Daily Archives: ஜூலை 31st, 2011

தேங்காய்ப்பால் பாயசம்

பால் சேர்த்துச் செய்யும் பாயசத்தின் சுவையிலிருந்து வேறுபட்டு, இயற்கை இனிப்புகளுடன் கூடிய தேங்காய்ப்பால் பாயசம் அதீத சுவையுடன் நாவின் சுவை மொட்டுகளுக்கு விருந்து படைக்கும்.

தேங்காய்ப்பால் பாயசத்துக்கு சுக்குப் பொடி சிறிதளவு சேர்த்தோமானால் அது பாயசத்தை கமகமக்க வைப்பதுடன் நம் வயிற்றுக்கும் சொக்குப் பொடி போட்டு அஜீரணத்தைப் போக்கி வாயுத் தொல்லை இல்லாமல் தடுக்கும்.

சுக்குப் பொடிக்கு உணவை எளிதில் ஜீரணிக்க வைக்கும் சக்தி உண்டு. காலையில் இஞ்சி, மதியத்தில் சுக்கு, இரவில் கடுக்காய் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் நம் முன்னோர்.

கீர், பாயசம், பிர்ணி போன்ற சுவைகளில் இருந்து வேறுபட்டு தனித்துவமான சுவையுடன் கூடிய தேங்காய்ப்பால் பாயசத்திற்கு பச்சைக் கற்பூரத்தை நெரித்துச் சேர்ப்பது ஒரு புது மணத்தை கொடுக்கும். வாருங்கள் வேறுபட்ட சுவையுடனும், மணத்துடனும் கூடிய தேங்காய்ப்பால் பாயசம் செய்ய…

தேவையான பொருட்கள்

முற்றின தேங்காய் – 1
பச்சரிசி – 4 டேபிள் ஸ்பூன்
வெல்லம் (நறுக்கியது) – 1 கப்
சுக்குப்பொடி – 1 சிட்டிகை
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 4
திராட்சை – 4
பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை

செய்முறை

* பூத்துருவலாகத் துருவிய தேங்காய்த் துருவலில் பாதியளவை மிக்சியில் போட்டு சிறிது நீருடன் அரைத்து உலோக வடிகட்டியில் போட்டு முதல் பால், பிறகு இரண்டாம் பால் என்று பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* மீதமுள்ள தேங்காய்த் துருவலுடன், ஒரு மணி நேரம் ஊற வைத்த பச்சரிசியை மிக்சியில் போட்டு சற்று அரைத்து மேலும் இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்த்து மிக நைசான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, முந்திரிப் பருப்பு, திராட்சை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

* பிறகு அதே பாத்திரத்தில் மெல்லிய தீயில் அரைத்த விழுது, 4 கப் நீர் சேர்த்து நன்கு வேகும் வரை மெல்லிய தீயிலேயே கிளறவும்.

* அரிசி நன்கு வெந்தவுடன் தண்ணீருடன் கொதிக்க விட்டு தூசு நீங்க வடிகட்டிய வெல்ல நீர், முதல் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு ஒரு கொதி விடவும்.

* பிறகு சுக்குப்பொடி, நெய்யில் வடித்த முந்திரி திராட்சை போட்டு இரு விரல்களுக்கு நடுவே பச்சைக் கற்பூரத்தை நெரித்துப் போட்டு பரிமாறவும்.

குறிப்பு

* தேங்காய், பச்சரிசி அரைத்த விழுதைக் கொதிக்க விடுகையில் அடிபிடித்து விடாமல் இருக்க அடுப்பை மெல்லிய தீயில் எரிய விடுவது அவசியம்.

* ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும் தேங்காய்ப் பாலையும் உபயோகிக்கலாம்.
கீதா பாலகிருஷ்ணன்

எதிர்காலத்தில் கணினி திட்டும்!

சிலநேரங்களில் நமது வேகத்துக்கு நம்முடைய கம்ப்யூட்டர் ஈடுகொடுக்காமல் போகிறது. அப்போதெல்லாம் ஆத்திரத்துடன் கீ போர்டை தடதடவென்று தட்டுகிறோம், `தட்’டென்று சுவிட்சை அழுத்தி அணைக்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் அப்படிச் செய்வதற்குக் கொஞ்சம் யோசிக்க வேண்டும். கம்ப்யூட்டர் உங்களைத் திருப்பித் திட்டக்கூடும்.

இன்னும் சில ஆண்டுகளில் இந்நிலை ஏற்பட்டுவிடும் என்கிறார்கள் கணினி வல்லுநர்கள். `ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜென்ஸ்’ கொண்ட அந்த கம்ப்யூட்டர்கள், நம்முடன் உரையாடித் தகவல்களைப் பெறும், விவாதமும் செய்யும்.

இவ்வாறு, கணினியைப் பயன்படுத்துவோருடன் `பேசும் கம்ப்யூட்டரை’ உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பெரிய புராஜெக்டில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த செயற்கை அறிவுக் கணினி, பயன்பாட்டாளரின் குரலை இனங்கண்டு கொள்ளும். மனிதர் களைப் புரிந்துகொள்ளச் செய்வதும், தேவையான விதத்தில் பேசச் செய்வதும், மனிதர்களைப் போல நடந்துகொள்ளச் செய்வதும்தான் இந்தத் தொழில்நுட்பத்தின் உச்சபட்ச லட்சியம்.

இங்கிலாந்து ஆய்வாளர்களின் இந்த ஐந்தாண்டு கால, பல கோடி ரூபாய் திட்டம் தற்போது ஆரம்பகட்ட நிலையில்தான் இருக்கிறது. ஆயினும் இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகிறார்கள், குறிப்பிட்ட விஞ்ஞானிகள். எடின்பர்க், கேம்பிரிட்ஜ், ஷெப்பீல்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஆய்வாளர்கள்.

தற்போதைய ஆய்வின் மூலம், குரலால் இயக்கப்படும் கணினி, இணையதள தேடுபொறிகளுடன், குரலால் கட்டுப் படுத்தப்படும் உபகரணங்களும் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களுக்கு இத்தகைய உபகரணங்கள் உதவியாக இருக்கும்.

கணினிப் பேச்சு, ஒரு மின்னணு உபகரணத்தில் இருந்து வருவது போலில்லாமல் இயற்கையாக இருக்குமாறும் பார்த்துக்கொள்ளப் போவதாக, ஆய்வாளர்களில் ஒருவரான ஸ்டீவ் ரெனால்ஸ் கூறுகிறார். வருங்காலத்தில் வீடு, அலுவலகம், பொழுதுபோக்கு எல்லாவற்றிலும் இந்தப் பேசும் தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெறும் என்கிறார் இவர்.

மூலிகை மருத்துவம் : மாற்றம் உண்டு

நமது உடலை போர்த்தி இருக்கும் தோலில் ஏதாவது தொல்லை என்றால் மனதும் சேர்ந்து துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. நாம் கருவாக தாயின் வயிற்றில் இருக்கும்பொழுதே நமது தோலின் நிறம் மரபணுக்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கருவின் ஐந்தாவது வாரத்திலிருந்து தோல் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. மூன்றாவது மாதத்தில்தான் நமது தோலானது மூன்று முக்கிய அடுக்குகளாக பிரிவடைகிறது. ஆறாம் மாதத்தில் முழுமையான, ஆரோக்கியமான தோல் தோன்றிவிடுகிறது. அப்பொழுதே தோலானது ரோமத்தையும் சீபம் என்னும் மெழுகு கோளங்களையும் வியர்வை கோளங்களையும் உள்ளடக்கி, ஒரு முழுமையான தோலின் பணிகளை சீராக செய்கிறது. தாயின் வயிற்றில் இருக்கும்பொழுது ஐந்தாவது வாரத்திலிருந்து 20வது வாரத்திற்குள் தாய் உட்கொள்ளும் ஒவ்வாத மாத்திரைகள், வேதிப் பொருட்கள், எக்ஸ்ரே, நியூக்ளியர் கதிர்வீச்சுகள், மரபணு கோளாறுகள், ரத்த சொந்தத்தில் திருமணம் போன்றவற்றால் தோலடுக்கு பரிணாம வளர்ச்சியில் பலவிதமான கோளாறுகள் ஏற்பட்டு, தோலின் இயல்பான நிலை பாதிக்கப்படுகிறது.

நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ், மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் தோலின் நிறமாற்றம், காயம், தழும்பு, மினுமினுப்பு குறைதல், தடிப்பு, கடினத்தன்மை ஆகியவற்றிற்கு மேலடுக்கின் குறைபாடும், வியர்வை நாற்றம், வறட்சி, தோலில் எண்ணெய் பிசுக்கு, உணர்ச்சியின்மை ஆகியவற்றிற்கு நடு அடுக்கின் குறை பாடும், தோல் இறுக்கம், சுருக்கம் மற்றும் மடிப்புகளுக்கு கீழ் அடுக்கின் குறைபாடும் காரணமாகும். தோல் நமக்கு அழகைத் தருவதுடன் வெப்பம், குளிர்ச்சியிலிருந்து பாதுகாப்பது, நரம்பு மூலமாக தொடுதலை உணர்த்துதல், வியர்வை மற்றும் எண்ணெய் பசையை சுரக்கவைத்து நீர், உப்பு மற்றும் கொழுப்பை வெளியேற்றுதல், நுண்ணிய துவாரங்கள் மூலமாக தசை மற்றும் தோல் அடுக்கில் தங்கிய கழிவு காற்றுகளை வெளியேற்றுதல் போன்ற பணிகளை செய்கின்றன. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால்தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும் பூரண பலன் கிடைப்பதில்லை. தோலின் அனைத்து அடுக்குகளிலும் ஊடுருவி, அவற்றில் தங்கியுள்ள மலினங்களை வெளியேற்றி, சாதாரணமாக இருந்த தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.

ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழக்கொட்டைகளே ஆலிவ் விதை என்றும், இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது. இந்த எண்ணெயில் ஓலிரோசைடு, ஒலிரோபின், ஒலினோலிக் அமிலம், லிவ்டியோலின், எபிஜெனின் பிளேவனாய்டுகள், பால்மிட்டிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் பெருமளவு காணப்படுகின்றன. இவை தோலில் ஹைப்போடெர்மிஸ் வரை ஊடுருவி, தோலின் அனைத்து அடுக்குகளையும் பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் வைத்திருப்பதுடன் தசைக்கும் தோலுக்கும் இடையே வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. 100மிலி ஆலிவ் எண்ணெயில் ஏறத்தாழ 20 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும், 12மிகி வைட்டமின் ஈ, 62 மைக்ரோகிராம் வைட்டமின் கே காணப்படுகிறது. ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் வாரம் ஒருநாள் உட்கொண்டுவர இதயநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குளிக்கும்பொழுது இளவெந்நீரில் 10மிலி ஆலிவ் எண்ணெய் மற்றும் சில சொட்டுகள் லேவண்டர் எண்ணெய் கலந்து குளிக்கலாம். குழந்தைகளுக்கும் குளிப்பாட்டலாம். உள்ளங்கை கடினம் மாற ஆலிவ் எண்ணெயையும் சீனியையும் கலந்து உள்ளங்கையில் 10 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவ மென்மையடையும். ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேன், முட்டை வெண்கரு மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் தோல் வறட்சி உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவிவர வறட்சி நீங்குவதுடன், தோலும் மென்மையாகும். ரோமங்களை நீக்கியபின் முகம் மற்றும் தோலில் ஏற்படும் ஒவ்வாமை நீங்க அந்த இடங்களில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நகச்சொத்தை நீங்க ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வரலாம். ஆலிவ் எண்ணெயை முடி நுனியில் தோன்றும் வெடிப்பில் தடவலாம்.

அறுவை சிகிச்சையின்பொழுது ரத்தக்குழாய்களில் ஏற்படும் ரத்தக்கசிவை நீக்க குறிப்பிட்ட பகுதிகளில் மின்தாக்குதல் கொடுக்கப்படுகிறது. இதனால் ரத்தக்குழாய்கள் கருகி, ரத்தக்கசிவு நிற்கிறது. மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் ரத்தக்கசிவை நிறுத்துவதற்கும், வேண்டாத கட்டிகள், கழலைகள், மருக்கள், துர்மாமிச வளர்ச்சிகள் ஆகியவற்றை நீக்க இவை பயன்படுகின்றன. காட்டரைசேஷன் என்று அழைக்கப்படும் இந்த முறையைப் பற்றி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேரையர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். சுட்டிகை என்ற பெயரில் தேவையற்ற ரத்தக் கசிவை நீக்கவும், மாமிச வளர்ச்சியை வெளியேற்றவும் சுக்கு, மஞ்சள் கிழங்கு, வசம்பு மற்றும் வெள்ளி, செம்பு, பொன் போன்ற உலோகங்களை சூடாக்கி, தேவையான இடத்தில் சூடு வைத்து நோயை தீர்க்கலாம் என்பது தேரையர் கருத்து. இதே முறையில் நவீன மருத்துவத்தில் உலோகங்களை மின்சாரத்தின் உதவி கொண்டு சூடாக்கியோ அல்லது சில்வர் நைட்ரேட், டிரைக்குளோரோ அசிடிக் அமிலம், திரவ நைட்ரஜன் போன்றவற்றைக் கொண்டோ காட்டரைசேஷன் செய்யப்படுகிறது. நவீன மருத்துவத்தில் பல கண்டுபிடிப்புகளுக்கு நமது பாரம்பரிய மருத்துவம்தான் அடித்தளம் அமைத்து வருகிறது.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,
மதுரை.