Daily Archives: ஜூலை 23rd, 2011

அதிரடி வேக `ராக்கெட் பிளேன்’!

அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியால் போக்குவரத்து நேரம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கிறது. இதில் அடுத்த புரட்சியாக `ராக்கெட் பிளேன்’ உருவாகவிருக்கிறது.

ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான `ஈ.ஏ.டி.எஸ்.’, ஜப்பான் நாட்டுடன் இணைந்து இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. புதிய `ராக்கெட் பிளேன்’ பற்றி ஈ.ஏ.டி.எஸ். கூறுகையில், `கார்பன் வெளியேற்றம் மிகவும் குறைந்த ஹைபர்சோனிக் போக்குவரத்து’ என்று தெரிவித்துள்ளது.

இந்த `ராக்கெட் பிளேன்’ மூலம் உலக நாடுகளுக்கு இடையே அதிவேகத்தில் பயணிக்க முடியும். உதாரணமாக, ஆசியக் கண்டத்தில் உள்ள ஜப்பானின் டோக்கியோவில் இருந்து ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள பாரீஸுக்கு இரண்டரை மணி நேரத்தில் சென்று விடலாம்.

இந்த விமானத்தில் 50 முதல் 100 பயணிகள் வரை பயணிக்கலாம். இது, சாதாரண என்ஜினைக் கொண்டே `டேக்-ஆப்’ ஆகும். அதற்கான எரிபொருள், கடற்பாசிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உயிர் எரிபொருளாக இருக்கும். தரையில் இருந்து சாதாரண என்ஜினால் எழும்பும் விமானம், பின்னர் ராக்கெட் என்ஜினால் செயல்படத் தொடங்கும்.

அந்த ராக்கெட் என்ஜின், ஆக்சிஜனையும், ஹைட்ரஜனையும் எரிபொருளாகப் பயன்படுத்தும். எனவே என்ஜினில் இருந்து வெளியேறுவது வெறும் நீராவியாக மட்டுமே இருக்கும்.

இன்றைய விமானங்கள் பூமிப் பரப்பில் இருந்து 10 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்கின்றன என்றால், இந்த ராக்கெட் பிளேன் 32 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கும்.

கீழே இறங்குவற்கு, ராக்கெட் என்ஜின் அணைக்கப்பட்டு, மெதுவாகப் பூமி நோக்கித் தாழும். தரையை நெருங்கியதும் சாதாரண என்ஜினை பயன்படுத்தி இறங்கும்.

என்ன, ராக்கெட் பிளேனில் பயணிக்கத் துடிக் கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். இதற்கான மாதிரியே 2020-ம் ஆண்டுவாக்கில்தான் தயாராகும். 2050-ம் ஆண்டில் மக்கள் போக்குவரத்துக்கு வரும்.

தனக்குத் தானே பழுதுநீக்கும் இதயம்!

இதயம் தனக்குத் தானே பழுதுநீக்கிக்கொள்ளும் முறையை இங்கிலாந்து ஆய்வாளர் பால் ரைலி கண்டுபிடித்துச் சாதனை படைத்துள்ளார்.

இதுதொடர்பாக, எலியின் இதயத்தில் அவர் ஆய்வு செய்துள்ளார். அதில், ஸ்டெம் செல்லை இடம்மாற்றம் செய்வதன் மூலம், சேதம் அடைந்த செல்கள் தாங்களாகவே தங்களைச் சீர்படுத்திக் கொள்ளச் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார்.

இந்த ஆய்வு ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது, இதை மனிதர்களுக்கு நடைமுறைப்படுத்தச் சில ஆண்டுகள் ஆகலாம் என்றபோதும் இது மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். எதிர்காலத்தில், மாரடைப்பு போன்றவற்றால் இதயத்தில் பாதிப்பு ஏற்படும்போது இம்முறை மூலம் அதைச் சீர்ப்படுத்தலாம். அதற்கான தூண்டுதலுக்காகவும், ஒழுங்குபடுத்துவதற்காகவும் சிறிது மருந்து எடுத்துக்கொண்டால் போதும்.

தற்போது மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தால், மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இதயத் திசுக்கள் இறந்தால் அதைச் சரிசெய்யமுடியாத நிலையே இன்றும் இருக்கிறது.

இறந்த செல்களின் அளவு அதிகரிக்கும்போது, உடம்புக்குப் போதுமான ரத்தத்தைச் செலுத்த முடியாமல் இதயம் செயலிழக்கிறது.

பாதிக்கப்பட்ட திசுக்களை உயிர்ப்பிக்க தற்போது விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இப்போதைக்கு, இதயம் செயலிழக்கும் நிலையை அடைந்தவர்கள் செயற்கை உபகரணத்தையோ, மாற்று இதயத்தையோதான் நம்பியிருக்க வேண்டியுள்ளது.

அதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட திசுக்கள் மீண்டும் தாங்களாகவே சரிசெய்யும் முயற்சியில்தான் ஆய்வாளர் ரைலியின் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக, இதயத்தின் வெளி அடுக்கான பெரிகார்டியத்தில் காணப்படும் குறிப்பிட்ட செல்களை அவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

மட்டன் சாப்ஸ்

தேவையான பொருட்கள்

சாப்ஸ் மட்டன் – 1/2 கிலோ
வெங்காயம், தக்காளி – 200 கிராம்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
தேங்காய் – 1/4 மூடி
சோம்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – ஒரு குழிக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2

செய்முறை

* மட்டனை சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும்.

