Daily Archives: ஜூலை 26th, 2011

தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு

சமீபகாலமாக, தமிழகத்தில் வெள்ளக்‌‌கோவில்தாராபுரம், சென்னை உள்ளிட்ட பல இடங்களில், நில அதிர்வுகள் மிரட்டிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சென்னை நகரில் அடிக்கடி நிகழும் சிறிய அளவிலான நில அதிர்வு, மக்களைப் பீதியடையச் செய்துள்ளது.கடந்த ஜூன் 3ம் தேதி பிற்பகலில், சென்னை, தி.நகர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில், அடுக்குமாடி வீடுகளில் வசித்தவர்கள் உணரும் வகையில், நில அதிர்வு ஏற்பட்டது.

மீண்டும் ஜூலை 10ம் தேதி மாலை 4 மணியளவில் அசோக்நகர், கேகே.நகர், ஈக்காட்டுத்தாங்கலிலும், கடந்த 19ம் தேதி திருவல்லிக்கேணி மற்றும் சுற்றுப் பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர்.இந்தியாவில் எந்தெந்தப் பகுதிகளில் நிலநடுக்கம் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பது குறித்து, டில்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்னிந்தியாவில் சென்னை, கோவை, உள்ளிட்ட 38 நகரங்கள் மிதமான நில அதிர்வு அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, கல்பாக்கம், ‌சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆகியவை மிதமான நில அதிர்வு வருவதற்கான பகுதிகள் என குறிப்பிடப்பட்டுள்ளன.நிலநடுக்கத்தை அதிக அபாயம், மிதமான அபாயம், குறைந்த அபாயம் என ரிக்டர் அளவின் அடிப்படையில், ஒன்று முதல் 12 பிரிவுகளாக பிரித்துள்ளனர். ஒன்று என்றால் உணரப்படாத அளவு. ரிக்டர் அளவு 12 என்றால், நிலத்தின் அமைப்பையே மாற்றிவிடும் அளவுக்குக் கடுமையானது.

இதில், சென்னை மிதமான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள நகரமாக சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட 38 தென்னந்திய நகரங்கள் இந்தப் பிரிவில் உள்ளன. ஒருவேளை இங்கு நில அதிர்வு வந்தால், அதை எதிர்கொள்வதற்கான பேரிடர் மேலாண் தொழில் நுட்பம் நம்மிடையே எந்த அளவுக்கு உள்ளது என்பது கேள்விக்குறியே.

இது குறித்து சென்னை வானிலை மைய அதிர்வியலாளர் கோபால் கூறியதாவது:அளவுக்கு அதிகமான ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானத்திற்காக வரம்பின்றி மணல் அள்ளுதல், நகரமயமாக்கலுக்காக ஏராளமான மரங்கள் வெட்டுவது போன்ற பல்வேறு காரணங்களால் பூமி சமநிலைத் தன்மையை இழந்து விடுகிறது.மேலும், நீர்நிலைகளில் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாமல் உபரி நீர் கடலில் கலந்து விடுகிறது. இதனால், கடல் மட்டத்தை விட பூமி தாழ்நிலையை அடைகிறது. செயற்கையாலும், இயற்கையாலும் நிலநடுக்கம் மனித வாழ்க்கையில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

எதிர்பாராத நேரங்களில், எந்த விதமான அறிகுறியும் இல்லாமல் நிலநடுக்கம் ஏற்பட்டு, மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்துகின்றன. நிலநடுக்க அளவுகளை எல்லா நாடுகளும் பதிவு செய்கின்றன. நில அதிர்வு அதிகபட்சமாக மூன்று மையங்களில் பதிவானால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.வேலூர் சேலம், திரிசூலம் ஆகிய மலைப்பகுதிகளில் வெடிபொருட்களைப் பயன்படுத்துவதால் அதிக வெடிச்சத்தம் வரும். அது நில அதிர்வு என கூற முடியாது. மிகவும் குறைவான அதிர்வு பதிவாகாது. தமிழகத்தில் தென்மாவட்டங்கள் பாதுகாப்பாக உள்ளன. வடக்கு மாவட்டங்கள் மற்றும் சென்னை நகர் ஆகியவை மிதமான நிலநடுக்கத்தின் மூன்றாவது மண்டலத்திற்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு கோபால் கூறினார்.

