Daily Archives: நவம்பர் 18th, 2011

பாலைவன மஞ்சள் ரோஜா-ஜெய்சால்மர் கோட்டை

மன்னராட்சி மாய்ந்துவிட்டது. மகுடங்கள் சாய்ந்து விட்டன. மக்களாட்சி வீறுகொண்டு நடக்கிறது என்கிற காலகட்டம் இது. ஆனாலும், கற்சுவர்களால் கைகோர்த்து, கோட்டை என்று பெயர் பெற்று, மன்னர்களையும் அவர்தம் வம்சாவளிகளையும், மக்களையும் காத்து இன்றளவும் அழியாமல் தலைநிமிர்ந்து நிற்கின்ற கோட்டைகள், இந்த பாரததேசம் முழுவதும் ஆங்காங்கே நிலை கொண்டு, மன்னராட்சியை நினைவூட்டுகின்றன. அப்படி உயிர்ப்போடு இருக்கும் கோட்டையை கண்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்சால்மர் கோட்டைக்கு ஒருமுறை போய் வாருங்கள். அந்த கோட்டைக்குள் இன்றளவும் மக்கள் இன்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

தார் பாலைவனத்தின் மத்தியில், திரிகுடா குன்றின் தலையில் சூட்டப்பட்ட கிரீடம் போல், தரையிலிருந்து முப்பது மீட்டர் உயரத்தில், விஸ்வரூப தரிசனம் தருகிறது ஜெய்சால்வர் கோட்டை. மஞ்சள் நிற மணல் கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் இக்கோட்டை, பகல் நேரத்தில் சூரியக் கதிர்களால் தங்கம் போல் ஜொலிக்கிறது. இதனால் தங்கக்கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பெயரிலேயே, இந்த கோட்டையின் சரித்திரத்தை மையமாக வைத்து தான் எழுதிய நாவலை படமாக்கியிருக்கிறார் சத்யஜித் ரே.

ஜெய்சால்மர் கோட்டையை 1156ல், பகதிராஜபுத்திர வம்சத்தை சார்ந்த அரசர் ஜெய்சால் என்பவர் கட்டியிருக்கிறார். இதை கட்டி முடிக்க ஏழு ஆண்டுகள் ஆனதாம். போர்க்காலங்களில் பகைவர்களின் தாக்குதலை சமாளிக்கும்படி 3 பாதுகாப்பு சுவர்களை கொண்டிருக்கிறது இந்த காவல் கோட்டை.

கோட்டையின் உட்பகுதி. இங்கே ஒரு இந்தியனின் சராசரி வாழ்க்கை அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பரபரப்பாக ஓடிக் கொண்டிதருக்கும் மனிதர்கள், தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்றுக் கொண்டிருக்கும் வியாபாரி, சீருடை அணிந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், உல்லாச நடைபோடும் வெளிநாட்டுப் பயணிகள், அவர்களுக்காக திறக்கப்பட்டு இருக்கும் பிரெஞ்சு, இத்தாலிய உணவகங்கள், விரையும் வாகனங்கள், பால் கேன்களை தூக்கிசெல்லும் பால் விற்பவர்கள் என மன்னர்கள் காலத்தில் இங்கே வாழ்ந்த மக்களின் வம்சாவளிகள் இன்றுவரை இடம் பெயராமல் வாழ்கிறார்கள். மக்கள் தொகை அதிகமானதால், கோட்டையின் வெளியே உள்ள இடங்களை சுற்றியும் குடியேறி இருக்கிறார்கள்.

பச்சை பசேல் என பரந்திருக்கும் தோட்டங்கள். அதன் நடுவே அழகிய பூக்களை தாங்கி நிற்கும் செடிகள். பின்னணியில், மனதை சுண்டி இழுக்கும் “ராஜ்மஹால்’ அரண்மனை! அரண்மனையின் ஏழுமாடி கட்டிடம் அருங்காட்சியமாக ஆக்கப்பட்டிருக்கிறது. மகாராணிகளின் விலை உயர்ந்த ஆடைகள், போர்க்கால ஆயுதங்கள், சமைக்க உபயோகப்படுத்திய பாத்திரங்கள் என்று வகைப்படுத்தி, இங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்ட அரண்மனையின் கதவுகள், ஜன்னல்கள், முற்றங்கள், ஓவியங்கள் என அழகு மிளிரும் அத்தனையும்… மாடிப்படிகளில் ஏறிவந்த தேக அசதியை விரட்டி விடுகின்றன. ஒவ்வொரு மாடியிலிருக்கும் ஜன்னல்கள் வழியாக ஜெய்சால்மர் நகரத்தின் அழகை கண்டு ரசிக்கலாம்.

ஜெய்சால்மர் கோட்டையின் உள்ளே 15, 16 நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட ஏழு சமணக் கோவில்கள் உள்ளன. இவை தவிர, இங்கிருக்கும் இந்துக்களின் கோவிலான லஷ்மிநாத் புகழ்பெற்றது. 1494ல் கட்டப்பட்ட இக்கோவிலில் இருக்கும் லஷ்மி விக்கிரகத்தின் பேரழகு, பார்ப்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.

ஜெய்சால்மரில் அளவில்லா செல்வங்களை வியாபாரத்தின் மூலம் ஈட்டி, வியாபாரிகள் கட்டிய வீடுகளை ஹவேலிகள் என்று அழைக்கிறார்கள். மிக நேர்த்தியான, நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடி இந்த கட்டிடங்களின் வயது பல நூறு ஆண்டுகள், எண்ணற்ற அறைகள், அலங்கார வளைவுகள், எழில் கொஞ்சும் கதவுகள், ஜன்னல்கள் என சுற்றி சுழலும் நம் கண்கள், படைத்தவனுக்கு பரவசமாய் நன்றி சொல்வது நிச்சயம். இந்த வீடுகளில் சில, அருங்காட்சியமாக ஆக்கப்பட்டுள்ளன. பலவற்றில், அதன் உரிமையாளர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில்…. வியாஸ் ஹவேலி, ஸ்ரீநாத் பேலஸ் போன்றவை நாம் கட்டாயமாக பார்க்க வேண்டியவை.

வெயில் மயங்கும் மாலை நேரம். கோட்டையிலிருந்து வெளிவந்து திரும்பி பார்க்கையில் பாலைவனத்தில் பூத்த மஞ்சள் ரோஜாவாக ஜெய்சால்மரின் அழகு மனதில் நிறையும்.

எப்போது போகலாம்?

அக்டோபர் முதல் மார்ச் வரையிலின மாதங்கள் ஜெய்சால்மர் பயணத்திற்கு உகந்தவை.

எப்படி போகலாம்?

ஜோத்பூர் வரை விமானம் அல்லது ரயில் மூலம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக ஜெய்சால்மர் செல்லலாம்.

உதவிக்கு

ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் போன்: 02992 252406

நமது உடம்பு ஓர் அதிசயம்!

எது எதுவோ அதிசயம் என்று பேசுகிறோம். ஆனால் நமது உடம்பே ஓர் அதிசயம்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நாம் பிறக்கும்போது நமது உடலில் 270 எலும்புகள் அமைந்திருக்கின்றன. ஆனால் வளர்ச்சி அடைந்தவுடன் அவற்றில் 64 எலும்புகள் காணாமல் போய்விடுகின்றன. மனிதன் முதுமைப் பருவமடைந்து இறக்கும்போது 206 எலும்புகளே
எஞ்சியிருக்கின்றன. குறிப்பிட்ட எலும்புகள் எப்படிக் காணாமல் போகின்றன? அவை மற்ற எலும்புகளுடன் இணைந்துவிடுகின்றன.

நமது உடம்பில் தேவைக்கேற்ப மின்சாரமும் உள்ளது. இந்த மின்சாரத்தைக் கொண்டு 25 வாட் மின்சார விளக்கை எரியவிடலாம். அல்லது நான்கு கெட்டில்கள் நிறையத் தண்ணீரைக் கொதிக்க விடலாம்.

ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 52 டன் எடையுள்ள உணவை உண்கிறான். 19 ஆயிரம் காலன் திரவங்களை அருந்துகிறான்.

 

இனிய இதயமே நீ நலமா…

மனித வாழ்க்கையில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் சொல் எது தெரியுமா?

– இதயம்.

காதலன், காதலியிடம் “உன் இதயத்தை தொட்டுச் சொல்.. உண்மையிலே என்னை காதலிக்கிறாயா?”-என்பான். அவள், அவனுக்கு சில நேரங்களில் பாராமுகம் காட்டினால், “உனக்கு இதயமே இல்லையா.. உன் இதயத்தில் கருணையே இல்லையா?”- என்று கேட்பான்.

சோகமான ஒரு விஷயத்தை நாம் கேட்கும்போது, “என் இதயமே நொறுங்கிவிட்டது”- என்போம். மகிழ்ச்சியான விஷயத்தை கேட்கும்போதும், ஒருவரை அன்போடு வாழ்த்தும் போதும் “இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்”- என்று கூறுவோம்.

இதயம் என்ற சொல்லுக்கு நமது அன்றாட வாழ்க்கையில் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதால், நமது உடலில் இதயம் மிக முக்கியமான உறுப்பு என்பது நமக்கு தெரியத் தான் செய்கிறது. மனிதன் தாய் வயிற்றில் கருக்கொள்ளும் சில வாரங் களிலே இதய துடிப்பு மூலம், `இதோ நான் உருவாகிவிட்டேன்’ என்று உயிரின் தொடக்கத்தை உருவாக்கி, மரணம் வரை நமக்காக துடித்துக்கொண்டே இருக்கும் அந்த இனிய இதயத்தை நாம் நல்ல முறையில் பராமரிக்கிறோமா?

பெரும்பாலானவர்கள் இல்லை என்றுதான் சொல்வார்கள். அதனால்தான், `நேற்று ராத்திரிதான் என்னோடு சிரித்து பேசிக்கொண்டிருந்தார். இன்றைக்கு காலையிலே அவர் செத்து போயிட்டார்ன்னு தகவல் வந்தது. என்னால நம்பவே முடியலேப்பா.. ஹார்ட் அட்டாக்ல இறந்திட்டாராம்..’ என்ற உரையாடலை தெருவுக்கு தெரு அடிக்கடி கேட்க முடிகிறது.

ஹார்ட் அட்டாக் இருதலைக்கொள்ளி போன்றது. எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாமல், வந்த சுவடே தெரியாமல் சத்தமின்றி சாகடித்து விடவும் செய்யும். `நெஞ்சு வலிக்கிறது.. இதோ அளவில்லாமல் வியர்க்கிறது.. என்னென்னு சொல்லத் தெரியலை ஆனா என்னென்னவோ பண்ணுது..’ என்று சொல்லும் அளவுக்கு அறிகுறிகளை தந்து உஷார் படுத்தி, சாகடித்து விடவும் முயற்சிக்கும். அதனால், `அப்படியும் நடக்கலாம். இப்படியும் நடக்கலாம்.. எப்படியும் நடக்கலாம்’ என்று பயப்படுத்துகிறது, ஹார்ட் அட்டாக்!

குடும்பத்தின் தலைவன் இந்த நோய்க்கு பலியாகிவிட்டால் அந்த குடும்பமே நிலைகுலைந்து போகிறது. பணக்கஷ்டத்தில், துக்கத்தில், சோகத்தில் தடுமாறி அப்படியே கவிழ்ந்துபோன குடும்பங்களும் உண்டு. ஆனால் பயப்பட வேண்டியதில்லை. இதயத்தை பரிசோதித்து (மருத்துவமுறையில்) நலம் விசாரித்து, ஹார்ட் அட்டாக் வரும் முன்பே அதை கண்டறிந்து, பராமரித்தாலே போதும், இதயம் நன்றாக இயங்கும்.

சரி, அறிகுறி தெரிந்த உடனே அடுத்து என்ன செய்யவேண்டும்?

மேற்கண்ட அறிகுறிகளில் எது இருந்தாலும், அலட்சியம் செய்யக்கூடாது. உடனே டாக்டரை அணுகவேண்டும். முதலில் ஈ.சி.ஜி. எடுத்து பார்ப்பார்கள். அதில் சீரற்ற நிலை இருந்தால், அடுத்தகட்ட பரிசோதனைகளை தொடர வேண்டும். சிலருக்கு நுரையீரல் தொடர்புடைய வலி இருந்தாலும், இதயப் பகுதியில் வலிக்கும். சிலருக்கு ஈ.சி.ஜி.யில் மாற்றம் இருக்கும். ஆனால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்காது. அதனால் அவசரப்பட்டு மருந்து சாப்பிட்டுவிடக் கூடாது. ஈ.சி.ஜி. தொடக்க பரிசோதனை முறைகளில் ஒன்று. ஆனால் அது மட்டுமே 100 சதவீத திருப்தியான பரிசோதனை முறையில்லை.

அடுத்தகட்டமாக Trop-T என்ற பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். இது ஒரு சிறிய பேண்ட்டேஜ் துண்டுபோன்றிருக்கும். அதில் ஒரு சொட்டுக்கும் குறைவான அளவில் ரத்தத்தை எடுத்து வைத்து பரிசோதிக்க வேண்டும். ஒரு கோடு விழுந்தால் அவருக்கு இதய பாதிப்பு இல்லை என்றும், இரு கோடுகள் விழுந்தால் பாதிப்பு ஏற்பட்டிருப் பதாகவும் உணரலாம்.

ஒருவரின் இதயத்தில் பாதிப்பு இருப்பதாக கண்டறிந்துவிட்ட பின்பு, அந்த பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை உடனே கண்டறிந்தால்தான் அதற்கு தக்கபடி முழுமையான சிகிச்சையை திட்டமிட்டு அளிக்க இயலும். பாதிப்பின் அளவை கண்டறிவதற்கு ஆஞ்சியோ முறை உதவும்.

தொடையில் இருக்கும் முக்கிய ரத்தக் குழாய் வழியாக குழாயை விட்டு, இதயப்பகுதிக்கு ரத்தம் கொடுக்கும் குழாய் அருகில் கொண்டு சென்று `ஹூக்’ செய்து, அழுத்தம் கொடுத்து அடைப்பு இருக்கிறதா என்று பார்ப்பார்கள். இது ஒருசில பாதிப்புகள் கொண்ட பழைய பரிசோதனை முறையாகும்.

அதற்கு மாற்றாக இருக்கும் நவீன பரிசோதனை முறை `64 சிலைஸ் சி.டி. கொரோனரி ஆஞ்சியோகிராம்’ எனப்படுகிறது. ஐந்து வினாடிக்கும் குறைவான நேரத்தில் இந்த பிரமாண்ட ஆஞ்சியோ ஸ்கேன் கருவி, ஒருவரின் இதயப் பகுதியை 64 விதமாக துல்லியமாக படம் எடுத்துவிடுகிறது. நவீன கம்ப்யூட்டர்களில் அதைப் பார்த்து எந்த பகுதியில், எந்த அளவில் அடைப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிந்துவிடலாம்.

சாப்பிட்டு 2 முதல் 3 மணிநேர இடைவெளிக்கு பிறகு இந்த பரிசோதனைக்கு வரவேண்டும். முதலில் ஈ.சி.ஜி. எடுத்துப் பார்ப்பார்கள். அவரது இதயத் துடிப்பு 80-க்கு கீழ் இருக்கவேண்டும். இதயம் கண் இமைக்கும் நேரத்தில் விரிந்து, சுருங்கும் தன்மை கொண்டது. அதற்கு இடைப்பட்ட நேரத்தில், இதயத்தை இந்த கருவி படமெடுக்கும். அதனால் இதயம் அதிக வேகத்தில் துடித்துக்கொண்டிருந்தால், எடுக்கப்படும் படங்கள் அவ்வளவு துல்லியமாக இருக்காது. ஆகவே இதயம் வேகமாக துடித்தால், இந்த பரிசோதனையின்போது அருகில் இருக்கும் இதயநோய் நிபுணர் துடிப்பை கட்டுப்படுத்த மருந்து கொடுப்பார்.

