Daily Archives: ஜூலை 25th, 2011

`ஷாப்பிங்’ சந்தோஷம் தரும்!

`மனம் சோர்ந்துபோய் கிடக்கிறதா? `ஷாப்பிங்’ செல்லுங்கள், சந்தோஷம் மனதை நிறைக்கும்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். `ஷாப்பிங்கில் உங்களுக்கு நீங்களே பரிசளித்துக்கொள்ளுங்கள். அது உங்கள் மனநிலையில் நீடித்த, ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று அவர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இதுதொடர்பான ஆய்வில், ஷாப்பிங் வந்த நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் கேள்விகள் கேட்டுப் பதில்கள் பெறப்பட்டன.

அத்துடன், குறிப்பிட்ட நபர்கள் தங்களின் ஷாப்பிங் பழக்கம், வாங்கிய பொருட்கள், அப்போது தங்களுக்கு இருக்கும் மனநிலை பற்றியும் `டைரி’யில் குறித்து வரும்படி கூறினர்.

ஷாப்பிங் செல்லும்போது தாங்கள் நல்ல மனநிலையில் இல்லாவிட்டால், ஏதாவது ஒரு பொருளை பார்த்தவுடன் `ஆசையில்’ வாங்குவது வழக்கமாக இருக்கிறது என்று சிலர் தெரிவித்தனர்.

தங்களின் சந்தோஷத்துக்காகவே `ஏதாவது’ ஒன்றை வாங்கி வருவதாக 62 சதவீதம் பேரும், கொண்டாட்டத்தின் ஒரு வழியாக ஒரு பொருளை வாங்குவதாக 28 சதவீதம் பேரும் கூறினர்.

ஷாப்பிங்கால் மகிழ்ச்சி அடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அது ஒரு சில எதிர்மறைத் தாக்கங்களையும் ஏற்படுத்தக் கூடும். தங்கள் ஆய்வில் பதில் அளித்த பலர் உற்சாகமான மனநிலையில் இருந்தவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று முன்ஜாக்கிரதையோடு கூறுகிறார்கள், ஆய்வாளர்கள்.

தங்கிடி கபாப்

தேவையான பொருட்கள்

சிக்கன் கால் பகுதி துண்டுகள் – 6
தயிர் – ஒரு கப்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
கறுப்பு உப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி – 1/2 டீஸ்பூன்
முட்டை – 1
எண்ணை – 1/2 குழிக்கரண்டி

செய்முறை

* சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து கொள்ளவும்.

* முட்டையைத் தவிர எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

* சிக்கன் துண்டுகளைக் கீறி மசாலாவில் போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

* முட்டையை உடைத்து லேசாக இறைச்சி துண்டுகளில் பூசி மைக்ரோவேவ் ஓவனில் வைத்து இருபுறமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* தங்கிடி கபாப் ரெடி.

துருவங்கள் ஒரே மாதிரியானவையா?


நம்மில் பலர், தென்துருவமான அண்டார்டிக்கும், வடதுருவமான ஆர்ட்டிக்கும் ஒன்று போல இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா?

தென்துருவம், அண்டார்டிகா என்ற நிலப்பகுதியால் ஆனது. வடதுருவப் பகுதியோ ஆர்ட்டிக் பெருங்கடலால் ஆன நீர்ப்பகுதி. இப்பெருங்கடலை வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்களின் முனைப் பகுதிகள் சூழ்ந்திருக்கின்றன. தென்துருவம் நிலம். வடதுருவம் நீர்.

வடதுருவப் பகுதியில் மனிதர்கள், விலங்குகள், சில தாவரங்கள் அப்பகுதியின் சூழ்நிலைக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொண்டு வாழும் நிலை இருக்கிறது. தென்துருவப் பகுதியிலோ, நிலப் பகுதி விலங்குகள் எதுவுமே கிடையாது. அங்கேயே வாழும் மனிதர்களும் இல்லை. செடி, கொடிகள் என்றால் சிலவகைப் புற்கள், பாசிகள் மட்டும்தான்.

ஆனால் இப்பகுதியில் பெங்குவின் பறவைகள் மட்டும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. காரணம் அங்கு அவற்றுக்கு நிலத்தில் காணப்படும் எதிரிகள் கிடையாது.

தட்பவெப்பநிலை? தென்துருவத்தில் கடுங்கோடையிலும் வெப்பம் மிகக் குறைந்து குளிர் வாட்டி எடுக்கும். மழைக் காலத்திலோ கடும் பனிப்புயல் வீசிக்கொண்டேயிருக்கும்.

வடதுருவத்திலோ, கடற்பகுதியில் இருந்து காற்றலைகள் எழும்பி தட்பவெப்பத்தைச் சற்று மிதப்படுத்துகின்றன. தென்துருவத்தில் கடுங்கோடையிலும் தட்பவெப்பம் 0 டிகிரி அல்லது அதற்கும் கீழேதான். எப்போதாவது அபூர்வமாய் 30 முதல் 40 டிகிரி வரை ஏறுவதுண்டு. மழைக் காலத்தில் கேட்கவே வேண்டாம். வெப்பநிலை மைனஸ் 30 முதல் 40 டிகிரிக்கு கீழேதான்.