Daily Archives: நவம்பர் 7th, 2011

கணினியைத் தொடாமல் இயக்கும் குரங்குகள்

ஒரு கம்ப்யூட்டர் கேம் கேரக்டரின் கரங்களை தங்களின் மூளைச் சக்தியால் நகர்த்துவதற்குக் குரங்குகளுக்கு கற்பித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

இதனால் என்ன பயன்? உடலின் குறிப்பிட்ட உறுப்பு கள் செயலிழந்தவர்களுக்கு இந்த விஷயம் உதவும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அமெரிக்காவின் துர்ஹாமில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் மையத்தைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள், கணினி விளையாட்டின் `விர்ச்சுவல்’ கரத்தை இரு குரங்குகள் தங்கள் மூளைச் சக்தியால் நகர்த்தக் கற்றுக் கொடுத்துள்ளனர்.

இந்தக் குரங்குகள் தங்கள் மூளையின் மின் செயல்பாட்டால், திரையில் காட்டப்பட்ட `விர்ச்சுவல்’ குரங்கின் கரங்களை இயக்கின. இவை உண்மையில் தமது உடம்பை ஒரு அங்குலம் கூட அசைக்கவில்லை. மேலும் இக்குரங்குகளால் `விர்ச்சுவல்’ பொருட்களின் தன்மையையும் உணர முடிந்திருக்கிறது. கணினியில் இருந்து வந்த நுண்ணிய மின் சமிக்ஞைகள் மூலம் அவ்வாறு குரங்குகள் உணர்ந்திருக்கின்றன.

இந்தக் கண்டுபிடிப்பு, உடல் உறுப்புச் செயலிழந்தவர்கள் அணிந்து பயன்படுத்தக்கூடிய வெளிப்புற ரோபோட்டிக் அமைப்புகளை உருவாக்குவதற்கு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அவர்கள் தமது மூளைச் சக்தியால் ரோபோட்டிக் அமைப்பை நகர்த்தவும், சுற்றுப்புற உலகத்தை உணரவும் முடியுமாம்.

“பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் கை, கால்களை அசைத்து நடக்க முடியும். அதுமட்டுமல்ல, அவர்கள் கைகளில் வைக்கப்படும் பொருட்களின் தன்மையை உணர முடியும்” என்று ஆய்வுக்குத் தலைமை வகித்தவரான பேராசிரியர் மிகேல் நிகோலிலிஸ் கூறுகிறார்.

பெண் போலீசாருக்கு ரோலர் ஸ்கேட்டிங்… திருட்டு கும்பலை பிடிக்க சீனாவில் புதுமை!

சீனாவின் சிசூவான் மாகாணத்தில் உள்ள செங்க்டு நகரம், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடம். இங்குள்ள தியானமென் சதுக்கத்தில், தினம்தோறும் இசை, நடனப் போட்டிகள் நடக்கும். பல வண்ண ஒளிவீசக் கூடிய, “லேசர்’ கண்காட்சிகள், இங்கு மிகவும் பிரசித்தம். இவற்றை காண்பதற்காக, உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவர்.
இவர்களிடம் இருந்து பணத்தை, “அபேஸ்’ செய்வதற்காக, பிக்பாக்கெட் கும்பலும், இங்கு அதிகம் வரும். இவர்களால் சுற்றுலா பயணிகள் படும்பாடு, கொஞ்சம், நஞ்சமல்ல. பணத்தை திருடி விட்டு, மின்னல் வேகத்தில், அங்கிருந்து ஓடிச் சென்று விடுவதில், கில்லாடிகள் இவர்கள்.
இந்த பிக்பாக்கெட் கும்பலை பிடிப்பதற்காக, சீன அரசாங்கம், தற்போது, அதிரடி திட்டம் ஒன்றை செயல்படுத்தியுள்ளது. இதன்படி, சிசூவான் மாகாண போலீசாரில், நன்கு பயிற்சி பெற்ற பெண் போலீசாரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு, “ரோலர் ஸ்கேட்டிங்’ (காலில் மாட்டிக் கொண்டு, வேகமாக செல்ல உதவும் உருளை கருவி) வழங்கப் பட்டுள்ளது.
இந்த ரோலர் ஸ்கேட்டிங் உதவியுடன், மின்னல் வேகத்தில் தப்பிச் செல்லும் திருடர்களை, துரத்திச் சென்று பிடித்து விடுகின்றனர், பெண் போலீசார். இதன் காரணமாக, தற்போது, திருட்டு கும்பலின் அடாவடி குறையத் துவங்கியுள்ளதாக, நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர், சுற்றுலா பயணிகள்.
போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில், அதிக வாகனங்களை இயக்கினால், சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும். இதனால் தான், ரோலர் ஸ்கேட் டிங்கை பயன்படுத்து கிறோம். எங்களின் இந்த திட்டம், புதுமையாக இருப்பதுடன், நல்ல பயனையும் தந் துள்ளது…’ என்கின்றனர்.

