Daily Archives: ஜூலை 19th, 2011

விசித்திரமான ஒளி!

நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஒளியில் ஒளி மூலத்தின் அணுக் களும், மூலக்கூறுகளும் தனித்தனியாக வெவ்வேறு நிறங்களில் (அலைநீளங் களில்) ஒளியை வெளியிடுகின்றன. இத்தகைய ஒளி எளிதில் சிதறக்கூடியதாக இருக்கிறது. எனவே இந்த ஒளியை உண்டாக்குவதற்குச் செலவான ஆற்றலும் வீணாகிப் போய்விடுகிறது.

இந்தக் குறைகள் இல்லாத ஓர் அற்புத ஒளியை உண்டாக்கலாம் என்று அறிவியல் அறிஞர்கள் நம்பினர். அந்த அற்புத ஒளியை உருவாக்கியும் உள்ளனர். அதாவது, வெப்பமூட்டப்பட்ட அணுக்கள் உயர்ந்த ஆற்றல் நிலையில் இருக்கும்போது அவற்றின் மீது ஒரு குறிப்பிட்ட அலைநீளமுள்ள (நிறமுள்ள) ஒளியை மோதச் செய்ய வேண்டும். இதனால் அந்த அணுக்களை, நாம் அவற்றின் மீது பாய்ச்சினோமே அதே அலைநீளமுள்ள ஒளியை வெளியிடத் தூண்டலாம். புதிதாக வெளியிடப்படும் ஒளி, நாம் அணுக்களின் மீது பாய்ச்சிய ஒளியைப் பல மடங்கு பெருக்குகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் ஒளிக்கற்றை அற்புத சக்தி வாய்ந்தது. இந்த ஒளி, எளிதில் சிதையாது, ஆற்றல் மிக்கது, அற்புதமானது. மோசமானவர்களின் கையில் கிடைத்தால் ஆபத்தானதும் கூட. இதைத்தான் நாம் `லேசர்’ என்கிறோம்.

லேசர் என்பது ஓர் ஆங்கில வாக்கியத்தின் முதல் எழுத்துகளின் சுருக்கம். அதன் விரிவு, `தூண்டப்பட்ட கதிரியக்கத்தினால் ஒளிப்பெருக்கம்’ என்பதாகும்.

1917-ம் ஆண்டு அறிஞர் ஐன்ஸ்டீன், `தூண்டப்பட்ட கதிரியக்கம்’ பற்றித் தம்முடைய கருத்தை வெளியிட்டார். ஆனால் அதைக் கருவிகள் மூலம் உருவாக்குவதற்கான வழிகள் 1950-களில்தான் கண்டுபிடிக்கப்பட்டன.

அமெரிக்க இயற்பியல் அறிஞர்கள் சார்லஸ் கே. டவுனஸ் என்பவரும், ஏ.எல். ஷால்லோ என்பவரும், பார்க்கக்கூடிய ஒளியைப் பயன்படுத்தி, லேசர் கருவியை உருவாக்கலாம் என்பதை நிரூபித்துக் காட்டினர். அதேசமயத்தில் சோவியத் யூனியனை சேர்ந்த இரண்டு அறிவியல் அறிஞர்களும் தனித்தனியாக இந்தக் கருத்தை உறுதிப்படுத்தினர்.

1960-ம் ஆண்டு அமெரிக்க அறிவியல் அறிஞர் டி.எச். மேயன், ரத்தினக் கல்லைப் பயன்படுத்தி லேசரை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து பலவகை லேசர்கள் உருவாக்கப்பட்டன. பல்வேறு மூலக்கூறுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் லேசர்கள், அலைநீளம், ஒளிக்கற்றையின் பருமன், திறன் ஆகிய பண்புகளில் ஒன்றுக்கொன்று அதிகளவில் வேறுபடும்.

திரவ லேசர், வளி லேசர், வேதியியல் லேசர், அரைக்கடத்தி லேசர் என்று இன்று பலவகை லேசர்கள் உள்ளன. சில குறிப்பிட்ட லேசர்களின் கூட்டமைப்பினால் அற்புதச் செயல்களைச் செய்ய முடியும்.

இரவு நேரத்தில் தொலைவில் உள்ள சுவரில் `டார்ச்’ ஒளியைப் பாய்ச்சுங்கள். டார்ச் ஒளி போகப் போக விரிந்துகொண்டே போய் முடிவில் ஒளியே இல்லாமல் போய்விடும். ஆனால் லேசர் ஒளி அத்தகையதல்ல. ஐந்து மில்லிமீட்டர் விட்டமுள்ள ஒரு லேசர் கற்றையை நிலவில் இருந்து பூமிக்கு அனுப்புவதாக வைத்துக்கொள்வோம். அந்த லேசர் கற்றை சிறிதும் சிதையாமல் (விரிவடையாமல்) அதே ஐந்து மில்லி மீட்டர் விட்டத்துடன் பூமியை வந்து அடையும்! இதனால் அதனுடைய ஆற்றலும் சிதையாமல் இருக்கிறது.

லேசர் கதிரின் ஆற்றல் அளவிட முடியாதது. கோடானு கோடி கிலோவாட் ஆற்றல் உள்ள லேசர் கதிர்களை ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவில் ஒன்று குவித்தால், அந்தக் கதிர்களில் குவிக்கப்பட்டிருக்கும் ஆற்றல் உலகத்தில் உள்ள எந்தப் பொருளையும் உருக்கி ஆவியாக மாற்றிவிடும்.

லேசர் கதிரைக் கொண்டு உருக்குப் பாளங் களையும், கான்கிரீட் பாளங்களையும் அறுக்கலாம். சலவைக்கல் பாளங்களை ஆவியாகக்கூட மாற்றலாம். லேசரைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் அணுச் சேர்க்கை மூலம் அளப்பரிய ஆற்றலை உருவாக்க முடியும். இது நடைமுறை ரீதியில் சாத்தியமாகும்போது எரிபொருள் பிரச்சினைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். சுற்றுப்புறச் தூய்மை கெடுவது பற்றிய பேச்சுக்கே இடமிருக்காது!

மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால்

சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுது நாம் மேற்கொள்ளும் பயிற்சிகளும் உட்கொள்ளும் ஊட்டச்சத்தான உணவுகளுமே, பிற்காலத்தில் நமது உடல் வலுவாக மாறுவதற்கு காரணமாக அமைகின்றன. கலை விளையாட்டாகவும், வீர விளையாட்டாகவும் நாம் பின்பற்றி வந்த பலவிதமான விளையாட்டுகள், நமது முழங்கால் மூட்டுகளுக்கும், குதிகாலுக்கும் வலுவை தருவதாகவே இருக்கின்றன.
நாகரிக வளர்ச்சியின் காரணமாகவும், விளையாட போதுமான இடமின்மை மற்றும் குறுகிய மனப்பாங்கு காரணமாக, இது போன்ற விளையாட்டுகள் குறைந்து, தொலைக்காட்சி, கணினி என்று பூட்டிய அறைக்குள் விளையாடுவதே, பல குழந்தைகளின் உடல் பருமனுக்கும், எதிர்காலத்தில் தோன்றும் மூட்டுவலிக்கும், முக்கியமான காரணம்.
நமது பாட்டி, தாத்தாக்களின் உடல் வலிமை நமக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறி தான். பல பெண்கள் நாற்பது வயதிலேயே பெண் தன்மையை இழந்து வருவதும், ஆண்கள், கழுத்துவலி, முதுகுவலி என்று அலுத்துக் கொண்டிருப்பதும் அதிகரித்து வருவதற்கு உடற்பயிற்சி இன்மையும், மூட்டுகளை சூழ்ந்திருக்கும தசை, தசைநார் மற்றும் சவ்வுகளின் வலிமை குறைவதுமே காரணம். இளம் பிராயத்தில் விளையாடாததால் தான், பிற்காலத்தில் எக்ஸ்ரே, ஸ்கேன் என்று, பல மருத்துவமனைக்கு ஏறி இறங்க வேண்டியுள்ளது.
முழங்கால் மூட்டில் ஏற்படும் பாதிப்பினாலும் சவ்வில் ஏற்படும் வீக்கம் மற்றும் திரவ பற்றாக்குறையினாலும், முழங்கால்வலி உண்டாகிறது. பெண்களுக்கு நொண்டி, பாண்டி, கயிறு தாண்டுவது, கயிறு இழுப்பது போன்றவற்றால், முழங்கால் மூட்டு தசைகள் பலமடைவதுடன், கருப்பை கோளாறுகள் தவிர்க்கப்படுகின்றன.
ஆண்கள், சிலம்பம், கபடி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கிட்டிப்புல் போன்றவற்றால், மூட்டுகள் நன்கு சுழன்று, திரும்பி வேலை செய்வதுடன், ஆண் ஹார்மோன்கள் அதிகரித்து, போதுமான அளவு சுண்ணாம்பு சத்து சேர்ந்து, எலும்புகளின் பலம் அதிகரிக்கிறது. ஆண் மற்றும் பெண்களுக்கு, நடுத்தர வயதில் தோன்றும் பலவிதமான உடல் மற்றும் மூட்டுவலிகளை நீக்கி, முழங்காலுக்கு வலுவை கொடுக்கும் மூலிகை தான் முடவாட்டுக்கால்.
டிரைனேரியா குர்சிபோலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பாலிபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த புறணிச்செடிகள், பெரிய மரங்களை சார்ந்து வளர்கின்றன.
இவற்றின் வேர்கிழங்குகள் முடவாட்டுக்கால் என்ற பெயரில் கொல்லிமலைப் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் வேர் கிழங்கில் கேட்கின், கவுமாரின், பிளேவனாய்டுகள் மற்றும் தாவர ஸ்டீராய்டுகள் ஏராளமாக உள்ளன. இவை மூட்டுகளில் தோன்றும் வீக்கம், இறுக்கம் மற்றும் வலி ஆகியவற்றை நீக்குவதுடன், மூட்டுகளுக்கு வலிமையை தருகின்றன.
முடவாட்டுக்கால் கிழங்கு 250 கிராம் வாங்கி, நன்கு கழுவி, சுத்தம் செய்து, மேற்தோலிலுள்ள ரோமங்களையும், புறணியையும் நீக்கி, இரண்டு, மூன்று துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், கசகசா, தேங்காய் துருவல் ஆகியவற்றை மைய அரைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி, அத்துடன் லவங்கப்பட்டை சேர்த்து, லேசாக எண்ணெய் விட்டு வதக்க வேண்டும்.
முடவாட்டுக்கால், அரைத்த மசாலா, வதக்கிய தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை 1 லிட்டர் நீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்.

டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.

`மெஸ்’ பிறந்த கதை!

தற்போது பொதுவாக, சிறிய உணவு விடுதிகளை `மெஸ்’ என்று அழைக்கிறோம். ஆரம்பத்தில், ராணுவ வீரர்கள் சாப்பிடும் அறையைத்தான் `மெஸ்’ என்று குறிப்பிட்டனர்.

பிரிட்டிஷ் மாலுமிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட, குறைந்த அளவுள்ள, அசுத்தம் நிறைந்த உணவை, `அசுத்தமானது’ என்ற பொருளில் `மெஸ்’ என்று குறிப்பிட்டனர். அந்த உணவு அப்படித்தான் இருந்தது. அது ஒருவேளை உணவைக் குறித்தது.

மாலுமிகள், போர் வீரர்கள், விமானிகள் ஒன்று சேர்ந்து உண்டு, குடித்து, ஒருவரோடு ஒருவர் பழகும் இடம் என்ற பொருளில் தற்போது குறிப்பிடப்படுகிறது.

ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதற்காக, அதிகாரிகள், சார்ஜண்டுகள், சாதாரணப் போர் வீரர்கள் என்று மூன்று நிலைகளில் மெஸ்கள் அமைக்கப்படும்.

வேர்ட் டிப்ஸ்-தானாக மாதம் மாற்றப்பட:

தானாக மாதம் மாற்றப்பட:
வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட் ஒன்றில், இந்த மாதம் என்ன என்று எழுதப்பட வேண்டுமா? எடுத்துக் காட்டாக ஒவ்வொரு மாதமும், ஒரு ரிபோர்ட் ஒன்றை உங்கள் நிறுவனம் உருவாக் குகிறது. அதற்கான டேட்டாவை தினந் தோறும் ஒரு டேபிளில் அமைக்கலாம். அல்லது டெக்ஸ்ட்டில் இணைக்கலாம். அப்போது அந்த மாதத்தின் பெயர் அமைய வேண்டும் என நீங்கள் விரும்பலாம். இதற்கு டேட் என்ற பீல்டைப் பயன்படுத்த வேர்ட் வசதி அளிக்கிறது. கீழ்க்காணும் முறையில் அதனை செட் செய்திடவும்.
1. எந்த இடத்தில் மாதத்தின் பெயர் வரவேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரை நிறுத்தவும். இந்த இடத்தில் பீல்டு உருவாக்க வேண்டும்.
2. பீல்டுக்கான வளைவான அடைப்புக் குறிகளை அமைக்க Ctrl+F9 (கண்ட்ரோல் +எப்9)டைப் செய்திடவும். வளைவு பிராக்கெட் குறிகள் ஏற்படுத்தப்படும். உங்கள் கர்சர் இதனுள் இருக்க வேண்டும்.
3. இதில் date\@MMMM என டைப் செய்திடவும்.
4. பின் அப்டேட் செய்வதற்காக F9 அழுத்தவும்.
ஒவ்வொரு முறையும் எப் 9 அழுத்துகையில் அந்த மாதம் கிடைக்கும்.

வேர்ட் தொகுப்பின் தொடக்க நிலைகள்
வேர்ட் தொடங்குவதனை நாம் விரும்பிய படி அமைக்கலாம். அதற்கான வழிகளும் எளிதுதான். வேர்ட் தொகுப்பின் அடிப்படை இயக்க பைலின் பெயர் Winword.exe ஆகும். இது புரோகிராம் பைல்ஸ் போல்டரில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் இன்ஸ்டால் செய்த இடத்தில் இருக்கும். இந்த பைலுக்கு ஒரு கட்டளை வரி ஷார்ட் கட் ஐகான் வழி கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஷார்ட் கட் ஐகான் டெஸ்க் டாப் அல்லது குயிக் லாஞ்ச் பாரில் இருக்கும். இந்த ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். பின் ப்ராபர்ட்டீஸ் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஷார்ட் கட் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் கமாண்ட் லைன் பாக்ஸ் கிடைக்கும். இதில் வேர்ட் பைல் திறந்திட அதன் பாத் உடன் கட்டளை வரி இருக்கும். வழக்கமாக இது “C:\Program Files\Microsoft Office\Office\Winword.exe” என இருக்கும். சில கம்ப்யூட்டர்களில் இது வேறாக இருக்கலாம். இந்த வரியின் இறுதியில் கீழே தரப்பட்டுள்ள ஸ்விட்ச்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றை அமைக்கலாம்.
1. எந்த ஸ்விட்சும் அமைக்கப்படா விட்டால் வேர்ட் புதிய டாகுமெண்ட் ஒன்றுடன் தொடங்கும். ஏற்கனவே தொடங்கப்பட்டு எடிட் செய்யப்பட்ட பைல்கள் இருப்பின் அவை பட்டியலிடப்படும்.
2. /n என்ற ஸ்விட்ச்சை இணைத்தால் வேர்ட் புதிய காலி டாகுமெண்ட் இல்லாமல் தொடங்கப்படும்.
3. /w என்ற ஸ்விட்ச் புதிய காலி டாகுமெண்ட் ஒன்றுடன் வேர்ட் தொடங்கும்.
4. /ttemplatename என்ற ஸ்விட்சில் நீங்கள் தயார் செய்த டெம்ப்ளேட் பைலின் பெயரை அமைத்தால் அந்த டெம்ப்ளேட் டிற்கு ஏற்றபடி புதிய டாகுமெண்ட் அமைக்கப்படும்.
5. /a என்ற ஸ்விட்ச் வேர்ட் தொகுப்பினைத் தொடங்கி ஆட் இன் தொகுப்புகள் மற்றும் நார்மல் டெம்ப்ளேட் பைல்களுடன் இயங்குவது தடுக்கப்படும். இந்த ஸ்விட்ச் இணைக்கப்பட்ட பின் உருவாக்கப்படும் பைல்களை படிக்கவும் எடிட் செய்திடவும் முடியாது.
6. /m என்ற ஸ்விட்ச் ஆட்டோ எக்ஸிகியூட்டபிள் மேக்ரோக்கள் இன்றி வேர்ட் தொடங்கிட வழி வகுக்கும்.
7. /mmacroname என்ற ஸ்விட்ச் மேக்ரோ நேம் என்ற இடத்தில் தரப்பட்டுள்ள மேக்ரோவின் பெயரில் உள்ள மேக்ரோ பைலை இயக்கும். மற்ற மேக்ரோ இயங்குவதனைத் தடுக்கும்.