Daily Archives: ஜூலை 16th, 2011

மங்கையரின் மனதை கவரும் வழிமுறைகள்

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பதுதான் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சிலரது ஆதங்கம். இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது.

உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்று பலருக்கு தெரிவதில்லை. பெண்களை மனதை கவருவது எப்படி என்பது குறித்து உங்களுக்காக சில யோசனைகள்:

கவர முயற்சிக்க வேண்டாம்

இது என்ன விளையாட்டு? என்று ஏராளமானோர் கேட்பது காதில் விழுகிறது. நிஜமாகவே இது உண்மைதான். நாம் எதற்காகவாவது அதீத முயற்சி செய்தால் அது கிடைக்கும் வரை நமக்கு போராட்டம்தான். பெண்கள் விசயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும். பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி செய்யாமல் இருந்தாலே வெற்றி உங்கள் பக்கம்தான். இதுதான் பெண்களை கவருவதற்கான முதல் ரகசியம்.

நீங்கள் உங்கள் வேலையில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெற்றாலே அனைவரின் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். பெண்களின் கவனத்தையும் எளிதில் கவரலாம். இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாமல் ஏராளமான ஆண்கள் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெண்களிடையே வெறுப்பை சம்பாதிக்கின்றனர்.

புத்திசாலித்தனத்தை நிரூபியுங்கள்

பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீதுதான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி.

புதிதாக சிந்தியுங்கள்

பெண்களின் மனதை கவரவேண்டும் என்பதற்காக எத்தனையோ ஆண்கள் பகீரத பிரயத்தனம் செய்கின்றனர். அதையெல்லாம் கண்டு வெறுப்புற்றிருக்கும் பெண்களிடம், நீங்களும் பழைய பாணியை பின்பற்றி முயற்சி செய்தால் கதைக்கு உதவாது!. எனவே இயல்பாக இருந்து உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள். பெண்களை கவரைவேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். உலக நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

தோற்றம் முக்கியம்

என்னதான் புத்திசாலியாக இருந்தாலும் தோற்றத்திலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். சுத்தமான உடை, கம்பீரமான தோற்றம், போன்றவையும் ஆண்களைப்பற்றி பெண்களிடையே ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும். உங்களின் தோற்றத்திற்கும் செயல்பாட்டிற்கும் ஒத்துப்போகவேண்டும். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். உங்கள் எண்ணங்களை இயல்பாய் வெளிப்படுத்துங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

பெண்களின் மன ஆழம்

பெண்களின் மனதை புரிந்து கொள்வது என்பது எவராலும் முடியாது. எத்தனையோ அறிஞர்களும், ஞானிகளும் கூட இந்த விசயத்தில் தோற்றுத்தான் போயிருக்கின்றனர். ஆண்களின் எண்ணத்திற்கு எதிராகத்தான் அநேக பெண்கள் சிந்திக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தலைமுறை தலைமுறையாக பெண்களின் மனதைக் கவர ஆண்கள் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கின்றனர். என்னதான் பெண்களுக்குப் பிடிக்கும் ? என்று குழம்பித்தான் போகின்றனர் ஆண்கள். இன்றைய 21- ம் நூற்றாண்டு இளைஞர்களிடையும் இந்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. எனவே மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினாலே நீங்கள் பெண்களின் உள்ளம் கவர் கள்வன் ஆவது நிச்சயம்.

பீரங்கி வண்டிகள் `டாங்க்’ எனப்படுவது ஏன்?


பண்டைய இந்தியாவில் பருவகால மழையைச் சேமிக்கக் குளங்கள் வெட்டப்பட்டன. அவை `டேங்கன்’ (Tanken) என்று அழைக்கப்பட்டன.

இந்தக் கருத்து, 17-ம் நூற்றாண்டில் பிரிட்டனுக்கு கொண்டுவரப்பட்டது. ஆங்கிலத்தில் `டேங்க்’ என்று அறிமுகமாயிற்று. அதாவது தண்ணீரைச் சேமித்து வைக்கும் இடம் என்று பொருள்.

1915-ல், ஆயுதம் தாங்கிய பெரிய போர் வண்டிகளை பிரிட்டன் வடிவமைத்தது. தண்ணீர் டேங்குகள் தயாரிக்கிறோம் என்று கூறிக்கொண்டு அவை உருவாக்கப்பட்டன. `Tanks’ என்று எழுதப்பட்ட பெரிய பெட்டிகளில் அவை அனுப்பப்பட்டன. (Somme) சோம் என்ற போரில் முதன்முதலில் அவை அறிமுகப்படுத்தப்பட்டன.

பசிக்க 7 வழிகள்

ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் `பசியின்மை’. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பசியை அதிகரித்து, உணவுகளை விரும்பி சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே…

* நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு வேளையில் ஒரே உணவு மட்டுமோ இருக்கக்கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாக சேர்த்து சாப்பிடுங்கள்.

* சமைக்கும் உணவு சுவையாக இருந்தால்தான் நம்மால் விரும்பி சாப்பிட முடியும். எனவே வழக்கமான காய்கறிகளானாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்து சாப்பிடுங்கள். சமையல் புத்தகங்கள் அல்லது விதவிதமாக சமைக்கும் அனுபவமுள்ளவரின் உதவியை நாடுங்கள்.

* உங்கள் எடை சரியானதா என்பது பாலினம், உயரம், வயது மற்றும் பாரம்பரியம் உட்பட பல விஷயங்களை சார்ந்திருக்கிறது. உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பல வியாதிகள் ஏற்படும். சராசரியான உடல் எடையை மேலாண்மை செய்வது உடல் நலத்திற்கும், உணவு பழக்க வழக்கத்திற்கும் நல்லது.

* உடல் ஆரோக்கியமாக இருக்க மிதமான அளவில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அளவாக சாப்பிடுவதுதான் சரியான நேரத்திற்கு பசியைத் தூண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை கூடுதலாக சாப்பிடுவதும், மற்ற உணவுகளை தேவையைவிட குறைவாக எடுத்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கு தரும். இது பசியின்மையையும், உணவின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

* சிலருக்கு புதுப்புது உணவுகளை சுவைத்துப் பார்ப்பது பிடிக்கும். அடிக்கடி புதிய உணவுகளை சேர்த்தால் ஜீரண நேரம் மாறுபடுவதால் பசிப்பதில் பிரச்சினைகள் வரலாம். வழக்கமான உணவுகளை சுழற்சி முறையில் சாப்பிடுவது எளிதான ஜீரணத்திற்கு வழிவகுக்கும். வழக்கமான நேரத்திற்கு பசியையும் தூண்டும்.

* சேர்க்க வேண்டிய உணவுகளை சேர்ப்பதும், தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்ப்பதும் சிறப்பான உணவுப் பழக்கமாகும். உடல் நலத்தில் அக்கறை காட்டும் பலரும் அதிக ஊட்டச்சத்துள்ள உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருவர் உடலுக்கும் தேவையான சத்துக்கள் மாறுபடும். எனவே உணவு ஆலோசகரின் பரிந்துரைப்படி சத்தான உணவுகளை சேர்க்கவும், அவசியமற்ற நொறுக்குத் தீனி போன்ற உணவுகளை குறைக்கவும், தவிர்க்கவும் செய்யுங்கள்.

* எல்லா உணவுகளும் அவசியமானதும், சத்தானதும் அல்ல. ஒருமுறை கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொண்டால் மறுமுறை அந்த சத்துக்கள் குறைவாக உள்ள உணவை உண்ண வேண்டும். அதேபோல ஒரு சத்தான உணவை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அடுத்த முறை அந்த உணவை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவுகள் நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்திற்கும் பக்க பலமாக இருக்க வேண்டுமல்லவா!

ஆபீஸ் 2010 சர்வீஸ் பேக் 1

சென்ற ஜூன் மாதம், தன் ஆபீஸ் 2010 அறிமுகமாகி ஓராண்டினை, மைக்ரோசாப்ட் கொண்டாடி யது. இந்த கூட்டுத்தொகுப்பிற்கான சர்வீஸ் பேக் ஒன்றினை அதே நேரத்தில் வெளியிட்டுள்ளது. 32 பிட்டிற்கான சர்வீஸ்தொகுப்பினை
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=9D2E12828B69418BAFA09F61239EC8BE என்ற முகவரியிலிருந்து பெறலாம்.
64 பிட் சிஸ்டத்திற்கான தொகுப்பினைப் பெற http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=E9F3C2D0C3214910A4CEB2F294B42D65 என்ற முகவரிக்குச் செல்லவும்.
இந்த சர்வீஸ் பேக் புரோகிராம் மூலமாக சில முக்கிய மாற்றங்களை மைக்ரோசாப்ட் தந்துள்ளது. இதுவரை வெளியான அப்டேட் அனைத்தும் மொத்தமாக இதன் மூலம் வழங்கப் பட்டுள்ளது. நிலையாக நின்று இயங்கும் திறன், பாதுகாப்பு, இயக்க திறன் ஆகியவை கூட்டப்பட்டுள்ளன. அனைத்து ஆபீஸ் புரோகிராம்களும், கிளவ்ட் கம்ப்யூட்டிங் புரோகிராமான ஆபீஸ் 365 உடன் இணைந்து செயல்படத் தேவையான மாற்றங்கள் இந்த அப்டேட் மூலம் கிடைக்கின்றன. அத்துடன் விண்டோஸ் லைவ் ட்ரைவ் மற்றும் ஒன் நோட் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயலாற்றத் தேவையான மாற்றங்கள் இதில் தரப்பட்டுள்ளன.
ஆபீஸ் தொகுப்பின் ஒவ்வொரு புரோகிராமிலும் ஏற்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகள் குறித்து இங்கே சுருக்கமாகக் காணலாம்.
1. எக்ஸெல் 2010: முந்தைய பதிப்பு களில் உருவாக்கப்பட்டுள்ள ஒர்க் புக்குகளைக் கையாளும்போது பார்மட் மற்றும் பிற கட்டமைப்புகளை, அவற்றிற் குப் பாதகமின்றிக் கையாளுவதற்குத் தேவையான கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பாக, ஸ்பானிஷ், டச், டர்க்கிஷ் போன்ற சில ஐரோப்பிய மொழிகளை, இதில் கையாளும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. பவர்பாய்ண்ட் 2010: இத்தொகுப் பில் உள்ள Use Presenter View அதன் மாறா நிலையில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. முதல் மானிட்டரில் பிரசன்டேஷன் தொகுப்பில் உள்ள நோட்ஸ்களும், துணை மானிட்டரில் பிரசன்டேஷன் ஸ்லைடுகளும் காட்டப்படும் வசதி தரப்பட்டுள்ளது.
3. வேர்ட் 2010: இத்தொகுப்பில் Display Map பதிந்து காட்டப்படுகையில், அது சரியாக இப்போது காட்டப்படுகிறது. பாராகிராப் கட்டமைப்பினைச் சரி செய்கையில், ஒரு பாராவின் இன்டென்ட் திருத்தங்களின் போது, இன்னொரு பாராவின் இன்டென்ட் முன்பு மாற்றப் பட்டது. இந்த குறை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது.
4. அவுட்லுக் 2010: இந்த தொகுப்பும் ஆபீஸ் 365 தொகுப்புடன் இணைக்கப் படுகிறது. இதனையே மெயில்கள் அனுப்ப, மாறா நிலைத் தொகுப்பாக செட் செய்யப்படும் வசதி தரப்பட்டுள்ளது.
5. ஒன் நோட் 2010: விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவில் உள்ள ஒன் நோட் நோட்புக்குகளுடன், ஒன் நோட்புக் 2010 சரியாக ஒருங்கிணைந்து, இணக்கமாகச் செயல்படக் கூடிய வகையில் எஸ்.பி.1 தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. தேடல் முடிவுகளில் உள்ளாக, தேடப்படும் தகவல் ஹைலைட் செய்யப்படுவது இதன் சிறப்பாகும்.
6. அக்செஸ் 2010: அப்ளிகேஷன் பார்ட் காலரியில், சமுதாய தளங்களுக்கான தகவல்களை ஒருங்கிணைக்கக் கூடிய வசதியினை சர்வீஸ் பேக் 1 தருகிறது.எக்ஸெல் ஒர்க் புக்கிற்கு ஒரு அக்செஸ் பைலை எக்ஸ்போர்ட் செய்கை யில் ஏற்பட்ட பிரச்னை தீர்க்கப் பட்டுள்ளது.
மேலும் பல சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. நீங்கள் ஆபீஸ் 2010 ஒரிஜினல் தொகுப்பினைப் பயன்படுத்து பவராக இருந்தால் மட்டுமே இந்த சர்வீஸ் பேக்கினை டவுண்லோட் செய்து, இணைக்க முடியும். உங்கள் ஆபீஸ் 2010 தொகுப்பு கூடுதல் வசதி மற்றும் பாதுகாப்புடன் உங்களுக்கு இந்த சர்வீஸ் பேக் 1 மூலம் உதவும்.

தெய்வத்தை விருந்துக்கு அழைக்கும் பக்தர்கள்

திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதியரை அவர்களது உறவினர்கள் விருந்துக்கு அழைப்பது வழக்கம். ஒரு ஊரில் திருக்கல்யாணம் செய்து கொள்ளும் தெய்வத்தையே தங்களது வீடுகளுக்கு அழைத்து விருந்து வைக்கிறார்கள் பக்தர்கள். சென்னை வண்டலூர் அருகே அமைந்துள்ள ரத்னமங்கலம் குபேரன் கோவில்தான் அது.

நாம் திருப்பதி உண்டியலில் செலுத்தும் காணிக் கைகள் எல்லாம் குபேரனுக்கு வெங்கடாஜலபதி செலுத்தும் வட்டி மட்டுமே என்பது ஐதீகம். கலியுகம் எப்போது முடியப்போகிறதோ, அந்த தருணத்தில் குபேரனிடம் தனது கல்யாணத்திற்கு வாங்கிய கடனை வெங்கடாஜலபதி அடைத்து விடுவதாகவும் நம்பப்படுகிறது.

பெருமாளின் திருமணத்திற்கு கடன் கொடுத்த குபேரன் தனிக்கோவில் கொண்டுள்ள ரத்னமங்கலத்தில் ஆண்டுதோறும் குபேரன்-சித்ரலேகா திருக்கல்யாணம் சிறப்பாக நடை பெறுவது வழக்கம்.

இந்த தெய்வ திருக்கல்யாணம் வித்தியாசமான முறையில் நடத்தப்படுகிறது. நாம் திருமணத்திற்கு அச்சடிக்கும் அழைப்பிதழ் போலவே இக்கோவில் திருக்கல்யாண வைபவத்திற்கும் அழைப்பிதழ் அச்சடிக்கிறார்கள்.

`ஸ்ரீமகாலட்சுமி தாயாரின் முன்னிலையில், பிரம்மாவின் பேரனும், விச்ரஸவசின் குமாரனுமான குபேர பகவான் என்கிற மணமகனுக்கும், ரிதி என்கிற சித்ரலேகா என்கிற மணமகளுக்கும் திருமணம் செய்ய எல்லா வல்ல இறைவனால் நிச்சயிக்கப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து மாலை மற்றும் மலர் கிளி வரவழைக்கப்பட்டு நடத்தப்படும் திருமணத்தில் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து, குபேர சம்பத்துடன் கூடிய இறையருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்…’ என்று நீள்கிறது அந்த அழைப்பிதழ்.

இந்த ஆண்டுக்கான இக்கோவில் குபேரனின் திருக்கல்யாணம் கடந்த 3-ந் தேதி நடந்தது. தற்போது, லட்சுமி குபேர உற்சவ மூர்த்தி கல்யாண விருந்துக்காக பக்தர்களின் இல்லங்களுக்கு, அவர்களது அழைப்பின் பேரில் எழுந்தருளி வருகிறார். திருக்கல்யாணம் முடிந்த ஒரு மண்டலம் வரை அவர் அவ்வாறு எழுந்தருள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.