நாட்டின் வளர்ச்சிக்கு தேவை கூடங்குளம் அணுமின் நிலையம்

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாடு எல்லாத் துறைகளிலும் ஒரு படிக்கு மேல் இருக்க வேண்டும் என்பது தான் நம் ஒவ்வொருவரின் தீராத ஆவல், விருப்பம், எதிர்பார்ப்பு எல்லாம். எல்லோரது ஒத்துழைப்பும் இருந்தால் தான் இது போன்ற சாதனைகளைப் படைக்க முடியும்.

தகவல் தொழில் நுட்பத்தில் அமெரிக்காவையே அசைத்துப் பார்க்கும் நாம், அத்தொழில் நுட்பம் மேலும், தங்கு தடையின்றி தொடர, மின்சாரத் தேவையும் அவசியம் என்பதை உணர வேண்டும். மின் உற்பத்திக்கு தேவைப்படும் பொருட்கள் பற்றாக் குறையாக உள்ள இக்காலகட்டத்தில், அணுசக்தி மூலம் இதனை சரிக்கட்ட முடியும் என்பது விஞ்ஞானிகளின் கூற்று. நல்ல வேளையாக, தமிழகத்தில், கூடங்குளத்தில் அமையவுள்ள அணுமின் நிலையம் மூலம், நமது மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்து கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதனை, நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அணுசக்தி என்றாலே ஏதோ ஒருவித பயம் பலரிடம் குடிகொண்டுள்ளது. ஆனால், எதிர் நீச்சல் போட்டால்தான் வாழ்க்கையில் முன்னேறமுடியும் என்பதை நம்பும் நாம், அதே துணிச்சலுடன் புதிய முயற்சிகளையும் வரவேற்க வேண்டும். பாதுகாப்பான அணு மின் நிலையங்களால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று பலரும் கூறியுள்ள நிலையில், உண்மை, நேர்மை, தூய்மை ஆகியவற்றின் வடிவமான நம் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் இதனையே வலியுறுத்தியுள்ளார். அணுமின் நிலையம் மற்றும் அதுதொடர்பாக அவரது கருத்துக்கள் இதோ….

தமிழகத்திலே உள்ள கூடங்குளத்தில் அமைந்துள்ள 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டி, அணுஉலை செயல்பட தயாராகிக்கொண்டு இருக்கும் நிலையில் அணுசக்தியைப்பற்றியும், அதன் விளைவுகளைப்பற்றியும் நாட்டில் சில விவாதம் நடந்து வரும் இவ்வேளையில், சில உண்மைகளையும், அணுசக்தியின்
நன்மைகளைப் பற்றியும், இயற்கைச்சீற்றங்களினால் அதற்கு ஏற்படும் விளைவுகளைப்பற்றியும், அணுஉலைகளின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு போன்ற விஷயங்களை அறிவார்ந்த முறையில் அணுகி, அதைப் பற்றி ஒரு தெளிவான கருத்தை என் அனுபவத்தோடு, உலக அனுபவத்துடன் ஆராய்ந்து அதை நம் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திருநெல்வேலி மாவட்டத்து மக்கள் அறிவார்ந்த மக்கள், அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, அங்கேயே படித்து, அங்கிருந்து மட்டுமல்லாமல் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தங்களது அறிவாற்றலால் அனைத்து மக்களையும், நாட்டையும் வளப்படுத்தும் மக்கள் தான் திருநெல்வேலியை சேர்ந்த மக்கள். அதைப்போலவே தமிழகம் இன்றைக்கு ஒரு அறிவார்ந்த நிலையில் வளர்ந்து, மாநிலத்தை வளப்படுத்தி, நாட்டை வளப்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக பல்வேறு திறமைகளில் சிறப்பான மாநிலமாக தமிழகம் திகழ வேண்டிய வளர்ச்சிப்பாதையில் உள்ளது. அப்படிப்பட்ட தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற ஏதுவான சூழ்நிலை நிலவுகிறது.

அதற்கு முக்கிய அவசியமான கட்டமைப்பு என்ன? அதுதான் மின்சாரம், மின்சாரம், மின்சாரம். எப்படிப்பட்ட மின்சாரம், மக்களை பாதிக்காத, ஆபத்தில்லாத அணுமின்சார உற்பத்திதான் அதன் முக்கிய லட்சியம். இந்தியாவிலேயே ஒரே இடத்திலே 2000 மெகாவாட் மின்உற்பத்தி, இன்னும் சில ஆண்டுகளில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி அணுமின்சாரம் மூலம் நடைபெற இருக்கிறது என்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய செய்தி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒரு அரும் பெரும் செய்தி, இந்தியாவில் இது முதன் முறையாக நடைபெற இருக்கிறது.கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய் முதலீடு திருநெல்வேலி மாவட்டத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. அது உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீத மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்க இருக்கிறது. எனவே வளமான திருநெல்வேலி மாவட்டம், வளமான கூடங்குளம் பகுதி, வலிமையான தமிழகத்தை நாம் அடையவேண்டும். அப்படிப்பட்ட லட்சியத்தை நோக்கி நாம் செல்லும் போது, ஜனநாயக நாட்டில் அணுசக்தி மின்சார உற்பத்தி பற்றி இயற்கையாக பலகருத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதாவது அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு உருவாகியுள்ள எதிர்ப்பை மூன்று விதமாக பார்க்கலாம். ஒன்று கூடங்குளம் பகுதியில் வாழும் மக்களுக்கே ஏற்பட்டுள்ள உண்மையான கேள்விகள், இரண்டாவது பூகோள – அரசியல் சக்திகளின் வர்த்தகப் போட்டிகளின் காரணமாக விளைந்த விளைவு (Dynamics of Geo&political and Market forces),, நாமல்ல நாடுதான் நம்மை விட முக்கியம் என்ற ஒரு அரிய கருத்தை அறிய முடியாதவர்களின் தாக்கம். முதலாவதாக மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது நியாயமான சந்தேகங்களை வகைப்படுத்தி, அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியம்.

மக்களின் மற்றும் மக்களின் கருத்தால் எதிரொலிக்கும் கேள்விகளை தெளிவாக்கி அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது இரண்டாவது முக்கியம். இந்தியாவின் முன்னேற்றத்தை விரும்பாத, வளர்ச்சியை பிடிக்காதவர்களின் முயற்சியை பற்றியும், அவர்களின் அவதூறு பிரசாரங்களைப்பற்றியும் மத்திய, மாநில அரசுகள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எனவே முதலில் மக்களின் கேள்விகள் என்ன? அவர்களின் நியாயமான பயம் என்ன? என்பதை பார்ப் போம்.
1.ஜப்பான் புகுஸிமா அணுஉலை எரிபொருள் சேமிப்பு கிடங்கில் சுனாமியால் கடல் நீர் சென்றதால், ஏற்பட்ட மின்சார தடையால் நிகழ்ந்த விபத்தை தொலைக்காட்சியில் பார்த்த மக்களுக்கு நியாய மாக ஏற்பட்ட பயம் தான் முதல் காரணம்.
2.இயற்கை சீற்றங்களினால் அணு உலை விபத்து ஏற்பட்டால், அதனால் கதிரியக்க வீச்சு ஏற்பட்டால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் தைராய்டு கோளாறுகள், நுரையீரல் புற்று நோய், மலட்டுத்தன்மை போன்றவை வரும் என்று மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
3.அணுசக்தி கழிவுகளை சேமித்து வைப்பது ஆபத்து, அணுசக்தி கழிவுகளை கடலில் கலக்கப்போகிறார்கள், அணுசக்தியால் உருவாகும் வெப்பத்தினால் உருவாகும் நீராவியினாலும், அணுசக்தி கழிவை குளிர்விக்க பயன் படும் நீரை மீண்டும் கடலில் கலந்தால் அதனால் மீன் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும். 500 மீட்டருக்கு மீன் பிடித்தலுக்கு தடை விதிக்கப்படும், அதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், என்ற பயம் நிலவுகிறது.
4.அணு உலையில் எரிபொருள் மாதிரியை இரவில் நிரப்பும் பொழுது வழக்கமாக ஏற்படும் சத்தத்தால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு விட்டது.
5.அணு உலையில் இயற்கைச் சீற்றத்தாலோ, கசிவாலோ விபத்து ஏற்பட்டால், உடனடியாக அப்பகுதி மக்கள், 90 கிலோ மீட்டர் தூரம் 2 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்
படவேண்டும் என்று சொல்கிறார்கள், சோதனை ஓட்டம் செய்து பார்க்கும் போது மக்களை உடனடியாக வெளியேற சொன்னதனால் மக்களுக்கு பயம் ஏற்பட்டு விட்டது. ஒருவேளை விபத்து நேர்ந்தால், சரியான சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் , மக்கள் கதிர்வீச்சு ஆபத்து ஏற்பட்டால் தப்புவதற்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை, மக்கள் எப்படி தப்ப முடியும்.
6.10,000 பேருக்கு வேலை வாய்ப்பு செய்து தரப்படும் என்று கூறினார்கள், ஆனால் அந்த பகுதியை சேர்ந்த 35 பேருக்குத்தான் வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது, ஏன் வேலை வாய்ப்பை அளிக்கவில்லை
7.பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வரும் என்று சொன்னார்கள், கடல் நீரை சுத்திகரித்து நல்ல தண்ணீர் கிடைக்கும் என்று சொன்னார்கள், இரண்டும் கிடைக்கவில்லை.

இது போன்று பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளன, சரியான கேள்விகளும் உண்டு, மிகைப்படுத்தப்பட்ட கேள்விகளும் உண்டு ஆனால் இந்த கேள்விகளுக்கு சரியான பதிலை தரவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. மக்களின் மனதில் பய உணர்வை ஏற்படுத்திவிட்டு எவ்வித விஞ்ஞான முன்னேற்றத்தையும் மக்களுக்கான முன்னேற்றத்திற்கான வழியாக ஏறெடுத்துச்செல்ல முடியாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.அணுசக்தி துறையோடு எனக்கு இருந்த 20 வருட அனுபவத்தின் காரணமாகவும், அணுசக்தி விஞ்ஞானிகளோடு எனக்கு இருந்த நெருக்கமான தொடர்பாலும், சமீப காலங்களில் இந்தியாவிலும், அமெ ரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் அணுசக்தி, துறையை சேர்ந்த ஆராய்ச்சி நிலையங்களுக்கு சென்று அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகளுடனும், தொழில் நுட்ப வல்லுனர்களுடனும் கலந்துரையாடிய அனுபவத்தாலும், கடந்த 4 வருடங்களாக இந்திய கடற்கரை ஓரம் அமைந்துள்ள எல்லா அணுதி உற்பத்தி நிலையங்களுக்கும் சென்று, அந்த அணுசக்தி நிலையங்களின் உற்பத்தி செயல் திறனை பற்றியும் அதன் பாதுகாப்பு அம்சங்களை பற்றியும் மிகவும் விரிவாக ஆராய்ந்துள்ளேன்.

அதுமட்டுமல்ல கூடங்குளம் அணுமின் நிலையத்தையும் பார்வையிட்டு அதன் பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் பல்வேறு காரணிகளைப்பற்றியும் அதாவது கடலோரத்தில் உள்ள இந்திய அணுமின் சக்தி நிலையங்களுக்கும் மற்ற நாடுகளில் உள்ள அணுமின் நிலையங்களுக்கும் என்ன வித்தியாசம், அதன் ஸ்திர தன்மை, பாதுகாப்பு தன்மை பற்றியும், இயற்கை பேரிடர் மற்றும் மனித தவறின் மூலம் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதை எப்படி சரி செய்ய முடியும் அதன் தாக்கத்தை சமன் செய்ய செய்யப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் பற்றியும், செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளேன். அத்துடன் என்னுடைய இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணத்தின் போதும், ஆராய்ச்சி நிலையங்களிலும், கல்வி போதிக்கும் என்னுடைய பணி மூலமாகவும் செய்த ஆராய்ச்சிகளின் விளைவாக வும், அணுசக்தியைப்பற்றியும், எரிசக்தி சுதந்திரத்தைப்பற்றிய அறிவியல் சார்ந்த விளக்கங்களையும் ஆராய்ச்சி விளக்கங்களை விரிவாக விவாதித்தோம். அதன் விளைவாக நான் எனது நண்பர் தி. பொன்ராஜ் அவர்களுடன் சேர்ந்து இந்தியா

2030க்குள் எரிசக்தி சுதந்திரம் பெற எந்த அளவிற்கு அணுசக்தி முக்கியம் என்பதை பல மாதங்கள், தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்ததன் பயனாக இந்த ஆராய்ச்சி கட்டுரையை ஆய்வின் முடிவுகளின் விளக்கத்தை மக்களுக்கு தெரிவிக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த ஆய்வின் முடிவுகளையும், என்னுடைய கருத்தையும் பார்ப்பதற்கு முன்பாக உங்களுடன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அதாவது, கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. காட்டாற்று வெள்ளமென வரும் அகண்ட காவிரியை தடுத்து நிறுத்த அந்தக்காலத்து தொழில் நுட்பத்தை பயன் படுத்தி முதல் நூற்றாண்டில் (1Century AD) கல்லணை கட்டினானே கரிகாலன். எப்படி முடிந்தது அவனால், வெள்ளமென வரும் காவிரியால் கல்லணையை உடைந்து மக்களின் பேரழிவுக்கு காரணமாகிவிடும் என்று நினைத்திருந்தாலோ, பூகம்பத்தால் அணை உடைந்து விடும் என்று கரிகாலன் நினைத்திருந்தாலோ கல்லணை கட்டியிருக்க முடியாது. ஆயிரம் ஆண்டுகளாகியும் நம் கண்முன்னே சாட்சியாக இருக்கிறதே ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில். சுனாமியினால் கடல் கொண்டு அழிந்த பூம்புகார் போன்று, பூகம்பத்தின் காரணமாக, பெரிய கோவில் அழிந்து விடும் என்று நினைத்திருந்தால், தமிழர்களின் மாபெரும் கட்டிட கலையை உலகிற்கே பறைசாற்றும் விதமாக, எடுத்துக்காட்டாக இருக்கும் பெரிய கோவில் நமக்கு கிடைத்திருக்குமா.ஹோமி பாபா முடியாது என்று நினைத்திருந்தால், கதிரியக்கம் மக்களைப் பாதித்திருக்கும் என்று நினைத்திருந்தால், இன்றைக்கு 40 ஆண்டுகளாக பாதுகாப்பான அணுமின்சாரத்தை 4700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்க முடியாது, மருத்துவத்துறையிலே கேன்சர் நோயால் அவதிப்படும் மக்களுக்கு ஹீமோதெரெபி அளித்திருக்க முடியாது, விவசாயத்தின் விளைபொருளின் உற்பத்தியை பெருக்கி இருக்க முடியாது. உலக நாடுகளே இந்தியாவை மதிக்கும் வண்ணம் அணுசக்தி கொண்ட ஒரு வலிமையான நாடாக மாற்றியிருக்க முடியாது. எனவே முடியாது என்று நினைத்திருந்தால், ஆபத்து என்று பயந்திருந்தால் எதுவும் சாத்தியப்பட்டிருக்காது.

ஏன் கதிரியக்கத்தை முதன் முதலாக பிட்ச் பிளன்ட் (two uranium minerals, pitchblende and torbernite (also known as chalcolite).) என்ற உலோகத்தை தன் தலையில் சுமந்து அதை பற்றி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தாரே மேடம் மேரி க்யூரி. தனக்கே ஆபத்து அதனால் வரும் என்று தெரிந்தும் ஆராய்ச்சியின் நல்ல பயன் உலகத்திற்கு செல்ல வேண்டும் என்று, தொடர்ந்து ஆராய்ச்சி செய்து முதன் முதலாக கதிர்வீச்சிற்கு வேதியலிலும், கதிர்இயக்கத்திற்கு இயற்பியலிலும் 2 நோபல் பரிசைப்பெற்று, அந்த கதிரியக்கத்தாலேயே தன் இன்னுயிரை இழந்தாரே. அதுவல்லவா தியாகம்.

தன்னுயிரை இழந்து மண்ணுயிரை காத்த அன்னையல்லவா மேடம் க்யூரி. இன்றைக்கு அந்த கதிரியக்கத்தால் எத்தனை கேன்சர் நோயாளிகள் ஹீமோதெரபி மூலம் குணப்படுத்தப்படுகிறார்கள், விவசாயத்திற்கு தேவையான விதைகளை கதிரியக்கத்தினை பயன்படுத்தி அதன் விளைச்சலை அதிகரிக்க முடிகிறதே. இன்றைக்கு அணுசக்தியினால் உலகம் முழுதும் 4 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறதே. அதே போல் அணுசக்தியில் யாருக்கும் நாம் சளைத்தவர்கள் இல்லை என்று சாதித்து காட்டினோமே, அந்த வழியில் நண்பர்களே முடியாது என்று எதுவும் இல்லை.

முடியாது, ஆபத்து, பயம் என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட இயலாதவர்களின் கூட்டத்தால், உபதேசத்தால் வரலாறு படைக்கப்பட வில்லை. வெறும் கூட்டத்தால் மாற்றத்தை கொண்டுவர முடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது, மாற்றம் இந்த உலகிலே வந்திருக்கிறது. இந்தியா வல்லரசாகும் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது, வல்லரசு என்ற சித்தாந்தம் என்றோ போய்விட்டது. 2020க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பது தான் நம் மக்களின் லட்சியம்.

பெயர்கள் சூட்டிய சூழல்

ட்விட்டர் (Twitter): சிறிய பறவைகள் “குக்கூ’ எனத் தங்களுக்குள் கூவி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். ஜாக் டோர்சி (Jack Dorsey) இந்த அப்ளிகேஷன் புரோகிராமினை உருவாக்கிய போது மக்கள் சிறிய அளவில் தகவல்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள இதனை வடிவமைத்ததாகக் குறிப் பிட்டார். உடன் பணியாற்றிய பிஸ் ஸ்டோன் (Biz Stone) பறவைகள் பரிமாறிக் கொள்ளும் ஒலிக்கான சொல்லை இந்த அப்ளிகேஷனுக்கு வைத்தார். நாடு, கண்டம் சாராத அனைத்து பறவைகளும் பேசிக் கொள்ளும் மொழியின் ஒலி இன்று அனைத்து நாட்டு மக்களும் பேசிப் பகிர்ந்து கொள்ளும் தளத்தின் பெயராக அமைந்தது பொருத்தமே.
அமேஸான் கிண்டில் (Amazon Kindle): இ-புக் என அழைக்கப்படும் எலக்ட்ரானிக் நூல்கள் படிக்கும் வழக்கத்தில் ஒரு மாபெரும் புரட்சியைக் கொண்டுவந்த சாதனம் இது. இதனை வடிவமைத்த குழுவைச் சேர்ந்த ஒரு தம்பதியரை, மைக்கேல் க்ரோனன் மற்றும் கரேன் ஹிப்மா, அமேஸான் நிறுவனம் இந்த சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு கேட்டுக் கொண்டனர். இந்த சாதனம் எதற்கெல்லாம், எந்த வழிகளில் எல்லாம் பயன்படும் என்று இவர்கள் ஆழ்ந்து சிந்தித்தனர். எந்த தொழில் நுட்பத்தையும் நினைவு படுத்தும் வகையில் பெயர் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதே நேரத்தில் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், பல நல்ல பொருளைத் தருவதாகவும் இருக்க வேண்டும் என எண்ணினார்கள். எனவே Kindle என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தனர். இதற்கு எரிவதைத் தூண்டுவது, ஒளிறச் செய்வது, நல்லவற்றிற்குத் தூண்டுவது, கொழுந்துவிட்டு எரியச் செய்வது என்று பல பொருள் உண்டு. பழைய நார்ஸ் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு இந்த சொல் வந்தது. இந்த சொல்லின் மூலப் பொருள் மெழுகுவத்தி என்பதாகும். இந்த சொல்லைத் தந்து ஹிப்மா கூறுகையில், “நூல்களில் நாம் பெறும் தகவல்களும் செய்திகளும் தீயைப் போன்றவை; பக்கத்திலிருப்பவர்களிடமிருந்து இதனைப் பெறுகிறோம். மேலும் அதனைத் தூண்டுகிறோம். பின் அவற்றை மற்றவர்களுக்குத் தருகிறோம். இப்படியே அது அனைவரின் சொத்தாக மாறுகிறது’ என்றார். உண்மைதான், பொருத்தமான பெயர்தான்.
ஆண்ட்ராய்ட் (Android): மொபைல் போனுக்கான கூகுள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பெயர் ஆண்ட்ராய்ட். இந்த சிஸ்டத்திற்கான வேலையை 2005ல் தொடங்குகையில் இந்த பெயர் உருவாக வில்லை. ஆனால் கூகுள் மிகவும் மர்மமான முறையில் இந்த பெயரைத் திடீரென அறிவித்தது. ஏனென்றால் கூகுள் மொபைல் போனுக்கான சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்பினைத் தயாரிப்பதே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அந்த ரகசியம் வெளியான நிகழ்வு, இன்டர் நெட்டில் கூகுள் நிறுவனத்தின் புரட்சி ஆகியன சேர்ந்து இந்த பெயரை உலகம் ஏற்றுக் கொள்ள வைத்தது.
பிளாக்பெரி (BlackBerry): 2001 ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த ரிசர்ச் இன் மொபைல் (Research in Mobile) நிறுவனம், தன் புதிய இமெயில் சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு லெக்ஸிகன் பிராண்டிங் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது. பெயரில் இமெயில் என்பது இருக்கக் கூடாது என்றும் திட்டமிட்டது. இமெயில் என்பது எதிர் பார்ப்பில் ரத்த அழுத்தத்தைப் பாதிக்கும் சொல் என்று கருதியது. சந்தோஷத்தையும் அமைதியையும் தரும் சொல்லாக இருக்க வேண்டும் என விரும்பியது. அப்போது ஒருவர் அந்த இமெயில் சாதனத்தின் கீகள் ஒரு பழத்தின் விதைகள் போல இருப்பதாகக் குறிப்பிட்டார். உடனே லெக்ஸிகன் பிராண்டிங் பழங்களின் பெயர்களை ஆய்வு செய்தது. மெலன், ஸ்ட்ரா பெரி போன்ற அனைத்து பெயர்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. இறுதியில் பிளாக்பெரி (BlackBerry) என்ற பெயர் சாதனத்தின் நிறத்தை ஒத்து வருவதாக முடிவு செய்து அந்த பெயர் தரப்பட்டது.
ஐபாட் (iPod): ஆப்பிள் நிறுவனம் தன் ஸ்டைலில் எம்பி3 பிளேயர் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தது. அதன் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் நிறுவனத்தின் எம்பி3 பிளேயர் ஒரு ஹப் (Hub) ஆக செயல்பட வேண்டும் என விரும்பினார். எனவே இதற்குப் பெயர் வைத்திட முயற்சிக்கையில் பலவகையான ஹப்களை வைத்துப் பார்த்தனர். இறுதியில் ஸ்பேஸ் ஷிப் போன்ற ஒன்றை வடிவமைத்தனர். ஸ்பேஸ் ஷிப் விட்டவுடன் மேலே சென்று இயங்கும்; பின் எரிபொருளுக்குக் கீழே வரும். இந்த ஸ்பேஸ் ஷிப்பின் முன் வடிவம் ஒரு Pod மாதிரி இருந்தது. எனவே தன் நிறுவனத்தின் தனி அடையாளமான ஐ (i) சேர்த்து அதனை ஐபாட் என பெயர் சூட்டினார்கள்.

