மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

ம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் பூலான்தேவியுடன் இணைந்து கொடூரமான கொள்ளை களில் ஈடுபட்டவன், பஞ்சம் சிங். அதிரடிப்படையினர் பொறிவைத்து அவனைப் பிடித்து, திகார் ஜெயிலில் அடைத்தார்கள். அங்கும் கோபம், கொந்தளிப்பு, வன்முறை, கலவர எண்ணத்தோடு இருந்த அவன் அருகில் செல்லவே பலரும் அஞ்சினார்கள். அவன் அருகில் தைரியமாக சென்றவர்கள், வெள்ளுடை தேவதைகளான பிரம்மகுமாரிகள் இயக்கத்தினர்.

`நீங்களும் எங்கள் சகோதரர்தான். இந்த உலகத்தில் யாரும் குற்றவாளிகளாக பிறப்ப தில்லை. சூழ்நிலைகள்தான் குற்றம் செய்யத் தூண்டுகின்றன. நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி உங்கள் வாழ்க்கையில் நல்ல எண்ணங்களையும், நல்ல சூழ்நிலை களையும் நாங்கள் உருவாக்குகிறோம். நீங்கள் நல்லவராக மாற நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன’ என்று, தங்கள் கையில் ராக்கி கயிறை வைத்துக்கொண்டு அவர்கள் கூற, பஞ்சம் சிங்கின் கை, அந்த வெள்ளை ஆடை தேவதைகளை நோக்கி நீண்டது. அவர்கள் அவனுக்கு திலகம் வைத்தார்கள். ராக்கி கட்டினார்கள். அன்பான உபதேசங்களை வழங்கினார்கள். தொடர்ந்து அவர்கள் திகார் ஜெயிலில் தியான வகுப்புகளும், வாழ்வியல் சொற்பொழிவுகளும் நிகழ்த்த, அதில் முதல் ஆளாக பங்குகொண்ட பஞ்சம் சிங்கின், மனதளவில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது திகார் ஜெயிலில் ஐ.ஜி.யாக இருந்த கிரண்பெடி, `பிரம்மகுமாரிகள் இயக்கத்தினர் கற்றுக்கொடுக்கும் தியானமும், வாழ்வியல் பயிற்சிகளும் சிறைவாசிகளின் மனதளவில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்து கிறது. அதனால் இந்தியாவில் எல்லா சிறைகளிலும் இவர்களது சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்` என்று பரிந்துரைத்தார். அதை தொடர்ந்து பல்வேறு ஜெயில்களில் இவர்களுக்கு பயிற்சி அளிக்க வாய்ப்பு கிடைத்தது. புழலில் உள்ள ஜெயிலிலும் அவர்கள் சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

“நாங்கள் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று மனிதர்களில் யாரையும் தரம் பிரித்து பார்ப்பதில்லை. எல்லோரையும் எங்கள் சகோதரர்களாக, சகோதரிகளாக பார்க்கிறோம். அந்த உணர்வை நாங்கள் இதயபூர்வமாக எடுத்துச் செல்வதால், சிறைவாசிகள் மீதான கனிவு எங்கள் கண்களிலும், வாஞ்சை எங்கள் பேச்சிலும், அவர்கள் மீதான கருணை எங்கள் உணர்வுகளிலும், செயலிலும் வெளிப்படும். இவைகளால் அவர்கள் எங்களை நோக்கி ஈர்க்கப்பட்டுவிடுவார்கள்.

சமீபத்தில் ஒரு பரபரப்பான கொலை வழக்கில் சிக்கிய ஒரு இளம் பெண் கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக தினமும் ஜெயிலில் அழுதுகொண்டே இருப்பதை அறிந்து அவரை சந்தித்தோம். அவர் குற்ற உணர்வால் துடித்துக்கொண்டிருப்பது எங்களுக்கு புரிந்தது. `குற்ற உணர்வு என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றுக்கு நாம் பலியாகிக்கொண்டே இருப்பது. அதில் இருந்து நீங்கள் விடுபடுங்கள். ஏதோ ஒரு காலத்தில் செய்த செயலுக்கு நீங்கள் இப்போது இந்த தண்டனையை அனுபவிப்பதாக நினைத்து மனதை அமைதிப்படுத்தி, குற்றஉணர்வில் இருந்து விடுபடுங்கள். அப்படியானால்தான் அடுத்து என்ன செய்வது என்று உங்களால் சிந்திக்க முடியும். பழைய சிந்தனையில் இருந்து விடுபட்டு புது மனிதராக செயல்பட முடியும்’ என்று கூறினோம். இப்போது நாங்கள் ஜெயிலில் தியான வகுப்பு நடத்த செல்லும் போதெல்லாம் முதல் பெண்ணாக அவர் வந்து உட்கார்ந்து விடுகிறார். அவரது அழுகை நின்று, வாழ்க்கையில் தெளிவும், பிடிப்பும் ஏற்பட்டிருக்கிறது” என்கிறார்கள், சகோதரிகள் ஜான்சிராணி, பாண்டி தேவி ஆகியோர். இவர்கள் இறை பணிக்காக தங்களை சமர்ப்பணம் செய்துகொண்டவர்கள். சேவை செய்யும் மனிதன் தெய்வமாகலாம் என்கிறார்கள்.

“ஒருவர் பிரச்சினைகளை கண்டு கவலைப்படாமல் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றால், அவர் முதலில் தன்னை யார் என்று புரிந்து, தன்னை அறிந்து கொள்ளவேண்டும்” என்கிறார், சகோதரி ஜெயா.

`ஒருவர் தன்னை எப்படி அறிந்து கொள்வது என்று கூறுங்கள்?’ என்று அவரிடம் கேட்டால், தத்துவார்த்தமாக பதில் தருகிறார்.

“நீங்கள் யார் என்று ஒருவரிடம் கேட்டால் அவரது பெயரைச் சொல்லுவார் அல்லது பெற்றோரின் பெயர், பட்டம், பதவி, தனது சாதனைகளைக்கூறி தன்னை இன்னார் என்று அடையாளம் சொல்வார். அப்படியானால் பட்டம், பதவி, பெயரா அவர் அடையாளம். அதெல்லாம் இல்லாவிட்டாலும் அவர் இருப்பார் அல்லவா! அப்படியானால் அவரது நிரந்தர அடையாளம் என்பது என்ன? அதுதான் ஆத்மா. அதை நாம் உணர்ந்தால்தான் நம் சக்தி என்ன என்பதை புரிய முடியும்.

நம்மை நாமே உணரும்போது கர்ம தத்துவத்தை உணர்வோம். அப்போது நமக்குள் ஏற்படும் சந்தோஷமோ, துக்கமோ எதுவாக இருந்தாலும் நமது கர்மாதான் அதற்கான காரணம் என்பதை உணர்வோம். உணரும்போது நாம் கஷ்டத்தை அனுபவித்தால் அந்த கஷ்டத்தில் இருந்து எப்படி விடுபடலாம் என்ற அடுத்தகட்ட சிந்தனை வரும். மனது லேசாகும்..” என்கிறார், ஜெயா.

தொடர்ந்து இந்த சகோதரிகள் மூவரும் அளித்த பேட்டி:

மக்கள் மத்தியில் மகிழ்ச்சி குறைந்துகொண்டே போகிறதே, மகிழ்ச்சியை அதிகரிக்க என்ன வழி?

“இதற்கு சற்று விளக்கமான பதில் தேவைப்படும். நமது கண்களும், காதுகளும் எந்நேரமும் திறந்தே இருக்கின்றன. தினசரி நாம் கேட்கும், பார்க்கும் செய்திகள்- விஷயங்களில் பெரும்பாலானவை வன்முறை, சதி, கொலை, நம்பிக்கை துரோகம் போன்றவைகளாகத்தான் இருக்கின்றன. நாம் பலகீனமான மனநிலை கொண்டவர்களாக இருந்தால், அந்த எதிர்மறை செய்திகள் எல்லாம் அப்படியே நம் மனதில் பதிந்துவிடும். வேலைக்கு போகும் மனைவி லேட்டாக வந்தால், ஏற்கனவே கேட்ட அந்த செய்தியோடு மனது அதை ஒப்பிட்டு பார்க்கும். `அதுபோல் நம் மனைவியும் நம்பிக்கைத் துரோகம் செய்கிறாளோ’ என்ற கோணத்தில் சிந்திக்கும்.

அதனால் எதிர்மறையான செய்திகளும், சம்ப வங்களும் நம் மனதின் உள்ளே உட்கார இடம் கொடுத்துவிடக்கூடாது. மனதை நாம் பக்குவப் படுத்தி, பலப்படுத்திவிட்டால் வெளியே உள்ள குப்பைகளை உள்ளே தங்கவிடாமல் பார்த்துக் கொள்ள முடியும். அப்படி செய்துவிட்டால் அது தான் மகிழ்ச்சியின் முதல் படி. எண்ணத்தை மேம்படுத்துவது மகிழ்ச்சியின் இரண்டாவது படி.

`எப்படி அன்னமோ அப்படி எண்ணம்’ என் பார்கள். நாம் பிராணிகளை உணவாக்கினால் நமது எண்ணம் மிருகத்தனம் கலந்ததாக ஆகி விடும். உடலில் மிருகத்தனம் கலக்கும்போது, மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக் கும். அதனால் மகிழ்ச்சியான மனநிலையை விரும்புகிறவர்கள், சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.

சரியான மகிழ்ச்சி எது என்பதை நமக்கு அடையாளங்காணத் தெரியவேண்டும். மகள் சிறுமியாக இருக்கும்போது சிறிய ஆடைகளை அணிவித்து, உடல் நெளிவு சுளிவுகளோடு ஆட வைக்கிறார்கள். அந்த குழந்தை ஆடி ஜெயித்துவிடும்போது அதற்கு கிளாமரும், ஆடை குறைப்பும்தான் புகழையும், மகிழ்ச்சி யையும் தரும் என்று எண்ணத்தோன்றிவிடும். இளமைப் பருவத்தை அடைந்தபோதும் மகிழ்ச்சிக்காக அவள், அந்த கிளாமர் வழியை தேர்ந்தெடுக்கும்போது பெற்றோர் எதிர்ப்பார்கள். அங்கே பிரச்சினை தோன்றிவிடும். ஆன்மிக உணர்வும், ஒழுக்கமும் இல்லாமல் நிரந்தர மகிழ்ச்சியை நம்மால் அடைய முடியாது. கடவுள் நம்பிக்கையே நமக்கு நிறைவான மகிழ்ச்சியை தரும்.

உறவினர்கள் என்றாலே, அவர்கள் தனக்கு எதையாவது தரவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். அப்படி எதிர்பார்ப்பது கிடைக்காமல் போனால் ஏமாற்றம் உருவாகும். அதுவே உறவை சிதைத்துவிடுகிறது. பெறுவதற்கு பதில், நாம் கொடுத்து பழகவேண்டும். கொடுப்பதும் நம் மனதில் உள்ளே இருந்து அன்பால் வெளிப்படவேண்டும். பாழடைந்த கிணற்றில் ஊரே தண்ணீரைக் கொண்டு கொட்டினாலும் அது நிறையாது. ஆனால் உள்ளே இருந்து தண்ணீர் ஊறிக்கொண்டே இருந்தால் அது நிறைவாக வந்துகொண்டே இருக்கும். அதுபோல் அன்பை நாம் நமக்குள்ளே இருந்து உருவாக்கவேண்டும்.

