Daily Archives: ஜூலை 15th, 2011

அழகு.. ஆண்மை.. வெண்டைக்காய்…

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `லேடீஸ் பிங்கர்’ என்று அழைக்கின்றனர்.

பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட வேண்டும்? எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள்.

அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.

வெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு.

வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.

இளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால், வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

வெண்டைக்காயை பிரிஜில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல் பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி வைக்கும் டிரேயில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும். சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.

அனிமேஷன் திரைப்பயணம்: 05 – கல்வி வாய்ப்புகள் மற்றும் எதிர்காலம்

bsc-animation-multimedia

சோம்பேறித்தனமாக தொலைக்காட்சி சானல்களை ஒரு ஞாயிற்றுக்கிழமை மாற்றிக் கொண்டே இருக்கையில் நடிகர் ‘அஜித்’ பற்றி ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

”நீங்க என்ன படிக்கிறீங்க?”

“விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கிறேன்”

காமிரா சற்று பான் செய்ய, இன்னொருவரை, “நீங்க?”

“நான் மல்டிமீடியா படிக்கிறேன்”

அட, நல்ல விஷயமெல்லாம் காட்டுகிறார்களே என்று எழுந்து உட்கார்ந்தவனுக்கு அடுத்தபடி வந்த காட்சிகள் ஒரே ஏமாற்றம்தான். எல்லோரும் ‘தலை’ போகிற விஷயம் பேச உடனே சுவாரசியம் இழந்தேன்!

பல தரப்பட்ட இளைஞர்கள் கணக்கிடல் போன்ற பழைய துறைகளைத் துறந்து, புதிய மல்டிமீடியா கல்வி படிக்கிறார்கள். விளம்பர ஏஜன்சிகள், மற்றும் இணையதளம் அமைத்தல் போன்ற வேலைகளுக்கு வெறும் வசீகரமான வார்த்தைகள் மட்டும் போதாது. அழகான காட்சியமைப்புகள் தேவை. அதுவும் பார்த்தவுடன் மயக்கும் அனிமேஷன் காட்சிகள் தேவை. சினிமாவைவிட விளம்பரம் மற்றும் இணையதள அமைப்பில் வேலை வாய்ப்புகள் அதிகம். இப்பகுதியில், இத்துறையில் உள்ள கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி ஆராய்வோம். மேலும், இந்திய அனிமேஷன் திரைப்படங்களையும் சற்று அலசுவோம்.

image37முதலில் இந்திய அனிமேஷன் சினிமா சந்தையைப் பற்றி ஒரு அறிமுகம். இது 2009 ல் 600 மில்லியன் டாலர் மதிப்புள்ளது. 2010 ல் இது 1 பில்லியன் டாலர் அளவுக்கு வளரும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் இன்னும் பிக்ஸார் போன்ற அமைப்புகள் வளரவில்லை. ஆனால், சில சிறிய தொடக்கங்கள் நம்பிக்கையூட்டுகின்றன. டூன்ஸ் அனிமேஷன், க்ரெஸ்ட் கம்யூனிகேஷன், UTV டூன்ஸ், ஜீ டிவி, பெண்டா மீடியா போன்ற அமைப்புகள் வளரத் தொடங்கியுள்ளன. இவை பல விதமான அனிமேஷன் திரைப்படங்களை எடுக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருக்கின்றன. இதில் சில விற்பனை அறிவிப்புகளாக இருந்தாலும், சில முழுப்படங்களாக மாற வாய்ப்புள்ளது. இந்திய அனிமேஷன் நிறுவனங்கள், சினிமாவைக் காட்டிலும் அதிக அளவில் வீடியோ விளையாட்டுகள் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்களுடன், மற்றும் மேல்நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்காகப் பணியாற்றி வருகின்றன. முக்கியமாக, அமெரிக்க வீடியோ விளையாட்டு டிஸைனர்களுக்குத் தேவையான மனித சக்தி நிறைந்த சில பளுவான, ஆனால் அதிக படைப்பாற்றல் தேவையில்லாத வேலைகளையே செய்யப் பழகி வருகிறார்கள்.

இந்திய அனிமேஷன் துறையில் உள்ள சிக்கல், சாமன்ய கணினி மென்பொருள் துறை போல செயல்படுவதுதான். இந்தியக் கணினி மென்பொருள் நிறுவனங்கள் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களின் பின் அலுவலக வேலைகளையே அதிகம் செய்து பணம் ஈட்டுகிறார்கள், இதனால், இந்திய வர்த்தகக் குறி (brand) இல்லாவிடினும் அதிகம் யாரும் கவலைப்படுவதில்லை. அனிமேஷனோ மிகவும் படைப்பாற்றல் மற்றும் கற்பனைவளம் தேவையான துறை. இதில் வர்த்தகக் குறிதான் எல்லாம். ‘Toy Story’ எவ்வளவு பிரபலமோ அவ்வளவு பிக்ஸாரும் பிரபலம். ஒரு ஏவிஎம் அல்லது ஜெமினி போல இந்திய அனிமேஷன் ஸ்டூடியோக்கள் பெயர் எடுத்தால்தான் உலகச் சந்தையில் நிலை நாட்ட முடியும். இதற்கு வெறும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பின்னலுவல் வேலை மட்டும் செய்தால் உயர முடியாது. இதைப் பற்றி விரிவாக பிறகு பேசுவோம்.

சில இந்திய அனிமேஷன் படைப்புகளை விமர்சிப்போம். மும்பை, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைத்ராபாத் போன்ற நகரங்களில் அனிமேஷன் நிறுவங்கள் வரத் தொடங்கி விட்டன. இந்நகரங்களில் உள்ள நிறுவனங்கள் வெளி நாட்டு தொலைக்காட்சிகளுக்காக அனிமேஷன் தொடர்களை தயாரிக்கின்றன. பெண்டாமீடியாவின் தயாரிப்பு சிந்த்பாத்.

பெண்டாவின் இன்னொரு தயாரிப்பான ‘பாண்டவாஸ்’ மிகவும் வித்தியாசமான ஒன்று:

இதில் வரும் போர்க்காட்சிகளில் குதிரைகளின் அசைவு மற்றும் போர் வீரர்களின் அசைவு இயந்திர கதியில் உள்ளதைப் பார்க்கலாம்.

க்ரெஸ்ட் கம்யூனிகேஷன்ஸின் “Jakers! The Adventures of Piggley Winks” லிருந்து ஒரு காட்சி:

மேற்கத்திய அனிமேஷன் திரைப்படங்களை இந்திய மொழிகளில் டப்பிங் செய்கிறார்கள் அல்லது இந்தியப் படைப்புகளை ஆங்கிலத்தில் வெளியிடுகிறார்கள். இன்னும் நம் இந்திய மொழிகளில் படம் எடுப்பது அரிதாகவே உள்ளது.

இந்தியாவில் சினிமா தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்த ஒன்று.  ’4K Red’ டிஜிட்டல் காமிராவில் இந்தியாவில் படமெடுக்கிறார்கள். அதுவும் இந்தத் தொழில்நுட்பம் வந்து 4 மாதங்களில் இந்தியர்கள் இதை கரைத்துக் குடித்து விட்டார்கள். பலருக்கு பன்மொழித் திறமைகள் வியக்கத் தகுந்த அளவுக்கு உள்ளது. உதாரணம், எஸ்பிபி பல மொழிகளிலும் பேச மற்றும் அழகாகப் பாடும் திறனுள்ளவர். அனிமேஷன் கதைகள் சரியாக அமைக்கப்பட்டால், பல மொழிகள் பேச நம்மிடம் திறமைகள் உள்ளன. பல தொழில்நுட்பத்திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன. பல மொழி மனித சினிமாக்கள் உருவாவதைப் போல பல மொழி அனிமேஷன் திரைப்படங்கள் எல்லா இந்தியர்களையும் கவரும் வண்ணம் எடுக்க முடியும் என்பது என் கருத்து. பல மொழிகளில் விளம்பரங்கள் பெரிய நிறுவனங்கள் பல ஆண்டுகளாக தயாரிக்கின்றன. இந்திய மொழிகளில் உதட்டசைவைச் சரியாக செய்வது கடினமானதானாலும் அனிமேஷன் திரைப்படங்களில் வளர்ந்தவர்கள், திரைப்படங்கள் போல அல்லாமல் மிகவும் எளிதான மொழிப்பிரயோகம் செய்தால் இது முடியும். இதனால் உற்பத்திக்குப் பின் செலவுகள் குறைக்க வாய்ப்புண்டு.

ஆனால், என்னவோ தெரியவில்லை, இந்திய சினிமாக்களில் கதைப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கதை சொல்லியே எல்லாவற்றையும் விளக்கும் நம் கலாச்சாரத்தில், இது வினோதமாகத்தான் படுகிறது. புராணங்களை வைத்துப் பல அனிமேஷன் திரைப்படங்கள் எடுக்கலாம் என்று ஒரு வாதம் உள்ளது. ஓரளவு இதில் உண்மை இருந்தாலும், பிரமிப்பாக எடுக்கப்படாவிட்டால், பார்வையாளர்களைக் கவருவது கடினம். புராணங்களில் உள்ள கதையமைப்பை,  கற்பனையுடன் அழகான பாத்திர அமைப்புடன் சுவாரசியமாக விவரிக்க வேண்டும். நம் சினிமாக்களில் தெளிவான திட்டமிடல் கிடையாது. அனிமேஷன் சினிமாவில் இது உதவாது. இதைப்பற்றி முந்தைய பகுதிகளில் பார்த்தோம். குழந்தைகளை மையமாகக் கொண்ட கதைகள் அனிமேஷனுக்கு உகந்தவை. எல்லாவற்றிற்கும் தேவை ஒரு ஜனரஞ்சக முதல் வெற்றி.

சரி, எப்படிப்பட்ட வேலைகள் இத்துறையில் உள்ளன? முதலில் இத்துறையில் ஆர்வம் கொள்பவர்கள் படம் வரைவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இன்று இந்தியாவில் குழந்தைகள் கூட ஃபோட்டோஷாப் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது முதல் படி. ஆனால், எப்படி இயக்கமையத்தை, எப்படி காமிரா கோணங்களை, எப்படி பல சம தளங்களைக் கையாள்வது என்று புரிய கொஞ்சம் வித்தியாசமான கோளவியல் சிந்தனை தேவை. நம் கல்வி முறைகள் இப்படிப்பட்ட சிந்தனையை வளர்ப்பதில்லை. பலருக்கு இது போன்ற திறமைகள் இருப்பதை வெளிக் கொண்டுவர நம் சமூகத்தில் அமைப்புகள் இல்லை. இதை ‘Spatial thinking’ என்கிறார்கள். மேல் நாடுகளில் ஒரு 10 வயது குழந்தையின் ‘Spatial thinking’ ஐ சோதிக்க வழக்கமான சோதனை உண்டு. பல மடிப்புகளாக ஒரு காகிதத்தை மடிக்கச் சொல்லிவிட்டு, அதில் ஒரு ஊசி கொண்டு குத்தினால், பிரித்த காகிதத்தில் எத்தனை ஓட்டை என்று 10 வயது மாணவன் சரியாக சொல்ல வேண்டும். இது போல பல சோதனைகள் மூலம் மாணவர்களின் ‘Spatial thinking’ எப்படி வளர்கிறது என்று கணிக்கிறார்கள்.

அடிப்படை உயர்நிலைப்பள்ளி கணிதத்திறன் போதுமானது. க்ராஃபிக்ஸ் மென்பொருள் தொகுப்புகள் உபயோகிக்க கணினி நிரல் எழுதும் திறன் தேவையில்லை. ஆனால், கணினியை வைத்து காட்சிரீதியாக சிந்திக்கும் திறன் தேவை. திரைக்கல்லூரிகளில் இன்று திரைப்படம் மற்றும் அனிமேஷன் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதற்குத் தனியாக டிப்ளமா மற்றும் தனியான விஷுவல் கம்யூனிகேஷன் டிகிரி படிப்பு எல்லாம் வந்துவிட்டது. மனித சினிமாக்கள் 100 வருடங்களுக்கு மேலாக எடுக்கப்படுகின்றன. அவை மிகவும் அழகாக பல பிரிவுகளாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதன் நல்ல விஷயங்கள் பலவும் அனிமேஷனுக்கும் பொருந்தும்.

அனிமேட்டர்கள் என்ற பதவி காட்சித்தொகுப்புகளை இணைத்து சோதித்து, ஒளியமைப்பு, மற்றும் ஸ்டோரி போர்டின்படி காட்சியமைக்கும் வேலை. முப்பரிமாண ஆர்டிஸ்ட் சற்று உயர் பதவி. முப்பரிமாணக் காட்சிகளைக் கணினியில் வரைபவர். இதற்கு படம் வரையவும், அனிமேஷன் பற்றியும் நன்றாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முப்பரிமாண அனிமேட்டர்கள் இரு பரிமாண அனிமேட்டர்களை விட சற்று உயர்நிலையாகக் கருதப்படுபவர்கள். ஆனால், இரு பரிமாண அனிமேட்டர்கள் விளம்பரப்படங்களுக்கு எப்பொழுதும் தேவையாக இருப்பவர்கள். அனிமேஷன் டிஸைனர்கள் அனிமேதன் ஆர்டிஸ்டைவிட இன்னும் உயர்பதவி. மாதத்திற்கு 2.5 முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பளம். ஆனால், நாளைக்கு 14 மணி நேரம் உழைக்க தயாராக இருக்க வேண்டும். இதைத் தவிர தகுந்த திறமை இருந்தால் காண்ட்ராக்ட் முறையில் நிறைய சம்பாதிக்க வழிகள் பெரிய நகரங்களில் உண்டு.

இளைஞர்கள் இதை எல்லாம் படித்துவிட்டு, “அடடா, அனிமேஷன் துறை ரொம்ப பசையான துறை” என்று உடனே எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தாவ வேண்டாம். வருடத்தில் பிக்ஸார் இரு தரமான படங்களை வெளியிடுகிறார்கள். சரி, இத்தனை இந்தியர்கள் இருக்கிறோமே, வருடத்திற்கு ஒரு 150 படங்கள் தயாரிக்கலாமே என்று மனக்கணக்கு போட வேண்டாம். நல்ல அனிமேஷன் திரைப்படம் எடுப்பது அசாத்திய உழைப்பு, ஒருங்கிணைப்பு, கூட்டு முயற்சி.

ஒரு தனி அனிமேட்டர் ஒருவர் அழகாக இதைப்பற்றி விவரித்துள்ளார். பிக்ஸாரின் திரைப்படம் 1.5 மணி நேரம் (90 நிமிடம்) ஓடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். பிக்ஸார் அதை 6 மாதத்தில் தயாரிக்கிறது. ஒரு 10 நிமிட அனிமேஷன் திரைப்படம் எடுக்க எவ்வளவு நாள் தேவை? 20 நாட்கள். அதுதான் இல்லை. இரண்டு வருடங்கள் உழைத்து இந்த 6 நிமிட திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். ’Pigeon Impossible’ என்ற 6 நிமிட முப்பரிமாண திரைப்படத்தை இங்கே காணலாம்:

படிப்படியாக இவர் செய்த ஒவ்வொரு அனிமேஷன் போராட்டங்கள் பற்றி விடியோ மூலம் விளக்குகிறார், லூகாஸ் மார்டெல்:

அனிமேஷன் துறையில் முன்னேற துடிக்கும் இளைஞர்கள் இவரது இணையதளத்தைப் படிக்க வேண்டும். அழகாக அனிமேஷன் முறைகளை விளக்கியுள்ளார் லூகாஸ்:

http://blog.pigeonimpossible.com/

உழைக்கத் துணிந்த, கற்பனை வளமுள்ள இளைஞர்கள் இத்துறையில் நுழைந்தால் வெற்றிபெற வாய்ப்புள்ளது. யார் கண்டார்கள் – மரத்தைச் சுற்றி டூயட் (இந்தியத் திரைப்படங்களில் மட்டுமே உள்ள காட்சியமைப்பு) போன்ற புதுமைகளை அனிமேஷன் துறையிலும் எதிர்காலத்தில் நாம் காண்போம் என்று நம்புவோம்.

இளைஞர்களுக்கு ஒரு சின்ன யோசனை. வெறும் 3DS Max தெரியும், Maya தெரியும். ஆகவே தன்னை அனிமேஷன் வித்தகர் என்று நினைக்க வேண்டாம். பொதுவாக, நம் இளைஞர்கள், மேல் வாரியாக மேலைநாட்டுத் (அதனால் தான் மேல்வாரி என்ற சொல் வந்ததோ?) தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதிலேயே காலத்தை செலவழிக்கிறார்கள். மென்பொருள் உபயோகத்திறன் மிகவும் முக்கியம் – ஆனால் அதுவே குறிக்கோளாகக் கூடாது. மென்பொருள் அம்சங்களுக்கு (feature/function) பின்னால் உள்ள நுட்பத்தையும் முறையாகக் கற்க வேண்டும். இதற்குக் கோள கணிதம், பெளதிகம் போன்ற அடிப்படை அறிவியல் அறிமுகங்கள் மிக அவசியம். வணிக ரீதியான அனிமேஷன் மென்பொருள்களில் கோள மற்றும் பெளதிக, ஒளி இஞ்சின்கள் பல ஆண்டுகள் ஆராய்ச்சியால் வளர்ந்தவை. திரைமறைவில் உள்ள விஷயங்களை முழுவதும் புரிந்து கொண்டால்தான் புதிதாக மேலை நாடுகளில் செய்யாததை நாம் செய்ய முடியும்.

இந்த அனிமேஷன் தொடரில் 5 பாகங்களில் நாம் பல விஷயங்களை அலசினோம். ஆனாலும் இத்துறையின் விளிம்பையே தொட்டுள்ளோம். இக்கட்டுரைகளால் சில இளைஞர்கள் இத்துறை மீது ஆர்வம் கொண்டு ஒரு இந்திய ஜான் லாஸட்டராக எதிர்காலத்தில் உருவானால், அந்த மாற்றத்தை கொண்டு வந்த பெருமை ‘சொல்வனத்தைச்’ சேரும்.

இத்தொடரை எழுத உதவிய நண்பரும், க்ராபிக்ஸ் வல்லுனர்/ஆய்வாளரும், பேராசிரியருமான டாக்டர்.ஸ்வாமி மனோகருக்கு நன்றி.

