Daily Archives: நவம்பர் 17th, 2011

இன்று வலிப்பு நோய் தினம் : இந்தியாவில் 60 லட்சம் பேர் பாதிப்பு!

உலக வலிப்பு நோய் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 60 லட்சம் பேருக்கு இந்நோய் பாதிப்பு உள்ளது. எந்த நேரத்திலும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நோய்களில் முக்கியமானது வலிப்பு நோய். 2009ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலகில் 8.7 பில்லியன் பேருக்கு இந்நோய் பாதித்துள்ளது. இதன் எண்ணிக்கை வரும் 2017ல் 9 பில்லியனை தாண்டும் எனவும், இந்தியாவில் தற்போது சுமார் 60 லட்சம் பேரும், தமிழகத்தில் 3.5 லட்சம் பேரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இன்று உலக வலிப்பு நோய் தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் இதுபற்றி திருச்சி அரசு மருத்துவமனை துணை முதல்வரும், மூளை நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் நிபுணருமான டாக்டர் அலீம் கூறியதாவது: நாடா புழுக்கட்டிகள் மற்றும் காசநோய் கிருமிகள் மூளையை தாக்குவதால் ஏற்படக்கூடிய வலிப்பு நோய்கள் தான் தமிழகத்தில் அதிகம். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் வலிப்பு நோய் ஏற்படும். போதை, மது, தலைக்காயம், மூளைக்கான ரத்தக்குழாய் மாற்றம் ஆகியவற்றாலும் வலிப்பு ஏற்படலாம்.

வலிப்பு நோய் உள்ளவர்களின் உறவினர்கள் மூளை வரைபடத்தை (இ.இ.ஜி) பார்த்தபோது அவர்களுக்கு வலிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் 6 மடங்கு அதிகமாக உள்ளது. இதனடிப்படையில் வலிப்பு நோய் பரம்பரை நோயாக தோன்றலாம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. வலிப்பு நோய் பகல் நேரத்தில் 42 சதவீதம் பேருக்கும், இரவு நேரங்களில் 24 சதவீதம் பேருக்கும், சிலருக்கு தூங்கும்போதும் ஏற்படுகிறது.

வலிப்பு நீக்கி மருந்துகளுடன் கூடிய மருத்துவ சிகிச்சை மூலம் 100 சதவீதம் குணமடைய முடியும். முறையாக சிகிச்சை பெறுபவர்களில் 60 முதல் 80 சதவீதம் பேருக்கு வலிப்பு நோய் தடுக்கப்படுகிறது. இந்நோய்க்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டியதில்லை. 3 ஆண்டுகள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். வலிப்பு நோய் உள்ளவர்கள் தாரளமாக திருமணம் செய்து கொள்ளலாம். அச்சம் கொள்ள தேவையில்லை. இவ்வாறு டாக்டர் அலீம் கூறினார்.

பாதிக்கப்பட்டோர் தவிர்க்க வேண்டியவை
ச் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவதையோ, உயரமான இடங்களிலோ, ஆபத்தான இயந்திரங்களிலோ, நீருக்கு அடியிலோ வேலை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
ச் வலிப்பு நோய் ஏற்பட்டவர்களின் அருகில் கூரான கற்கள் மற்றும் பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் இரு தாடைகளுக்கும் இடையில் பற்களையும், நாக்கையும் பாதிக்காத வகையில் சுவாசத்திற்கு இடையூறு இல்லாத வகையில் கர்சீப் வைக்கலாம்.
ச் தரையில் விழுந்தவுடன் ஒருக்களித்து இருக்குமாறு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உமிழ்நீர், எச்சில் போன்றவை மூச்சுக்குழல் வழியாக சென்று மரணம் ஏற்படுத்துவதை தடுக்க முடியும்.
ச் வலிப்பு நோயால் துடிக்கும் நபரிடம் சாவிக்கொத்து, கத்தி உள்ளிட்ட கூரான ஆயுதங்களை கொடுக்கக்கூடாது.

போதிய நிதி வழங்கிட மத்திய அரசு மறுப்பு : பஸ் கட்டணம் – பால் விலை உயர்வு

தமிழக அரசுக்கு மத்திய அரசு உரிய நிதி உதவி வழங்காததால் தமிழகத்தின் பொது துறை நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றும், கடந்த கால தி.மு.க., ஆட்சியின் அவலத்தினால் தமிழகம் பெறும் கடன் சுமையை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், தமிழகத்தை மின் மிகை மாநிலம் என்பதில் இருந்து மின் பற்றாக்குறை மாநிலமாக உருவாக்கிய பெருமை கருணாநிதிக்கே சேரும் என்றும் பரபரப்பாக பேசினார். இதனை சமாளிக்க பஸ், பால், மின் கட்டண விலையை உயர்த்திட முடிவு செய்திருப்பதாக முதல்வர் ஜெ., இன்று அறிவித்தார்.

இன்று காலையில் முதல்வர் ஜெ., தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் ஜெ., தொலைக்காட்சி மூலம் பேசினார். இந்த பேச்சில் அவர் கூறியதாவது:

 

மத்திய அரசு மாநில அரசுக்கு கேட்ட நிதியை வழங்க மறுத்து வருகிறது. போதிய நிதி இல்லாததால் சிரமப்பட்டு வரும் ஆக்ஸிஜன் வழங்கி மத்திய அரசு உதவி வேண்டும். ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மம்தா ஆளும் மேற்குவங்கத்திற்கு 2 ஆயிரத்து 614 வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் 2005 – 2006 ல் 4 ஆயிரத்து 915 கோடி கடனாக இருந்தது. ஆனால் கருணாநிதி ஆட்சியில் 40 ஆயிரத்திற்கும் மேலாக கடன் சுமை ஏற்பட்டது. இநத நிலை நீடித்தால் இன்னும் 53 ஆயிரம் கோடியை எட்டும் அளவிற்கு மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

கருணாநிதியின் அரசின் தவறான நடவடிக்கையால் போக்குவரத்து துறை பெரும் நஷ்டத்தில் இயங்குகிறது. எரிபொருள் விலை உயர்வு, ஊதியம் மற்றும் ஓய்வூதிய செலவு காரணமாக மேலும் போக்குவரத்து துறையை சீரமைக்க முடியாமல் இருக்கிறது. போக்குவரத்து கழகம் 6 ஆயிரத்து 150 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. பல பஸ்கள் கோர்ட்டில் ஜப்தி செய்யப்பட்டு கிடக்கிறது. இதனை மீட்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் பஸ் கட்டணத்‌தை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. மண்ணெண்ணெய், மின்சாரம் தராமல் மத்திய அரசு செயல்படுகிறது. மாநில அரசு அறிவித்த இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு நிதி வழங்கவும் மறுத்து வருகிறது. மத்திய அரசு நிதி வழங்காததால் மாநில அரசு பெரும் சுமையை தாங்க வேண்டியுள்ளது. என்று பேசினார். மின் துறையை ப‌ொறுத்த வரை தமிழக அரசு வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கிட 550 கோடி ஒதுக்கியது. இன்னும் நிதி ஒதுக்கும் நிலையில் தமிழகத்திற்கு சிரமம் ஏற்படும். மின்சாரம் கட்டணம் விரைந்து உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் ஒழுங்கு முறை ஆணையத்திற்கு தெரிவித்து பின்னர் மக்களின் கருத்துப்படி விலை உயர்த்தப்படும். விவசாயிகள், நெசவாளருக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இதன் காரணமாக பஸ் கட்டணம் மற்றும் ஆவின் பால் விலையும் உயர்த்தப்படுகிறது என முதல்வர் ஜெ., அறிவித்துள்ளார்.

அய்யோ., பஸ் கட்டணம் எவ்வளவு உயர்கிறது ? : இதன் படி கட்டண உயர்வு விவரம் வருமாறு: பஸ் கட்டணம் சென்னை தவிர ஏனைய மாவட்டங்களில் குறைந்த பட்ச பேரூந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன் படி சென்னையில் 2 முதல் 3 ரூபாய் வரையும், மாநிலத்தில் நகர்ப்புற பஸ்களில் கி.மீட்டருக்கு 28 பைசாவில் இருந்து 42 பைசாவும், வெளியூர் பஸ்களில் கி.மீட்டருக்கு 32 பைசாவில் இருந்து 56 பைசாவாகவும், சூப்பர் டீலக்ஸ்சில் மற்றும் சொகுசு ‌பஸ்களில் கி.மீட்டருக்கு 38 பைசாவில் இருந்து 60 பைசாவாகவும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் 52 பைசாவில் இருந்து 70 பைசாவா உயர்த்தி வசூலிக்கப்படும். நகர பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் 3 ரூபாயாகவும், அதிக பட்சம் 13 லிருந்து 16 ஆகவும் இருக்கும். ஆவின் பால் லிட்டருக்கு 17. 75 லிருந்து 24 ஆக ( 6. 25 ) உயர்த்தப்படுகிறது. விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையும் உயர்த்தி வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் பசும்பால் கொள்முதல் விலை ரூ. 18லிருந்து 20 ஆகவும், ஒரு லிட்டர் எருமைப்பால் கொள்முதல் விலை ரூ. 26லிருந்து 28 ஆக உயர்கிறது.

 

தொலைகாட்சி மூலம் பேசிய முதல் முதல்வர்: தமிழகத்தில் முதல்வர்கள் அறிவிப்பு ஆணையாகவும் ஒட்டு மொத்த நிருபர்கள் சந்திப்பின் போதும் அறிவிக்கப்படும். ஆனால் ஜெ., இந்த முறை யாரும் கடைபிடிக்காத அவரது தொலைக்காட்சி மூலம் சிறப்பு பேட்டி என்ற பெயரில் அனைத்து விஷயங்களையும் வெளியிட்டார்.

 

விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு : தமிழகத்தில் திடீரென அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என தி.மு.க., பா.ஜ., இடதுசாரி உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தேவைப்பட்டால் போராட்டம் என்கிறார் கருணாநிதி : தி.மு.க., தலைவர் கருணாநிதி பஸ், பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ; இந்த விலை ஏற்றத்திற்கான காரணம் என்ன என்பதை அறிந்து தி.மு.க., தனது நிலையை அறிவிக்கும், தேவைப்பட்டால் போராட்டமும் நடத்தப்படும் என

உள்ளம் கவரும் எல்லோரா

எல்லா மதங்களும் அன்பøத்தான் போதிக்கின்றன என்றாலும். நவீன விஞ்ஞான யுகத்தில் மதங்கள் என்ற பெயரில் அடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதைத் தவிர்த்து. வேற்றுமையில் ஒற்றுமையை காண அற்புதமான கலை பொக்கிஷங்களை நம் முன்னோர்கள் உருவாக்கி சென்றிருக்கிறார்கள். அவற்றுள் ஒன்றுதான் சரணதாசி குன்றுகளின் மடியில் அமர்ந்திருக்கும் எல்லோரா குகைக்கோயில்கள்.
அவுரங்காபாத்திலிருந்து 29 கி.மீ வடமேற்கு திசையில் பயணித்தால் எல்லோரா கோயில்களை அடைந்துவிடலாம். எல்லோரா ஒரு அழகிய சிறு கிராமாகவும் பண்டைய இந்தியாவின் வர்த்தக இணைப்புத் தலமாகவும் இருந்திருக்கிறது. இந்த கிராமத்தை சுற்றி இருந்த குன்றுகளில் கோயில்களை, 14வது நூற்றாண்டு வரை மக்கள் சென்று வழிப்பட்டிருக்கின்றனர். 17 இந்து கோயில்கள், 5 சமணக்கோயில்கள் என பௌத்த குகைகளை பார்த்துவிட்டு வரலாம்.
அடுக்குமாடி தோற்றத்துடன் அமைந்திருக்கும் பௌத்த குகைகளின் உள்ளே துறவிகள் வாழ்வதற்கான மடங்கள் அமைந்திருக்கின்றன. சமையல் கூடம், ஒன்றாக கூடி பிரார்த்தனை செய்யும் இடங்கள் என அமைந்திருப்பது ஆச்சர்யம். சில குகைகளில் கௌதம புத்தரின் சிலையும், பௌத்த துறவிகளின் சிலைகளும் செதுக்கப்பட்டிருக்கின்றன. 10வது எண் குகையை விஸ்வகர்மா குகை என்று அழைக்கிறார்கள். ” கார்பன்டர்ஸ் கேவ்’ என்ற செல்ல பெயரும் இதற்கு உண்டு. பார்ப்பதற்கு மரப்பலகைகள் போல் இருக்கும் மேற்கூரைகள், நிஜத்தில் குடைந்து மரப்பலகைப் போன்ற அமைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் கல்தச்சர்கள். பார்த்த கணத்தில் “வாவ்’ என்று நம்மையும் அறியாமல் நம் உதடுகள் உச்சரிக்கும்.
அடுத்து இந்துக்களின் குகைக் கோயில்கள் இதில் 16வது எண் குகையில் உள்ள கைலாசநாதர் கோயில் உலகப் புகழ் பெற்றது. சிவபெருமானின் உறைவிடமான கைலாய மலையை, அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் இந்த குகைக் கோயில் ஒரே பாறையினால் உருவாக்கப்பட்டது. ஏதென்ஸில் இருக்கும் பார்த்தினானைப் போல, இரண்டு மடங்கு சுற்றளவு கொண்டது. இந்த கோயிலை சிற்பிகள் மேலிருந்து கீழ்நோக்கி செதுக்கி வந்திருக்கிறார்கள். இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த கோயிலின் நுழைவாயில் அழகிய வடிவிலான ராஜசபையில் முடிகிறது. பல்வேறு தெய்வச்சிலைகள் அலங்கரிக்கும் இந்த கோயிலை, பெரிய பெரிய கல்யானைகள் தாங்கி நிற்பது போன்ற தோற்றத்துடன் வடிவமைத்திருக்கிறார்கள்.
ஜன்னல்கள், பக்தர்கள் கூடும் பிரார்த்தனைக் கூடங்கள், பர்த்தவுடன் காதலாகி கசிந்து உருக வைக்கும் பிரம்மாண்டமானலிங்கம், நந்தி, ஆண், பெண் உருவங்கள், நுழைவாயிலின் இடது புரம் நயன்மார்கள், வலதுபுறம் ஆழ்வார்கள், இரண்டு கொடிக்கம்பங்கள் என்று அழகு மிளிரும் இந்த இடத்தை காண கண்கோடி வேண்டும். இந்தக் கலைப் பொக்கிஷத்தின் கிரீடத்தில் பதித்த வைரமாக ஜொலிக்கிறது… கைலாய மலையைத் தன் பலத்தையெல்லாம் கொண்டு தூக்க முயலும் இந்தக் கோயிலை குடைந்து உருவாக்க கட்டிட வல்லுனர்களுக்கும், சிற்பிகளுக்கும் 100 வருடங்கள் ஆனதாம், இந்தகோயில் பணியை தொடங்கியவர் ராஷ்ட்ரகூட வம்சத்தை சேர்ந்த அரசர் கிருஷ்ணா,
இவரால் தான் தென்னிந்திய முறையில் இந்த கோவில் அழகுமிளிர கட்டப்பட்டது. இந்த கோயிலை பற்றி, ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் பிரமிக்க வைக்கிறார் கைலாய நாதர். அடுத்த முக்கியமான குகைக் கோயில் தசாவதராக் கோயில், இதில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
சமண குகைக் கோயில்கள் மற்ற இரண்டு குகைக்கோயில்களைப் போன்று பெரியதாக இல்லாவிட்டாலும், கலை நுணுக்கம் மிகுந்து இருக்கிறது. 30வது எண் குகைக் கோயிலின் கூரையை ஒரு அழகான தாமரை மலர் அலங்கரிக்கிறது. மற்றொரு குகையில் மாமரத்தின் கீழே ஒரு யக்ஷி புலி மீது அமர்ந்திருக்கிறார். மரத்தில் தொங்கும் மாங்கனிகள் தத்ரூபாக இருப்பதால், பறித்து தின்னும் ஆவல் நமக்குள் தானாக எழும்புகிறது.
“மார்வல்ஸ்! ஆஸம்!” என்று ஆர்ப்பரித்தபடியே ஒரு ஜரோப்பிய தம்பதியர், புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அருகில் சென்று விசாரித்த போது” உலகையே சுற்றி வந்திருக்கிறோம். ஆனால் எங்கள் மனதை இந்த இடம் கொள்ளை கொண்டது போல வேறு எந்த இடமும் ஈர்க்கவில்லை!” என்றனர். நீங்களும் புறப்படுங்கள்! எல்லோரா குகைக் கோயில்களை கண்டு மகிழுங்கள். இந்த ஜென்மத்திற்கான பயனை அனுபவியுங்கள்.
எப்படி செல்லலாம்?: விமானம் மூலமாக அவுரங்காபாத் சென்று, அங்கிருந்து எல்லோரா குகைக் கோயிலை அடையலாம். ரயில் மார்க்கமாக செல்வதென்றால், ஜல்கான் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கார் மூலமோ, பேருந்து மூலமோ எல்லோராவுக்கு செல்லலாம். செலவு: ரூ.3000 – ரூ. 5000 / ஒரு நபருக்கு.

குழந்தைக்கு என்ன உணவு தருவீங்க!

*குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.

*குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

*உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது. அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.

உணவு சாப்பிட மறுத்தால்

*சில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.

*சில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.

*ஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

*சில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும்.

*அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.

நன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும். உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.

*குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும் வேக வைத்து மசித்த காய்கறிகள்:

*பழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.

*முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.

*இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.

*ஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.

*எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும்.

*அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும். பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.

நீர்மூழ்கிக் கப்பல்!

நீர்மூழ்கிக்கப்பல் தண்ணீரில் அமிழ்வதற்குத் தேவையான நடவடிக்கை மிகவும் எளிதானது. நீர்மூழ்கிக்கப்பலின் எடை, அதை மிதக்க வைக்கும் தண்ணீரின் சக்தியை விட அதிகரிக்கும்படி செய்கிறார்கள். இதை எப்படிச் செய்வது? நீர்மூழ்கிக்கப்பலை மிதக்க வைக்கும் காற்று அடங்கிய டாங்குகளில் கடல் தண்ணீர் புகவிடுகிறார்கள். காற்றின் இடத்தைக் கடல் தண்ணீர் பிடித்துக்கொள்கிறது.

நூற்றுக்கணக்கான டன் எடையுள்ள தண்ணீர், டாங்குகளில் நிறைகிறது. அதன் விளைவாக நீர்மூழ்கிக்கப்பலின் எடை அதிகரிக்கிறது. அதன் இருப்பில் உள்ளதாகக் கருதப்படும் மிதக்கும் திறன் அகற்றப்படுகிறது. இருப்பில் உள்ள மிதக்கும் திறன் என்றால் என்ன? நீர்மூழ்கிக்கப்பல் மிதக்கும்போதும், முழுமையாக அமிழும்போதும் இடர்ப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரின் எடைக்கு இடையே உள்ள வித்தியாசம்.

நீர்மூழ்கிக்கப்பல், அதன் டாங்குகளில் உள்ள தண்ணீர் இரண்டின் எடையும் சேர்ந்து இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரின் எடையை விட அதிகமாக இருந்தால் நீர்மூழ்கிக்கப்பல் மூழ்கிவிடும். அதிகபட்சமாக நீர்மூழ்கிக்கப்பல் 600 அடி ஆழம் வரை செல்லலாம். அதற்கு அதிகமான ஆழத்தில் நீர்மூழ்கிக்கப்பலின் உடற்பகுதியை தண்ணீர் பயங்கரமாக அழுத்தும் அபாயம் ஏற்படும்.

நீர்மூழ்கிக்கப்பலை ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் நிறுத்தி வைப்பதற்கு மின்சார மோட்டார்கள் மூலம் அதிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதாவது நீர்மூழ்கிக் கப்பலின் எடை, இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரின் எடைக்குச் சமமாகும்வரை தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அப்போது நீர்மூழ்கிக்கப்பல் மேலேயும் போகாது, கீழேயும் போகாது.

நீர்மூழ்கிக்கப்பல், கடல் மட்டத்துக்கு வருவதற்கு டாங்குகளில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. அப்போது நீர்மூழ்கிக்கப்பலின் எடை, இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரை விட இலேசாகிவிடுகிறது. கப்பலும் மேலே வந்துவிடுகிறது.