனவு காணும் விஷயமல்ல அனிமேஷன் திரைப்படம். ‘Character casting’ என்கிறார்கள் – இது போல முக்கியம் எதுவுமில்லை. சரி, முதல் படியாக பாத்திரங்களை தேர்ந்தெடுத்தாகிவிட்டது. வரைபடங்கள் மற்றும் களிமண் பொம்மைகள் செய்து இயக்குனர் சம்மதம் வாங்கியாகி விட்டது. அடுத்து அனிமேஷன் கணினி வேலைதானே?

அதுதான் இல்லை. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பின்னணிக்குரல் தேவை. பின்னணிக்குரல் தேர்வு படம் அனிமேட் செய்யத் தொடங்குமுன் ஆரம்பிக்க வேண்டும். இதுவே ஒரு தனிக்கலை. மனித சினிமாவில் பேசுபவர்கள் விவரம் புரிந்தவர்களுக்காக[ பேசுபவர்கள். அனிமேஷன் திரைப்படங்களோ குழந்தைகள் அதிகம் விரும்பி பார்ப்பவை. பேசுபவர்களின் பேச்சு முதலில் குழந்தைகளுக்கு புரிய வேண்டும். குழந்தைகளுக்கு புரியும்படி பேசுவது மிக மிகக் கடினம். கருத்தையும் சொல்ல வேண்டும், எளிதாகவும் இருக்க வேண்டும். அழகாக டயலாக் பேசத் தெரிந்த எல்லோரும் அனிமேஷன் திரைப்படங்களுக்கு ஒத்துவர மாட்டார்கள். உதாரணம், ஹாலிவுட் நடிகர் எட்டி மர்ஃபியை எடுத்துக் கொள்வோம். அவருடைய ‘Beverly Hills Cop’ என்ற திரைப்படத்தில் அதி வேகமாக டயலாக் வீசுவார். பயங்கர விஷுவல் கோமாளித்தனம் செய்வார். அதே எட்டி, ‘Shrek’ திரைப்படத்தில் எவ்வளவு நிதானமாக ஏற்ற இறக்கங்களுடன் (கழுதை பாத்திரம்) குழந்தைகளை கவர்கிறார் பாருங்களேன்.

அதே போல கனேடிய நடிகர் மைக் மையர்ஸ் தனது ‘Austin Powers’ திரைப்படங்களில் செய்யும் கோமாளித்தனமும் ‘Shrek’-இல் கொடுக்கும் குரலுக்கும்தான் எத்தனை வித்தியாசம்? சில நடிகர்களுக்கு குரல் நிதானமாக அப்படியே அமைந்துவிடுகிறது – உதாரணம், ‘Ice Age’ என்ற அனிமேஷன் திரைப்பட்த்திற்காக குரல் கொடுத்த ரே ரொமானோ என்னும் அமெரிக்க சிரிப்பு நடிகர். குரல் தேர்வு சும்மா பேச வைத்து முடிவெடுப்பதில்லை. அனிமேட்டர்களுடன் ஒரு முன்கூட்டிய டயலாக்கை ஒரு 10 வினாடி க்ளிப்புடன் சேர்த்து சரியாக வருகிறதா என்று பார்க்கிறார்கள். ஏன் இவ்வளவு முன்னமே பார்க்கிறார்கள்? குரலுக்கேற்ப வாயசைவை அனிமேட்டர்கள் முடிவெடுக்க வேண்டும்.

சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. அனிமேஷன் கூட்டு முயற்சியின் உச்சம். வழக்கமான சினிமாக்களில், படப்பிடிப்பு முடிந்தவுடன் காட்சிக்கேற்பப் பின்னணி இசை சேர்ப்பார்கள். அனிமேஷன் திரைப்படங்களில் இசையமைப்பாளர் தொடர்ந்து குழுவுடன் ஒத்துழைக்க வேண்டும். எவரேனும் சற்று சறுக்கினால் அதோகதிதான். கடைசியில் பின்னணி இசையை சேர்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட முடியாது. ‘Up’ திரைப்பட இசையமைப்பாளர் மைக்கேல் கியாச்சினோ, பல காட்சிகளுக்கு அனிமேஷன் தொடர் முடிந்தவுடனேயே இசையமைத்து கொடுத்தார். ’Up’ திரைப்படத்தின் வெற்றிக்கு அதன் பின்னணி இசையும் காரணம். ராண்டி நியூமேன், போன்றோர் இத்துறையின் முன்னோடிகள். காட்டு வழியில் தனிமையில் தத்துவ பாடல் வருவது போல அமைத்தால் குழந்தைகள் தூங்கி விடுவார்கள்! அனிமேஷன் திரைப்படங்களில் கதையின் வேகத்தை ‘டாம் & ஜெர்ரி’ காலத்திலிருந்து இசைதான் நிர்ணயிக்கிறது. அதிவேக சுழற்சி மற்றும் ஜூம் எல்லாம் சாத்தியமான அனிமேஷன் திரைப்படங்களில் அக்காட்சிகளுக்கு மெருகூட்டுவது பின்னணி இசையே.

மனித திரைப்படங்களில் எடிட்டிங் என்பது கடைசி கட்ட உற்பத்திக்குப் பின் நடக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. எடிட்டிங், அனிமேஷன் திரைப்படங்களில் முன்னமே செய்யப்பட வேண்டும். ஒரு காட்சியை அனிமேட் செய்து முடித்த பின் அனிமேட்டர்கள் அதை ரெண்டர் செய்து பார்த்து விடுவார்கள். என்ன வெட்ட வேண்டுமோ அதை வெட்டி விடுவார்கள். மனித சினிமாவில் எவ்வளவு திட்டமிடல் குறைவாக உள்ளதோ அவ்வளவு எடிட்டருக்கு வேலை அதிகம்.

லைட்டிங் என்ற வெளிச்சவியல் ஃபிலிம் நாட்களிலிருந்து இன்றுவரை மனித சினிமாக்களில் மிக முக்கியம். கணினி அனிமேஷனில் லைட்டிங் அனிமேட்டர்களே ஒவ்வொரு காட்சியிலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அனிமேஷன் திரைப்படங்களில் அழுது வடிந்து லைடிங் இருக்காது – குழந்தைகளைக் கவராது!

அனிமேஷன் இயக்குனர்கள் பொறுமையின், திறமையின் உச்ச நிலையில் இருக்க வேண்டும். பல காட்சிகளில் கணினி பிரச்சினைகள், எதிர்பாரா விதமாக சவால் விடும். சில சமயம் இயக்குனர் கற்பனைக்கேற்ப காட்சி அமைய தொழில்நுட்பம் வளர்ந்திருக்காது. சில சமயங்களில் புதிய க்ராபிக்ஸ் ஆராய்ச்சியே தேவைப்படும். மிக முக்கியமான சவால், ஒரே தொழில்நுட்பமாய் காட்டி அசத்த நினைத்தால் ‘Tron’ போல தோல்விதான். கணினி ஆசாமிகளுக்குத் தங்களது மென்பொருள் ஜாலங்கள் மேல் அவ்வளவு காதல். அதைக் கட்டுப்படுத்துவது இயக்குனரின் பொறுப்பு. சில சமயம் இயக்குனர் எதிர்பார்ப்புக்கேற்ப காட்சி அமையாவிட்டால் பல மாத உழைப்பு வீணாவது அனிமேஷன் உலகில் சகஜம்.

கடைசியாக, மனித சினிமாவில் இல்லாத ஒரு மாபெரும் சவால் கடைசி ரெண்டரிங். அத்தனை காட்சிகள் மற்றும் குரல், இசை எல்லாம் சேர்த்து ரெண்டர் செய்வதற்கு முப்பரிமாண அனிமேஷன் உலகில் அசாத்திய கணினி சக்தி தேவை. சில சமயம் ரெண்டர் செய்து வரும் பதிப்பில் குறைகள் இருந்தால், பயங்கர உழைப்பு தேவை சரி செய்வதற்கு. பல அனிமேஷன் ஸ்டூடியோக்கள் சில வெளி உலக கணினி வழங்கி வயல்களை இதற்காகவே வாடகை எடுத்து பயன்படுத்துகிறார்கள். ‘அவ்தார்’ அப்படி ரெண்டர் செய்து வெளிவந்த சமீபத்திய திரைப்படம்.

