Daily Archives: ஜூலை 14th, 2011

நல்லதுக்கு காலமில்லே

`நல்லதுக்கு காலமில்லே’. `யாரையும் நம்ப முடியலே’. இத்தகைய புலம்பல்கள் அதிகரித்துவிட்டன. அவ்வளவு ஏமாற்றங்கள் ஒவ்வொருவருக்கும் நிகழ்கிறது. ஏமாந்த பிறகு மனம் தாங்குவதில்லை. நெருக்கமான உறவுகளால் சாதுரியமாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்ற வேதனையின் வெளிப்பாடுதான் புலம்பல். இப்படி மற்றவரால் நீங்கள் ஏமாற்றப்படாமல் தவிர்க்க என்ன செய்யலாம், ஏமாற்றுப் பேர்வழிகளை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?

***

மாற்றுபவர்கள் தங்கள் பழக்க வழக்கங்களின் மூலம் சில அறிகுறிகளை வெளியிட்டு, தான் பிரச்சினைக்குரிய மனிதர் என்று அவர்களை அறியாமலே அடையாளங்காட்டுவார்கள். அந்த அறிகுறிகளில் சில…! உள்மனதில் ஒருவர் உங்களுக்கு அடிக்கடி தொல்லை அளிப்பதாக உணர முடிந்தால் அவரது செயல்களில் கூடுதல் கவனம் வையுங்கள். அவர்களின் கவனமும், பேச்சும் குறிப்பிட்ட விஷயம் சார்ந்ததாகவே இருக்கும். அவர்கள் குற்ற உணர்ச்சியுடனும், விலகிச் செல்வதையும், தட்டிக்கழிப்பதையும் வழக்கமாக கொள்வார்கள்.

***

ஞ்சகம் செய்பவர்கள் தங்கள் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். தோற்றமும் மெல்ல மெல்ல மாறிவரும். ஏமாற்றுபவர் வீட்டில் குறைவான நேரத்தையே செலவிடுவார். உங்களுடன் ஒன்றாக செலவிடும் நேரம் மிக குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ இருக்கும். கணவன்- மனைவிக்குள் உறவுகள் குறையும். நீங்களாக பேச அழைத்தால் கொஞ்சம் வேலை இருப்பதாக கூறியோ அல்லது இதோ வந்துவிடுகிறேன் என்று சொல்லியோ நழுவிவிடுவார். இப்படிப்பட்டவர்களை நம்பினால் என்றாவது ஒருநாள் ஏமாற நேரிடும்.

***

மாற்றுபவர்கள் அறிவீனமான செயல்களைச் செய்வார்கள். ஒத்துவராத புதிய முடிவுகளை எடுப்பார்கள். நிறைய விஷயங்களுக்கு மன்னிப்பு கேட்பார்கள். சிறு வேலை கொடுத்தாலும் அளவுக்கு அதிகமான நேரம் எடுத்துச் செய்வார்கள். அதிலும் பல குற்றம் குறைகள் இருக்கும். காரணம் கேட்டால் பலமுறை மன்னிப்புக் கேட்பதுடன், முன்னுக்குப் பின் முரணான காரணங்களை சொல்வார்கள். தங்கள் தவறுகளை மறைப்பதற்காக அதிகமாக பேசிப் பூசி மெழுகுவார்கள்.

***

திகமாக பேசிக் கொண்டு விமர்சிப்பதும், விளக்கமளிப்பதுமாக இருப்பவர்கள் ஏமாற்று பேர்வழிகளாக இருக்கலாம். உங்களின் சிறு தேவையைக்கூட நிறைவேற்றவும், உங்கள் அன்பைப் பெறவும் அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். ஆனால் எல்லாமே அவர்களின் தேவை கருதியதாக இருக்கும். அவரது எதிர்பார்ப்பு உங்களால் நிறைவேறாது என்று தெரிந்தாலோ, உங்களை எளிதாக ஏமாற்றிவிட முடியும் என்று அறிந்தாலோ சதி வேலையைத் தொடங்கிவிடுவார்கள். இவர்கள் மீது எப்போதும் ஒருகண் வைத்திருங்கள்.

