ஸ்கிரீன் தோற்றத்தைச் சரி செய்க

நம் வேலை அனைத்தும் கம்ப்யூட்டர் வழி ஆன பின்னர், நாளெல்லாம் நாம் காண்பது மானிட்டர் திரையைத் தான். அதில் தெரியும் எழுத்துக்கள், எண்கள், படங்கள் சரியாக நமக்குக் காட்டப்படாவிட்டால், நம் பார்வைத் திறனுக்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு.
திரையில் தெரியும் எழுத்துக்கள் சரியாகக் காட்டப்படுவதற்கு, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒரு வழியைத் தருகிறது. இதில் உள்ள ClearType Text Tuner என்ற டூலைப் பயன்படுத்துவதன் மூலம், டெக்ஸ்ட் அனைத்தையும் நாம் துல்லிய மாகப் பார்க்கலாம்.
இந்த டூலைப் பயன்படுத்துவது, கண் டாக்டர் ஒருவரை நாம் சென்று பார்ப்பது போலத்தான். டெக்ஸ்ட் எப்படிக் காட்டப்பட வேண்டும் என நாம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு எடுத்துச் சொல்லி, திரையில் டெக்ஸ்ட் தோற்றத்தை நமக்கேற்ற வகையில் அமைக்கிறோம்.
ClearType Text Tuner டூலைப் பெறுவதற்கு, உங்கள் கம்ப்யூட்டர் கீ போர்டில் விண்டோஸ் கீ அழுத்தவும். கிடைக்கும் கட்டத்தில் cttune என்று டைப் செய்து என்டர் தட்டவும். உடன் ClearType Text Tuner டூல் பயன்பாட்டுக் கட்டம் கிடைக்கும். முதல் விண்டோவில் ClearType டூலை இயக்க நீங்கள் தூண்டப்படுவீர்கள். ஆனால் அது ஏற்கனவே இயக்கப்பட்டிருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டம் மாறா நிலையில் அதன் இயக்கத்தைத் தொடங்கும் வகை யிலேயே வைத்திருக்கும். பின்னர், ClearType Text Tuner உங்கள் கம்ப்யூட்டர் மானிட்டர் அதன் சரியான ரெசல்யூசனில் அமைக்கப்பட்டுள்ளதா என்ற சோதனையை மேற்கொள்ளும். அது சரியாக இல்லை என்றால், உங்களிடம் நீங்கள் விரும்பும் வகை என்ன என்று கேட்கப்படும். இயக்கப் பட்டு, திரை ரெசல்யூசன் சரியான முறையில் அமைக்கப் பட்டுவிட்டது உறுதி செய்யப் பட்டவுடன், பல எழுத்து வகைகள் எடுத்துக்காட்டுக்களாக வரிசையாக உங்களுக்குக் காட்டப்படும். நீங்கள் அப்போது காட்டப்படும் டெக்ஸ்ட்டைப் படித்துப் பார்க்க வேண்டியதில்லை. அவை எல்லாம் பல்வேறு எழுத்து வகைகள், உங்கள் மானிட்டர் திரையில் சரியாக, நீங்கள் படிப்பதற்குச் சிரமமின்றி காட்டப் படுகின்றனவா என்று சோதனை செய்திட ஏற்படுத்தப்பட்ட டெக்ஸ்ட். ஒவ்வொன்றாகப் பார்க்கவும்.எந்த வகைத் தோற்றம் சரியானது என்று உங்களுக்கு நிறைவளிக்கிறதோ, அதன் மீது கிளிக் செய்திடவும்.
நான்கு வகையான சாம்பிள் எழுத்து வகைகள் காட்டப்பட்டு, நிறைவான நிலை வந்தவுடன், ClearType சோதனை முடிவுறும். அந்த நிலைக்கு ClearType செட்டிங்ஸ் அமைக்கப்படும்.
இனி, உங்கள் மானிட்டரில் எழுத்து வகைகள் பார்வைக்குச் சிரமமின்றி காட்டப்படும்.

%d bloggers like this: