Daily Archives: நவம்பர் 4th, 2011

‘ தவறான முன்னுதாரணமாக கூடாது’ – நீதிபதிகள் – ஜெ, மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடியானது

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற ஜெ., கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. கோர்ட் விசாரணைக்கு காலவரம்பு எதுவும் விதிக்க முடியாது என்றும் தொடர்ந்து ஆஜராகி விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இன்றைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். விசாரணைக்கு தடை விதித்து நாங்கள் தவறான முன்னுதாரணமாக மாற முடியாது , ஆஜராகும் நாள் வேண்டுமானால் மாற்றிக்கொள்ளலாம். என்றும் கூறிவிட்டனர்.

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அனைத்து சாட்சிகளையும் விசாரித்து முடித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா வலியுறுத்தினார்.

இதையடுத்து, ஜெயலலிதா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், ஜெயலலிதா தரப்பில், வீடியோ கான்பரன்ஸ் அல்லது ஸ்டேட்மென்ட் மூலம் பதிலளிப்பதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை கோர்ட் நிராகரித்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் சென்ற ஜெயலலிதாவுக்கு, அக்., 20ம் தேதி கண்டிப்பாக பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும். “இசட்’ பிரிவு பாதுகாப்பில் இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில் 20 மற்றும் 21 ம் தேதிகளில் விசாரணைக்கு வந்தது. 2 நாட்களில் ஆஜரான ஜெ.,விடம் 567 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் அனைத்தும் நகைள் மற்றும சொத்த விவரங்கள் தொடர்பானவை. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்த நாளில் அவர் கோர்ட்டில் இருக்க வேண்டியதாயிற்று. மீண்டும் வரும் 8ம் தேதி ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார் .

இந்த விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஜெ., தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதீபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் மனுவை தள்ளுபடி செய்து விட்டனர். மேலும் விசாரணை முடியும் வரை ஜெ., ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், அத்துடன் இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இருப்பதால் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களுடைய உத்தரவில் கூறியுள்ளனர். முதல்வருக்கு வசதியான நாள் எதுவோ அதனை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளட்டும். அதே நேரத்தில் ஆஜராகாமல் எழுத்து மூலம் பதில் அளிக்கிறேன் என்பதை ஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்களுடைய உத்தரவில் கூறினர்.

4வது முறையாக கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிப்பு : பரபரப்பு தீர்ப்பு வழங்கியது டில்லி கோர்ட்

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில், கனிமொழிக்கு எப்படியும் ஜாமின் கிடைத்து விடும் என்ற தி.மு.க.,வினரின் நம்பிக்கை, நேற்று வீணானது. “”கனிமொழி உட்பட, சிலரின் ஜாமின் மனுக்களை, சி.பி.ஐ., எதிர்க்கவில்லை என்பதை, பெரிய அளவில் பொருட்படுத்த முடியாது. மேலும், பெண் என்பதால், கனிமொழிக்கு சலுகை காட்ட முடியாது,” எனக் கூறி, கனிமொழி உட்பட, எட்டு பேரின் ஜாமின் மனுக்களை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஷைனி, தள்ளுபடி செய்தார். இத்துடன் கனிமொழியின் ஜாமின் மனு நான்காவது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனால், கனிமொழி தரப்பில், அடுத்த வாரம், டில்லி ஐகோர்ட்டில், ஜாமின் கேட்டு மேல்முறையீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கனிமொழி மற்றும் ஏழு பேரின் ஜாமின் மனு, டில்லி பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், நீதிபதி ஷைனியால் நேற்று நிராகரிக்கப்பட்டது.

நீதிபதியின் தீர்ப்பு விவரம்: கனிமொழியும் மற்றவர்களும், ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் உள்ள காரணங்கள், முழுமையாக ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. இவ்வழக்கு சரியான வகையில் சென்று கொண்டிருக்கிறது. ஜாமின் கோருபவர்கள் அனைவரும் தற்போது சிறையில் உள்ளனர். இவர்களது, ஆறு மாத சிறை வாழ்க்கையில், எந்த தவறும் செய்யவில்லை. இவர்களின் நடத்தை திருப்திகரமாகவே உள்ளது. தடயங்களை அழிக்கவோ, சாட்சிகளை கலைக்கவோ முயற்சிக்கவில்லை. ஆனால், இந்த வழக்கு, பிற வழக்கமான வழக்குகளைப் போன்றது அல்ல. எனவே, இவ்வழக்கின் சாட்சிகள் அனைவரும், திடீர் நெருக்கடிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆட்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நெருக்கடி ஏற்பட்டால், வழக்கின் போக்கில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்பட்டு, புதிய பின்விளைவுகள் ஏற்பட்டு பாதிப்பை உண்டாக்கும்.

உறவினர்கள், நண்பர்கள்: ஜாமின் கோரும் கனிமொழியும், சரத்குமாரும் தங்கள் நிறுவனத்திற்கு அரசு பணத்தை திருப்பி விட்டுள்ளனர். வழக்கின் சாட்சிகளாக இருப்பவர்கள் எல்லாருமே இவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கலைஞர், “டிவி’யில், இவர்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களாக உள்ளனர்.
எனவே, கனிமொழியையும், சரத்குமாரையும் ஜாமினில் விட்டால், இவர்கள் மூலம் சாட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படும். சாட்சிகளுக்கு அச்சம் ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை. வழக்கு விசாரணை ஆரம்பித்த பிறகும்கூட, கோர்ட் நடவடிக்கைகளுக்கும் சாட்சிகளுக்கும் நெருக்கடி ஏற்படலாம். எனவே, இவர்களுக்கு ஜாமின் வழங்க வேண்டுமென கோருவதில் நியாயம் இல்லை.

சி.பி.ஐ.,க்கு குட்டு: சி.பி.ஐ., வழக்கறிஞர் லலித் வாதாடும் போது, ஒரு கருத்தை முன்வைத்தார். “கனிமொழி, சரத்குமார், கரீம் மொரானி ஆகியோர், இந்த வழக்கில் சற்று வித்தியாசமாக தொடர்புடையவர்கள். மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டிற்கும், இவர்கள் மீதான குற்றச்சாட்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன என்று கூறினார்.
சி.பி.ஐ., வழக்கறிஞரின் இந்த வாதத்தை கோர்ட் ஒப்புக் கொள்ள தயார் இல்லை. அதேபோல, மற்றவர்களோடு ஒப்பிடுகையில், ஜாமின் கோரும் இந்த எட்டு பேருக்கும் குற்றம் நிரூபணம் ஆனாலுமே கூட, ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். எனவே, மற்றவர்களோடு இவர்களையும் ஒப்பிட முடியாது. வழக்கின் தன்மை, சூழ்நிலை அடிப்படையில் இவர்கள் மாறுபட்டவர்கள் என சி.பி.ஐ., கூறுகிறது; இதுவும் தவறு. இவ்வழக்கில் தொடர்புடைய எவருக்கும், எந்த வேறுபாட்டையும் கோர்ட் கருதவில்லை. பிரதான குற்றப்பத்திரிகையில் பெயர் இடம்பெறவில்லை, துணை குற்றப் பத்திரிகையில் பெயர் இடம்பெற்றுள்ளது என்ற வாதங்கள் எல்லாம் சரியல்ல. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனைவரும், சட்டத்தின் முன் சமமானவர்களே. இவர்களை, சட்டம் ஒரே பார்வை கொண்டுதான் பார்க்கிறது. இதில், வேறுபடுத்தி பார்க்கும்படி கூறுவதையும் ஏற்க முடியாது.

எல்லாருக்கும் தான் 409: குற்றம் சாட்டப்பட்டிருக்கும், 17 பேர் மீதும், பிரிவு, 409 உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் பொருந்தும். பிரிவு, 409ன்படி, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை என்பது தவறு. அது, 10 ஆண்டுகளாகவும் இருக்கலாம் அல்லது மேலும் அதிகரித்து, ஆயுள் தண்டனை வரையும் போகலாம்.
கனிமொழியும், சரத்குமாரும் தங்கள் நிறுவனத்திற்கு, 200 கோடி ரூபாய் வரை முறைகேடாக பெற்றுள்ளனர். அரசுக்கு சொந்தமான பணத்தை தங்கள் சொந்த காரியங்களுக்காக பயன்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துள்ளனர். கிரிமினல் சதி மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய குற்றங்களை இவர்கள் செய்துள்ளதாக கோர்ட் கருதுகிறது. எனவே, இவர்களது ஜாமின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்படும் முன்னரே, முன் ஜாமின் கோரி கனிமொழி மனுத்தாக்கல் செய்தார். அது நிராகரிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பின், சிறப்புக் கோர்ட்டிலும், பின்னர் டில்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டிலும் ஜாமின் மனு தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சமீபத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, நான்காவது முறையான மனுத்தாக்கல் செய்தார். அதுவும் நேற்று நிராகரிக்கப்பட்டு விட்டது.

“பெண் என்பதற்காக சலுகை காட்ட முடியாது’ : கனிமொழி தன் ஜாமின் மனுவில், தான் ஒரு பெண் என்பதை கருத்தில் கொண்டும், ஒரு மகனுக்கு தாயாக இருந்து ஆற்ற வேண்டிய கடமைகளை செய்தாக வேண்டுமென்ற அடிப்படையிலும், தனக்கு ஜாமின் அளிக்க வேண்டுமென கோரியிருந்தார். அதேபோல, கரீம் மொரானி என்பவர், தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டுமென கோரியிருந்தார். ஆனால், ஷைனியின் நேற்றைய அதிரடி தீர்ப்பு, வேறுமாதிரியாக இருந்தது. “கனிமொழியை வெறுமனே ஒரு பெண் என்று மட்டும் பார்க்க முடியாது. அவர் சாதாரண வகுப்பைச் சேர்ந்த பெண் அல்ல. சமூகத்தின் மிக மேல்மட்டத்தில், மிகப்பெரிய அந்தஸ்துடன் வாசிக்கும் பெண்மணி. அவர், ராஜ்யசபா எம்.பி.,யாகவும் இருப்பவர். “இந்த நாட்டின் சட்டம், சமூகத்தின் சாதாரண பெண்ணுக்கு காட்டும் ஜாமின் என்ற அடிப்படை சலுகையை, கனிமொழியும் கேட்கக் கூடாது. அவ்வாறு கனிமொழி கேட்பது, கற்பனைக்கும் எட்டாத விஷயமாக தெரிகிறது. எனவே, இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. “அதேபோல, கரீம் மொரானியின் மருத்துவ சிகிச்சை தகவல்களை நான் முழுவதும் படித்துப் பார்த்தேன். சிறையில் இருப்பதாலேயே, அவருக்கு மேலும் உடல்நலக்குறைவு ஏற்படும் என்ற வாதத்தை, ஏற்க முடியாது. அவருக்கும் ஜாமின் வழங்க இயலாது’ என, கூறியுள்ளார்.

நீதிபதி ஷைனி பாட்டியாலா சிறப்பு கோர்ட் :””கனிமொழி உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்குவதை ஆட்சேபிக்க போவதில்லை என, சி.பி.ஐ., கூறுகிறது. இவ்வாறு கூறுவதாலேயே, கனிமொழிக்கு ஜாமினை வழங்க முடியாது. சி.பி.ஐ.,யின் கருத்தை ஓரளவுக்குத்தான் எடுத்துக் கொள்ள முடியும். அதையே வேதவாக்காக கோர்ட் கருதாது. ஜாமின் கோருபவர்கள் புரிந்துள்ள குற்றங்கள், மிகவும் தீவிரமானவை. வழக்கின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, இவர்கள் செய்துள்ள குற்றம், ஆழமானது என்றே, கோர்ட் கருதுகிறது.

நன்றி-தினமலர்

மழைக் காலத்தில் என்னென்ன சாப்பிடலாம்…

மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும், பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம். எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.

* மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.
* மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
* பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது;
ஆனால், மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.
* நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
* மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.
* இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.
* நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை,
மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.
* கண்டிப்பாக மழைக் காலத்தில், நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச்
சாப்பிடுவது நல்லது.
* இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.
* மழை சீசனில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும்.
* மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும், பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம். எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, மற்ற பழங்களையும் சேர்த்து
சாப்பிடலாம்.
* சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் சி சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. ஆனால், ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது. சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.
* மழை சீசனில், கீரைகள் அதிகம் சாப்பிடா விட்டா லும் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால், கீரைகளை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
* மழை சீசனில், எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு, தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.
* அசைவ உணவாக, மீன், முட்டை, கறி, சிக்கன் என்று சாப்பிடலாம்; ஆனால், அவை பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மழைக் காலங்களில் கடைகளுக்குப் போய் வாங்குபவர்கள் குறைவு. அதனால், மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க வாய்ப்பு உண்டு.
* மழை சீசனில், எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது, பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா உருண்டை, இட்லி சாம்பார், பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம். நாம் தினமும் சாப்பிடும் உணவையே, சற்று சூடாகச் சாப்பிட்டால் போதும்.

உணவே மருந்து!

*நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும்

அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

*தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக

இருக்கும்.

*மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம்,

பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

*ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை

நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

*பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம்

உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

*சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

*பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம்,

கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

*சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

*வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை,

எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

*பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத்

தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

*சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

*சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய

பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

*பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

*அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து

விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

*தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

*பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால்

போதும். கல்லும் கரைந்துவிடும்.

*கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள்,

வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

நன்றி-தினகரன்

இந்திய நறுமண பொருள்கள் புதிய சிகிச்சை முறைகள் உருவாக வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்

இந்திய நறுமண பொருள்கள் மருத்துவ ரீதியாக எவ்வாறு பயன்படுகிறது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. நறுமண பொருள்களில் மஞ்சள் பற்றிய ஆய்வில், குர்குமின் என்ற பொருள் அதற்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது என்றும் மேலும் டிரைகிளிசரைடு என்ற வேதி பொருளின் தாக்கத்தை வெகுவாக குறைக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது. உடம்பில் எலும்பு மற்றும் தசைப்பகுதிகளை இணைக்கும் டென்டன் என்னும் திசு வளர்ப்பில் குர்குமின் செயல்பாடு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் இணைப்புகளில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி ஆகியவை வெகுவாக குறைகின்றது. இதனால் ஆர்த்ரிடிஸ், முடக்குவாதம் மேலும் புற்றுநோய் ஆகியவற்றிற்கும் புதிய சிகிச்சை முறைகள் தோன்ற வழிவகுக்கும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பென் மாநிலத்தில் நடைபெற்ற மற்றொரு ஆய்வில், நறுமண பொருள்களான ரோஸ்மேரி, ஆரிகேனோ, இலவங்கம், மஞ்சள், கருமிளகு, கிராம்பு, வெள்ளை பூண்டு பொடி மற்றும் பப்ரிகா ஆகியவை கலந்த உணவு ஒரு பிரிவினருக்கு பரிமாறப்பட்டது. மேலும் மற்றொரு பிரிவினருக்கு நறுமண பொருள்கள் இல்லாத உணவு தரப்பட்டது. இதில், நறுமண பொருள்கள் இரத்தத்தில் மேற்கொள்ளும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், டிரைகிளிசரைடு செயல்பாடு 30 சதவீதம் குறைந்ததும், 13 சதவீதம் ஆன்ட்டியாக்சிடன்ட் செயல்பாடு அதிகரித்ததும் மேலும் தேவையற்ற நிலையில் இன்சுலின் பயன்பாடு 20 சதவீதம் குறைக்கப்பட்டதும் தெரிய வந்தது. இவ்விரு ஆய்வுகளும் இந்திய நறுமண பொருள்கள், மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்பதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.