Daily Archives: நவம்பர் 3rd, 2011

உற்சாகமான தாம்பத்யத்திற்கு மூன்று வழிகள்!

சுவாசத்தில் நுழையும் சுத்தமான காற்று நமது மனதையும், உடலை உற்சாகப்படுத்தும். அதுபோல தாம்பாத்யத்தில் உற்சாகமுடன் செயல்பட மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் உளவியலாளர்கள்.

முத்தான மூன்று வழிகள் 

1. பார்வையாளராக மட்டுமே இருப்பதை தவிர்க்க வேண்டும்
2. உறவுகளுக்கிடையேயான தொடர்பை அதிகரிக்க வேண்டும்
3. ஒருவருக்கொருவர் தவறாக புரிந்து கொள்வதை விடவேண்டும்

பார்வையாளராக இருக்க வேண்டாம்

தாம்பத்யத்தில் இருவரின் பங்களிப்புமே முக்கியமானது. ஒருவர் பார்வையாளராக இருந்து மற்றொருவர் மட்டுமே செயல்புரிந்தால் அது ஓரங்க நாடகம் போல ஆகிவிடும். இருவருமே இணைந்து செயல்புரிவதில்தான் சுவாரஸ்மே உள்ளது. எனவே பார்வையாளராக மட்டுமே இல்லாது பங்களிப்பாளராக இருப்பதும் முக்கியம்.

ஸ்பரிசங்கள் உணர்த்தும்

தகவல் தொடர்பு என்பது தாம்பத்யத்தில் மிகவும் முக்கியமானது. வார்த்தையாகவோ, தொடுகையாகவோ எப்படியாகிலும் உங்கள் துணையுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும். எது நன்றாக இருக்கிறது என்பதை உணர்த்துவதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. ஆயிரம் பேச்சு உணர்த்துவதை ஒரு ஸ்பரிசம் புரிய வைத்துவிடும் என்பார்கள். எனவே தாம்பத்யத்தின்போது உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை புரிய வைக்க வேண்டும். பிறகு பாருங்கள் உங்களுக்கு தேவையானவை தானாகவே கிடைக்கும்.

தாம்பத்யத்தில் தொடுகையின் பங்கு முக்கியமானது. தொடத் தொட மலரும் பூக்களைப் போல உங்களின் வாழ்க்கைத்துணை உங்களின் பங்களிப்பை கண்டு உற்சாக மடைவார் என்பது நிச்சயம். அதற்காக ஓவர் ஆக்டிங் தேவையில்லை ஏனெனில் அது முழுவதையும் சொதப்பிவிடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மகிழ்விப்பதில் இருவரின் பங்களிப்புமே சரிசமமாக இருக்க வேண்டும்.

புரிதல் தேவை 

தாம்பத்யத்தைப் பொறுத்தவரை யார் பெரியவர் என்ற ஈகோ தேவையற்றது. சரியான புரிந்து கொள்ளும் தன்மையுடன் அணுகினாலே அன்றைக்கு வீட்டில் அமர்க்களம்தான். அதை விடுத்து தன்னுடைய செயல்பாடுதான் சரியானது என்றும் தான் சொல்வதைக் கேட்டால்தான் சரியாக இருக்கும் என்று கூறினாலே அங்கே சிக்கல் எட்டிப்பார்க்க ஆரம்பிக்கும்.

அந்த சமயத்தில் கட்டளையிடுவதைவிட கவனத்தோடு பிரச்சினையை தீர்க்க முயல்வதே சரியானது. உளவியலாளர்கள் கூறும் மூன்று முத்தான ஆலோசனைகளை பின்பற்றி பாருங்கள் அப்புறம் உங்கள் ‘காட்’டில் (அதாவது வீட்டில் ) அன்பு மழைதான்!

மருந்தாக பயன்படும் காட் மீன்கள் பற்றி சிறப்பு தகவல்கள்

மனிதர்களுக்கு விட்டமின் A, D மற்றும் E குறைவு ஏற்பட்டால் காட் லிவர் ஆயில் தான் மருந்து. இந்த மருந்தை நமக்கு தருவது காட் என்னும் ஒருவகை கடல் வாழ் மீனினம். இந்த மீன்களுக்கு பகைவர்கள் பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள். பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகளிடமிருந்து இவற்றை பாதுகாக்க இயற்கை காட்மீன்களுக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு – MHC என்னும் ஒரு வகை அணுக்கள், MHC Class I ஜீன்கள் மற்றும் MHC Class II ஜீன்கள்.

இது தவிர சேதமடைந்த செல்களும் இந்த மீன்களுக்கு ஆபத்தை விளைவிப்பவை. எனவே, சேதமுற்ற செல்களை அழித்து அவற்றிலிருந்து மீன்களை பாதுகாக்க சேதமடைந்த செல்கள் முதலில் அடையாளம் காணப்பட்டு பின்னர் அழிக்கப்படுகின்றன. இது போன்ற செல்களை அடையாளம் காட்டுவது, MHC அணுக்களும் MHC Class II ஜீன்களும் தான். இந்த MHC அணுக்கள் மீது MHC Class II ஜீன்கள் சூழ்ந்து கொள்கின்றன. பின்னர் அவை சேதமடைந்த செல்கள் மீது சென்று ஒட்டிக்கொண்டு, சேதமடைந்த செல்களை அடையாளம் காட்டுகின்றன.

இவ்வாறு அடையாளம் காட்டப்பட்ட சேதமடைந்த செல்கள் பின்னர் அழிக்கப்படுகின்றன. ஆகவே, சேதமுற்ற செல்களை அழித்து மீன்களை பாதுகாப்பதில் இந்த ஜீன்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆனால் இந்த MHC Class II ஜீன்கள் இல்லாத காட் மீன்கள், அட்லாண்டிக் கடல் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் சேதமடைந்த செல்களை அடையாளம் காட்டும் பணியை செய்வது எது? அதிஷ்டவசமாக இந்த வேலையை MHC Class I ஜீன்கள் செய்து வருகின்றன. இருப்பினும், MHC Class II ஜீன்களை உருவாக்க தேவையான வழிமுறைகளை கண்டுபிடிக்கவும்; அது வரையிலும் மனிதர்களுக்கு தேவையான விட்டமின்கள் A, D மற்றும் E ஆகியவற்றுக்கான மாற்று வழிகளை கண்டறியவும் விஞ்ஞானிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

காந்த குடை விரிக்க சூப்பர் திட்டம்!

செயலிழந்த செயற்கை கோள்கள், விண்கலங்களில் இருந்து வெளியேறிய பொருட்கள், சிறிய நட், போல்ட்  என்று 22 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களில் விண்வெளியில் மிதக்கின்றன. இவற்றால் செயற்கை கோள்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

விண்வெளியில் சுற்றும் செயற்கை கோள்கள், தேவையற்ற பொருட்கள் தொடர்பாக அமெரிக்காவின் தேசிய ஆய்வு கவுன்சில் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டது. இதில் தெரியவந்த தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: உலகின் பல நாடுகளும் பல ஆண்டுகளாக விண்ணில் செயற்கை கோள்களை செலுத்தி வருகின்றன. இவை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு செயலிழக்கின்றன. ஆனாலும், தொடர்ந்து விண்வெளியில் மிதந்து வருகின்றன. இதுதவிர, விண்வெளியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்போதும் குப்பைகளாக பல பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.

இது மட்டுமின்றி விண்கலங்கள் மற்றும் செயற்கை கோள்களில் இருந்து எதிர்பாராதவிதமாக விலகும் நட், போல்ட், டூல்ஸ் போன்றவையும் விண்வெளியில் சுற்றி வருகின்றன. சிறிதும் பெரிதுமாக இவ்வாறு 22 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்கள் பூமிக்கு அருகில் விண்வெளியில் சுற்றி வருகின்றன. செயலிழந்த செயற்கை கோள் ஒன்றை தகர்த்து அழிக்கும் முயற்சி 2007-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. ஏவுகணை போன்ற ஆயுதத்தால் மோதி அழிக்கப்பட்டது.

அது 1.50 லட்சம் பீஸ்களாக உடைந்து விண்வெளியில் மிதந்தது. 2009-ல் இரு செயற்கை கோள்கள் எதிர்பாராவிதமாக மோதிக் கொண்டன. அதனாலும் குப்பை எண்ணிக்கை அதிகரித்தது. இந்த விண்வெளி குப்பைகள் மணிக்கு 28 ஆயிரம் கி.மீ. வேகத்தில் சுற்றி வருகின்றன. தற்போது செயல்பாட்டில் இருக்கும் செயற்கை கோள்கள், விண்கலங்கள் ஆகியவற்றின் மீது இவை மோதினால் பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் ஆபத்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விண்வெளி குப்பைகளை பத்திரமாக அகற்றுவது தொடர்பாகவும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தூண்டில், வலை போன்ற கருவிகளை வைத்து அவற்றை அகற்றலாம் என்று விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர். காந்த சக்தி கொண்ட பிரமாண்ட குடை மூலமாக அப்பொருட்களை கவர்ந்திழுக்கலாம் என்ற யோசனையும் கூறப்பட்டுள்ளது.

மூலிகை மருத்துவம்: ஏழாம் சத்து

சித்த மருத்துவத்தில் உடலின் சத்துக்களை ஏழு வகைகளாக வகைப்படுத்தி உள்ளனர். சாரம் என்னும் முதல் சத்தானது நாம் உண்ணும் உணவிலிருந்து முதலில் பிரிக்கப்படும் திரவச் சத்தாகவும், செந்நீர் என்னும் இரண்டாம் சத்தானது ரத்தமாகவும், ஊண் என்னும் மூன்றாம் சத்தானது தசைகளாகவும், கொழுப்பு என்னும் நான்காம் சத்தானது கொழுப்பு
செல்களாகவும் என்பு என்னும் ஐந்தாம் சத்தானது எலும்பு செல்களாகவும், மூளை என்னும் ஆறாம் சத்தானது எலும்பு மஜ்ஜை மற்றும் நரம்புசெல்களாகவும், சுக்கிலசுரோணிதம்
என்னும் ஏழாம் சத்தானது ஆண் மற்றும் பெண்களின் விந்தணு மற்றும் சினை முட்டையாகவும் படிப்படியாக, ஒன்றன்பின் ஒன்றாக, ஒன்றிலிருந்து மற்றொன்றாக தோன்றி, உருவெடுக்கிறது. நமக்கு ஏழாவது சத்தாக தோன்றும் ஆண், பெண் இனப்பெருக்க அணுக்கள் நமது ஒவ்வொரு செல்லிலும் உருவேற்றப்பட்டு, இறுதியாக தோன்றுவதால், நமது சந்ததி யினரும் நம்மைப் போலவே உருவத்திலும், செயலிலும் ஒரே மாதிரி திகழ்கின்றனர். இவ்வளவு தனித்தன்மை வாய்ந்த இனப்பெருக்க அணுக்கள், ஆரோக்கியமாக இருந்தால்தான் மகப்பேறு எளிதில் அமையும். ஆரோக்கியமான குழந்தைப்பேறும் உண்டாகும். ஆண், பெண் என இருவருக்கும் ஏழாம் சத்தாக தோன்றும் இனப்பெருக்க அணுக்கள் மற்ற ஆறு சத்துக்களின் குணங்களையும், ஒன்றடக்கியுள்ளதால், இதை போற்றி பாதுகாக்க வேண்டுமென சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. பெண்ணின் சினைப்பை மற்றும் ஆணின் விதைப்பை ஆகியவற்றிற்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். ஆர்ஜினின், லியுசின் போன்ற சத்துகள் நுண்ணிய குழல்களின் ரத்த ஓட்டத்தை சரிசெய்கின்றன.

பெரும்பாலான பழங்களில் இதுபோன்ற சத்துக்கள் காணப்பட்டாலும், நீர்ச் சத்துள்ள பழங்களில் இவை ஏராளமாக காணப்படுகின்றன. ருசியாக இருப்பது மட்டுமின்றி, உடம்பில் நீர்ச்சத்தை தேக்கிவைத்து, ஆண்மையை அதிகரித்து, இனப்பெருக்க உறுப்புகளில் தோன்றும் ரத்தக்குழாய் அடைப்புகளை நீக்கி, ஆண், பெண் இனப்பெருக்க சத்துக்களை அதிகரிக்கும் அற்புத பழம் முலாம்பழம். குக்குமிஸ் மெலோ என்ற தாவரவியல் பெயர் கொண்ட குக்கர்பிட்டேசியே குடும்பத்தைச் சேர்ந்த கொடிகளின் பழங்களே முலாம்பழம் என்றும், கிர்ணிப்பழம் என்றும், மஸ்க்மெலன் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த பழச்சாற்றிலுள்ள சிட்ருலின், ஆர்ஜினின் போன்ற பொருட்கள் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தி, நுண்ணிய குழல்களுக்கு ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி, இனப்பெருக்க அணுக்களின் உற்பத்தியை அதிகப்படுத்துகின்றன. இதன் பழச்சதைகளிலுள்ள பெக்டின், கரோட்டினாய்டு ஆகியன செல் உற்பத்தியை தூண்டுகின்றன.

முலாம்பழத்தை வெட்டி, உள்ளிருக்கும் சதையை நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நன்னாரி வேர்ப்பட்டையை உரித்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். சூடு ஆறியபின் முலாம்பழச் சதையுடன் கலந்து, தேவையெனில் சீனி சேர்த்து குடித்துவர உடல் குளிர்ச்சியடையும். மென்மையான உறுப்புகளுக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முலாம்பழச் சதையை முழுவதுமாகவோ, பழச்சாறு போல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டுவரலாம். கோடைக்காலத்தில் தோன்றும் உடல் சோர்வுக்கு நன்கு பலனளிக்கும்.

ஆண்கள் தலையில் குடுமி வைத்தலும், பெண்கள் கொண்டை போடுதலும் தமிழினத்தின் பண்பாடு. பெண்கள் விறகடுப்பில் குனிந்து சமையல் செய்யும்பொழுதும், ஆண்கள் காடு, மேடுகளில் அலைந்து வெயிலில் வேலை பார்க்கும்பொழுதும், வெப்பத் தாக்குதலினால் மூளையின் பின் கீழ்ப்பகுதியான முகுளம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு கொண்டையும் குடுமியும் உதவுகிறது. வெப்பத் தாக்குதலினால் முகுளம் பாதிக்கப்பட்டால் மயக்கமும், மரணமும் ஏற்படும்.

சன் ஸ்ட்ரோக் அல்லது ஹீட் ஸ்ட்ரோக் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த வெப்பத் தாக்குதல் வெயிலில் அலைபவர்களுக்கும் நீர் அருந்த முடியாமல் வெப்பத்தில் பணிபுரிபவர்களுக்கும் அடிக்கடி ஏற்படுகிறது. பெண்கள் கொண்டை போடுவதால் அடுப்பு அணலின் வெப்பம் தலையை தாக்காமல் இருப்பதுடன், முடிந்த கூந்தலினால் உணவில் முடி முதலிய பொருட்கள் விழுவதும் தடுக்கப்படுகிறது.

பல நாடுகளுக்கு கால்நடையாகவே நடந்து சென்ற சித்தர்களும், கோயில்களின் கருவறையில் வெப்பமான இடத்தில் பணிபுரியும் அர்ச்சகர்களும் குடுமி போட்டுக் கொண்டதன் ரகசியம் இதுதான். மேற்கத்திய நாகரீகத்தின் அடையாளமாக முடியை இழந்தது மட்டுமின்றி, மூளையையும் இழந்து, சிந்திக்க மறுத்ததால், மூடநம்பிக்கை என நாம் எண்ணிய பல பாரம்பரிய கருத்துக்களின் அறிவியல் பூர்வமான உண்மையை அறியமுடியாமல் போய்விட்டது.

-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.

15 ஆண்டுகளில் டவுண்லோட் டாட் காம் தளம்

இலவசமாக ஏதேனும் சாப்ட்வேர் அப்ளி கேஷன் வேண்டும் என்றால், நாம் அனைவரும் அணுகும் ஓர் இணைய தளம் டவுண்லோட் டாட் காம் (Download.com). பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு அதிகமான எண்ணிக்கையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இந்த தளம் கொண்டுள்ளது. இப்போது பல நிறுவனங்கள் அப்ளிகேஷன் ஸ்டோர் எனத் தொடங்கி தங்கள் தயாரிப்புகள் சார்ந்த அப்ளி கேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை மட்டும் வழங்கி வருகின்றன. ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த தளம் இலவசமாக சாப்ட்வேர் அப்ளிகேஷன்களைத் தரும் சேவையில் தொடங்கப்பட்டு இன்றளவும் வெற்றி கரமாக இயங்கி வருகிறது.
இதன் 15 ஆண்டு கால சேவையில் சில அரிய, ஆர்வமூட்டும் தகவல்களைத் தன் தளத்தில் தெரிவித்துள்ளது இந்த இணையதளம். அவற்றில் சில தகவல்களைப் பார்க்கலாம்.
ஒரு வாரத்தில், எத்தனை அப்ளிகேஷன்கள் டவுண்லோட் செய்யப்பட்டன என்று ஆண்டுக் கணக்கில் தகவல்கள் கிடைக்கின்றனர்.
1996ல் 1,99,701;
2001ல் 52,58,094;
2006ல் 63,55,306;
2011ல் 95,95,161.
2011ஆம் ஆண்டில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம்களில் முதல் இடம் பெற்றிருப்பது இலவச ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம். இந்த புரோகிராம், 2000 ஆண்டில் அறிமுகமானது. இதுவரை 38 கோடியே 43 லட்சத்து 31 ஆயிரத்து 367 முறை டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த இடத்தில் அவாஸ்ட் இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் உள்ளது. இதனை 15 கோடியே 74 லட்சத்து 83 ஆயிரத்து 377 முறை டவுண்லோட் செய்துள்ளனர். சிகிளீனர் 19ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
டவுண்லோட் செய்திட பயன்படுத்தப்பட்ட பிரவுசர்களின் பங்கினைப் பார்க்கையில் எப்படி பிரவுசர் பயன்பாட்டுச் சூழ்நிலை மாறி வருகிறது என அறிய முடிகிறது. 1996ல் நெட்ஸ்கேப் பிரவுசர் 73% கொண்டு முன்னணியில் உள்ளது. அப்போது இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பங்கு 20% மட்டுமே. பயர்பாக்ஸ் எல்லாம் அப்போது இல்லை.
2011 ஆம் ஆண்டில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 51% இடம் கொண்டுள்ளது. நெட்ஸ்கேப் இல்லவே இல்லை. அடுத்த இடத்தில் மொஸில்லா பயர்பாக்ஸ் 21% பங்கு கொண்டுள்ளது. கூகுள் குரோம் 15% இடம் பிடித்துள்ளது.

எக்ஸெல்: ஷார்ட்கட் கீகள்

எப் 1: ஹெல்ப் டாஸ்க் பேன் என்னும் உதவிக் குறிப்புகள் அடங்கிய தொகுப்பைத் திறக்கும்
எப்1 + கண்ட்ரோல்: ஹெல்ப் கட்டத்தைத் திறக்கவும் மூடவும் செய்திடும்.
எப்2 : ஆக்டிவாக இருக்கிற செல்லினுள் உள்ள டெக்ஸ்ட்டை எடிட் செய்திட உதவுகிறது.
எப்2 + ஷிப்ட் : எடிட் செய்திடும் செல்லுக்கான கமெண்ட் பாக்ஸ் எழுத உதவுகிறது.
எப்2 + ஆல்ட்: சேவ் அஸ் டயலாக் பாக்ஸைத் திறக்க உதவுகிறது.
எப்3 + ஷிப்ட்: இன்ஸெர்ட் பங்சன் டயலாக் பாக்ஸைத் திறக்கும்
எப்3 + கண்ட்ரோல்: டிபைன் நேம் டயலாக் பாக்ஸைத் திறக்கும்
எப்3 + கண்ட்ரோல்+ஷிப்ட்: கிரியேட் நேம் டயலாக் பாக்ஸைத் திறக்கும்
எப்4: கடைசியாகக் கொடுத்த கட்டளை யைத் திரும்ப இயக்கும்.
எப்4 +கண்ட்ரோல்: ஒர்க்புக் விண்டோவை மூடும்
எப்4 + ஆல்ட் : எக்ஸெல் தொகுப்பை மூடும்
எப்5 : கோ டு டயலாக் பாக்ஸினைத் திறக்கும்
எப்5 + கண்ட்ரோல் : ஒர்க்புக் விண்டோவின் முதல் அளவில் திரும்பக் கொண்டு வரும்
எப்6 : ஹெல்ப் டாஸ்க் கட்டத்திற்கும் அப்ளிகேஷன் விண்டோவிற்குமாகத் தாவுவதற்கு இந்த கீ.
எப்6 + ஷிப்ட்: பிரிக்கப்பட்ட ஒர்க் ஷீட்டில் முந்தைய கட்டத்திற்குச் செல்லலாம்
எப்6 + கண்ட்ரோல்: ஒன்றிற்கும் மேலான ஒர்க் புக் திறந்திருக்கும் வேளையில் அடுத்த ஒர்க் புக்கிற்குத் தாவும்.
எப்7: ஸ்பெல்லிங் திருத்தும் கட்டம் கிடைக்கும்
எப்7 + கண்ட்ரோல்: ஒர்க் புக் விண்டோ மேக்ஸிமைஸ் ஆகாத போது அதனை நகர்த்தும்
எப்8: எக்ஸ்டென்டட் மோடினை இயக்கும், நிறுத்தும்.
எப்9: திறந்திருக்கும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் உள்ள ஒர்க் ஷீட்டுகளைக் கணக்கிடும்.
எப்9 + ஷிப்ட்: திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒர்க் ஷீட்டினைக் கணக்கிடும்
எப்9 + கண்ட்ரோல் : ஒர்க்புக் விண்டோவினை மினிமைஸ் செய்திடும்.
எப்10: மெனுபாரினைத் தேர்ந்தெடுக்கும். ஓப்பன் மெனு மற்றும் அதன் சப் மெனுவினை ஒரே நேரத்தில் தேர்ந்தெடுக்கும்.
எப்10 + கண்ட்ரோல்: மினிமைஸ் செய்யப்பட்ட விண்டோவினைத் திறக்கும்
எப்11: அப்போது ரேஞ்சில் உள்ள டேட்டாவிற்கான சார்ட்டை உருவாக்கும்.
எப்11 + ஷிப்ட்: புதிய ஒர்க்ஷீட்டைத் தேர்ந்தெடுக்கும்.
எப்11 + ஆல்ட்: விசுவல் பேசிக் எடிட்டர் மற்றும் அதற்கு முன்பு இருந்த ஒர்க்ஷீட்டிற்கு இடையே தாவும்.
எப்11 + ஆல்ட்+ ஷிப்ட்: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப்ட் எடிட்டரைத் திறக்கும்.
எப்12: சேவ் அஸ் டயலாக் பாக்ஸினைத் திறக்கும்
எப்12 + ஷிப்ட்: செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக்கினை சேவ் செய்திடும்
எப்12 + கண்ட்ரோல்: ஓப்பன் டயலாக் பாக்ஸினைத் திறந்திடும்.
எப்12 + கண்ட்ரோல் + ஷிப்ட்: பிரிண்ட் டயலாக் பாக்ஸினைத் திறந்திடும்.