ரவி நடராஜன்

நன்றி- சொல்வனம்

நிறுவனங்களுக்கு உதவிடும் ஆபீஸ் 365

ஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்தவரை, மைக்ரோசாப்ட் எம்.எஸ். ஆபீஸ் மூலம் தன் உறுதியான இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இணையத்தில் கூகுள் தன் சாதனங்களை அளித்து இணையப் பயனாளர்களில் பெரும் ஜனத்தொகையைத் தன் பக்கத்தில் வைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, கூகுள் டாக்ஸ் (Google Docs) என்ற வசதியை இணையத்தில் தந்து, ஆபீஸ் தொகுப்பு பயன்பாட்டில், புதிய திசை யையும் பயன்பாட்டு வழியையும் கூகுள் வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட் பதிலுக்கு, இணையம் இணைந்த ஆபீஸ் மற்றும் பிற வசதிகளை அளிக்கும் வகையில் ஆபீஸ் 365 என்ற ஒரு இயக்கத்தினை அண்மையில் அறிமுகப்படுத்தியது. கிளவுட் கம்ப்யூட்டிங் இயக்க முறையில், ஆபீஸ் 365, டெஸ்க்டாப் கம்ப்யூட்டிங் வசதிகளை மக்களுக்குக் கொண்டு வந்துள்ளது.
சிறிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் தகவல் தொழில் நுட்பத்திற்கான செலவினங்களை 50% அளவில் குறைக்கும் வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆபீஸ் 365 என்ற புதிய வசதியைத் தந்துள்ளது. இதன் மூலம் இணையம் வழியாக, மைக்ரோசாப்ட் வழங்கும், நிறுவனத்திற்கு மட்டுமேயான தனி மின்னஞ்சல் எக்சேஞ்ச் தொடர்பு வசதி, சர்வர் பயன்பாடு ஆகியவை கிடைக்கின்றன. பைல்கள், அழைப்புகள், கூடி விவாதம் செய்வது போன்ற நிர்வாக நடவடிக்கைகளை இதில் மேற்கொள்ளலாம். நிறுவனம் ஒன்றின் வேலையை, அதில் பணியாற்றுபவர் உலகின் எந்த மூலையிலிருந்தும் செயல் படுத்தலாம். இதனால், இவற்றை நிறுவ ஒரு நிறுவனம் செலவழிக்கும் மூலதனச் செலவு குறைகிறது. ஒரு பயனாளர் மாதம் ஒன்றுக்கு இரண்டு டாலர் கட்டணம் செலுத்தி இந்த வசதியைப் பெறலாம். கூடுதல் வசதிகளுக்கேற்ப, கட்டணம் அதிகரிக்கும். ஏற்கனவே சோதனை அடிப்படையில் 12,000 நிறுவனங்கள் இதனைக் கடந்த 45 நாட்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். உலக அளவில் இரண்டு லட்சம் பேர் பதிந்து பயன்படுத்துகின்றனர். இந்த வசதி 40 நாடுகளில் 20 மொழிகளில் ஏற்கனவே கிடைக்கிறது.
ஆபீஸ் 365 மற்றும் கூகுள் டாக்ஸ் இரண்டுமே, இணையத்தில் மட்டுமே கிடைக்கும் கம்ப்யூட்டிங் சாதனங்களாகும். கூகுள் டாக்ஸ் இணையத்திலேயே முழுக்க இயங்குகிறது. ஆபீஸ் 365 இயக்க, உங்கள் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் (ஆபீஸ் 2010 உகந்தது) இருந்தால் நல்லது. இல்லாமலும் இயக்கலாம். இணைய வழி தயாரித்த பைல்களை, கம்ப்யூட்டரிலும் ஆப் லைனில், இயக்கிப் பார்க்க எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பு, கம்ப்யூட்டரில் இருப்பது அவசியம். ஆபீஸ் 365ல் இணைபவர்கள் நிச்சயம் இதனை உணர்ந்து, ஆபீஸ் தொகுப்பு ஒன்றைத் தங்கள் கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்வார்கள். ஆபீஸ் 365 உரிமக் கட்டணத்திலேயே, எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பினையும் இயக்கலாம்.
நிறுவனங்களுக்காக, மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் மற்றும் ஷேர் பாய்ண்ட் ஆகியவற்றை இயக்கி, அதனை நிர்வகிப்பதில் சிக்கல்களை எதிர் கொண்டு வருபவர்கள், கவலையை விடுத்து, ஆபீஸ் 365 இயக்கத்தில் இணையலாம். எந்தக் கவலையும் இன்றி, எக்சேஞ்ச், ஷேர் பாய்ண்ட் மற்றும் ஓர் அலுவலகத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.
எந்த இணைய பிரவுசரிலும் இந்த இரண்டும் செயல்படும். இருப்பினும் ஆபீஸ் 365 இன்டர்நெட் எக்ஸ்புளோர ரிலும், கூகுள் டாக்ஸ் குரோம் பிரவுசரிலும் முழுமையான விளைவினைத் தருகின்றன. இதில், கூகுள் டாக்ஸ் ஒரு படி மேலாகச் சென்று, கூகுள் டாக்ஸ் பக்கத்தில், மஞ்சள் நிற டேப்பில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் டாக்ஸ் தரும் அனைத்து வசதிகளையும் சப்போர்ட் செய்யாது என்று கூறுகிறது.
உலக அளவில், அலுவலகப் பணி களுக்கு மைக்ரோசாப்ட் ஆபீஸ் பயன்பாடு தான் பெரும்பாலான இடங்களில் உள்ளது. எனவே இதனைப் பொறுத்தவரை ஆபீஸ் 365 ஜெயிக்கிறது. சோதனை செய்து பார்க்க ஒரு .docx பைலை, என் கம்ப்யூட்ட ரிலிருந்து கூகுள் டாக்ஸ் மற்றும் வேர்ட் வெப் அப்ளிகேஷனுக்கு அனுப்பினோம். இரண்டிலும் பைலைத் திறந்து படிக்க முடிந்தது. பைலில் போல்டு, இடாலிக்ஸ், அடிக்கோடு என சில பார்மட்டிங் செயல்களை மேற் கொண்டோம். மீண்டும் பைலை கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்தோம். வேர்ட் 2010ல் அனைத்து மாற்றங்களுடன் பைல் சரியாக இருந்தது. ஆனால் கூகுள் டாக்ஸ் பைல், வேறு பாண்ட், வேறு லைன் ஸ்பேசிங் எனப் பல வேறுபாடான பார்மட்டிங் செயல்களுடன் காட்சி அளித்தது. ஆபீஸ் 365 இயக்கத்தில், இன்ஸ்டன்ட் மெசேஜிங், ஆடியோ – வீடியோ கான்பரன்ஸ், இணைய வெளி ஒயிட் போர்டிங் வசதிகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கிடைப்பதால் கூடுதல் வசதியுடன் இருப்பது தெரிகிறது.
ஆனால் செலுத்த வேண்டிய கட்டணத்தில், மைக்ரோசாப்ட் எங்கோ செல்கிறது. கூகுள், ஓர் அலுவலகத்தின் சில குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டுமே பணம் கேட்கிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் நிறுவன சர்வரில், கூகுளுக்குக் கட்டணம் செலுத்தி, எத்தனை இமெயில் அக்கவுண்ட் வேண்டுமென்றாலும் தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. போன் தொடர்பு வசதியும் கிடைக்கிறது. மற்ற வசதிகளான, கூகுள் டாக்ஸ் கொண்டுள்ள வேர்ட் ப்ராசசிங், ஸ்ப்ரெட்ஷீட், ஸ்லைட் ÷ஷாஸ், பார்ம்ஸ், டேட்டா ஸ்டோரேஜ், ஜிமெயில், காலண்டர், ஸ்பேம் பில்டர் என நாம் பயன்படுத்தி வரும் அனைத்தும் இலவசமே. இந்த வகையில் கூகுள் மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.
இருப்பினும் ஆபீஸ் 365 மற்றும் கூகுள் டாக்ஸ் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பது முறையற்றது. இரண்டின் அடிப்படையும், அதன் வழியில் கிடைக்கும் வசதிகளும் வெவ்வேறு கட்டமைப்பு கொண்டவையே.
கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், ஆபிஸ் 365 இயக்கத்துடன் நல்லதொரு தொடக்கத் தினை மைக்ரோசாப்ட் ஏற்படுத்தியுள்ளது. தான் வழங்க இருக்கும் வசதிகளின் உயர் தன்மையே இதற்கு ஒரு நல்ல இடத்தைப் பிடித்துத் தரும் என்பது உண்மையே.