Daily Archives: நவம்பர் 14th, 2011

வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள

வீட்டு வேலை என்றாலே நமக்கு அலர்ஜிதான். நம் வீட்டு ஹால், சமையலறை, குளியலறை, படிக்கும் அறை, பூஜை அறை என ஒவ்வொன்றும் ஒருவிதமான தூசியையும், தூசு சார்ந்த அசுத்தத்தையும் காட்டும். எனவே இவற்றை அவ்வப்போது சுத்தம் செய்யவில்லை என்றால், நமக்குத்தான் தலைவலி, நோய் என முடியும்.
இவை தான் இப்படி என்றால், இவற்றைச் சுத்தம் செய்திட நாம் பயன்படுத்தும் பொருட்கள் தரும் பிரச்னை இன்னொரு வகை. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி பராமரிப்பதுவும் ஒரு வகை வேலைதான்.
அறைகள் தான் என்றில்லை; வாஷ் பேசின், கழிவறை டேங்க், சமையலறை சிங்க் தொட்டி, ஸ்டவ் அடுப்பின் மேல்புறத் தகடு, மைக்ரோவேவ் அடுப்பின் உள், வெளிப்புறம், எவர்சில்வர் பாத்திரங்கள், திரைச்சீலைகள், சிறிய பெரிய மேஜைகள், கீ போர்டுகள், மின்விசிறிகள், வாஷிங் மெஷின், ட்ரையர்கள் என நாம் பயன்படுத்தும் சாதனங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஏறத்தாழ இவை அனைத்தின் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்வது குறித்து ஓர் இணைய தளம் நமக்குக் குறிப்புகளைத் தருகிறது. ஒரு சட்டைய எப்படி சில நொடிகளில் மடிப்பது என்று கூட இந்த தளத்தில் குறிப்பு உள்ளது. இந்த தளத்தின் முகவரி
http://www.renest.com/renest/roundup/housekeepingbasics35stepbystepguidestoeverychoreinyourhome156566. இந்த தளம் சென்றால், மேலே சொன்னவற்றுடன் இன்னும் பல பணிகள் குறித்து நமக்கு லிங்க்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கிளிக் செய்து நமக்குத் தேவையான தகவல்களைப் பெறலாம். சில தகவல்களைப் படித்தால், மிகவும் பயனுள்ளதாகத் தோன்றும். சிலவற்றைப் படித்தால், அட! இது எனக்குத்தெரியாதா!! என்று எண்ணத் தோன்றும். எதற்கும் ஒருமுறை இந்த தளத்தைப் பார்த்துவிடுங்களேன்.

18 ஆண்டுகளில் விசித்திர மாற்றம் : மனிதர்களை கம்ப்யூட்டர் 2029ல் ஓவர்டேக் செய்யும்!

இன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை கம்ப்யூட்டர் உலகம் ஓவர்டேக் செய்யும் என்று கணித்து கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர். இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் ‘பியூச்சராலஜி’ (எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன. கம்ப்யூட்டர் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் இதேபோக்கில் வளர்ச்சி அடைந்தால், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்கும் ஆராய்ச்சியை அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் பியூச்சராலஜி ஆராய்ச்சியாளர் ரே  கர்ஸ்வெல் மேற்கொண்டார். ஆய்வு முடிவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

கம்ப்யூட்டர், ரோபோ தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய பரிணாமத்தை சந்திக்கின்றன. இது இப்படியே போனால், கம்ப்யூட்டர் துறை எதிர்பாராத வளர்ச்சியை அடையும். இப்போது புதுப்புது கம்ப்யூட்டர்களை மனிதர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள். இது மெல்ல மெல்ல மாறி, புது கம்ப்யூட்டர் உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் கம்ப்யூட்டர்களே ஈடுபட தொடங்கும். அதன் பிறகு, மனிதனின் உதவி இல்லாமல் கம்ப்யூட்டர்கள் தங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும். இதர ஆராய்ச்சிகளிலும் தாங்களே ஈடுபடும். அந்த அளவுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் அதிரடி வளர்ச்சி ஏற்படும். மனிதர்களை கம்ப்யூட்டர் ஓவர்டேக் செய்யும் மாற்றம் அனேகமாக இன்னும் 18 ஆண்டுகளில், அதாவது 2029ல் உண்டாகும் என்று தெரிகிறது.

எல்லா ஆராய்ச்சிகளிலும் கம்ப்யூட்டரே நேரடியாக ஈடுபடும் என்பதால் முடிவுகள் துல்லியமாக இருக்கும். சரியான சிகிச்சைகள் மூலம் எல்லா நோய்களையும் விரட்ட முடியும். இதன்மூலம், சாவைக்கூட தள்ளிப்போட முடியும். மனிதனின் ஆயுள்காலம் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில், ஒட்டுமொத்த உலகமும் கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். மனிதனின் செயல்பாடுகளில், சிந்தனைகளில்கூட கம்ப்யூட்டர்கள் குறுக்கிடும். அப்போதைய சூழல் நம்முடைய புரிந்துகொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்டு இருக்கும். கம்ப்யூட்டரின் இந்த அதிரடி மாற்றங்கள் தொடர்பான அறிவை நாம் வளர்த்துக் கொள்ளாவிட்டால், நடப்பது எல்லாம் நமக்கு குழப்பமாக இருக்கும். இவ்வாறு கர்ஸ்வெல் கூறியுள்ளார்.

கல்விக் கட்டணம் கவலை தருகிறதா?- எளிதாக சமாளிக்க சூப்பர் ஆலோசனை

விலைவாசி விஷமாய் ஏறிக்கொண்டிருக்கும் இந்தக்காலத்தில் கூட மாத சம்பளம் வாங்குகிற சிலர் கவலையில்லாத மனிதர்களாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் அப்படி இல்லை என்றால் தொடர்ந்து படியுங்கள்.

பெரிய நகரங்களில் புகழ்பெற்ற தனியார் பள்ளிகளில் மூன்று மாதத்திற்கொருமுறை ஒரு குழந்தைக்கான கல்வி கட்டணம் மட்டுமே ரூபாய் 20 ஆயிரம் வரை செலவாகிறது.

கல்வி- அது கிண்டர்கார்டன் நிலையானாலும் சரி, பள்ளி இறுதி படிப்பானாலும் சரி கட்டணம் என்னவோ கட்டுக்கடங்காமல் தான் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் கல்விக்கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன, ஒர் நடுத்தர குடும்பத்தின் பட்ஜெட்டுக்கு சற்றும் பொருந்தாத வகையில்!

நாட்டின் தற்போதைய பண வீக்கம் 9.70 சதவீதமாக இருந்தாலும், சராசரியாக அது 6.50 சதவீதமே உள்ளது.ஆனால், கல்விக்கட்டணம் என்ன வீதத்தில் வீங்குகிறது தெரியுமா?

அதிகமில்லை ஜெண்டில்மேன்!

ஜஸ்ட் 18 சதவீதம் தான்.

அம்மாடியோவ்!!

உண்மைதானா?

ஒரு சர்வே நடத்தி சொன்னால் நம்பு வீர்களா?

`அசோசியேட்டட் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் ஆப் இந்தியா’ நடத்திய சர்வேயில் தான் மேற்சொன்ன உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் 15 நகரங்களிலுள்ள 2 ஆயிரம் குடும்பங்கள் பங்கேற்ற அந்த சர்வேயின் முடிவு: ஐந்து வருடங்களுக்கு முன் ஆண்டு கல்விக்கட்டணம் ரூ. 33 ஆயிரம்; அது தற்போது ரூ. 95 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது.

நம் கல்விக்கட்டணத்திற்கொரு நல்ல பண்பு இருந்ததாம்; வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர், `அது பணவீக்கத்தைப்போல் இரண்டு மடங்குதான் இருக்குமாம்’; சில காலங்களுக்கு முன்பு வரை!

ஆனால், திடீரென்று அதற்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. அதனுடைய தற்போதைய வேகம் ஏறத்தாழ மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

இப்போது ஒருவரது என்ஜினீயரிங் படிப்புக்கு ரூ. 5 லட்சம் ஆகிறதா?

எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த 5 ஆண்டுகளில் இது ரூ. 10 லட்சமாகுமாம். மேலும் 5 வருடத்தில் ரூ. 18 லட்சமாம். இது நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், இதை சமாளிக்கும் திறனை வளர்த்துக்கொள்வது நம் கையில் தான் இருக்கிறது.