நிலநடுக்கம் எதனால் ஏற்படுகிறது, அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி, பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. நிலநடுக்கம் நடந்த பின் தான், அது எவ்வாறு நிகழ்ந்தது என்று ஆய்வு நடத்தப்படுகிறது. ஆனால், நிலநடுக்கத்திற்கான சரியான காரணம் என்ன என்று, விஞ்ஞானிகளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.அவர்களின் கூற்றுப்படி, கடலில் அதிகப்படியான பேரலைகள் எழுவது; நகரில் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்து; பூமிக்கடியில் பாறைகளுக்கிடையே ஏற்படும் அழுத்தம் போன்ற காரணங்களால் நிலநடுக்கம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். நில அதிர்வு என்பது நிலநடுக்கம் வருவதற்கான ஒரு அறிகுறி என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

ரிக்டர் என்றால் என்ன?நிலநடுக்க மானியால் (சீஸ்மோமீட்டர்) ரிக்டர் அளவை மூலம் நிலநடுக்க அதிர்வு அளக்கப்படுகிறது. இந்தக் கருவியை அமெரிக்க நில அதிர்வியலாளர் சார்லஸ் ரிக்டர் 1935ம் ஆண்டு கண்டுபிடித்தார். 2க்கு குறைவானவற்றை மனிதர்களால் உணரமுடியாது. ரிக்டர் அளவில் ஐந்து என்ற அளவு, நான்கைவிட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். 6க்குமேல் பதிவாகும் நிலநடுக்கம் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ரிக்டர் வந்த பின், அதிகபட்சமாக 8.9 வரை நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உச்சஅளவை ”மத்ரா நிலநடுக்கமும்(2004), ஜப்பான் நிலநடுக்கமும்(2011) முறியடித்துள்ளன.-ஜி.எத்திராஜுலு-

நன்றி-தினமலர்

மன்மோகன், சிதம்பரம் மீது “2 ஜி’ ராஜா புகார்:தயாநிதி பாதையில் நடந்ததாக தகவல்

“நான் தவறு ஏதும் செய்யவில்லை. எனக்கு முன்பிருந்த அமைச்சர்கள் கடைபிடித்த அதே கொள்கையைப் பின்பற்றித் தான் லைசென்ஸ்கள் வழங்கினேன். தவறு செய்ததாக என்னை குற்றம் சுமத்தினால், பிற அமைச்சர்களையும் சிறைக்குள் தள்ள வேண்டும். ஸ்வான், யுனிடெக் நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு, சிதம்பரம் தான் ஒப்புதல் அளித்தார். இது பிரதமருக்கும் தெரியும். இதை, பிரதமர் இல்லையென மறுக்கட்டும் பார்க்கலாம்’ என்று கோர்ட்டில், ராஜா சவால் விடுத்துப் பேசினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு, பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்டோருக்கு குற்றப்பத்திரிகையின் நகல், கடந்த வாரம் தரப்பட்டு விட்டது. குற்றம் நடைபெற்றது குறித்த தகவல்களை தொகுப்பதற்கு முன், அவர்கள் தரப்பு கருத்துக்களையும் கேட்பதற்காக, குற்றம்சாட்டப்பட்டோருக்கு ஒரு வாய்ப்பை, கோர்ட் வழங்கும். அதன்படி நேற்று, முன்னாள் அமைச்சர் ராஜா, தன் வாதங்களை கோர்ட்டில் அடுக்கினார்.

அப்போது, ராஜா வழக்கறிஞர் சுஷில் குமார் கூறியதாவது:ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களுக்கு, குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரம் வழங்கியது ஏன் என, சி.பி.ஐ., குற்றம்சாட்டுகிறது. 1,658 கோடி ரூபாய் வரை அளித்து, அவர்கள் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்றனர். லைசென்ஸ் பெற்றுவிட்டதாலேயே எல்லாம் முடிந்துவிடாது. அதன் பிறகு, சேவையைத் துவங்குவதற்கு பல கட்டங்கள் உள்ளன. அதற்கு பணம் தேவை. அந்த சமயத்தில், மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில், மிக முக்கிய முடிவும் எடுக்கப்பட்டது. அதுவரை, 49 சதவீதம் வரை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று இருந்த வெளிநாட்டு முதலீட்டின் வரம்பை, 74 சதவீதமாக உயர்த்தியது. அரசாங்கத்தின் இந்த முடிவை பயன்படுத்தி, அந்நிறுவனங்கள் தங்களது பணத்தேவையை பூர்த்தி செய்ய முடிவெடுக்கின்றன.

அதன் விளைவாக பங்குகளை விற்கின்றன. இந்த பங்குகள் விற்பனை என்பது, முழுக்க முழுக்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடந்துள்ளது.இந்த யுனிடெக்,ஸ்வான் ஆகிய இரு நிறுவனங்களின் பங்குகளை விற்பது என முடிவெடுத்த போது, அதற்கான ஒப்புதலை அளித்தவர், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம். இந்த ஒப்புதலை அளித்த போது, பிரதமரும் இருந்தார். அவரும் இதை நன்றாக அறிவார். நான் கூறுவதை இப்போதும் கூட முடியுமானால், பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துப் பார்க்கட்டும்.சிறைக்கு அனுப்பவும்: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, ஜஸ்வந்த் சிங் தலைமையில் அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து முடிவெடுக்கப்பட்டது. “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏல முறை வேண்டாம் என்று, அந்த குழு தான் முடிவெடுத்தது. தவிர, டிராய் அமைப்பும் 28.8.07 அன்று எடுத்த முடிவின்படி, ஏலம் கூடாது என்றே தெளிவுபடுத்தப்பட்டது. இந்த முடிவுகளை பின்பற்றிய என்னை, குற்றவாளியாக்குகின்றனர்.

ஒரு அமைச்சராக நான் எடுத்த முடிவுகளில் தவறு ஏதும் இல்லை. விதிகளைத் தான் அமல்படுத்தினேனே தவிர, தவறு செய்யவில்லை. எனக்கு முன்பிருந்த அமைச்சர்களும், இதே முறையில் தான் லைசென்ஸ் வழங்கினர். அருண்÷ஷாரி 26 லைசென்ஸ்களை வழங்கினார். தயாநிதி 25 லைசென்ஸ்களை வழங்கினார். நான் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளேன். நான் தவறு செய்தேன் என்று சட்டமும், நீதியும் கூறுமானால், எனக்கு முன்பிருந்த அனைத்து அமைச்சர்களையும் சிறைக்கு அனுப்ப வேண்டும்.உண்மையில், நான் அமைச்சராக எடுத்த முடிவின்படி, தொலைபேசி கட்டணம் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது. சாதாரண ரிக்ஷா தொழிலாளி வரை மொபைல் போன்களை பரவலாக பயன்படுத்தும் நிலையை உருவாக்கினேன். தொலைத்தொடர்பு துறையில் இது ஒரு வகையான சாதனை.

மேலும், நான் மொத்தம் 9 நிறுவனங்களுக்கு லைசென்ஸ்கள் வழங்கினேன். ஆனால் ஸ்வான், யுனிடெக் என்ற இரண்டே இரண்டு நிறுவனங்கள் மட்டும் தான், திரும்பத் திரும்ப குறிவைத்து குற்றம்சாட்டப்படுகின்றன. பிற நிறுவனங்கள் குறித்து எதையும் பேச மறுக்கின்றனர். இவ்வாறு, பிற நிறுவனங்கள் குறித்து பேசாமல் தவிர்ப்பதன் பின்னணியில் மர்மம் இருப்பதாகவே சந்தேகிக்கிறேன்.மத்திய தணிக்கை ஆணையத்தின் அறிக்கை, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறுகிறது. சி.பி.ஐ., தனது குற்றப்பத்திரிகையில் 22 ஆயிரம் கோடி ரூபாய் வரை நஷ்டம் என்கிறது. அதே சி.பி.ஐ.,யின் வழக்கறிஞர் கோர்ட்டில் வாதாடும் போது, “7 ஆயிரத்து 100 கோடி ரூபாய் நஷ்டம்’ என்கிறார்.

எனக்குப் பிறகு பதவியேற்ற அமைச்சர் கபில் சிபலோ, “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நயா பைசா அளவுக்குக் கூட நஷ்டம் ஏற்படவில்லை’ என்கிறார். அதை விட, பிரதமர் மன்மோகன் சிங்கோ பலமுறை, “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நஷ்டம் ஏற்படவில்லை. அதில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுவது ஒரு கற்பனையான நஷ்டம்’ என்று பேட்டியளித்துள்ளார்.ஸ்பெக்ட்ரத்தின் உரிமையாளர் என்பவர் அரசாங்கம் தான். அந்த அரசாங்கமே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு இல்லை என்று கூறுகிறது. உரிமையாளருக்கு எந்த நஷ்டமும் இல்லை எனும் போது, நான் எப்படி தவறு செய்தேன் என்று குற்றம் சுமத்துகின்றனர் என்பது புரியவில்லை.இவ்வாறு ராஜா கூறினார்.
வியர்வையில் குளித்தசைனியின் கோர்ட்:பாட்டியாலா கோர்ட்டில், ராஜா சார்பில், மூத்த வழக்கறிஞர் சுசீல்குமார் ஆஜராகி வாதாடினார். அவர் மூன்று மணிநேரம் வாதாடினார். நேற்று, சைனி கோர்ட் அறையில் உள்ள “ஏசி’ பழுதாகி விட்டது. ராஜா தரப்பு வாதம் என்பதால் பத்திரிகையாளர்களும், வழக்கறிஞர்ளும் நூற்றுக்கணக்கில் குவிந்து விட்டனர். இதனால், அனைவரும் வியர்வையில் குளித்தனர். நேற்றைய வாதத்தின் போது, ராஜாவின் மனைவி மற்றும் கனிமொழி ஆகியோர் வந்திருந்தனர். மற்றபடி, அரசியல்வாதிகளோ, வழக்கமாக வரும் பிரமுகர்களோ வரவில்லை.

சி.பி.ஐ., மீது ராஜா புகார்:புதுடில்லி: “என்னிடம் விசாரணை நடத்தியது தொடர்பாக, கோர்ட்டுக்கு தவறான தகவல்களை அளித்ததன் மூலம், சி.பி.ஐ., நேர்மையற்ற முறையில் செயல்பட்டுள்ளது’ என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தரப்பில், கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு விசாரணையின் போது, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் ராஜா தரப்பில், மூத்த வழக்கறிஞர் சுஷில் குமார் ஆஜராகி வாதாடினர். அவர் கூறியதாவது:என் (ராஜா) விவகாரத்தில், சி.பி.ஐ., நேர்மையற்ற முறையில் செயல்படுகிறது. கடந்த 14ம் தேதி, கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, இரண்டு குற்றப்பத்திரிகைகள் தொடர்பான விவகாரத்தில், என்னிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது என, சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கடந்த 18ம் தேதி, லூப் டெலிகாம் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது குறித்து, என்னிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. என்னிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டதாக கூறிவிட்டு, மீண்டும் என்னிடம் விசாரணை நடத்தியது ஏன்?இதுபோன்ற தவறான தகவல்களை அளித்ததன் மூலம், சி.பி.ஐ., நேர்மையற்ற முறையில் நடந்து கொள்கிறது.இவ்வாறு ராஜாவின் வழக்கறிஞர் சுஷில் குமார் கூறினார்.

ஆண்களே, அழகான ‘ஹேர்’ வேண்டுமா?

பெண்களைப் பொறுத்தவரை முன்பெல்லாம் நீண்ட தலைமுடியுடன் திகழ்வதையே அதிகம் விரும்புவார்கள். காலப் போக்கில் ‘பாப்’ உள்ளிட்ட பல்வேறு கட்டிங்குகள் வந்து விட்டன.

பெண்கள்தான் தலையலங்காரத்திலும், தலை முடி பராமரிப்பிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பது பொதுவான கருத்து. அதில் பாதி உணமையும் கூட. அதேசமயம், தற்போதைய இளைஞர்களும் கூட தலை முடியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அழகிய, ஸ்டைலான, சற்றே நீளமான தலைமுடியை பல்வேறு ஆண்களும் கூட விரும்புகிறார்கள். அதாவது டோணி ஸ்டைலில் முடி வளர்ப்பதில் பலருக்கும் ஆர்வம் அதிகமாகவே உள்ளது.

தலைமுடிப் பராமரிப்பு, தலைமுடியை நன்றாக வைத்துக் கொள்வது குறித்து சில டிப்ஸ்களை கீழே பார்க்கலாம்.

1. முதலில் நமது தலைமுடியின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். அதாவது நமது முடி அலை அலையாக இருக்கிறதாஅல்லது சுருள் சுருளாக இருக்கிறதா அல்லது வளைந்து நெளிந்து இருக்கிறதாஅல்லது கோரையாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதற்கேற்றார் நாம் பராமரிப்பை மேற்கொள்ள முடியும்.

2. இயற்கையான எண்ணெய் வகைகள் நமது தலைமுடியை வலுப்படுத்தும். எனவே அடிக்கடி நமது தலைமுடியை தண்ணீரால் கழுவக்கூடாது. அதற்கு பதிலாக நமது முடியின் மிருதுவான தன்மைக்கு ஏற்றவாறு நல்ல ஷாம்புகளை பயன்படுத்தலாம். பின் இயற்கை முறையிலோ அல்லது நல்ல டர்க்கி துண்டைக் கொண்டோ தலையை நன்றாக காய வைக்க வேண்டும்.

3. ஈரம் காய்வதற்கு முன்பாக தலை வாரினால் அதிகமாக முடி கொட்டிவிடும். எனவே தலை நன்றாக காய்ந்த பிறகுதான் தலை வாரவேண்டும். தலைமடியில் தூசு இருந்தால் விரல்களைக் கொண்டு மிருதுவாக எடுக்க வேண்டும்.

4. ஒரு சில நேரங்களில் நமது தலைமுடி வறட்சியாகக் காணப்படும். அப்போது நல்ல சலூனுக்குச் சென்று ட்ரிம் செய்யலாம். அப்போது நமது முடி அழகாக மாறும்.

5. நீளமான முடியை வளர்க்க விரும்பும் ஆண்கள் முறையான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். உணவில் நிறைய வைட்டமின் சத்துக்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

6. ஃப்ளானல் தலையணைகள் நமது தலைமுடியை விரைவில் உலர்த்திவிடும். எனவே அவற்றை நாம் பயன்படுத்தக்கூடாது.

7. குறிப்பிட்ட இடைவெளியில் ஹேர் ஸ்பா செய்ய வேண்டும். அது நமது தலைமுடியை மினுமினுப்பாக வைத்திருக்கும்.

பொதுவாக தலைமுடி 30 நாள்களுக்கு அரை இன்ச் அளவிற்குதான் வளரும். எனவே சலூன் போய் வந்தவுடன் முடி நீளமாக வளர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. மிகவும் பொறுமையாக, உரிய முறையில் தலைமுடியை பராமரித்து வந்தால் தலைமுடி நன்றாக இருக்கும்.

மயக்க மருந்து கொடுக்காமல் ஆபரேஷன்!