மிடுக்காக தோன்ற வேண்டுமா?

சிறிது குண்டாக இருக்கும் பெண்கள், பிளைன் கலர் புடவைகள் கட்டி, சிறு சிறு பூப்போட்ட பிளவுஸ் அல்லது பார்டர் வைத்த பிளவுஸ் தைத்து போட்டால், மிக அழகாக இருக்கும். பெரிய, பெரிய பூக்கள் போட்ட புடவைகள் கட்டுவதை தவிர்த்து விடுங்கள். சிலர் காட்டன் புடவையை விறைப்பாக கட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என நினைப்பர். தினமும் அயர்ன் செய்து கட்ட முடியாத பொருளாதார சூழ்நிலை. கவலையே வேண்டாம்.

உங்கள் காட்டன் புடவையை லேசாக கஞ்சி (நீரில் கஞ்சியை கலக்கவும்) போட்டு, காயப் போடும் போது, எல்லா பக்கங்களிலும் சுருக்கம் இல்லாமல், நீவி விட்டு, காயப் போட்டு விடுங்கள். புடவை காய்ந்ததும் நன்றாக மடித்து, படுக்கும் மெத்தையின் கீழ் அல்லது தலையணையின் கீழ் வைத்து படுத்துக் கொள்ளுங்கள். காலையில் அயர்ன் செய்த அளவுக்கு இல்லாவிட்டாலும், அயர்ன் செய்தது போல் நன்றாக படிந்து இருக்கும். கஞ்சி போடும் போது, கஞ்சியை பெரிய வடிக்கட்டியிலோ அல்லது துணியிலோ வடிகட்டிவிட்டு, பின்பு குறைவான கஞ்சியில் புடவையை முக்கி எடுங்கள். இடுப்பில் பாவாடையை இறுக்க வேண்டாம் உள் பாவாடை இறுக்கமாக கட்டினால், கறுப்பாக இடுப்பைச் சுற்றி ஒரு அடையாளம் உண்டாகும். இதனால், சற்று லூசாக பாவாடைகளை கட்டிக் கொள்ளுங்கள். புடவை அவிழ்ந்து விடும் என்று பயந்தால், சேப்டி பின் போட்டுக் கொள்ளுங்கள்.

தையல் காரரிடம் சொல்லுங்கள்… சிலருக்கு பிளவுசை மீறி, தோள்பட்டையில் பிரா பட்டை வெளியில் தெரியும். இதைத் தவிர்க்க, பிளவுசில், பிரா லூப் வைத்துத் தைத்துக் கொள்ளலாம். பிரா ஸ்டிராப்பை, லூப் இடையே வைத்து, பட்டன் போட்டு விட்டால், ஸ்டிராப் வெளியே வராது.

புடவைக்கு பால்ஸ் அவசியம்!: சில பெண்களுக்கு காட்டன், கோட்டா புடவைகள் கட்ட நிரம்ப ஆசை. ஆனால், அவற்றில் சாரி பால்ஸ் வைத்து தைக்க சிலர் விரும்புவதில்லை. இதனால், நடக்கும் போது புடவை முழ ங்கால் அளவுக்கு தூக்கிக் கொள்கிறது. எனவே, இம்மாதிரி புடவை கட்ட விருப்பமுள்ள பெண்கள், புடவை வாங்கியவுடன் உடனே சாரி பால்ஸ் வைத்து, தைத்து விடுங்கள். உள் பாவாடை கட்டும் போது, பாவாடையின் விளிம்பு பாதத்தில் உள்ள முட்டியைத் தொடும் அளவுள்ளதாக பார்த்து வாங் குங்கள்.
சிலர், முழங்கால் அளவுள்ள பாவாடைகளை கட்டி, அதன் மேல் மெலிதான புடவை கட்டும் போது, பார்க்க நன்றாக இருக்காது. பிளைன் புடவையில் வெகு ஜோர் சிறிது குண்டாக இருக்கும் பெண்கள், பிளைன் கலர் புடவைகள் கட்டி, சிறு சிறு பூப்போட்ட பிளவுஸ் அல்லது பார்டர் வைத்த பிளவுஸ் தைத்து போட்டால், மிக அழகாக இருக்கும். பெரிய, பெரிய பூக்கள் போட்ட புடவைகள் கட்டுவதை தவிர்த்து விடுங்கள். பெரிய பூக்கள் போட்ட புடவைகளை கட்ட நேர்ந்தால், பிளைன் பிளவுசுகளையே இம்மாதிரி புடவைகளுக்கு தேர்ந்தெடுங்கள். பெரிய பூப்போட்ட சேலை, அதே போல் பிளவுஸ், நிச்சயம் பூச்சாண்டி வேஷம் போட்ட மாதிரிதான் இருக்கும்.

மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா?