***

மாற்றுபவர் திடீரென்று தனது நண்பர், தனக்கு கீழ் பணிபுரிபவர் பற்றி பேசத் தொடங்குவார். அப்போது அவர்களைப் பற்றிய வேடிக்கை விஷயங்கள், தாங்கள் நழுவிய விதங்களை பற்றி விவரிப்பார். அவர்களுடன் சேர்ந்து செய்த ஏமாற்று வேலைகள் பற்றியும் தன்னை மறந்து குறிப்பிடுவார். இதை நீங்கள் சரியாக புரிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது அபாயமான கட்டமில்லை என்றாலும் இதற்கு அடுத்த நிலை உங்களுக்கு `ஆப்பு’ வைப்பதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

***

செல்போன் மற்றும் கணினி பற்றிய விஷயங்களை உங்களிடம் தர மறுப்பவர்கள் பித்தலாட்டம் செய்பவர்களாக இருப்பார்கள். அவருக்கும், உங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்தாலும் அவர்கள் உபயோகப்படுத்தும் `பர்சனல்’ செல்போன் எண்ணை உங்களுக்குத் தரமாட்டார். அதுபோல அவரைப்பற்றி அவசியமாக அறிந்து வைத்திருக்க வேண்டிய கணினித் தகவல்களும் உங்களுக்கு கிடைக்காமல் பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துவார். இப்படிப்பட்டவர்களிடம் உங்கள் பர்சனல் தகவல்களை கொடுத்துவிட்டு அவதிப்படாதீர்கள்.

***

ளர்ந்துவிட்ட தொழில்நுட்ப சாதனங்களை அதிகமாக பயன்படுத்துபவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளாக இருக்கிறார்கள். ஹேக்கர்ஸ், வைரஸ் பரப்புவோர் எல்லாமே இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் தாங்கள் பயன்படுத்திய இணையதள விவரங்களை மற்றவர் பார்க்காத வண்ணம் அழித்துவிடுவார்கள். அதே நேரத்தில் உங்கள் விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ளும் வழிகளையும் செய்து வைத்திருப்பார்கள். இவர்களிடம் நீங்கள் சிக்கினால் பேராபத்தை சந்திக்கலாம். எனவே தொழில்நுட்ப (திருட்டு) நிபுணர்களிடம் உஷாரா இருங்க.

***

புதுவிதமான உடல் அசைவுகளை வெளிப்படுத்துவதுதான் ஏமாற்றுப் பேர்வழிகளின் முக்கிய அடையாளமாகும். அவர்கள் கைகளை கட்டிக்கொண்டு நிற்பார்கள். எப்போதும் உங்களிலிருந்து சிறிது தூரம் விலகியே நிற்பார்கள். பேசும்போது கூட திரும்பிக் கொண்டு நிற்பார். உதடுகளை உம்மென்று வைத்து, கண்களால் குறுகுறுவென்று பார்ப்பார்கள். ஒன்றாக பயணிக்க நேர்ந்தால் மிகவும் பதட்டமடைவார். இப்படி அறிகுறிகள் உடைய நபர் உங்கள் அருகில் இருந்தால் கவனமுங்க கவனம்!

சிறுநீர்ப்பை அழற்சி என்றால் என்ன?

சிறுநீர் பையில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கத்தால், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுகிறது.
இதனால், அவசரமாக மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும், அத்தகைய சமயங்களில் வலி அல்லது குத்தல், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்பில் அசவுகரியம், ஒரு சிலருக்கு சிறுநீருடன் ரத்தமும் வெளியேறும். பொதுவாக, பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் அழற்சி ஏற்பட காரணம், குறுகிய அளவிலான சிறுநீர்ப்பை நாளம் கொண்டிருப்பது அல்லது தொற்று ஏற்படுவது தான். பெரும்பாலான பெண்கள், வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சிகிச்சை அளிக்காவிடில், சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். சிறுநீர்ப்பை அழற்சிக்கான சிகிச்சை முறை: சிறிய அளவிலான சிறுநீர்ப்பை அழற்சிக்கு, வலி நிவாரணி மற்றும் போதிய அளவிற்கு நீர் அருந்துவதன் மூலம், 4 முதல் 9 நாட்களில் சரியாகிவிடும். மிதமான நிலையிலுள்ள சிறுநீர்ப்பை அழற்சிக்கு, தேவையான சிகிச்சையுடன் 7 நாட்களுக்கு மருந்து உட்கொள்ள கொள்ள வேண்டும். சில சமயம், இது அடிக்கடி நிகழ்ந்தால், எந்த வகை பாக்டீரியாவால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து, அதற்கேற்றவாறு மருந்து உட்கொள்ள வேண்டும். நிறைய நீர் அருந்துதல், பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் குறித்த காலங்களில் சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுவதை குறைக்கலாம்.

வைட்டமின் என்றால் என்ன?

மனித உடல் சீராக செயல்படுவதற்கு பலவகையான பொருட்கள் அதற்குத் தொடர்ந்து தேவைப்படுகின்றன. தொடர்ந்து மூச்சுவிடுவதன் மூலமும், சாப்பிடுவதன் மூலமும் அந்தப் பொருட்களை நம்முடைய உடலுக்கு நாம் வழங்கி வருகிறோம்.

வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுதல், அவற்றுக்குத் தேவையான ஆற்றல்  இவைதான் மனித உடலின் அடிப்படைத் தேவைகள்.

மனித உடல் பலவகையான திசுக்களால் ஆனது என்றாலும் அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது செல்கள்தான். இந்த செல்களில் நிகழும் பல்லாயிரக்கணக்கான வேதிவினைகள்தான் மனித உடலின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கும், அவற்றுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் காரணமாக இருக்கின்றன.

உடலின் வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கு புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் போன்ற பலவகையான பொருட்கள் தேவைப்படுகின்றன. உண்ணும் உணவிலிருந்து உடல் இவற்றைப் பெறுகின்றது.

உடலின் மற்ற செயல்கள் நிகழ்வதற்கு தேவைப்படும் ஆற்றலைப் பெற தரசமும், ஆக்சிஜனும் உடலுக்கு தேவைப்படுகின்றன. உண்ணும் உணவிலிருந்து தரசத்தை (மாவுப் பொருள்) உடல் எடுத்துக்கொள்கிறது. மூச்சுக் காற்றிலிருந்து தேவையான ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இதுதான் மனித உடலின் அடிப்படையான இயங்குமுறை. இது பற்றி இப்போது மிகவும் விரிவாகவும், நுட்பமாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரையில்கூட மனித உடலின் உணவுத் தேவை பற்றி எதுவும் கண்டறியப்பட்டிருக்கவில்லை. சில குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதை மட்டுமே மனிதர்கள் அறிந்திருந்தனர். அந்த உணவுப் பொருட்களில் என்னென்ன உணவுச் சத்துகள் இருக்கின்றன என்பது பற்றி எதுவும் தெரியாது.

பின்னர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொருட்களை வேதியல் முறையில் பகுத்தாய்வதில் வளர்ச்சி ஏற்படத் தொடங்கியது. இதனால், இயற்கையாக கிடைக்கக் கூடிய பொருட்களை அவற்றின் சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுப்பதும், அவற்றின் வேதியல் அமைப்பை கண்டறிவதும், அவற்றை செயற்கையான முறையில் உற்பத்தி செய்வதும் சாத்தியமானது.

அந்த வளர்ச்சியின் விளைவாக, ஆராய்ச்சியாளர்களால் உணவிலுள்ள சத்துப் பொருட்களை அவற்றினுடைய சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்க முடிந்தது. அதனால், இதுபோல சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்கப்பட்ட உணவுச் சத்துகள் உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மிகவும் துல்லியமாக பரிசோதித்தறிவதும் சாத்தியமானது.

இதுபோன்ற முறையில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தரசம் (மாவுப் பொருள்), புரதம், கொழுப்பு, தாதுப் பொருட்கள் ஆகிய உணவுச் சத்துகள் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவைப்படுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் மிகவும் திட்டவட்டமாக கண்டறிந்தனர். இந்த உணவுச் சத்துகள் அவற்றின் சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றின் வேதியல் அமைப்புகளும் கண்டறியப்பட்டன. அதேபோல, அவற்றை செயற்கையாக தயாரிக்கும் முறைகளும் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் சோதனை பிராணிகளுக்கு இந்த உணவுச் சத்துகளை அவற்றின் சுத்தமான வடிவத்தில் கொடுத்து அவை உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய்ந்து வந்தனர்.

ஆனால், இந்த உணவுச் சத்துகளை மட்டும் அவற்றின் சுத்தமான வடிவத்தில் தேவையான அளவுகளில் சோதனை பிராணிகளுக்கு கொடுத்து பரிசோதித்தபோது அவை விரைவிலேயே உடல் நலம் குன்றி உயிரிழப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.

எனவே, இந்த உணவுச் சத்துகளைத் தவிர வேறு ஏதோ சில உணவுச் சத்துகளும் மிகவும் குறைந்த அளவில் உயிர் வாழ்க்கைக்கு கட்டாயமாக தேவைப்படுகின்றன என்று அவர்கள் முடிவு செய்தனர்.

அது போன்ற அடையாளம் கண்டறியப்படாத உணவுச் சத்துகளுக்கு துணை உணவு காரணிகள் (Accessory Food Factors) என்று பெயர் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த துணை உணவு காரணிகளைக் கண்டறியும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் மிகத் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினர்.

இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள் துணை உணவு காரணிகள் சிலவற்றைக் கண்டறிந்தனர். உயிர் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒரு அமைனை (Amine  அமைன் என்பது வேதிப் பொருட்களில் ஒரு வகை) கண்டுபிடித்து விட்டதாக அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்தப் பொருளுக்கு விட்டமைன் (Vital + Amine = Vitamine) என்று பெயர் சூட்டினர். அதைத் தொடர்ந்து மற்ற விட்டமைன்களைக் கண்டறியும் ஆராய்ச்சி முழு வேகமடைந்தது.

நூற்றுக்கணக்கானவர்கள் அந்த ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினர். அதன் விளைவாக பல துணை உணவுக் காரணிகள் கண்டறியப்பட்டன. பின்னர் அவற்றின் பெயர் வைட்டமின் என மாற்றப்பட்டது.

வைட்டமின் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் ஒரு சத்துப்பொருள். பெரும்பாலான வைட்டமின்கள் வளர்சிதை மாற்றச் செயல்களில் முக்கியப் பங்கு எடுத்துக்கொள்கின்றன. எனவே, வைட்டமின்கள் பற்றாக் குறையாகும்போது சில முக்கியமான வளர்சிதை மாற்றச் செயல்கள் நிகழாமல் போகின்றன. இதனால், உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது.

வைட்டமின்கள் அவை செயல்படும் விதத்தில் ஹார்மோன்களையும், என்சைம்களையும் ஓரளவு ஒத்திருக்கின்றன. ஆனால், அவை கிடைக்கும் விதத்தில் வித்தியாசம் இருக்கிறது.

அதாவது, ஹார்மோன்களையும், என்சைம்களையும் நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள வேறு பொருட்களைப் பயன்படுத்தி உடலே தயாரித்துக்கொள்கிறது. ஆனால், வைட்டமின்களை அது போல நமது உடலால் தயாரிக்க இயலாது. வைட்டமின்களைத் தயாரிக்கும் திறனை நமது உடல் இழந்து விட்டது. (வேறு உயிரினங்களுக்கு அந்த திறன் இருக்கிறது.)

எனவே, வைட்டமின்கள் அதே வடிவில் நமது உடலுக்குத் தேவைப்படுகின்றன. அதாவது வைட்டமின்களைத் தயார் நிலையில் நாம் நமது உடலுக்கு வழங்க வேண்டியதிருக்கிறது. இதுபோல தயார் நிலையில் நமது உடலுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகள் வைட்டமின்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த காரணத்தினால் நமக்கு வைட்டமினாக இருக்கும் ஒரு பொருள் வேறு உயிரினங்களுக்கு வைட்டமினாக இருப்பதில்லை. அதாவது வேறு உயிரினங்களுக்கு அந்தப் பொருள் தயார் நிலையில் தேவைப்படுவதில்லை. உணவில் உள்ள வேறு பொருட்களிலிருந்து அந்த உயிரினங்களின் உடலே அதை தயாரித்துக்கொள்ளும்.

எனவே, வைட்டமின்கள் எனறால் தயார் நிலையில் நமது உடலுக்கு தேவைப்படும் உணவுச் சத்துகள் என்று கூறலாம். வைட்டமின்கள் பொதுவாக மிகக் குறைந்த அளவில்தான் நமது உடலுக்குத் தேவைப்படுகின்றன. அந்த மிகக் குறைந்த அளவும் கிடைக்காதபோதுதான் அவற்றின் பற்றாக்குறையால் மனித உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது.

 

செட்டிநாடு சிக்கன் மசாலா

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
காய்ந்த மிளகாய் – 10
மிளகு – 1 டீஸ்பூன்
தனியா – ஒரு கையளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
மராட்டி மொக்கு – 4
கடல் பாசி – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கொப்பரைத் தேங்காய் – சிறிதளவு
துவரம் பருப்பு – சிறிதளவு
கடலைப் பருப்பு – சிறிதளவு
பட்டை – 4 சிறுதுண்டு
லவங்கம் – 2
ஏலக்காய் – 2
உப்பு – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணை – 1 குழிக்கரண்டி

செய்முறை

* வாணலியில் எண்ணையில்லாமல் தனியா, மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, பருப்பு வகைகள், கடல்பாசி, மராட்டி மொக்கு, கொப்பரைத் தேங்காய் இவற்றை நன்கு வறுக்கவும். அதை ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும். (இந்த மசாலா பொடியை தயாரித்து வைத்திருந்தும் உபயோகிக்கலாம்.)

* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

* பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி ஆகியவை சேர்த்து வதக்கவும்.

* அத்தோடு சுத்தப்படுத்தி நறுக்கிய சிக்கனை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு, தேவையான நீர் சேர்த்து சிக்கனை வேக விடவும்.

* சிக்கன் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை தேவைக்கேற்ப சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வேகவிடவும்.

* சிக்கன்- மசாலா கலவை திக்கானதும் இறக்கி விடவும்.

* இது டிபன் வகைகளுக்கு மட்டுமல்லாது சாதம் வகைகளுக்கும் தொட்டுக்கொள்ள ருசியாக இருக்கும்.

`செப்’ தாமு

மருந்து கடைக்காரர்களுக்கு கொழுத்த லாபம் தரும் “ஜெனரிக்’ மருந்துகள்

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, “ஜெட்’ வேகத்தில் உயரும் விலை உயர்வுக்கு, மாத்திரை, மருந்துகள் மட்டும் விதிவிலக்கா என்ன? காய்ச்சல், தலைவலிக்கு வாங்கும் பாரசிடமால் முதல், புற்றுநோய் ஹீமோதெரபி சிகிச்சைக்கு உதவும் மருந்துகள் வரை, கடந்த 10 ஆண்டுகளில் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், சராசரி இந்தியர்கள் மருத்துவத்துக்கு செலவிடும் தொகையும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது என, ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில், தொற்று நோய்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றாலும், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

“சர்க்கரை நோயாளிகளின் தலைநகர் இந்தியா’, என்ற அபாயகரமான சூழல் உருவாகி வருகிறது. இந்த நோய்க்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போட வேண்டியது அவசியம். இதனால், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை மருந்துக்காக செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் நீண்ட காலம் சிகிச்சைக்கான மருந்துகள், குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, “ஜெனரிக்’ மருந்துகள் எனப்படும் “பிராண்ட் நேம்’ இல்லாத மருந்துகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் அரசு அனுமதிக்க அளித்தது.

ஒரு நிறுவனம் தயாரிக்கும் மருந்தை, வேறொரு நிறுவனம், சிறிய மாற்றங்களுடன் வர்த்தக பெயர் இல்லாமல், அதில், உள்ளடங்கிய மருந்தின் பெயரைக் கொண்டு விற்பனை செய்வதே ஜெனரிக் மருந்துகள் என அழைக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, “கால்பால்’ பராசிடமால் மருந்தில், “கால்பால்’ என்பது வர்த்தக பெயர். இதில் “பாரசிடமால்’ என்பது மருந்து. வர்த்தக பெயர் இல்லாமல், மருந்தின் பெயரான, “பாரசிடமால்’ என குறிப்பிட்டு விற்கப்படுவதே ஜெனரிக் மருந்து. பிரதான மருந்தின் காப்புரிமை காலம் முடிந்த பிறகே, ஜெனரிக் மருந்துகளை தயாரிக்க முடியும். ஏற்கனவே ஒரு நிறுவனம் தயாரித்த மருந்தை, கிட்டத்தட்ட காப்பி அடித்து மீண்டும் தயாரிக்கும்போது உற்பத்தி செலவும் கணிசமாக குறைகிறது.

இதனால் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிகிறது. நுகர்வோர் பயனடைய வேண்டும் என்பதற்காக ஜெனரிக் மருந்து அனுமதிக்கப்பட்டாலும், நடைமுறையில் அது நடக்கவில்லை. “ஸ்டாக்கிஸ்ட்’ குமார் என்பவர் கூறும்போது, “பிராண்ட் நேம்’ மருந்துகளின் அடக்க விலை 7 ரூபாய், விற்பனை விலை 10 ரூபாய். அதேவேளையில், ஜெனரிக் மருந்து அடக்க விலை 3 ரூபாய்தான். ஆனால் 8 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இடையில் உள்ள 5 ரூபாய் வியாபாரிகளுக்கு சென்று விடுகிறது. சில மருந்துகளில் 80 சதவீதம் வரை லாபம் கிடைக்கிறது. இதனால் நுகர்வோருக்கு கிடைக்க வேண்டிய பயன், சில்லறை வியாபாரிகளுக்கும், ஸ்டாக்கிஸ்ட்களுக்கும் சென்று விடுகிறது’ என்றார்எனவே, உற்பத்தி செலவுக்கு மேல், 20 அல்லது 25 சதவிகிதம் லாபம் கிடைக்கும் வகையில் எம்.ஆர்.பி. விலையை நிர்ணயிக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும், பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள், இந்த மருந்துகளை மொத்தமாக வாங்கி பயன்படுத்தி வருவதாகவும், மருந்து ஸ்டாக்கிஸ்டுகள் தெரிவிக்கின்றனர். மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை பரிந்துரைப்பதற்காக டாக்டர்களுக்கு பெரும் பணம் செலவு செய்வதும் விலை உயர்வுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

எனவே, டாக்டர்கள் மருந்தை பரிந்துரைக்கும்போது, “பிராண்ட் நேமை’ எழுதாமல் மருந்தின் பெயரை மட்டும் எழுத வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, “டாக்டர்கள் மருந்தின் “பிராண்ட் நேமை’ மருந்து சீட்டில் பரிந்துரைக்க, தடை விதிப்பது குறித்து பரிசீலிக்க, மத்திய அரசு குழு அமைந்துள்ளது. அந்தக் குழு அறிக்கையின், அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்’ என்றார். பெரம்பூரை சேர்ந்த ஸ்டாக்கிஸ்ட் மோகன் கூறும்போது, “ராம் விலாஸ் பாஸ்வான், மத்திய ரசாயன துறை அமைச்சராக இருந்தபோது, அத்தியாவசிய மருந்துகள் என கருதப்படும் 350 மருந்துகளை பட்டியலிட்டு, குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுத்தார். அதுபோல், இப்போதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார் .

மருந்து வாங்குவதில் உள்ள ஆபத்து : டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல், நேரடியாக மருந்து கடைகளில் மாத்திரை, மருந்துகளை வாங்குவது ஆபத்தானது. பெரும்பாலான மருந்து கடைக்காரர்கள், தரம் என்பதை விட, தனக்கு அதிக லாபம் தரும், தரம் குறைந்த மருந்தையே கொடுக்க வாய்ப்புள்ளது. மேலும், மருந்துகளை எடுத்துக் கொடுக்க, மருந்தாளுனர் பட்டம் அல்லது பட்டயம் பெற்ற தகுதியான நபர், மருந்து கடைகளில் பெரும்பாலும் இருப்பதில்லை. கடை ஊழியர், தனது அனுபவ அறிவைக் கொண்டே, மருந்துகளை எடுத்துக் கொடுக்கிறார். கவனக் குறைவாகவோ அல்லது தெரியாமலோ, மருந்தை மாற்றிவிட்டால் ஆபத்தில் முடிந்துவிடும். அதுபோல், “டாக்டர் சீட்டில் குறிப்பிட்டுள்ள மருந்து இல்லை. அதே வகையான மருந்து தான் இது’ என்று மருந்து கடைக்காரர் கொடுக்கும் மருந்தை வாங்கக் கூடாது. தரம் குறைந்த, தனக்கு அதிக கமிஷன் கிடைக்கும் மருந்தை, அவர் கொடுக்க வாய்ப்புள்ளது.

நன்றி-தினமலர்