Advertisements

Monthly Archives: ஓகஸ்ட், 2011

சல்வார் கமீஸ் எப்படி இருக்க வேண்டும்

ஆடைகளில் பல வகைகள் உண்டு. ஒவ்வொருவரும் தங்கள் உடல் எடை, உயரம் போன்றவற்றிற்கு தகுந்த ஆடைகளை தேர்ந் தெடுத்து, நாம் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு அணிய வேண்டும்.

மாநிறம் கொண்ட பெண்கள் மெரூன், சிவப்பு மற்றும் நீலம் போன்ற நிறங்களைக் கொண்ட சல்வார் கமீஸ் அணிவது நல்லது. சல்வார் கமீஸ் ரெடிமேட் வாங்குவதை விட, உங்கள் அளவிற்கேற்ப தைப்பது தான் சிறந்தது. கமீசின் நீளத்தைக் குறைவாக வைத்தால், உயரமாகக் காட்சியளிப்பீர்கள். உங்கள் தோள் அகலமாக இருந்தால், பப் கை கொண்ட கமீசை அணியாதீர்கள். உங்கள் கைகள் தடித்து இருந்தால், கை வைக்காத கமீசை அணிய வேண்டாம். குறைந்தது ஐந்து அங்குல நீளம் கொண்ட கையுடன் கூடிய கமீசை அணிவதால், உங்கள் கைகள் மெலிந்து தோற்றம் அளிக்கும். நீங்கள் மெல்லிய உடல்வாகு கொண்டவராக இருந்தால், சைனீஸ் காலர் கொண்ட கமீஸ் அணிவது நல்லது. அதனால், உங்கள் உயரம் கூடுதலாகத் தெரியும். ஆனால், உங்கள் எடை அதிகமாக இருந்தால், இவ்வாறான கமீஸ்களை அணிய வேண்டாம்.

சுடிதாரை எப்படி தெரிவு செய்வது?

குள்ளமாக இருப்பவர்கள்…: குள்ளமாக இருப்பவர்கள் குட்டையான டாப் போடாதீர்கள்; அது, உங்களை இன்னமும் குள்ளமாகக் காண்பிக்கும். முழங்கால் வரையிலான குர்தா போட்டுக் கொண்டால், உயரமாகத் தெரிவீர்கள். அதேபோல், நெடுங்கோடுகள் கொண்ட சுடிதார் உங்களை உயரமாகக் காட்டும். குள்ளமாக இருப்பவர்கள், சுடிதாரின் டாப் ஒரு கலர், பாட்டம் பகுதி ஒரு கலர் என்று போடாதீர்கள். உயரக் குறைவைக் காட்டி விடும். ஒரே நிற சுடிதார் தான் உங்களுக்கு ஏற்றது. சிலருக்கு இடுப்பு கொஞ்சம் அகலமாக இருக்கும். அப்படியிருப்பவர்கள் இடுப்பிலிருந்து ஸ்லிப் கட் வருமாறு சுடிதார் தைத்துக் கொள்ளலாம். அதேபோல், வயிறு பெரிதாகத் தெரிபவர்கள் இடுப்பிலிருந்து, “ஏ’ வடிவத்தில் டிசைன் வடிவமைத்துக் கொண்டால், வயிறு ஒட்டியதாகத் தெரியும்.

உயரமாக இருப்பவர்கள்…: உயரமானவர்கள், குறை நீள குர்தா போடக் கூடாது. அப்படி போட்டால், கால் நீளமாகத் தெரியும். அதேபோல் குறுக்குக் கோடுகள் உங்களை, “ஜம்’மென்று காட்டும். ஷிபான் துணி: கவர்ச்சிகரமான தோற்றத்தைத் தரும். இந்த சுடிதாரில், குந்தன் ஒர்க் எம்பிராய்டரி செய்யப்பட்டு, சின்னச் சின்ன பைப்பிங் வைத்து தைத்தால், சுடிதாரை கூடுதல் அழகாக்கும். பிரின்ட் ஒர்க் செய்யப்பட்ட பியூர் கிரேப் சில்க் துணியால் தைக்கப்பட்ட சுடிதாரை தான் சினிமாவில் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இந்தச் சுடிதாரின் ஓரங்களில் செய்யப்பட்டுள்ள கோட்டா லேஸ் பினிஷிங், சுடிதாரை கூடுதல் அழகாக்குகிறது. பிரெஞ்ச் கிரேப் துணி: ஒரு காலத்தில் பேஷனாக இருந்த இந்த சுடிதார் மறுபடியும் வந்துள்ளது. சுடிதாரின் பாட்டம், டிரவுசர் மாதிரியும் தெரியும்; ஸ்கர்ட் மாதிரியும் தெரியும். சின்னச் சின்ன சீக்வென்ஸ் ஒர்க், இந்தச் சுடிதாரை ஸ்டைலாக காட்டுகிறது. உங்கள் தோள்கள் நேராக இல்லையா? அக ன்ற கழுத்து வைத்துக் கொள்ளுங்கள். சற்று சரிவான தோள்களா? “நேரோ நெக்’ உங்களுக்கு எடுப்பாக இருக்கும். கூன் உள்ளவரா? அப்படியென்றால் தோளில், “இன்சைட் கட்’ கொடுத்து, டெய்லரிடம் தைக்கச் சொல்லுங்கள். காலர் சுடிதார் யாருக்கெல்லாம் பொருந்தும்? ஒல்லியாக இருப்பவர்கள் மற்றும் கழுத்து நீளமாக இருப்பவர் களுக்கு காலர் சுடிதார் மிகப் பொருத்தமாக இருக்கும். அதிக சதைப்பிடிப்புடன் இருப்பவர்கள், கழுத்தின் பின்புறம் மட்டும் காலர் வைத்துத் தைத்துக் கொண்டால், அழகாக இருக்கும்.