முதிய வயதில் ஒருவருக்கு ஏற்படும் பெரும் பிரச்சினை… மூட்டுவலி. கீல்வாதம் அல்லது மூட்டு அலற்சி என்றும் இது அழைக்கப்படுகிறது.

முதுமை காரணமாக ஏற்படும் எலும்பு தேய்மானம், அதிகப்படியான உடல் எடை போன்ற காரணங்களால் ஏற்படும் மூட்டுவலியை முழுமையாக குணப்படுத்த முடியாது. தொடர் சிகிச்சையின் மூலம் அதை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம்.

ஓய்வெடுத்தல், எடை குறைத்தல், உடற்பயிற்சி மற்றும் வலி நிவாரணி சிகிச்சைகள்தான் இதற்கான சிகிச்சை முறைகள்.

சரி, ஒருவருக்கு மூட்டு வலி எப்படி ஏற்படுகிறது?

உடலில் உள்ள எலும்புகள் இணைகின்ற இடங்களை `மூட்டு’ என்று அழைக்கிறோம். ஒவ்வொரு மூட்டின் இணைப்புகளையும் மூடி இருக்கும் ரப்பர் போன்ற அமைப்பு குருத்தெலும்பு எனப்படும். இது `குஷன்’ ஆகவும், அதிர்ச்சியைத் தாங்கும் அமைப்பாகவும் செயல்படுகிறது. அதனால், எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி தேயாமலும், சேதமடையாமலும் பாதுகாக்கின்றது.

இந்த குருத்தெலும்பு ஸினோவியல் என்னும் பசை போன்ற திரவத்தால் மசகுத் தன்மை அடைகிறது. இந்த திரவம் மூட்டுக்கள் இதமாக இயங்க உதவுகிறது.

மூட்டுவலியின்போது, மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பில் தேய்வு ஏற்படுகிறது. அப்போது குருத்தெலும்பில் உலர்ந்த நிலை ஏற்படுவதால், அதன் காரணமாக எலும்பு மூட்டுகளில் வலியும், வீக்கமும் உண்டாகிறது.

எலும்பு மூட்டு இணைப்பு திசுக்களில் ஏற்படும் கோளாறுகள், கால்முட்டி அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது, தசைநார் பாதித்தல், கால்முட்டியின் பின்புறத்தில் நீர்நிறைந்த பை போன்று வீக்கம் காணப்படுதல், கார்டிலேஜ் என்னும் எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவது அல்லது உடைவது, எலும்புகளை ஒன்றோடு ஒன்றாக இணைக்கும் தசை நார் கிழிதல், சுளுக்கு, மூட்டுகளை முறுக்குவதால் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறுசிறு காயங்கள், மூட்டுகளில் நோய் தொற்றுவது, மூட்டுகளில் ஏற்படும் காயங்களால் முட்டியினுள் ரத்த கசிவு ஏற்படுவது, இடுப்பில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது கோளாறுகள்…

இதுபோன்ற காரணங்களால் ஒருவருக்கு மூட்டுவலி ஏற்படும். வலியை அதிகப்படுத்தும் செயல்களை தவிர்த்து ஓய்வெடுத்து வந்தால் அதிகப்படியான மூட்டுவலியை குறைக்கலாம்.

மூட்டுவலியை கட்டுப்படுத்த மேலும் சில வழிமுறைகளும் உள்ளன. அவை…

* வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளுக்குப் பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.

* கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம்.

* ஏஸ் பாண்டேஜ் அல்லது எலாஸ்டிக் பாண்டேஜ் அணிந்து முட்டியின் மீது மிதமான அழுத்தத்தை செலுத்தலாம். இப்படி செய்வது வீக்கத்தை குறைக்க உதவியாக இருக்கும். இந்த வகை பாண்டேஜ்களை மருந்துக் கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.

* மூட்டுகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து தூங்கலாம்.

மூட்டுவலியை கட்டுப்படுத்த உடற்பயிற்சி மற்றும் ஓய்வு இரண்டும் முக்கிய அம்சங்கள். சரியான முறையில் இந்த இரண்டையும் செயல்படுத்தினால் மூட்டுகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். டாக்டர் அல்லது உடற்பயிற்சி நிபுணர் ஆலோசனை மற்றும் கண்காணிப்பின் கீழ் உடற்பயிற்சியை செய்து வரவேண்டும்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது போலவே, தொடர்ந்து நன்கு ஓய்வு எடுப்பதும் அவசியம். இது உங்கள் தசைகளுக்கும் ஓய்வு தருகிறது.

அதோடு, உணவு முறையிலும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை, உப்பு, கொழுப்பு சத்து மற்றும் அசைவ உணவுகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும். இல்லையென்றால், இவற்றை மிக குறைவாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

முக்கியமாக உங்கள் உணவில் தானியங்கள், பருப்பு வகைகள், புத்தம்புது பழங்கள் மற்றும் காய்கறிகள் இடம்பெறட்டும்.