மருத்துவ உலகில் சாதனைகள் தொடர்கதையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சாதனை படைக்கப்படுகிறது. அந்த வரிசையில் இப்போது மயக்க மருந்து கொடுக்காமல் ஆபரேஷன் மேற்கொள்வது குறித்த ஆய்வில் வெற்றி கிட்டியுள்ளது. நோயாளிகளை இயல்பு நிலையில் வைத்து, அவர்களின் சிந்தனைகளை சிதறடித்து கவனத்தை மாற்றி ஆபரேஷன் செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பரிசோதனை அடிப்படையில் வெற்றி கிடைத்துள்ளது என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த முறை பெரிதும் உதவும் என்பதும் மருத்துவ தரப்பின் கணிப்பு. இந்த முறை விர்சுவல் ரியாலிட்டி தெரபி எனப்படும்.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு இது. புதிய முறை குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:
இந்த முறையில் நோயாளிகளின் முகத்தில், கண்கள் விளையாட்டை மட்டுமே பார்க்கக் கூடிய வகையில் மாஸ்க் போன்ற சாதனம் பொருத்தப்படும். வீடியோ கேம் விளையாடத் தெரியாதவர்களும் இதை எளிதாக கையாள முடியும். இதன் மவுஸ் அவர்கள் கைகளில் இருக்கும். முதலில் அவர்கள் கவனம் முழுவதும் விளையாட்டில் செலுத்தப்படும். ஒரு கட்டத்தில் அவர்கள் விளையாட்டில் ஊன்றிவிடுவர். ஸ்னோ வேர்ல்ட் என்ற பெயரில் லோ இம்மர்ஷன், ஹை இம்மர்ஷன் என 2 வகை விளையாட்டுகள் உள்ளன. இந்த முறையில் ஆபரேஷனின் தன்மைக்கு ஏற்ப நோயாளிகளுக்கு வீடியோ விளையாட்டுகள் நிர்ணயிக்கப்படும். 60 வயதை கடந்த 25 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இந்த முறையில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷனால் தங்களுக்கு வலி இல்லை என்றே அவர்கள் தெரிவித்தனர்.
விர்சுவல் ரியாலிடி என்ற தெரபி முறையில் நோயாளிகளுக்கு ஆபரேஷன் மேற்கொள்ளப்படும்போது மயக்க மருந்து கொடுக்கப்படுவதில்லை. அவர்களுக்கு வலி தெரியாமல் இருக்க புதிய முறையில் அவர்களின் கவனம் வேறு செயல்களில் திருப்பப்படும். உதாரணமாக, அவர்களை வீடியோ கேம் விளையாட வைத்து அதில் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடும்போது ஆபரேஷன் மேற்கொள்ளப்படும். வலியை அவர்கள் உணர்வதில்லை. ஆபரேஷன் செய்யும் நேரமும் மிகவும் குறைவு என்கிறார் ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் சாம் ஷரர்.

தயிரில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?

* தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளன.

* கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் பிபி’ யும் தயிரில் இருந்தே பெறப்படுகிறது.

* தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட விரைவில் ஜீரணமாகிவிடும்.

* பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.

* பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா, மனிதனின் குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

* தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவையும் உருவாக்குகிறது.

* ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்து குளித்தால் தூக்கம் நன்றாக வரும்.

* சூரிய ஒளியால் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

* மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு தயிர் சிறந்த மருந்தும்கூட!

* அல்சர் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் அழிக்கப்படுகிறது.

* மஞ்சள் காமாலையின்போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது நல்லது.

* சில தோல் நோய்களுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில கட்டி வருவது நல்ல பலன் தரும். இந்த சிகிச்சையை தகுந்த சித்த மருத்துவர் உதவியுடனேயே மேற்கொள்வது நல்லது.

காதை உறுத்தும் இரைச்சல்

நம் அன்றாட வாழ்வில் நிகழும் சில நிகழ்வுகளின் டெசிபல் அளவு எவ்வளவு தெரியுமா?

மரத்தின் இலைகள் காற்றில் இலேசாய் அசைந்து ஒருவித சப்தத்தை உண்டாக்குகின்றன அல்லவா? அதன் அளவு 10 டெசிபல்கள்.

சில அடிகளுக்கு அப்பாலிருந்து ஒருவர் ரகசியக் குரலில் பேசினால் அது 20 டெசிபல்.