* தேங்காய், சோம்பு அரைத்துக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

* நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

* இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், தனியாத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மட்டனையும் சேர்க்கவும்.

* அரைத்த தேங்காயை ஊற்றிக் கிளறி, சாப்ஸ் நன்கு சுண்ட விடவும்.

* இப்போது பொடித்த சீரகம், மிளகைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

`செப்’ தாமு

rundll32.exe பைலின் வேலையும் பயனும்

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு பைல் தான் rundll32.exe. எனவே இந்த பைல் இயங்கு வதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு எர்ரர் மெசேஜ் கிடைக்கிறது. அடிக்கடி இந்த பைல் குறித்து மட்டும் ஏன் பிழைச் செய்திகள் கிடைக்கின்றன என்று பல வாசகர்கள் நமக்கு கடிதங்கள் மூலம் கேட்டுள்ளனர்.
இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த பைல் குறித்த சந்தேகங்கள் தெளிவாகும்.
rundll32.exe பைல் நம் கம்ப்யூட்டரில் டாஸ்க் மேனேஜரில் இயங்கிக் கொண்டிருப் பதனைப் பார்க்கலாம். ராம் மெமரியில் இந்த பைல் தங்கி இருந்து, மற்ற பைல்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால், இந்த பைல் பெயர், பிரச்சினை குறித்த எர்ரர் மெசேஜில் அடிபடுவது இயற்கையே.
கம்ப்யூட்டர் இயங்க அடிப்படையான டி.எல்.எல். பைல்கள் இந்த ரன் டி.எல்.எல். 32 பைல் வழியாக இயங்குகின்றன. ஒரு டி.எல்.எல். பைலை நேரடியாக இயக்க முடியாது. இ.எக்ஸ்.இ. அல்லது காம் பைல்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல். பைல்கள் இயங்காது. விண்டோஸ் சிஸ்டத்திற்கு இவற்றை இயக்க இன்னொரு பைல் தேவைப்படுகிறது. அதுதான் rundll32.exe பைல். 32 பிட் டி.எல்.எல். பைல்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.
இப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டரில் rundll32.exe என்ற பைல் கெட்டுப் போய் விட்டதென்று மெசேஜ் கொடுத்து சரியான rundll32.exe பைல் வேண்டும் என்றால் கிளிக் செய்திடவும் என ஒரு லிங்க் தரும். இதில் கிளிக் செய்தால் பைல் இறங்கும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் பாப் அப் மெசேஜ்களைப் பார்த்தால், சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.

அம்மை போக்கும் முத்தாரம்மன்

முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் இருந்து கடற்கரை சாலையில் 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குலசை என்கிற குலசேகரன்பட்டினம். இங்குள்ள முத்தாரம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இங்கு இறைவனும் (ஞானமூர்த்தீசுவரர்), இறைவியும் (முத்தாரம்மன்) ஒரே பீடத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பது சிறப்பு.

இப்பகுதியை ஆட்சி செய்த குலசேகரப்பாண்டியன் என்ற மன்னனுக்கு இந்த முத்தாரம்மன் காட்சி கொடுத்ததால், `குலசேகரன்பட்டினம்’ என்று இந்த ஊருக்கு பெயர் வந்ததாக கூறுகிறார்கள்.

சுயம்புவாக தோன்றிய ஞானமூர்த்தீசுவரரும், முத்தாரம்மனும் கருவறையில் வடக்கு திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். தற்போது உள்ள சுவாமி, அம்மன் சிலைகளின் பாதத்தில், சுயம்புவாக உருவான சிலைகள் உள்ளன.

ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாயும் இருந்தால் `பரிவர்த்தனை யோகம்’ என்று கூறுவார்கள். அதுபோல் குலசேகரன்பட்டினத்தில் சுவாமியின் ஆற்றலை அம்பாள் பெற்று `சிவ’மயமாக உள்ளார். அம்பாள் ஆற்றலை சுவாமி பெற்று சக்தி மயமாக வீற்றிருக்கிறார். இது `பரிவர்த்தனை யோக நிலை’ ஆகும். எனவே இங்கு அம்பாளின் அருளாட்சியே கோலோச்சுகிறது.

பிரசித்திபெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழா புகழ்பெற்றது. தசரா விழா என்று போற்றப்படும் இவ்விழா மைசூர் தசராவுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்றது.

`முத்தாரம்மன்’ பெயர் காரணம் பாண்டியநாடு முத்துக்களுக்கு சிறப்பு பெற்றது. அத்தகைய முத்துக்கள் ஒன்றிணைந்து அம்பாளாக உருவம் கொண்டதால், `முத்தாரம்மன்’ என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

கிராமங்களில் அம்மை நோயை, `முத்துப் போட்டதாகவும்’ கூறுவார்கள். அப்படி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குலசேகரன்பட்டினம் வந்து மனம் உருகி வேண்டினால், முத்துக்களை மாற்றி அம்பாள் குணப்படுத்துவதாக ஐதீகம். அதாவது, முத்து+ஆற்று+அம்மன் = முத்தா(ற்ற)ரம்மன் என பெயர் வந்துள்ளதாக கருதப்படுகிறது.

நவமணிகளில் `முத்து’ மட்டும் பட்டை தீட்டப்படாமல் தானே ஒளிரும் தன்மை கொண்டது. அதேபோல் குலசேகரன்பட்டினத்தில் அம்பாள் தானே தோன்றி மக்களை பாதுகாத்து வருவதால் `முத்தாரம்மன்’ நாமத்தில் அழைக்கப்படுகிறார் என்று பரவசப்படுகிறார்கள் பக்தர்கள்.