Advertisements

விண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள்

விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் பலரும் மாறி வருகின்றனர். புதிய கம்ப்யூட்டர் வாங்கும் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன் படுத்தி வருகின்றனர்.
எனக்கு விண்டோஸ் எக்ஸ்பியே போதும் என பன்னாட்டளவில் இருந்த தயக்கம் மறைந்து, தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வேகமாக இடம் பிடித்து வருகிறது. இந்த சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் இங்கு பட்டியலிடப் பட்டுள்ளன.
1. பின் அப் (Pin Up): நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டர்களை, டாஸ்க் பாரில் வைத்து இயக்க விண்டோஸ் 7 வழி கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் போல்டரில், மவுஸை வைத்து, ரைட் கிளிக் செய்து, அப்படியே டாஸ்க் பாருக்கு இழுத்து விட்டுவிடவும்.
2. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை இயக்கிக் கொண்டிருக்கையில், எளிதாக அதில் வேலை செய்திட, இன்னொரு விண்டோவிலும் அதே அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்க விரும்புவீர்கள். இதற்கு அந்த அப்ளிகேஷன் புரோகிராம் இடம் தருமானால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, டாஸ்க் பாரில் உள்ள அந்த புரோகிராமின் ஐகானில் கிளிக் செய்தி டவும்.
3. விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மூலம், மிகத் தெளிவான, துல்லியமான காட்சியைத் திரையில் பெறலாம். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் படங்களில் உள்ள நுண்ணிய தகவல்களைத் தெளிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, இந்த வசதி லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உதவியாய் இருக்கும். டெக்ஸ்ட் துல்லியமாகக் காட்டப்படவும், படங்கள் தெளிவாகத் தெரியவும் இரண்டு சிஸ்டம் பைல்கள் இதற்கு உதவுகின்றன. அவை cttune.exe (Clear Type Text Tuning) dccw.exe (Display Color Calibration): நேரடியாக இவற்றை இயக்கலாம்; அல்லது கண்ட்ரோல் பேனலில் இவற்றைக் காணலாம்.
4. டாஸ்க் பாரில் ஐகான்களை எந்த வரிசையில் அமைக்க வேண்டும் என விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு உதவிடுகிறது. அவற்றின் ஐகான் மீது, கர்சரைக் கொண்டு சென்று இழுத்து விடுவதன் மூலம் இதனை மேற்கொள்ள லாம். முதல் ஐந்து ஐகான்களில் உள்ள புரோகிராம்களை இயக்க, சில கீகளை அழுத்தி இயக்கநிலைக்குக் கொண்டு வரலாம். எடுத்துக்காட்டாக, முதலில் காணப்படும் ஐகானில் உள்ள புரோகிராமினை இயக்க, விண்டோஸ் கீ +1 அழுத்த வேண்டும். இரண்டாவது ஐகான் புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீ+2 அழுத்த வேண்டும்.
5. டாஸ்க் பாரில் கவனம் செலுத்தி, அங்கு இயக்கத்தினை மேற்கொள்ள, விண்டோஸ் கீ + T அழுத்த வேண்டும். இப்போது டாஸ்க் பார் மெனு கிடைக்கும். பின்னர் அம்புக் குறி கீகளைப் பயன்படுத்தி, புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால் போதும். இந்த விளைவிலிருந்து விடுபட எஸ்கேப் கீயை அழுத்தினால் போதும்.
6. ஹெல்ப் டெஸ்க் எனப்படும் உதவிடும் குறிப்புகளை விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு கம்ப்யூட்டரிலேயே வழங்குகிறது. “fix” அல்லது “Troubleshoot” என ஸ்டார்ட் மெனுவில் டைப் செய்தால், பலவகையான பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் பிரிவுகள் காட்டப்படுகின்றன. இவற்றில் எந்த பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமோ, அந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து, தீர்வைத் தெரிந்து கொள்ளலாம்.
விண்டோஸ் 7 தரும் புதிய கூடுதல் வசதிகள் இன்னும் நிறைய உள்ளன. இவற்றைத் தெரிந்து கொள்வதனாலேயே இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது ஈர்க்கப்பட்டு பலர் இதற்கு மாறி வருகின்றனர். தொடர்ந்து இவற்றைத் தெரிந்து கொள்வோம்.

வெற்றி தரும் வேழமுகம்!-செப்., 1 – விநாயகர் சதுர்த்தி!

புதுக்கணக்கு எழுதும் போதோ, திருமண அழைப்பிதழ்கள் அச்சிடும் போதோ, கடிதம் எழுதும் போதோ, மளிகை சாமான் லிஸ்ட் போட்டாலும் கூட, பிள்ளையார் சுழியான, “உ’ போட்டு துவங்குகிறோம். எதற்காக இந்த சுழியை இட வேண்டும்… இந்த ஒற்றை எழுத்துக்குள், அப்படி என்ன மகிமை ஒளிந்து கிடக்கிறது?
“சுழி’ என்றால், “வளைவு!’ “வக்ரம்’ என்றும் சொல்வர். பிள்ளையாரின் தும்பிக்கை நுனியைப் பார்த்தால், வளைந்து சுருண்டிருக்கும். இதனால், அவரை, “வக்ரதுண்டர்’ என்றும் அழைப்பதுண்டு. பிள்ளையார் சுழியை, “உ’ என எழுதும் போது, முதலில் ஒரு சிறு வட்டத்தில் துவங்குகிறது; வட்டத்திற்கு முடிவு கிடையாது. அதன் மேல் ஒரு பென்சிலை வைத்து வரைந்து கொண்டே இருந்தால் முடிவே இராது; விநாயகரும் அப்படித்தான். அவரை அறிந்து கொள்வது என்பது பிரம்மபிரயத்தனம். இன்னும் ஒன்றும் சொல்வர்… வட்டம் என்பது இந்த <பிரபஞ்சம். இதற்குள் பலவித உலகங்களும், வான மண்டலமும் அடங்கியுள்ளன. அதாவது, விநாயகப் பெருமானுக்குள் சர்வலோகமும் அடக்கம். அவரது பெருவயிறும் அதையே தான் காட்டுகிறது. அந்த வயிற்றுக்குள் அவர் சர்வலோகத்தையும் அடக்கியுள்ளார் என்றும் வியாக்கியானம் செய்வதுண்டு.
“உ’ எனும் சுழியில் வட்டத்திற்குப் பிறகு, ஒரு நேர்கோடு நீள்கிறது. இதை சமஸ்கிருதத்தில், “ஆர்ஜவம்’ என்பர். இதற்கு, “நேர்மை’ எனப் பொருள். “வளைந்தும் கொடு, அதே சமயம் நேர்மையை எக்காரணம் கொண்டும் விட்டு விடாதே…’ என்ற அளப்பரிய தத்துவத்தை இந்த சுழி கொண்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த உலகத்தை எடுத்துக் கொள்வோம்… அது, வட்ட வடிவில் இருக்கிறது. மேஜையில் வைக்கும் உலக உருண்டையை ஒரு நேரான அச்சில் பொருத்தியிருக்கின்றனர். நிஜ உலகம் சுற்றுவதற்கு அச்சு இல்லை என்று அறிவியல் சொன்னாலும், நேரான நிலையிலுள்ள அச்சு, நம் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தியின் வடிவில் இருக்க வேண்டும். எனவே, வட்டமான இந்த <உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனும், பிள்ளையார் சுழியிலுள்ள நேர்கோடு போல, நேர்மையைக் கடைபிடிக்க வேண்டும் என்று இந்தச்சுழி நமக்கு அறிவுறுத்துகிறது.
ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ துவங்கும் போது, “உ’ என மேலே எழுதி கீழே, “லாபம்’ என எழுதுவர்; அதாவது, “இதில் கிடைக்கப் போகும் லாபம், நேர்வழியிலானதாக இருக்கட்டும்…’ என்பதே இதற்குப் பொருள்.
விநாயகருக்கு யானை முகம். “யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்…’ என்ற பழமொழி உண்டு. எல்லாரும், அதன் தந்தத்தின் மதிப்பைப் பொறுத்து, இப்படி ஒரு பழமொழி வந்திருக்கலாம் என நினைப்பர்; ஆனால், காரணம் அதுவல்ல. விநாயகர் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், தன் தந்தத்தை ஒடித்து எழுதிய மகாபாரதம் எனும் அற்புதக் காவியம், இன்றைக்கு ஆயிரம் பொன் என்ன… கோடி பொன் கொடுத்தாலும் கூட கிடைக்காது. இதை வைத்து தான் இப்படி ஒரு பழமொழியே உருவானது. இந்த உலகத்திலேயே பெரிய நூல் மகாபாரதம் தான். லட்சம் ஸ்லோகங்கள் உள்ளன. மிக வேகமாக எழுதப்பட்ட நூலும் இதுவே.
மாணவர்களின் இஷ்ட தெய்வம் விநாயகர். குறிப்பாக, தேர்வு காலத்தில், “பிள்ளையாரப்பா… நான் அதிக மார்க் வாங்க அருள் செய்; சிதறுகாய் உடைக்கிறேன்…’ என வேண்டுவர். அவரது அருளைப் பெற, இன்னொரு எளிய வழியும் இருக்கிறது. உங்கள் பாடங்களையோ, தேர்வையோ எழுதத் துவங்கும் முன், மனதிற்குள் மூன்று முறை, “ஸ்ரீகணாதிபதயே நமஹ’ என்று சொல்லி விட்டு ஆரம்பியுங்கள். அந்த வேழமுகத்தான் தங்கு தடையின்றி எழுதி முடிக்கும் சக்தியையும், சிறப்பான வெற்றியையும் அருள்வார்.
விநாயகர் வழிபாடு மிகவும் எளிமையானது. சதுர்த்தியன்று உங்கள் இல்லங்களை அலங்கரியுங்கள். ஒரு இலையில் மோதகம், பொரி, அவல், கடலை படைத்து நைவேத்யம் செய்யுங்கள். விநாயகர் சிலை அல்லது படத்துக்கு அருகம்புல் மற்றும் எருக்கம்பூ மாலை போதும். விநாயகர் சதுர்த்தி நன்னாளில், அவரைப் போலவே எளிமையையும், நேர்மையையும் கடைபிடிக்க உறுதியெடுப்போம்.

வியப்பூட்டும் வெந்நீர் ஊற்றுகள்!

பூமியில் சில இடங்களில் தரைப் பரப்பின் அடியில் உள்ள நீர் மிகவும் சூடாகி கொதிநிலையை அடைகிறது. நீரின் கொதிநிலை 212 டிகிரி பாரன்ஹீட். ஆனால் மிகுந்த அழுத்தத்தினால் கொதிநிலையை அடையும்முன்பே மிகச் சூடடைந்து விடுகிறது.

பிறகு கொதிநிலையை அடைந்த உடனே நீராவியாகி விரிவடையத் தொடங்குகிறது. அவ்வாறு விரிவடையும்போது நீரை மேலே தூக்குகிறது. இதனால் நீர்ப் பரப்பில் அழுத்தம் குறைய, அப்பரப்பில் உள்ள தண்ணீர் கொதிநிலையை அடைந்து மேலும் நீராவி உண்டாகிறது.

இம்மாதிரி சேரும் நீராவியின் விசையால் தண்ணீர் மேலே தூக்கப்பட்டு தரைப் பரப்பில் இருந்து 15 முதல் 20 மீட்டர் உயரம் வரை பீய்ச்சி அடிக்கப்படுகிறது. பிறகு நீரூற்றுப் பாதையில் மேலும் குளிர்ந்த நீர் வந்து சேர, அது கொதிநிலை அடைந்து, நீராவி மேலும் நீரை வெளியே தள்ளுகிறது. இந்தச் சுழற்சி தொடர்கிறது.

அமெரிக்காவின் வயோமிங்கில் உள்ள யெல்லோஸ்டோன் நேஷனல் பார்க்கில் உள்ள கொதிநீரூற்று, 65 நிமிடங்களுக்கு ஒருமுறை 5 நிமிட நேரத்துக்குக் கொதிநீரை வெளிப்படுத்துகிறது. இந்த ஊற்று நீரில் தாதுப் பொருட்கள் கரைந்திருக்கின்றன.

எரிமலைகள் உள்ள பகுதிகளில் வெந்நீர் ஊற்றுகளும், கொதிநீரூற்றுகளும் அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக தென் அமெரிக்கா, ஜப்பான், மலாய் ஆர்ச் பிலாகோ, இத்தாலி போன்ற நாடுகளில் வெந்நீரூற்றுகள் உள்ளன. ஐஸ்லாந்து, நியூசிலாந்து, யெல்லாஸ்டோன் பார்க் ஆகிய இடங்களில் இவை அதிகமாக உள்ளன. `கெய்ஸர்’ என்று அழைக்கப்படும் கொதிநீரூற்று தரையில் இருந்து 15 மீட்டர் முதல் 80 மீட்டர் வரை பீறிட்டு அடிக்கும். நீரையும், நீராவியையும் பல மீட்டர் உயரத்துக்குப் பீய்ச்சி அடிக்கும்.

வெந்நீர் ஊற்றானது கொதிநீரூற்றைப் போல சீறி அடிக்காது. இதன் வெப்பநிலை ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கும். இதன் நீர் எவ்வளவு சீக்கிரம் சூடு அடைகிறதோ, அவ்வளவு சீக்கிரம் குளிர்ந்து விடும்.

பார்சல் சாப்பாட்டில் பல கிருமிகள்-அழிக்க காட்டு ஏலக்காய்

பார்சல் உணவுகளை, உணவகத்தில் வாங்கும் பொழுது பணியாளர்கள் பாலித்தீன் பைகளை வாயால் ஊதியும், விரல் நுனியால் பாலித்தீன் பைகளை பிரித்தும் உணவை நிரப்பி கட்டிக் கொடுப்பதால், பல்வேறு வகையான நுண்கிருமிகள் அவர்களது வாய்க்காற்று, எச்சில் தூறல், நக அழுக்கு ஆகியவற்றின் மூலம் வயிற்றுக்குள் செல்கின்றன. பின் இவை, உணவு ஆறும்போதோ அல்லது புளிக்கும் போதோ, பல்கி, பெருகி, உண்பவரின் வயிற்றில், பல கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி சூடான உணவுகளை அடைப்பதால், பாலித்தீன் பைகளிலுள்ள எத்திலீன், வயிற்றில் அழற்சியை ஏற்படுத்துவதுடன், புற்றுநோய் போன்ற பாதிப்புகளையும் உண்டாக்குகிறது. பார்சல் உணவுகளை வாங்குவதற்கு, பிளாஸ்டிக் அல்லாத நம் வீட்டில் அன்றாடம் சுத்தம் செய்யும் பாத்திரங்களை பயன்படுத்துவது நல்லது.

சாதாரணமாக நமது உடலின் உட்பகுதியில், நுண்கிருமிகள் காணப்படுவதில்லை. ஆனால் வாயின் உட்புறம், குடல், தோல் போன்றவற்றில் பல்வேறு வகையான நுண்கிருமிகள் காணப்படுகின்றன. இயற்கையாகவே காணப்படும் சில நுண்கிருமிகள், நன்மை செய்யக்கூடியவை. ஆனால், பிறரிடமிருந்து தொற்றக்கூடிய அல்லது நோய்களை விளைவிக்கக்கூடிய ஆபத்தான நுண்கிருமிகளும், இந்தப் பகுதிகளில் நுழைந்து விடலாம். இவை பல்வேறு வகையான நோய்களை நமக்கு ஏற்படுத்துகின்றன. இவற்றில், வாய் மற்றும் உள்ளங்கைகளில் காணப்படும் கிருமிகளே, பலவிதமான தொற்றுநோய்களுக்கு காரணங்களாக இருக்கின்றன.

வாய் மற்றும் தொண்டையில் ஸ்டேப்பிலோகாக்கஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ், நெய்செரியா, சூடோமோனாஸ், புரோட்டியஸ், ஹூமோபிலஸ், கிளோஸ்டெரிடியம், கார்னிபாக்டீரியம், மைக்ரோபாக்டீரியம், ஆக்டினோமைசிட்டஸ், ஸ்பைரோகேட்ஸ், மைக்கோபிளாஸ்மாஸ் போன்ற பலவகையான பாக்டீரியாக்கள் மற்றும் பல்வேறு வகையான நுண்கிருமிகள், வாய், தொண்டை, மூக்கு போன்ற உணவுப்பாதையில் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி கைகளில் விரலின் நக இடுக்கு உட்புறம், நகத்தின் நுனி, உள்ளங்கை, புறங்கை, விரலிடுக்குகள் போன்ற பகுதிகளில் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் காணப்படுகின்றன. இவற்றில், விரலின் நக இடுக்குகளில், பிற பகுதிகளை விட, 75 மடங்கு அதிகமான நுண்கிருமிகள் காணப்படுகின்றன. உள்ளங்கையில், 4,200க்கு மேற்பட்ட நுண்கிருமிகள், நிரந்தரமாக குடி கொண்டிருக்கின்றன.

இட்லி மாவை புளிக்கச் செய்தல், உணவை செரிக்கச் செய்தல் போன்றவற்றிற்கு, 150 வகையான கிருமிகள் பயன்பட்டாலும், எஞ்சிய பல கிருமிகள், பல்வேறு வகையான நோய்களை பரப்புவதற்கு உதவுகின்றன. ஆண்களை விட பெண்களின் கையில் நுண்கிருமிகள் அதிகமாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன. வியர்வை, தோலின் எண்ணெய் சுரப்பு, ஹார்மோன்கள், வெள்ளை அணுக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல், நாம் பயன்படுத்தும் சோப்பு, கை கழுவுதல் ஆகியவற்றை பொறுத்து, கிருமிகளின் எண்ணிக்கை, குறையவோ, கூடவோ செய்கிறது. தோலை விட உள்ளங்கை மற்றும் வாயின் உட்புறம் ஏராளமான நுண்கிருமிகள் இருப்பதால், இவற்றின் மூலம் கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

காட்டு ஏலக்காய், கிருமிகளை அழிக்க வல்லது. அமோமம் சபுலேட்டம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஜிஞ்ஜி பெரேசியே குடும்பத்தைச் சார்ந்த செடிகளின் உலர்ந்த பழங்களே காட்டு ஏலக்காய். பெரிய ஏலக்காய் அல்லது பேரேலம் என்று அழைக்கப்படுகின்றது.
சால்கோன் என்ற கார்டோமோனின், அல்பினிட்டின், சபுலின் மற்றும் சினியோல் என்ற நறுமணமுள்ள மருந்துசத்து ஆகியன காணப்படுகின்றன.
இவை, வயிற்றில் வளரும் தேவையற்ற நுண்கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, செரிமான சக்தியை தூண்டி, பலவிதமான வயிற்று உபாதைகள் மற்றும் வயிற்று வலியை நீக்குகின்றன.

காட்டு ஏலக்காய் – 20 கிராம், இலவங்கப்பட்டை – 20 கிராம், சிறுநாகப்பூ – 20 கிராம், சுக்கு – 20 கிராம், மிளகு – 20 கிராம், திப்பிலி – 20 கிராம், வாய்விடங்கம் – 20 கிராம், மல்லிவிதை – 20 கிராம், ஆகியவற்றை சுத்தம் செய்து, இளவறுப்பாக வறுத்து, இடித்து, பொடித்து, சலித்து, 120 கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டியளவு தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன்பு ஏழு நாட்கள் சாப்பிட்டு வர, நுண்கிருமிகளால் ஏற்பட்ட பல்வேறு வகையான வயிற்று உபாதைகள் நீங்கும்.

மறைந்துவிடுமா பெர்சனல் கம்ப்யூட்டர்?

சென்ற ஆகஸ்ட் 12ல் தன் முப்பது வயதை எட்டிய பெர்சனல் கம்ப்யூட்டர், வரும் காலத்தில் இல்லாமல் போய்விடும் என்று பலரும் எண்ணத் தொடங்கி யுள்ளனர். 1981 ஆம் ஆண்டில், ஐ.பி.எம். பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்த குழுவில் இடம் பெற்ற வல்லுநர் மார்க் டீன் இந்தக் கருத்தினை முன் வைத்துள்ளார். இன்னும் புதியதாக ஒரு தொழில் நுட்பம், பெர்சனல் கம்ப்யூட்ட ரின் இடத்தைப் பிடிக்கும் என்று அறிவித்துள்ளார்.
ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர்கள், இதன் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றவையாக இருந்தாலும், புதிய வழிகளில் கணிப்பொறி செயல்பாடு திருப்பப்பட்டு, புதிய சாதனங்கள் வடிவமைக்கப்படலாம் என இவர் கணித்துள்ளார். கம்ப்யூட்டரில் தற்போது மேற்கொள்ளப்படும் பணிகள், இனி பெர்சனல் கம்ப்யூட்டர் போன்ற ஒரு சாதனத்தின் வழி மட்டும் என முடங்காது, அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் மேற்கொள்ளப்படும். அப்போது பெர்சனல் கம்ப்யூட்டர் என்ற ஒரு தனி சாதனம் இருக்காது என்கிறார் இவர்.
இன்றைய பெர்சனல் கம்ப்யூட்டர் மறைவதற்கு இவர் கூறும் இன்னொரு காரணம் சரியாகவே உள்ளது. இப்போது கணிப்பொறியில் மேற்கொள்ளப்படும் வேலைகளெல்லாம், இணையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. வேகமாகப் பரவி வரும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு. பைல்கள் உருவாக்கப்படுவதும், சேமிக்கப்படுவதும், பகிர்ந்தளிக்கப் படுவதும், தகவல்கள் சேமிக்கப்பட்டு, தேடப்பட்டு பயன்படுத்தப் படுவதும் இப்போது இணையத்திலேதான் நடக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் இதனை மேற்கொள்ள வழி தரும் ஒரு சாதனமாகத்தான் உள்ளது. நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் கணிக்கும் பணியினைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வருகிறோம். எனவே நாம் இதுவரை மேற்கொண்ட வேலைகள், பயன்பாடுகளைக் கொண்ட பெர்சனல் கம்ப்யூட்டர் இனி காணாமல் போய் விடும் என்கிறார் மார்க் டீன். இந்தக் கருத்து சரியானதாகவே தோன்றுகிறது.
ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை மறுத்துள்ளது. இது குறித்து உயர்நிலை நிர்வாக வல்லுநர் கருத்து தெரிவிக்கையில், இந்த ஆண்டு 40 கோடி பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. எனவே பெர்சனல் கம்ப்யூட்டருக்குப் பிந்தைய காலம் என்று குறிப்பிடுவது தவறு. பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைந்த காலம் என்று தான் புதிய சாதனங்களைச் சொல்ல வேண்டும். இனி வரும் காலங்களில், பெர்சனல் கம்ப்யூட்டர் (அல்லது மேக் கம்ப்யூட்டர்) இல்லாத ஒரு வீடு இருக்கவே இருக்காது என அடித்துச் சொல்கிறார். இதுவும் சரியென்றே படுகிறது. இருப்பினும் தொழில் நுட்ப முன்னேற்றத்தில் எது வேண்டுமானாலும் நடைபெறலாம்.

`பேசும்’ தவளைகள்!


`மொழி’ என்றதுமே அது மனிதர்கள் சம்பந்தப்பட்ட ஒன்று என்ற எண்ணம்தான் நமக்கு ஓடுகிறது. ஆனால் மொழியும், மொழி சார்ந்த பிரச்சினைகளும் மனித இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. தவளைகளும், தேரைகளும் கூட அவற்றின் சொந்த மொழியில் பேசிக்கொள்கின்றன.

சமீபத்திய உயிரியல் ஆராய்ச்சிகள் இதை உறுதிப்படுத்துகின்றன. தவளைகளும், தேரைகளும் ஒன்று ஒன்று தொடர்புகொள்ளப் பயன்படுத்தும் ஒலி சமிக்ஞை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

தவளைகளும், தேரைகளும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவை தங்களுக்கே உரிய பிரத்தியேக மொழிகள் மூலம் தத்தமது இனத்துக்கு இடையே தொடர்பு கொள்கின்றன.

நூற்றுக்கணக்கான தவளைகள் ஒரே சமயத்தில் ஒலி எழுப்புவதை நாம் கேட்டிருப்போம். பொதுவாக இனச்சேர்க்கைக்காகவே தவளைகள் இப்படிக் குரல் கொடுக்கின்றன.

ஒரு பெண் தவளை இந்தப் பெரிய கூச்சலுக்கு நடுவே தனது வகையைச் சேர்ந்த ஆண் தவளையின் குரலைத் தனியாக இனங்கண்டு கொண்டு அதைத் தேடிச் சென்று இனவிருத்தி செய்கிறது என்கிறார்கள் உயிரியல் வல்லுநர்கள்.

எப்படி மிதக்கிறது கப்பல்?

ஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று பார்ப்போம்.

சிறிய கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாசமின்றி எல்லா கப்பல்களுக்கும் அதிக எடை கொண்டவை. ஆகவே ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமிழும்.

10 ஆயிரம் டன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி, அதே எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். எனவே ஒரு கப்பலின் எடையைக் கூறுவதற்குப் பதிலாக, அது இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையைக் கூறுகிறார்கள். அதாவது ஒரு கப்பலின் `டிஸ்பிளேஸ்மென்ட்’ 10 ஆயிரம் டன் என்று கூறுவார்கள்.

அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் கிடப்பு நிலையில் இருந்து ஏற்படும் அழுத்தங்கள் கப்பலின் உடற்பகுதியை நசுக்குகின்றன. ஆனால் அவை இந்த நடைமுறையில் ஒன்றையொன்று அமிழ்த்துச் சமநிலையை ஏற்படுத்துகின்றன. செங்குத்தான போக்கில் உள்ள அழுத்தங்களின் சக்தியே கப்பலின் எடையை ஒரு சமநிலைக்குக் கொண்டுவருவதாக ஆக்கிமிடிஸ் கருதினார்.

காற்றில் அமிழ்ந்துள்ள பொருட்களுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும். கியாஸ் உள்ளிட்ட எல்லா திரவங்களுக்கும் ஆக்கிமிடிஸின் கொள்கை பொதுவானதே. உதாரணமாக, பலூனை எடுத்துக்கொள்வோம். அது தனது பருமனுக்குச் சமமான எடையை விட இலேசாக இருந்தால் பறக்கும்.

`வெஜிடபிள்’ கட்லெட்

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 4
கேரட் – 1
வெங்காயம் – 2
பச்சைப் பட்டாணி – 100 கிராம்
அம்ச்சூர் பொடி – 1/4 டீஸ்பூன்
சிவப்பு, மிளகாய்த் தூள் – 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் – 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1/2 கப்
உப்பு – 11/2 டீஸ்பூன்
பிரட் துகள்கள் – 4 டேபிள் ஸ்பூன்
சோளமாவு – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

* உருளைக் கிழங்கை குக்கரில் வேக வைத்து தோலுரித்து நன்கு மசிக்கவும்.

* வாணலியில் 8 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், அனைத்து தூள்கள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

* பிறகு துருவிய கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்து எல்லாம் நன்கு வதங்கும் வரை வதக்கவும்.

* இப்போது மசித்த உருளை சேர்த்து எல்லாம் ஒன்று சேர திரண்டு வரும்வரை வதக்கவும்.

* ஆறியவுடன் இவற்றை விருப்பமான வடிவில் உருண்டை அல்லது இதய வடிவில் சிறு சிறு கட்லெட்களாக வடிவமைத்து, தண்ணீர் கலந்த சோளமாவில் தோய்த்து பிரட் துகள்களில் புரட்டி வைக்கவும்.

* தோசைக் கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் நடுவில் மீதி எண்ணெய் முழுவதையும் ஊற்றி மிதமான தீயில் சுடவைத்து கட்லெட்களை எண்ணெயில் போட்டு திருப்பி இருபுறமும் பொன்மஞ்சள் நிறமாக வரும்வரை லேசாக வறுத்து எடுக்கவும்.

குறிப்பு

* 4 பிரட் துண்டுகளை எடுத்து பிரட் துகள்கள் செய்ய உபயோகப்படுத்தலாம்.

* மேற்சொன்ன காய்களுடன் துருவிய பீட்ரூட் அல்லது துருவிய பன்னீர் சேர்த்து கட்லெட் செய்தால் வேறுபட்ட சுவையுடன் இருக்கும்.

கீதா பாலகிருஷ்ணன்

அவதி வேண்டாம் “குடிமகன்’களே!

மாலை ஏழு மணி ஆனால், மனம் அலைபாய்கிறது. அறிவு அதைக் கட்டுப்படுத்த முயன்றாலும், மனம் கேட்க மறுக்கிறது. நேராக, “டாஸ்மாக்’ சென்று, ஒயின், விஸ்கி என, ஒரு, “குவார்ட்டர்’ ஆவது, முழுங்கினால் தான், உடல் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற நினைப்பு. “பிளேடு’ போட வேண்டாம்… விஷயத்திற்கு வாருங்கள்…’ என, நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், அடுத்த நாள் தலைவலிக்கு, முழு புட்டி அமிர்தாஞ்சனைத் தேய்த்துக் கொண்டாலும், தலைவலி போகாதே! “குடி’க்கும் உரிமை உங்களுடையதே; அதை யாரும் கட்டுப்படுத்தவில்லை. உங்கள் நினைப்பைச் சற்றே மாற்றிக் கொண்டால், பிரச்னை எழாது என்பதற்கு தான், கீழே உள்ள விளக்கங்கள்.

* சாப்பிடுவதற்கு முன், “குடி’த்தால் தான், “கிக்’ ஏறும்!

உணவு சாப்பிடும் முன், “பெக்’ அடித்தால் தான், “கிக்’ ஏறும் என நீங்கள் நினைப்பது உண்மை தான். ஆனால், அளவுக்கு அதிகமாக குடிக்கும்போது, அடுத்த நாள் தலைவலியுடன் சேர்ந்த அரை மயக்கத்தை சமாளிப்பது எப்படி? எனவே, உணவு சாப்பிட்ட பின், மது அருந்துவது நல்லது. இப்படிச் செய்தால், ரத்தத்துடன் மது கலப்பது தாமதப்படும். இதனால், தலைவலி ஏற்படாது. மீண்டும் ஒரு, “ஸ்மால்’ அடிக்க வேண்டும் என்ற எண்ணமும் எழாது.

* “காக்டெய்ல் கிக்’கே தனி பிரதர்!

“காக்டெய்ல்’ அருந்தும்போது, ஆல்கஹால் கலப்பு குறையும் என, பெரும்பாலோர் கருதுகின்றனர். இது தவறு. பல வகையான மதுக்களில் காணப்படும், நிறமிகளும், சுவைகூட்டிகளும், உங்கள் ரத்தத்தைப் பதம் பார்த்து விடும். ரத்தத்தில் ஆல்கஹால் வெகு வேகமாகக் கலந்து விடும்.
* கவர்ச்சியாய், அடர்நிறத்தில் உள்ள மதுவின், சுவைக்கு ஈடில்லை!
நல்ல நிறம், மணம், சுவை ஆகியவற்றைக் கொண்ட மது வகைகள், அடுத்த நாள் உங்களை அசத்தி விடும்; எழுந்திருக்கவே முடியாது. அதிக சர்க்கரை கொண்ட மது வகைகளுக்கும், “தடா’ போடுங்கள். விஸ்கி, ரம், பிராந்தி ஆகியவற்றை விட, வோட்கா, ஜின், மைல்டு பீர் ஆகியவற்றைப் பருகலாம்.

* ஒரு காபி குடித்தால், “ஹேங்ஓவர்’ வராது!

“ஹேங்ஓவரை’ விரட்ட, மீண்டும், ஒரு, “ஸ்மால்’ குடிப்பதோ, காபி குடிப்பதோ, வலி நிவாரணி மாத்திரை சாப்பிடுவதோ தவறு. மீண்டும் ஒரு, “ஸ்மால்’ குடிப்பது, நீங்கள் மதுவுக்கு அடிமையாக வழி வகுக்கும். காபி குடித்தால், உடலில் நீர்ச் சத்து குறைந்து விடும். வலி நிவாரணி, மிகக் குறைந்த மணி நேரத்திற்கே வேலை செய்யும்.

*ஹேங் ஓவரை’ விரட்ட, என்ன செய்யலாம்?

எந்த வகை மதுவுமே, நம் வயிற்றில் சென்றதும், “அசிடால்டிஹைடு’ ரசாயனமாக மாறுகிறது. இது விஷத்தன்மை கொண்டது. இதனால், அதிக வியர்வை, குமட்டல், வாந்தி, இதயத் துடிப்பு அதிகரித்தல் ஆகியவை ஏற்படும். உடலுக்கு சக்தி கொடுக்கும் குளூக்கோஸ் உற்பத்தியாவதைத் தடுக்கும். இதனால், மெத்தனமான செயல்திறனுடன், உற்சாகம் இழந்து, எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். அளவோடு, மது அருந்துவது நல்லது. சற்றே அதிகமானாலும், அடுத்த நாள், “ஹேங்ஓவர்’ தான்! உடலில் ஆல்கஹால் அளவு முற்றிலும் குறைந்தவுடன், அதிகமாய் தலைவலி ஏற்படும். இதை விரட்ட, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்; நன்றாக தூங்க வேண்டும். மாற்று வழி ஏதும் இல்லை.

துக்கடா: “சாக்லேட், அன்னாசிப் பழத்துண்டு போன்ற, இனிப்புப் பண்டங்களைச் சாப்பிட்டுக் கொண்டே மது அருந்தினால், குட்டிக் குரங்கு போல குதியாட்டம் போடத் தூண்டும்’ என, அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர். இது விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடும்; தவிர்த்து விடுங்கள்.

“ஹைபோகான்ட்ரியாசிஸ்’ என்றால் என்ன? என்ன நோய் இது?

உடல் நலத்தைப் பற்றி, வீணாக கற்பனை செய்து, கவலை கொள்வதற்கு, “ஹைபோகான்ட்ரியாசிஸ்’ என்று பெயர். இந்த பாதிப்பு கொண்டவர்கள், உடலில் தோன்றும் அறி குறிகள் குறித்து, அளவுக்கு அதிகமாக கற்பனை செய்து, தனக்கு தீவிர நோய் இருப்பதாகக் கருதி, பல மருத்துவர்களிடம் செல்வர். மருத்துவர்கள், ஐயத்தை நீக்கினாலும், மீண்டும் பயம் கொள்வர். இதனால், இவர்கள் மட்டுமின்றி, இவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர்.

என்ன சிகிச்சை?

உடல் மற்றும் பாலியல் ரீதியான பாதிப்பு காரணமாகவோ அல்லது மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காகவோ, “ஹைபோகான்ட்ரியாசிஸ்’ மனநிலைக்கு சிலர் தள்ளப்படுகின்றனர். இதோடு, படபடப்பு, மனப் போராட்டம் ஆகியவையும் ஏற்படும். பருவ வயதிலேயே இது ஏற்படக் கூடும். தனக்கு எய்ட்ஸ், புற்றுநோய், இதய நோய், பக்கவாதம் ஆகியவை ஏற்பட்டுள்ளதாக, இவர்கள் கற்பனை செய்து கொள்வர். இவர்களுக்கு, மன நல மருத்துவம் தேவை.