இதய துடிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பின்பு, கருவியில் படுக்கவைக்கப்படுவார். அப்போது கையில் `காண்ட்ராஸ்ட் இன்செக்ஷன்’ அதற்குரிய கருவி மூலம் செலுத்தப்படும். அந்த மருந்து இதயப் பகுதிக்கு செல்லும்போது 5 வினாடிகள் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் ஸ்கேன் கருவி, சர்ரென்று வேலை செய்து, படம் பிடித்து, கம்ப்யூட்டர் திரைகளில் துல்லியமாக எங்கெங்கு அடைப்பு இருக்கிறது என்பதைக் காட்டும்.

நமது இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் முக்கிய பணியை மூன்று ரத்தக் குழாய்கள் மேற்கொள்கின்றன. அதில் ஒன்றிலோ, இரண்டிலோ அடைப்பு ஏற்பட்டிருந்தால் அவைகளில் ஷிåமீஸீå வைப்பார்கள். மூன்றும் அடைத்திருந்தால் உடனடியாக `பைபாஸ்’ ஆபரேஷன் செய்வார்கள். அதன் மூலம் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு தவிர்க்கப்படும்.

மாரடைப்புக்கு காரணமான இதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை கண்டுடிக்க மட்டுமே இந்த ஆஞ்சியோகிராம் சி.டி.ஸ்கேன் கருவி பயன்படும் என்பதில்லை. ஏற்கனவே ஸ்டென்ட் இணைத்தவர்களுக்கு அது சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கும், பைபாஸ் ஆபரேஷன் செய்தவர்களுக்கு அந்த பகுதியின் செயல்பாடு திருப்தியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கும் இந்த ஸ்கேன் பரிசோதனை உதவும்.

இன்று மனிதர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், மனஅழுத்தம் போன்றவைகளால் 30 வயதுவாக்கிலே இளைஞர் களுக்கு இதயநோய் ஏற்படுகிறது. வந்த பின்பு அதை தடுப்பதற்கும், தவிர்ப்பதற்கும் போராடுவதைவிட வரும்முன்பே இந்த நவீன சி.டி.ஸ்கேன் மூலம் இதயத்தை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

நாம் தாய் வயிற்றில் கருவாகி, உருவாகும்போதே துடிக்க ஆரம்பித்து, நாம் பிறந்து, வளர்ந்து உயிர்வாழும் கடைசி வினாடி வரை இடைவிடாது துடித்து நம்மை இயக்கும் இதயத்தை துவண்டு விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. இதயத்தின் ஆரோக்கியமே இல்லத்தின் ஆரோக்கியம்.

கட்டுரை: டாக்டர் ஆர். இம்மானுவேல் M.D.(R.D)

சென்னை – 14.

***

சரி! எந்த அறிகுறியும் இன்றி எந்த சூழலில்,
யாரை, ஹார்ட் அட்டாக் தாக்கும்?

– ரத்த அழுத்தம் 130/80 என்ற சராசரி நிலைக்கு மேல் இருந்தால்

– சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் இருந்தால்

– கொழுப்பு 200 விரீ/ஞிலி என்ற சராசரி கணக்கைவிட அதிகம் இருந்தால்

– குடும்பத்தில் உள்ளோருக்கு பாரம்பரியமாக இதய நோய் இருந்தால்

– புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால்.. (இதயநோய் வராவிட்டாலும் புற்றுநோய் வந்து விடும்)

– முழுநேரமும் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால்

– வாரத்திற்கு 3 தடவைகூட உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால்

– உடல் எடை மிக அதிகமாக இருந்தால்

– மன அழுத்தம் நிறைந்த வேலையில் வருடக் கணக்கில் தொடர்ந்தால்

– தாங்க முடியாத துக்கம், இழப்பை சந்தித்து அதிலிருந்து மீள முடியாமல் தவித்தால்

… இப்படிப்பட்ட காரணங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு அறிகுறியே இல்லாமல் மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலை அதிகம். ஆண்கள் 40 வயதை தாண்டும்போதும், பெண்கள் 45 வயதை தாண்டும்போதும் இதில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.


அறிகுறிகளை வெளிப்படுத்தியும் மாரடைப்பு வரலாம்.
மாரடைப்புக்கு பொதுவாக ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன?

– அதிகபட்ச சோர்வு

– மாடிப்படிகள் ஏறும்போது சிரமப்படும் அளவுக்கு மூச்சு வாங்குதல்

– திடீரென்று மிக அதிகமாக வியர்த்து வழிதல்

– நெஞ்சு படபடப்புடன், பாரமாகுதல்

– இடதுபக்கமாக தோள்பட்டை, கைகளில் வலி பரவுதல்

– இதயப் பகுதி இனம்புரியாத அவஸ்தைக்கு உள்ளாகுதல்

… போன்று பல அறிகுறிகள் உள்ளன.

நன்றி-தினத்தந்தி

முளை தானியம் என்னும் அற்புத உணவு!

மனிதன் பிறந்ததே சாப்பிடத்தான் என்பது போல, இன்றைய தேதிக்கு சைவத்திலும், அசைவத்திலும் வித, விதமான உணவுகள் உலகமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் ஆரோக்கிய கேடே மண்டிக் கிடக்கிறது.
போதாதற்கு நித்தமும் ஒரு புத்தம் புது உணவைக் கண்டுபிடித்து ஓட்டல்காரர்கள் வாழ்கின்றனர்; மக்கள் நோகின்றனர்.
இயற்கை உணவே இனிய உணவு, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை.
இயற்கை உணவு என்பது ஏதோ ஒன்று அல்ல, எல்லாம் நமக்கு தெரிந்ததே.
பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு, கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான், முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.
இந்த தானியங்களை நன்றாக கழுவி, 8 மணி நேரம் ஊற வைத்து, பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால், 8 – 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். (இப்போது இந்த வேலையைச் செய்யும், “ஸ்பிரவுட்ஸ் மேக்கர்’ என்ற பிளாஸ்டிக் டப்பாக்கள் விற்கப்படுகின்றன). இப்படி தயாரான இந்த தானியத்துடன் விருப்பம் போல தேங்காய், வெல்லம், தக்காளி, வெங்காயம், மிளகுத்தூள் ஆகியவைகளை சேர்த்தோ, சேர்க்காமாலோ சாப்பிட வேண்டியதுதான்.
இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும், அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான, உன்னதமான உயிர் உணவு.
இதன் பயனை உணர்ந்து கொண்டால், கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும். இந்த முளை தானியத்தில் இருந்து முளை தானியக் கஞ்சி, சப்பாத்தி, தோசை, அடை போன்ற உணவுகளையும் தயாரித்து, சாப்பிடலாம்.
இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன், விட்டமின் ஏ, பி1, பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால், புற்றுநோய் மட்டுப்படும். முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால், ஒல்லியானவர்களுக்கு உடல் போடும், கண்பார்வை மேம்படும். முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம், தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால், உடல் பருமன் குறையும், மூட்டுவலி தீரும்.இன்னும், இன்னும் இப்படி எத்தனையோ மகத்துவத்தை செய்யவல்லதுதான் முளைவிட்ட தானியங்கள்.
இப்படி நோய்களை தீர்ப்பது மட்டுமல்ல, எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு. இருந்தும் இந்த முளைவிட்ட தானியம் மக்களிடம் பிரபலமடையாத தற்கு காரணம், வேகமான உலகில் நாம் இருப்பதுதான். இதற்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ஆனால், அதற்கு யாரும் தயாராக இல்லை. ஒரே வார்த்தைதான், நீங்கள் உங்கள் உடலின் நண்பன் என்றால் மெனக்கெடலாம். இல்லை, எதிரி என்றால் விருப்பம் போல இருந்து கொள்ளுங்கள்.
இந்த முளைவிட்ட தானியங்களின் அருமையை உணர்ந்த சிவகாசியைச் சேர்ந்த மாறன் என்பவர், இதை, மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை ஒரு லட்சியமாகவே கொண்டுள்ளார். ஒரு வேளை உணவாக சிறு, சிறு பாக்கெட்டுகளில் போட்டு, அதில் கூடுதல் சுவைக்காக நெல்லி, கேரட் போன்றவைகளை கலந்து வெறும், ஏழு ரூபாய்க்கு விற்று வருகிறார் .உங்கள் வீட்டு விசேஷம் என்றால் வித்தியாசமாக இந்த இயற்கை உணவை பரிமாறவும் இவர் தயார். அல்லது நேரில் வந்து இயற்கை உணவு பற்றி சொல்லுங்கள் என்று போன் போட்டு சொன்னாலும் (93674 21787) உங்கள் இருப்பிடத்திற்கே வந்து சொல்லித் தரவும் தயார். எப்படியா வது வரும் தலைமுறை இந்த இயற்கை உணவை சாப்பிட்டு, கொண்டு ஆரோக்கியமான தலைமுறையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம். இது, அவருடைய லட்சியம் மட்டுமல்ல; நம்முடையதும்தான்.

சபரிமலை நாயகன்!

சபரிமலையில் கோவில் கொண்டிருக்கும் தர்மசாஸ்தாவுக்கு, கார்த்திகையில் திருவிழா துவங்குகிறது. பக்தர்கள், இன்று முதல் ஐம்புலனையும் அடக்கி, 41 நாட்கள் முதல், 60 நாட்கள் வரை விரதம் இருப்பர்.
விரதம் என்ற சொல்லை, “வி+ரதம்’ எனப் பிரிக்கலாம். “வி’ என்றால், “மேலான!’ ஆங்கிலத்தில் கூட, “வி’ என்ற அடையாளத்தை, “விக்டரி’ என்ற பொருளில், வெற்றியின் சின்னமாக எடுத்துக் கொள்கின்றனர். “ரதம்’ என்றால், “தேர்!’ வாழ்க்கைத் தேர் வெற்றிகரமாக ஓட உதவுவது விரதம்.
விரதம் என்றால், வெறும் உணவு கட்டுப்பாடு என்று மட்டுமில்லை. கண், காது, மூக்கு, நாக்கு, உடல் எனும் ஐம்புலன்களும் கட்டறுந்து ஓடுகின்றன. இஷ்டப்பட்டதை எல்லாம் இவை பார்க்கின்றன, கேட்கின்றன, நுகர்கின்றன, பேசுகின்றன, அனுபவிக்கின்றன. இந்த புலன்களைக் கட்டுப்படுத்தினால், வாழ்க்கைத் தேர் சரியான பாதையில் செல்லும். இதற்கு பெரிதும் உதவுவது ஐயப்ப விரதம்.
ஐயப்பன் எனும் சொல், “ஐயன்’ என்ற சொல்லில் இருந்து வந்தது. “ஐயன்’ என்றால், “உயர்ந்தவன், பெரியவன்’ என்றெல்லாம் பொருள் உண்டு. இப்போதும், கிராமங்களில் உள்ளவர்கள் சாஸ்தா கோவிலுக்குச் செல்கிறவர்களை, “ஐயன் கோவிலுக்கு கிளம்பியாச்சா?’ என்று கேட்பது வழக்கம். தெய்வங்களில் இவன் உயர்ந்தவனாகக் கருதப்படுவதற்கு காரணம் உண்டு.
தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்பவனே உயர்ந்தவன். அவ்வகையில், 12 வயதிலேயே தன் தாயின் தலைவலியைப் போக்க, தன் உயிரையே பணயம் வைத்து காட்டிற்கு சென்று, புலியையே ஓட்டி வந்தவர் ஐயப்பன். இவ்வளவு பெரிய தியாக உணர்வுள்ளவர் என்பதால் தான், அவர், “ஐயப்பன்’ என்ற பெயர் பெற்றார்.
அவரை, “தர்மசாஸ்தா’ என்றும் சொல்வர். அவர் தர்மத்தை உலகில் நிலைநிறுத்த அவதரித்தவர். மகிஷி எனும் அரக்கியால், உலகம் பல அவலங்களை அனுபவித்த போது, அவளை அழித்து, தர்மத்தை நிலைநிறுத்தினார். இதனால், “தர்ம’ என்ற அடைமொழி, “சாஸ்தா’ என்ற பெயரோடு இணைந்தது. “சாஸ்தா’ எனும் சொல்லுக்கு, “கூட்டமாக வந்து வழிபடப்படும் கடவுள்…’ என்று பொருள்.
இப்போதும், சாஸ்தா கோவில்கள் அடர்ந்த காட்டுப் பகுதி, ஊரை விட்டு ஒதுக்குப்புறமான சோலைகள் நிறைந்த பகுதிகளுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடங்களில் மிருகங்கள் நிறைந்திருந்தன. இங்கே தனியே செல்வது ஆபத்து என்பதால், பக்தர்கள் ஒலி எழுப்பியபடியே சாஸ்தாவை வழிபடச் சென்றனர். இந்த ஒலி கேட்டு, மிருகங்கள் ஒதுங்கி ஓடி விடும். இன்றைக்கு, ஐயப்பன் கோவிலுக்கு செல்ல எவ்வித பயமும் இல்லை என்றாலும், பழைய நடைமுறைப்படி சரண கோஷம் எழுப்பியபடியும், “சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம்…’ என்றும் வாத்தியங்களை முழங்கியபடியும் செல்கின்றனர்.
சபரிமலை கோவில் பரசுராமரால் உருவாக்கப்பட்டது. சாஸ்தா, தேசத்தைப் பாதுகாக்கும் தெய்வம். எனவே, 12 சாஸ்தா கோவில்களை அவர் பிரதிஷ்டை செய்துள்ளார். அவற்றில் அச்சன்கோவில், குளத்துப்புழை, ஆரியங்காவு, சாஸ்தாம்கோட்டை ஆகியவை புகழ் மிக்கவை. குளத்துப்புழையில், ஐயப்பன் பாலகனாக இருந்த போது வாழ்வைக் கழித்தார். ஆரியங்காவில் இளைஞனாகவும், அச்சன்கோவிலில் தம்பதி சமேதராகவும், சபரிமலையில் யோக நிலையிலும் (துறவு) காட்சியளிக்கிறார்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், குருவின் மூலம் மாலை அணிந்து கொள்கின்றனர். குருமார்கள் எக்காரணம் கொண்டும் பணத்தின் மீது நாட்டம் கொண்டிருக்கக் கூடாது. இல்லறத்தில் இருந்தாலும், தாமரை இலை தண்ணீர் போல வாழ வேண்டும். ஒருவரது வசதி, பணம் ஆகியவை குருசாமியாவதற்கு தகுதியைத் தராது. அவரது சபரிமலை பயண அனுபவம், 18 ஆண்டுகளுக்கு, 41 நாள் தொடர் விரதம் இருந்து பெருவழிப்பாதை மூலம் சென்று திரும்புதல், அதன் மூலம் அவர் பெற்ற தெய்வசக்தி, வழி பாட்டிலும், பக்தர்களை வழி நடத்துவதிலும் அவருக்குரிய திறமை ஆகியவற்றைப் பொறுத்தே குருசாமியாகும் தகுதியைப் பெறுகிறார்.
நீங்களும் தகுந்த குருசாமியின் உதவியோடு ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வாருங்கள். குருசாமி கிடைக்காத பட்சத்தில், உள்ளூர் கோவிலில் உள்ள தெய்வத்தையே குருவாகக் கருதி, மாலையணிந்து கொள்ளுங்கள். உங்கள் சபரிமலை பயணம் வெற்றிகரமாகட்டும்!