Daily Archives: நவம்பர் 8th, 2011

திம்மக்கா-சோலைவனம்

கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் இருந்து தும்கூர் போகும் வழியில் 25 வது கிலோமீட்டரில் வருகிறது கூதூர் கிராமம்.
அதுவரை வறண்டு வெப்பமாகக் காணப்பட்ட பூமி குளிர்ந்து காணப்படுகிறது, அதற்கு காரணமான ஆயிரத்திற்கும் அதிகமான ஆலமரங்கள் அழகு காட்டி சாலையின் இருபக்கங்களிலும் இருந்து காற்றை வீசி வரவேற்கிறது. மரங்களில் உள்ள பல்வேறுவித பறவைகள் தங்கள் மொழியால் கீதம் பாடி வரவேற்கின்றன, மொத்தத்தில் மரங்கள் அடர்ந்த அந்த திடீர் சோலைவனம் மனதை சிக்கென பறிக்கிறது.
எங்கும் இல்லாத அளவிற்கு, எங்கு இருந்து வந்தன இத்தனை ஆலமரங்கள், யார் கொண்டுவந்தது நட்டது, அதைவிட யார் இவ்வளவு சிரத்தை எடுத்து பராமரித்தது என்ற பல கேள்விக்கு எல்லாம் விடைதான் , எழுதப்படிக்கத்தெரியாத திம்மக்கா.
யார் இந்த திம்மக்கா என்பதை அறிய சில வருடங்கள் பின்னோக்கி பயணிக்கவேண்டும்
சாதாரண கிராமத்து ஏழைப்பெண்ணான திம்மக்கா வாக்கப்பட்ட கிராமம்தான் கூதூர்.
சிக்கண்ணா என்ற விவசாய தொழிலாளியின் வாழ்க்கைத் துணையான திம்மக்காவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாது போனது, இதை காரணமாக்காட்டி உற்றமும், சுற்றமும் கொட்டிய வார்த்தைகளால் திம்மக்கா ரொம்பவே காயப்பட்டுவிட்டார். இரவுகளை தூக்கம் இல்லாமலும், பகல்களை உணவு இல்லாமலும் கழித்தார். ஆனாலும் எதுவும் ஆறுதலாக இல்லை மேலும், மேலும் துக்கம் துரத்திட, இப்படியே பத்து வருடங்கள் ஒடிப்போனது. இப்போது 80 வயதாகும் திம்மக்காவிற்கு அப்போது வயது 28.
பெற்று வளர்த்தால்தான் பிள்ளைகளா, உயிரும்,உணர்வும் உள்ள மரங்கள் பிள்ளைகள் இல்லையா, பெற்ற பிள்ளை கூட தாயை மட்டும்தான் கவனிக்கும், ஆனால் பெறாத பிள்ளைகளான மரங்கள், சுயநலமின்றி ஊரையே கவனித்துக்கொள்ளுமே என்றெல்லாம் யோசித்த திம்மக்கா மரம் நடுவது அதுவும் ஆலமரங்களை தொடர்ச்சியாக நடுவது என்று முடிவெடுத்தார்.
இவ்வளவு யோசித்த திம்மக்கா அந்த ஊரின் தண்ணீர் பஞ்சத்தை பற்றி யோசிக்க மறந்துவிட்டார், ஆனாலும் முன்வைத்து காலை பின்வைக்கப்போவது இல்லை என்ற முடிவுடன் நாலு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று தண்ணீர் கொண்டுவந்து ஆலமரங்களுக்கு தண்ணீர் விட்டார்.
ஆரம்பத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேலி செய்த கணவர் சிக்கண்ணா கூட ஆலமரசெடி இலைகளும், தலைகளும் விட்டு உருவாகி வருவதைப் பார்த்து தானும் திம்மக்காவிற்கு உதவலானார்.
வயல்காட்டில் வேலை செய்த நேரம் போக எப்போதும் ஆலமரம் நடுவது, நட்ட மரங்களை பேணி பாதுகாத்து வளர்ப்பது, வளர்ந்த மரங்களிடம் அன்பும், பாசமுமாகப் பேசுவது என்று மரங்களை தனது குழந்தைகளுக்கும் மேலாக வளர்த்தார்.
மரங்களை வளர்ப்பதற்காக ஊரில் நிறைய குட்டைகளை உருவாக்கினார், அதில் மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை தேக்கிவைத்து வெய்யில் காலத்தில் மரங்களுக்கு ஊற்றி பயன்படுத்தினார்.
அப்படியும் தண்ணீர் பற்றாமல் போகும்போது சிரமம் பாரமால் தலையிலும், இடுப்பிலும் குடங்களை சுமந்துகொண்டு தண்ணீர் சேகரிக்க புறப்பட்டு விடுவார். ஒரு சமயம் நாலுகிலோ மீட்டர் தூரம் போய் தண்ணீர் கொண்டுவந்தவர், மரங்களுக்கு அருகில் வரும்போது கால் தடுக்கி முள்ளில் விழுந்துவிட்டார். கை,கால்களில் ரத்தம். ஒ…வென்று அழுகை.பதறி ஒடிவந்த சிக்கண்ணா,‘ என்னம்மா ரொம்ப வலிக்குதா’ என்று கேட்டபோது, ‘வலிக்காக அழலீங்க…கொண்டுவந்த தண்ணீர் கொட்டிப் போச்சுங்க…அதான் அழறேன்’ என்று கூறியிருக்கிறார்.
இப்படியாக திம்மக்கா மரம் வளர்க்க ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திம்மக்காவின் பேச்சுப்படி சொல்லப்போனால் அவரது மூத்த பிள்ளைக்கு இப்போது வயது 52 ஆகிறது. விளையாட்டுப்போல வளர்த்த மரங்கள் இன்று கூதூர் மக்களை குளு, குளு என வைத்தபடி திகு, திகுவென வளர்ந்து நாட்டிற்கு பயன்தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றது.
சுற்றுச்சுழலின் நண்பர் என்ற உயரிய விருதினை அமெரிக்கா அளித்து கவுரவித்தது வரை திம்மக்கா வாங்கியிருக்கும் விருதுகள் பலப்பல.
இன்றைய தேதிக்கு திம்மக்கா வளர்த்துள்ள மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். அத்தனையும் இப்போது அரசாங்கத்தின் சொத்து.பதிலுக்கு அரசாங்கம் திம்மக்காவிற்கு மாதம் 500 ரூபாய் முதியோர் உதவித் தொகையும், வசிப்பதற்கு பெங்களுரூவில் ஒரு வீடும் வழங்கியது.
என் எசமான் (சிக்கண்ணா) இறந்த பிறகு, என் பிள்ளைகள்தான் (மரங்கள்) என் உலகம். இவைளை விட்டு நான் எங்கேயும் வரலை என்று சொல்லிவிட்டு பெங்களுரூ வீட்டை திருப்பிக் கொடுத்து விட்ட திம்மக்கா கூதூரிலேயே 500 ரூபாய் ஒய்வு ஊதியத்தில் தன் ‘பிள்ளைகளுடன் ’வாழ்ந்து வருகிறார். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட மரங்களுடன் செலவழிக்கும் நேரமே அதிகம்.
எண்பது வயதைத் தாண்டிவிட்ட திம்மக்கா தொடர்ந்து தொலைதூரம் சென்று தண்ணீர் சுமந்துவர முடியாத சூழ்நிலையில், புதிதாக மரமேதும் வளர்க்கவில்லை, ஏற்கனவே வைத்து, வளர்த்த மரங்களை மட்டும் பாதுகாத்து வருகிறார். வளர்ந்த மரங்களும் திம்மக்கா தங்கள் பக்கம்வரும்போது குளிர்ந்த காற்றை வீசியபடியும், ‘அம்மா எங்கள விட்டு எங்கேயும் போயிடாதீங்கம்மா’பேசியபடியும் காணப்படுகின்றன.

எடையை குறைக்க எட்டே வழிகள்!

காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3- 4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது.

நம் அன்றாட வேலைகளை செய்யவும், உடல் உறுப்புகள் இயங்கவும், நமக்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி, நாம் உண்ணும் உணவின் வாயிலாக கிடைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவு, உடல் செலவிடும் சக்தியை காட்டிலும் அதிகமாகும் போது, உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது. இவ்வாறு, இந்த சேமிப்பு, ஆண்டுக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போகும் போது, உடல் எடை மெல்ல, மெல்ல அதிகரித்துக் கொண்டே செல்லும். இதுவே, உடல் எடை கூடுவதன் முதல் காரணம். மிகச் சிலருக்கு மட்டும் ஹார்மோன் காரணங்களால் உடல் எடையும், பருமனும் திகரிக்கின்றன.

கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நடந்தால், குறைந்தது, மாதம், நான்கு கிலோ எடை குறைவது மிக உறுதி.

1.தினசரி காலை எழுந்தவுடன், 1 – 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.
2.குறைந்தது, 35 நிமிடம் உடற்பயிற்சி, வேக நடை, ஸ்பாட் ஜாகிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும்.
3.அப்போதே தயாரித்த வெண்பூசணிச் சாறு அல்லது வாழைத்தாண்டு சாறு ஒரு டம்ளர் குடிக்கவும்.
4.காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3- 4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது.
5. காலை சிற்றுண்டி (8.00 – 9.00 மணிக்குள்): வெண்ணெய் எடுத்த மோர் – 1 டம்ளர், அதனுடன் கொய்யா (சிறியது), பாலாடை கட்டி அல்லது வெண்ணெய் தடவாத இரண்டு (4 துண்டு) வெஜிடபிள் ரொட்டி, சாண்ட்விச் அல்லது இட்லி இரண்டு.
6. மதிய உணவு (12.00 – 1.00 மணிக்குள்): 2 கரண்டி ஏதேனும் ஒரு வகை கீரையும், 2 கரண்டி நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள் (வெண்பூசணி, புடலங்காய்) பருப்பு சேர்த்து தேங்காய் சேர்க்காமல் கூட்டு, ஒரு கரண்டி சாம்பார், ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய் சேர்க்காத இரண்டு கோதுமை சப்பாத்தி, ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்த தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர்.
7. இரவு உணவு (7.00 – 8.00 மணிக்குள்): வேக வைத்த காய்கறிகள் மூன்று கப் அல்லது சூப், பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது பைன் ஆப்பிள் (6 துண்டு) அல்லது கொய்யா 3 துண்டு.
8. பகலில் உறங்குவதை தவிர்த்தல் நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும். உப்புள்ள ஆகாரங்களை (ஊறுகாய், சிப்ஸ், உப்பு பிஸ்கட்) தவிர்க்கவும். இரவில் உண்ட பின் குறுநடை செய்த பிறகு உறங்க ல்லவும். “இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கு ஏற்ப காலையில் கொள்ளு கஞ்சி குடிப்பது நல்லது.

நன்றி-தினமலர்

சிஸ்டம் டிப்ஸ்

ரன் விண்டோவில் இன்டர்நெட்: இன்டர்நெட் தளம் ஒன்றை ரன் விண்டோ விலிருந்து வாங்கலாம். அதிசயமாயிருக்கா? இன்டர்நெட் எக்ஸ்புளோரரை இயக்காமல் ஸ்டார்ட் அழுத்தி வரும் ரன் பெட்டியில் தளப் பெயரை டைப் செய்து என்டர் தட்டவும். உங்கள் பிரவுசர் திறக்கப்பட்டு அதில் அந்த முகவரி காட்டப்பட்டு முகவரிக்கான தளம் தேடப்பட்டு கிடைக்கும். எடுத்துக்காட்டாக www.download.com என்ற தளம் வேண்டுமாயின் ரன் பெட்டியில் அப்படியே டைப் செய்திடவும். பின் என்டர் தட்ட இணைய தளம் உங்களுக்குக் கிடைக்கும்.

விடுபட்ட விண்டோஸ் போட்டோ காலரி: விண்டோஸ் விஸ்டா பதிப்பில், பயனாளர்கள் சந்தித்த ஒரு பெரும் பிரச்னை, அதன் இயக்க வேகம் ஆகும். ஏகப்பட்ட துணை புரோகிராம்கள் உள்ளிணைந்து வடிவமைக்கப் பட்டதால், அதனை உருவாக்கிய கோடிங் வரிகள் அதிகமாகி, விஸ்டா பெரிய அளவில் அமைந்தது. அதனால் அதன் இயக்க வேகம் தடைபட்டது. அதே போல விண்டோஸ் 7 சிஸ்டம் தேவையற்ற வகையில் பெரிதாக அமைந்து விடாமல் இருக்க, மைக்ரோசாப்ட் சில புரோகிராம்களை விட்டுவிட்டது. அப்படி ஒரு புரோகிராம் தான் போட்டோ காலரி (விண்டோஸ் போட்டோ காலரி (Windows Photo Gallery)). இது ஒரு போட்டோ மற்றும் வீடியோ பைல் மேனேஜர் மற்றும் போட்டோ எடிட்டர். இதனை http://download.live. com/photogallery என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து பதிந்து இயக்கலாம்.

விண்டோஸ் 7 சிஸ்டத்தைக் கைவசப்படுத்த: விண்டோஸ் 7 சிஸ்டம் எந்தவித பிரச்னையும் இன்றி இயங்க சிஸ்ட்ராக் டூல்ஸ் (Systerac Tools) என்னும் புரோகிராம் உதவுகிறது. சிஸ்ட்ராக் டூல்ஸ் 16 டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. விண்டோஸ் இயக்கம், தோற்றம், மெமரி பயன்பாடு, சிஸ்டம் கிளீன், பைல் ஷ்ரெடிங் எனப் பல வசதிகளைத் தரும் டூல்ஸ்கள் இதில் அடங்கியுள்ளன. இந்த புரோகிராமின் முகப்பும் யூசர் இன்டர்பேஸும் அழகாகவும் பயன்படுத்தக் கூடிய வகையிலும் உள்ளன. இதனை http:// systerac.com/seven/overview.htm என்ற முகவரியில் பெறலாம்.

விண்டோஸ் இயங்கிய நேரம்: கம்ப்யூட்டரை எவ்வளவு நேரம் நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று அறிய வேண்டுமா? அல்லது வேறு எவரேனும் செயல்பட்ட காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? விண்டோஸ் ஆக்டிவிட்டி மானிட்டர் (Windows Activity Monitor) என்ற புரோகிராம் நமக்கு இந்த வழியில் உதவுகிறது. ஒவ்வொரு விண்டோவும் எவ்வளவு நேரம் இயங்கியுள்ளது என்ற தகவலை நமக்குத் தருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ என்றால் பயன்படுத்திய நேரத்தினை வரைபடமாகவும் தருகிறது. விண்டோக்களை நாம் இணைத்தும் காணலாம். “Work”, “School”, “Fun” எனப் பிரிவுகளாகவும் இணைத்துக் காணலாம். குழந்தைகள் நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், இத்தகைய கண்காணிப்புகள் அவர்கள் கம்ப்யூட்டரிலும் இன்டர்நெட்டிலும் என்ன செய்கிறார்கள் என்பதைக் காட்டும். இந்த புரோகிராமினை http://code.google.com /p/wamon/ என்ற முகவரியில் நீங்கள் பெறலாம்.

கடவுளிடம் சரணடைந்து விட்டால்….

பகவானை, கருணைக் கடல் என்பர். கடலில் இருந்து எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும், கடல் தண்ணீர் குறைவதில்லை. அதுபோல், யாருக்கு, எவ்வளவு கருணை காட்டினாலும், பகவானிடமுள்ள கருணை குறைவதில்லை.
அவனது கருணையைப் பெற அவனை வழிபடலாம். அதை விட அவனையே சரண டைந்து விட்டால் போதும், காப்பாற்றுவான். அர்ஜுனனுக்கு இதைத்தான் சொன்னார் பகவான்… “அர்ஜுனா… என்னை சரணடைந்து விடு; உன்னை, நான் காப்பாற்றுகிறேன்!’ என்று.
இது, சரணாகதி தத்துவம் என்கின்றனர். ராமாயணத்தில் இந்த சரணாகதி தத்துவம் உள்ளது. ராமனை சரணடைந்து உயிர் தப்பினான் காகாசுரன்; ராமனை சரணடைந்து ராஜ்ய சுகம் பெற்றான் விபீஷணன். இப்படியாக சரணாகதிக்கு ஏற்றம் உள்ளது. நம்மால் எதுவும் செய்துவிட முடியாது.
அதனால், “பகவானே… நீ தான் கதி. உன்னையே சரணடைகிறேன். நீ என்ன செய்கிறாயோ, அதை செய்… நான் ஏற்றுக் கொள்கிறேன்!’ என்று பகவானை சரணடைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை. “எல்லாம் என் சாமர்த்தியம்; பகவானால் என்ன செய்ய முடியும்?’ என்று வீம்பு பேசினால், தோற்பது நாம் தான்.
பனை மரம் நிமிர்ந்து நின்றாலும், பெருங்காற்று அடிக்கும் போது வேரோடு பெயர்ந்து விழுகிறது; அதே சமயம், நாணல் வளைந்து கொடுத்து விட்டு மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது. அது போல, பகவானிடம் வீராப்பு பேசி பயனில்லை; எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்து சரணாகதி ஆகி விட்டால் போதும், அவன் காப்பாற்றுவான்.
ஏனென்றால், அவன் கருணைக்கடல். ஒரு சின்ன தீபத்திலிருந்து ஆயிரம் தீபம் ஏற்றினாலும், சின்ன தீபத்தில் ஜோதி குறைவதில்லை. அதுபோல் பகவான் எவ்வளவு பேருக்கு கருணை காட்டினாலும், அவனிடமுள்ள கருணை குறைவதேயில்லை.
நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். பக்தியுடன், “பகவானே… நீ தான் கதி; என்னால் ஒன்று மில்லை…’ என்று சொல்லி அவனை சரணடைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை.
சரணாகதி ஒன்றுதான் பகவானின் கருணை யைப் பெற வழி; ஞாபகமிருக்கட்டும்!

மன்னனுடன் நடந்த மோதல்-பட்டினத்தார் வரலாறு

யுக யுகாந்தரங்களுக்கு வாழப்போவது போல் தாய்க்கு மகளாகி, பின்பு மகனுக்குத் தாயாகி, `எல்லாம் இவ்வளவு தான்’ என்று சொல்லும்படி எரிந்து சம்பலாகி, யாக்கை நிலையாமையிலிருந்து தானே இறைவனின் நிலைத்த தன்மை தெரிகிறது.

இனி என் அன்னைக்கு இன்ப துன்பங்களில்லை. எனக்கு அந்த நிலை எப்பொழுதோ? ஆனால், தளதளவென்றிருக்கிற இந்த உடம்பு சாம்பலான பின்னால், மீண்டும் ஒரு வயிற்றில் பிறக்கும் துயரத்தை, இறைவா எனக்குத் தராதே என்று திருவிருப்பைச் சிவனை நான் வேண்டிக் கொண்டேன்.

மாதா வுடல் சலித்தாள்; வல்லினையேன் கால்சலித்தேன்
வேதாவுங் கைசலித்துவிட்டானேநாதா
இருப்பையூர் வாழ்சிவனே, இன்னுமோ ரன்னை
கருப்பையூர் வாராமற் கா!

நான் தெற்கே நகர்ந்தேன். சோழ நாட்டுத் திருப்பதிகளை எல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு இறுதியில் சிதம்பரம், சீர்காழி மார்க்கமாக திருவொற்றியூர் சென்று, அங்கே அமைதி பெற்று விடுவதென்று முடிவு கட்டினேன்.

சோழ நாட்டில் நான் சுற்றி வரும்போது என்னுடைய இறுதிக்காலம் திருவொற்றியூரில் இல்லை என்பதை முடிவு கட்டினேன். எங்கள் செல்வத்தின் மீதே கண்ணாக இருந்த என் தமக்கையின் கணவர், என்னைப் பின் தொடர்ந்து பல ஆட்களை அனுப்பி இருந்தார்.

ஒரு சத்திரத்தில் ஒருவர் என் பக்கத்திலேயே வந்து உட்கார்ந்தார். அங்கிருந்த பிற அன்னக் காவடியினருக்கு நான் சொன்னபோது, அவர்கள் அவனைத் துரத்தியடித்தார்கள்.

பொன்னுக்கு வேலை செய்கிறவர்களைவிட, அன்புக்குப் பணி செய்கிறவர்கள் ஆண்மை மிக்கவர்களாக இருப்பார்கள்.

திருக்காட்டுப் பள்ளியில் எனக்கு ஏராளமான சீடர்கள் சேர்ந்தார்கள். அவர்களிலே பலர் இளைஞர்கள். இளமையிலேயே லெளகீகத்தை வெறுத்தார்கள். ஆனால் உடல் வலுமிக்கவர்கள்.

அவர்களுடைய துணையோடு நான் சோழ நாட்டை விட்டு வெளியேற முயன்றேன். சிதம்பரம் எல்லை அருகே என் மைத்துனரின் அடியாட்கள் எங்களை வழி மறித்தார்கள். என்னுடன் இருந்த சீடர்கள் கடுமையாகப் போரிட்டார்கள். அவர்களைத் துரத்தி அடித்தார்கள்.

இனித் தெற்கே இருப்பதை விட வடக்கே சென்று உஜ்ஜைனி மாகாளியைத் தரிசிக்கலாம் என்று முடிவு கட்டினேன்.

உஜ்ஜைனி- ஊழித் தாண்டவத்தின் நாயகி, மாகாளி உலா வரும் பூமி. பரத கண்டம் முழுவதும் காளி வணக்கம் தோன்றுவதற்குக் காரணமான உஜ்ஜைனி.

சக்திதேவியின் ருத்திர வடிவம். தான் அழிப்பவள் மட்டுமின்றி அளிப்பவளும் என்பதைக் காட்டிக் கொண்டிருக்கும் உஜ்ஜைனி.

பல நூற்றாண்டுகளாகச் சோழ நாட்டு மக்கள் வடதிசையிலும், வடமேற்கிலும் சென்று கொண்டிருந்த நாடுகள் இரண்டு.

ஒன்று கலிங்கம்; இன்னொன்று உஜ்ஜைனி.

அகன்ற சாலைகள், கூடல் நகரத்தைப் போல் நான்கு மாடங்கள் இல்லை என்றாலும், இரண்டு மாட வீதிகள்.

வணிகர்களுக்கு கடமை (வரி) இல்லாத காரணத்தால் பாரத கண்டத்தின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வாணிப வண்டிகள்.

கடைகளில் குவிந்து கிடக்கும் பல்வேறு பொருட்களில் பாண்டிய நாட்டு முத்துக்கள், மலைநாட்டு யானைத்தந்தங்கள், அகில், நன்னாரி வேர்கள், சுக்கு, மிளகு வகைகள் இவற்றைக் காணலாம்.

நான்குக்கு ஒரு கடையிலாவது தமிழ் பேசுகிறவர்களைக் காணலாம்; அவர்களிடம் பழகிப் பழகிப் கொச்சைத் தமிழ் பேசும் உஜ்ஜைனி மக்களையும் காணலாம்.

அந்தக் கடைத் தெருவுக்கு மத்தியில் நாங்கள் நடந்து சென்றபோது எங்களைக் கண்டு பலர் சிரித்தார்கள்!

காரணம் கோவணாண்டிகளாக அங்கே சாலையில் நடப்பவர் யாருமில்லை.

`கோவணமே சுமை’ என்று கருதுவது ஒரு வகை ஞானம். தலை முதல் கால் வரை மூடி இருப்பது ஒரு வகை ஞானம்.

திடீரென்று, `விலகுங்கள், விலகுங்கள்’ என்ற ஒலி கேட்டது.

எல்லாரும் விலகினார்கள். நாங்கள் விலகவில்லை. யாருக்காக விலகுகிறார்கள் என்பதைப் பார்க்க விரும்பினோம்.

மகாராஜா, அரண்மனையில் இருந்து ஆற்றங்கரை வசந்த மாளிகைக்குப் போகிறாராம். விஷயம் அவ்வளவுதான்.

அரசரின் ரதம் வந்தது. காவலர்கள் பிடித்துத் தள்ள முயன்றார்கள். கண்டு கொண்டார் மகாராஜா.

என்னைப் பார்த்துக் கேட்டார்: `யார் நீ?’

நான் சொன்னேன்: `மனித உயிர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்கின்ற கேள்வி!’

`எங்கிருந்து வருகிறாய்?’
`கருப்பையில் இருந்து!’
`எங்கே போகிறாய்?’
`இடுகாட்டுக்கு!’
`இங்கென்ன வேலை?’
`இடையில் ஒரு நாடகம்!’
`தங்குவது எங்கே?’
`வானத்தின் கீழே!’
`ஒழுங்காகப் பதில் சொல், கேட்பது அரசன்!’
`பதில் சொல்பவனும் அவனே!’

…. மகாராஜா யோசித்தார்.

`திமிரா உனக்கு?’ என்று சேவகர்கள் நெருங்கினார்கள்.

`அவனை விட்டு விடுங்கள்’ என்று சொல்லிவிட்டு மகாராஜா போய்விட்டார்.

அவர் போனதும் கடைத் தெருவே என்னை ஆச்சரியமாகப் பார்த்தது. அங்கிருந்த தமிழர்கள் எல்லாம் எங்கள் கால்களிலேயே விழுந்தார்கள்.அவர்கள் என்னைப் பார்த்து `பட்டினத்துச் செட்டி’ என்று அழைத்தார்களே, தவிர யாரும் `திருவெண்காடர்’ என்று அழைக்கவில்லை. வெகு நாளைக்கு முன்பே உஜ்ஜைனிக்கு வந்துவிட்டவர்கள் அவர்கள்.

தங்கள் இல்லங்களில் தங்கும்படி வேண்டினார்கள்.

`இருபது சீடர்களோடு இல்லங்களிலே தங்க விரும்பவில்லை’ என்று கூறி காளி கோயில் விடுதிக்கே போய்விட்டோம்.

அங்கேயும் செட்டியார்கள் கட்டிய விடுதி ஒன்றிருந்தது.

காவிரிப் பூம்பட்டினத்துச் செட்டியார் ஒருவர் தான் அங்கே கணக்காயராகவும் இருந்தார். நாங்கள் பெரும் உபசாரத்தோடு அங்கே வரவேற்கப்பட்டோம்.

இரவு நேரம் நான் உட்கார்ந்து ஏடு படித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சத்திரத்தின் கதவுகள் எப்போதுமே மூடப்படுவதில்லை. ஆகையால், வங்கதேசத்து சந்நியாசி ஒருவர் அந்த நேரத்திலும் அங்கே வந்தார். காவி ஆடையால் உடம்பில் முழுக்கப் போர்த்தி இருந்தார். சோளிய பிராமணர்களைப் போல் முன்குடுமி வைத்திருந்தார். நெற்றியில் சந்தனக் கோடுகள் போட்டிருந்தார். இரண்டு கன்னத்திலும் குங்குமம் பூசி இருந்தார். புருவங்களுக்கு மேலே கரும்புள்ளி செம்புள்ளி குத்தி இருந்தார்.

எனக்குக் கொஞ்ச தூரத்தில் அவர் வந்து உட்கார்ந்தார்.

நான் சிவபுராணம் படிக்கும் போது அவர் சிருங்காரப் பாட்டுபாட ஆரம்பித்தார்.

மூடிய ஆடை முற்றக் களைந்து முகம் தழுவி
சூடிய கொங்கை சுற்றிப் பிடித்துச் சுடர் பரப்பி
வாடிய ரோமக் கால்களை மெல்ல வருடிவிட்டு
நாடிய இன்பம் மாந்தருக் குண்டு
நமக்கில்லையே!

…. எனக்குக் கோபம் வந்தது; திரும்பிப் பார்த்தேன்.

உடனே மற்றொரு பாட்டைப் பாடினார்.

செப்பளவு கொங்கைச் சேயிழை
யாரைத் திரட்டி வந்து
முப்பொழு தென்றும் முகத்தோடு சேர்த்து
முத்தமிட்டுக்
கொப்புளத் தொட்டிக் குளத்தினில்
மூழ்கிக் குளிப்பதைப்போல்
அப்பனைப் பாடித்துதிப்பதில் ஏது ஆனந்தமே!

…. நான் அவரை அடக்க விரும்பவில்லை.

உடனே நான் ஒரு பாட்டுப் பாடினேன்:

பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசம் பிடித்தெனையே
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக்
கடிதடத்துப் புண்ணாங் குழியிடைத் தள்ளி,என்
போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந் தேனிறைவா!

கச்சி யேகம்பனே!

…. அந்தப் பாட்டைக் கேட்டவர் சிரித்தார்;

பதிலுக்கு நானும் சிரித்தேன்.

`ஒக்கச் சிரித்தால் வெட்கமில்லை!’ என்றார்.

`மாதொருத்தி இல்லை என்றால் நாம் பிறப்பதில்லையே!’ என்றார்.

`யாம் பிறந்த அவ்விடத்தை யாம் கலப்பதில்லையே!’ என்று கீழ்க்கண்ட வெண்பாவை பாடினேன்:

சிற்றமும் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம்தேடி விட்டோமே நித்தம்
பிறந்தஇடம் தேடுதே பேதை மடநெஞ்சம்
கறந்தஇடம் நாடுதே கண்.

`சிற்றம்பலத்திற்கும் சிவகாமி உண்டு’ என்றார்.

`சிவன் காமம், மண் படைக்கும்; இவன் காமம், என் படைக்கும்?’ என்றேன்.

`ரத்த அணுச் செத்தவன்தான் தத்துவத்தில் விழுவான்!’ என்றார்.

`தத்துவத்தை மறந்தவன் தான் ரத்தத்தால் எரிவான்!’ என்றேன்.

`ஆண்மை இலான் தத்துவங்கள் அவனுக்கே பொருந்தும்’ என்றார்.

`ஆண்மையினைச் சோதித்த அனுபவமே ஞானம்’ என்றேன்.

`நாளைக்கோர் பெண் கிடைத்தால் நான் கூடச் சம்சாரி’ என்றார்.

`வேளைக்கொன்று கிடைத்தாலும் வெறுப்பவனே சந்நியாசி’ என்றேன்.

`நதிமூலம், ரிஷி மூலம் நான் கேட்டதுண்டு; இது எவர் மூலமோ? அறியேன்!’ என்றார்.

`வாதற்ற பெண்டாட்டி வாய்த்ததுண்டு; என்றாலும், காதற்ற ஊசிதான் காட்டியது மூலம்!’ என்றேன்.

`ஊசியினால் ஆசை ஓடிவிட்டால், மீண்டுமொரு பாசியினால் இந்தப் பந்தம் திரும்பாதோ!’ என்றார்.

`வேசியினால் கெட்டால் விரைவில் திரும்பிவிடும்; மெய்ஞான மெய்யழுத்தம் விண் வரையில் கூட வரும்’ என்றேன்.

`சுற்றம் தவறு, துணை தவறு; அதனால்தான் முற்றும் தவறென்று முனிவர் புலம்புகிறார்.’

`கற்றும் தெளியாதான் காண்பதெல்லாம் தவறென்பான்! முற்றும் தெரிந்த பின்னே முழுச்சுமையை நான் துறந்தேன்!’ என்றேன்.

`பத்தினியாய் ஓர் மனைவி பாராதான் ஞானி’ என்றார்.

`சித்தர்கள் கதையல்ல; திருவருள்சேர் ஞானி’ என்றேன்.

`ஒரு மனது நமக்கிருந்தால் யாருக்கும் ஒரு மாது!’ என்றார்.

`எந்த ஒரு பெண்ணுக்கும் இரண்டு மனம் உண்டு!’ என்றேன்.

`மொத்தத்தில் சொல்வது முட்டாள்கள் ஞானம்’ என்றார்.

`முட்டாள்தனமே முழு ஞானம்!’ என்றுரைத்தேன்.

`சக்தி கதை அதுதானா? தத்துவமும் அதுதானா?’ என்றார்.

`சக்தி ஒரு ஞானக் கலை; சம்சாரக் கலை அல்ல’ என்றேன்.

`அரசனது பத்தினிகள்…?’ என்றார்.

`அவர்களுக்குப் பல மனது…!’ என்றேன்.

அப்போது அவர் நேரடியாகவே திரும்பினார்.

`அறிந்து பேசு!’ என்றார்.

`ஆண்டவனைக் காணுமிடத்தும் நான் அறிந்துதான் பேசுவேன்’ என்றேன்.

`மன்னர் குலத்தை இகழ்ந்ததற்கு மரியாதையாக மன்னிப்புக் கேள்’ என்றார்.

`மகேசனிடம்கூட அதை நான் கேட்டதில்லை’ என்றேன்.

`என்னைப் பார்!’ என்றார்.

பார்த்தேன்;

பர்த்ருஹரி மகாராஜா!

`துறவிக்கு வேந்தன் துரும்பு’ என்றேன்.

`வேந்தன் சீறினால்…’ என்றார்.

`வேதத்தை என் செய்ய முடியும்…?’ என்றேன்.

(இப்போது அவர் பக்கத்தில் இருந்த பத்ரகிரியார் பயத்தோடு அவர் பாதத்தை தொட்டார்.)

`இல்லை, சுய வரலாற்றில் உண்மையை மறைப்பவன், தான் ஏன் பிறந்தேன் என்பதையே அறியாதவன்’ என்று சொல்லி மேலும் தொடர்ந்தார் பட்டினத்தார்:

`வீடு விட்டவனுக்கு ஓடு எதற்கு?’ என்று சொல்லிக் கொண்டே போய்விட்டார்.

உடனேயே என் சீடர்களெல்லாம் என்னைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு என்ன நடக்குமோ என்று அஞ்சினார்கள்.

`அரசன் சீறினால் மரணம் கிடைக்கிறது; ஆண்டவன் சீறினால் நரகம் கிடைக்கிறது. மரணத்திற்குப் பயப்படாதீர்கள்; நரகத்திற்குப் பயப்படுங்கள்!’ என்றேன்.

அவர்கள் நினைத்ததில் தவறில்லை; எதிர்பார்த்ததும் நடந்தது.

சிறிது நாழிகைக்கெல்லாம் அரண்மனைக் காவலர்கள் எங்களைச் சிறைப்படுத்தினார்கள்.

சிறிதளவும் எங்கள் உடலுக்குத் துன்பம் தராமல் சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றார்கள்.

எங்களைத் தனித்தனி அறைகளில் அடைத்துப் பூட்டினார்கள்.

அடுத்தது என்ன நடந்தது?

பத்ரகிரியாரே சொல்வார்.