இப்போதே சிந்தித்து, நீண்டகால அடிப்படையில் சேமிக்க தொடங்கினால், இது ஒரு அச்சுறுத்தும் சுமையே இல்லை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

சேமிக்க துவங்குங்கள்

ஆண்டுக்கு 12 சதவீதம் வட்டி தரும் ஏதேனும் ஒரு திட்டத்தில் மாதம் ரூ. 5 ஆயிரத்தை 15 வருடங்களுக்கு சேமித்து வந்தால், திட்ட கால முடிவில் அது சுமார் ரூ. 25 லட்சமாக வளர்ந்திருக்கும்.

அதே திட்டத்தில் மாதந்தோறும் செலுத்தும் ரூ. 5 ஆயிரத்தை ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1000 என்ற வீதத்தில் அதிகரித்துப்பாருங்கள் உங்கள் சேமிப்பு ரூ. 45 லட்சமாகும்.

சுலபமாக தோன்றுகிறதல்லவா?

சேமிக்கும் ஆர்வம் இருக்கிறது அனைவருக்கும். ஆனால், அதனை ஆரம்பிப்பதில் தான் ஏதோ ஒரு `ஸ்டார்ட்டிங் ட்ரபிள்’!

சிலர் இந்த ஆரம்பகால தடைகளை கடந்து சேமிப்பை துவங்குவதுண்டு. ஆனால், சில வருடங்களில் அதை பாதியில் நிறுத்தி பணத்தை எடுத்து குடும்பத்தோடு சுற்றுலா செல்வதும் உண்டு.

எங்கே இருக்கிறது கட்டுப்பாடு?

உண்மையில் தேவை சுய கட்டுப்பாடுதான். பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக சேமிக்க துவங்குவது தான் கல்விக்கான முதல் அஸ்திவாரம். எவ்வளவுக்கெவ்வளவு சேமிக்கிறீர்களோ அதைவைத்துதான் உங்கள் குழந்தை நல்ல நிறுவனத்தில் கல்விக்காக சேருமா அல்லது எங்கேனும் சாதாரண நிறுவனங்களில் சேருமா என்பது நிச்சயமாகும்.

கல்வி காலங்கள், தலைமுறைகளை கடந்து நடைபோடுவது. அதாவது ஒரு தலைமுறை சேமிக்க துவங்கினால் தான் அடுத்த தலைமுறையின் கல்விப்பயணத்துக்கு அது பயன்படும்.

சேமிப்பில் எத்தனையோ வகைகள் உள்ளன. அவற்றில் சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா?

கல்விக்கான இன்சூரன்ஸ் திட்டங்கள்:

யூனிட்டுகளுடன் இணைந்த இன்சூரன்ஸ் திட்டம். இது இருவித பயன்களை தருகிறது. பெற்றோருக்கு பாதுகாப்பும்; அதே நேரத்தில் என்ன நோக்கத்திற்காக இந்த திட்டம் துவங்கப்படுகிறதோ அந்த நோக்கத்தையும் நிறைவேற்றி வைப்பதுமான இரண்டு பணி களை செய்கிறது. துரதிருஷ்டவசமாக பாலிசிதாரர் காலமானால், வாரிசாக நியமிக்கப் பட்டவருக்கு ஒரு மொத்த தொகை ஈடாக கிடைக்கிறது. இதோடு பாலிசி முடிந்து போவதில்லை; மாறாக இச்சம்பவத்திற்குப்பிறகும் பாலிசி தொடர்கிறது. எப்படி? பிரிமியம் செலுத்துகிறவர் தான் காலமாகி விட்டாரே? யார் பிரிமியம் செலுத்துவது? கவலையை விடுங்கள்! பாலிசி தொடரும்!! ஆனால், தொடர்ந்து பிரிமியம் செலுத்த வேண்டியதில்லை. பாலிசியின் முடிவில், முதலில் ஒப்புக்கொண்டபடி, பணத்தை கொண்டு வந்து சேர்க்கிறது இத்திட்டம்.

சாதாரண திட்டங்களை விட இதன் பிரிமியம் சற்று அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. இத்திட்டத்தின் காலம் 12 லிருந்து 15 வருடங்களுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நலம். முகவர் நல்ல விபரம் தெரிந்தவரானால் பாலிசி குறித்த அனைத்து தகவல்களையும் உங்களுக்கு தெரிவிப்பார். முகவர்களிடம் பாலிசியின் அனைத்து பயன்களையும் தெளி வாக கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். பாலிசியை தொடர்ந்தால் மட்டுமே திட்டத்தின் முழு பலனுக்கும் நீங்கள் உரியவர்களாவீர்கள். இடையில் நிறுத்தி விடுவதானால், கிடைக்கும் பலனும் குறைவாகவே இருக்கும்.

அப்படியானால் சில வருடங்களுக்குப்பின் பாலிசியை நிறுத்தி விடலாம் என சில முகவர்கள் கூறுவது ஏன்? அப்படி ஒரு வசதியை திட்டம் தன்னுள் கொண்டுள்ளது உண்மைதான். அது பாலிசியை தொடர முடியாத அளவுக்கு தவிர்க்க முடியாத இடையூறு கள் ஏதேனும் பாலிசிதாரருக்கு ஏற்பட்டால் அப்போது பயன்படுத்திக்கொள்வதற்காக மட்டுமே.

இன்சூரன்ஸ் ஒன்று தான் சேமிப்புக்கு வழியா? வேறேதுமில்லையா? ஏனில்லை? இருக்கிறதே பரஸ்பர நிதி

பொதுவாக, இன்சூரன்ஸ் திட்டங்கள் நீண்டகால முதிர்வு கொண்டவையாக இருக்கும். உங்கள் குழந்தைக்கு இப்போதே வயது 10 என்றால், கல்லூரிக்கு செல்ல இன்னும் 7 வருடங்களே உள்ளன. எனவே பணம் தேவைப்படும் காலம் வெகு அருகாமையிலேயே இருக்கிறது. அப்படியானால் இன்சூரன்ஸ் திட்டங்கள் உங்கள் நோக்கத்திற்கு பொருத்த மாக இருக்காது. இங்குதான் உங்கள் உதவிக்கு ஓடோடி வருகிறது பரஸ்பர நிதி. சுலபமானது; அதிக செலவில்லாதது; புரிந்து கொள்வது எளிது. முதலீட்டாளர் சற்று கட்டுப்பாடு குறைந்தவராக இருக்கும் பட்சத்திலும் கூட பரஸ்பர நிதி கடினம் காட்டுவதில்லை. பரஸ்பர நிதியை பொறுத்தவரை, சந்தை ஏற்றத்திலிருக்கும் போது முதலீடு செய்ய விரும்புவதும்; சரியும் போது விலகிக்கொள்ள முனைவதும், சகஜமாக, முதலீட்டாளரிடையே காணப்படும் ஒரு மனோபாவம். இது ஒரு சரியான அணுகு முறையல்ல. முறையாகவும் தொடர்ந்தும் முதலீடு செய்யுங்கள். ஷிமிறி எனப்படும் சிஸ்ட மேடிக் இன்வெஸ்ட்மெண்ட் ப்ளான் ஒரு சரியான திட்டம். நீங்கள் விரும்பும் முதிர்வு காலம் 5 லிருந்து 8 ஆண்டுகளெனில், பரவலான பங்கு முதலீட்டு நிதி திட்டம் (Diversified Equity Fund) அல்லது சரிவிகித வளர்ச்சி திட்டங்களை (Balanced Scheme) தேர்வு செய்யலாம்.

யூனிட் திட்டமானாலும் சரி, பரஸ்பர நிதி திட்டமானாலும் சரி உங்கள் பிரிமிய தொகை என்னென்ன இனங்களில் முதலீடு செய்யப்படுகின்றன என்பதை உற்று கவனியுங்கள். ஆரம்ப காலங்களில் பங்கு முதலீடுகளிலும் திட்ட காலம் முதிர்வை நெருங்கும் போது கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யத்தக்க திட்டங்களை தேர்ந்தெடுங்கள்.

முடிவாக, குழந்தை எப்போது மேற்படிப்புக்கு செல்ல வேண்டி வரும் என்பதை அறிந்து அதற்கு ஏற்றபடி முதிர்வடையும் திட்டங்களை தேர்ந்தெடுங்கள். நோக்கத்தை அடைய வேண்டிய இலக்காக கருதி, கட்டுக்கோப்பான முறையில் சேமிக்க பழகிக்கொள்ளுங்கள். சேமித்தால் உங்கள் குழந்தையின் கல்வி அப்படி ஒன்றும் கடினமில்லை.

உங்களது இன்றைய சேமிப்பு;
உங்கள் குழந்தையின் நாளைய படிப்பு!