அடுத்த பகுதியில் இத்தொழில் இந்தியாவில் எப்படி வளர்ந்து வருகிறது என்று பார்ப்போம். மேலும் கல்வி வாய்ப்புகள் பற்றியும் அலசுவோம்.

ரவி நடராஜன்

நன்றி-சொல்வனம்

ஆயுர்வேத மருத்துவம்: அனைத்திற்கும் தோஷமே காரணம்

ஆயுர்வேத மருத்துவம், வெறும் நோயின் அறிகுறிகளை மட்டும் தற்காலிகமாகக் குணப்படுத்தாமல், நோயின் அடிப்படைக் காரணத்தைக் களைந்து, வியாதியையும் குணப்படுத்துகிறது. நோயாளிகளைத் தலையிலிருந்து, கால் வரை அங்கம் அங்கமாகப் பிரித்துப் பார்க்காமல், உடல் முழுவதையும் ஒன்றாகக் கருதி, சிகிச்சை செய்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தின் சில முக்கிய அம்சங்களைச் சற்று கவனிப்போம்.

ஆயுர்வேதத்தில், எல்லா நோய்களுக்கும் சிகிச்சை உண்டு. வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் சமநிலை தான் ஆரோக்கியம் என்பதே, ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தாந்தம். நோய் என்பது, வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களின் ஏற்றத் தாழ்வால் தோன்றும். இதையே வள்ளுவர், “மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளி முதலாவெண்ணிய மூன்று’ என விளக்கியுள்ளார்.ஆகவே, சிகிச்சை என்பது, தோஷங்களை மீண்டும் சம நிலைக்குக் கொண்டு வருவதேயாகும். தோஷங்கள் சம நிலையில் இருக்கின்றனவா அல்லது எந்த தோஷம் சீற்றமடைந்திருக்கிறது என்பதை, நாடியின் மூலமாகவும், நோயின் அறிகுறிகள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.ஆயுர்வேதத்தில், உணவுப் பொருட்களின் குணங்கள், விஞ்ஞான ரீதியாக விளக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உணவு மிகவும் இன்றியமையாதது.

நாம் உட்கொள்ளும், அறுசுவை உணவுப் பண்டங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு தோஷத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்கிறது. எனவே சிகிச்சையில், “பத்தியம்’ ஒரு மிக முக்கியமான இடத்தைப் பெறும். உதாரணமாக, வயிற்றில் வலி (சூலம்) வாயுவின் சீற்றத்தால் ஏற்படுகிறது. இதற்கு, வாயுவைச் சீற்றமடையச் செய்யும் உணவுகளைத் தவிர்த்து, உகந்த உணவை உண்பது அவசியம். ஆயுர்வேத மருந்துகள், நோயை உடனடியாகக் குணப்படுத்துமா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. நோய் தோன்றிய உடனே, தகுந்த சிகிச்சை அளித்தால், நிச்சயமாகச் சட்டென்று குணமாகும். பல வருடங்கள் நோயால் அவதிப்பட்டு விட்டு, நாள்பட்ட வியாதிக்கு உடனே குணத்தை எதிர்ப்பார்ப்பது, அரசமரத்தைச் சுற்றி வந்து, அடி வயிற்றைத் தடவுவதைப் போன்றது.படித்தவர்கள் கேட்கும் மற்றுமொரு கேள்வி, இன்றைய சமுதாயத்தில், புதுப் புது நோய்கள் தோன்றுகின்றன. ஆயுர்வேதம் மிகப் பழைய முறை. இந்த முறையில், புது நோய்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க முடியும் என்பது. இதற்கு ஆயுர்வேதம் கூறும் பதில், எல்லா நோய்களுக்கும் உடலின் தோஷங்களான வாதம், பித்தம், கபங்கள் தான் அடிப்படைக் காரணம். புதிதாகத் தோன்றும் நோய்களுக்குக் காரணம் இவையேதான். எனவே, தோஷங்களின் சீற்றத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால், எந்த நோயையும் குணப்படுத்தி விடலாம்.

-டாக்டர். பி.எல். டி.கிரிஜா, சஞ்சீவனி, ஆயுர்வேத யோகா மையம், சென்னை.

தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது.  இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

* பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.

* ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும்.

* கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

கஸ்தூரி மஞ்சள்  50 கிராம்
பூவரசன் வேர்  30 கிராம்
வெள்ளெருக்கன் வேர்  25 கிராம்
சிறுநாகப் பூ  15 கிராம்
வெடியுப்பு  10 கிராம்
புனுகு  10 கிராம்

இவற்றை நீர் தெளித்து மை போல அரைக்க வேண்டும். சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்து, அதில் அரைத்து வைத்ததைப் பரவலாகப் பூச வேண்டும். இத் துணியை நன்றாய்க் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்படும் போது சுருட்டு சுற்றும் அளவுக்குத் துணியைக் கிழித்து எடுக்க வேண்டும். கிழித்த துணியைச் சுருட்டுப் போல் சுருட்டி நெருப்பில் காட்டினால் புகை வரும். அப்புகையை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். இதைக் காலை, மாலை இரு வேளைகளும் சுவாசித்தால் மூக்கு சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாகும்.

* கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.

* கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

* கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.

* சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாரா.

காரப்பொடி மீன் குழம்பு


தேவையான பொருட்கள்

காரப்பொடி மீன் – 1/2 கிலோ
காய்ந்த மிளகாய் – 8
தனியா – ஒரு கையளவு
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
புளி – எலுமிச்சம் பழ அளவு
தேங்காய் – 1/4 மூடி
மஞ்சள் – 1/2 டீஸ்பூன்
வெங்காயம், தக்காளி – 100 கிராம்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை – தாளிக்கும் அளவு

செய்முறை

* மீனை தலை, வால் நீக்கி, குடல் போக நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

* மிளகாய், தனியா, மிளகு, சீரகம் இவற்றை வறுத்து அரைக்கவும். அதனுடன் தேங்காயை சேர்த்து அரைத்து மசாலா ஆக்கவும்.

* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* புளிக்கரைசல் ஊற்றி அரைத்த மசாலா சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

* மசாலா கொதித்ததும், மீனைச் சேர்த்து குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருந்து இறக்கிவிடவும்.

`செப்’ தாமு

வேதத்துக்கு ஒரு வியாசர்!-ஜூலை 15 – வியாசபூஜை!

சாதுர்மாஸ்யம் எனப்படும் துறவிகளுக்கான விரத காலத்தின் துவக்கத்தில், வேதங்களைத் தொகுத்தவரான வியாசருக்கு பூஜை நடத்துவது வழக்கம்.
வியாசரின் பிறப்பைப் பற்றிய கதை வித்தியாசமானது. மீன் ஒன்றின் வயிற்றில் பிறந்தவள் சத்தியவதி. இவளை மீனவர் தலைவர் ஒருவர் வளர்த்து வந்தார். தந்தைக்கு உதவியாக ஆற்றைக் கடக்க பரிசல் ஓட்டுவது, மீன்களை உலர்த்துவது ஆகிய பணிகளைச் செய்தாள். ஒருமுறை, பராசரர் என்ற முனிவர் ஆற்றைக் கடக்க பரிசலில் ஏறினார்.
அந்நேரத்தில், உலகம் அதுவரை காணாத <உத்தமமான நேரம் வந்தது. அந்த சமயத்தில், ஒரு குழந்தை பிறக்குமானால், அது, உலகத்துக்கே நன்மை விளைவிக்கும் பெருஞ்செயல்களைச் செய்யும் என்று பராசரரின் ஞான திருஷ்டிக்குப்பட்டது. எனவே, படகோட்டிய சத்தியவதியிடம் தன் விருப்பத்தைச் சொன்னார்.
“முனிவரே… நான் கன்னிப் பெண். என்னை ஒருவருக்கு கன்னிகாதானம் செய்து கொடுப்பது என் தந்தையின் கடமை; அதனால், தங்களுக்கு உடன்பட முடியாது…’ என்றாள்.
அவளிடம், “இந்தக் குழந்தையை பெற்றதுமே நீ கன்னித்தன்மை அடைந்து விடுவாய். என் தவ பலத்தால் அது முடியும்…’ என்று முனிவர் சொல்லவே, உலக நன்மை கருதி அவள் சம்மதித்தாள்; அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது, விஷ்ணுவின் அவதாரம் என்பதால், பிறந்த சில நிமிடங்களிலேயே, ஏழு வயது பாலகனாகி விட்டது. அவனுக்கு, கிருஷ்ண துவைபாயனர் என்ற பெயர் வைக்கப்பட்டது.
வியாசர் தன் தாயிடம், “அம்மா… நான் உலக நலன் கருதி வந்தவன். வேதங்களைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. வேதம் வாழ்ந்தால் தான் உலகம் வாழும். அவற்றை பிரிக்கும் பணியைச் செய்யப் போகிறேன். எனவே, உன்னோடு வாழ இயலாது. நீ எப்போதெல்லாம் நினைக்கிறாயோ, அப்போதெல்லாம் உன் முன் வருவேன்…’ என்று உறுதிமொழி அளித்து, அங்கிருந்து தன் தந்தையுடன் சென்று விட்டார்.
வியாசர் என்பது பெயரல்ல; அது ஒரு பதவி. ஜோதிடம் சொல்பவர்களை, “ஜோதிடர்’ என்ற பொதுப் பெயரால் அழைப்பது போல, யாரெல்லாம் வேதங்களை பகுத்துப் பிரிக்கின்றனரோ அவர்கள் அனைவருமே வியாசர் தான். அந்தப் பதவியை அதற்கு முன் பலர் வகித்திருந்தனர். ஆனால், பராசர முனிவரின் மகனான வியாசரே அதில் முக்கியப் பங்கு வகித்தார். வேதங்கள் கடல் போன்றவை என்பதால் அவற்றை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்று நான்காகப் பிரித்து, அவற்றை இன்னின்ன பிரிவினர் படிக்க வேண்டும் என்ற புதிய பாதையை வகுத்தார்.
சாதாரண மக்களுக்கு வேதம் புரியாது என்பதாலும், கலியுகத்தில் வேதம் அழியும் நிலைக்கு வந்துவிடும் என்பதாலும், அவற்றை மக்கள் மதிக்க மாட்டார்கள் என்பதாலும், வேதத்தின் சாரமான தர்மத்தின் பெருமையைப் பறைசாற்றும், மகாபாரதம் எனும் இதிகாசத்தைப் படைத்தார். இது தவிர, ஸ்கந்த புராணம், விஷ்ணு புராணம், பிரம்ம புராணம், நாரத புராணம், கருட புராணம் உள்ளிட்ட, 18 புராணங்களையும் எழுதினார். இவற்றின் மூலம் இன்றும் நாம் வேதத்தின் சாரத்தை உணர்ந்து, தெய்வத்துக்கு பயந்து நடக்க வேண்டும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டுள்ளோம்.
நாட்டில் இன்றும் பல நன்மைகள் நடக்கிறது என்றால், அதற்கு காரணம், வியாசர் எழுதிய நூல்களைப் படித்து, அவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துக்கு ஏற்றாற்போல் நடந்து கொள்வதால் தான்.
மகாபாரதத்தில் ஒரு பாத்திரமாகவும் வியாசர் வருகிறார். தர்மர் நாடிழந்து, துன்பப்பட்டு, நம்பிக்கை இழந்திருந்த காலத்தில், அவரையும் விட கஷ்டப்பட்ட நளதமயந்தி, அரிச்சந்திரன் கதைகளை எடுத்துச் சொல்லி நம்பிக்கையூட்டினார் வியாசர். சத்தியவான் சாவித்திரியின் கதையை எடுத்துச் சொல்லி, “ஒரு பெண்ணே எமனை எதிர்த்து ஜெயித்திருக்கும் போது, உன்னால் கவுரவர்களை வெல்ல முடியாதா?’ என்று கேட்டார்.
துன்பங்களை எதிர்த்து வெல்ல நமக்கு நம்பிக்கையூட்டும் கருத்துக்களை அளித்திருக்கும் வியாசரை, நாம் வியாசபூஜை நன்னாளில் நினைவு கூர்வோம்.