தொலைக்காட்சிப் பெட்டியை போட்டுவிட்டு ஒரு வீட்டின் சப்த அலைகளைக் கணக்கிட்டால் அது 50 டெசிபல். ஒரு கார் தொழிற்சாலையின் இரைச்சல் 95 டெசிபல். ஒரு நிமிடத்துக்கு 16 ஆயிரம் தடவைகள் சுழலும் விமானத்தின் `புரொப்பெல்லர்கள்’ ஏற்படுத்தும் ஓசை, 120 டெசிபல்கள்.

காதலின் உண்மை வடிவம்!-கவியரசு கண்ணதாசன்

எனக்கு வரும் கடிதங்களில் காதல் தோல்வி பற்றிய கடிதங்கள் அதிகம்.

காதலைப் பற்றிக் காந்தியடிகளும் கூடச் சொல்லி இருக்கிறார்.

`அது தேவையானது; தவிர்க்க முடியாதது; ஆனால் அது வேறொரு பிறப்புக்கான காரியம்தான்’ என்று கூறி இருக்கிறார்.

அந்நாளிலெல்லாம் பெண் பருவம் அடைவதே, பதினெட்டு வயதுக்கு மேல்தான்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் காதல் என்பது உள்ளுக்குள்ளேயே தோன்றி, உள்ளுக்குள்ளேயே அடங்கிவிடும் ஒன்றாக இருந்தது.

நாகரிக உலகில் அது கடிதங்களாக விளையாடுகிறது.

பருவத்தின் உணர்ச்சி `இவள் இல்லாவிட்டால் உலகமே இல்லை’ என்று முடிவு கட்டிவிடுகிறது. அதற்காகவே மருகுகிறது; உருகுகிறது. அது நிறைவேறாமல் போனால் துன்பம் பெருகுகிறது.

உஷாவைச் சிறை எடுத்த அநிருத்தன் போலவும், சுபத்திரையை மணந்த அர்ஜுனன் போலவும், எந்தத் தடைகளையும் வென்று ஒரு பெண்ணை மணம் முடித்துக் கொள்ள முடியுமானால், நீ துணிந்து அவளைக் காதலிக்கலாம். இல்லையேல், `இவளைத்தான் மணக்கப்போகிறோம்’ என்று தெரிந்து சீதையைக் காதலித்த ராமனைப் போல், உன் காதலும் இருக்க வேண்டும்.

எனக்கும் வாழ்க்கையில் ஒரு தோல்வி உண்டு.

தங்கம் ஏற்றி வந்த நான்கு கப்பல் கவிழ்ந்து போனால் கூட அவ்வளவு துயரம் இருக்காது.

முதல் காதலின் தோல்வியில் அவ்வளவு துயரம். ஆனால், அந்தக் காதலே ஒரு மடத்தனம் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.

முதலில்- என்னைவிட அந்தப் பெண்ணுக்கு ஒரு வயது அதிகம். இரண்டாவது, எனக்கு முன்னால் திருமணம் செய்ய வேண்டிய ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் இருந்தார்கள். எங்களிடம் வசதி இல்லை.

இந்தக் காதல் எப்படிக் கைகூடும்?

அவளும் என்னை விரும்பினாள். நானும் அவளை விரும்பினேன் என்பதைத் தவிர, மணம் முடிக்கும் வாய்ப்பே இல்லாத ஒரு காதல் என்ன ஆகும்?

குளிக்கிறேன் என்று கல்லிலே விழுந்து விட்டுத் தண்ணீர் இல்லையே என்றால், கல்லிலே தண்ணீர் எங்கிருக்கும்?

குளிப்பதற்காக விழுவதென்றால், குளத்தில் விழ வேண்டும்.

காதலிக்கிறேன் என்றால், கல்யாணத்திற்கு வாய்ப்பு உண்டா என்று பார்த்துத்தான் காதலிக்க வேண்டும்.

குருடன், கையிலுள்ள கோலைத் தரையிலே தட்டிப் பார்க்கிறான்; அது தரையில் படாமல் போனால், பள்ளம் என்று தெரிந்து கொள்கிறான். பிறகு தரையிருக்கும் பக்கம் தட்டிப் பார்த்துத் திரும்பி நடக்கிறான்.

`காதலுக்கு கண் இல்லை’ என்பது உண்மைதான். ஆனால் அந்தக் குருடனுக்கு இருக்கும் விவஸ்தை கூடவா இல்லாமல் போயிற்று?

சூர்ப்பனகை ராமனை விரும்பியதற்குப் பெயரும் காதல்தான்; இராவணன் சீதையை விரும்பியதற்குப் பெயரும் காதல்தான்; கோவலன் மாதவியை நாடியதற்குப் பெயரும் காதல்தான்; சீதா-ராம, ராதா-கிருஷ்ண காதலர்களும் காதலர்கள்தான்.

இவற்றில் உன் காதல் எந்த ரகம்?

எந்த ரகமும் இல்லை. கண் போன போக்கிலே மனம் போய்விட்டது. அவ்வளவுதான்!

ஜெயித்து வந்த குதிரை என் குதிரை என்று நினைப்பது போல், கல்யாணம் செய்து காதலிப்பதைப் போன்ற வம்பில்லாத வேலை வேறெதுவும் இல்லை.

இல்லையென்றால், இது நிறைவேறும் என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, காதலைத் தொடங்கினால் தோல்வி இல்லை.

இன்னொன்றும் துணிந்து சொல்வேன்.

ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் தமயந்தியை விரும்பினார்கள். அவள் கையிலே ஐம்பத்தாறு மாலைகள் இல்லை. நளனை எதிர்பார்த்தாள்; வந்தான்; மாலையிட்டாள்.

பிருதிவிராஜன்-சம்யுக்தை கதையும் இதுதான்.

அம்பிகாபதியும், அமராவதியும் கொலைக் களத்திற்கே தயாரானார்கள்.

ரோமியோவும், ஜுலியட்டும் மரணத்திற்கே துணிந்தார்கள்.

இந்தத் துணிச்சல் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டாய்; நீ யாரைக் காதலிக்கிறாயோ அவள் உன் வீடு தேடி வந்து விட வேண்டும்;

இல்லையா?நீயாக நினைப்பது, நீயாக ஏங்குவது, பிறகு நீயாக அழுவது! என்ன கூத்து இது?

ஆகவே, திட்டம் தெரிந்து காதலி; தோல்வி இல்லை.

அப்படியும் தோல்வி வந்தால், கல்யாணம் செய்து காதலி; தோல்வி வராது.

வெறும் கற்பனா வாசகங்களையும், காவியங்களையும் படித்துவிட்டு உடம்பை அலட்டிக் கொள்வதில் என்ன லாபம்?

ஒரு ஆணுக்கு ஒரு நல்ல பெண் துணை வேண்டும். அதை நீயாகப் பார்ப்பதை விடத் தாய்-தந்தையர் பார்த்தாலென்ன?

ராமன்-சீதை திருமணத்தை வசிஷ்டரும், ஜனகரும் தான் பேசி முடித்தார்களே தவிர, அவர்களே பேசி முடிக்கவில்லை.

ஆகவே, காதல் தோல்வி என்பது மறக்கக்கூடிய துன்பம்தான் என்பது என்னுடைய கருத்து, சொல்லப்போனால் அதைத் துன்பக் கணக்கிலேயே நான் சேர்த்ததில்லை.

வேறு பெண்ணே இல்லாத உலகத்தில்தானே, நீ ஒருத்திக்காக ஏங்க வேண்டும்?

மதுரையில் இருந்து திருப்பதிக்குப் போக முடியவில்லையென்றால், அழகர் கோயிலுக்குப் போ. அதை விடுத்துத் திருப்பதியை நினைத்து அழுதால் திருமால் என்ன இறங்கி வரப் போகிறாரா?

காதல் புனிதமானது! வீணாக அதை நீ களங்கப்படுத்தாதே; பேசாமல் கல்யாணம் செய்து கொள்.