அன்பு இப்போது கேள்விக்குறியாக மாறிக்கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் நேரடியான உறவுகளை தவிர்ப்பது. அம்மாவிடம் பேச நேரமில்லை என்று சொல்லும் மகன், முகம் தெரியாத இன்னொரு பெண்ணிடம் 2 மணிநேரம் `சாட்டிங்’ செய்கிறான். மனிதர்களை விட, மனிதர்கள் கண்டுபிடித்த மெஷின்கள் போதுமென்று மனிதர்கள் நினைக்கிறார்கள். மெஷின் தருவது தனக்கு போதுமென்று, மெஷின் மூலமே திருப்தி பட்டுக்கொள்கிறார்கள். ஒவ்வொரு மனிதரும் தன்னை சக்தி மிக்கவர்கள் என்கிறார்கள். சாதிப்பேன் என்கிறார்கள். உண்மைதான். ஆனால் அதற்கான வழிமுறைகள் அவர் களுக்கு தெரிவதில்லை. அதனால் வெற்றியடைவதில்லை.

அன்பு, மகிழ்ச்சி, அமைதி போன்றவைகளை அனைவரும் பெற நாங்கள் ராஜயோக தியானம் கற்றுக்கொடுக்கிறோம். ஐம்புலன்களும் மனிதர்களை அடிமையாக வைத்திருக் கிறது. அதனால் அன்பையும், மகிழ்ச்சியையும் முழுமையாக அவர்களால் பெற முடிய வில்லை. ஐம்புலன்களை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, நாம் ராஜா மாதிரி இருந்து அதை ஆள, ராஜயோக தியானம் நம்மை தயார்படுத்தும். அதை நாங்கள் சிறை மட்டுமின்றி, ஆட்டோடிரைவர், போலீஸ் அதிகாரிகள், ராணுவத்தினர், பொதுமக்கள், கார்ப்பரேட் நிறுவனத்தினர் போன்றவர்களுக்கெல்லாம் கற்றுக்கொடுக்கிறோம்…”

உங்கள் அமைப்பைப் பற்றி கூறுங்கள்?

“இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் கராச்சியில் பிரஜாபிதா பிரம்மா என்பவர், அவருடைய 60 வயதில் இந்த இயக்கத்தை தொடங்கினார். அப்போது பெண்களே நிறைய சேர்ந் தார்கள். பிரம்மா எனப்படும் அவர் தனது பிள்ளைகளாக இயக்கத்தில் சேர்ந்த பெண்களை கருதியதால் பிரம்ம குமாரிகள் என்று இயக்கத்திற்கு பெயர் சூட்டினார். 1950-ல் இந்தியா வந்து, ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபுவில் தொடங்கினார். அவர் 1969-ல் இயற்கை எய்தினார். பின்பு தாதி பிரகாஷ் மணி தலைமை பொறுப்பை ஏற்றார். அவரும் காலமாகிவிட, தற்போது 96 வயதான தாதி ஜானகியும், 86 வயதான இருதய மோகினிஜியும் தலைமையை அலங்கரித்து வருகிறார்கள். 75-வது ஆண்டு விழா சென்னையில் வருகிற 18-ந்தேதி தொடங்கி, நான்கு நாட்கள் நடக்க இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை அரசியல், மதம், இனம் சார்பற்ற இயக்கமாக இதனை அங்கீகரித் திருக்கிறது. தாதி பிரகாஷ் மணி ஐ.நா.வின் அமைதித் தூதர் விருதும் பெற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் தலைமை நிர்வாகிகளாக அன்னபூரணா, கலாவதி, பீனா ஆகியோர் செயல் படுகிறார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் எங்கள் ஆன்மிகம் சார்ந்த கல்வியை போதித்து பட்டயம், முதுநிலைப் பட்டயம், முதுநிலைப் பட்டம் போன்றவைகளை வழங்குகிறது…” என்கிறார்கள்.

ஒருவர் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் மட்டுமே அவரால் அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை தரமுடியும் என்பது இவர்கள் வாதம். அதனால் ஒவ்வொரு மனிதனையும் மகிழ்ச்சி நிறைந்தவனாகவும், அன்பு நிறைந்தவனாகவும் மாற்றுவதற்கு இவர்கள் உறுதி பூண்டுள்ளார்கள். அது நிகழுமானால் உலகிற்கு ஆனந்தம்தானே!

நன்றி-தினத்தந்தி

%d bloggers like this: